WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஒபாமாவிற்கு வக்காலத்து வாங்குபவர்களும் குடியரசுக்கட்சி “மீள்எழுச்சியும்”
David Walsh
6 November 2010
Use this version to print | Send
feedback
2010 இடைத் தேர்தல் முடிவுகள் பாரக் ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மீதான ஒரு குற்றப் பத்திரிகையாகும்.
குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் மன்றத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்று செனட்டிலும் ஒரு சில இடங்களைப் பெற்ற விதத்தில் வந்த நவம்பர் 2 தேர்தல்களின் விளைவாக, அமெரிக்காவின் முழு அரசியல் அமைப்புமுறையும் இன்னும் அதிக வலதிற்கு மாற்றம் நகர்ந்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு விளைவுகள் கடுமையாக இருக்கும். ஏனெனில் அவர்களுடைய சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவதுடன், இராணுவ வன்முறை இன்னும் ஆக்கிரோஷத்துடன் உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பலவித “இடது” மற்றும் தாராளவாதசக்திகள் தாங்கள் செல்வாக்கு கொண்டுள்ள மக்கள் பிரிவுகள் இடையே ஒபாமாவின் பிரச்சாரம் அமெரிக்க அரசியலில் ஒரு பிரத்தியேகத் தன்மையை பிரதிபலித்தது, அவருடைய நிர்வாகத்தின்கீழ் போர்கள், வேலைகள் சமூகநலத் திட்டங்கள் மீதான தாக்குதல்கள், அரசியலமைப்பு உரிமைகள் கைவிடப்படுவது ஆகியவை முடிவிற்கு வரும் என்று கூறினர்.
Nation இதழும் மற்றவையும் முற்றிலும் மரபார்ந்த முதலாளித்துவ அரசியல்வாதியும், இல்லிநோய்ஸின் ஜனநாயகக் கட்சிக் கருவி மற்றும் பெருவணிகத்திற்கு தாழ்ந்து நடக்கும் வரலாற்றைக் கொண்ட ஒபாமாவை ஒரு “முற்போக்காளர்” என்று சித்தரித்து இவர் அமெரிக்காவிற்கு பெரும் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்றும் கூறின. தன்னையே ஏமாற்றிக் கொள்ளுதல் மற்றும் வேண்டுமென்றே தவறாகத் திரித்தல் என்பவற்றை இணைத்த இந்த முயற்சி, ஒபாமாவைப் பற்றிய போலித்தோற்றங்களை ஏற்படுத்தவும் மக்களை அமைதியடைய வைக்கும் முயற்சியும் ஆயிற்று.
இதன் விளைவுகள் என்ன? அவருடைய இடது-தாராளவாத வக்காலத்து வாங்குபவர்களால் தடையற்ற சுதந்திரம் கொடுக்கப்பட்ட ஒபாமா ஒரு வலதுசாரித்தன, பெருவணிகச் சார்புடைய போக்கை பதவியேற்ற முதல் நாளில் இருந்து (அதற்கும் முன்பும் கூட) மேற்கொண்டார். பெருமந்த நிலைக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார சூழ்நிலையில், அவருடைய நிர்வாகம் வோல்ஸ்ட்ரீட்டை பிணை எடுத்தது, மில்லியன் கணக்கான வேலையற்றோர் மற்றும் வறிய தொழிலாளர்களுக்கு ஏதும் செய்யவில்லை; இதையொட்டி கணக்கிலடங்காக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழக்கும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் எடுத்த ஒவ்வொரு முக்கிய நடவடிக்கையும் வலதுசாரிகளின் மறு எழுச்சிக்கு உத்தரவாதம் அளித்தது. நவம்பர் 2008ல் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் புஷ் நிர்வாகத்தை நிராகரிக்க வாக்களித்தனர். குடியரசுக் கட்சி ஒரு அவமானகரமான தோல்வியை அடைந்தது. அதனால் வெள்ளை மாளிகை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, சட்டமன்றத்தில் இரு பிரிவுகளும் ஜனநாயகக் கட்சியின் அதிகப் பெரும்பான்மை ஏற்பட்டது.
குடியரசு வலதுசாரிகளை உடைத்தெறிவதற்கான இதைவிடச் சாதகமான நிலைமைகளை நாம் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது. இதுகூட வெற்றி பெற்ற ஜனாதிபதியும் கட்சியும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தால்தான். இப்பொழுது தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் முயற்சிகளை ஒபாமா “வலதுகளை எதிர்த்து நிற்க வேண்டும்” என்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் ஒரு வெளிப்படையான வினாவைத்தான் எழுப்புகின்றனர். 2008ல் அவர் அவ்வாறு செய்ய முடியவில்லை மற்றும் அவரால் இயலாது என்றால் இப்பொழுது அதைச் செய்ய முடியும் என்று எவர் நம்ப முடியும்?
