WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
நோக்கியா அசெம்பிளி-லைன் ஆலையில் இந்திய தொழிலாளர் உயிரிழக்கச் செய்யப்பட்டார்
By Arun Kumar
9 November 2010
Use
this version to print | Send
feedback
தென்னிந்தியாவின் நோக்கியா அசெம்பிளி-லைனில் (assembly line) ஓர் இளம் பெண் தொழிலாளரின் தலையும், கழுத்தும் ஒரு ரோபோடிக் லோடிங் இயந்திரத்தின் உள்ளே சிக்கி நசுங்கியதில், அவர் உயிரிழக்க நேர்ந்தது. மலிவுகூலி தொழிலாளர்களை கொண்டு இலாபங்களை குவிக்கும் உந்துதலுக்கு மனித உயிரையும், உடலையும் குறைத்து மதிப்பிடும் - நாட்டின் பெரும்பாலான ஆலைகளில் நிலவும் நிலைமைகளை இந்த கொடூரமான சம்பவம் வெளிப்படுத்திக் காட்டிள்ளது.
உலகின் மிகப்பெரிய செல்பேசி உற்பத்தி நிறுவனமாக விளங்கும் நோக்கியா, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதன் ஸ்ரீபெரும்புத்தூர் ஆலையில் சுமார் 7,000 தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது. இதில் எழுபது சதவீத தொழிலாளர்கள் பெண்கள். பின்லாந்தை மையமாகக் கொண்ட நோக்கியா 120 நாடுகளில் 123,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. 150க்கும் மேலான நாடுகளில் விற்பனையைக் கொண்டிருக்கும் அந்நிறுவனம், 2009இல் உலகளாவிய ஆண்டு வருவாயாக 41 பில்லியன் யூரோவையும், செயல்பாட்டு இலாபமாக 1.2 பில்லியன் யூரோவையும் காட்டியது.
அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண் தொழிலாளர் அம்பிகா 22 வயதே நிரம்பியவர். தமிழ்நாட்டின் வேலூர் மாவடத்தில் உள்ள புட்டிதாங்கல் கிராமத்தில் ஒரு விவசாய தொழிலாளியின் மகளாக அவர், அவருடைய பெற்றோரையும், ஒரு தங்கையையும், ஒரு தம்பியையும் காப்பாற்றி வந்தார். அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் நோக்கியா ஆலையில் அவர் வேலையின் மூலமாக பெற்றுவந்த வெறும் 8,500 ரூபாய் ($170) மாதச் சம்பளத்தையே சார்ந்திருந்தது. அந்த ஆலையில் அவர் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
ஒரு மேகஜின் ரேக்கிற்குள் (magazine rack) பேனல்களை ஏற்றும் ஓர் அசெம்பிளி-லைன் இயந்திரத்தில் அம்பிகா வேலை செய்து வந்தார். அந்த ரேக் பின்னர் ஓர் உலோக பெட்டகத்திற்குள் ஒரு கன்வேயர் பட்டை வழியாக நகர்ந்து செல்லக்கூடியது. அக்டோபர் 31 அன்று இரவில், அவர் வேலை செய்து கொண்டிருந்த போது, கன்வேயர் பட்டை சிக்கி கொண்டதால், இயந்திரத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சென்சார் செயல்பாட்டை நிறுத்தியது. இது வழக்கமாக நடக்கும் ஒரு சம்பவமாக இருந்தது. தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களால் தொடர்ச்சியாக இந்த குறைபாடு குறித்து முறையீடு செய்யப்பட்டு வந்த போதும், நிறுவன அதிகாரிகளால் இந்த பிரச்சினை கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருந்தது.
செயல்பட்டு கொண்டிருக்கும் போதே இந்த விதத்தில் இயந்திரம் சிக்கிக் கொண்டால், வழக்கமாக தொழிலாளர்கள் அவர்களுடைய தலையை (உலோக பெட்டகத்திற்கு கீழே) இயந்திரத்திற்குள் விட்டு சுயமாக கன்வேயர் பெல்ட்டை இழுப்பார்கள். உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தொடர்ச்சியான அழுத்தத்தின்கீழும், உதவிக்காக 10-15 நிமிடங்கள் காத்திருப்பதற்குப் பயந்தும் அவர்கள் தொழில்நுட்ப வல்லுனர்களை அழைப்பதற்கு பதிலாக அவர்களே அந்த பிரச்சினையை சரிசெய்ய முனைகிறார்கள்.
