WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்தியா: போலிஸ் தர்ணாவை உடைத்த பின் BYD எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது தொழிலாளர்களில் அநேகமானோரை நீக்குகிறது
By Sasi Kumar and Nanda Kumar
4 November 2010
Use
this version to print | Send
feedback
தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் ஒரகடத்தில் அமைந்துள்ள மிகப் பெரும் சீன நிறுவனமான BYD எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தியத் துணைநிறுவனத்தில், ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றைக் கோரி தொழிலாளர்கள் தர்ணா மேற்கொண்டதை அடுத்து அந்நிறுவனம் தனது தொழிலாளர்களில் பெரும் எண்ணிக்கையிலானோரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
தமிழகத் தொழிற்சாலையில் இருக்கும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் வேலை மறுத்திருக்கும் BYD அனைத்து 2500 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நீக்கியிருப்பதாய் அறிவித்திருக்கிறது.
BYDயின் 3,350 உற்பத்தித் தொழிலாளர்களில் 3,000க்கும் அதிகமானோர் ஆலை உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர், இது அக்டோபர் 28 அன்று தொடங்கி ஏறக்குறைய இரண்டு நாட்கள் நீடித்தது. அக்டோபர் 30 சனியன்று மாலையில், லத்தியுடன் போலிசார் ஆலையை சுற்றி வளைத்துக் கொண்டு ’தொழிலாளர்கள் 30 நிமிடங்களில் இடத்தைக் காலி செய்யவில்லை என்றால் ஆலைக்குள் தாங்கள் புகவிருப்பதாய்’ அச்சுறுத்தியதன் பின், தொழிலாளர்கள் தங்களது தர்ணாவை முடிக்க முடிவு செய்தனர்.
தீவிரமான வேலைநிறுத்தப் போராட்டங்களின் அலைக்கு (இவற்றில் பல தொழிற்சங்க அங்கீகாரத்திற்காக நடந்தன) தமிழகத்தின் திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) அரசாங்கம் அடக்குமுறை மூலம் பதிலிறுப்பு செய்தது. முற்றுகையிட்டவர்களை தொடர்ந்து கைது செய்ததும் இந்த நடவடிக்கையில் அடங்கும். தொழிலாளர்களில் ஊடுருவியிருக்கும் “இடதுசாரி தீவிரவாதத்தை” எதிர்கொள்வதற்கு அதிகாரிகள் “நமது உளவு எந்திரத்தை மேம்படுத்தி”யிருப்பதாக தமிழக டிஜிபி சென்ற மாதத்தில் ஒரு வர்த்தக கருத்தரங்கில் தெரிவித்தார்.
BYD தொழிலாளர்கள் நவம்பர் 1, திங்களன்று ஆலைக்குத் திரும்பியபோது, அவர்கள் வாயில் கதவுகள் மூடியிருக்கக் கண்டனர், போலிஸ் குவிக்கப்பட்டிருந்தது, நிறுவனத்தின் நோட்டிஸ் போர்டில் ஒரு கடிதம் இருந்தது. அனைத்து “ஒப்பந்த” தொழிலாளர்களையும், அதாவது 850 “நிரந்தர”த் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை விடவும் குறைவான ஊதியத்திற்கு ஆளெடுப்பு முகமைகள் மூலமாக நிறுவனம் வேலைக்கு அமர்த்தியிருந்த 2500 தொழிலாளர்களையும், BYD நீக்குவதாய் அந்த கடிதம் தெரிவித்தது.
உள்ளிருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 60 நிரந்தரத் தொழிலாளர்களும் சேர்ந்து நீக்கப்படுவதாகவும், இன்னுமொரு 437 பேர் தங்களது “தவறான நடத்தைக்காக” மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த BYD தாக்கீது அறிவித்திருந்தது.
இப்போது இந்த மூன்றரை ஆண்டு கால தொழிற்சாலை ஏதும் நடவாதது போல் ஒரு வார கால திடீர் “விடுமுறை”க்காக மூடப்பட்டிருக்கிறது. பல்வேறு தொழிலாளர் ஒப்பந்த முகவர்களின் மூலமாக மற்ற ஏழை கிராமத்துவாசிகளை கருங்காலிகளாய் வேலைக்கமர்த்தி செயல்பாடுகளைத் தொடர மாநில அரசாங்கத்துடன் சேர்ந்து சதி செய்வதற்கு நிர்வாகம் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
நோக்கியோ தொலைபேசிகளுக்கான பாகங்களை உருவாக்கும் இந்த ஆலையின் தொழிலாளர்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இளம் பெண்கள். நான்கு வருட அனுபவம் உடையவர்கள் மாதத்திற்கு வெறும் 5,400 ரூபாய் (சுமார் 120 அமெரிக்க டாலர்கள்) மட்டுமே ஊதியம் பெறுகிறார்கள்.