ஆனால் நடந்ததோ ஒபாமா நிர்வாகம் பெரும் ஊக்கத்துடன் குடியரசுக் கட்சிக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் மூச்சுவாங்க நேரம் கொடுத்ததே ஒழிய அதற்கு மாற்றீடாக முன்வரவில்லை.
அமெரிக்க வரலாற்றில் எந்தக் கட்சி அல்லது எந்த நிர்வாகமாவது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் ஒபாமாவும் 2008 ல் இருந்து 2010 க்குள் தங்கள் ஆதரவுத் தளத்திலுள்ளவர்களை மிகக்குறுகிய காலத்தில் இந்தளவு அதிகம் மனத்தளர்விற்கு உட்படுத்தியுள்ளதா?
ஒபாமாவின் மத்தியதர உயர்மட்டத் தாராளவாத வக்காலத்து வாங்குபவர்கள், ஜனநாயகக் கட்சியின் தகர்வை எதிர்கொள்கையில் உண்மையைத் தொடர்ந்து ஏற்க மறுக்கின்றனர். நடந்ததில் இருந்து ஒரு முக்கிய முடிவைக்கூட பற்றி எடுக்க அவர்களால் இயலவில்லை. சரிவில் இருந்து பெருந்திகைப்பு, அதில் இருந்து துரும்பையேனும் பற்றி மீளுதல் போன்ற கருத்துக்கள் அமைத்துமே எப்பொழுதும் போல் உணர்ச்சித் தன்மையையும் மேம்போக்குத் தன்மையையும்தான் கொண்டுள்ளன.
அவர்களுடைய முக்கிய பண்டிதர்கள் மக்கள் ஒபாமாவை அவருடைய “தீவிர தாராளவாதத்திற்காக” தண்டித்தாகக் கூறுகின்றனர். இது பிழையானதும் முட்டாள்தனமானதுமாகும்.
2008 தேர்தலை விட 2010 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக 30 மில்லியன் மக்கள் குறைவாக வாக்களித்தனர். இதற்குக் காரணம் அவர்கள் கட்சியின் வலதுசாரிக்கொள்கைகளில் கொண்ட இகழ்வுணர்வுதான். பாரியளவில் தேர்தல் வாக்குறுதிகள் காட்டிக் கொடுக்கப்பட்டதன் தவிர்க்க முடியாத அரசியல் குழப்பம் எதுவாக இருந்தாலும், பெரும் பரபரப்பு மற்றும் இடதுபுற மாற்றீடு உண்மையாக ஏற்படாத அரசியல் நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் வாக்குப்போடாமல் இருந்ததற்கு காரணம் அவர்கள் இடதிற்கு நகர்ந்ததே அன்றி வலதிற்கு நகர்ந்ததல்ல.
ஒரு சில தாராளவாதக் கட்டுரையாளர்கள் வெளிப்படையானதைத்தான் ஒப்புக் கொண்டுள்ளனர்: அதாவது ஒபாமா, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எவ்வித ஆக்கிரோஷ சீர்திருத்த திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்று. ஆனால் இந்த “தோல்விக்கான” காரணம் பற்றிய அவர்களுடைய விளக்கங்கள் முற்றிலும் வெற்றுத்தனம் மற்றும் நம்பகத் தன்மையுடையவை அல்ல.
நேஷனின் காட்ரினா வான்டென் ஹ்யூவெல், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் எழுதுகையில் வாக்காளர்கள் “விரோதப்படுத்தப்பட்டனர், ஏனெனில் அவர்கள் இவருடைய [ஒபாமாவின்] குழு தொழிலாளர் மற்றும் மத்தியதர வர்க்கக் குடிமக்களின் நலன்களுக்காகத் தீவிரமாக போராடியதாக நம்பவில்லை… குடியரசுக் கட்சிக்கு கொடுத்த சலுகைகளினால் பெரிதும் விளைந்த மீட்புத் திட்டத்தின் போதாத்தன்மை வெள்ளை மாளிகைக்கு ஓர் அரசியல் பேரழிவாயிற்று.”
