சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government’s bogus inquiry into the civil war

உள்நாட்டு யுத்தம் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் போலி விசாரணை

By K. Ratnayake
1 September 2010

Use this version to print | Send feedback

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனணக்குழு, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான “யுத்த நிறுத்த உடன்படிக்கையின் தோல்விக்கான” காரணங்கள், அதைத்தொடர்ந்த புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தம் மற்றும் “தேசிய நல்லிணக்கத்துக்கான” பிரேரணைகள் பற்றிய அதன் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஒரு விசாரணையை கோரும் சர்வதேச அழுத்தங்களை தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ இந்த ஆணைக்குழுவை ஸ்தாபித்தார். 2009 மே மாதம் புலிகளின் தோல்வியை நெருங்கிய கடைசி நாட்களில், இலங்கை இராணுவம் ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களை கொன்றது. இந்த ஆணைக்குழுவின் முதலாவது அமர்வே, அதன் குறிக்கோள் அரசாங்கத்தின் வகிபாகத்தை பூசி மெழுகுவதும் அவர்களின் குற்றங்களை மூடிமறைப்பதுமேயாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஆணைக்குழு அதன் அமர்வை ஆகஸ்ட் 11 அன்று கொழும்பில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 25 ஆண்டுகால மோதல் அதிகளவில் இடம்பெற்ற தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் அமர்வுகள் இடம்பெறவிருந்தன. வடக்கில், கிளிநொச்சியில் விசாரணைகள் இடம்பெறவிருந்தன. கிளிநொச்சியானது 2008ல் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் புலிகளின் நிர்வாக மையமாக இருந்தது.

இந்த ஆணைக்குழு சுயாதீனமானது அல்ல. எட்டுபேர் அடங்கிய இந்தக் குழுவை தலைமை தாங்கும் சி.ஆர். டி சில்வா, மனித உரிமை மீறல்கள் விடயத்தில் அரசாங்கத்தை பாதுகாப்பதில் சாதனை படைத்த முன்னாள் சட்ட மா அதிபராவார். உதாரணமாக, ஆணைக்குழுவின் விசாரணையை மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்ட சர்வதேச அனுபவசாலிகளின் குழு, இந்த விசாரணைகளின் சுயாதீனத்தையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கிய போது டி சில்வா அதை எதிர்த்தார்.

பொது மக்களை படுகொலை செய்தமை தொடர்பாக இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட 16 சம்பவங்களை விசாரிப்பதற்காக 2006 நவம்பரில் இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களில், 2006 ஆகஸ்டில் பட்டிணிக்கு எதிரான இயக்கத்தின் 17 தொண்டு ஊழியர்களை மரணதண்டனை முறையில் கொலை செய்தமை ஒரு குறிப்பிடத்தக்க இழிபுகழ்பெற்ற சம்பவமாகும். விசாரணை ஆணைக்குழு எந்தவொரு அறிக்கையையும் அல்லது கண்டுபிடிப்புக்களையும் வெளியிடாமல் கடந்த ஆண்டே விசாரணை ஆணைக்குழுவை இராஜபக்ஷ கலைத்துவிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்னொரு உறுப்பினரான எச்.எம்.ஜி.எஸ். பளிஹகார 2006 கடைசி வரை ஐ.நா. தூதராக இருந்தவர். அவர் சர்வதேச சபைகளில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசாங்கத்தை உறுதியுடன் பாதுகாத்தார். முன்னாள் உயர்மட்ட அரச அதிகாரத்துவவாதிகளும், ஒரு முன்னாள் நீதிபதியும் மற்றும் ஒரு கல்விமானும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். இவர்களில் எவரும் ஜனநாயக உரிமைகளை காப்பதில் எதாவதொரு சாதனை படைத்தவர்களோ அல்லது அரசாங்கத்துக்கு எதிராக நின்றவர்களோ அல்ல.

