World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Europe’s dirty secret

ஐரோப்பாவின் அசிங்கமான இரகசியம்

Stefan Steinberg and Barry Grey
19 November 2010

Back to screen version

முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் சர்வதேச நிதி நலன்களுக்கும் இடையிலான உறவு தொடர்பாக ஒரு வெளிப்படையான ஒப்புதலாக, பைனான்சியல் டைம்ஸ் செவ்வாயன்று “ஐரோப்பாவின் அசிங்கமான இரகசியம்” குறித்து எழுதியது.

அயர்லாந்தின் செயலிழக்கும் வங்கி அமைப்புமுறையில் சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் பத்திர முதலீட்டாளர்கள் செய்துள்ள முதலீடுகளுக்கு முழுமையாக உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை அந்நாட்டிற்கு பல பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை கடனாக வழங்கத் திட்டமிட்டிருப்பதற்கு எதிராக இப்பத்திரிகை தலையங்கம் வடித்திருந்தது. இந்த திட்டத்தின் கீழ் அயர்லாந்து ஏறக்குறைய தனது பொருளாதாரக் கொள்கை மீதான இறையாண்மையை ஐரோப்பிய ஒன்றியத்திடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் ஒப்படைத்து விடும்; அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மீது ஒரு புதிய மற்றும் இன்னும் கூடுதலான மிருகத்தனத்துடனான தாக்குதல்களைத் திணிப்பதன் மூலம் உலக நிதி உயர்தட்டின் சமீபத்திய பிணையெடுப்பை மறுபடியும் பற்றிக் கொள்ள உடன்படும்.

அயர்லாந்து அரசை கடனை திருப்பியளிக்க முடியாத நிலைக்குத் தள்ளி விட்டு, அங்கிருக்கும் நடைப்பிணமான வங்கிகளை முட்டுக் கொடுப்பதின் மூலமாக நிதிக் கனவான்களின் வராக் கடன்களை மறைக்க 440 பில்லியன் யூரோ ஐரோப்பிய நிதி ஸ்திரநிலை வசதியைப் (EFSF) பயன்படுத்துவது “ஒரு மரணகரமான தவறாக” ஆகும் என்று பைனான்சியல் டைம்ஸ் வாதிட்டது. அரசின் கடனை திருப்பியளிக்க முடியாத நிலைகள் புதிய நிதிப் பீதிகளையும் திவால்நிலைகளையும் தூண்டிவிடும் என்பதால் இத்தகையதொரு கொள்கை குறுகிய கண்ணோட்டமுடையதும் தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்ளக் கூடியதுமாகும் என்று டைம்ஸ் வலியுறுத்தியது.

டைம்ஸ் எழுதியது: “தங்கள் வங்கிகளுக்கு பொறுப்பற்று நிதியாதாரம் கொடுப்பவர்களுக்கு கடன்பட்டவர்களாக ஐரிஷ் மக்களை இது ஆக்கி விடும். எப்படிப் பார்த்தாலும் EFSF நிதியாதாரத்தை வரி செலுத்துவோர் தானே திருப்பி செலுத்தியாக வேண்டும். அத்துடன் தனியார் வங்கிக்கான நிதியளிப்பாளர்களுக்கு நிறைவு அளிக்க அரசாங்க கருவூலங்கள் எதனை வேண்டுமானாலும் செய்யும் என்பதான ஐரோப்பாவின் அசிங்கமான இரகசியத்திற்கு ஒரு உத்தியோகபூர்வ ஐரோப்பிய ஒன்றிய அங்கீகாரத்தையும் இது வழங்கி விடும்.”

பைனான்சியல் டைம்ஸ் “அசிங்கமான இரகசியம்” என்று அழைக்கும் ஒன்று, 26 மாதங்களுக்கு முன்பு லெஹ்மென் பிரதர்ஸ் நிலைகுலைந்தது தொடங்கி நடந்த அபிவிருத்திகளை பின்தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு புதிய செய்தியாய் தோன்றுவதில்லை. ஆயினும் ஐரோப்பா முழுவதிலும் அரசாங்க கொள்கையின் மீது வங்கிகள் செலுத்தும் சர்வாதிகாரம் ஒன்று இருப்பதை பிரிட்டிஷ் நிதி மூலதனத்தின் இந்த ஊதுகுழல் எவ்வளவு அப்பட்டமாய் ஒத்துக் கொள்கிறது என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்க விடயமாய் இருக்கிறது. அதேபோல் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா அல்லது ஆசியாவிலும் இதே நிலைமை தான்.