“இவை அனைத்தும் திரு.ஒபாமாவிற்கு தான் தொழிலாளர் பிரிவுடனும் மத்தியதர வகுப்பினருடனும் நிற்பதாகக் காட்டிக் கொள்ள ஒபாமாவிற்கு ஒரு வாய்ப்பை கொடுக்கின்றன” என்று அவர் பரிதாபமாக முடிக்கிறார். வேறுவிதமாகக் கூறினால், தொழிலாள வர்க்கம் இன்னும் அதிகமான அரசியல் மரியாதையை இந்த வலதுசாரி நிர்வாகத்திற்குக் கொடுக்க வேண்டும்!
நவம்பர் 2008ல் வாண்டென் ஹ்யூவெல் என்ன கூறினார்? “மாற்றுக்கால ஜனாதிபதிப் பதவி” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் 2008 தேர்தல் விளைவுகளை 2004 தேர்தலுடன் ஒப்பிடுகையில் (ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மறுதேர்தலில் வென்றபோது), “நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுது மகிழ்ச்சியில் சிலர் அழுதுகொண்டு, நம்முடைய அலுவலகலத்தில் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், உட்பிரிவினர் மற்றும் சக ஊழியர்கள் ஆகியோரால் நிரப்பப்பட்டுள்ள அனைவரும் பாரக் ஒபாமா வெற்றியால் ஒரு புதிய சகாப்தம் திறப்பது பற்றிய வாய்ப்பை நினைத்து…” என்று கூறினார்.
“ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டது நம் நாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்க கணத்தை ஏற்படுத்தியுள்ளது-அமெரிக்காவின் வடுக்கள் நிறைந்த நிறவகைப் பிரிவில் ஒரு மைல்கல்லாகவும், கௌரவம், பலவித நிலைகள், பொறுத்தல் ஆகியவற்றிற்கு ஒரு வெற்றி எனவும்.”
ரோபர்ட் ஷீர், ஒரு நீண்டகால இடது செய்தியாளரும் நேஷனுக்கு கட்டுரை அனுப்பும் எழுத்தாளராகவும் இருப்பவர் இந்த வாரம் ''வாக்களிப்பில் பதில் கிடைத்துள்ளது'' என்பதில் “பாரக் ஒபாமா ஒரு தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கைக்காக தேர்தல்களில் பெற்ற சாடலுக்கு உரியவர்தான்; அந்தக் கொள்கையில் வோல் ஸ்ட்ரீட்டிற்கு டிரில்லியன்களை அளித்து பதிலுக்கு எதுவும் பெறாததுதான் இருந்தது.”
ஆனால் நவம்பர் 2008ல் ஷீரும் கொண்டாடும் மனநிலையில்தான் இருந்தார். அப்பொழுது அவர் எழுதினார்: “களித்திருக்கும் நேரம் இது! பின்னர் நம் அடுத்த ஜனாதிபதி பாரக் ஒபாமா எதிர்கொள்ளும் கடின விருப்பத் தேர்வுகள் பற்றி பகுப்பாய்வு செய்யலாம்; தற்பொழுது சிறிதும் நாணமின்றி அச்சொற்களின் ஒலிக்குறிப்பில் மகிழ்ச்சி அடைவோம்.”
அவர் மேலும் கூறியது: “கொள்கைகள் ஒருபோதும் ஓரே மாதிரியானதாக இராது. கொழுத்த பூனைகளும், பின்புறம் செயல்படும் அரசியல்வாதிகளும் வெளியேறிவிட்டனர். அடித்தளத்தில் -இளைஞர்கள், வலைத் தளத் தொடர்பு உடையவர்கள்- வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்துவர், செவ்வாயன்று அவர்கள் செய்ததைப் போல். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமாவிற்கு அது தெரியும், குறைந்தபட்சம் இன்று இரவேனும் அவர் இந்தப் பயணத்தில் அவருடன் பயணித்தவர்களுக்கு உண்மையாக இருப்பார் என்று முழுதாக எதிர்பார்க்கிறேன்.”
இந்த நபர்கள் எதையும் முன்கூட்டிக் கணிக்கவில்லை, எதையும் கற்றுக் கொள்ளவும் இல்லை.
நேஷனின் எரிக் ஆல்டெர்மன் இன்னும் திமிர்த்தனமாக, ஒபாமாவின் தொலை நோக்குடைய சமூகம் பற்றிய திட்டம் என்று கருதப்படுவதைப் புரிந்துகொள்ளாததற்காக மக்களைக் குறைகூறியுள்ளார். “நல்லது, இதுதான் அமெரிக்கா. வெகு எளிதில் சுரண்டப்படக்கூடிய பெரும் அறியாமை நெருப்பு கொழுந்துவிட்டு எரிய ஊக்கம் தருகிறது. ஒபாமாவின் சுகாதார பாதுகாப்புச் சீர்திருத்தம், ஊக்கப்பொதி, கார்த்தொழிலை காப்பாற்றியது, போன்றவை இந்த இரு ஆண்டுகளை கடந்த அரை நூற்றாண்டில் பெரும் விளைவுகள் நிறைந்த ஆண்டு என்று ஆக்கியுள்ளன.”
