World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government detains plantation union leaders

இலங்கை அரசாங்கம் பெருந்தோட்ட தொழிற்சங்கத் தலைவர்களை சிறை வைத்துள்ளது

By M. Vasanthan
19 November 2010

Back to screen version

இராஜபக்ஷ அரசாங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தையும் அச்சுறுத்துவதற்காக எடுத்த ஒரு வெளிப்படையான முயற்சியில், இலங்கை பொலிசார் நாட்டின் மத்திய மலையகப் பகுதிகளில் உள்ள பெருந்தோட்டங்களை தளமாகக் கொண்ட தொழிற்சங்கங்களில் இரு தலைவர்களை கைது செய்வதற்காக அரசாங்கத்தின் கொடூரமான அவசரகால சட்டங்களை பயன்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, மலையக மக்கள் முன்னணியின் (ம.ம.மு.) இளைஞர் குழு தலைவர் தாழமுத்து சுதாகரனையும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் (ஜ.தொ.கா.) பொதுச் செயாலளர் எல். பாரதிதாசனையும் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலையில் வைத்து முறையே அக்டோபர் 21 மற்றும் 23ம் திகதிகளில் கைதுசெய்துள்ளது. அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. மாறாக, அவர்கள் மூன்று மாதகால தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும், கடந்த மே மாதம் இலங்கை இராணுவத்தால் நசுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என பொலிசார் உறுதியற்ற முறையில் குற்றம் சுமத்துகின்றனர். இத்தகைய வலிமையற்ற குற்றச்சாட்டுக்கள் தற்செயலானது என்பது கடினமாகும். புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலின் கடைசி ஆண்டுகளில், ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கும் எந்தவொரு தொழிலாள பகுதியினரையும் “பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்” என்று வகைப்படுத்தியதோடு அவர்கள் புலிகளின் நோக்கத்துக்கு உதவுகின்றார்கள் என்றும் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இலங்கை பொலிஸ் படை, அரசாங்க-சார்பு சதிகள் மற்றும் துன்புறுத்தல்களை செய்வதில் இழிபுகழ் பெற்றதாகும். இரு தொழிற்சங்க தலைவர்களும் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதன் பேரில், அவர்கள் “விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்” என தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் உறவினர்களுக்கும் பொலிசார் அறிவித்துள்ளனர். ஆயினும், அவர்கள் கைதுசெய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகின்ற நிலையில், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுமில்லை, அவர்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுமில்லை.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான அண்மைய பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது இந்தக் கைதுகளில் அரசாங்கத்தின் தலையீடு வெளிப்பட்டது. நவம்பர் 9 அன்று, பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் டி.எம். ஜயரட்ன, “புலிகள் கிளிநொச்சியில் வைத்து மலையக இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியுள்ளனர். அதனுடன் தொடர்புபட்டு மலையகத்துக்கு ஆயுதங்களை கொண்டுவந்துள்ள இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,” எனத் தெரிவித்தார்.

இருவரது பெயர்களையும் ஜயரட்ன குறிப்பிடாவிட்டாலும், சகல குறிப்புகளும் சுதாகரனையும் பாரதிதாசனையுமே காட்டின. அவர்கள் ஆயுதங்களுடனேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பிரதமர் தெரிவித்த போதிலும், அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் காட்டவில்லை. “வெடிபொருட்களையும் தொலைத்தொடர்பு உபகரணங்களையும் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் மற்றும் கொழும்பிலும் வைத்திருந்துள்ளனர். இவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படல் வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய மாகாண உப பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்னவும் ஜயரட்னவின் கூற்றுக்களை எதிரொலித்துள்ளார். அவர் மத்திய மாகாணத்தில் 2,500 கிலோகிராம் வெடிபொருட்கள் இருந்ததாக ஜனநாயக மக்கள் முன்னணி அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். “வெடிபொருட்களை தேடுதல்” மற்றும் “பயங்கரவாதத்துடன்” தொடர்புபட்டவர்களை தேடுதல் என்ற பெயரில், தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு பரந்தளவிலான வேட்டையாடல் தயாராகின்றது என்பதையே இந்த உறுதியற்ற குற்றச்சாட்டுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஜனத்தொகையைப் போல், மத்திய மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். உள்நாட்டு யுத்தத்தின் போது, தோட்டத் தொழிலாளர்களும் மற்றும் இளைஞர்களும் குறிப்பாக தொந்தரவுகளுக்கும் புலிகளுடன் தொடர்புவைத்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கோரப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகின்ற நிலையில், ஒரு உக்கிமடைந்துவரும் ஒடுக்குமுறை சூழலின் மத்தியிலே சுதாகரனும் பாரதிதாசனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அடுத்த திங்கட் கிழமை முன்வைக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில், அரசாங்கம் பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 10 முதல் 8 சதவீதம் வரை குறைக்க உறுதிபூண்டுள்ளது. முன் ஊகிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் வரி அதிகரித்தல், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் அதிகரிக்க வழிசெய்யும் மானிய வெட்டுக்கள், சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளில் வெட்டுக்கள் மற்றும் தனியார்மயப்படுத்தலும் அடங்கும்.

