WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை: வெளியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை குழு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது
By our correspondent
8 November 2010
Use
this version to print | Send
feedback
வீட்டுரிமையை காக்கும் நடவடிக்கை குழு, கொழும்பு குடிசைவாசிகளின் வீடுகளை காக்கும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு சகல தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது. வீட்டுரிமையை காக்கும் நடவடிக்கை குழு, மத்திய கொழும்பில் இருந்து 66,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை உழைக்கும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பிரச்சாரம் ஒன்றையும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
இந்தக் குழு, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் உதவியுடன் கடந்த அக்டோபரில் ஸ்தாபிக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்கள் அக்டோபர் கடைப்பகுதியில் தமது பிரச்சாரத்தைப் பற்றி கலந்துரையாடியதோடு தொழிலாளர்களுக்கான வேண்டுகோளையும் எழுதினர். குழுவில் உள்ள அநேகமானவர்களுக்கு அவர்கள் வெளியேற்றப்படவுள்ளதை குறிக்கும் அரசாங்க டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றம் சம்பந்தமாக அதிருப்தி வளர்ச்சியடைந்த உடன், வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) குடிசைவாசிகளின் பாதுகாவலனாக தன்னைக் காட்டிக்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஆயினும், பெரும் வர்த்தகர்களின் கட்சியான யூ.என்.பி., கடந்தகாலத்தில் இத்தகைய வெளியேற்றங்களை ஈவிரக்கமின்றி முன்னெடுத்த கட்சியாகும். 2001 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த யூ.என்.பி., கொழும்பை தெற்காசியாவின் வர்த்தக மையமாக மாற்றுவதன் பேரில் இத்தகைய அப்புறப்படுத்தும் திட்டத்தை வகுத்திருந்தது.
இந்த வேண்டுகோளைப் பற்றி பேசும்போது, அரசாங்கம் குடியிருப்பாளர்களை கொழும்பு நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோமாகம போன்ற பிரதேசங்களுக்கு அனுப்பக் கூடும் என தெரியவந்துள்ளதாக, குழுவில் பங்குபற்றிய ஒரு பெண் விளக்கினார். "எங்களால் கொழும்புக்கு வெளியில் சென்று வாழ முடியாது. அரசாங்கம் எங்களது வீடுகளை உடைத்தால், எங்களுக்கு மாநகருக்குள்ளேயே வீடுகள் கொடுக்க வேண்டும். நாங்கள் மாநகருக்கு வெளியில் சென்றால் எங்களால் எப்படி தொழில் செய்ய முடியும்?" என்ற அவர் கேட்டார்.
"நாங்கள் பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்கின்றோம். அனைவரும் இங்கு வேலை செய்கின்றனர். [எங்களை வெளியேற்றினால்] நாங்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வோம். எங்களது பிள்ளைகள் கொழும்பிலேயே படிக்கின்றனர். இப்போதும் கூட அன்றாட வருமானத்தைப் பெறுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றோம். அனைவருக்கும் கொழும்பிலேயே வீடு கொடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும்."
இன்னொருவர் பேசும் போது, "அரசாங்கம் பகுதி பகுதியாக மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கின்றது. [ஒரேயடியாக வெளியேற்றினால்] மக்கள் ஆத்திரமடைவார்கள் என்று [அரசாங்கம்] அஞ்சுவதே இதற்குக் காரணம்," என விளக்கினார். ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழ் மற்றும் சிங்களம் பேசும் மக்களை ஐக்கியப்படுத்துவதற்காக, இந்த வேண்டுகோள் தமிழிலும் விநியோகிக்கப்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
பொருத்தமான வீடுகளைப் பெற அவர்களுக்குள்ள உரிமையை பாதுகாப்பதன் பேரில் நடவடிக்கை குழுவின் பிரச்சாரத்துக்கு சோ.ச.க. ஆதரவளிக்கின்றது. கட்டிட நிர்மாண நிறுவனங்களுக்காகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காகவும் பெறுமதியான நிலங்களை விடுவித்துக் கொடுப்பதற்காக, ஆயிரக்கணக்கான குடும்பங்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் கிரிமினல் நடவடிக்கையாகும்.
