WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஈரானுக்கு எதிராக அதிகரிக்கும் அமெரிக்கப் போர் அச்சுறுத்தல்கள்
Bill Van Auken
8 November 2010
Use this
version to print | Send
feedback
இடைத் தேர்தல் திருப்பத்தை தொடர்ந்து முக்கிய குடியரசுக் கட்சி செனட்டர் லிண்சே கிரகாம் ஈரானுக்கு எதிராக அமெரிக்க அச்சுறுத்தல்களை விரிவாக்கும் வகையில் தெஹ்ரானை “செயலிழக்க வைப்பதுடன்” அதை எதிர்ப்புக் காட்ட இயலாமலும் செய்துவிடுமளவிற்கு பகிரங்கமாக போர் தொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து அடையாளம் காட்டியுள்ளார்.
சனிக்கிழமையன்று கனடாவில் உள்ள ஹாலிபாக்சில் சர்வதேசப் பாதுகாப்பு பற்றிய ஒரு மாநாட்டில் கிரகாம் இந்த அறிவிப்பை விடுத்தார்: “சகித்துப்போதல் பற்றிய விவாதம் இல்லை” என்று ஈரானின் அணுத் திட்டம் பற்றி அறிவித்தார்.
வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் தெஹ்ரான் அதன் அணுத் திட்டத்தை ஆயுதம் தயாரிப்பதற்காக வளர்க்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளன. ஈரானிய அரசாங்கமோ தொடர்ந்து இக்குற்றத்தை மறுத்து அதன் அணுத் திட்டம் முற்றிலும் சமாதான, பொதுத்தேவைகளுக்காகத்தான் என்று வலியுறுத்தி வருகிறது.
1930 களில் ஜேர்மனியில் ஒலித்த முழுப் போர் வனப்புரை வகையைப் பயன்படுத்தி, தென் கரோலினாவில் குடியரசு செனட்டர் அமெரிக்கத் தாக்குதல் “அவர்களுடைய அணுத்திட்டத்தை செயலிழக்கச் செய்வதற்கு மட்டும் என்று இல்லாமல், அவர்களுடைய கடற்படையை அழித்தல், அவர்களுடைய விமானப் படையை அழித்தல் மற்றும் புரட்சிகரப் பிரிவிற்கு மரண அடி கொடுத்தல் என்ற விதத்தில் நடத்தப்படும். வேறுவிதமாகக் கூறினால், அந்த ஆட்சியையே செயலிழக்கச் செய்தல். அவர்கள் போரிடும் திறனை அழித்துவிட வேண்டும்.” என்று சபதம் எடுத்தார்.
ஜனநாயகக் கட்சி கடந்த வாரம் தேர்தல்களில் தோல்வியுற்றாலும், “ஜனாதிபதி ஒபாமா பொருளாதாரத் தடைகளுக்கும் அப்பால் கடுமையாக நடந்து கொள்ள விரும்பினால், ஈரான் ஒரு அணுவாயுதத் திட்டத்தை அபிவிருத்திசெய்யக்கூடாது என்னும் கருத்திற்கு அதிகளவு குடியரசுக் கட்சியின் ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்று கிரகாம் சேர்த்துக் கொண்டார்.
ஹாலிபாக்ஸ் மாநாட்டு அரங்கில் பேச கிரகாமுடன் சேர்ந்து கொண்டவர் செனட்டர் மார்க் உடால் (கொலராடோ, ஜனநாயகக் கட்சி) ஆவார். ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தொடர வேண்டும் என்ற இவர் வாதிட்டதுடன் “அனைத்து விருப்புத் தேர்வுகளும் மேசைமீது உள்ளன” என்றார். இது அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு மறு பெயராகும்.
