WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
இங்கிலாந்தின் மாணவர்கள் மீதான அடக்குமுறை வெடிப்புவாய்ந்த வர்க்கப் போராட்டங்களை முன்னறிவிக்கிறது
Zach Reed
22 November 2010
Use
this version to print | Send
feedback
நவம்பர் 10 அன்று லண்டன் மில்பாங்க் டவர்ஸில் அமைந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி தலைமையகத்தை ஆக்கிரமித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் போராட்ட மாணவர்கள் வேட்டையாடப்படுவதும் கைது செய்யப்படுவதும் அனைத்து உழைக்கும் மக்களுக்குமான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
கல்வித்துறை வெட்டுகளுக்கும் மற்றும் கல்விக் கட்டணங்கள் மும்மடங்காய் உயர்த்தப்படுவதற்கும் எதிரான 55,000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் சிறுசிறு சூறையாடல் நடவடிக்கைகள் நடந்தன. ஆனால் அவையெல்லாம் இப்போது இயல்பு வாழ்க்கைக்கு வந்த மரண அபாயமாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடக்குமுறை நடவடிக்கைகளை துரிதமாய் முன்செலுத்தும் நோக்கத்துடன், தலைநகரின் வீதிகள் மீதான ”கட்டுப்பாட்டை போலிஸ் இழந்ததாக” அபத்தமான கூற்றுகள் உலா வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு சம்பவத்தில் ஒரு சில போலிசாருக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வந்தன. ஆனால் அந்த எண்ணிக்கை அடுத்து 40க்கும் அதிகமானதாக உயர்த்தப்பட்டு விட்டது.
மில்பாங்க் டவர்ஸ் கூரையிலிருந்து ஒரு தீயணைப்புக் கருவி வீசியெறியப்பட்டது. தீவிரமானது என்று இந்த ஒன்றைத் தான் சொல்ல முடியும் என்பதால், அதனை மையமாகக் கொண்டு ஊடகங்களும் போலிசும் ஒரு வெறிகொண்ட சூழலுக்கு தூண்டி விட்டு வருகின்றன. அதைப் பற்றிய குறிப்புகள் தொடர்ந்து மாறி மாறி கூறப்பட்டிருக்கின்றன என்றாலும் யாரும் காயமடைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
அப்படியிருந்தும், இதில் சம்பந்தப்பட்ட தனிநபர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்ய போலிஸ் கூட்டமைப்பின் தலைவரான பால் மெக்கெவர் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு 23 வயது மாணவர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார், பின் ஒரு A-Level மாணவன் தானே சரணடைந்தார். எட்வாட் வூலார்ட் என்னும் அந்த மாணவனின் வயது வெறும் 18 மட்டுமே. அவர் வன்முறையால் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விளைவித்ததான குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். இதில் அவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையைப் பெற முடியும்.
இதுவரை குறைந்தது 61 பேர் மில்பாங்க் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட 12 இளைஞர்களும் அடங்குவர். ஆர்ப்பாட்டத்தில் கண்ணில்பட்ட எந்த ஒரு நபரையும் இடம்பெறச் செய்யும் வகையில் போலிஸ் வலை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஊடகங்கள் குற்றம் செய்ததாகக் கூறப்படுபவர்களின் (கட்டிட வீடியோவில் பதிவான) படங்களை வெளியிட்டு அவர்களை விசாரணைக்கு வரக் கோருகின்றன.
