World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US corporate executives back at the trough

அமெரிக்க பெருநிறுவன நிர்வாகிகள் செல்வக்கொழிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்

Jerry White
16 November 2010

Back to screen version

அமெரிக்காவின் பெருநிறுவன மற்றும் நிதித்துறை மேற்தட்டினர் செல்வக்கொழிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் பத்து மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் பெருமந்த நிலைக்குப் பின் கண்டிராத சமூக துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டு வரும் நிலையில் இவர்கள் மிக உயர்ந்த சம்பளங்களையும் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

சென்ற நிதி ஆண்டில் அமெரிக்காவின் 450 பெரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் பெற்ற வருடாந்திர கொடுப்பனவுகள் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட புதியதொரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாய், சராசரியான ஊதியம் (சம்பளங்கள், கொடுப்பனவுகள், பங்குகள், வாய்ப்புகள் மற்றும் பிற ஊக்கச் சலுகைகள் ஆகியவை உட்பட) 3 சதவீதம் உயர்ந்து 2009ல் 7.3 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

பெரும் நிறுவனங்களின் இலாபம் முந்தைய வருடத்தை விட இருமடங்காய் அதிகரித்திருந்ததன் விளைவே இந்த அதிகரித்த ஊதியங்கள். இதனால் மொத்தமாய் பங்குதாரருக்கான வருடாந்திர வருவாய் 29 சதவீதம் அதிகரித்திருந்தது. ஒபாமா நிர்வாகம் மற்றும் இரு பெரும் வணிகக் கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் பெருநிறுவன அமெரிக்கா தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தொடுத்திருந்த தாக்குதலின் நேரடி விளைவே இது. கடந்த இருவருட காலங்களில் நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையை வெட்டியிருக்கின்றன, ஊதியங்கள் மற்றும் நல உதவிகளை வெட்டியிருக்கின்றன, முழு-நேரத் தொழிலாளர்களை இடம்பெயர்த்து வறுமை நிலை ஊதியங்களைப் பெறும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு பணியமர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் உற்பத்தித் திறனை உயர்த்திக் கொண்டுள்ளன.

”செலவுக் குறைப்பு” மற்றும் “ஒழுங்குபடுத்துவது” ஆகியவை தான் சென்ற வருடத்தில் பெரும் ஊதியங்களை தட்டிச் சென்றிருக்கும் அனைத்து தலைமை நிர்வாக அதிகாரிகளின் பிரதான நாட்டங்களாய் இருந்தன. இவர்களில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:

(1) கிரிகோரி பி. மபேய் - லிபர்டி மீடியா கார்ப்பரேஷன் - இவர் சென்ற ஆண்டில் 87.1 மில்லியன் டாலர் தொகையை மொத்தமாய் ஊதியமாய் பெற்றுள்ளார் - இது அவரது 2008 தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு;

(2) லேரி எலிசன் - ஆரக்கிளின் பில்லியனர் ஸ்தாபகர் - இவர் 68.6 மில்லியன் டாலர்கள் பெற்றிருந்தார்;

(3) ரே ஆர். இரானி - ஓக்சிடெண்டல் பெட்ரோலியம் கார்பரேஷன் - இவர் பெற்ற தொகை 52.2 மில்லியன் டாலர்

(4) கரோல் பார்ட்ஸ் - யாஹூ - இவர் 44.6 மில்லியன் டாலர்கள் பெற்றிருந்தார்; மற்றும்

(5) லெஸ்லி மூன்வெஸ் - சிபிஎஸ் - இவர் 39 மில்லியன் டாலர் பெற்றிருந்தார்.

