WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
After the G20 summit
G20 உச்சிமாநாட்டிற்குப் பின்னர்
Joseph Kishore
15 November 2010
Back to
screen version
தென்கொரியாவில் நடந்த G20 உச்சி மாநாடு, எதிர்பார்த்த வகையில், நாணய மதிப்பு மற்றும் வர்த்தகம் ஆகியவை மீதான பெருகிய உரசலுடனான மோதல்களைத் தீர்ப்பதில் பெரும் சக்திகளுக்கு இடையில் எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிவடைந்தது. வெள்ளியன்று வெளியிடப்பட்ட இறுதி விவரக்குறிப்பு பிளவுகளை ஆவணப்படுத்துவதற்கு முயற்சிக்கவில்லை. உலக பொருளாதாரத்தில் நிலவும் சமநிலையற்ற தன்மையில் “அறிகுறியான வழிகாட்டல்களுக்கு” உடன்படுவதற்கு அடுத்த ஆண்டுக்கு கால அட்டவணையை அது நிர்ணயித்திருந்தது. இதனிடையே, பிரதான நாடுகள் தங்களது “அடுத்தவனை பிச்சைக்காரனாக்கும்” கொள்கையை [ஒரு நாடு தனது நாணயமதிப்பைக் குறைத்து தனது பொருட்களுக்கான சர்வதேசப் போட்டித்தன்மையை உயர்த்துவது, இதனால் சக நாடுகளின் பலன்கள் சேதமுறும்] தொடர இருக்கின்றன. இது ஒட்டுமொத்தமான வர்த்தகப் போருக்கு அச்சுறுத்துகிறது.
மற்றய சக்திகள் மீது அமெரிக்கா தனது விருப்பத்தைத் திணிக்க முடியாதிருந்த நிலையை இந்த உச்சிமாநாடு அம்பலப்படுத்தியது. ஒபாமா நிர்வாகத்தால் தனது பிரதான நோக்கங்களில் (சீனா தனது நாணயமதிப்பை துரிதமாக அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்பதற்கும் மற்றும் உபரி அதிகம் கொண்ட நாடுகளில் இருந்து (குறிப்பாக சீனா மற்றும் ஜேர்மனி) ஏற்றுமதிகள் மீது கூர்மையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பதற்குமான கோரிக்கை உட்பட) உடன்பாட்டை ஏற்படுத்த முடியவில்லை. அதிகம் தம்பட்டம் அடிக்கப்பட்ட தென்கொரியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை பெற்றுவருவதிலும் நிர்வாகம் தோல்வியுற்றது.
மாநாட்டுக்கு முன்பும் பின்பும், அமெரிக்காவின் பெருகிய அளவில் வலுமோதலுக்கு வருவதாய் இருக்கும் பொருளாதாரக் கொள்கையை பெரிய நாடுகளும் “வளரும்” பொருளாதாரங்களும் ஒரேவகையில் கடுமையாக விமர்சித்தன.
இந்த மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கும் முன்னதாகத் தான், அமெரிக்க கூட்டரசுக் கருவூலம் சுமார் 1 டிரில்லியன் டாலர் தொகையை அச்சடிப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. இது டாலரின் மதிப்பைக் குறைத்து நிதிச் சந்தைகளில் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஆதாரநீரான மலிவுப் பணத்தை வெள்ளமெனப் பாய்ச்சும். சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டும் அதே நாணயமதிப்புக் கைப்புரட்டு வகை தான் இது என்று இந்த நடவடிக்கை முறையாகக் கண்டனத்தை பெற்றது.
2008 நிதிப் பொறிவானது ஒரு புதிய சமநிலைக்கு பாதை திறக்கும் தற்காலிமானதொரு வீழ்ச்சி அல்ல என்பதற்கு மாநாட்டின் முடிவு இன்னுமொரு தெளிவுபடுத்தல் ஆகும். வர்த்தகம் மற்றும் பற்றாக்குறைகளிலான பிரம்மாண்டமான ஏற்ற இறக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாய் சரிசெய்து விடலாம் என்பது சாத்தியமற்றது என்பது நிரூபணமாகியுள்ளது. 1930களில் போலவே, நடப்பு ஒழுங்கின் முறிவானது யார் பணத்தை இழக்க தள்ளப்படுவார்கள் என்பதில் அரசுகளுக்கு இடையில் ஏற்படும் மோதலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வெவ்வேறு முதலாளித்துவ சக்திகளின் ஆளும் வர்க்கங்களே கூட பொருளாதார ஒழுங்கில் துரிதமான மீட்சிக்கு வழி இல்லை என்பதான புரிதலுக்கு தங்களுக்குள் வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக வசந்த காலத்தில் ஐரோப்பாவில் கடன் நெருக்கடி வெடித்ததன் பின்னர், சீரான வளர்ச்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் திரும்புவது என்பது இல்லை என்பது தெளிவான போது, பதிலிறுப்பு இருதிசைகளில் இருந்தது: 1) நெருக்கடியை போட்டி சக்திகளின் மேல் இறக்கி விடும் நோக்கத்துடனான நடவடிக்கைகளை எடுப்பது; மற்றும் 2) தொழிலாள வர்க்கத்தின் மீது முன்னெப்போதையும் விடக் கடுமையான சிக்கனக் கொள்கைகளை சுமத்துவது.
