WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Leading members of the Socialist Alternative Group join German Left Party
சோசலிச மாற்றீட்டு குழுவின் முக்கிய உறுப்பினர்கள் ஜேர்மன் இடது கட்சியில் இணைகின்றனர்
By Lucas Adler and Peter Schwarz
11 November 2010
Back to
screen version
பிரிட்டனின் Militant Tendency எனப்படும் போக்குடன் இணைந்த ஒரு குட்டி முதலாளித்துவ “இடது” குழுவான ஜேர்மனிய சோசலிச மாற்றீட்டு குழு (Sozialistischen Alternative -SAV) உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளாக இடது கட்சியில் சேர்வதற்கு முயன்று தோல்வியடைந்தனர். ஆனால் ஆகஸ்ட் இறுதி்யில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு, அதன் முன்னணித் தலைவர்களான லூசி ரெட்லர், சாஸ்ஷா ஸ்டானிசிக் மற்றும் ஹோல்கர் டிரோஹ (Lucy Redler, Sascha Stanicic, Holger Dröge) போன்றவர்கள் இடது கட்சியின் முழு உறுப்பினர்கள் ஆகிவிட்டனர்.
முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஆளும் ஸ்ரானிசக் கட்சியின் பழைய உறுப்பினர்கள் மற்றும் சமூக ஜனநாயக கட்சியில் (SPD) அதிருப்தியடைந்த தலைவர்களை கொண்ட இடது கட்சி (Left Party) ஜேர்மனிய முதலாளித்துவ அரசில் ஒரு முக்கிய அங்கமாகும். பேர்லினில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் SPD உடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்ட இடது கட்சி, அங்கு வங்கிகள் மற்றும் பெருவணிகங்கள் சார்பாக மிருகத்தனமான பொதுநலச் செலவு வெட்டுக்களை சுமத்தியுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு SAV யின் செய்தித் தொடர்பாளர் லூசி ரெட்லர் ஒரு செய்திக் குறிப்பில் இடது கட்சியில் தான் சேர விரும்புவதை அறிவித்து தன்னுடைய ஆதரவாளர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்தார். பெரும்பாலான SAV உறுப்பினர்கள் இடது கட்சியில் அதிக சிரமம் இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர்; ஆனால் அப்பொழுது இடதுகட்சியின் துணைத் தலைவராக இருந்த கி்ளவுஸ் ஏர்ன்ஸ்ட், ரெட்லர் இன்னும் பல முக்கிய SAV நபர்கள் அனுமதிக்கப்படுவதை தடுத்து விட்டார்.
ஜனவரி 2009ல் அவர்கள் விவகாரம் இடது கட்சியின் மாநிலக்குழுவினால் விவாதிக்கப்பட்டு மே 2009ல் அதன் கூட்டாட்சி தீர்ப்புக்குழுவினால் விசாரிக்கப்பட்டது. இரு குழுக்களுமே ஏர்ன்ஸ்ட்டிற்கு ஆதரவாக முடிவெடுத்து SAV தலைவர்கள் தொடர்ந்து விலக்கிவைக்கப்படவேண்டும் என்றனர். SAV தலைவர்கள் இந்த ஆண்டு முன்னதாக ஒரு புதிய விண்ணப்பத்தை கொடுத்தனர். இது இடது கட்சியின் தலைமையை ஏர்ன்ஸ்ட் எடுத்துக் கொண்ட பின்னரும்கூட கட்சியால் அனுமதிக்கப்பட்டது.