ஆணைக்குழுவின் பக்கச்சார்பான பண்பை டி சில்வாவின் ஆரம்ப கருத்துக்கள் வெளிப்படுத்தின. “ஒரு ஆண்டுக்கு முன்னர் பெற்ற வெற்றியை பலப்படுத்தி தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இப்போது நேரம் வந்துள்ளது,” என அவர் கூறினார். இராணுவத்தின் “வெற்றியானது” வடக்கு மற்றும் கிழக்கில் நிரந்தர ஆக்கிரமிப்பை பலப்படுத்தவும் தீவின் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்யவும் மட்டுமே வழிவகுத்துள்ளது –இது நல்லிணக்கத்துக்கான அடித்தளம் ஆகாது.

இந்த ஆணைக்குழுவின் குறிக்கோள் –இராஜபக்ஷ அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது- சாட்சிகளை அது அணுகும் முறையிலிருந்து தெளிவாகியுள்ளது. 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை புலிகளை பலப்படுத்தி, நாட்டை ஆபத்தில் தள்ளியதோடு யுத்தத்தை மீண்டும் தொடங்குவதைத் தவிர வேறு மாற்றிடு இராஜபக்ஷவுக்கு இருக்கவில்லை என நிரூபிப்பதற்காக, ஆகஸ்ட் 18 அன்று சாட்சியமளித்த ஓய்வுபெற்ற பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடம் துருவித்துருவி விசாரிக்கப்பட்டது.

இப்போது எதிர்க் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த பெர்ணான்டோவே புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். விசாரணையின் போது, “அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக இராணுவத்திடம் தக்க ஆலோசனைகள் பெறப்படவில்லை” என பெர்ணான்டோ கூறினார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை புலிகளுக்கு வாய்ப்பான விதத்தில் அவர்களை கலந்தாலோசித்தே நோர்வே அனுசரணையாளர்களால் வரையப்பட்டது என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தாரா என அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

ஒரு விருப்பமற்ற உடன்படிக்கைக்காக நோர்வேஜியர்களையும் புலிகளையும் குற்றஞ்சாட்ட முயற்சிப்பது வரலாற்றை தலைகீழாக நிறுத்துவதாகும். பல காரணிகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட யூ.என்.பி. அரசாங்கத்தை நெருக்கின. 2000ம் ஆண்டில் புலிகளிடம் ஏற்பட்ட தொடர்ச்சியான அழிவுகரமான தோல்விகள், மீண்டும் ஆயுதபாணியாவதற்கு அரசாங்கம் முயற்சித்தபோது ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் இறுதியில் அமெரிக்காவில் செப்டெம்பர் 11 நடந்த தாக்குதல் போன்றவை அவற்றில் அடங்கும். ஆளும் வர்க்கத்தின் சில பகுதியினர், புஷ் நிர்வாகத்தின் “பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை” புலிகளை தமது நிபந்தனைகளின் கீழ் பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ளுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக கண்டன.

புலிகளுக்கு பக்கச்சார்பானதாக இருப்பதற்கு மாறாக, சமாதானப் பேச்சுக்களின் ஆரம்பத்தில் புலிகள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தனியான முதலாளித்துவ அரசுக்கான தமது கோரிக்கையை கைவிடத் தள்ளப்பட்டனர். எந்தவொரு இறுதி அரசியல் தீர்வு காணப்படுவதற்கும் முன்னதாக புலிகள் வன்முறைகளையும் கைவிட்டு நிராயுதபாணிகளாக வேண்டும் என அமெரிக்க மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் யூ.என்.பி. அரசாங்கம் கோரியது. சமாதானப் பேச்சுக்களில் எந்தவொரு கருப்பொருளும் கலந்துரையாடப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்தும் கோரிக்கைகளே இவை.

எவ்வாறெனினும், ஆரம்பத்தில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட சிங்கள அதி தீவிரவாத குழுக்கள் யுத்த நிறுத்தத்தை கண்டனம் செய்தன. அதை கசப்புடன் எதிர்த்த இராணுவமும், பல தடவைகள் புலிகளின் விநியோகக் கப்பல்களை ஆத்திரமூட்டும் வகையில் தடுத்ததோடு ஒன்றை சர்வதேச கடலில் மூழ்கடித்தது. அதே சமயம், 2000ம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்ட இராணுவமும், மீண்டும் ஆயுதபாணியாவதற்கும் மேலும் வசதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கும் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக்கொண்டது.