இந்தப் பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு நாம் தொழிலாள வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். சுயாதீன நடவடிக்கை குழுவை அமைத்ததானது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் வளர்ச்சியடைந்து வரும் எதேச்சதிகார ஆட்சியின் எதிரில் தமது அடிப்படை உரிமைகளைக் காக்க மிகவும் வறிய குடிசைவாசி தட்டினர் எடுத்துள்ள உத்வேகம் நிறைந்த முதல் நடவடிக்கையாகும்.
நாம், தமது தொழில் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீது தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கும், இந்த நடவடிக்கை குழுவின் முன்நடவடிக்கையை பின்பற்றுமாறும் தமது சொந்த சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறும் அழைப்புவிடுக்கின்றோம். அரசாங்க கட்சியானாலும் அல்லது எதிர்க் கட்சியானாலும், இந்த அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு கட்சியும் அல்லது தொழிற்சங்கங்களும் உழைக்கும் மக்களின் மிகவும் அடிப்படை உரிமைகள் எதையும் காக்கப் போவதில்லை.
சோ.ச.க., ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, பெரும்பான்மையான தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் தேவைகளை இட்டுநிரப்புவதன் பேரில், சோசலிச அடிப்படையில் சமுதாயத்தை அடிமுதல் உச்சிவரை மறு ஒழுங்கு செய்வதற்காக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்காகப் போராடுகின்றது. இது, சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்படுவதை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு அனைத்துலகப் போராட்டத்தின் பாகமாகும்.
வீட்டுரிமையை காப்பதற்கான நடவடிக்கை குழுவின் அறைகூவலை நாம் இங்கு பிரசுரிக்கின்றோம்:
தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு வேண்டுகோள்!
கொழும்பில் வீட்டுரிமையைக் காக்கும் எமது பிரச்சாரத்துக்கு ஆதரவு தாருங்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் வர்த்தகர்களுக்கு காணிகளை குத்தகைக்கு கொடுப்பதற்காக, கொழும்பில் உள்ள குடிசை வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துவருகின்றது. இந்தக் குடிசை வீடுகளில் தற்போது 66,000 குடும்பங்கள் வாழ்கின்றன.
இந்தக் காரணத்துக்காக, நகர அபிவிருத்தி அதிகார சபையும் (யூ.டி.ஏ.) காணி சீர்திருத்த அபிவிருத்தி சபையும் (எல்.ஆர்.டி.பி.) பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 12 அன்று, மக்களை வெளியேற்றும் இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் கொடுத்தது.
இந்த திட்டத்தின் காரணமாக, மிகவும் வறியவர்களாகிய நாம், வீடமைப்பதற்குரிய இன்றியமையாத ஜனநாயக உரிமையை இழக்கவுள்ளோம். இந்த திட்டம் எமது ஜீவனோபாயத்துக்கும் பாடசாலை அனுப்புவது உட்பட பிள்ளைகளை வளர்ப்பதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எங்களுக்கு வீடுகள் வழங்குவதாக அரசாங்கம் கூறிக்கொள்கின்றது. இந்த போலி வாக்குறுதிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கடந்த தசாப்தத்தில் அரசாங்கங்கள் எங்களுக்கு அத்தகைய வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளன. 2008ல் கிளெனி வீதியிலும் 2010 மே மாதம் மத்திய கொழும்பின் கொம்பனித்தெரு மெவ் வீதியிலும் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் ஒரு சில குடும்பங்களைத் தவிர ஏனையோருக்கு சுதந்திர முன்னணி அரசாங்கம் வீடு கொடுக்கவில்லை. மற்றும் வழங்கப்பட்டுள்ள வீடுகளும் மனித வாழ்க்கைக்கு தக்கவை அல்ல.
அகற்றுவதற்கு குறிவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்கனவே டோக்கன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் மாற்று தங்குமிடங்களை வழங்குவதற்கு மாநகருக்குள் எந்தவொரு வீட்டுத் திட்டத்தையும் கட்டியெழுப்பவில்லை. அவ்வாறு செய்வதற்கு அரசாங்கத்திடம் ஏதாவது திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை.