இடது கட்சிக்கும் SAV க்கும் இடையே உள்ள முக்கிய கருத்து வேறுபாடு SAV அதன் வேட்பாளார்களையே 2006 பேர்லின் செனட் தேர்தல்களில் நிற்க வைக்க எடுத்த முடிவாகும். அப்பொழுது WASG என்னும் தேர்தல் மாற்றீட்டு அமைப்பு (SAW அதில் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்தது) தன்னுடைய சொந்தப் பட்டியலேயே PDS என்னும் ஜனநாயக சோசலிசக் கட்சிக்கு எதிராக நிறுத்தியிருந்தது. இந்த அமைப்பு SED எனப்படும் சோசலிச ஐக்கிய கட்சி்யின் பின்தோன்றல் ஆகும். இது 1990 வரை கிழக்கு ஜேர்மனியை ஆண்டது. WASG, PDS இரண்டுமே ஒராண்டிற்கு முன் கூட்டாட்சித் தேர்தலில் கூட்டு வேட்பாளர்களை நிறுத்தி இடது கட்சியுடன் ஒரு இணைப்பை காணும் நிலையில் நின்றிருந்தபோதிலும்கூட இவ்வாறு நடைபெற்றது. WASG யின் பேர்லின் தேர்தலில் முக்கிய வேட்பாளர் SAV உறுப்பினரான லூசி ரெட்லர் ஆவார்.
WASG அதன் சுயாதீன வேட்பாளர்களை பேர்லினில் PDS பேர்லின் மாநில நிர்வாகத்தில் ஒத்துழைப்பதை எதிர்த்து நிறுத்தப்போவதாக அறிவித்தது. PDS பேர்லினில் சமூக ஜனநாயக கட்சியுடன் 1992 முதல் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு, இரக்கமற்ற சமூகநலச் செலவுக் குறைப்புக்களை செயல்படுத்தும் பங்கைக் கொண்டிருந்தது. பேர்லினில் PDS இன் கொள்கைகள் புதிதாகத் திட்டமிடப்பட்டிருந்த இடது கட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று SAV அச்சமுற்றது. இதையொட்டி அது ஒரு தந்திரோபாயத்தை கையாண்டு, கூட்டாட்சி மட்டத்தில் இடது கட்சி நிறுவுதலை அமைப்பு ஆதரவு கொடுத்தாலும், அது பேர்லினில் தன்னை PDS இற்கு எதிரான ஒரு இடது மாற்றீடாகும் என்று காட்டியது.
இடது கட்சி நிறுவப்பட்டதை தொடர்ந்து பேர்லினில் உள்ள SAV புதிய கட்சிக்குள் விரைந்து சேர்வதற்கு முன் நேரத்தைக் கடத்தியது. ஏப்ரல் 2007ல் பேர்லின் SAV BASG எனப்பட்ட ஒற்றுமையுணர்வு மற்றும் எதிர்ப்பிற்கான பேர்லின் மாற்றீடு என்ற குழுவை அமைத்து, பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் இடது கட்சியுடன் சேர்ந்துவிட்டது.
இடது கட்சிக்குள் தாங்கள் நுழைந்ததை நியாப்படுத்தும் வகையில், ரெட்லர் ஸ்டானிசிக் மற்றும் டிரோஹ பின்வருமாறு கூறினர்: “நாங்கள் இக்கட்சிக்குள் சேர்ந்துள்ள காரணம் பல தசாப்தங்களுக்கு பின்னரான முதலாளித்துவ நெருக்கடியின்போது இடதுகட்சி ஒரு சோசலிச முற்போக்கான பாதையைக் காட்டுவதில் முக்கிய பங்கைக் கொள்ளும் என்று நம்புவதுடன் ஜேர்மனிய அரசாங்கத்திற்கும் தொழில்வழங்குனருக்கும் எதிரான எதிர்ப்பை வலுப்படுத்தும் என்றும் நம்புகிறோம்.”
