World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Obama backs India’s bid for permanent UN Security Council seat

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் முறையீட்டிற்கு ஒபாமா ஆதரவளிக்கிறார்

By Keith Jones
9 November 2010

Back to screen version

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் இடத்திற்கான இந்தியாவின் நீண்டகால முறையீட்டை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

திங்களன்று மதியம் இந்திய பாராளுமன்றத்தில் அவர் பேசிய உரையில் ஒபாமா இந்த கொள்கை மாற்றத்தை அறிவித்தார். இந்தியாவிற்கான மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளில் இந்த உரை திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், இந்திய முதலாளித்துவத்திற்கும் இடையில் ஒரு சர்வதேச மூலோபாய கூட்டணியை உருவாக்குவதற்கான வாஷிங்டனின் விருப்பத்தை வெளிப்படுத்த ஒபாமா இந்த வாய்ப்பை பயன்படுத்தினார்.

“ஆசியாவிலும், உலககெங்கிலும் சாதாரணமாக இந்தியா எழுச்சி பெற்று கொண்டிருக்கவில்லை; இந்தியா ஏற்கனவே எழுச்சி பெற்றுவிட்டது. நாம் பகிர்ந்து கொண்ட நலன்கள் மற்றும் மதிப்புகளோடு சேர்ந்து—அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு 21 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க கூட்டணிகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இந்த கூட்டணியை வலுப்படுத்தவே இங்கே நான் வந்திருக்கிறேன்என்று・ ஒபாமா அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் முறையீட்டிற்கு ஒபாமா அளித்திருக்கும் ஆதரவு, பரவலாக அமெரிக்க ஊடகங்களில் மிகச் சரியாக வெளிப்படுத்தி காட்டப்பட்டன. அதாவது சீனாவை எரிச்சலூட்டுவதற்கான ஒரு நடவடிக்கையாக எடுத்துக்காட்டப்பட்டன. கடந்த ஆண்டில் ஒபாமா நிர்வாகம் சீனாவிற்கு எதிராக தொடர்ச்சியாக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைக் கையாண்டிருந்தது. இந்தியாவிற்கான ஒபாமாவின் ஆதரவை Washington Post பின்வருமாறு குறிப்பிட்டது: “இது பொருளாதார சக்தியாக வளர்வதற்கான இந்தியாவின் விருப்பத்திற்கும் மற்றும் அதன் சர்வதேச விருப்பங்களுக்குமான ஒரு பலமான ஒப்புதலாகும். ஆனால் இது சீனாவை எரிச்சல்படுத்தக்கூடும்.”

இந்தியாவும், சீனாவும் மிக வேகமாக வளரும் பொருளாதார உறவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லை பிரிவினை பிரச்சினை, எண்ணெய் வளத்திற்கான போட்டி மற்றும் விரிவடைந்து வரும் அவற்றின் பொருளாதாரங்களுக்குத் தீனி போடுவதற்கான ஏனைய வளங்கள் ஆகியவற்றுடன் பாகிஸ்தானுடனான சீனாவின் நெருங்கிய உறவு மற்றும் தெற்காசியா முழுவதும் பரவி வரும் பெய்ஜிங்கின் செல்வாக்கு ஆகியவை குறித்த இந்தியாவின் அச்சம் மற்றும் அமெரிக்க தலைமையிலான ஆசிய-பசிபிக் இராணுவ-மூலோபாய அணிக்குள் புது டெல்லி கொண்டு வரப்பட்டு விடுமோ என்ற பெய்ஜிங்கின் கவலைகள் ஆகியவற்றால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் அழுத்தத்திற்குள்ளாகி இருக்கின்றன.