நூறு தொழிலாளர்களின் வேலையை இல்லாது செய்து BYD அறிவித்ததன் பின் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்காக அக்டோபர் 9 அன்று
தொழிலாளர்கள் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (மார்க்சிஸ்டு) சேர்ந்த தொழிற்சங்கமான சிஐடியு தொழிற்சங்கத்தை அணுகினர். பெருவாரியான தொழிலாளர்கள் (நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்) விரைவில் அதில் இணைந்தனர்.
நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்ததை அடுத்து, தொழிலாளர்கள் ஆரம்பகட்ட தர்ணாவை அக்டோபர் 21 அன்று துவக்கினர். நிரந்தரத் தொழிலாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்திய இந்த போர்க்குண நடவடிக்கையைத் தொடர்ந்து, நிறுவனம் தொழிலாளர்கள் 68 பேருடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஒப்புக் கொண்டது.
ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்த பேச்சுவார்த்தைகள் முறிந்தன, ஏனென்றால் ஒப்பந்தத் தொழிலாளர்களின் விவகாரங்களை தான் விவாதிக்கப் போவதில்லை என்று நிறுவன நிர்வாகம் வலியுறுத்தியது.
இதனையடுத்து, தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பழிவாங்குவதில்லை என்று அளித்திருந்த உறுதிமொழியில் நிர்வாகம் கட்சிமாறியது. துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்ததற்காக இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் அக்டோபர் 27 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே தொழிலாளர்களை ஒப்பந்தம் செய்தளிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது பெற்றோரிடம் அவர்தம் மகன்கள்/மகள்கள் தொடர்ந்து தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்டால், அவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதோடு அவர்களுக்கு எதிராய் போலிசில் புகாரும் அளிக்கப்படும் என அச்சுறுத்தினர்.
இத்தகையதொரு தகாத வேலையையே பிரேம்குமார் என்னும் நிரந்தரத் தொழிலாளியின் விவகாரத்திலும் நிர்வாகம் செய்தது. அவர் அக்டோபர் 27 அன்று விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நடவடிக்கைகள் தான் தொழிலாளர்கள் இரண்டாம் முறையாக அக்டோபர் 28 அன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதற்குக் காரணமாகியது.
ஆலை பூட்டப்பட்டதையும் ஏராளமான தொழிலாளர்கள் இடைநீக்கம் மற்றும் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதையும் எதிர்த்து ஸ்ராலினிச சிஐடியு BYD நிர்வாகத்திற்கு சட்டரீதியாக ஒரு தாக்கீதை அனுப்பியிருக்கிறது. அதில் எந்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் மொழியப்படவில்லை, அதற்குக் காரணமாய் ஒரு தகவல் சொல்கிறது, சிஐடியு தலைவர்கள் “பாக்ஸ்கான் தொழிலாளர்களின் வேலைநிறுத்த பிரச்சினையை தீர்ப்பதில் பிசியாக இருக்கிறார்கள்” என்று.
ஒரகடத்தில் இருந்து 8 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் சுமார் 7,000 தொழிலாளர்கள் செப்டம்பர் 21 முதல் வேலைநிறுத்தத்தில் இருக்கின்றனர். BYD தொழிலாளர்களைப் போலவே இத்தொழிலாளர்களும் திமுக அரசாங்கத்தின் உத்தரவுகளின் பேரில் போலிசால் அச்சுறுத்தப்பட்டும் வசைபாடப்பட்டுமான நிலையில் இருக்கின்றனர். அரசாங்கமோ தங்களால் மலிவு உழைப்புத் தொழிலாளர்களை வழங்க முடியும் என்பதை முதலீட்டாளர்களுக்கு விளங்கப்படுத்தும் கவலையில் இருக்கிறது.
ஆனால் ஸ்ராலினிஸ்டுகளுக்கோ இந்த போர்க்குணமிக்க போராட்டங்களை ஒன்றுபடுத்துவதான எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நிலையில் உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவை ஒரு வியர்வைப் பட்டறையாக மாற்றும் நோக்கத்துடனான முதலாளித்துவத்தின் பாதைக்கு எதிராக அப்போராட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தாக்குதலுக்கான ஈட்டிமுனையாக ஆக்குவதைப் பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்கவும் அவசியமில்லை.