2006 பேர்லின் செனட் தேர்தல்களுக்குப் பின்னர் இடது கட்சியின் கொள்கையில் சிறிது மாற்றம் கூட இல்லை. தலைநகரத்தில் கட்சி தொடர்ந்து அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு கடுமையான சிக்கன கொள்கைகளை சுமத்துகிறது. இதைத்தவிர, இடது கட்சி வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் SPD பசுமைக் கட்சி அரசாங்கத்தை ஆதரிப்பதுடன் கூட்டாட்சி மட்டத்தில் SPD பசுமைக் கட்சியினருடன் ஒரு வருங்காலக் கூட்டாட்சி அரசாங்கத்தை நிறுவ பரபரப்புடன் முயல்கிறது. அத்தகைய அரசாங்கம் “ஒரு சோசலிச முற்போக்கான பாதையைக் காட்ட” உதவும் என்னும் கூற்று, குறிப்பாக 1998-2005 காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியிலிருந்த இராணுவவாத, பெருவணிகச் சார்பு SPD பசுமைக் கூட்டணியைப் பற்றிக் கூறுவது ஒரு முழு மோசடி ஆகும்.
இடது பத்திரிகை (Linke Zeitung) எனப்படும் இணைய வலைத் தளத்தில் 2009 கோடையின்போது கொடுத்த பேட்டி ஒன்றில், ஸ்டானிசிக் (Stanicic) சற்றே எச்சரிக்கையுடன் பேசினார். “சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு ஆதரவாக பேர்லின் செனட்டில் இருக்கும் சக்திகள் மற்றும் இன்னும் கூடுதலாக வணிகச் சார்பு டைய SPD அரசாங்கத்தில் பங்கு கொள்ளுவோர் பாராளுமன்ற அமைப்புகளிலும், பாராளுமன்றக்குழுக்களிலும் மற்றும் இடதின் தலைமையிடத்தில் மேலாதிக்கம் கொண்டுள்ளன.” என்பதை அவர் ஒத்துக்கொண்டார்.
ஆனால், இடது கட்சி “ஒரு முரண்பாடு நிறைந்த கட்சி” என்று அவர் தொடர்ந்தார். “பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் மில்லியன் கணக்கான வாக்காளர்களும், ஊதியம் பெறுவோர் மற்றும் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை ஒரு அரசியலளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பு இக்கட்சிக்கு உண்டு எனக் கருதுகின்றனர்.” வேலைத்திட்ட மற்றும் நடைமுறை அடிப்படையில் ஒரு சோசலிச தொழிலாளர்கள் இயக்கத்தைக் கட்டமைப்பது பற்றிய பூசல்கள் இடது கட்சியிலும் அதனை சூழவுள்ள பிரிவினர் மத்தியிலும், எல்லாவற்றிற்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன என்பது ஸ்டானிசிக்கின் கருத்தாகும்.
தன்னுடைய அமைப்பு இடது கட்சிக்கு “மில்லியன் கணக்கான வாக்காளர்கள்” இருப்பதாகக் கூறப்படும் அடிப்படையில் ஆதரவு கொடுப்பதை நியாயப்படுத்தும் இந்த முயற்சி புதிதும் அல்ல, ஒரு முற்றும் முதலான கருத்தும் அல்ல. இது சந்தர்ப்பவாதம் பொதுவாகக் கொண்டிருக்கும் கையிருப்பாகும்.
பல மில்லியன் தொழிலாளர்கள் இடது கட்சி பற்றிப் போலித் தோற்றங்களை கொண்டிருந்தால், மார்க்சிஸ்ட்டுக்களின் பணி இத்தோற்றங்களை எதிர்ப்பதாக இருக்க வேண்டுமே ஒழிய, ஏற்பதாக இருக்கக்கூடாது. உண்மையான மார்க்சிஸ்ட் கட்சிகளான போல்ஷிவிக்குகள், ஜேர்மனிய ஸ்பாட்டக்குஸ் குழு (Spartakusbund) அல்லது நான்காம் அகிலம் போன்றவை தங்கள் காலத்தில் இருந்த மத்தியவாதக் கட்சிகளுக்கு எதிரான சமரசத்திற்கு இடமில்லாத அரசியல், கோட்பாட்டு போராட்டத்தை அபிவிருத்தி செய்தன. அவ்வப்போதுள்ள நப்பாசைகளுடன் முரண்பட்டாலும்கூட தொழிலாளர்களிடம் உண்மையைச் சொல்லும் கடமை மார்க்சிஸ்ட்டுகளுக்கு உண்டு.