S&P 500 குறியீடு இந்த ஆண்டில் இதுவரை 7.5 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், 2010ல் மேல்நிலை நிர்வாகிகள் இன்னும் கூடுதல் ஊதியங்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “பல நிறுவனங்களும் வருவாய் எதிர்பார்ப்புகளை விஞ்சுகின்றன, பங்கு விலைகள் அதிகரிக்கின்றன, செயல்திறன் நன்றாக உள்ளது, எனவே கொடுப்பனவுகளும் சிறப்பாய் இருக்கும்” என்று சிகாகோவைச் சேர்ந்த ஊதிய ஆலோசனை நிறுவனத்தின் (Compensation Consulting Consortium LLC) பங்குதாரராய் இருக்கும் மார்க் ரேய்லி, ஜேர்னலில் தெரிவித்திருந்தார்.

ஆயினும், இந்த வருட இறுதியில் வோல் ஸ்ட்ரீட் தனது கொடுப்பனவுகளை அளிக்கும்போது சாகச நிதி மேலாளர்களும் (ஹெட்ஜ் ஃபண்ட்) தனியார் பங்கு வர்த்தகர்களும் பெறவிருக்கும் விசித்திரமான பெரும் தொகைகளுடன் ஒப்பிட்டால் ஊடகத் துறை, எரிசக்தித் துறை மற்றும் இணைய நிறுவனங்களின் தலைவர்கள் பெறக்கூடிய தொகை குறைவாகவே இருக்கிறது. 2010ல் “நிதிச் சேவைகளில்” ஒட்டுமொத்த ஊதிய அளவு 5 சதவீதம் உயர்ந்திருக்கும் என்றும், சொத்து மேலாண்மை போன்ற சில வணிகத்தில் இருக்கும் ஊழியர்கள் 15 சதவீத அதிகரிப்பைப் பெறுவார்கள் என்றும் நியூயோர்க் டைம்ஸ் மேற்கோள் காட்டியிருக்கும் ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. கோட்ல்மேன் சாக்ஸ், மோர்கன் ஸ்டான்லி, சிட்டிகுரூப், பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் ஜேபிமோர்கன் ஆகியவை தங்களது வருட-இறுதி கொடுப்பனவுகளுக்காக 89.54 பில்லியன் டாலர் தொகையை ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

”வோல் ஸ்ட்ரீட் தனது நிலையை மீட்கிறது, தனது பெரும் ஊதியத்தையும் தான்” (”Wall Street Gets Its Groove Back, And Big Pay, Too”) என்ற தலைப்பிலான கட்டுரையில் டைம்ஸ் மன்ஹாட்டனின் ஆடம்பர பொழுதுபோக்குக் களிப்பகங்களில் தாராளமாய் செலவழிக்கும் வர்த்தகர்களும் முதலீட்டு வங்கியாளர்களும் நிரம்பி வழிவதைக் குறிப்பிடுகிறது. ”கிரீன்விச் வில்லேஜின் புதிய முன்னணி இடங்களில் ஒன்றான” லயன் உணவக விடுதியின் உரிமையாளர்களுள் ஒருவரும் சமையற் கலைஞருமான ஜோன் டெலுசி, வாடிக்கையாளர்கள் உயர்தர ஒயின் பாட்டில்களை (சமீபத்தில் 3,950 டாலர் தொகைக்கு விற்பனையான Château Mouton-Rothschild 1982 உட்பட) வாங்குவதாகக் குறிப்பிட்டார். ”உயர்தர போர்தோ (Bordeaux) ஒயின் போன்ற ஏராளமான ஆடம்பர விடயங்கள் வாங்கப்படுவதைக் காண்கிறோம். இவையெல்லாம் கடந்த ஒரு சில வருடங்களாக நன்கு விற்பனையாகாத நிலையில் இருந்தன” என்று டெலுசி டைம்ஸிடம் தெரிவித்தார்.

அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தை உருக்குலைவின் விளிம்பிற்குக் கொண்டுவந்த நிதி முறிவின் வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஆளும் வர்க்கமானது தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறது. பெருநிறுவனங்கள் மற்றும் நிதிச் சந்தைகளின் “போட்டித்திறனையும்” ”இலாபமீட்டுநிலையையும்” பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது என்று வாதிட்டுக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்கள் சிக்கனத்தையும், செலவுக் குறைப்பையும், “குறைந்த நுகர்வையும்” கோருகின்றன.

