WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரான்ஸ்: சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கூடுதலான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு
By Alex Lantier
3 November 2010
Use
this version to print | Send
feedback
சென்ற வாரத்தில் எண்ணெய்த் துறை வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், விமானத்துறையில் வேலைநிறுத்தங்கள் தொடருவதும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய-வெட்டு சட்டத்திற்கு மாணவர் எதிர்ப்புக்கு விடுக்கப்பட்டிருக்க கூடிய அழைப்பும் அரசாங்கத்திற்கு எதிராக பகிரங்கமான மற்றும் நனவானதொரு அரசியல் போராட்டத்தின் அவசியத்தை முன்னெப்போதையும் விட கூர்மையாய் முன்வைக்கின்றன. வெகுஜன எதிர்ப்பை (மிகப் பிரதானமாக துறைமுக, சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்திய எண்ணெய் துறை வேலைநிறுத்தம். இவர்களில் சிலர் ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்) அலட்சியப்படுத்திய சார்க்கோசி என்ன நடந்தாலும் வெட்டுக்களை முன்செலுத்துவதே தனது நோக்கம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
“இடது” கட்சிகளின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்கள் எண்ணெய்த்துறை வேலைநிறுத்தங்களை கைவிட்டதோடு போலிசின் வேலைநிறுத்த-உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களைத் தொடர்வதற்கு 65 சதவீதம் பேர் ஆதரவளித்ததை கருத்துக்கணிப்புகள் காட்டின. சென்ற வாரத்தில் ஓய்வூதிய வெட்டு மசோதா உத்தியோகபூர்வமாய் வாக்கெடுப்பு மூலம் சட்டமானது, அது இப்போது அரசியல் சட்ட மறுஆய்வுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்கு அரசு மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்திடம் இருந்தான எதிர்ப்பு பெருஞ்சுவராய் எழுந்து நின்றது. தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் கணிசமான பகுதிகள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏர் பிரான்ஸ் விமான ஓட்டிகளும் விமானப் பணியாளர்களும் 2011க்கான சமூகப் பாதுகாப்பு நிதியாதார மசோதாவினால் (PLFSS 2011) தங்களது வருவாய் தொகுப்புகளில் ஏற்படும் வெட்டுகளுக்கு எதிராக நவம்பர் 5 முதல் நவம்பர் 8 வரை வேலைநிறுத்தம் செய்ய இருக்கின்றனர்.
விமான நிறுவனம் அல்லது பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் விமான ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளுக்கு வரிவிதிக்க இந்த சட்டம் அரசுக்கு வழி செய்கிறது. விமானப் பயணக் கட்டணக் குறைப்புகள் (தாங்கள் வேலைசெய்யும் பிரதான மையத்தில் வாழாமல் வீடு திரும்புவதற்கு தள்ளுபடி கட்டண விமான சேவைகளையே நம்பியிருக்கும் ஊழியர்களுக்கு இது அத்தியாவசியமானதாகும்) மற்றும் இன்னும் பல சலுகைகள் வரிவிதிப்புக்கு உள்ளாகும். தேசிய விமான ஓட்டிகள் சங்கம் (SNPL) கூறுவதன் படி, விடுதி அறைகள், வாடகைக் கார்கள் மற்றும் விமான நிலைய வாகன நிறுத்தம் ஆகியவற்றுக்கான தள்ளுபடி விலைகளும் இந்த வரிவிதிப்புக்குள் வரும். SNPL மேலும் தெரிவித்தது: “சலுகைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கு இத்தகைய வரிவிதிப்பு கூடுதல் செலவுகளை அளிக்கும் என்பதால், தவிர்க்கவியலாமலும் வெகு துரிதமாகவும் இந்த சலுகைகள் இல்லாமல் செய்யப்படுவதற்கே வழிவகுக்கும். அப்படித் தான் ஆகும் என்பதை நிறுவனங்களின் நிர்வாகங்களும் எங்களிடம் உறுதிப்படுத்தியிருக்கின்றன.”