கொழும்பை முதலீட்டாளர்களுக்கான ஒரு "வர்த்தக மையமாக" மாற்றவும் வியாபார நன்மைகளுக்காக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக "நகரை அழகுபடுத்தவும்" அரசாங்கம் தீட்டியுள்ள திட்டத்தின் ஒரு பகுதியாகவே நாங்கள் வெளியேற்றப்படவுள்ளோம். இந்தத் திட்டம் சம்பள உயர்வை நிறுத்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலையை கூட்டி, இலவச கல்வி மற்றும் சுகாதார சேவையை வெட்டிக்குறைத்து மற்றும் மானியங்களையும் வெட்டி உழைக்கும் மக்கள் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் "பொருளாதார யுத்தத்தின்" பாகமாகும்.
அரசாங்கம் நீண்டகாலமாக உள்ள கொழும்பு மாநகர சபையையும் தூக்கிவீசி அதை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது.
அரசாங்கம் எங்களை வெளியேற்ற பொலிஸையும் இராணுவத்தையும் பயன்படுத்தவுள்ளது மற்றும் பயன்படுத்தியும் உள்ளது. கிளெனி மற்றும் மெவ் வீதியில் இருந்த குடும்பங்கள் ஏற்கனவே பொலிஸ் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. கடந்த ஜூலையில், மட்டக்குளியில் ஒரு வாலிபனை கைது செய்து அடித்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து, நூற்றுக்கணக்கான பொலிசாரும் இராணுவத்தினரும் 8,000 பொது மக்களை சுற்றிவளைத்தனர். வடக்கு மற்றும் கிழக்கில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வழிமுறைகள் இப்போது கொழும்பில் பயன்படுத்தப்படுகின்றன.
எங்களை "சமூக-விரோத சக்திகள்" என பழிதூற்றும் அரசாங்கத்தையும் ஊடகத்தையும் நாம் கண்டனம் செய்கின்றோம். எங்களை வெளியேற்றவும் எங்களை வறுமையில் வைத்திருக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது, ஒரு பிரமாண்டமான சமூக-விரோத செயலாகும்.
எங்களுக்கு கொழும்பு நகரில் பொருத்தமான வீடுகள் வேண்டும். அது எமது உரிமை. எங்களது போராட்டத்தை ஆதரிக்குமாறு அனைத்து குடிசைவாசிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். இந்த வேண்டுகோளின் பிரதிகளை விநியோகியுங்கள். வீட்டுரிமையை காக்கும் நடவடிக்கை குழுவுக்கு உங்களது பிரதிநிதிகளை அனுப்பிவையுங்கள், அப்போது எங்களது பிரச்சாரத்தை விரிவுபடுத்த முடியும்.
மின்சாரம் மற்றும் குழாய் நீர் உட்பட சகல அத்தியாவசிய வசதிகளுடனும் பொருத்தமான வீடுகளை கட்டியெழுப்ப பலநூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். இலாப அமைப்பை பாதுகாக்கும் இந்த அரசாங்கம், உழைக்கும் மக்களின் ஏனைய அவசரத் தேவைகளை வழங்கத் தவறியுள்ளதைப் போலவே, எங்களுக்கும் பொருத்தமான வீடுகளை வழங்காது. யூ.என்.பி. அல்லது மக்கள் விடுதலை முன்னணி போன்ற எதிர்க் கட்சிகளிலும் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவையும் முதலாளித்துவத்தையே பாதுகாக்கின்றன. ஒரு சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அடிப்படை உரிமையையும் காக்க முடியும்.
தொழிலாளர்களின் உதவி எங்களுக்கு வேண்டும். நாம் குறிப்பாக கொழும்பு மாநகர சபையிலும் நகர அபிவிருத்தி அதிகார சபையிலும் காணி சீர்திருத்த அபிவிருத்திச் சபையிலும் வேலை செய்யும் எமது வர்க்க சகோதர சகோதரிகளிடமும் மற்றும் ஏனைய தொழிலாளர்களிடமும் திட்டமிடப்பட்டுள்ள இந்த வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட மறுப்புத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். |