WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
அமெரிக்கக் காங்கிரஸ் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் பெரும் வெற்றி பெறுகின்றனர்
By Patrick Martin
3 November 2010
Use
this version to print | Send
feedback
இன்னும் பல முடிவுகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் அல்லது முடிவுகள் விரைவாக வெளிவர இருக்கையில், அமெரிக்கக் காங்கிரஸ் தேர்தல்கள் குடியசுக் கட்சிக்கு பெரும் வெற்றியை அளித்துள்ளன. இக்கட்சி 60 தொகுதிகளை அதிகமாகப் பெற்று இப்பொழுது பிரதிநிதிகள் மன்றத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுள்ளதுடன், செனட்டில் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையையும் குறைந்து விட்டது.
தற்போதைய செனட் ஜனநாயகக் கட்சியினர் விஸ்கான்ஸ் மாநில ருஸ்ஸல் ஃபெயின்கோல்டும் மற்றும் அர்கன்சாசின் பிளான்சேயும் தோற்கடிக்கப்பட்டனர்: குடியரசுக் கட்சியினர் பென்சில்வானியா, வடக்கு டகோடா மற்றும் இந்தியானா மாநிலங்கள் செனட் இடங்களையும் வெற்றி கொண்டது. குடியரசுக் கட்சி வேட்பாளர், பாரக் ஒபாமாவின் முன்னாள் இல்லிநோய்ஸ் தொகுதிக்கான போட்டியில் புதன் அதிகாலை முன்னணியில் இருந்தார்.
பிரதிநிதிகள் மன்றத்தில் குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து நியூயோர்க்கில் குறைந்தது நான்கு தொகுதிகளையும், நியூ ஹாம்ப்ஷயரில் இரண்டு, நியூ ஜெர்சியில் ஒன்று, பென்சில்வானியாவில் ஐந்து, ஒகையோவில் ஐந்து, மிச்சிகனில் இரண்டு, இந்தியானாவில் இரண்டு, இல்லிநோய்ஸில் மூன்று விஸ்கான்சினில் இரண்டு என்று தொழில்துறை வடகிழக்கு, மத்திய மேற்குப் பகுதியில் 26 தொகுதிகளை நிகரமாக அதிகம் பெற்றுள்ளனர். குடியரசுக் கட்சியினர் குறைந்தது ஜனநாயகக் கட்சி கொண்டிருந்த 15 தொகுதிகளையேனும் தெற்கில் இருந்து கைப்பற்றினர். இவற்றுள் புளோரிடா, வேர்ஜீனியா, டென்னசீ ஆகியவை ஒவ்வொன்றில் இருந்தும் 3 மற்றும் ஜோர்ஜியா, மிசிசிபி ஆகியவற்றில் இருந்து இரண்டும் அடங்கும்.
ஜனநாயகக் கட்சியின் சில நீண்டகால உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை இழந்தனர். இதில் மன்றத்தின் வரவு-செலவு திட்டக் குழுத் தலைவர் தென் கரோலினாவின் ஜோன் ஸ்ப்ராட், வேர்ஜீனியா நிலங்கரிச்சுரங்கப் பகுதியின் ஒதுக்கீடு துணைக்குழுவின் தலைவர் ரிக் பௌச்சர் மற்றும் மன்றத்தின் இராணுவக் குழுவின் தலைவரான மி்சூரியின் ஸ்கெல்டன் ஆகியோரும் இதில் அடங்குவர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் 39 மாநிலங்களின் கவர்னர் பதவிகளில் வெற்றி பெற்று ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருந்த பென்சில்வேனியா, ஒகையோ, மிச்சிக்கன், அயோவா, டென்னசி மற்றும் நியூ மெக்சிகோ மாநிலங்களில் பொறுப்பை ஏற்றனர். ஜனநாயகக் கட்சியினர் நியூயோர்க், மாசாச்சூசட்ஸ் மாநிலங்கள் மீதான கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொண்டு, இல்லிநோய்ஸிலும் கலிபோர்னியாவிலும் முன்னணியில் இருந்தனர்.