இந்த வார இறுதியில் பிரிட் ஏர் நிறுவனம் (போம்பார்டியர் அல்லது ஃபோக்கர் விமானங்களில் 250 சிறிய, பிராந்திய விமானங்களை இயக்கும் ஏர் பிரான்சின் துணை நிறுவனம்) ”தொழிலாளர்களின் பொதுவான கோபத்தை”யும் அவர்களது “வருங்காலம் குறித்த அச்சத்தையும்” வெளிப்படுத்துகிற வகையில் வேலைநிறுத்தத்திற்குச் சென்றது. தொழிற்சங்க புள்ளி விவரங்களின்படி, பிரிட் ஏர் நிறுவனத்தின் வார இறுதி விமானங்களில் 74 சதவீதம் வேலைநிறுத்தத்தால் தரையிறக்கப்பட்டன.
எந்த “நம்பகமான அபிவிருத்தித் திட்டங்களும் இல்லாமல்” பிரிட் ஏர் நிர்வாகமானது Route du Rhum regattaவில் தலைவர் Armel Le Cleach பங்கேற்பதற்கான நிதியாதாரத்திற்கு நிறுவன வருவாயைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக தொழிலாளர்கள் கவலையுற்றிருந்ததை தொழிற்சங்க நிர்வாகிகள் சுட்டிக் காட்டினர்.
பிரான்ஸ் முழுவதிலுமான 18 பல்கலைக்கழகங்களில், மாணவர்கள் ஒன்று கூடி சார்க்கோசி அரசாங்கத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளையும் பல்கலைக்கழக மறியல்களையும் தொடர்வது குறித்து விவாதித்தனர். வியாழனன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவதை மனதில் கொண்டும் இந்த விவாதம் நடந்தது. சென்ற வாரத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விடுமுறைக்கு செல்வதற்கு முன்பாக, அந்த மாணவர்கள் தான் சார்க்கோசியின் வெட்டுகளைக் கண்டித்து தங்களது பள்ளிகளில் மறியல் செய்வதில் மிகுந்த செயலூக்கத்துடன் ஈடுபட்டிருந்தனர், அவர்கள் மீண்டும் வகுப்புகளுக்குத் திரும்பியதும் ஆர்ப்பாட்டங்கள் தொடருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மறியல்களை தொடர்வதற்கு Le Mans, Nantes, Saint-Etienne, மற்றும் Pau ஆகிய நான்கு பல்கலைக்கழகங்கள் நேற்று வாக்களித்துள்ளன. மொத்தம் 53 பல்கலைக்கழக மாணவர்கள் இந்த வாரத்தில் தங்களுக்குள் கூடிப் பேசி வருங்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருக்கின்றனர்.
நகரின் Capitole மற்றும் Paul-Sabatier ஆகிய பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து Université de Toulouse-Mirail பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நேற்று வேலைநிறுத்தத்திற்கு திரும்புவதற்கு ”பெருவாரியான” ஆதரவளித்து வாக்களித்தனர். La Dépêche வசம் பேசிய ஒரு மிரேய்ல் மாணவர் நேற்று விளக்கினார்: “இயக்கத்தை மீண்டும் துவக்குவதா என்பது குறித்து விவாதித்து செவ்வாயன்று வாக்களிக்க இருக்கிறோம். இந்த இயக்கம் ஓய்வூதிய வெட்டுகளில் கவனத்தைக் குவித்திருந்தாலும் சமூக கோபம் என்பதையும் தாண்டி கூடுதல் அரசியல்ரீதியான ஒரு பரந்த கோபமும் மாணவர்களிடையே இருக்கிறது.”