வளர்ந்து வரும் சீனாவை அடக்கி வைப்பதற்கான, மற்றும் தேவைப்பட்டால் எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் உந்துதலுக்கு இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ள வாஷிங்டன் தீவிரமாக விரும்புகிறது. அந்த முனையை நோக்கி தான், மூன்று தசாப்த பழமையான இந்தியா மீதான உள்நாட்டு அணுஆயுத வர்த்தக சர்வதேச தடையாணையை நீக்குவதற்கான ஒரு வெற்றிகரமான பரந்த பிரச்சாரம் செய்தது உட்பட, கடந்த தசாப்தத்தில் அமெரிக்கா தீவிரமாக புது டெல்லியின் ஆதரவைப் பெற முயன்றிருந்தது.

“இந்தியா ஒரு வல்லரசாக உருவாவதை அமெரிக்கா வரவேற்பதோடு மட்டுமின்றி, நாங்கள் அதற்கு உற்சாகத்தோடு ஆதரவும் அளிக்கிறோம். மேலும் அதை நிஜமாக்க நாங்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்து வருகிறோம்,”என்று ஒபாமா பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

ஒபாமாவின் இந்திய சுற்றுப்பயணத்தில்—நான்கு நாடுகளுக்கான 10 நாட்கள் ஆசிய சுற்றுப்பயணம். இதில் விளங்கப்படுத்தும் விதத்தில் சீனா இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது—இந்திய-அமெரிக்க உறவைப் பலப்படுத்த அமெரிக்கா நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும் என்று ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் முந்தைய நிர்வாகத்தில் இருந்த பல முக்கிய பிரபலங்கள் வலியுறுத்தி இருந்தனர். பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினருக்கான புது டெல்லியின் பிரச்சாரத்தை வாஷிங்டன் வெளிப்படையாகவே ஆதரிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது.

ஒபாமாவின் அறிவிப்பானது, 'கடினமான ஆசாமி வெளியேற்றப்படுவார்' என்ற அடிப்படையில் சீனாவை விட்டுவிடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ (VETO) அதிகாரம் பெற்றிருக்கும் தற்போதைய ஐந்து நாடுகளில், பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு நிரந்த உறுப்பினராக சேர வேண்டும் என்ற இந்தியாவின் முறையீட்டை வெளிப்படையாக ஆதரிக்காத ஒரே நாடாக சீனா மட்டுமே இருக்கிறது.

ஆனால் ஒபாமாவின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதைப் போலவே, அது பெரிதும் மறைமுக குறிப்புகளையும் கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்திற்கான ஜப்பானின் (சீனாவை அடக்கி வைப்பதற்கான அமெரிக்க மூலோபாயத்தின் மற்றொரு மைய ஆதாரம்) முறையீட்டை மட்டும் தான் ஒபாமாவின் நிர்வாகம் இதுவரை ஆதரித்திருக்கிறது.

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்படும் எந்த சீர்திருத்தமும் தற்போதைய நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவின் அதிகாரங்கள் மற்றும் தனிச்சலுகைகளைப் பிரச்சினைக்குள் கொண்டு வரும். இரண்டாம் உலக யுத்தத்தின் வெற்றியாளர்களால் ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட போது இந்த நிரந்தர நாடுகளின் பொருளாதார மற்றும் புவி-அரசியல் அதிகாரங்கள் என்னவாக இருந்தனவோ அவற்றில் பெரும்பகுதி சார்புரீதியில் தற்போது சுருங்கி உள்ளன. அதற்கும் மேலாக, நிரந்தர உறுப்பினர்கள் ஆவதற்கான அந்தஸ்திற்கு வந்திருக்கும் புதிய நாடுகளின் வளர்ச்சி, தற்போதைய உறுப்பினர்களின் அதிகாரங்களைக் குறைக்கும் என்பதோடு மட்டுமில்லாமல், அது பிராந்திய புவி-அரசியல் இயக்கவியலையும் மாற்றி, அதன் மூலம் சமூக வலையமைப்பில் எதிர்பைக் கொண்டிருப்பவைகளிடம் சலசலப்பையும் உண்டாக்கக்கூடும்.