இதே மாநாட்டில் பேசிய இஸ்ரேலியப் பாதுகாப்பு மந்திரி எகுட் பாரக் ஈரானை “எத்தகைய உலக ஒழுங்கிற்கும் ஒரு பெரிய, மிகப் பெரிய அச்சுறுத்தல்” என்றார். “இராணுவ வகையில் அணுவாயுதத் திறனை எப்படியும் அடைவது என்று தெஹ்ரான் உறுதியாக உள்ளது” என்றும் “இது அணுவாயுதப் பரவாமுறை எவ்வித கருதலுக்கும் முடிவாகும்” என்றும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அணுவாயுதப் பரவாத்திட்ட முயற்சிகளை மீறி அப்பகுதியில் அணுவாயுதம் கொண்ட ஒரே நாடான இஸ்ரேல் பலமுறையும் ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலிய நிதிய மந்திரி யுவல் ஸ்டீனிட்ஸ் ஈரான் வாஷிங்டனின் கோரிக்கைகளுக்குத் தலை வணங்காவிட்டால், ஒரு போர் நடவடிக்கை போன்று தெஹ்ரான் ஒரு கடற்படை முற்றுகைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
இச்சமீபத்திய அச்சுறுத்தல்கள் ஈரானுக்கும் P5+1 நாடுகளுக்கும் இடையே அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடக்க இருப்பதற்கு ஒரு வாரம் முன்னே வந்துள்ளன; அம்மாநாட்டில் ஐ.நா. பாதுகாப்புக்குழுவின் நிரந்தர உறுப்பினர்களுடன் -பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா-ஜேர்மனியும் உள்ளது. இப்பேச்சுக்கள் வியன்னாவில் நடைபெற உள்ளன.
இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் வெற்றி அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை இன்னும் வலதிற்கு நகர்த்தி, ஈரானுக்கு எதிரான ஒரு போர் அச்சுறுத்தலையும் தீவிரப்படுத்தும். ஜனவரி மாதம் மன்ற வெளியுறவுக் குழுவின் தலைமையை எடுத்துக் கொள்ள இருப்பது பிளோரிடாவின் குடியரசுக் கட்சி இலியனா ரோஸ்-லெஹ்டினென் ஆவார். இவர் ஈரானுடன் இராஜதந்திர முயற்சிகளை எதிர்த்துள்ளதுடன், கியூபாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை போன்றவற்றிற்கு தீவிரமாக வாதிடுகிறார்.
MEK எனப்படும் முஜாகிதின்-இ-கல்க்கிற்கு பெரும் ஆதரவையும் ரோஸ் லெக்டினென் கொடுப்பவர். இந்த அமைப்பு ஈரானுக்குள் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தன்னைப் பொறுப்பாகக் காட்டிக் கொள்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை இதை “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு” என்று பெயரிட்டுள்ளது.
மன்றக் குடியரசுக் கட்சியினரில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்துவதற்கு வெளிப்படையான ஆதவைக் கொடுத்திருந்தனர்.
ஒபாமா நிர்வாகமும் சட்டமன்ற ஜனநாயகக் கட்சியினரும் ஏற்கனவே ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றனர். ஐக்கிய நாடுகள் மன்றப் பாதுகாப்புக் குழுவின் மூலம் மற்றொரு சுற்று ஈரானிய எதிர்ப்புப் பொருளாதார நடவடிக்கைகளை அறிவித்த பின்னர், கடந்த ஜூலை மாதம் நிர்வாகம் ஒருதலைப்பட்ச அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் புதிய தொகுப்பைச் சட்டமாக இயற்றியது. இது ஈரானிய பொருளாதாரத்தை முடக்கிவிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பதுடன், அரசாங்கத்தை உறுதிகுலைக்கும் அளவிற்கு நாட்டு மக்களின் நிலைமையை மோசமாக்கிவிடும்.
இப்பொருளாதாரத் தடைகள் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள், ஈரானுடன் வணிகம் செய்பவை அல்லது அங்கு முதலீடு செய்பவை, அமெரிக்கச் சந்தைகளில் தடைக்கு உட்படும் என்பதுடன் அமெரிக்க அரசாங்கத்தின் ஒப்பந்தங்களைப் பெறும் வாய்ப்புக்களையும் இழந்துவிடும். இப்பொருளாதாரத் தடைகள் குறிப்பிடத்தக்க வகையில் ஈரானின் எரிசக்தி துறையை இலக்கு கொண்டுள்ளன.