சார்க்கோசியும் தொழிற்சங்கங்களும் எண்ணெய்துறை வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டிருந்தாலும், தொழிலாள வர்க்கத்தில் வெட்டுக்களுக்கு இன்னும் ஆழமான எதிர்ப்பு இருந்து கொண்டு தான் இருந்தது என்று இன்னொரு மாணவர் விளக்கினார்: “சுத்திகரிப்பு நிலையங்களின் தொழிலாளர்கள் மற்றும் மார்செய் துப்புரவுத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பி விட்டார்கள் தான், ஆனால் அவர்களின் வேலைநிறுத்தங்கள் அரசாங்க தலையீடுகளால் உடைக்கப்பட்ட பின்னரே அது நிகழ்ந்தது. தொழிலாளர்கள் இன்னும் கோபத்துடன் தான் இருக்கிறார்கள், அவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு திரும்பமுடியும்.” ஆயினும் தொடர்ந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு தங்களுக்கு விருப்பமில்லை என்பதை மாணவர் சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. தொழிற்சங்கங்கள் அழைக்கும் “தேசிய நடவடிக்கை தினங்களில் மட்டுமே மறியல்களுக்கு ஆதரவாய்” தாங்கள் இருப்பதாக பிரெஞ்சு மாணவர்களுக்கான தேசிய சங்கத்தின் (UNEF) ஒரு பிராந்தியத் தலைவரான ரோமேய்ன் பாக்ஸ் தெரிவித்தார். அதாவது, எண்ணெய் துறை வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்படுவதற்கும் அடகுவைக்கப்படுவதற்கும் ஒழுங்கமைத்த தொழிற்சங்கங்களிடமே மாணவர் போராட்டங்களுக்குக்கான கட்டுப்பாடும் கொடுக்கப்பட இருக்கிறது.
வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தியதில் மற்றும் அடகுவைத்ததில் தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” கட்சிகளின் பாத்திரம் குறித்து பெருகியிருக்கும் வெகுஜன விழிப்புணர்வு சில பல்கலைக்கழகங்களுக்குள் அதிகமான அரசியல் விவாதத்திற்கு தூண்டியிருக்கிறது. Université Lyon-2 பல்கலைக்கழகத்தில் வருங்கால நடவடிக்கைக்கு வாக்களிப்பதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை கோர்பாஸ் சிறையில் தடுத்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் மாணவர்கள் ஒன்று கூடியதாக Lyon-Capitale குறிப்பு ஒன்று கூறுகிறது. தொழிற்சங்கங்களை விமர்சனம் செய்த அவர்கள் சோசலிசக் கட்சி (PS) போன்ற முதலாளித்துவ “இடது” கட்சிகளையும் 2012ல் அதன் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் டோமினிக் ஸ்ட்ராஸ்-கானையும் விமர்சித்தனர். ஸ்ட்ராஸ்-கான் தான் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராய் உள்ளார். இந்த வசந்த காலத்தின் கிரேக்க கடன் நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பிற்கு பிரதிபலனாய் கிரேக்க தொழிலாளர்கள் மீது பாரிய சிக்கன நடவடிக்கைகளையும் ஓய்வூதிய வெட்டுகளையும் திணிக்க அவர் அழுத்தமளித்தார்.
ஒரு லியோன் மாணவர் தெரிவித்தார்: ”சார்க்கோசியின் வேலைகளை இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்பதால் நாங்கள் இன்று வீதியில் இறங்கியிருக்கிறோம். [முன்னாள் ஜனாதிபதி ஜாக்] சிராக்கையும் நாங்கள் நிறையப் பார்த்தாகி விட்டது, ஸ்ட்ராஸ் கானையும் நாம் நிறையப் பார்க்கவிருக்கிறோம்.....சார்க்கோசி, முதலாளித்துவம் மற்றும் பூகோளமயமாக்கம் இது எதுவும் இனியும் எங்களுக்கு வேண்டாம்.” இன்னொரு மாணவர் சேர்ந்து கொண்டார்: “இன்று, தொழிற்சங்க அமைப்பின் வரம்புகளை நாங்கள் காண்கிறோம்... முதலாளித்துவத்திற்கு வயதாவது போல, தொழிற்சங்கங்களுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது.”
