சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பர்மா

US seeks “engagement” with Burmese junta after Suu Kyi's release

சூ கீ விடுதலையானதன் பின்னர் அமெரிக்கா பர்மிய ஜுன்டாவுடன் “கொடுக்கல் வாங்கலை” எதிர்பார்க்கிறது

By Sarath Kumara
18 November 2010

Use this version to print | Send feedback

பர்மிய எதிர்க் கட்சித் தலைவர் ஆங் சன் சூ கீ விடுதலையான பின்னர், பர்மாவில் (அல்லது மியன்மார்) இராணுவ ஆட்சியுடன் “கொடுக்கல் வாங்கல்” செய்வதற்கான தனது தயார் நிலையை வாஷிங்டன் சமிக்ஞை செய்துள்ளது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முதன்மைப்படுத்த முயற்சிப்பதாக கூறிக்கொள்ளும் ஒபாமா நிர்வாகம், இராணுவ அரசாங்கத்துடன் உடனடியாக பேச்சுக்களுக்கு விருப்பம் தெரிவித்ததோடு இராணுவ ஜெனரல்களை நோக்கி சூ கீ தெரிவித்த இணக்கமான கருத்துக்களையும் வரவேற்றுள்ளது.

விடுதலையான உடனேயே, “தேசிய இணக்கப்பாடு” பற்றி ஜுன்டாவுடனும் அதன் தலைவர் ஜெனரல் தான் சுவேயுடனும் பேசுவதற்கு சூ கீ விருப்பம் தெரிவித்தார். திங்களன்று பி.பி.சீ. க்கு வழங்கிய பேட்டியொன்றில், “ஒரு வன்முறையற்ற புரட்சிக்கும்” ஜெனரல்களுடன் வேலை செய்வதற்கும் முயற்சிப்பதாகக் கூறிய அவர், அந்தச் செய்தியை வலியுறுத்தினார். “இராணுவம் வீழ்ச்சியடைவதைக் காண நான் விரும்பவில்லை. இராணுவமானது தொழிற்பன்பு மற்றும் உண்மையான தேசப்பற்றின் பெருமைக்குரிய உயரத்திற்கு வளர்வதை நான் காண விரும்புகின்றேன்,” என அவர் கூறினார்.

மேற்கத்தைய பொருளாதாரத் தடைகளை நீக்குமாறு அழைப்பு விடுப்பதையும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் சூ கீ சமிக்ஞை செய்தார். “[பர்மிய] மக்கள் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என உண்மையில் விரும்புவார்களாயின், நான் அதில் அக்கறை செலுத்துவேன். பர்மாவுக்கு உதவி தேவையான நேரம் இதுவே,” என கடந்த வாரக் கடைசியில் அவர் அறிவித்தார். பர்மாவின் ஜனநாயகக் குரல் என்ற ஊடகத்தில் வெளியான செவ்வியொன்றில், தடைகளின் எதிர்காலம் பற்றி வினாவிய போது, “தடைகளை விதித்துள்ள நாடுகளுடனும் இதுபற்றி கலந்துரையாடுவத்றகு நாம் விரும்புகிறோம்,” என அவர் பதிலளித்தார்.

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்த எதிர்க் கட்சித் தலைவர், சலுகைகளைப் பெறுவதற்காக ஜுன்டாவை நெருக்கும் ஒரு வழிமுறையாக தடைகள் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என முன்னர் வலியுறுத்தியிருந்தார். அவற்றை அகற்றுவதற்கு வேண்டுகோள் விடுப்பது பற்றி இப்போது அவர் அக்கறை காட்டுவாரேயானால், அது பர்மிய மக்களின் நல் வாழ்வு பற்றிய அக்கறையுடன் சம்பந்தப்பட்டதல்ல. மேற்கத்தைய சார்பு முதலாளித்துவ அரசியல்வாதியான சூ கீ, அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் கொள்கைகளை மாற்றிக்கொண்டுள்ளதோடு சீனாவுக்கு பர்மாவில் தனது செல்வாக்கை பலப்படுத்திக்கொள்ள மட்டுமே வசதியளிக்கும் இத்தகைய தடைகளை அகற்றுவதற்கும் முயற்சிக்கின்றன, என்பதை அடையாளங் கண்டுகொண்டுள்ளார்.