ஆனால் SAV ஒரு மார்க்சிச கட்சி அல்ல. மாறாக இது தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் விரோதமான மத்தியதர உயர்வகுப்பைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது தொழிற்சங்க, ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கு பின்னிணைப்பாக செயல்பட்டு ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான சோசலிசக் கட்சி உருவாவதை தடுக்க தன் முயற்சிகள் மூலம் உதவுகிறது.
மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இடது கட்சியை ஆதரிக்கிறார்கள் என்னும் ஸ்டானிசிக்கின் கூற்றும் முற்றிலும் கற்பனையாகும். கட்சிக்கு வாக்களித்த பலரும், அதன் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும் இடது கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் காரணம் அது வர்க்க மோதலை ஒடுக்கும் கருவி என்பதால்தான். அதன் அரசியல் வழக்கத்தை சுருக்கமாகப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரியும்; அதேபோல் அதன் சமூக அமைப்பு, வரலாறு, அரசியல் நோக்கங்களைப் பார்த்தாலும் தெரியவரும்.
இடது கட்சி ஒரு வசதி படைத்த குட்டி முதலாளித்துவ பிரிவை அடித்தளமாக கொண்டுள்ளது. இதில் முக்கியமாக முன்னாள் SED, SPD, தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் பல தசாப்தங்களாக இந்த அதிகாரத்துவங்களை சுற்றி இருக்கும் “இடது” குட்டிமுதலாளித்துவ அமைப்புக்கள் என்பவை உள்ளன. இதன் தலைமை தேர்ந்த, நம்பிக்கைக்குரிய அதிகாரத்துவத்தினரை கொண்டுள்ளது. அவர்கள் அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளனர்.
இந்த சமூக அடுக்கின் ஆரம்பங்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய பொருளாதார ஏற்றத்தின்போது காணப்பட்ட சமூக சீர்திருத்தவாதம் மற்றும் சமூகநல அரசுக் கருத்துக்களில் இருந்தது. மேற்கு ஜேர்மனியில் இந்த அடுக்குகள் தொழிற்சங்கங்கள் மற்றும் SPD ஐச் சுற்றி இருந்து, வர்க்கப் போராட்டத்தை “சமூகப் பங்காளித்தனம்”, “கூட்டாக தீர்மானித்தல்” என்ற முறையின் மூலம் நெரித்தன. கிழக்கு ஜேர்மனியில் இவை ஸ்ராலினிச ஆளும் கட்சியான SPD யிடம் குழுமியிருந்தன; அது இரக்கமற்ற முறையில் தொழிலாள வர்க்கத்தின் எந்த அரசியல் போராட்டங்களையும் அடக்கி தொடர்ச்சியான பல சமூக சலுகைகளை தேசியவகையின் தன்னாட்சி முறையைக் கொண்டிருந்த ஜேர்மன் ஜனநாயக குடியரசின் வடிவமைப்புக்குள் கொடுத்து உறுதியைக் காத்தது.
1980 களில் நடந்த பூகோளமயமாக்கல் இந்த சமூக சமரச வழிவகைகளை இல்லாதொழித்து, அதற்கான இந்தக் கட்சிகளின் பிரதிபலிப்பை குறிப்பிட்ட வகையில் வலதிற்கு என மாற்றியது. SED முதலாளித்துவ மீட்பிற்கும் ஜேர்மனிய மறுஐக்கியத்திற்கும் வழி செய்தது. கடைசி SED பிரதம மந்திரியும் தற்போதைய இடது கட்சியின் மூத்தோர்குழுத் தலைவருமான ஹான்ஸ் மோட்ரோவின் கருத்துப்படி, முதலாளித்துவ நிலைமையின் அடித்தளத்தில் ஒன்றுபட்டது “தவிர்க்க முடியாமல் தேவையாயிற்று, உறுதிப்பாட்டுடன் செயல்படுத்தப்பட வேண்டியதாயிற்று.” மேற்கு ஜேர்மனியில் SPD மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், 1960களிலும் 1970களிலும் செயல்படுத்தப்பட்ட சமூகச் சீர்திருத்தங்களை தகர்த்து, பொதுநல விரோத ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) தலைமையில் SPD பசுமைவாதக் கூட்டணியால் கொண்டுவரப்பட்ட 2010 செயற்பட்டியல் கொள்கைக்கு ஆதரவு கொடுத்தது.