மக்கள் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு வரலாற்று தோல்விக்கு முகம்கொடுக்கின்றனர். இலாபத்திற்கான சர்வதேச போட்டி அதிகரிப்பது ஆளும் வர்க்கத்தை சமூக செலவினத்தை வெட்டுவதற்கு நெடுகத் தள்ளியிருக்கிறது, பிரான்சிலும் மற்ற நாடுகளிலும் தொடர்ச்சியான நெடிய ஓய்வூதிய மற்றும் சமூக வெட்டுகள் நேர்ந்துள்ளன. இப்போது, நடப்பு பொருளாதார நெருக்கடியானது (இது பண முதலைகளின் பொறுப்பற்ற ஊகவணிகத்தாலும் தன்னை மட்டும் வளப்படுத்திக் கொள்ளும் குணத்தாலும் விளைந்தது) சமூக பிற்போக்குத்தனத்திற்கான செலுத்தத்தை துரிதப்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் மிகக் கூடுதலான அதிரடித் தாக்குதல்களைத் தூண்டுகிறது.
எண்ணெய்த் துறை வேலைநிறுத்தத்தின் தோல்வி போராடுவதற்கான வெகுஜன உறுதியை முடிவுக்குக் கொண்டு வந்து விடவில்லை என்று தொழிலாளர்களும் இளைஞர்களும் சரியாகவே கணித்துள்ளனர். ஆயினும், இனிமேலான போராட்டத்திற்கான விண்ணப்பம் எந்த அரசியல் அடித்தளத்தில் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஒரு முக்கியமான பணியாகும். சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான போராட்டத்தின் முன்நிபந்தனையாக இருப்பது சார்க்கோசி அரசாங்கத்தை கீழிறக்குவதற்கும் வெட்டுச் சட்டத்தை நிறுத்துவதற்கும் வெகுஜன அரசியல் வேலைநிறுத்தங்களில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம் ஆகும்.
இதில், தொழிலாளர்களும் மாணவர்களும் ஒட்டுமொத்த முதலாளித்துவ ”இடதின்” (சோசலிஸ்ட் கட்சி (PS) அல்லது பிரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சி (PCF), ழான்-லுக் மெலென்சானின் (Jean-Luc Mélenchon) இடது கட்சி போன்ற அதன் அரசியல் துணைக்கோள்கள், அல்லது ஓலிவியர் பெசென்செனோவின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி) எதிர்ப்புக்கும் முகம் கொடுக்கின்றன. சார்க்கோசி அரசாங்கத்தை கீழிறக்குவதற்கு அழைப்பு விடுக்கவோ, அல்லது எண்ணெய்துறை தொழிலாளர்களுக்கு எதிராக வேலைநிறுத்த உடைப்பில் போலிஸ் ஈடுபட்ட விடயத்தில் தொழிற்சங்கங்கள் மவுனம் சாதித்ததை விமர்சிக்கவோ மறுத்ததன் மூலம் இந்த “அதி இடது” கட்சிகள் மறியல்களில் உழைக்கும் மக்களுக்கு எதிரான பக்கத்தில் நின்று கொண்டிருப்பதைக் காட்டியிருக்கின்றன.
Le Mondeல் நேற்று நேர்காணல் அளித்த PS கட்சியின் முன்னாள் செயலாளர் François Hollande சார்க்கோசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் PS பங்கேற்பதன் கீழமைந்த பிற்போக்குத்தனமான முன்னோக்கை வரைந்து காட்டியதோடு “இடது” என்பதான மற்ற கட்சிகளையும் அந்த ஒழுங்கிற்கு அழைத்தார். சார்க்கோசி பெற்றுள்ள அவப்பெயரை பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதும் பின் சார்க்கோசி திட்டமிட்ட அதே சமூக வெட்டுகளின் வகையையே வலியுறுத்துவதும் தான் PS கட்சியின் இலக்கு என்பது ஹோலண்ட் தெளிவாக்கினார்.