ஒபாமாவின் அறிவிப்பு சில விஷயங்களில் மிகவும் விளக்கமில்லாமலும் இருக்கிறது. இப்போதைய நிரந்தர உறுப்பினர்கள் பெற்றிருக்கும் அதே வீட்டோ அதிகாரங்களை, இந்தியாவும் பெற அமெரிக்கா ஆதரவளிக்குமா என்பதை அவர் தெளிவுப்படுத்தவில்லை. (இரண்டாந்தர நிரந்தர உறுப்பினர்களுக்கான வேறு பல முன்மொழிவுகளும் காணப்படுகின்றன) மேலும் அவர், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினருக்கான இந்தியாவின் முறையீட்டில் வாஷிங்டனின் ஆதரவை ஒரு பரந்த ஐ.நா. சபை சீர்திருத்தத்தோடு (அமெரிக்காவின் இராஜாங்க மற்றும் புவி-அரசியல் முன்னுரிமைகளுக்கு அருகில் வராத ஒரு சீர்திருத்தம்) இணைத்து விட்டார். இது இன்னும் அதிகளவில் தீவிர சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கும் என்று தான் கூற வேண்டும்.

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் பதவி பெறுவதில் அமெரிக்காவின் ஆதரவு குறித்து, அமெரிக்க அரசியல் வெளி விவகாரத்துறையின் இணைச் செயலாளர் வில்லியம் பர்ன்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“இது ஒரு மிகவும் சிக்கலான நிகழ்வுப்போக்கோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுடன் இது கணிசமான அளவிற்கு கால அவகாசமும் எடுக்கும்,” என்றார்.

உலக பொருளாதார நெருக்கடி நிலைமைகள் மற்றும் உயர்ந்து வரும் புவி-அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றின்கீழ் மேலே கூறப்பட்டவைகளின் அறிகுறிகள் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. அமெரிக்கா இந்தியாவுடனான அதன் உறவுகளை வலிமைப்படுத்த தயாராக இருக்கிறது என்ற செய்தியை ஒபாமா புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் தெளிவாக வெளிப்படுத்த விரும்பி இருந்தார்.

இந்தியாவின் பரம-விரோதியான பாகிஸ்தானே ஒபாமாவின் பேச்சிற்குப் பிரதிபலிப்பைக் காட்டிய முதல் நாடு. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்தியாவை நிரந்தர உறுப்பினராக ஆக்குவதற்கான முயற்சி பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்த "நிகழ்முறையில் சிக்கலைக் கூட்டும்" என்று அந்த அறிக்கை எச்சரித்திருந்தது. மேலும் அமெரிக்கா "அதிகார அரசியலின் அவசரகாலநிலையை" பின்பற்றக்கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தார். “இந்தியா அதன் அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளில் நடந்து கொள்ளும் விதம் மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களில் அதன் தொடர்ச்சியான மோசமான அத்துமீறல்கள்" ஆகியவற்றைக் காரணங்காட்டி ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்படுவது மறுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டு காட்டி இருந்தது.

ஒபாமாவின் மூன்று நாள் சுற்றுப்பயணம் முழுவதும், ஒபாமா புது டெல்லியிடமிருந்து கவனமான ஆதரவு தேடும் முயற்சிக்கும், (இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால மூலோபாய இலக்குகளை வெளிப்படுத்துகிறது) இஸ்லாமாபாத்தை அதிகமாக ஆத்திரப்படுத்திவிடாமல் இருப்பதற்கும் இடையில் தம்மை சம்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. அமெரிக்கா அதன் ஆப்கான் யுத்தத்திற்காக பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவைச் சார்ந்திருக்கிறது.