G20 சந்தித்த நிலையிலும், இரண்டு நிகழ்வுகள் உலகப் பதட்டங்களுக்கும் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பினை அடிக்கோடிட்டுக் காட்ட சேவை செய்தன. முதலாவதாக, G20ல் பங்குபெற்றிருந்த ஐரோப்பிய பிரதிநிதிகள் தங்களது சூடான விவாதங்களுக்கு இடையே இடைவெளியளித்து ஐரோப்பாவில் பத்திரச் சந்தைகளுக்கு உறுதியளிப்பதற்கு தள்ளப்பட்டனர். இச்சந்தை பல நாடுகளிலும் கடனிலிருந்தான வருவாய் தொகை அதிகரித்து செல்வதை அனுப்பியிருந்தது.
அயர்லாந்து மற்றும் பிற ஐரோப்பிய அரசாங்கங்கள் போதுமான கடுமையுடன் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்தும் திறன் பெற்றிருக்கின்றனவா என்பது குறித்து முதலீட்டாளர்கள் கவலையுடன் இருந்தனர். வருங்கால பிணையெடுப்புகளில் பெரும் பகுதியை தனியார் முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியிருக்கும் என்பதான ஆலோசனைகள் குறித்தும் அவர்கள் கவலையுற்றிருந்தனர். ஒரு புதிய கடன் நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு (குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும்) ஐரோப்பிய பிரதிநிதிகள், பத்திர முதலீட்டாளர்களுக்கு அவர்கள் பணம் பாதுகாப்பாக இருக்கின்ற உறுதியை அளிக்கும் பொருட்டு ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தத் தள்ளப்பட்டனர்.
இரண்டாவதாக, ஒபாமா நிர்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்த கடன் ஆணையத்தின் தலைவர்கள் அமெரிக்க வரவு-செலவு பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளின் ஒரு பட்டியலை விநியோகித்திருந்தனர். முக்கிய சமூக வேலைத்திட்டங்களில் செலவிடுவதன் மீது மிருகத்தனமான வெட்டுகளை இது கொண்டிருந்தது. அமெரிக்கா தனது சொந்த சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த தீர்மானமாய் இருப்பதை மற்ற சக்திகளுக்கு சமிக்ஞையனுப்புவதற்கே G20 மாநாட்டின் அதேசமயத்தில் ஆணையர்களின் அறிக்கை வெளியாகச் செய்யப்பட்டிருந்திருக்க வேண்டும் (குறைந்தபட்சம் ஒரு பகுதி காரணமாகவேனும்).
நிதிப் பற்றாக்குறை ஆணையர்களைப் பாதுகாத்து G20 கூட்டத்தில் ஒபாமாவும் ஒரு கருத்தை கூறினார். ”கடினமான நடவடிக்கைகளை எடுப்பதும்” “அமெரிக்க மக்களுக்கு உண்மையைச் சொல்வதும்” அவசியமானவை என்று அவர் அறிவித்தார்.
தொழிலாள வர்க்கத்தின் மீது வறுமை நிலைமைகளைத் திணிப்பதானது உலக அரங்கில் தனது நிலையை பராமரிப்பதற்கு (ஏற்றுமதியை அதிகரித்து அமெரிக்காவின் கடனைக் குறைப்பதன் மூலம்) முக்கியமான நிபந்தனை என்று அமெரிக்க நிதித்துறை பிரபுத்துவம் கருதுகிறது.