நியூ யோர்க் டைம்ஸில் கடந்த வாரம் வந்த டேவிட் சாங்கரின் கட்டுரைப்படி, அடுத்த வாரம் பேச்சுக்களுக்கு ஈரான் வியன்னாவிற்கு வந்தாலும், வாஷிங்டன் பேச்சுவார்த்தைகள் செய்வதுபோல் காட்டிக் கொள்ளும். பேச்சுக்களில் அதன் முக்கிய நோக்கம் “ஈரானின் அணுசக்தி கணப்பீடுகளை ஒரு புதிய, வியத்தகு பரந்தமுறைப் பொருளாதாரத் தடைகள் மாற்றிக் கொண்டிருக்கின்றனவா” என்பதை மதிப்பிடுவதுதான்.
அமெரிக்கா கொடுத்துள்ள புதிய திட்டம் “நாட்டின் மிக்குயர் தலைவர் அயதோல்லா அலி காமேனி கடந்த ஆண்டு நிராகரித்த உடன்பாட்டைவிட இன்னும் கடினமானது” என்று கட்டுரை கூறியுள்ளது. ஈரான் அணு எரிபொருள் உற்பத்தியை நிறுத்துவதுடன் ஓராண்டிற்கு முன் பேச்சுக்களில் அடையப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதை விட மூன்றில் இரு பங்கு அதிக யுரேனியத்தை ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறுகிறது.
வாஷிங்டன் தன்னுடைய தடைகளுக்கு இதுவரை “அதிக விடையிறுப்பு இல்லை” என்று நம்புகிறது என்றும் “இது வெள்ளை மாளிகைக்குள் ஒபாமா இன்னும் வெளிப்படையாக இராணுவ விருப்பத் தேர்வுகள் பற்றி பேசுவது உதவுமா, உதவாதா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று டைம்ஸ் கட்டுரை கூறுகிறது.
ஒபாமாவின் மூத்த மத்திய கிழக்கு ஆலோசகர் டெனிஸ் ரோஸ் இதேபோன்ற கருத்தைத்தான் அக்டபோர் 25ம் திகதி அமெரிக்க இஸ்ரேல பொதுவிவகார குழுவில் (American Israel Public Affairs Committee) பேசியபோது தெரிவித்தார். இந்த அமைப்பு ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய செல்வாக்குக் குழு ஆகும்.
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் பெருகிய பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் வேலையின்மையை ஈரானில் ஏற்படுத்தியுள்ளது என்று தம்பட்டம் அடித்தபின், ரோஸ் போர் அச்சுறுத்தல் பற்றிய உட்குறிப்பை வெளிப்படுத்தினார். “இறுதியில் இன்று ஈரான் எதிர்கொள்ளும் கடுமையான அழுத்தம் அதன் நடத்தையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம். இராஜதந்திர முறை வாயிற்கதவு இன்னும் திறந்துதான் உள்ளது; ஈரானுடனான எங்கள் பூசலுக்கு ஒரு அமைதியான தீர்வைத்தான் உறுதியாக விரும்புகிறோம். ஆனால் தன் மீறும் செயல்களை ஈரான் தொடர்ந்தால், அதன் பெருகும் ஒதுக்கப்படும் தன்மை, அதன் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சேதம், ஆகியவை இருந்தபோதிலும், அதன் தலைவர்கள் ஜனாதிபதி ஒபாமா கூறுவதைக் கவனத்துடன் கேட்க வேண்டும்; அவர் பல முறை “ஈரான் அணுவாயுதங்களைப் பெறுவதைத் தடுக்க நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.” எனக்கூறியுள்ளார்.
இன்னும் அச்சமுறசெய்யும் அழைப்பு, இராணுவ அச்சறுத்தல் அதிகப்படுத்தப்பட வேண்டும் ஈரானுக்கு எதிரான என்பதற்கு, இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்பு Washington Post கட்டுரையாளர் டேவிட் ப்ரோடர் “The War Recovery” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் வந்துள்ளது; டேவிட்தான் “வாஷிங்டன் செய்தியாளர் குழுவில் உயர்ந்த இடம் பெற்றவராக கருதப்படுகிறார்.”