நவம்பர் 2008 பயங்கரவாத தாக்குதலின் இலக்குகளில் ஒன்றாக இருந்த தாஜ் ஓட்டலில் தங்கி, ஓர் உரை நிகழ்த்திய கையோடு ஒபாமா தம்முடைய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். நவம்பர்-2008 தாக்குதலை நடத்தியதில் பாகிஸ்தானிய இராணுவ-உளவு இயந்திரத்தின் பிரிவுகள் உதவி இருந்ததாக இந்தியா குற்றஞ்சாட்டி இருந்தது. ஆனால் இந்திய ஊடகங்களின் மற்றும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் கூச்சல் மற்றும் இந்தியாவின் உத்தியோகபூர்வ எதிர்ப்பு ஆகியவற்றின் ஓங்கி-ஒலித்த எச்சரிக்கைகளினால் தாஜ் ஓட்டலில் பயங்கரவாதத்தைக் கண்டித்து பேசிய தம்முடைய உரையில் ஒபாமா பாகிஸ்தானைக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

திங்களன்று இந்திய பாராளுமன்றத்தில் பேசிய தம்முடைய உரையில் ஒபாமா, பாகிஸ்தானில் உள்ள "பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடங்களைக்" குறித்து பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இருந்தபோதினும், இரண்டு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய வர வாஷிங்டனுக்கு எந்த விருப்பமும் இல்லை என்பதையும், அவை அவற்றிற்குள்ளாகவே ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டு, பாகிஸ்தானுடன் இந்தியா அமைதி பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார். பாகிஸ்தானுடனான இந்தியாவின் பிரச்சினையில், குறிப்பாக வெடிப்புமிக்க காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதற்கான அமெரிக்காவின் எந்த முயற்சியும், இந்திய-அமெரிக்க உறவுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று இந்தியா கடுமையான வார்த்தைகளில் தெரிவித்திருந்தது.

1947-48இல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரிவினையில் பிரிக்கப்பட்ட மாநிலமும், இரண்டு நாடுகளுமே உரிமை கோரி வந்த செழிப்பார்ந்த மாநிலமும் ஆன காஷ்மீர் மீதான பிரச்சினையை அமெரிக்க ஜனாதிபதி எழுப்புவார் என்று தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக ஒபாமாவின் வருகைக்கு முன்னரே, பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த மாநிலத்தின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா மறுத்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் எழுந்த பரந்த போராட்டங்களைக் கலைப்பதற்கான இந்திய பாதுகாப்பு துருப்புகளின் நடவடிக்கைகளில் கடந்த கோடையில் அங்கே நூற்றுக்கும் மேலான காஷ்மீர்வாசிகள் கொல்லப்பட்டனர்.

ஆனால் தம்முடைய இந்திய வரவேற்பாளர்களின் விருப்பங்களுக்கு அதிருப்தி அளிக்காத விதத்தில், ஒபாமா அவருடைய முழு சுற்றுப்பயணத்தின் போதும், காஷ்மீர் குறித்து ஒரு பொதுக்கருத்தைக் கூட வெளியிட்டதாக தெரியவில்லை.

இருந்தபோதினும், இந்தியா முழுவதுமாக திருப்தி அடைந்துவிடவில்லை. 2008 மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடனான சுமூக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதை மீண்டும் தொடர மறுக்கும் இந்தியாவின் மறுப்பை நியாயப்படுத்த,“பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் உந்துசக்திகளுக்குப்" பாகிஸ்தான் பயிற்சியளிப்பதாக அதை குற்றஞ்சாட்டி, ஒபாமாவுடனான ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் இருந்து இந்திய பிரதம மந்திரி மன்மோகன்சிங் அவர் வழியில் வெளியேறிச் சென்றார். “ஒருபுறம் முன்பு போலவே பயங்கரவாத இயந்திரத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் பேச்சுவார்த்தையையும் நடத்த முடியாது,” என்று சிங் தெரிவித்தார்.

இந்திய மேற்தட்டை வஞ்சப்புகழ்ச்சி செய்யும் விதத்தில், ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்துள்ள அதிகாரம் மற்றும் செல்வாக்கிற்கான அதன் வெறியை ஊக்குவிக்கவும் இந்திய பாராளுமன்றத்தில் ஒபாமா ஆற்றிய உரை முழுமையாக வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசியது.