இதே பிரச்சினையைச் சரிசெய்ய அம்பிகா முயன்ற போது, அந்த சென்சார் திடீரென வேலை செய்ய தொடங்கியது. இதனால் கீழே வந்த உலோக பெட்டகத்தின் அடியில் அவருடைய தலையும், கழுத்தும் மாட்டிக் கொண்டன. அவருடன் வேலைகள் செய்து கொண்டிருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக ஓடி வந்து இயந்திரத்தின் அவசர உதவி பொத்தானை அழுத்திய போதினும், அந்த நடவடிக்கையும் கூட அவருடைய தலையை வெளியில் கொண்டு வரவில்லை.
உற்பத்தியை நிறுத்தி விட்டு, முதன்மை அவசர உதவி பொத்தானை அழுத்துவது மட்டுமே இயந்திரத்திலிருந்து தலையை வெளியே எடுப்பதற்கான ஒரே வழியாக இருந்தது. ஆனால் அந்த தளத்தில் உடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் எவராலும் அதை அணுக முடியவில்லை. அடுத்த அசெம்பிளி-லைன் தொழிலாளர்கள் தான் தொழில்நுட்ப வல்லுனர்களையும், நிர்வாகிகளையும் அழைத்தார்கள். உடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலளார்களின் கருத்துப்படி, உற்பத்தியை நிறுத்த முடியாது என்று கூறி, ஆலையின் அதிகாரிகள் முதன்மை அவசர உதவி பொத்தானை அழுத்த மறுத்தார்கள்.
மாலை 6.50க்கு இயந்திரத்தில் சிக்கிய அம்பிகா, தலையும் கழுத்தும் நசுங்கிய நிலையிலேயே அவருடைய மூக்கில் இருந்தும், வாயிலிருந்தும் இரத்தம் ஒழுகி கொண்டிருந்த நிலையிலேயே, அவருடைய உடன் வேலை செய்பவர்கள் அவரை வெளியில் எடுக்கும் வரையில் 20 நிமிடங்கள் இயந்திரத்தில் சிக்கிய நிலையிலேயே இருந்தார்.
பத்திரிகைகளின் செய்தியின்படி, அம்பிகா மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர், நோக்கியாவின் ஷிப்ட் நிர்வாகி புருஷோத்தமன், “அவருக்கு ஒன்றும் ஆகவில்லை" என்று அங்கிருந்த தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் அளித்து, அவர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டார். கோபமடைந்த தொழிலாளர்கள், “உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படி ஆகியிருந்தால், நீங்கள் இப்படிதான் நடந்து கொள்வீர்களா?” என்று கேட்டு எதிர்த்துள்ளனர்.
தொழிலாளர்கள் வேலையைத் தொடர மறுத்தபோது, உற்பத்தி நிறுத்தத்தால் நிறுவனத்திற்கு ஏற்படக்கூடிய ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்புகளுக்கு அவர்கள் விளைவைச் சந்திக்க வேண்டி வரும் என்று லைன் நிர்வாகிகள் எச்சரித்தனர்.
அடுத்த நாள், தொழிலாளர்களின் கொதிப்பான மனநிலையை உணர்ந்த நோக்கியா நிர்வாகம் விடுமுறையை அறிவித்தது. அன்றைய தினம் சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் அம்பிகா உயிரிழந்த அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் தொழிலாளர்கள் குழுமினர்.
அம்பிகா மரணத்தின் சூழ்நிலைகள் இந்திய உற்பத்திதுறையின் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் கூர்மையான உண்மைகளையும், உயர்-தொழில்நுட்ப துறையின் மேல்பூச்சிற்கு கீழே மேலோங்கி இருக்கும் பின்தங்கிய நிலைமைகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
இதுபோன்ற கோர விபத்துக்கள் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை என்றும், தாங்கள் குறைகளை குறிப்பிட்டுக் காட்டிய பின்னரும் கூட சரி செய்யப்படாமல் இயந்திரங்கள் மோசமான நிலைகளில் இயங்குவதால் உயிரையும், உடல் உறுப்புகளையும் இழக்கும் அபாயம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் நோக்கியா தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏற்கனேவே தொடர்ந்து அவர்கள் சென்சாரின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி இருந்த போதும் கூட, ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவத்திற்குக் காரணமான சென்சாரைச் சரிசெய்ய நிர்வாகம் எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். கடந்த ஆறு மாதங்களாக அந்த சென்சார் சரியாக வேலை செய்யாமல் தான் இருந்திருக்கிறது.