இக்கொள்கைகள் முதலாளித்துவத்திற்கு செழிப்பைக் கொடுத்ததுடன், முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுக்களின் மத்தியதர வகுப்பு உயர்பிரிவினர், ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்கவாதிகள், உயர்கல்விக்கூடத்தினர் பிறரும் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின்மீது நடைபெற்ற தாக்குதல்களினால் பலன்களைப் பெற்றனர்.
இக்காலக்கட்டத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் SPD இற்கு தங்கள் முதுகைத்தான் காட்டினர். SPD கிட்டத்தட்ட தன் உறுப்பினர் எண்ணிக்கையில் பாதியையும் வாக்காளர்களின் பெரும்பகுதியையும் இழந்தது. இச்சூழலில், ஒரு உண்மையான தொழிலாள வர்க்க சோசலிச இயக்க வளர்ச்சிக்கான வாய்ப்பு வெளிப்பட்டது. இடது கட்சி அத்தகைய வளர்ச்சியை தகர்த்துவிடுவதற்குத்தான் துல்லியமாக நிறுவப்பட்டுள்ளது.
அதன் வேலைத்திட்டத்தின்படி, இடதுகட்சி ஒரு முதலாளித்துவக் கட்சி, முற்றிலும் முதலாளித்துவ சொத்துரிமை, சந்தைப் பொருளாதாரம் மற்றும் முதலாளித்துவ அரசாங்கம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு உறுதி கொண்டது. இதன் “சோசலிசம்” வில்லி பிராண்ட் காலத்தில் செயல்படுத்தப்பட்டது போன்ற சமூக சீர்திருத்தங்களுக்கு அப்பால் செல்லவில்லை. ஆனால் முதலாளித்துவம் பெருமந்த நிலைக்குப் பின் மிக மோசமான நெருக்கடியைக் காண்கையில், இச்சீர்திருத்தங்கள் எவையும் செயல்படுத்தப்படுவதில்லை. இடது கட்சி அரசாங்கத்தினுள் வந்த ஒவ்வொரு நேரமும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இடது கட்சி இப்பொழுது தனது வலதுசாரி அரசியலை ஒரு “இடது” மறைப்பின் மூலம் காட்டிக் கொள்ள முற்படுகிறது. எனவேதான் அதனுள் பல பிரிவுகள்-ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் கூட -கட்சிக்குள் பொறுத்துக் கொள்ளப்படுகின்றனர். SAV இதை ஒரு சான்றாகக் கண்டு இடது கட்சி “ஒரு சோசலிச, ஜனநாயக, பன்முகமான, வெளிப்படையான கட்சி” என்று கூறுகிறது. உண்மையில் கிளவுஸ் ஏர்ன்ஸ்ட் மற்றும் ஹெசின லோட்ஸ் ஆகியோரைச் சுற்றியுள்ள தலைமை, “இடதுசாரி” சுவரொட்டி சிறுவர்களும் (சிறுமிகளும்கூட) இடது கட்சி SPDக்கு ஒரு மாற்றீடு என்ற கட்டுக்கதையை காக்க விரும்புகின்றனர்.
