WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை ட்ரொட்ஸ்கியவாதியின் மரணத்துக்கு சர்வதேச அனுதாபங்கள்
By our correspoondents
14 September 2010
Use
this version to print | Send
feedback
உலக ட்ரொட்ஸ்கிஸ இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்தலுகக் குழுவின் பிரிட்டிஷ், ஜேர்மன் மற்றும் கனேடிய பகுதிகளில் இருந்து பியசீலி விஜேகுணசிங்கவின் உயிரிழப்பை முன்னிட்டு இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (சோ.ச.க.) அவரது கனவரும் சோ.ச.க. பொதுச் செயலாளருமான விஜே டயஸுக்கும் அனுதாபச் செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. செப்டெம்பர் 6 அன்று தோழி பியசீலியின் மரணச் சடங்கின் போது வாசிக்கப்பட்ட அந்தச் செய்திகள் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் கிரிஸ் மார்ஸ்டன்
அன்பின் தோழர்கள்,
இங்கு பிரித்தானியாவில் உள்ள நாம் அனைவரும், உங்களைப் பற்றி, எல்லாவற்றுக்கும் மேலாக அத்தகைய பெரும் இழப்பின் துன்பத்தை அனுபவித்துக்கொண்டுள்ள விஜே அவர்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றோம்.
சுகயீனம் பியசீலியை விரைவில் உயிரிழக்கச் செய்திருந்தாலும், அவரது வாழ்க்கை செல்வாக்கானது மற்றும் அவர் தனது வாழ்க்கையை சோசலிசத்துக்கான காரணங்களை அபிவிருத்தி செய்வதில் செலவிட்டிருந்தார். ஒரு மார்க்ஸிய கலை இலக்கியவாதி என்ற முறையில் அவரது சொந்த படைப்புக்களும், ஏனையவர்களது படைப்புக்களில் இருந்து அவர் சிங்களத்துக்கு செய்திருந்த மொழிபெயர்ப்புகளும் புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பகுதியினருக்கு கல்வியூட்டுவதில் பெரும் வகிபாகம் ஆற்றியுள்ளது. அவர் உயிரிழந்திருந்தாலும் அவை தனது வேலையை செய்யும்.
மென்மையான குரல்கள் இறக்கும் போது, இசை,
நினைவுகளில் அதிர்வுறும்-
அழகான வைலட் மலர்கள் வாடும் போது நறுமணம் வீசும்,
அந்தச் சூழலில் அது வாழும்.
என்று ஷெல்லி எழுதினார். அத்தகைய ஆயிரக்கணக்கான தனிப்பட்ட நினைவுகளால் விஜேக்காகவும் அவரது மகன் கீர்த்தி, குடும்பம் மற்றும் நன்பர்களுக்காகவும் பியசீலி வாழ்வார். ஆனால் சிலரின் அறிவார்ந்த மற்றும் அரசியல் பணிகள் – பியசீலி விட்டுச் சென்ற மரபுரிமைகள்—அத்தகைய சிறிய நினைவுகளையும் தாண்டி நீடித்து வாழும்.
பிரிட்டனில் உள்ள எங்களுக்கு பியசீலியைப் பற்றி தெரியாது. இது எங்களுக்கும் ஒரு இழப்பே. ஆனால் எங்களுக்கு தோழர் விஜேயைத் தெரியும், அவரை மெச்சுகிறோம், மதிக்கிறோம் மற்றும் அவருடன் சோகத்தில் ஆழ்ந்துள்ளோம்.
ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் சார்பில் உலி ரிப்பர்ட் மற்றும் பீட்டர் சுவாட்ஸ்
அன்பின் விஜே,
அன்பின் சோ.ச.க. உறுப்பினர்களே,
உங்களது துணைவி பியசீலியின் திடீர் மரணத்தைப் பற்றி திகைப்புடனும் பெரும் கவலையுடனும் இப்பொழுதுதான் தெரிந்துகொண்டோம். நீண்டகால உறுப்பினரும் எமது இயக்கத்தின் சோசலிச முன்நோக்கின் விசுவாசமான ஆதரவாளருமான பியசீலியின் மரணமானது எமது அனைத்துலகக் கட்சியை திகைப்படையச் செய்துள்ளது.