ஜுன்டாவின் அரச சமாதான மற்றும் அபிவிருத்திச் சபை, முற்றிலும் மோசடியான தேசியத் தேர்தல்களை அரங்கேற்றி இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையிலேயே சூ கீ விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு “வெட்கக் கேடு” என கண்டனம் செய்திருந்தன. மேற்கில் இருந்த வந்த உக்கிரமான அழுத்தத்தின் கீழ், பிடியை இலகுவாக்குவதில்லை என்ற தனது உறுதிப்பாட்டை ஜுன்டா கலைத்தது. மேலும், தேர்தல்களை நடத்துவதோடு சூ கீ யையும் விடுதலை செய்வதன் மூலம், அமெரிக்காவுடனும் அதன் பங்காளிகளுடனும் பரஸ்பரம் இலாபகரமான உறவுகளை விரிவுபடுத்திக்கொள்வதற்கான தமது விருப்பத்தையும் ஜெனரல்கள் வெளிப்படுத்திக்கொண்டனர்.

திங்களன்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பி.ஜே. கிரௌலி, “நாம் எதிர்வரும் வாரங்களில் [ஜுன்டாவுடன்] சந்திப்புக்களை நடத்துவோம்”, என நாளாந்த ஊடக மாநாட்டில் தெரிவித்தார். “விளைபயனுள்ள கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு, பிரச்சினைக்குரிய இரு தரப்பினருக்கிடையில் கொடுக்கல் வாங்கல் அவசியம். எனவே நாம் பர்மாவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். மேலும் கூட்டங்களை நடத்துவதில் நாம் ஆர்வமாக இருக்கின்றோம்,” என மேலும் கூறியதன் மூலம், அவர் அதிகளவு இணக்காமன கொள்கையை சுட்டிக்காட்டினார்.

உத்தியோகபூர்வமாக, அமெரிக்காவும் அதன் பங்காளிகளும் பர்மாவின் அரசியல் அபிவிருத்திகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்களே அன்றி, தமது கொள்கையை இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. “வெளியுறவு கொள்கையில் மாற்றம்” ஏதும் இருக்கின்றதா என கேட்ட போது, “பர்மா சம்பந்தமாக எங்களுக்கு ஒரு மூலோபாயம் உண்டு, அது கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்டது, மற்றும் நாம் பர்மாவுடன் தொடர்ந்தும் உறவு வைத்திருப்போம், ஆனால் அது தடைகளையும் சம்பந்தப்படுத்தியுள்ளது” என கிரௌலி தெரிவித்தார். ஒபாமா நிர்வாகம் ஜுன்டாவிடம் இருந்து மேலும் விட்டுக்கொடுப்புக்களை எதிர்பார்ப்பதாக சுட்டிக் காட்டிய அவர், “எமது கொள்கையை மாற்றுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைகள் தேவை” எனத் தெரிவித்தார்.

தற்போது, அமெரிக்காவும் கனடாவும் பர்மா மீது பரந்தளவு பொருளாதார தடைகளை விதித்துள்ள அதே வேளை, ஐரோப்பிய ஒன்றியமும் ஆஸ்திரேலியாவும் ஜுன்டா உறுப்பினர்களுக்கு எதிராக “இலக்குவைக்கப்பட்ட” தடைகைள விதித்துள்ளன. நேற்றைய ஆஸ்திரேலியன் செய்திப் பத்திரிகையின் படி, சூ கீ உடன் ஆஸ்திரேலிய வெளியுறுவு அமைச்சர் கெவின் ரட் பேசியுள்ளதோடு விவகாரம் சம்பந்தமாக கண்பரா வளையும் தன்மை கொண்டிருக்கும் என தெளிவுபடுத்தினார். தற்போது அமுலில் உள்ள ஆஸ்திரேலியாவின் இலக்குவைக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பயணத் தடைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்றுமதிகள் மீதான தடைகளும், மனித உரிமை பிரச்சினைகளை அணுகுமாறு பர்மிய அதிகாரிகளை நெருக்குவதற்காக பேணப்பட்டு வருகின்றது. பர்மிய அரசியல் முன்னெடுப்பில் இருந்து என்ன வெளிப்படுகின்றது என்பதை ஆஸ்திரேலியா மிக நெருக்கமாக கண்காணித்துக்கொண்டிருப்பதோடு பர்மாவில் சீர்திருத்தம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆதரவளிப்பதன் பேரில் அடுத்த நடவடிக்கையை தீர்மானிப்பதற்காக ஆங் சான் சூ கீ உடனும் சர்வதேச சமூகத்தில் இருந்து பாத்திரமாற்றும் ஏனையவர்களுடனும் கலந்துரையாடும்,” என ரட்டின் பேச்சாளர் தெரிவித்தார்.