இந்தியா ஒரு சர்வதேச சக்தியாக உருவெடுத்துள்ளதைக் குறித்தும், மில்லியன்கணக்கான மக்களை வறுமையிலிருந்து தூக்கி நிறுத்தி இருக்கும் அதன் "பொருளாதார அற்புதம்" குறித்தும் மற்றும் உலகின் மிகப்பெரிய மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி இருப்பதாகவும் ஒபாமா தம் உரையில் துல்லியமாக பூசி மொழுகினார். ஆனால் இந்த நாட்டில் தான் நூறு மில்லியன்கணக்கானவர்கள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்; இங்கே தான் மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று மடங்கு மக்கள் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவாக பெற்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வாஷிங்டன் இந்தியாவுடன் ஒரு பன்முக-பரிணாம கூட்டுறவை எதிர்பார்க்கிறது என்பதை ஒபாமா தெளிவுபடுத்தினார். அமெரிக்க நிறுவனங்கள் எந்தெந்த துறைகளில் எல்லாம் உலகின் முன்னனியில் இருக்கின்றனவோ அத்தகைய நிதியியல் சேவைகள், மல்டி-பிராண்டு சில்லறை வியாபாரங்கள், விவசாயம் போன்ற முக்கிய துறைகளை அமெரிக்க நிறுவனங்கள் அணுகுவதற்கு அனுமதி வழங்கக்கூடிய எப்போதும் விரிந்து செல்லும் வர்த்தக உறவையும்; “அமைதி மற்றும் பாதுகாப்பை" பாதுகாப்பதற்கும், ஜனநாயக அரசு மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமானது என்று ஒபாமா அழைக்கும் ஒன்றையும் நோக்கமாக கொண்ட ஓர் இராணுவ-மூலோபாய கூட்டுறவைத் தான் இது உட்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவிடமிருந்து ஒவ்வொரு இந்திய இராணுவ தளவாடங்களை வாங்குவதற்கான மிகப் பெரிய உத்தரவு மற்றும் இராணுவ போக்குவரத்து விமானமான 10 C-17 குளோப்மாஸ்டர் III வாங்குவதற்கான உத்தரவு உட்பட, பல முக்கிய இராணுவ ஒப்பந்தங்களை, ஒபாமாவின் சுற்றுப்பயணத்தின் போது, இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்தியாவின் இராணுவம் அமெரிக்க வினியோகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் வகையில் செய்ய இந்தியாவிடமிருந்து பெரும் இராணுவ ஒப்பந்தங்களைப் பெறுவதற்கும், பெரும் விமானத்துறை நிறுவனங்களையும் மற்றும் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் வாஷிங்டன் தீர்மானித்துள்ளது.

ஒபாமா அவருடைய உரையில் இதுகுறித்து குறிப்பிட்ட குறிப்புகளைக் காட்டவில்லை என்றபோதினும், இந்திய பெருங்கடலில் ரோந்து வருவதிலும், அப்பிராந்திய இயற்கை பேரழிவுகளின் மீட்பு நடவடிக்கைகளிலும் மற்றும் ஏனைய அவசரகால தலையீடுகளில் ஒரு பெரும் பங்களிப்பை இந்தியா அளிப்பதிலும் அமெரிக்காவின் ஆதரவு இருக்கும் என்பதை அது தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது.