ஹோலேண்ட் கூறினார்: “நிக்கோலா சார்க்கோசி தோற்கடிக்கப்படுவதற்கான புற நிலைமைகள் உள்ளன.” மற்ற “இடது” கட்சிகளுடன் துரிதமான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்த அவர் விளக்கினார்: “2012ல் பெரும் அரசாங்கக் கடன் அத்துடன் வரலாற்றுப் பேரளவாய் பற்றாக்குறை அளவு ஆகிய அதீத கடினமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்காய் முன்நிற்கும்”. சார்க்கோசி செய்வதைப் போல் ஓய்வூதிய தொகைகளை வெட்டுவதன் மூலம் இந்த பற்றாக்குறைகளைத் தீர்க்க PS கட்சியும் தலைப்படும் என்பதை ஹோலேண்ட் தெளிவுபடுத்தினார்: “உத்தேச ஆயுள் காலம் அதிகரிக்க அதிகரிக்க செலுத்த காலத்தை நாம் அதிகரித்தாக வேண்டும்.” ஓய்வூதிய வயதை 60 என்றே விட்டு விடுவதற்கு ஆதரவளித்ததாக PS கூறிவந்த மோசடியான கூற்றுகளை கைவிட்டதை சொல்லாமல் சொல்லுகின்ற வகையில் “60 வயது கடந்தோரில் வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற உண்மையைக் கூறி அவர் புலம்பினார்.
பெரும்பாலும் நிறுவனங்கள் அதிக அனுபவமும் உயர்ந்த ஊதியமும் பெறும் தொழிலாளர்களை அகற்றி விடுவது தான் இதற்கான காரணமாய் அமைந்திருக்க, ஹோலேண்ட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் அளிப்பதன் மூலம் தொழிலாளர்கள் 60 வயதுக்கு மேல் வேலை பார்ப்பதற்கு வகை செய்ய ஆலோசனையளித்தார்.
தேர்தலுக்கு முன்பே PS கட்சியின் மற்ற “இடது” கூட்டாளிகள் PS இன் கொள்கைகளை தெளிவாக வழிமொழிந்திருக்க வேண்டும் என்று ஹோலேண்ட் வலியுறுத்தினார்: “Jean-Luc Mélenchon, பசுமைக் கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மற்றவர்களுக்கு முன்நிற்கும் கேள்வி இது தான்: நீங்கள் நாளை பிரான்சை ஆள விரும்புகிறீர்களானால், உங்களுக்கு தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.” எந்த நிபந்தனைகளின் கீழ் இந்த கட்சிகள் PS உடன் கூட்டணி அமைத்துக் கொள்கின்றன என்பது தேர்தல்களின் இறுதிச் சுற்றுக்கு வெகு முன்பேயே தெளிவாக அறியப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று அவர் விளக்கினார்: “எல்லாமே நன்கு முன்கூட்டியே விவாதித்து முடிவெடுக்கப்பட்டு விட வேண்டும்”
தற்போதைய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் அரசியல் திவால்நிலை என்பது தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு வரலாற்று சவால் ஆகும். சார்க்கோசி அரசாங்கத்தைக் கீழிறக்கவும் சமூக வெட்டுகளை அமலாக்குவதைத் தடுக்கவும் போராடுகையில், ஒரு PS அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதென்பது இலக்காக இருக்க முடியாது. ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக நடைபெறும் ஒரு சர்வதேசப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை முன்னெடுக்கும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தைக் கட்டுவதற்கு தொழிலாள வர்க்கம் போராட வேண்டும்.
தொழிலாளர்களும் இளைஞர்களும், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ “இடது” கட்சிகளிடம் இருந்து சுயாதீனப்பட்ட வகையில், தங்களது போராட்டங்களை ஒருங்கிணைக்க தங்களது சொந்த போராட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதற்கு உலக சோலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது. இந்த முன்னோக்கிற்குப் போராடுவதில் தலைமை கொடுக்க பிரான்சில் ஒரு கட்சி கட்டுவதற்கு உதவ பிரான்ஸின் வாசகர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
|