லண்டனைத் தளமாகக் கொண்ட பைனான்ஷியல் டைம்ஸின் ஆசிரியர் தலைப்பு ஒன்று, மேற்கொள்ளப்படும் பொருளாதார மற்றும் மூலோபாய கணக்கெடுப்புகளை சுட்டிக்காட்டியது. தற்போதைக்கு தடைகளை அமுலில் வைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கும் அது, “தடைகள் சர்வதேச உறவுகளின் விரும்பத்தக்க விளைவு அல்ல: சிறப்பாக அவை ஒரு நெம்புகோலாகும். மற்றும் ஜெனரல்களை செயற்பட வைப்பதற்காக மேற்கு முதலீடுகளை நிறுத்திவைத்து நெருக்கிக் கொண்டிருக்கும் அதே வேளை, சீனாவும் இந்தியாவும் தமது அயல் நாட்டுடன் வர்த்தகம் செய்ய விரைகின்றன. பர்மாவின் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின்படி, இந்த ஆண்டு பெய்ஜிங் 8 பில்லியன் டொலருக்கும் அதிகமாக பர்மாவுக்குள் உந்தித் தள்ளியுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

ஒபாமா ஆட்சிக்கு வந்த பின்னர், அவரது நிர்வாகம் பர்மா தொடர்பாக ஒரு கொள்கை மீளாய்வை மேற்கொண்டதோடு சீனாவின் செல்வாக்கு வளர்ச்சி கண்டுவருவதில் இருந்து மீள்வதன் பேரில், ஜுன்டா அரசாங்கத்துடன் உறவுகளை முன்னேற்றிக்கொள்ள முயற்சிக்கும் அதேவேளை, அதன் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்காகவும் “கரட் கிழங்கும் பொல்லும்” அணுகுமுறையை ஏற்றுக்கொண்டது. அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் கர்ட் கேம்பெல், 2009 நவம்பரில் பர்மாவுக்கு விஜயம் செய்தார். 15 ஆண்டுகளுள் அங்கு பயணித்த மிகவும் சிரேஷ்ட அமெரிக்க அதிகாரி இவராக இருந்தார். ஒபாமாவும் இராஜாங்கச் செயாலாளர் ஹிலாரி கிளின்டனும் இம் மாதம் ஆசியாவுக்குப் பயணம் செய்தது, அமெரிக்கா “ஆசியாவுக்கு மீண்டும் வந்துள்ளதுடன்” சீனாவின் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதார மற்றும் இராணுவ செல்வாக்கை எதிர்ப்பதற்காக கூட்டணிகளையும் அமைக்க முயற்சிக்கும் என்ற செய்தியை மீண்டும் வலியுறுத்துவதேயாகும்.

பர்மிய ஜுன்டாவுடன் கலந்துரையாடுவதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் சில தட்டினர் வலியுறுத்துகின்றனர். கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரம் சம்பந்தமான செனட்டின் வெளியுறவு துணைக் குழுவின் தலைவரும் டிமோக்கிரடிக் காங்கிரஸ் உறுப்பினருமான ஜிம் வெப், அமெரிக்கா “ஏதாவதொரு வகையிலான உறுதியான கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லாவிட்டால், பர்மா அடிப்படையில் ஒரு சீனாவின் மாகாணமாக ஆகப் போகின்றது” என கடந்த மாதம் எச்சரித்தார்.

பர்மிய அரசாங்கம் பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவு வைத்துள்ளது. பர்மா ஊடாக இந்து சமுத்திரத்தில் ஒரு துறைமுகத்தை சீனா விளைபயனுள்ள வகையில் பெற்றுள்ளது. 2013ல் முடிவுறவுள்ள ஒரு திட்டத்தில், பர்மாவில் இருந்து தென் சீனாவுக்கு எண்ணெய் மற்றும் எரி வாயுவை கொண்டு செல்வத்றகான குழாய் வழிகளை அமைப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது. யுன்னான் மாகாணத்துக்கு பர்மா ஊடாக மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து விநியோகங்களை கொண்டு செல்வதன் மூலம், அமெரிக்க கடற்படை பலத்தால் பாதிக்க கூடியதாக உள்ள மலாக்கா நீரினையை சீனாவால் தவிர்த்துக்கொள்ள முடியும்.

இந்திய அந்தமான் தீவுகளுக்கு நெருக்கமாக இந்து சமுத்திரத்தில், பெரிய கொகோ தீவில் SIGINT புலனாய்வு ஒன்று கூடல் நிலையம் உட்பட, பர்மாவில் கடற்ப்படைத் தளங்களையும் மின்சார கண்காணிப்பு வசதிகளையும் சீனா அபிவிருத்தி செய்வதாக தெரிய வருகின்றது. அங்கிருந்து, கிழக்கு இந்து சமுத்திரம் பூராவும் ஏனைய கடற்படைகளதும் கப்பல்களதும் இயக்கத்தை சீனாவால் கண்காணிக்க முடியும்.