தோழர் விஜே மற்றும் உங்களது குடும்பத்துக்கும் எங்களது அனுதாபங்களும் ஆதரவும் உரித்தாகட்டும். நீங்கள் ஒரு முக்கியமான இன்றியமையாத துணைவியை மட்டுமன்றி, உங்களது அன்புக்குரிய நீண்டகால பங்காளியையும் மற்றும் பல தசாப்தங்களாக உங்களுடன் உறுதியுடன் நின்ற உங்களது மகனின் தாயாரையும் இழந்துள்ளீர்கள். நாம் உங்களது துன்பத்தில் பங்கெடுத்துக்கொள்வதோடு இந்த சிரம்மான நேரத்தில் எமது சினேகிதத்தையும் பாசத்தையும் உறுதிப்படுத்துகிறோம்.
உங்களது துணைவியார் பியசீலி, லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் விளைவுகளில் இருந்து தேவையான பாடங்களை வெளிக்கொணர்ந்த மற்றும் உண்மையான ட்ரொட்ஸ்கியத்தின் கொள்கைகளை பாதுகாத்த ஒரு பரம்பரையின் மிகச் சிறந்தவராக இருந்தார். அவர் தனது நூல்கள், மொழிபெயர்ப்புகள் மற்றும் கட்டுரைகளின் ஊடாக ஒரு புதிய பரம்பரைக்கு மார்க்சியத்தை கற்பிப்பதிலும் அதில் பயிற்றுவிப்பதிலும் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகித்தார்.
அவரது அகால மரணம் பெரும் வருத்தத்துக்கு காரணமாக இருக்கும் அதே வேளை, அவரது வாழ்வு ஒரு உதாரணமாக இருப்பதுடன் பல இளம் தோழர்களை தொடர்ந்தும் ஈர்க்கும். நாம் எமது அனைத்துலக கட்சியில் பியசீலியின் நினைவுகளை உறுதியாக வைத்திருப்போம். அவர் எமது மீள் திரட்டல்களில் தொடர்ந்தும் உயிர்வாழ்வார்.
தோழர் விஜே, பெரும் கவலைக்குரிய அனுதாபம் நிறைந்த இந்த நாளில், உங்களுக்கு நாம் எமது ஆழமான அனுதாபங்களையும் அஞ்சலியையும் தோழமையையும் வெளிப்படுத்துகின்றோம்.
கீத் ஜோன்ஸ், (கனடா) சோ.ச.க. தேசியச் செயலாளர்
அன்பின் விஜே, கீர்த்தி மற்றும் ஏனைய தோழர்கள், உறவினர்கள் மற்றும் பியசீலியின் நண்பர்களுக்கு,
(கனடா) சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சார்பில், நான் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு தோழி பியசீலியின் வாழ்க்கை மற்றும் போராட்டத்துக்கு புகழாரம் சூட்டுவதில் உங்களுடன் இணைந்துகொள்கிறேன்.
உங்களைப் போலவே நானும் அவரது அகால மரணத்தையிட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
சில சமயங்களிலேயே பியசீலியுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஆனால் அவரது ஆர்வம் மிக்க பரந்த அரசியல் மற்றும் கலாச்சார அறிவாலும் சோசலிச கொள்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பாலும் நான் திகைத்துப் போனேன்.
மிகவும் முக்கியமாக, இலங்கை சோ.ச.க. இயிலும் மற்றும் அனைத்துலக ரீதியில் அவரைத் தெரிந்த தோழர்கள் மத்தியிலும் அவருக்கு இருந்த நன்மதிப்பை நான் அறிந்திருந்தேன். நிச்சயமாக, கட்சியின் பொதுச் செயலாளரின் துணைவியார் என்ற முறையில் கட்சிக்குள் அவருக்கு இருந்த நல்ல அபிப்பிராயம் அவரது தனிப்பட்ட உறவினால் வந்ததல்ல மாறாக, குறிப்பாக அவரது யுகத்தில் இலக்கிய மற்றும் கலாச்சார பிரச்சினைகளில் அவருக்கு இருந்த அறிவு மற்றும் அனுபவத்தால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் அவரது ஆற்றிய வகிபாகத்தாலும் கட்சியின் தலைவர் அவரது வலதுபக்கத்தில் இருந்ததாலுமே வந்தது.
பப்லோவாத அகிலத்தின் உதவியுடன் உடந்தையுடன் லங்கா சமசமாஜக் கட்சி செய்த காட்டிக்கொடுப்பு பெரும் அரசியல் குழப்பத்தை உருவாக்கிவிட்டிருந்த நிலைமையின் கீழ், அரசியல் கொள்கைகளைக் காப்பதற்கான கடினமான போராட்டத்தை முன்னெடுத்த இளம் தோழர்களுடன் பியசீலியும் பங்கெடுத்திருந்தார்.