2003 கடைப்பகுதியில், மீண்டும் தொடங்கப்பட்ட பேச்சுக்களுக்கான அடிப்படையாக அரசியல் தீர்வு ஒன்றை அரசாங்கத்துக்கு புலிகள் முன்வைத்த போது விவகாரம் தலைக்கு வந்தது. யூ.என்.பி. நாட்டை காட்டிக்கொடுப்பதாக தெரிவித்த ஜே.வி.பி. யின் கண்டனங்களுக்கு மத்தியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சு உட்பட பிரதான மூன்று அமைச்சுக்களை அபகரித்துக்கொண்டார். 2004ல் அவர் அரசாங்கத்தை பதவி விலக்கியதோடு தேர்தலொன்றையும் நடத்தினார். அதில் ஜே.வி.பி. உடனான ஸ்ரீ.ல.சு.க. கூட்டணி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமாரகக் கொண்டு அமைந்தது.

2005 நவம்பரில், பொய்யை அடிப்படையாக வைத்து இராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றார். அவர் தன்னை ஒரு சமாதான மனிதன் எனக் கூறிக்கொண்டாலும், யுத்தத்துக்கான தயாரிப்பாக, யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் எழுதக் கோரிய ஜே.வி.பி. உடன் அமைத்துக்கொண்ட கூட்டணியில் தங்கியிருந்தார். தொடர்ச்சியாக நடந்த புலி ஆதரவாளர்களின் படுகொலகளின் மத்தியில், அமெரிக்காவினதும் மற்றும் நோர்வேஜியர்கள் உட்பட “சமாதான முன்னெடுப்பின்” சர்வதேச ஆதரவாளர்களினதும் மௌனமான ஆதரவுடன், யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி 2006 நடுப்பகுதியில் இராஜபக்ஷ மீண்டும் யுத்தத்தை தொடங்கினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவராக கூறப்பட்ட ஜனாதிபதியின் சகோதரர் கோடாபய இராஜபக்ஷவிடமும் பாதுகாப்புச் செயலாளர் என்ற முறையில் ஆணைக்குழு சாட்சிகளைப் பதிவு செய்தது. மனித உரிமை அமைப்புக்களால் அறிவிக்கப்பட்ட பொது மக்கள் உயிரிழப்புக்கள் சம்பந்தப்பட்ட எண்ணிலடங்கா சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்குப் பதிலாக, அந்த கேள்விகள் நண்பர்களுக்கு இடையிலான ஒரு அரட்டையாகவே அதிகளவில் காணப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளரை அவரது பொய்கள் பற்றி எவரும் சவால் செய்யவில்லை: யுத்தம் “தமிழர்களை விடுவிப்பதற்கான” “மனிதாபிமான நடவடிக்கை”; “ஒரு பொதுமகனும் உயிரிழக்கக் கூடாது” என்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது; “பொதுமக்கள் உயிரிழப்பை குறைப்பதற்காக” இராணுவம் நடவடிக்கை எடுத்தது; உணவு மற்றும் மருந்துகளை கொடுக்க தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது போன்றவை அவற்றில் அடங்கும்.

ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்களும் இராஜபக்ஷவை முன்நிலைப்படுத்த உதவினர். உதாரணமாக, தம்மை கண்னிவெடிகள் உள்ள பகுதிகள் ஊடாக இராணுவத்தினர் வழிநடத்தியதாக சரணணடைந்த புலி உறுப்பினர்கள் தெரிவித்ததை டி சில்வா குறிப்பிட்டார். “மக்களை வழிநடத்துமாறு நீங்கள் இராணுவத்துக்கு கட்டளையிட்டீர்களா?” என அவர் கேட்டார். “உண்மையில் அந்த ஆவணத்தில் பாதுகாப்பான பகுதியை வழங்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தது. தவறியேனும் அவர்கள் தாக்கப்படாமல் பார்த்துக்கொள்ளவே அந்த கட்டளை” என இராஜபக்ஷ பதிலளித்தார்.