அதற்குப் பதிலாய் சிபிஎம் கட்சியோ பல்வேறு வலதுசாரி முதலாளித்துவ கட்சிகளுடன் தனது பிற்போக்கான பரவலாய் அவநம்பிக்கை பெற்ற தந்திரங்களையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. வருகின்ற 2011 மாநில சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பரம தேர்தல் எதிரியான அஇஅதிமுக கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் நம்பிக்கையுடன் அக்கட்சியை ”மக்கள் பிரச்சினைகளில்” ”சேர்ந்து போராடுவதற்கு” சிபிஎம் சமீபத்தில் அணுகியது. அஇஅதிமுக சென்ற முறை அதிகாரத்தில் இருந்தபோது, பத்தாயிரக்கணக்கான அரசு ஊழியர்களை அவர்கள் ஊதிய உயர்வும் பிற சலுகைகளும் கேட்டு வேலைநிறுத்தம் செய்ததை அடுத்து பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரத் தொடக்கத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் BYD தொழிலாளர்களுடன் பேசினர். நிர்வாகத்திற்குப் பயந்து தங்களது முழுப் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அத்தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரியபோது அவர்களை அவமதிக்க நிர்வாகம் முயன்றதாய் பாண்டிராஜ் கூறினார்: “எங்களுக்கு மாதம் 4,000 ரூபாய் (சுமார் 90 அமெரிக்க டாலர்) ஊதியமாக வழங்கப்படுகிறது. சாப்பாடும் கொடுக்கப்படுகிறது, ஆனால் அது மிக மட்டரகமாக இருக்கும். எங்களுக்கு நிறுவன உணவகத்தில் வழங்கப்படும் உணவு பிடிப்பதில்லை என்றாலும் எங்களுக்கு அதைச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழி இல்லை. நாங்கள் ஊதியத்தை உயர்த்தக் கோரியபோது, ’வீட்டில் இருந்தால் மூன்று வேளையும் கூட நீ சாப்பிட்டிருக்க முடியாது. இங்கே மூன்று வேளை சாப்பாடும் போட்டு 4,000 ரூபாய் சம்பளமும் கொடுக்கிறோம். உனக்கு இப்போது கொடுப்பதே ரொம்பவும் அதிகம்’ என்று நிர்வாகம் கூறி விட்டது.”
23 வயதான மணி பின்வருமாறு கூறினார்: “நிறுவன வாகனத்தில் எங்களில் பலரும் வெகுதூரத்தில் இருந்து கிராமப் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுகிறோம். எனக்கு போக வர பயணத்திலேயே ஐந்து மணி நேரம் போய் விடுகிறது.
“எங்களது 12 மணி நேர ஷிப்டு வேலைக்கு, இரண்டு மணி நேரத்திற்கான ஓவர்டைம் தொகை மட்டுமே தரப்படுகிறது, எஞ்சிய இரண்டு மணி நேர கூடுதல் வேலைக்கு எதுவும் தரப்படுவதில்லை. உணவுக்கும் போக்குவரத்து கட்டணத்திற்கும் அதனைப் பிடித்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் அதுகுறித்து எங்களுக்கு எதுவும் சொல்லப்படுவதில்லை. சேமநல நிதி (PF) மற்றும் மருத்துவ நிதிக்கும் (ESI) எங்களது சம்பளத்தில் இருந்து பிடிக்கிறார்கள், ஆனால் இந்த பிடித்தங்கள் எல்லாம் எங்களது சம்பளப் பட்டியலில் தெரிவிக்கப்படுவதே இல்லை.
”வேலைக்கு வரவில்லை என்றால் வேலை போய் விடும் என்று வீட்டில் அச்சுறுத்துவதற்காக நிர்வாகம் தனது ஆட்களை தொழிலாளிகளின் வீடுகளுக்கு அனுப்புகிறது. நிர்வாக நெருக்குதலில் பெரும் மன உளைச்சலுற்று பிரேம்குமார் என்னும் தொழிலாளர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார். பிரேம்குமாருக்கு இழப்பீடாக குறைந்தபட்சம் 50,000 ரூபாயாவது வழங்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அத்துடன் பெண் தொழிலாளர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் நாங்கள் கண்டிக்கிறோம். அத்துடன் தொழிலாளர்களை பீதியுறச் செய்வதற்காக போலிசை பயன்படுத்துவதையும் நாங்கள் எதிர்க்கிறோம்.”
வெங்கடபுரம் கிராமத்தில் இருந்து வரும் நவீன் கூறினார்: “வேலைக்கு போகவர எனக்கு ஒருநாளைக்கு ஐந்து மணி நேரம் ஆகி விடுகிறது. என்னுடைய 4,000 மாத வருவாயைக் கொண்டு தான் எனது இரண்டு தம்பிகள் மற்றும் எனது அம்மாவை நான் பார்த்துக் கொள்ள வேண்டும். என் அம்மா சொற்பமான ஊதியத்திற்கு சின்ன சின்ன வேலைகளுக்கு செல்கிறார்.”
ஒரு இளம் பெண் தொழிலாளியான சூரியாதேவி உலக சோலிச வலைத் தளத்திடம் பேசுகையில் கூறினார்: “எங்களுக்கு நிறுவன உணவகத்தில் முறையான உணவு கிடைப்பதில்லை. அதுவும் ஒப்பந்ததாரர்களால் தான் நடத்தப்படுகிறது. வேலை செய்யும்போது நிர்வாகத்தினர் நீர் வரத்தையும் துண்டித்து விடுவார்கள், அதனால் எங்களால் கழிப்பறையைக் கூட பயன்படுத்த முடியாது. மாற்று உணவக வசதியும் இல்லை. தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பச் செய்வதற்காக இவை அனைத்தையுமே திட்டமிட்டு நிறுத்தி விட்டார்கள். இப்போது நிறுவனமும் மூடப்பட்டு நாங்கள் கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டிருக்கிறோம்.”
|