WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
Australia: Gillard Labor responsible for another refugee suicide
ஆஸ்திரேலியா: கில்லார்டின் தொழிற் கட்சி மற்றொரு அகதியின் தற்கொலைக்குப் பொறுப்பு
By Mike Head
18 November 2010
Back
to screen version
சிட்னியிலுள்ள வில்லாவுட் குடியேறுவோர் தடுப்புக் காவல் மையத்தில் செவ்வாய் அதிகாலையில் ஒரு புகலிடம் தேடியவரின் சோகம் ததும்பிய தற்கொலையானது—இரண்டு மாதங்களில் இரண்டாவது—கில்லர்டின் தொழிற் கட்சி அரசாங்கத்தில் தொடர்ந்து விரிவாக்கப்படும் கட்டாயத் தடுப்புக் காவல் முறையிலுள்ள மனிதாபிமானமற்ற தன்மையை உயர்த்திக் காட்டுகிறது.
இந்த வாரம் பாதிக்கப்பட்ட அஹமத் அல்-அகபி கழிவறைப் பகுதியில் தூக்கிலிட்டுக் கொண்டார். மூன்று இளம் பெண் குழந்தைகளைக் கொண்ட இந்த 41வயது ஈராக்கியப் பள்ளி ஆசிரியரான இவர் படகு மூலம் ஆஸ்திரேலிய கடலுக்குள் வந்தபோது, இந்தியப் பெருங்கடல் பகுதியான கிறிஸ்துமஸ் தீவில் ஓராண்டிற்கும் மேலாக தடுப்புக் காவல் மையத்தில் வைக்கப்பட்டார். இவருடைய இறப்பானது ஒரு பிஜிய நாட்டைச் சேர்ந்த தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 36 வயதான Josefa Rauluni வில்லன்வுட்டில் மேல் தளத்தில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்ட இரு மாதங்களின் பின் நடந்துள்ளது —அவர் மீண்டும் பிஜிக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு சற்று முன் இது நடந்தது.
இரண்டு இறப்புக்களுமே ஏனைய தடுப்புக் காவலில் இருப்பவர்களிடையே கோபத்தையும் சிதைவையும் ஏற்படுத்தியது. இதையொட்டி மேல்தளத்தில் நின்று எதிர்ப்புக்கள் காட்டப்பட்டன. நேற்று ஐந்து புகலிடம் நாடுவோர் ஒரு சுவரின் உச்சிக்குச் சென்று “பாதுகாப்பு, காவல் வேண்டாம்”, “அடுத்து யார்” போன்ற கோஷ அட்டைகளைக் காட்டினர். கிட்டத்தட்ட 160 கைதிகள் செவ்வாய் காலை ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 22 ஈரானியர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை நேற்றும் தொடர்ந்தனர்.
அல்-அகபி மதச் சார்புடைய போராளிகளால் தாக்கப்பட்டதை அடுத்து ஈராக்கை விட்டு வெளியேறினார். ஆனால் இருமுறை ஆஸ்திரேலிய அரசாங்கம் அவருக்கு புகலிடப் பாதுகாப்பு விசாவை மறுத்துவிட்டது. சமீப மாதங்களில் அவர் கடுமையான மன அழுத்தங்கள் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் துவக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த ஈராக்கிய நகரமான கர்பலாவிற்கு அனுப்பப்படவேண்டும் என்று கோரியதாகவும் தெரிகிறது.
அகபியை அறிந்திருந்த வில்லாவுட்டில் இருக்கும் ஒரு சக ஈராக்கியப் புகலிடம் நாடியவர் Sydney Morning Herald இடம் கூறினார்: “அவர் பெரிதும் உளைச்சலும் மனத்தளர்வும் அடைந்து அதிகாரிகளிடம் கூறினார், ‘நீங்கள் எனக்குப் பாதுகாப்பு விசா அளிக்கவில்லை என்றால், தாயகம் திரும்ப தயவு செய்து என்னை அனுமதியுங்கள்’….அவர் தாயகம் செல்ல விரும்பினார் அவருக்கு 2, 4 மற்றும் 7 வயதுகளில் பெண் குழந்தைகள் உள்ளன. ஏன் திரும்பிச் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை என்று எவருக்கும் தெரியவில்லை.”