புரட்சிக் கம்யூனிட்டுக் கழகத்தை (பு.க.க.) ஸ்தாபித்த தோழர்கள், ல.ச.ச.க. நிரநதரப் புரட்சியைக் கைவிட்டதையும் பாராளுமன்றவாத மற்றும் தொழிற்சங்கவாத சந்தர்ப்பவாதத்தையும் பிற்போக்கு சிங்கள மக்கள்சார் வாதத்தையும் அனைத்துக்கொண்டதை கண்டனம் செய்வதோடு தம்மை மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. கிரேம்ளின் அதிகாரத்துவம் மற்றும் அதன் ஆதரவாளர்களான கம்யூனிஸ்ட் கட்சிகளதும் காட்டிக்கொடுப்பினால் மட்டுமே சாத்தியமான, யுத்தத்துக்குப் பிந்திய முதலாளித்துவத்தின் மறு ஒழுங்கின் பாகமாக, ஏகாதிபத்தியத்துக்கும் பல்வேறு எதிர் தேசிய முதலாளித்துவங்களுக்கும் இடையில் தெற்காசியாவில் ஸ்தாபிக்கப்பட்ட பிற்போக்கு தேசிய-அரச முறைமைக்கு ல.ச.ச.க. அடிபணிந்ததால், அதன் காட்டிக்கொடுப்பின் அனைத்துலக முக்கியத்துவத்தையும் அரசியல் வேர்களையும் புரிந்துகொள்ளவும் மற்றும் தெளிவுபடுத்தவும் அவர்கள் போராடினார்கள்.
1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்ததோடு ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பால் தலையெடுத்த சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியவாத விடுதலைப் புலிகள் போன்ற குட்டி முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக புரட்சிகர பாட்டாளிவர்க்க அனைத்துலகவாதத்துக்காகவும் போராடிய இளைஞர்கள் இனிமேலும் இளைஞர்களாக இல்லை என்பதையே பியசீலியின் அகால மரணம் கடுமையாக நினைவூட்டுகிறது.
இந்தப் பரம்பரை இன்னமும் அதன் போராட்டத்தை நிறுத்தவில்லை. அவர்களுக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பங்களிப்புடன் அவர்களால் பயிற்றப்பட்ட காரியாளர்களுக்கும், ட்ரொட்ஸ்கிஸத்துக்கான அரசியல் எதிர்ப்புப் போராட்டத்தை தெற்காசியா பூராவும் நடத்தி, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் அல்லது பி.எல்.பீ.ஐ. யின் அரசியல் வாக்குறுதிகளையும் தூரநோக்குடைய முன்நோக்கையும் இட்டு நிரப்புவதற்கான சந்தர்ப்பம் இப்போது உள்ளது.
ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பின் விளைவுகள் இந்தியாவில் ஸ்டாலினிஸத்தை பலப்படுத்துவதற்கு செய்த உதவி கொஞ்சநஞ்சமல்ல. வர்க்க எதிரியின் வழியில் ல.ச.ச.க. சென்றதன் மறுபக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் எண்ணிலடங்கா நெருக்கடி காணப்பட்டது. அது இந்திய முதலாளித்துவத்தின் காங்கிரஸ் கட்சியுடனான அதன் அடிமைக் கூட்டுடன் தலைநீட்டியது. இதன் மூலம் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (மார்க்சிஸ்ட்) பின்னர் நக்ஸலைட்டுக்களுக்கும் சீ.பி.ஐ. க்கு ஒரு மாற்றீட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதாக காட்டிக்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதிலும் சி.பி.ஐ. மட்டுமன்றி அதில் இருந்து பிரிந்து சென்ற குழுக்களும், ட்ரொட்ஸ்கிஸ்டுகளை இரத்தக்களரியில் நசுக்குவதன் ஊடாக இரண்டு கட்ட புரட்சி என்ற முழு ஸ்டாலினிஸ மரபை ஆதரித்தன.