இத்தகைய வகையில் பரபரப்பு ஏற்றுவதின் நோக்கம் என்னவென்றால், இனிவரும் ஆர்ப்பாட்டங்களில் போலிஸ் எந்த கட்டுப்பாடும் அற்ற ஒரு அணுகுமுறையை எடுப்பதற்கு ஒரு காரணத்தை உருவாக்கித் தருவது தான். போலிஸ் “ரொம்பவும் கோபமூட்டும் வகையில்” நடந்து கொள்வதாய், அதிலும் குறிப்பாக சென்ற ஆண்டில் ஜி20 ஆர்ப்பாட்டத்தில் போலிஸ் வன்முறைக்குப் பின் செய்தித்தாள் விற்பனையாளர் இயான் டோம்லின்சன் இறந்த சம்பவத்தையடுத்து, கூறப்படுகிற விமர்சனத்தை முடிவுக்குக் கொண்டுவர மாணவர் ஆர்ப்பாட்டம் உதவும் என்று பெயர் கூற விரும்பாத ஒரு மூத்த போலிஸ் அதிகாரி ஒப்சேர்வர் பத்திரிகையில் கூறியிருந்தார். “அடுத்த ஆர்ப்பாட்டத்தில் போலிஸ் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள்” என்று அவர் குரூர திருப்தியுடன் கூறிக் கொண்டார்.
இப்போது உத்வேகம் பெற்றுவரும் எதேச்சாதிகார கருத்துகளுக்கு வடிகாலாய் டெய்லி டெலிகிராபின் பத்தியாளர் மாத்யூ டி’அங்கோனா அறிவித்தார்: ”நீர் பாய்ச்சி அடித்தால் கொஞ்சம் சந்தோசப்படுகிற கெட்டழிந்த இளைஞர்களாக கலகம் செய்தவர்கள் இருந்ததை அநேக பார்வையாளர்கள் கண்டிருப்பார்கள் என்பது எனது ஐயம்”.
டி’அங்கோனாவின் வெறுப்புணர்ச்சி என்பது யதார்த்தத்தில் இருந்து இதுவரை அகற்றப்பட்டிருக்கவில்லை. பொது சட்டஒழுங்கு சீர்கேட்டை எதிர்கொள்வதற்கான “இராணுவமயமாக்க” உத்தியை உருவாக்க பாதுகாப்பு நிறுவனங்கள் இங்கிலாந்தின் இராணுவப் படைகள் மற்றும் போலிசுடன் சேர்ந்து உழைத்து வருவதாக ஒப்சேர்வர் தெரிவித்திருக்கிறது. கனரக ஆயுத பயன்பாட்டில் SAS-பாணி பயிற்சியை போலிஸ் அதிகாரிகள் பெறவுள்ளனர். அரசாங்கம் ஆயுத வாகனங்களுக்கும், கூடுதலான கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் உடல் சோதனைக் கருவிகளுக்கும் கொள்முதல் ஆணை பிறப்பித்துள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்கள் மீதான உளவுக்கு வான்வெளியில் ஆளில்லா உளவு விமானங்களை நிறுத்துவதை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களும் உள்ளன.
சென்ற வாரத்தில், பொது உரிமைகள் மீதான இன்னுமொரு தாக்குதலில், பெருநகர போலிசின் பொது ஒழுங்கு CO11 பிரிவு ஃபிட்வாட்ச் (Fitwatch) வலைத் தளத்தை மூடுவதற்கு நிர்ப்பந்தித்தது. மில்பாங்க் ஆக்கிரமிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்படும் அச்சுறுத்தலைப் பெற்ற மாணவர்களுக்கு இத்தளம் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தது. ஃபிட்வாட்ச் 2007ல், ஆர்ப்பாட்டங்களின் போது முற்பட்ட உளவுக் குழுக்கள் கோபத்தைத் தூண்டும் வகையில் நெருக்கமாய் படம்பிடிக்கும் தந்திரங்களை பயன்படுத்துவதை எதிர்த்து உருவாக்கப்பட்டதாகும்.
இடது சாரி குழுக்களை கண்காணிப்பதில் ஈடுபட்டிருக்கும் போலிஸ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒப்சேர்வர், “அரசியல்ரீதியாகத் தூண்டப்பட்ட சட்டம் ஒழுங்குச் சீர்கேடுகள்” அதிகரித்திருப்பதை கண்டிருப்பதாய் கூறியது.
அநேக மக்கள் கேட்டும் இராத ஏராளமான இரகசிய ஒற்று ஸ்தாபனங்களின் பெயர்களை இச்செய்தித்தாள் பட்டியலிட்டிருந்தது.