ஆழ்ந்து செல்லும் பொருளாதார நெருக்கடி 2012ல் இரண்டாம் வரைகால வெற்றிக்கு ஒபாமாவிற்கு ஒரு “திகைப்பு நிலையை” தோற்றுவிக்கிறது என்று குறைகூறிய ப்ரோடர் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிக்கு நாணமற்ற முறையில் ஆதரவு கொடுப்பவர்; இவர் இந்தச் சவால் எப்படிக் கடக்கப்பட முடியும் என்பதற்கு இரு காட்சிகளை சித்தரிக்கிறார். முதலாவது பயனற்ற நம்பிக்கையான பொருளாதார நெருக்கடி வணிக வட்டம் மாறும்போது முடிந்துவிடும் என்பது. ப்ரோடர் “சந்தை எங்கு செல்லவேண்டுமோ அங்கு செல்லும்” என்று முடிவுரை கூறி அத்தகைய விளைவு நம்பகத் தன்மை உடையது அல்ல என்றார்.
“அவர் 20 ஆம் நூற்றாண்டின் கொந்தளிப்பான வரலாற்றினை அடித்தளமாக கொண்ட தீர்வு ஒன்றை பரிந்துரைக்கின்றார்.
பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பெரும் மந்த நிலையை நினைவுகூருங்கள். பொருளாதார நெருக்கடியை இறுதியில் எது தீர்த்துவைத்தது? இரண்டாம் உலகப் போர்தான்.” என்று அவர் எழுதுகிறார்.
“இங்குதான் ஒபாமா மீளக்கூடும். காங்கிரசில் வலவான குடியரசுக் கட்சியின் ஆதரவு ஈரான் அணுவாயுத நாடாக வருவதற்குக் கொண்டுள்ள விருப்பத்திற்கு எதிராக இருக்கையில், அவர் 2011, 2012 ன் பெரும்பாலான பகுதியை முல்லாக்களுடன் மோதல் பற்றிச் செலவிடலாம். இது அரசியலில் அவருக்கு உதவும். ஏனெனில் எதிர்க்கட்சி அவரை அவ்வாறு செய்யத்தூண்டும். அழுத்தங்கள் அதிகரித்து, போருக்கான தயாரிப்புக்களை நாம் விரைவுபடுத்தும்போது, பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்.”
இங்கே விவரம் வெளிவருகிறது: பொருளாதார மீட்பிற்கு ஒரு நிதானமான திட்டம், மற்றும் மறுதேர்தல் பிரச்சாரம் வெற்றியடைவதற்கான தயாரிப்புக்கள் நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் மக்கள் மடிவதின் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இத்தகைய குருதிவெறித் திட்டங்களின் அடித்தளத்தில் அமெரிக்காவின் இரு வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு கட்சிகளுடைய இழிந்த அரசியல் கணக்குகளும் உள்ளன என்பது மட்டுமின்றி, அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றுத் தன்மை வாய்ந்த சரிவும் 1930 களின் பெருமந்த நிலைக்குப் பின்னர் உலக முதலாளித்துவ முறை காணும் ஆழ்ந்த நெருக்கடியின் பாதிப்பும் உள்ளன.
இரு கட்சிகளாலுமே இராணுவ வாதம் தழுவப்பட்டுள்ளது. இது ஆளும் உயரடுக்கிற்குள் அமெரிக்க முதலாளித்துவம் அதன் பொருளாதாரச் சரிவை இராணுவத்தை பயன்படுத்தி மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் விசைச் செழிப்பு, மூலோபாய முக்கியத்துவம் கொண்ட பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவன முடியும் என்ற ஒருமித்த உணர்வைப் பிரதிபலிக்கிறது.
ப்ரோடர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் சொற்கள், ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகளுடன் சேர்ந்து, ஒரு புதிய, இன்னும் அதிக இரத்தம் சிந்தும் போர் அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஒரு உலகம் படர்ந்த போர் என்னும் ஆபத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
|