”பொறுப்பற்ற”வர்கள் என இது அழைக்கும் ஒரு சிறு எண்ணிக்கையிலான நிதித்துறை மேற்தட்டு தமது ஊக வணிக தோல்விகளை மூடிமறைப்பதற்கு பொதுக் கருவூலங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இதில் ஒட்டுமொத்த மக்களையும் “கொத்தடிமை” சேவகர்களின் நிலைமைகளுக்கு தள்ளுகிறார்கள் என்பதையும் இந்த பத்திரிகை ஒப்புக் கொள்கிறது. இந்த ஒரே நாட்டம் தான் ஐரோப்பாவெங்கிலும் அரசாங்கங்களின் முடிவுகளை செலுத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தின் சாதாரணமான அரசியல் வண்ணம் என்னவாக இருந்தாலும், அது “மையத்தில் இருந்து இடது” ஆயினும் (கிரீஸின் சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் மற்றும் அயர்லாந்தில் Fianna Fail அரசாங்கம் போன்றவை) சரி அல்லது “மையத்தில் இருந்து வலது” ஆயினும் (பிரிட்டனின் கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயகக் கூட்டணி மற்றும் பிரான்சின் கோலிசவாத ஆட்சி) சரி, அது தனது உத்தரவுகளை பெரும் வங்கிகளிடம் இருந்தே பெறுகிறது. இது தான் தொடர்ந்து அரசாங்கத் தலைவர்கள் “சந்தை யதார்த்தங்கள்” என்று அடிக்கடி குறிப்பிடுவதன் அர்த்தம் ஆகும்.

முதலாளித்துவ அரசியலின் “அசிங்கமான இரகசியம்” குறித்து டைம்ஸ் ஒப்புக் கொண்டிருப்பதானது முதலாளித்துவத்தின் கீழான ஜனநாயகம் என்று அழைக்கப்படும் மோசடியின் முகத்திரையை அகற்றியிருக்கிறது.

வெகுஜன எதிர்ப்பை மறுதலித்து அரசாங்கங்கள் ஒரே சீராய் சமூக விரோத கொள்கைகளை தொடர்கின்றன. மார்க்சிசம் வெகுகாலமாய் விளக்கி வந்திருப்பதைப் போல, அரசு என்பது தொழிலாள வர்க்கத்தை அடக்கியாளுவதற்கான பெருநிறுவன-நிதித்துறை ஆளும் வர்க்கத்தின் சாதனமாக செயல்படுகிறது.

கடந்த வருடத்தில், நிதி மூலதனம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சென்ற இளவேனில் காலத்தின் கிரேக்க கடன் நெருக்கடியை தொடர்ந்து இப்போது அயர்லாந்தின் நிகழ்வுகள் உலக முதலாளித்துவத்தின் புறநிலையான நெருக்கடியிலும் சரி இந்த நெருக்கடிக்கான ஆளும் வர்க்கங்களின் பதிலிறுப்பிலும் சரி இரண்டிலுமே ஒரு புதிய கட்டத்தை அடையாளப்படுத்துகிறது.

அமெரிக்காவிடம் இருந்து குறிப்பை பெற்றுக் கொண்டு, உலகெங்கிலுமான அரசாங்கங்கள் செப்டம்பர் 2008ல் வெடித்த நிதிப் பொறிவுக்கான ஆரம்ப பதிலிறுப்பாக, பொது நிதிகளில் இருந்தான டிரில்லியன் கணக்கான டாலர்களை தங்களது வங்கி அமைப்புகளுக்குள் பாய்ச்சி பெரும் வங்கிகளுக்கு முட்டுக் கொடுத்தன. இது தான் உலகெங்கிலுமான அரசாங்கங்கள் செயல்படுத்திய “ஊக்குவிப்பு” திட்டங்கள் என்று அழைக்கப்படுவதன் சாரம் ஆகும்.

நுகர்வில் கட்டுப்பாடற்ற நிலைகுலைவையும் உலகளாவிய பணச்சுருக்கத்திற்குள்ளான கீழ்நோக்கிய சரிவையும் தடுக்கும் காரணம் ஒரு பாதியும், நிதிப் பிரபுத்துவத்தை மீட்பதற்கு பொது நிதியை சூறையாடுவதற்கு அரசியல் மறைப்பை வழங்கும் காரணம் ஒரு பாதியும் என, அரசாங்கங்கள் மந்தநிலையின் சமூக தாக்கத்தின் அதிர்வை குறைந்தபட்சமாய் பராமரிக்க குறைந்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த நடவடிக்கைகள் ஆளும் வர்க்கங்கள் கால அவகாசம் பெறுவதற்கு வழியமைத்தன.

ஆயினும், 2009ன் இரண்டாவது பாதியில், நிலைக்குலைவுக்கான உடனடி அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டு விட்டது என்பதும், வங்கியாளர்களும் ஊக வணிகர்களும் தங்களது பாதிக் குற்றவியல் நடவடிக்கைகளுக்கான பின்விளைவுகளை சந்திக்க மாட்டார்கள் என்பதும், எந்த தீவிரமான நிதிச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படப் போவதில்லை என்பதும் தெளிவான போது, பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு கண்டன. அத்துடன் வங்கி இலாபங்களும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கொடுப்பனவுகளும் உயர்ந்தன.