உண்மையில், இந்த முனைப்புக்கள் அனைத்தும் கவனமாக இயற்றப்பட்ட தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகள் ஆகும். இவை ஆளும் உயரடுக்கின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகளை வலுப்படுத்தியுள்ளதுடன், மக்களின் பரந்த அடுக்குகளின் நிலைமையை மோசமாக்கியுள்ளன.
ஆல்டர்மன் வசதியுடைய தாராளவாதக் கூறுபாட்டின் உகந்த பிரதிநிதி ஆவார். இப்பிரிவினர் ஜனநாயகக் கட்சியினரிடையே போலித் தோற்றங்களை வளர்க்கும் தொழிலை கொண்டவர்கள். நியூயோர்க் அப்சர்வர் ஒரு 2003 கட்டுரையில் நேஷன் செய்தியாளர் ஒருவர் நாகரிகம் மிகுந்த மான்ஹட்டன் உணவு விடுதியில் எதிர்கொண்ட நிகழ்வை விவரிக்கிறது. “திரு.ஆல்டர்மன் வெற்றியால் சூழப்பட்டிருந்தார்.” என்று கட்டுரையாளர் எழுதினார். ஆல்டர்மன் “ஈரல் கறிக்கும் உயர்தர மாட்டு இறைச்சிக்கும் மற்றும் ஒரு கோப்பை உயர்தர முந்திரிகை பானத்தையும் வரவழைத்தார். முன்னதாக இவர் தன்னுடைய பகல் உணவுகள் அதிகசெலவு வாய்ந்தவை என்று கூறியிருந்தார்.”
ஜனநாயகக் கட்சியின் தோல்விக்கு மத்தியதர நடுப்ப்பிரிவின் விடையிறுப்பு அந்தச் சமூக அடுக்கிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே உள்ளபெரும் பிளவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வேலைகள், வாழ்க்கைத்தரங்கள், வறுமை, ஓய்வு பெறுதல், வீடுகள், கல்வி மற்றும் தற்போதைய மற்றும் வருங்காலப் போர்கள், அனைத்தும் வாண்டென் ஹ்யூவெல், ரோபர்ட் ஷீர், ஆல்டர்மன் ஆகியோருக்கு எந்தப் பொருட்டும் இல்லை. அமெரிக்க தொழிலாள வர்க்கத்தைப் பற்றிய சிறிதும் பொருட்படுத்தாத் தன்மையை அவர்கள் ஒபாமாவைப் போலவே மதிப்பதில்லை. அவர்களுடைய நலன்கள் “கலாச்சார பிரச்சினைகளில்”அதாவது, இனம், பால், பால்சார்பு போன்ற அரசியலைத்தான் பிணைத்துள்ளன.
இந்த இடது தாராளவாதிகள் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கு எதிராக நெருப்பினால் தடுப்புசுவர் எழுப்பிய விதத்தில் அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவ இருகட்சி ஆட்சிமுறையை பாதுகாக்க உதவுகின்றனர்.
மக்கள் சீற்றம் தற்போதுள்ள கட்டமைப்பினுள் மூடிவைக்கப்பட்டால், உண்மையான முதலாளித்துவ எதிர்ப்பு பாதையை காணாத நிலையில் இருந்தால், இது தீயதாகப் போய்விடும் என்ற ஆபத்து உள்ளது. தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்து நடப்பது தீவிர வலதுசாரி மற்றும் பாசிச இயக்கங்கள் வெளிப்பட்டு, வளர்வதற்கான நிலைமையை ஏற்படுத்திவிடும்.
இப்பொழுது முக்கிய பிரச்சினை 2009 மற்றும் 2010 தேர்தல்களின் அரசியல் படிப்பினைகள் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் அனுபவம் ஆகியவை பற்றிய படிப்பினைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான். சீரழிந்த, திவால்தன்மை நிறைந்த ஜனநாயகக் கட்சி, மற்றும் அரசியல் நடைமுறையுடன் உழைக்கும் மக்கள் சுயாதீனமான ஒரு சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்ட பரந்த அரசியல் உடைவை காண்பதில்தான் அனைத்தும் தங்கியுள்ளன.
|