2009 மே மாதம் வெள்ளைக்கொடியுடன் சரண்டைய வந்த புலிகளின் மூன்று உயர்மட்ட தலைவர்களை கொலைசெய்ய இராஜபக்ஷ கட்டளையிட்டதாக பிரிட்டிஷ் பத்திரிகை வெளியிட்ட செய்திகளின் வெளிச்சத்தில் இந்த உரையாடல் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தச் செய்தியை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியமை, கோடாபாய இராஜபக்ஷவிடம் இருந்து கசப்பான கண்டனங்களை தூண்டிவிட்டது. “வெள்ளைக்கொடி” விவகாரம் என்று சொல்லப்படுவது பற்றியோ அல்லது பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்ட ஏனைய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் பற்றியோ அவரிடம் டி சில்வா கேள்வி கேட்கவில்லை.

ஆகஸ்ட் 26 அன்று, ஐ.நா. வில் முன்னாள் இலங்கை அலுவலர் ஜயந்த தனபாதவை சாட்சியமளிக்க அழைத்ததில் இருந்து ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான அரசாங்கத்தின் போக்கு கோடிட்டுக் காட்டப்பட்டது. “சர்வதேச சமூகம்” “அரச-சார்பற்ற செயற்பாட்டாளர்களின் தலைமையிலான பயங்கரவாதத்துடன் போராடும் ஆயுதப் படைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க புதிய நிபந்தனைகொண்ட உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆயுதப் படைகள் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுக்கும் போது அவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தக்கூடாது,” என அவர் வேண்டுகோள் விடுத்தார். தனபால சொல்வது என்னவெனில், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல்” என்ற பெயரில் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான ஜெனீவா உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட வேண்டும் என்பதேயாகும்.

இது, குறிப்பாக அமெரிக்காவை இலக்காகக் கொண்ட வேண்டுகோளாகும். வாஷிங்டனும் அதன் பங்காளிகளும், மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கையை குற்றஞ்சாட்டும் அதே வேளை, அவர்கள் ஆப்கானிஸ்தானில் அதையே மேற்கொள்கின்றனர் என கொழும்பு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனம் கசப்புடன் முறைப்பாடு செய்துள்ளது. நிச்சயமாக அமெரிக்காவின் விமர்சனங்கள் பாசாங்குத்தனமானதாக இருந்தாலும், அவர்களது குறிக்கோள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதும் கொழும்பில் சீன செல்வாக்கு அதிகரித்து வருவதை கீழறுப்பதுமே அன்றி, இலங்கை யுத்தக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குவது அல்ல.

இந்த விசாரணைகள் எந்தவிதத்திலும் சாட்டப்படும் யுத்தக் குற்றங்கள் பற்றி விசாரிப்பதை உள்ளடக்கியிருக்கவில்லை. மாறாக, அவற்றை மூடி மறைப்பதை இலக்காக கொண்டது. 2009 ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையிலான யுத்தத்தின் இறுதி மாதங்களில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய பிரதேசத்துக்குள் இராணுவம் குண்டுத்தாக்குதல்கள் நடத்தியதில் 7,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. சர்வதேச நெருக்கடி குழுவின் இந்த ஆண்டு அறிக்கையொன்று, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 30,000 க்கும் 75,000 க்கும் இடைப்பட்டது என தெரிவித்துள்ளதோடு ஆஸ்பத்திரிகள் மற்றும் உதவி நிலையங்கள் மீது வேண்டுமென்றே குண்டு வீசியதாக இலங்கை இராணுவத்தையும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவம் எந்தவொரு பொதுமகனையும் கொல்லவில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் வழியில், இந்த ஆணைக்குழு இன்னமும் அத்தகைய அட்டூழியங்கள் பற்றிய சாட்சியங்களை பெறவில்லை.