அரசியல் உயர்தட்டின் புண்ணியத்தில் மிகச் சக்திவாய்ந்த நிதி நிறுவனங்கள் நெருக்கடியின் முதல் கட்டத்தில் இருந்து முன்னெப்போதையும் விட ஆதிக்கம் மேலோங்கியும் செல்வமிகுந்தும் வெளிவந்தன. இந்த அபிவிருத்திகளால் துணிச்சலுற்ற உலகளாவிய நிதி மூலதனம் 2009ன் இறுதியில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஊக்குவிப்பில் இருந்து நிதி வெட்டுகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை நோக்கிய ஒரு உலகளாவிய நகர்வுக்கு முன்னுதாரணமாய் ஸ்தாபிக்க கிரீஸை அது குறிவைத்தது.

சென்ற வசந்த காலத்தில், வங்கிகள் மற்றும் பத்திரச் சந்தைகளின் நெருக்குதலின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் தனது சிக்கன வேலைத்திட்டத்தை கையிலெடுத்தது. நல உதவிகளில் எஞ்சியிருந்தவற்றின் மீதும் தொழிலாள வர்க்கத்தின் கடந்த கால சமூக வெற்றிகள் மீதும் வரலாற்றுத் தாக்குதல்களை தொடுத்தது. இந்த வர்க்கப் போர் தாக்குதலில் அயர்லாந்து நெருக்கடி ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

இதன் நோக்கம் உலகெங்கும் வர்க்க உறவுகளை மறுசீரமைப்பதாகும். சமூகநல உதவித் திட்டங்களில் எஞ்சியிருக்கும் அனைத்துமே துடைத்தழிக்கப்பட வேண்டும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் ஊதியங்கள் மலிவு ஊதிய “வளரும்” நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு வெட்டப்பட இருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் ஒரு நூற்றாண்டுக்கு முன் நிலவிய நிலைகளுக்கு திரும்ப இருக்கின்றன.

இத்தகையதொரு சமூக உருமாற்றம் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியின் பாரம்பரியமான வழிமுறைகளின் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட முடியாது. ஒரு நாட்டில் மாற்றி ஒரு நாட்டில் (கிரீஸில், போர்ச்சுகலில், ஸ்பெயினில், பிரான்சில், இங்கிலாந்தில்) வெட்டுகளுக்கு எதிராக போராடும் தொழிலாளர்களும் இளையோர்களும் அரசு அடக்குமுறையை எதிர்கொண்டுள்ளனர்.

”யூரோ மண்டலத்தை ஜனநாயக நெருக்கடி எதிர்கொள்கிறது” என்ற தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் ஒரு கட்டுரை, அயர்லாந்தின் பொருளாதாரக் கொள்கையை உத்தரவிட EU-ECB-IMF மூவரணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பதென்பது அந்த நாட்டில் “சுதந்திரம் என்பது பெயரளவிற்கு மேல் இருக்காது” என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. “தனது இதயத்தில் ஜனநாயகத்தைக் கொண்டிராத அரசாங்கத்தின் ஒரு புதிய வடிவத்தை வடிவமைப்பது வாக்காளர்களுக்கு கோபமூட்டும் என்பதோடு தீவிரவாதிகளுக்கு பாதை திறந்து விடும்” என்று சமூக எழுச்சிகளின் அபாயம் குறித்து அக்கட்டுரையாளர் எச்சரிக்கிறார்.

எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியைத் தீர்க்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இந்த நெருக்கடி வெறுமனே சந்தர்ப்பவசமான சரிவு அல்ல, மாறாக ஒட்டுமொத்தமாய் அமைப்புமுறையின் கட்டமைப்பிலான நெருக்கடி என்பது தெளிவாகத் தெரிகிறது. 1930களில் போலவே, மந்தநிலையும் சிக்கனமும் முன்னெப்போதையும் விடக் கடுமையான சர்வதேச பொருளாதார மோதல்களுடன் கைகோர்த்துச் செல்கின்றன என்பதோடு உலகப் போரை நோக்கி சாய்கின்றன.

தொழிலாள வர்க்கம் உலகளாவிய நிதிய உயர்தட்டின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் அதன் தாக்குதலுக்கு இலக்காகவில்லை. நாடு மாற்றி நாட்டில் தொழிலாளர்கள் போராடுவதற்கான தங்களது விருப்பத்தை விளங்கப்படுத்தி வெகுஜன வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இன்று வரை இந்த போராட்டங்கள் தொழிற்சங்கங்களினது மற்றும் உத்தியோகபூர்வ “இடது” கட்சிகளிலும் மற்றும் நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புகளிலும் இருக்கும் அவற்றின் கூட்டாளிகளினது துரோகத்தால் சதிக்கு ஆளாகின, தோற்கடிக்கப்பட்டன.

புதிய மற்றும் பெரும் போராட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. போராட்டத்திற்கான ஒரு புதிய தலைமையையும் புதிய அமைப்புகளையும் கட்டுவது, ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்திற்காகப் போராடுவது, மற்றும் தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர நனவினை அபிவிருத்தி செய்வது ஆகியவையே அதிமுக்கிய பிரச்சினைகள். வங்கிகளின் சர்வாதிகாரத்தை உடைப்பதற்கும் உலக அளவில் உண்மையான ஜனநாயகம் மற்றும் சமூக சமத்துவத்தை ஸ்தாபிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியாக அணிதிரட்டுவதற்கு இதுவே முக்கியமானதாகும்.