Foreign Affairs இன் மிக சமீபத்திய பதிப்பில் வந்த அமெரிக்க ஊதாரித்தனமும் அமெரிக்க அதிகாரமும்: பொருளாதாரப் பொறுப்பின்மையின் பின்விளைவுகள் (“American Profligacy and American Power: The Consequences of Fiscal Irresponsibility”) என்கிற கட்டுரை இந்த புள்ளியை அடிக்கோடிட்டுக் காட்டியது. அமெரிக்க கடன் சுமையானது, இராணுவத்திற்கு நிதியாதாரம் அளிப்பதற்கான அமெரிக்காவின் திறனைக் குறைத்து, அமெரிக்காவுக்கு கடனளித்தவர்களின் (குறிப்பாக சீனா) பொருளாதாரரீதியான அனுகூலத்தை அதிகரித்து, மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க செல்வாக்கைக் குறைத்து அமெரிக்காவின் உலக நலன்களுக்கு பேரழிவூட்டக்கூடியதாய் நிரூபணமாகலாம் என்று வெளியுறவுக் கவுன்சிலின் தலைவரான ரிச்சார்ட் ஹாஸ், மற்றும் முன்னாள் கருவூலத் துணைச் செயலரான ரோஜர் ஆல்ட்மேன் ஆகியோர் எச்சரிக்கின்றனர். இந்த கட்டுரை ஆசிரியர்கள் இப்படி முடிக்கிறார்கள்: “அமெரிக்காவின் கடன் திருப்பியளிக்கும் நிலையை சங்கடத்தில் தள்ளுவது உலக அரங்கில் அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கை அல்ல, மாறாக தாயகத்தில் அமெரிக்கர்களின் ஊதாரித்தனம் தான் அமெரிக்க அதிகாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகி இருக்கிறது.”
உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு புதிய மிக அபாயகரமான கட்டத்திற்குள் உலகம் நுழைந்து கொண்டிருக்கிறது. பெருகி வரும் உலகளாவிய மோதல்களின் கீழ் ஒரு போரின் அபாயம் ஒளிந்திருக்கிறது, இதில் நாணயமதிப்புகளின் கைப்புரட்டு தான் வெடிகுண்டுகளின் பரிவர்த்தனைக்கு பாதையமைக்கிறது.
உலகளாவிய சமநிலையின்மையின் கீழமைந்திருக்கும் பிரதான காரணிகளில் அமெரிக்காவின் நீண்ட-காலத்திற்கான பொருளாதார வீழ்ச்சியும் இருக்கிறது. ஆனால், தனது சொந்தச் செல்வ வளத்தைப் பாதுகாப்பதில் முற்றுமுதலாய் இரக்கம் காட்டாது நடந்து கொள்ளக் கூடிய அமெரிக்க ஆளும் வர்க்கமானது இந்த வீழ்ச்சியை சமப்படுத்தும் முகமாக தனது கைவசம் இன்னமும் இருக்கும் அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க இராணுவம் என்னும் இரண்டு பிரதான கருவிகளைப் பயன்படுத்தத் தயங்காது.
கடந்த மாத காலத்தில், குறிப்பாக தேர்தலுக்குப் பின், ஒபாமா நிர்வாகம் மிகக் கூடுதலான வகையில் இராணுவாத தோற்றத்தை பெற்றுள்ளது - ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு நீடிக்கலாம் என சுட்டிக்காட்டியிருக்கிறது, ஈரானுக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களை அதிகப்படுத்தியுள்ளது, ஜப்பானுடனான சீனாவின் பிராந்திய மோதல்களில் சீனாவுடன் போர் செய்வதற்கும் குறிப்பு காட்டியிருக்கிறது. சீனாவுடனான மோதலில் கூட்டணிக்கு வரும் சாத்தியம் கொண்ட நாடுகளை அமெரிக்கா தீவிரமாய் தாஜா செய்து கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலானது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட தாக்குதலின் அதே சமயத்தில் நேர்வதென்பது தற்செயலானதல்ல - ஏகாதிபத்தியமானது அனைத்து நிலைகளிலும் பிற்போக்குத்தனமே என்று லெனின் குறிப்பிட்டார்.
ஆளும் வர்க்கம் மனிதகுலத்தை இழுத்துச் சென்று கொண்டிருக்கும் முட்டுச்சந்தில் இருந்து அமைதியான வழியில் வெளியேறி வருவதற்கு நடப்பு பொருளாதார அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளாக எந்த வழியும் கிடையாது. போரின் அபாயத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் சமூகப் புரட்சி என்னும் தனது சொந்தப் பதிலடியை வழங்கியாக வேண்டும்.
|