ஸ்டாம்பிங் அறையில் காயங்கள் ஏற்படுவது சாதாரணமாக இருந்தன என்றும், ஸ்டாம்பிங் இயந்திரங்களுக்குள் சிக்கி விரல்கள் நசுங்கி காயப்படுவது வழக்கமான ஒன்றாக இருப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதிகளவில் உற்பத்தி இலக்குகளை எட்ட வேண்டும் என்ற அழுத்தத்தால், தொழிலாளர்கள் அவர்களின் உயிரைப் பணயமாக வைத்து அசெம்பிளி-லைனில் இருக்கும் இத்தகைய இயந்திரங்களில் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும், தேசிய அரசாங்கமான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டாளியுமான திராவிட முன்னேற்ற கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் (LPF) தலைவர்கள், அம்பிகாவின் மரணத்திற்கு அவரையே - அந்த இளம் தொழிலாளியையே குற்றஞ்சாட்டி நோக்கியாவிற்கு ஆதரவாக வெளிப்பட்டிருக்கிறார்கள். LPF க்கு நோக்கியாவில் ஒரு தொழிற்சங்க கிளை உண்டு. தொழிலாளர்களை அடக்குவதில் அதன் வெளிப்படையான ஒத்துழைப்பிற்காக அதுமட்டுமே நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் ஒரே தொழிற்சங்கமாக அங்கே இருக்கிறது.
அம்பிகாவின் மரணத்தில் நிறுவனத்தின் மீதிருந்து குற்றச்சாட்டுக்களைத் திசைதிருப்புவதில் LPF பொது செயலாளர் எம். சண்முகம் தலையீடு செய்திருக்கிறார். அந்த பெண்ணின் கை இயந்திரத்தில் சிக்கி நசுங்கிய போது, அவர் பேசிக்கொண்டே ஒரு punching இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்ததாக ஒரு தொழிற்சங்க அதிகாரி கூறினார். “அவருடைய விரலை விடுவிக்க முயன்ற போது, அவர் பதற்றத்திற்கு உள்ளாகி போனார், அதில் அவர் அவருடைய சமநிலையை இழந்து ஸ்லாட்டுக்குள் தவறி விழுந்துவிட்டார். இயந்திரம் அவருடைய தலையையும், கழுத்தையும் நசுக்கிவிட்டது,” என்று அவர் The Telegraph இதழுக்குத் தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது: “தொழிலாளர் கவனமாக இல்லாததாலும், மற்றவர்கள் வந்து அவரைக் காப்பாற்றுவதற்கு போதிய நேரமில்லாமல் குறுகிய நேரத்தில் இது நடந்து விட்டதாலும் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது,” என்று அவர் தெரிவித்தார்.
தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் கதை, அம்பிகாவுடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் நேரில் பார்த்து கூறிய விஷயத்திலிருந்து முற்றிலுமாக வேறுபடுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த அவர்கள் மிகத் தெளிவாக நிறுவனத்தைக் தான் குற்றஞ்சாட்டினார்கள். ஓர் இளம் தொழிலாளரின் தொழிற்சாலை படுகொலையில், வெளியிலிருந்து எடுத்த ஏதோவொரு ஆதாரத்துடன் நோக்கியாவிற்கு ஆதரவாக தொழிற்சங்க அதிகாரியின் தலையீடு, திமுக அரசாங்கத்தின் பாத்திரத்தோடு சரியாக பொருந்தி இருக்கிறது. இந்த அரசாங்கம் தான் ஹீண்டாய், பாக்ஸ்கான் மற்றும் BYD எலெக்ட்ரானிக்ஸ் உட்பட தமிழ்நாட்டின் பல தொழிற்சாலைகளில் நடந்த தொழிலாளர் போராட்டங்களை நசுக்க அதன் பொலிஸ் துருப்புகளை அனுப்பி இருந்தது.
இந்த அடிப்படை பாதுகாப்பை கவனியாத நோக்கியா நிர்வாகத்தின் குற்றமானது, பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றின் இலாபங்களுக்கான உந்துதலில் திணித்திருக்கும் கொடுமையான வேலை நிலைமைகளின் வெளிப்பாடுகளில் ஒன்றே ஒன்றாகும். இந்த சகிக்க முடியாத நிலைமைகள் தான் ஸ்ரீபெரும்புத்தூர் உட்பட தென்னிந்தியாவின் ஆலைகளில் நடக்கும் தற்போதைய போராட்ட அலை எழுச்சிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்றன.
|