இன்று இந்தியாவில் உள்ள ஸ்டாலினிஸ்டுகள், உச்சகட்ட சீரழிவில் உள்ளனர். சி.பி.எம். சீனாவை சோசலிச நாடாக பாராட்டுவதோடு, சொல்வதற்கு ஒன்றுமே இல்லாத நிலையில் “சோசலிசம் என்பது மிகத் தொலைவில் உள்ளது” என்பதற்கான ஆதாரம் என சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டுமளவுக்கு அரசியல் ரீதியில் கந்தலாகிப் போய் உள்ளது. மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் அரசாங்கத்தை ஆளும் இடது முன்னணி, மாநில மற்றும் தேசிய ரீதியில் இந்திய முதலாளித்துவத்தின் சந்தை சார்பு வேலைத்திட்டத்தை ஆதரிப்பதன் ஊடாக தமது தொழிலாள வர்க்க மற்றும் வறிய உழைப்பாளி ஆதரவாளர்களிடம் இருந்து தனிமைப்பட்டு, தேர்தல் தோல்வியை சந்திக்கின்றது. அதே சமயம், விவசாயிகளை மற்றும் பழங்குடிகளை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால கொரில்லா யுத்தம் என்ற நக்ஸலைட்டுக்களின் முன்நோக்கு ஒரு பிற்போக்கு முட்டுச் சந்து என்பதை அடையாளங்கண்டுகொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. நக்ஸல்களின் முன்நோக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் முடமாக்குவதோடு பழங்குடியினரையும் ஏனைய ஒடுக்கப்பட்ட தட்டினரையும் பாட்டாளிகளிடம் இருந்து தனிமைப்படுத்துகின்றது. மாவோவாதிகளின் ஆயுதப் போராட்டம் இந்திய முதலாளித்துவ பிரதிநிதிகளுடனான அவர்களது முழு சந்தர்ப்பவாத சூழ்ச்சித்திட்டங்களுக்கு துணைபோகின்றது. இந்தக் கூட்டணிகளை அவர்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான தேசிய ஜனநாயக, அதாவது முதலாளித்துவப் புரட்சியின் ஒரு பாகம் என்ற கொடூரமான ஸ்டாலினிஸ பதங்களில் நியாயப்படுத்துகின்றனர்.
தெற்காசியாவில் ட்ரொட்ஸ்கிஸத்துக்கான போராட்டத்தின் பாகமாக தோழி பியசீலியின் எழுத்துக்களில் சில ஆங்கிலத்துக்கும் மற்றும் மிகவும் பழக்கமான இந்திய மொழியொன்றுக்கும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன். இது சமகால ஸ்டாலினிஸ கட்சிகளின் பிற்போக்கு அரசியலை அம்பலப்படுத்துவதோடு சி.பி.ஐ. யின் அரசியல் பதிவுகள் மற்றும் பாரம்பரியங்களை பற்றிய ஒரு விமர்சனத்தையும் தொழிலாள வர்க்கத்தின் முன்னிலையில் கொண்டுவருவதற்கு மட்டுமன்றி, சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை அபகரித்துக்கொண்ட அதிகாரத்துவ வர்க்கத்துக்கும் மார்க்சிஸம் பற்றிய ஸ்டாலினிச திரிபுபடுத்தல்களுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கி, இடதுசாரி எதிர்ப்பு இயக்கம் மற்றும் நான்காம் அகிலமும் முன்னெடுத்த போராட்டத்தின் முழு மரபுரிமையையும் ஒன்றுதிரட்டுவதாக இருக்கும்.
உலக சோசலிசப் புரட்சி மூலோபாயத்தின் கோட்பாட்டு பிணைப்பாக நிரந்தரப் புரட்சி வேலைத் திட்டத்துக்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் சோசலிச சமத்துவக் கட்சியும் முன்னெடுத்த போராட்டங்களின் படிப்பினைகளை இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேஷ் மற்றும் ஒட்டுமொத்த ஆசிய தொழிலாளர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் வழங்குவது இந்தப் போராட்டத்தின் முக்கிய பகுதியாக இருக்கும். இலங்கை அரசின் மூர்க்கத்தனங்களுக்கு எதிராக மட்டுமன்றி, பிற்போக்கான மற்றும் பிளவு ஏற்படுத்தும் தமிழ் பிரிவினைவாத முன்நோக்குக்கும் எதிராக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழமும் சோசலிச சமத்துவக் கட்சியும் தமிழ் மக்களை பாதுகாக்க முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டமும் மற்றும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுக்கான போராட்டத்தில் தமிழ், சிங்களத் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்கான அதன் பிரச்சாரமும், பிற்போக்கு முதலாளித்துவம் ஒவ்வொரு மூலையிலும் அதன் இனவாத, சாதிவாத மற்றும் வகுப்புவாத அரசியலை தூண்டிவிடும் தெற்காசியா பூராவும் உள்ள புரட்சியாளர்களுக்கு ஒரு உதாரணமாக சேவை செய்யும்.
தோழி பியசீலி இல்லை, ஆனால் அவரது போராட்டம் இந்த இயக்கத்தில் நீடித்திருக்கும் இருக்கவேண்டும். |