SAV இடது கட்சிக்குத் துல்லியமாக அத்தகைய மறைப்பைக் கொடுக்கிறது. இது இடது கட்சியை ஒரு சோசலிச சக்தி என்று பாராட்டுகிறது, அதன் கட்டமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் 2008ன் போதே, லூசி ரெட்லர் Junge Welt நாளேட்டிடம் தான் இடது கட்சியில், “ஒரு வலுவான முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சியை கட்டமைக்க இருப்பதாகவும், அது பாராளுமன்ற இயக்கங்களுக்கு வெளியே குவிப்புக் காட்டி, சோசலிசத்தற்கான போராட்டம் ஒரு கற்பனை அல்ல அதன் நாளாந்த செயல்களுக்கான நடவடிக்கை” என்றும் கூறினார்.
இத்தகைய அணுகுமுறைக்கு பின்னால் இருப்பது இடதுகட்சியைப் பற்றிய கொடூரமான தப்புக்கணக்காகும். பழைய அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக வளரும் தொழிலாள வர்க்க இயக்கம் SAVஆல் முற்றிலும் எதிர்க்கப்படுகிறது. சில ஒட்டுண்ணி தாவரவகைகள் குறிப்பிட்ட விருந்தோம்பியின் மூலம்தான் வாழ முடியும் என்பது போல் SAVக்கு ஒரு அதிகாரத்துவக் கருவி அரசியல்ரீதியாக அது வாழ்வதற்குத் தேவையாகும். இக்கருவியின் செல்வாக்கிழப்பு அவர்களை பெரும்பீதியில் ஆழ்த்துகிறது. தொழிலாள வர்க்கம் அதிலிருந்து முழுமையான பிளவடைவதை தடுக்க அவர்கள் அனைத்தையும் அவர்கள் செய்வர்.
SAV உடன் இணைந்துள்ள ஒரு சர்வதேசப் போக்கான CWI (Committee for a Workers International -CWI) எனப்படும் சர்வதேச தொழிலாளர்களுக்கான குழு மிகுந்த வலதுசாரித் தன்மையுடைய சமூக ஜனநாயக அமைப்புக்களை “முற்போக்கானவை” என்றும் அதற்கு சோசலிச வண்ணங்களிலும் சித்தரிப்பதில் சிறப்புத் தேர்ச்சியைக் கொண்டுள்ளது.
CWI இன் இத்தாலியப் பிரிவான Contocorrente, Rifondazione Comunista விற்குள் செயல்பட்டுள்ளது. அதுவோ 1990களின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட பின்னர், ஒவ்வொரு அரசியல் நெருக்கடியின்போதும் முதலாளித்துவ அரசாங்கத்தின் ஆதரவிற்குத்தான் வந்துள்ளது. 2006ம் ஆண்டு Rifondazione Comunista புரோடியின் அரசாங்ககத்தில் சேர்ந்தது. அதன் வலதுசாரிக் கொள்கைகள் அப்பொழுது சில்வியோ பெர்லுஸ்கோனியை மிகக் குறுகியகாலத்திற்குள் மூன்றாம் முறை பதவிக்கு உதவியது. கிரேக்கத்தின் CWI பிரிவான Xekinima, SYRIZA வின் ஒரு பகுதியாகும். இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பாப்பாண்ட்ரூவின் அரசாங்கத்தை பாதுகாப்பதில் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது.
1973ல் பிரிட்டிஷ் Militant Tendency இனை மாதிரியாகக் கொண்டு Voran குழு என்ற பெயரில் SAV நிறுவப்பட்டது. 1990களின் நடுப்பகுதி வரை, Voran குழு SPDக்குள் செயல்பட்டு அதற்கு ஒரு இடதுசாரி மறைப்பைக் கொடுக்க முயன்றது. 1993ல்தான், அதன் பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் தொழிற் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், SAV அதன் SPD இனுள்ளான செயல்பாட்டை கைவிட்டது. ஆனால் அது சமூக ஜனநாயகத்தின் அதிகாரத்துவத்துடன் அடிப்படை சார்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2004ம் ஆண்டு SPD மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் WASG ஐ தோற்றுவித்தபோது, SAV உடனே இந்த அமைப்பை நோக்கி தனது சார்பு காட்டிக்கொண்டது. PDS மற்றும் WASG இரண்டும் ஒன்றாக சேர்ந்து இடது கட்சி அமைக்கப்பட்டதையும் அடுத்து இவ்வமைப்பு SAV உடைய செயல்களுக்கான மையம் ஆனது.