இராஜபக்ஷ அரசாங்கம், தனது வணிகச்-சார்பு நடவடிக்கைகளுக்காக எதிர்க் கட்சிகளை அமைதிப்படுத்த முயற்சிப்பதோடு தொழிலாளர்கள், குடிசைவாசிகள், மாணவர்களின் எதிர்ப்புக்களை முன்கூட்டியே தடுக்க அல்லது நசுக்கவும் முயற்சிக்கின்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் திணிப்பதற்காக, உள்நாட்டு யுத்தத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட இராணுவ-பொலிஸ் அரச வழிமுறைகளை அது பயன்படுத்துகின்றது. செப்டெம்பரில் இருந்து, குறைந்தபட்சம் 33 மாணவர்களை பொலிஸ் கைதுசெய்துள்ளதுடன், மாணவர்கள் ஒரு “கிளர்ச்சியை” திட்டமிட்டுவருவதாக அரசாங்கமும் கூறுகின்றது.

யுத்தத்தின் போது, விசாரணையின்றி எதேச்சதிகாரமாக கைது செய்தல், சித்திரவதை மற்றும் இராணுவத்தின் உடந்தையுடன் செயற்படும் கொலைப் படைகளின் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளும் பொதுவாகப் பயன்பட்டன. புலிகளின் தோல்வியை அடுத்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக கால் மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் பொது மக்களை படையினரால் நடத்தப்படும் தடுப்பு முகாங்களுக்குள் இராணுவம் அடைத்து வைத்தது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு “புலி சந்தேகநபர்களுக்கான” இரகசிய முகாங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கு அநேகமானவர்கள் விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசியல் ஒடுக்குமுறை ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உக்கிரமாக்கப்பட்டது. தேர்தலின் பின்னர் முன்னாள் இராணுவத் தலைவரும் எதிர்க் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவம் கைது செய்தது. அப்போதிருந்தே, யுத்தம் முடிவடைந்திருந்த போதும், “பயங்கரவாத அச்சுறுத்தல்” இன்னமும் இருப்பதாக கூறிக்கொண்டு, இராஜபக்ஷ ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்டத்தை நீடித்துவருகின்றார். அவசரகால விதிகளின் கீழ், வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்தல், ஊடகத்தை தணிக்கை செய்தல், மற்றும் தனிநபர்களை விசாரணையின்றி தடுத்து வைத்தல் உட்பட மிகப் பரந்த அதிகாரங்கள் இராஜபக்ஷவுக்கு உள்ளன.

அரசாங்கத்தின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமும் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் உக்கிரமாக்கப்படும் போது தவிர்க்க முடியாமல் வெடிக்கவுள்ள போராட்டங்களுமேயாகும். இலங்கை தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினராகிய தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்கனவே அமைதியின்மை வளர்ச்சிகண்டு வருகின்றது. கடந்த பல மாதங்கள் பூராவும், வேலைப் பளுவை அதிகரிப்பதற்கு எதிராக சில தோட்டங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பரில், 750 ரூபா (6.70 அமெரிக்க டொலர்) நாள் சம்பளம் கோரி வேலை நிறுத்தங்கள் மற்றும் ஏனைய ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆளும் கூட்டணியின் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பி.) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், 405 ரூபாவுக்கு சம்பள உடன்படிக்கை ஒன்றை அரசாங்கத்தின் ஆதரவுடன் கைச்சாத்திட்டதன் மூலம் இந்தப் போராட்டங்களை காட்டிக்கொடுத்தன.

பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள், இந்த சம்பள வியாபாரத்தை எதிர்த்து பல நாட்களாக மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வாறெனினும் இந்த உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட ஜ.தொ.கா., ம.ம.மு. மற்றும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்களும், இந்த எதிர்ப்புக்கு முடிவுகட்டன. சுதாகரனும் பாரதிதாசனும் கைதுசெய்யப்பட்டுள்ளமை, அரசாங்கம் எந்தவொரு, அதாவது தொழிற்சங்கங்களின் அடையாள எதிர்ப்புக்களில் இருந்துகூட தலை தப்புவதற்கு ஏங்குகிறது என்பதையே காட்டுகின்றது.