முன்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஈராக்கியரான சாத் ட்லா, ஓராண்டிற்கும் மேலாகச் சிறையில் இருப்பவர், ABC வானொலியிடம் தன்னுடைய கைபேசி மூலம், நீண்ட காலக் காவலினால் அல்-அகபி பெரும் சோர்வடைந்துவிட்டார் என்றார். ட்லா தான் கூரை மீது ஏறியிருப்பவர்கள் உட்பட பிற காவலில் உள்ளவர்களின் உளநல நிலை பற்றியும் பெரிதும் கவலைப்படுவதாகவும் சொன்னார்: “சிலர் மிகவும் தளர்ந்துள்ளனர். மக்களின் தாழ்ந்த உளநலம் நம் நிலை என்ன ஆவது, அல்லது நம்முடைய விண்ணப்பத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று கவலைப்படுகின்றனர்.”
குடியேற்றத்துறை மந்திரி Chris Bowen அல்-அகபியை அவர் அரசாங்கம் நடத்திய முறையைப் பாதுகாத்துப் பேசினார். தஞ்சம் கோரியவர் இருமுறை ஈராக்கிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறியதாகவும் பின்னர் அவர் மனதை மாற்றிக் கொண்டார் என்றும் மந்திரி தெரிவித்தார். “எனவே அவர் தன்னார்வம் இல்லாவிடினும் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன” என்று ABC வானொலியிடம் போவன் கூறினார். “இப்பொழுது தொடர்புடைய அனைவருக்கும் இது உளைச்சலை கொடுத்துள்ளது. குறிப்பாக அவருடன் தொடர்புடையவர்களுக்கு. இவை எப்பொழுதுமே கடினமான விவகாரங்கள் ஆகும். நம் சட்டங்களை நாம் செயல்படுத்த முடியாது என்ற பொருளை இது தராது. அகதி என்று ஏற்கப்படாவிட்டால்….உங்களை வெளியேற்றுவதற்குத்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.”
அரசாங்கம் “ஒரு கடுமையான உளநல மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தையும்” நடத்திவருவதாக போவன் கூறினார். ஆனால் அவரும் அவருடைய துறையும் அகபி உளநல நிலை பற்றிய மருத்துவ சிகிச்சை பெற்றாரா என்பதை அந்தரங்க அக்கறைகளை மேற்கோளிட்டு வெளியிட மறுத்துவிட்டனர். வில்லாவுட் மற்றும் பிற ஆஸ்திரேலியத் தடுப்புக் காவல் மையங்களை நடத்தும் உலகந்தழுவிய ஒப்பந்த Serco விற்கு ஈராக்கிய ஆசிரியரால் தற்கொலை இடர் இருந்தது என்பது அறியப்பட்டிருந்தது என்று நிர்வாகம் கூறியுள்ளது.