ஒபாமா நிர்வாகம் தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் இருந்தே, “தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளத்திற்குக் கடிவாளமிடுவது” மற்றும் ”வங்கிகளை வரன்முறைப்படுத்துவது” என்றெல்லாம் மோசடியாகப் பேசுவது ஒருபக்கமிருந்தாலும், நிதித்துறை மேற்தட்டினரின் (இவர்களின் பொறுப்பற்ற தன்மை தான் 2008 பொறிவுக்குக் காரணமாய் அமைந்தது) செல்வங்களைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொன்றையும் செய்தது. டிரில்லியன் கணக்கில் வோல் ஸ்ட்ரீட்டிடம் ஒப்படைத்த பின், வெள்ளை மாளிகையானது நிர்ப்பந்தமான திவால்நிலைக்கு பொறியமைவு செய்து ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லரின் மறுசீரமைப்பின் பேரில் ஊதியங்கள் மற்றும் நல உதவிகளிலான வெட்டுகளின் ஒரு அலைக்கு முன்முயற்சியளித்தது, அது பொருளாதாரம் முழுவதும் பரவியிருக்கிறது. வேலைவாய்ப்பற்றோருக்கு வேலையளிக்கும் எந்த அரசாங்க நடவடிக்கைகளையும் நிர்வாகம் திட்டமிட்டு நிராகரித்து தொழிலாளர்களை இன்னும் மலிந்த ஊதியத்தையும் ஏற்கச் செய்ய நிர்ப்பந்தப்படுத்துவதற்கு வேலையற்ற நிலைகளை அதிகமான அளவிலேயே பராமரித்திருந்தது.

தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கைத் தரங்கள் நிரந்தரமாக குறைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாதவரை வேலைக்கு அமர்த்தப் போவதில்லை என்பதை பணமூட்டைகளின் மீது அமர்ந்திருக்கும் அமெரிக்க பெருநிறுவனங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஊதியங்கள் போதுமான அளவு துரிதமாய் குறைய மறுக்கின்றன என்றும் ஊதியங்களில் 3-5 சதவீத வரையான குறைப்பு இருந்தால் தான் “வேலைவாய்ப்பில் கணிசமான வளர்ச்சி” விளையும் என்றும் சென்ற வெள்ளியன்று நடந்த பெடரல் ரிசர்வ் பேங்க் ஆஃப் அட்லாண்டா கூட்டத்தில் வழங்கிய ஒரு ஆய்வறிக்கையில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ராபர்ட் ஷிமெர் புகார் கூறினார்.

வாஷிங்டன் போஸ்ட் வணிக பத்தியாளரான ஸ்டீவன் பேர்ல்ஸ்டீன் (Steven Pearlstein இவர் ஜனாதிபதி ஒபாமாவின் தாராளவாத ஆதரவாளர்) இதே கருத்தை எதிரொலித்தார். சென்ற மாதத்தில் இவர் எழுதிய கட்டுரை, “சம்பள வெட்டுகள் காயப்படுத்துகின்றன, ஆனால் அமெரிக்கர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப அது மட்டுமே ஒரே வழியாக இருக்கலாம்” என்று கூறி ஜெனரல் மோட்டார்ஸின் லேக் ஓரியான், மிச்சிகன் ஆலையில் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது ஐக்கிய வாகனத் தயாரிப்பு தொழிலாளர்கள் சங்கம் (UAW) திணித்த 50 சதவீத ஊதியக் குறைப்பை பாராட்டியது.