கடந் ஆண்டு, பாரதிதாசன் இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் சார்பில் ம.ம.மு. வேட்பாளராக மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டார். ஆயினும், ஏப்பிரலில் தலைமைத்துவ முரண்பாடுகள் காரணமாக ம.ம.மு. யில் இருந்து விலகிய அவர், எதிர்க் கட்சியான யூ.என்.பி. யின் கூட்டணியில் இருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியிலும் (ஜ.ம.மு.) மற்றும் அதன் தொழிற்சங்கமான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸிலும் இணைந்துகொண்டார். ஜ.ம.மு. வேட்பாளராக ஏப்பிரலில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிதாசன், வெற்றிபெறவில்லை.

ஜ.ம.மு. தலைவர் மனோ கனேசன், பாரதிதாசனுக்கு எதிரான பொலிஸ் குற்றச்சாட்டுக்களை மறுத்தார். “பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளமை எமது கட்சி மீது முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு அரசியல் பழிவாங்கலாகும். அரசாங்கத்தின் இலக்குக்கு உள்ளாகிய எதர்க்கட்சி குழுக்கள் எதிர்கொண்ட அண்மைய தாக்குதல்களில் இதுவும் ஒன்று,” என அவர் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி, சுதாகரன் மற்றும் பாரதிதாசனின் கைதுகளை நிபந்தனையின்றி கண்டனம் செய்வதோடு அவர்களது உடனடியான விடுதலைக்கு கோரிக்கை விடுக்குமாறு அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. அடிப்படை ஜனநாயக உரிமை மீதான இந்த வெளிப்படையான தாக்குதல், அரசாங்கம் தனது ஒடுக்குமுறை வழிமுறைகளை உக்கிரமாக்கத் தயாராகின்றது என முழு தொழிலாள வர்க்கத்துக்கும் விடுக்கும் ஒரு எச்சரிக்கையாகும்.

இந்த அழைப்பை விடுக்கும் அதே வேளை, நாம் ம.ம.மு. மற்றும் ஜ.ம.மு. ஆகிய இரு கட்சிகளதும் துரோகப் பாத்திரத்தையிட்டும் எச்சரிக்கை விடுக்கின்றோம். ஜ.ம.மு. தலைவர் கனேசன், பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாக கண்டனம் செய்யும் அதே வேளை, தனது தொழிற்சங்கத் தலைவரை காக்க ஜ.ம.மு. எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எமது வலைத் தள நிருபர் நேற்று அவரை தொடர்பு கொண்டபோது, பாரதிதாசனை விடுதலை செய்வதற்கான எந்தவொரு பிரச்சாரத்தைப் பற்றியும் தனது கட்சி இன்னமும் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றே கனேசன் கூறினார்.

தன் பங்கிற்கு, ம.ம.மு. சுதாகரன் சம்பந்தமாக சிடுமூஞ்சித்தனமாக தனது கைகளைக் கழுவிக்கொண்டது. அவரது கைது தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் கேள்வி எழுப்பிய போது, ம.ம.மு. பொதுச் செயலாளர் லோரன்ஸ், “அவர் எங்களது உறுப்பினர் அல்ல. அவரது நடவடிக்கைகள் ம.ம.மு. கொள்கைகளுக்கு எதிரானது,” என தெரிவித்தார். லோரன்ஸ் அதை விளக்குவதற்கு மறுத்தார். சுதாகரன் 2002ல் இருந்து ம.ம.மு. இளைஞர் சங்கத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். அவரது தந்தை ம.ம.மு. தொழிலாளர் அமைப்பின் ஒரு உதவிச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளி என்ற முறையில், ம.ம.மு. அரசாங்கத்தை எதிர்த்துக்கொள்ள விரும்பாதது தெளிவு.

அரசாங்கத்தின் வேட்டையாடலுக்கு உதவ மட்டுமே பயன்படும், ம.ம.மு. மற்றும் ஜ.ம.மு. ஆகியவற்றின் நிலைப்பாட்டுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, சுதாகரனதும் பாரதிதாசனதும் மற்றும் ஏனைய அரசியல் கைதிகளதும் விடுதலையைக் கோருமாறு சகல இடங்களிலும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.