உள மருத்துவ வழிவகைகள் தொடக்கப்பட்டிருந்தாலும், இல்லையென்றாலும், இரு தற்கொலைகளுக்கான பொறுப்புக்களும் பிரதம மந்திரி ஜூலியா கில்லர்ட்ஸின் பசுமைவாதிகள் ஆதரவு பெற்ற அரசாங்கத்திடம் உள்ளன. இதுதான் பரந்த மக்கள் வெறுப்பையும் மீறி காலவரையறையற்ற தடுப்புக்காவல் என்ற தண்டனை தரும் கொள்கையைத் தக்க வைத்து விரிவாக்கியுள்ளது. 2007 தேர்தலில் ஹோவர்டின் லிபரல் அரசாங்கம் தோல்வியற்றதில் தடுப்புக் காவல் முறைக்கு மக்கள் கொண்டிருந்த எதிர்ப்பும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
நாடு முழுவதும் தடுப்புக் காவல் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன, அல்லது மூடப்பட்டவை மறுபடியும் திறக்கப்படுகின்றன. இதில் வெகுதூரத்தில் அதிக வசதிகள் அற்ற இராணுவத் தளங்களில் இருக்கும் முகாம்களும் உள்ளன. இவை மொத்தத்தில் 8,000 பேரைக் காவலில் வைத்துள்ளன. ஏற்கனவே 5,000 காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் கூட்டல் நெரிசல் நிறைந்த இடத்தில் உள்ளனர். அவையே ஹோவர்ட் ஆண்டுகளில் சிறை வைக்கப்பட்டிருந்த எண்ணிக்கையை விட மிக அதிகம் ஆகும். அப்பொழுது அதிகப் பட்ச எண்ணிக்கையாக 1999 மற்றும் 2002 ல் 4,000 வரை சென்றது. 700க்கும் மேற்பட்ட கைதிகளுடன் ஒருவரும் இல்லாத சிறுவயதினர் ஆவர்—குழந்தைகள் மற்றும் பருவ வயதினர்களில் இருப்பவர்கள் பெற்றோர்கள் இல்லாமல் பயணித்தவர்கள்.
செப்டம்பர் 1ம் தேதி 90 ஆப்கானிய தஞ்சம் கோருவோர் டார்வினிலுள்ள வடக்கு குடியேற்றக் தடுப்புக் காவல் மையத்தில் இருந்து வெளிவந்து ஒரு அமைதியான எதிர்ப்பை நடத்தி அதிகாரிகள் தோல்வியுற்ற தங்கள் அகதி அந்தஸ்து பற்றி மறு ஆய்வு செய்யவேண்டும் என்று வாதிட்டனர்.
உயரும் அழுத்தங்கள், வேதனைகள் என்று நீண்ட கால தடுப்புக் காவலால் ஏற்படுவதின் மற்றொரு அடையாளமாக கிட்டத்தட்ட உடன் துணை இல்லாத 50 ஆப்கானிய இளவயதினர் கடந்த ஞாயிறு மெல்போர்ன் குடியற்ற மாற்றிட நிலையம் என்று Boradmeadows ல் இருக்கும் முகாமில் சாப்பாட்டு அறையில் மோதல்களில் ஈடுபட்டனர். முதலில் 30 பேருக்காகக் கட்டப்பட்ட ப்ராட்மெடோஸ் மையத்தில் காவலில் இருப்பவர் எண்ணிக்கை கடந்த வார இறுதியில் 136 என கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 98 இளவயதினர் வந்தபின் அதிகரித்துவிட்டது.
புதிதாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, அகற்றக்கூடிய தடுப்புக்கள் அறையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தஞ்சம் கோருவோரின் வக்கீலான பமேலா கர், இந்த மோதல், நெரிசலினால் வரும் பிரச்சினைகளைக் காட்டுகிறது, ஆறு இளைஞர்கள் ஒரு கணனியைத்தான் பயன்படுத்த முடியும் என்றார். “அந்த அறைகள் ஒரு நபருக்காகக் கட்டப்பட்டன. இப்பொழுது இரண்டு இரட்டைப் பங்குகளை ஒவ்வொரு அறையிலும் படுக்கைகளுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளபடி அமைத்துள்ளனர்” என்று அவர் கூறினார்.