பேர்ல்ஸ்டீன் எழுதினார்: “அமெரிக்கா முகம் கொடுக்கும் அடிப்படையான பொருளாதார சவால் என்னவென்றால், நமது சக்திக்கு மீறி பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் நிலையில், நமது உற்பத்திக்கேற்ப நுகர்வை சமநிலையில் கொண்டுவருவது தான்”. அவர் மேலும் வலியுறுத்தினார்: “நமது வேலைச் செலவுகள் மிக அதிகமாய் இருப்பதால் உலக அளவில் போட்டித்திறன் குறைந்திருக்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவர வேண்டுமாயின் நுகர்விலும் வாழ்க்கைத் தரங்களிலும் மேலும் குறைப்பை செய்வது அவசியமானதாகும்.”

தொழிலாளர்கள் அவரது ஆலோசனைக்கு காது கொடுக்காததில் அவருக்குக் கோபம் கிளம்புவதையும் இக்கட்டுரையாளர் வெளிப்படுத்தினார். இண்டியானாபோலிஸ் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் UAW ஐ மறுத்து ஊதிய வெட்டு ஒப்பந்தத்தை பெருவாரியாய் நிராகரித்ததை அவர் குறிப்பிட்டார். குறைந்த ஊதியங்களுக்கு வேலை செய்ய வேண்டும் அல்லது வேலையே இல்லாமல் இருக்க வேண்டியது தான் என்பதைத் தவிர முதலாளித்துவம் தொழிலாளர்களுக்கு வேறு தெரிவை விட்டுவைத்திருக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு அப்பட்டமான கருத்தாக அவர் கூறுகிறார்: “பொருளாதாரத்தை சமநிலைக்குக் கொண்டுவர யாருக்காவது ஊதிய வெட்டு அவசியம் என்றால், அது நிச்சயமாக கொழுத்த சம்பளத்தைப் பெறும் முதலீட்டு வங்கியாளர்கள், பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் செய்தித்தாள் பத்தியாளர்கள் ஆகியோருக்குத் தான் அவசியம் என்று இதைப் படிக்கும் உங்களில் பலரும் நினைப்பீர்கள் என்று நிச்சயமாக எனக்குத் தெரியும். அப்படித்தான் சோசலிச சொர்க்கத்தில் விடயங்கள் நடக்கும், ஆனால் நியாயமானது என்பதைக் காட்டிலும் செயல்திறனை உருவாக்குவதில் மிகவும் மேம்பட்டவையான சந்தைப் பொருளாதாரங்களில் அப்படி நடக்காது.”

உண்மையில், முதலாளித்துவம் இம்முறையில் தான் வேலை செய்கிறது, ஆனால் அதற்கும் “செயல்திறனுக்கும்” சம்பந்தமில்லை. கண்ணியமான இருப்பிடம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு சீரமைப்புகள் ஆகிய சமூகத்தின் மிக அடிப்படையான தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் விடப்படும் நிலையில் மில்லியன் கணக்கான மக்களை வேலையின்மைக்கும் வறுமைக்கும் சபிப்பதில் என்ன செயல்திறன் கொட்டிக் கிடக்கிறது?

”மிகை நுகர்வு” பற்றிய எல்லா பேச்சுக்களிலும், ஆளும் வர்க்கத்தின் நுகர்வைக் குறைப்பதைப் பற்றி ஒருபோதும் ஆலோசிக்கப்பட்டதில்லை. அவர்களது திவாலான முதலாளித்துவ அமைப்புமுறையும் குற்றவியல் நடவடிக்கைகளும் தான் உலக மக்களில் பெரும்பான்மையானோர் எதிர்கொள்ளும் திக்கற்ற நிலைமைகளுக்கு பொறுப்பானவை ஆகும்.

உண்மையான சமூக சமத்துவக் கோட்பாட்டு அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையை மறுஒழுங்கு செய்வதற்கான போராட்டம் மட்டுமே நவீன காலத்தின் இந்த பெருநிறுவன மற்றும் நிதித்துறை மேற்தட்டின் பிடியில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி ஆகும். தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியினரிடம் இருந்து முறித்துக் கொண்டு தனது சொந்த சுயாதீனமான சோசலிசக் கட்சியை கட்டுவதில் இருந்து மட்டுமே இது தொடங்கப்பட முடியும்.