இங்கிலாந்து எங்கிலும் அரசியல் குழுக்களைக் கண்காணிக்கும் இரகசிய உளவுப் பிரிவுடன் நெருக்கமாகப் பணிபுரியும் ஸ்காட்லாந்து யார்டின் “தேசிய சட்ட ஒழுங்கு உளவுப் பிரிவு”க்கு ”உள்நாட்டு தீவிரவாதத்திற்கான தேசிய ஒருங்கிணைப்பாளர்” அலுவலகம் ”தகவல்களைக் கொடுத்து” வந்தது.
தொழிற்கட்சி அரசாங்கம் தேசிய சட்டஒழுங்கு உளவுப் பிரிவை 1999 ஆம் ஆண்டில் உருவாக்கியது. அதே வருடத்தில், தலைமை போலிஸ் அதிகாரிகளின் கூட்டமைப்பு இரகசிய உளவுப் பிரிவை உருவாக்கியது. இவை இரண்டுமாய் சேர்ந்து பல்வேறு இடது சாரி அரசியல் குழுக்களைப் பற்றிய மிகப்பெரிய தரவுத்தளங்களை உருவாக்கியிருக்கின்றன.
சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அச்சுறுத்தல் பெருகுவது மற்றும் புரட்சிகர சோசலிச சிந்தனைகள் மறுஎழுச்சி காணுவது ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு அரசால் வெகு காலமாய் தயாரிப்பு செய்யப்பட்டு வந்திருக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஒரு சாக்காகவே மில்பாங்க் சம்பவம் பயன்படுத்தப்படுகிறது.
அதிகாரத்தைக் கையில் கொண்டிருப்பவர்களுக்கு இந்த அபாயம் எத்தனை உண்மையாக இருக்கிறது என்பதை மாணவர் போராட்டம் எடுத்துக் காட்டியது. கல்வியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மட்டுமன்றி கூடுதல் கல்விக் கல்லூரிகளில் இருந்த பல உழைக்கும் வர்க்க இளைஞர்களையும் இது அணிதிரட்டியது. கைது செய்யப்பட்ட அனைவருமே ஏறக்குறைய 18 முதல் 24 வயதுக்குள்ளானவர்கள். அதாவது, உயர்ந்த வேலைவாய்ப்பின்மை அளவுகளுடன் பொருளாதார நெருக்கடியின் கூர்முனைத் தாக்குதலை சந்தித்த அதே வயது மட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த பெருநகர போலிஸ் கூட்டமைப்பின் தலைவரான பீட்டர் ஸ்மித், இங்கிலாந்து “போராட்டங்கள் நிரம்பிய ஒரு குளிர்காலத்தை” நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார். “பிரிட்டிஷ் மக்கள் இப்போது போராடப் போவதில்லை என்றால், அவர்கள் எப்போதும் போராட மாட்டார்கள்” என்றார் அவர். இன்னும் தீவிரமான தொல்லைகள் எல்லாம் நடக்கும் என்று மேலும் தெரிவித்த அவர், “அதனைத் தவிர்க்க முடியாது” என்றார்.