மனநலக் காப்புத் தொழில்வல்லுனர்கள், அரசாங்க தடுப்புக் காவல் மையச் சுகாதாரப் பணிப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் லூயி நியூமன் உட்பட, காவலில் உள்ளவர்களின் உளநல நிலையானது 12 மாதம் காவலில் இருந்தபின் தவிர்க்க முடியாமல் சரிகிறது என்றும், குறிப்பாக எப்பொழுது—விடுதலை செய்யப்பட்டால்—விடுதலை கிடைக்கும் என்று தெரியாத நிலையில் இருக்கும்போது இது நேரும் என்றும் எச்சரித்துள்ளனர்.
சில செய்தி ஊடகப் பிரிவுகள் அல்-அகபி தான் வெளியேற்றபடுவதை எதிர்த்து நீதிமன்றங்களில் முறையிட்டிருக்காலம் என்று கூறியுள்ளனர். ஏனெனில் கடந்த வாரம் ஒரு ஒருமனதான உயர்நீதிமன்றத் தீர்ப்பு அரசாங்கத்தின் “அகதிகள் அந்தஸ்து மதிப்பீடு” பற்றிய சில விதிகளை முரணானவை என்று அறிவித்துள்ளது. அந்த விதிகளின்படி தஞ்சம் கோருவோர் பாதுகாப்பு விசா மறுக்கப்படுவதை நீதிமன்றங்களை அணுகுவதின் மூலம் சவாலுக்கு விடுவது இயலாது என்று இருந்தது. பல வர்ணனையாளர்கள் இத்தீர்ப்பை அகதிகளுக்கு ஒரு வெற்றி என்று பாராட்டியுள்ளனர். ஆனால் நீதிபதிகள் தடுப்புக் காவல் மையத்தைப் பற்றியே ஏதும் கூறாமல் விட்டுவிட்டனர். குடியேறுவோர் சட்டப்படி—இதைத்தான் நீதிமன்றம் கருத்திற்கொண்டது— “பொது நலன்” என்ற பெயரில் அகதி விண்ணப்பத்தைப் பரிசீலிக்க வேண்டியதில்லை, நிராகரிக்கலாம் என்ற பெரும் அதிகாரத்தைத் போவன் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
ஆயினும்கூட அரசாங்கம் உடனே உயர்நீதிமன்றத் தீர்ப்பை கடப்பதற்கான வழிவகைகளை அறியும் தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளது. கில்லர்டின் திட்டங்களில் ஒன்று கிழக்கு திமோரில் காவல் மையம் ஒன்றைக் கட்டுவது ஆகும். இது தஞ்சம் நாடுவோரை ஆஸ்திரேலிய சட்ட அதிகார வரம்பிற்கு வெளியே நிறுத்தி விடும். காவலில் இருப்பவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல விரும்பினாலும், விசா விண்ணப்பங்களை நிராகரிக்க அரசாங்கம் அவற்றை ஒவ்வொருமுறையும் உயர்நீதிமன்றம் வரை எதிர்க்கும். இதன்விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகள் காவலில் இருப்பர். நெரிசல்கள் அதிகமாகும், எதிர்ப்புக்கள் பெருகும், உளநலச் சரிவுகள் அதிகரிக்கும்.
கட்டாயக் காவல் என்பது ஹாக் மற்றும் கீட்டிங்கின் தொழிற் கட்சி அரசாங்கங்களால் 1990 களின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கில்லார்ட் அரசாங்கம் அதைத் தக்க வைத்து, விரிவாக்கி வருகிறது. ஆனால் இப்பொழுது அதற்கு இது பாராளுமன்றத்தில் பசுமைவாதிகளுடைய ஆதரவை நம்பியுள்ளது. அவர்கள்தான் இப்பொழுது தொழிற் கட்சியின் முழுக் குடியேற்றச் செயல்பட்டியலையும் செயல்படுத்த துணை நிற்கின்றனர். ஆனால் அதிலுள்ள மிகக் காட்டுமிராண்டித்தன கூறுபாடுகளைப் பற்றி வரம்புடன் “குறைகூறுவதுடன்” நிறுத்திக் கொள்ளுகின்றனர். |