அமெரிக்காவும் இந்தியாவும் இப்போது "இரண்டு சர்வதேச சக்திகளாகவும்", இரண்டு "பெரும் ஜனநாயகங்களாகவும்" இருந்து சமபலங்களாக இணைந்து செயல்படுகின்றன என்ற கருத்தையே ஒபாமாவின் அனைத்து வாக்கியங்களும் வெளிப்படுத்தின. இந்த வகையில் இந்தியாவுடன் அமெரிக்கா கோரும் உண்மையான உறவைக் குறித்து அவர் ஒரு சுருக்கமான ஆனால் குறிப்பிட்டுக்காட்டும் குறிப்பை அளித்தார். அவருடைய உரையின் முடிவில், அவர் மிக வெளிப்படையாக "அதிகமான அதிகாரங்கள் வரும்போது அதிகமான பொறுப்புகளும் வருகின்றன" என்று குறிப்பிட்டார். பின்னர் ஈரான் மற்றும் பர்மா குறித்த அமெரிக்காவின் கொள்கையை ஆதரிப்பதில் இந்தியாவிற்கும் "பொறுப்பு" இருக்கிறது என்று வலியுத்தும் அளவிற்கு அவர் சென்றார்.

ஈரானை அச்சுறுத்துவதற்கான மற்றும் நிலைகுலைய செய்வதற்கான அதன் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, உலக அணுசக்தி ஒழுங்கமைப்பு அதிகாரங்களின் விதிகளை ஒருதலைபட்சமாக அமெரிக்கா மாற்றி எழுத விரும்புகிறது என்ற உண்மையை புறக்கணித்துவிட்டு, "ஒவ்வொரு நாட்டின்" (இஸ்லாமிய ஈரான் குடியரசு உட்பட) "சர்வதேச பற்றுறுதிகளையும் ஈடேற்ற அமெரிக்காவுடன் இந்தியா இணைய வேண்டும்" என்று ஒபாமா வலியுறுத்தினார்.

வாஷிங்டனின் சுய-ஆர்வமான மற்றும் தேர்ந்தெடுத்த மனித உரிமை பிரச்சாரங்களில் இந்தியா சேராமல் இருப்பதற்காக ஒபாமா வெளிப்படையாகவே இந்தியாவை விமர்சித்தார். ஈரான், கியூபா அல்லது ஜிம்பாவே என அது எதுவாக இருந்தாலும், அமெரிக்க நலன்களுக்குத் தடையாக இருப்பதாகப் பார்க்கப்படும் அரசாங்கங்களை, ஒதுக்கவும், ஸ்திரமின்மைக்குள் இட்டுச் செல்லவும் அவற்றின் அடக்குமுறை கொள்கைகள் கழியில் ஏற்றப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவூதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற ஆட்சிகளின் ஜனநாயக விரோத குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, பூசி மூடப்படுகின்றன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் மிக சமீபத்தில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட கொடூரமான குற்றங்களைக் குறித்து சொல்ல வேண்டியதே இல்லை.

ஒபாமா கூறியதாவது:“மனித உரிமைகளின் ஒட்டுமொத்த அத்துமீறல்களைப் பார்த்த பின்னர்... அவற்றைக் கண்டிப்பது சர்வதேச சமூகத்தின்—குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற தலைவர்களின்—பொறுப்பாக இருக்கிறது. இந்த சர்வதேச கூட்டத்தில், நான் வெளிப்படையாக கூறுவதானால், இந்தியா பெரும்பாலும் இந்த பிரச்சினைகளை தவிர்த்துள்ளது.”

மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் அதன் ஆதிக்கத்தைத் தக்க வைப்பதற்கான (யுத்தம் மற்றும் அச்சுறுத்தல் மூலமாக) வாஷிங்டனின் உந்துதலில் இந்தியா அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக அமெரிக்காவிற்கு அடிபணிந்த ஓர் உறவில் இன்னும் சிக்கவில்லை என்ற போதினும், அமெரிக்காவின் நெருங்கிய உறவில் கிடைக்கும் ஆதாயங்களைப் பாதுகாத்து கொள்ள முடியும் என்று இந்திய ஆளும் மேற்தட்டு சூழ்ச்சி செய்து வருகிறது.

இது தெற்காசியாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு பெரும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் ஓர் அபாயகரமான பகடை விளையாட்டாகும்.