விசாரணை செய்யப்பட வேண்டியது ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் அல்ல. கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயக அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட 85 பில்லியனுக்கும் அதிகமான பவுண்டு சிக்கன நடவடிக்கைகள் சமூகத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். அவை மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அழிக்கும் என்பதோடு இளைய தலைமுறையின் வருங்காலத்தை அழித்து விடும். வேலைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் மிக முக்கியமான சமூக வசதிகள் எல்லாம் அழிக்கப்படுகிற அதே சமயத்தில், பில்லியன் கணக்கில் வங்கிகளிடம் ஒப்படைக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, பெரும் செல்வந்தர்கள் தொடர்ந்து வானளாவிய கொடுப்பனவுகளைக் குவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
தொழிலாள வர்க்கத்தின் முறையான கோபம் நாடாளுமன்ற கட்டமைப்புக்குள்ளாக எந்த வித அரசியல் வெளிப்பாடும் காண முடியாதிருப்பதை ஆளும் உயர்தட்டினர் ஏற்கனவே உறுதி செய்து விட்டார்கள். உத்தியோகபூர்வ கட்சிகள் அனைத்துமே நிதித்துறை உயர்தட்டின் அரசியல் பிரதிநிதிகளாகவே இருப்பதோடு உழைக்கும் மக்கள் தான் மொத்தத்தையும் செலுத்தியாக வேண்டும் என்பதில் உடன்பட்டு நிற்கின்றனர். இப்போது, ஐரோப்பா மற்றும் உலகமெங்கிலும் இருக்கும் தனது சகாக்கள் செய்வதைப் போலவே, பிரிட்டனது ஆளும் உயர்தட்டும் தங்களது வர்க்கப் போர் திட்டநிரலுக்கு தோன்றும் ஒவ்வொரு பாராளுமன்றத்தை கடந்த எதிர்ப்பு வடிவத்தையும் குற்றமாக்கும் நோக்கத்துடன் இருக்கிறது.
தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்கள் இந்த நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பை அபிவிருத்தி செய்ய தலைப்படும் சமயத்தில் முகம்கொடுக்கக் கூடிய முக்கிய அரசியல் பிரச்சினையையே இந்த சூழ்நிலை சுட்டிக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கத்துக்கு, பெரு வணிகம் மற்றும் உலகளாவிய நிதிய உயர் தட்டின் நலன்களுக்கு எதிராக தமது நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தத்தக்க ஒரு அரசியல் கட்சி எங்குமே இல்லை.
ஆர்ப்பாட்ட மாணவர்களைக் கண்டிப்பதில் ஊடக வேட்டையின் பக்கம் தேசிய மாணவர் சங்கம் சாய்வதென்பது தொழிற்சங்கங்களுடன் இணைந்த அனைத்து அமைப்புகளுமே ஆற்றுகிற துரோகப் பாத்திரத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அடுத்த வருடத்திலும் ஒரு சமயம் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைப்பதற்கு திட்டமிருப்பதாய் தொழிற் சங்க காங்கிரஸ் மழுப்பலாய் பேசுகிறது. இதனிடையே, பொதுத் துறையிலும் சரி தனியார் துறையிலும் சரி இருக்கின்ற தொழிற்சங்கங்கள் ஊதிய நிறுத்தங்களை, ஊதிய வெட்டுகளை மற்றும் ஆட்குறைப்பை திணிப்பதற்கு உதவிக் கொண்டிருக்கின்றன. அவை பரந்த அடிப்படையிலான கோபத்தை நோக்கி தலையாட்டுகின்றன என்றால், அது அரசாங்கத்திற்கு “சில முடிவுகளை வரைவதற்கும்” ”அதன் மனதை மாற்றிக் கொள்வதற்கும்” அறிவுறுத்துவதற்காகவே.
இது திட்டமிட்ட ஏமாற்று வேலை. முதலாளித்துவ இலாப அமைப்புமுறையின் ஒரு அமைப்புரீதியான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், முதலாளித்துவம் உழைக்கும் மக்கள் வென்றெடுத்திருக்கும் அனைத்து சமூக ஆதாயங்களையும் அழிக்க நோக்கம் கொண்டுள்ளது. அதனைச் செய்வதற்கு, அது வன்முறையிலும் அடக்குமுறையிலும் இறங்கியாக வேண்டும். இதற்கு எதிராக, பிரிட்டனில் மற்றும் சர்வதேசரீதியாக தொழிலாளர்களும் இளைஞர்களும் பெரு வணிகக் கட்சிகள் மற்றும் அரசின் அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். இது சோசலிச கொள்கைகளுக்கு உறுதிப்பாடு கொண்ட தொழிலாளர் அரசாங்கங்கள் உருவாக்கப்படுவதை அவசியமாக்குகிறது.
|