கடந்த இரு தசாப்தங்களில் பர்மாவின் மொத்த முதலீட்டில் மூன்றில் இரண்டுக்கு பெய்ஜிங் பொறுப்பாக இருக்கின்றது. தடைகளால் ஏற்படுத்தப்பட்ட இடைவெளியை ஏனைய நாடுகளும் சுரண்டிக்கொண்டுள்ளன. இந்தியா மற்றும் ASEAN நாடுகளும், குறிப்பாக தாய்லாந்தும், பர்மாவில் இலாபகரமான வர்த்தகங்களை அபிவிருத்தி செய்துள்ளன. 570 பில்லியன் கன மீட்டர்கள் நிரூபிக்கப்பட்ட வளங்களுடன், இயற்கை எரிவாயு பர்மாவின் பிரதான ஏற்றுமதியாகியுள்ளது. அது மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 38 வீதத்துக்கும் அதிகமாகும். எண்ணெய் அகழ்வில் இந்தியாவே மேலாதிக்கம் செலுத்துகிறது. தாய்லாந்து இயற்கை வாயு மற்றும் உட்கட்டமைப்பில் முதலீடு செய்கின்றது.

இந்த மாத முற்பகுதியில், எகோனொமிஸ்ட் சஞ்சிகையின் ஒரு சிந்தனைக் குழுவான பொருளாதார புலனாய்வு பிரிவு, “பர்மிய பொருளாதாரத்தை பெருகச் செய்யும் வழியில் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கான கனிசமான அங்கீகாரங்கள் சில ஆண்டுகளில் வரவுள்ளன” என செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முதலாவது காலாண்டில், மொத்தமாக 10.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இது கடந்த நான்கு ஆண்டுகளிலும் மொத்தமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட 2.2 பில்லியன் டொலரில் இருந்து ஒரு பண்புரீதியான பாய்ச்சலாகும். உத்தேசிக்கப்பட்டுள்ள டவோய் விசேட பொருளாதார வலயத்துக்கான அழ்கடல் துறைமுகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக தாய் நிறுவனமொன்றுடன் 8 பில்லியன டொலருக்கு செய்துகொள்ளப்பட்டுள்ள அண்மைய உடன்படிக்கை, 2010-2011 ஆண்டு புள்ளி விபரத்தில் உள்ளடக்கப்படவில்லை.

பர்மாவுடன் முரண்பாடு கொண்ட செய்தி முகவரமைப்பான ஐராவட்டி குறிப்பிடுவதன் படி, 2009-10ல் நேரடி வெளிநாட்டு முதலீடு 315 மில்லியன் டொலர் வரை கூர்மையாக வீழ்ச்சி கண்டது. ஆனால் 2010-11ல், சுமார் 16 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அர்ப்பணிப்பார்கள் என்று ஜுன்டா எதிர்பார்க்கின்றது (பெருமளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் மின்சார உற்பத்தியில்). சீனாவும் தாய்லாந்தும் தொடர்ந்தும் பெரிய முதலீட்டாளர்களாக விளங்குகின்றன. அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் (சுமார் 2 பில்லியன் டொலர்) மற்றும் சிங்கப்பூரும் உள்ளன. ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்லாந்தில் இருந்து 30 க்கும் மேற்பட்ட கம்பனிகள் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்விலும் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளன. சுரங்கத் தொழில், உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறையும் கூட முதலீடுகளை ஈர்க்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், பர்மாவின் பொருளாதாரம் ஒரு ஆண்டு சராசரிப் படி 6.5 முதல் 7 வீதம் வரை வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு பூராவும், பொருளாதாரத் துறைகளை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்துவிட்டு ஜெனரல்கள் பணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், அரசுக்குச் சொந்தமான 300 வணிகங்களும் சொத்துக்களும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம், ஒரு மதிப்பீட்டின்படி ஜனத்தொகையில் முக்கால்வாசிப்பேர் விவசாயத்தால் பிழைத்திருப்பதோடு, பர்மிய மக்கள் ஆண்டுக்கு 450 டொலருக்கும் குறைவான சராசரி வருமானத்தைப் பெறுபவர்களாக, தென் கிழக்காசியாவில் மிகவும் வறியவர்களாக தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறெனினும், சூ கீ யை விடுவிப்பதோடு அமெரிக்காவுடன் “கொடுக்கல் வாங்கலில்” ஈடுபடுவதன் மூலம் பர்மிய ஜுன்டா இலகுவாக்கிக்கொள்ள முனையும் மேற்கத்தைய தடைகளால், இந்த பொருளாதார விரிவாக்கம் தொடர்ந்தும் தடுக்கப்படும். வாஷிங்டன் அக்கறைகாட்டுவதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பின் பாகமாகவே அந்த தடைகள் இலகுவாக்க அல்லது அகற்றப்பட முடியும் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளையும் போலவே, ஆசியாவில் செல்வாக்குக்காக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் உக்கிரமடைந்துவரும் பகைமையில் பர்மாவும் அடித்துச் செல்லப்படுகிறது.