SAV யின் வலைத் தளம் அது “லியோன் ட்ரொட்ஸ்கி, இடது எதிர்ப்பு மற்றும் அவர் நிறுவிய நான்காம் அகிலம் ஆகியவற்றின் மரபில் நிற்பதாகக்” கூறுகிறது. இக்கூற்று அபத்தமானது. நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு அரசியல் பிரதிநிதிகளிலும் இருந்தும், குறிப்பாக போலி இடதுப் பிரிவுகளிடம் இருந்து தொழிலாள வர்க்கம் முழுச் சுயாதீனம் அடைவதற்குப் போராட வேண்டும் என்பதில்தான் முக்கியத்துவம் காட்டுகிறது.
அதன் நிறுவன ஆவணமான இடைமருவு வேலைத் திட்டத்தில் 1938ம் ஆண்டு கூறப்பட்டுள்ளபடி, “இன்று ஏற்கனவே நான்காம் அகிலம் ஸ்ராலினிசவாதிகள், சமூக ஜனநாயகத்தினர், முதலாளித்துவ தாராளவாதிகள் மற்றும் பாசிஸ்ட்டுக்களால் வெறுக்கப்படுகிறது. எந்த மக்கள் முன்னணிகளிலும் அதற்கு இடம் இல்லை, இடம் இருக்க முடியாது. சமரசத்திற்கு இடமில்லாத வகையில் இது முதலாளித்துவத்தின் முந்தானை முடிச்சுக்களுடன் பிணைந்த அரசியல் குழுக்கள் அனைத்திற்கும் எதிராகப் போராடுகிறது. இதன் பணி: முதலாளித்துவ ஆதிக்கத்தை அகற்றுவது. இதன் நோக்கம்; சோசலிசம், இதன் வழிவகை: தொழிலாள வர்க்கப் புரட்சி.”
SAV முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஸ்ரானிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவத்தின் இழிசரிவின் விளைவான இடது கட்சி பெருகிய முறையில் குறைமதிப்பிற்கு உட்பட்டுவருகிறது என்ற நிலையில் SAV இடது கட்சிக்கு ஒரு புதிய அரசியல் மறைப்பைக் கொடுத்து அதன் இன்னும் வலதிற்குத் திரும்பும் முறையை எளிதாக்க பெரிதும் பாடுபடுகிறது. அடுத்த ஆண்டு பேர்லின் செனட் தேர்தல்களின்போது, இடது கட்சியின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு SAWவை விட நம்பிக்கையான ஆதரவாளர்கள் இருக்க மாட்டார்கள்.
தன்னுடைய முதல் சோதனையில் செப்டம்பர் கடைசியில் பேர்லினில் SAV தேர்ச்சி பெற்றுவிட்டது. பேர்லின் நகரவைக்கு வெளியே, லூசி ரெட்லர் ஐரோப்பிய அரசாங்கங்கள் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு ஆர்ப்டாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆனால் கூட்டத்தில் பேசிய எவரும் இடது கட்சி அல்லது தொழிற்சங்கங்களை எதிர்த்து ஒரு சொல்கூடக் கூறவில்லை. மாறாக இடது கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் உல்ரிச் மவுரர் இற்கு பேச வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அதில் அவர் SPD மற்றும் பசுமைவாதிகளுடன் ஒத்துழைப்பிற்கு வாதிட்டார். பார்வையாளர்களின் கூச்சல் கூக்குரலை மவுர்ர் பெற்றது எந்த அளவிற்கு அவசரம் அவசரமாக இடது கட்சியில் உள்ள வலதுசாரி சக்திகள் SAV ன் ஆதரவை நாடி நிற்கின்றன என்பதைக் காட்டியது.
|