World Socialist Web Site www.wsws.org |
Pakistani workers express support for Indianapolis GM rank-and-file committeeஇன்டியானாபொலிஸ் ஜெனரல் மோட்டர்ஸ் சுயாதீன தொழிலாளர் குழுவுக்கு பாகிஸ்தான் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்4 November 2010இன்டியானாபோலிஸில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் வாகன தகடு உற்பத்தி செய்யும் ஆலையின் சுயாதீன தொழிலாளர் குழுவுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தி கடிதங்கள் அனுப்பிவைக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களுக்கும் ஏனைய வாசகர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது. நிறுவனங்களும் அரசாங்கமும் மற்றும் ஐக்கிய கார் தொழிலாளர் UAW தொழிற்சங்கமும் கோரும் சம்பள மற்றும் தொழில் வெட்டுக்களுக்கு எதிராகப் போராடுவதற்காக UAW வை எதிர்த்து தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. (பார்க்க: “இன்டியானாபோலிஸ் ஜீ.எம். தகடு உற்பத்தி ஆலையின் சுயாதீன தொழிலாளர் குழுவிடமிருந்து ஒரு பகிரங்க கடிதம்.”) ஆதரவு கடிதங்களை indygmworkers@gmail.com என்ற முகவரிக்கும் பிரதிகளை உலக சோசலிச வலைத் தளத்துக்கும் அனுப்பி வையுங்கள் புரட்சிகர ஆதரவு, பாகிஸ்தான் தொழிலாளர் இயக்கம், ஜீ.எம். தகடு உற்பத்தி ஆலையின் சுயாதீன தொழிலாளர் குழுவின் தைரியம் மிக்க தொழிலாளர்களுக்கு தமது ஆழமான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திக்கொள்வதோடு அவர்களது உத்வேகமான போராட்டத்துக்காக அவர்களுக்கு செம்மரியாதை செலுத்துகிறது. பாகிஸ்தான் தொழிலாளர் இயக்கம், உங்களது கோரிக்கைகளுடனும் மற்றும் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்துடன் கைகோர்த்து செயற்படும் UAW தொழிற்சங்கம் பற்றிய உங்களது அம்பலப்படுத்தலுடனும் உறுதியாக உடன்படுகின்றது. ஆளும் வர்க்கத்தினதும் சீரழிந்த தொழிற்சங்க தலைமைத்துவத்தினதும் தாக்குதல்களில் இருந்து தமது உரிமைகளை காப்பதற்கு உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு உள்ள ஒரே வழி, இன்டியானாபோலிஸ் ஜீ.எம். தகடு உற்பத்தி ஆலையின் சுயாதீன தொழிலாளர் குழுவினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையே என்பதை பாகிஸ்தான் தொழிலாளர் இயக்கம் நம்புகிறது. சுயாதீன தொழிலாளர் குழுவினால் தொடக்கிவைக்கப்பட்டுள்ள போராட்டமானது பூகோளம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது பெரும் விளைவுகள் கொண்ட தாக்கத்தை ஏற்படுத்தும். தொழிலாளர்களின் போராட்டத்தை தணிப்பதற்கு முயற்சிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் எல்லா இடத்திலும் உள்ள தொழிலாளர்கள் காட்டிக்கொடுக்கப்படுகிறார்கள். ஒபாமா நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்வதைப் போலவே, பிரான்சின் ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோஸியினால் முன்வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய “மறுசீரமைப்பு” மசோதாவுக்கு எதிராக தற்போது போராடிக்கொண்டிருக்கும் பிரான்ஸ் தொழிலாளர்களுக்கும் உங்களது இயக்கம் வழிகாட்டியாக இருக்கும். பாகிஸ்தானிலும் இதுவே உண்மை. இங்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்கம், தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த ஏகாதிபத்திய நிதிய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதோடு ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவ-காலனித்துவ ஆக்கிரமிப்புக்கும் பாகிஸ்தானில் இரத்தக் களரிக்கும் ஆதரவளிக்கின்றது. அமெரிக்காவும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும், மேலதிக இலாபத்துக்காக யுத்தத்தில் போரிடுவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை மேலும் சுரண்டுவதை உக்கிரமாக்கவும் தமது நாடுகளில் உள்ள அப்பாவி படையினரை பலாத்காரமாக அனுப்புகின்றன. பாகிஸ்தான் தொழிலாளர் இயக்கம், ஜீ.எம். சுயாதீன தொழிலாளர் குழுவின் போராட்டத்தை ஆதரிப்பதோடு, ஆப்கானிஸ்தானில் இருந்து சகல அமெரிக்கத் துருப்புக்களும் உடனடியாக திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்றும், பாகிஸ்தானில் பொது மக்கள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென்றும் கோருகின்றது. இன்டியானாபோலிஸ் ஜி.எம். சுயாதின தொழிலாளர் குழுவின் வெற்றியானது அனைத்துலகத் தொழிலாளர்களின் வெற்றியாக இருக்கும். புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
|
|