தேர்தல் தோல்வி ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் மீது பெரும் குற்றச்சாட்டு தீர்ப்பாகும். மாபெரும் வெற்றியை ஜனாதிபதி தேர்தல்களில் அடைந்த இரு ஆண்டுகளுக்குப் பின், பிரதிநிதிகள் மற்றும் மற்றும் செனட் ஆகிவற்றின் மீதான கட்டுப்பாட்டை குடியரசுக் கட்சியினர் இழந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின், ஜனநாயகக் கட்சியின் வலதுசாரிக் கொள்கைகள் குடியரசுக் கட்சியினர் மிகப் பெரிய அளவில் மீண்டும் வெற்றிபெறும் சூழ்நிலையை தோற்றுவித்துள்ளன.
பெருநிறுவனம் கட்டுப்படுத்தும் செய்தி ஊடகமும் இரு பெரும் வணிகக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஏற்கனவே தேர்தலின் விளைவு அமெரிக்க மக்கள் வலதிற்கு நகர்ந்துள்ளனர் என்றும், குடியரசுக் கட்சி மற்றும் வலதுசாரி தேனீர் விருந்து இயக்கத்தின் (Tea Party movement) இடைவிடா “தடையற்ற சந்தைக்” கருத்துக்களையும் தழுவியுள்ளனர் என்பதை நிரூபிக்கின்றன என்று பறைசாற்றுகின்றனர்.
இத்தகைய கூற்று அபத்தமானதும் நகைப்பிற்கு இடமானதும் ஆகும். இந்த அரசியல் “வல்லுனர்கள்” கருத்துப்படி பெருமந்த நிலையில் இருந்து மோசமான பொருளாதார நெருக்கடியின் நடுவே, வேலையின்மை விகிதம் இரட்டை இலக்குத் தரங்களை நெருங்குகையில், மில்லியன் கணக்கான மக்கள் வீடுகள் ஏலத்தை எதிர்கொள்கையில், வறுமை விகிதம் வானளவு உயர்கையில், அமெரிக்க மக்கள் வேலையின்மை இழப்பீடு இல்லாதொழிக்கப்படுதல், சமூகப்பாதுகாப்பு வெட்டப்படல், பொதுப்பள்ளிகள் மூடப்படல், செல்வந்தர்களுக்கு வரிகள் குறைக்கப்படுதல் ஆகியவற்றை விரும்புகின்றனர் என்று பொருள் ஆகும்.
குடியரசுக் கட்சிக்கு மக்கள் ஆதரவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்ற கருத்தில் இருந்து மிகத் தொலைவான முறையில், இந்த விளைவு ஒபாமாவிற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் பெருவாரியாக 2006, 2008 தேர்தல்களில் வாக்களித்தவர்களின் ஆதரவு சரிந்து விட்டது என்பதைத்தான் நிரூபிக்கின்றன. 18 முதல் 29 வயதிற்குள் இருக்கும் இளம் வாக்காளர்கள், 2008 மொத்த வாக்காளர்களில் 18 சதவிகிதம் இருந்தபோது அந்தச் சதவிகிதம் செவ்வாயன்று நடந்ததேர்தலில் 10 சதவிகிதம்தான் இருந்தது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2008 வாக்காளர் எண்ணிக்கையில் 15 சதவிகிதம் என்று இருந்தபோது 2010 தேர்தல்களில் 24 சதவிகிதம் இருந்தனர்.
ஜனநாயகக் கட்சிக்கு எதிராக மிகப் பெரிய அளவில் வயதுவந்தோர் நகர்ந்தனர். ஏனெனில் ஒபாமா சுகாதாரப் பாதுகாப்பு “சீர்திருத்தத்தின்” பிற்போக்குத்தனத் தன்மை அதற்குக் காரணம் ஆகும். காப்பீடு இல்லாதவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை விரிவாக்கும் ஒரு முன்னேற்றமான நடவடிக்கை என்பதில் இருந்து மிகத் தொலைவில் ஒபாமாவின் திட்டம் முக்கியமாக செலவுக் குறைப்பு நடவடிக்கையாயிற்று. இதை பல வயதுவந்தோர் மிகச்சரியான முறையில் மருத்துவப் பாதுகாப்பு நலன்களுக்கு ஒரு அச்சறுத்தல் என்றுதான் கண்டனர். குடியரசுக் கட்சிக்கு 2008 தேர்தலில் 48 சதவிகித வயதுவந்தோர் வாக்களித்திருந்தபோது, இந்த எண்ணிக்கை 2010ல் 58சதவிகிதம் உயர்ந்தது. மக்கள் தொகை எண்ணிக்கையில் எந்தப் பிரிவையும் விட இது மிகப் பெரிய ஊசலாட்டமாகும்.
ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு சரிந்துள்ளது என்பது 2008 பிரச்சாரத்தின் வளர்க்கப்பட்ட போலித் தோற்றங்கள் இரு ஆண்டுகளாக காட்டிக் கொடுக்கப்பட்டதின் விளைவு ஆகும். 2006, 2008ல் ஜனநாயகக் கட்சியின் வெற்றிகள் புஷ் நிர்வாகத்தின் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்கு மக்கள் விரோதப் போக்கினால் எரியூட்டப்பட்டிருந்தன. ஒபாமா இந்த உணர்வுகளுக்கு அழைப்விட்டு தான் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் பதவியில் வந்தவுடன் அவர் அதே இராணுவவாதக் கொள்கைகளைத் தொடர்ந்தது மட்டும் இல்லாமல் பென்டகன் தலைவர் ரோபர்ட் கேட்ஸ் மற்றும் ஜெனரல் டேவிட் பெட்ரீயசைத் தக்க வைத்துக் கொண்டதுடன், ஆப்கானிஸ்தானிற்குள் மற்றும் ஒரு 70,000 துருப்புக்களையும் அனுப்பி வைத்தார்.
ஆரம்பத்தில் இருந்தே ஒபாமா போர்களின் அப்பட்டமான சட்டவிரோத தன்மை, சித்திரவதை இன்னும் பல போர்க்குற்றங்களுக்கும், “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு புஷ்ஷின் அதிகாரிகளை பொறுப்பாக்கும் எந்த முயற்சியையும் ஏற்கவில்லை. உள்நாட்டு ஒற்று வேலையை ஒபாமா தீவிரப்படுத்தி, குவான்டனாமோ தடுப்புக் காவல் முகாம்களை திறந்து வைத்து, தேசப்பற்று சட்டத்திற்கு (Patriot Act) ஆதரவைக் கொடுத்து தலைமைத் தளபதி என்னும் முறையில் அமெரிக்க குடிமக்களை படுகொலை செய்யும் அதிகாரத்தைத் தான் பெற்றுள்ளதாகவும் அறிவித்தார்.
பொருளாதாரக் கொள்கையில், ஒபாமா வோல் ஸ்ட்ரீட்டுடன் அடையாளம் காணப்படும் நபர்களான டிமோதி கீத்னர், லாரன்ஸ் சம்மர்ஸ் ஆகியோரைத் தன் முக்கிய உதவியாளர்களாகக் கொண்டுவந்தார். வங்கிகளுக்கு காட்டப்பட்ட பெரும் அக்கறையை அவர் தொழிலாள வர்க்கத்தின் இடர் நிலையைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தான தன்மையுடன் சிறிதும் மறைக்காமல் இணைத்து செயல்பட்டார். விண்ணையும் மண்ணையும் ஒபாமா நகர்த்தி புஷ் தொடக்கிய வோல்ஸ்ட்ரீட் பிணை எடுப்பைத் தொடர்ந்து, அதே நேரத்தில் கூட்டாட்சி அரசாங்கம் வேலைகளைத் தோற்றுவிக்கும் நடவடிக்கை வேண்டும் என கருத்தை நிராகரித்து வேலையின்மை “ஒரு சற்றே சுணங்கிவரும் பொருளாதார அடையாளக்காட்டி” என்றும் விவரித்தார்.
இடைக்காலத் தேர்தலுக்கு முந்தைய மாதத்தில் வெள்ளை மாளிகை அதிக அக்கறை எடுத்து தனது வழியில் சென்று 2008ல் “மாறுதல்”, “நம்பிக்கை” ஆகிய கருத்துக்களை பரப்பும் வேட்பாளராக தேர்தலில் நின்ற ஒபாமாவிற்கு வாக்களித்த இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அந்நியப்படுத்தியது. நிர்வாகம் வீடு ஏலங்களுக்கு இடைக்கால நிறுத்தம் வேண்டும் என்பதை எதிர்த்தது. ஆவணங்கள் போலியாக வங்கிகளால் தயாரிக்கப்படுகின்றன என்ற வெளியீடுகள் வந்தும் இந்த நிலைதான் இருந்தது. மெக்சிகோ வளைகுடாப்பகுதியில் பிரிட்டிஷ் பெற்றோலிய பேரழிவிற்கு பின்னர் எண்ணெய் எடுத்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றினார், “வேலை தோற்றுவித்தல்” என்ற பெயரில் வணிகங்களுக்கு வரிகளையும் பெரிதும் குறைத்தார்.
செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பெருந்தோல்வி ஒபாமாவின் தாராளவாத வக்காலத்து வாங்கும் நபர்களாலும் அமைப்புக்களாலும், நியூ யோர்க் டைம்ஸின் ஆசிரியர் குழுவில் இருந்து நேஷன் வரை புலம்பலுக்கு உட்படும். இவர்கள் அமெரிக்க மக்கள் “வலதுபக்கம் நகர்ந்துள்ளனர்” என்று குற்றம் கூறுபவருடன்தான் சேர்வர். உண்மையில் தேர்தல் ஜனநாயகக் கட்சியின் உண்மை நிலைப்பாட்டைத்தான் அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது அது நிதியப் பிரபுத்துவம் மற்றும் மத்தியதர உயர் வர்க்கத்தின் சலுகைகள் பெற்று மனநிறைவுடன் இருக்கும் பிரிவின் ஒரு பகுதிதான் தான் என்றும் இதில் தொழிற்சங்க அதிகாரத்துவமும் அடங்கியுள்ளது என்பதும் காட்டப்பட்டுள்ளது.
ஆளும்வர்க்கத்தின் தாராளவாதம் வாழ்க்கறைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அடையாள அரசியல் ஆகியவை பற்றிக் கவலைப்படுகிறது. ஆனால் மக்களில் மிகப் பெரும்பான்மையினராக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது. வலதுபுறத்திற்கு அது நகர்ந்துள்ள அதிகமான தன்மை, ஒபாமாவின் பொருளாதாரத் திட்டம் மற்றும் வரவிருக்கும் பிரதிநிதிகள் மன்றத் தலைவர் ஜோன் போஹ்னர், குடியரசுக் கட்சியனர் ஆகியோருக்கும் இடையே மிகச்சிறிய விவரங்களில்தான் வேறுபாடு என்று இருக்கும்.
தேர்தலுக்குப் பின் ஒபாமா அவர் தொடங்கிய இருகட்சி உறவு பற்றிய உந்துதலைப் புதுப்பித்து, மீண்டும் முற்றிலும் இழிவுபடுத்தப்பட்ட குடியரசுக் கட்சியை மீட்பதற்கு தான் வெற்றிபெற்ற கணத்தில் இருந்து கொடுத்த உந்துதலைவிட இன்னும் அதிகமாகத்தான் கொடுப்பார். அவர் முன்வைக்கும் அனைத்து “சமரசங்களும்” குடியரசுக் கட்சியினரின் கோரிக்கைகளான சமூகநலச் செலவுகளில் இன்னும் ஆழ்ந்த வெட்டுக்கள் மற்றும் பெருநிறுவன நலன்களுக்கு வரி வெட்டுக்களும் பிற சலுகைகளும் என்ற முறையில் இருக்கும்.
குடியரசுக் கட்சித் தலைவர் போஹ்னர் பிரதிநிதிகள் மன்றத்தில் அவருடைய புதிய பெரும்பான்மை என்பது “அமெரிக்க மக்களின் குரலாக” அமையும் என்று அறிவித்தார். உண்மை என்னவெனில், குடியரசுக் கட்சியின் வெற்றி தொழிலாள வர்க்கத்திற்கும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் மிகப் பிற்போக்குத்தன பிரிவுகளுக்கும் இடையே நேரடி மோதலுக்கான அரங்கைத்தான் அமைத்துள்ளது.
இம்மோதலில் தொழிலாள வர்க்கம் திவாலாகிவிட்ட தாராளவாதம் மற்றும் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து உறுதியான, மாற்றத்திற்கு இடமில்லாது உடைத்துக்கொள்வதுடன் ஒரு புதிய, சுயாதீன வெகுஜன அரசியல் இயக்கத்தை சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டு கட்டமைப்பதின் மூலம்தான் முன்னோக்கிய பாதையைக் காணமுடியும். |