சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan minister warns of “insurgency” in universities

இலங்கை அமைச்சர் பல்கலைக்கழகங்களில் “கிளர்ச்சி” பற்றி எச்சரிக்கின்றார்

By K. Ratnayake
12 November 2010

Use this version to print | Send feedback

இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல நவம்பர் 4 அன்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், “பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்தி விரைவில் முன்னெடுக்கவுள்ள இன்னுமொரு கிளர்ச்சி பற்றி” நாட்டின் புலனாய்வுத் துறை “விழிப்புடன்” இருப்பதாகவும் அது பற்றி “தகவல்களைத் திரட்டி வருவதாகவும்” அறிவித்தார்.

நாடு முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அரசாங்கத்தின் பாய்ச்சலின் மத்தியில் ரம்புக்வெல்ல இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பதானது, பல்கலைக்கழக கல்வியை தனியார்மயமாக்கும் அர்சாங்கத்தின் திட்டத்துக்கு எதிரான எதிர்ப்புக்களை நசுக்குவதை இலக்காகக் கொண்டதாகும். உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, முதல் தடவையாக இலங்கையில் வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க அனுமதிப்பதன் பேரில் இந்த மாதம் பாராளுமன்றத்தில் புதிய பல்கலைக்கழக சட்டம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தெளிவற்ற ஆதாரங்களைக் கூட காட்டாமல் ஒரு “கிளர்ச்சி” பற்றி அரசாங்கம் குறிப்பிடுவது, எதிர்ப்புக்கள் மீது பயன்படுத்தப்படவுள்ள பொலிஸ்-அரச வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகும். கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் போது, புலி “சந்தேக நபர்களுக்கும்” அரசியல் விரோதிகளுக்கும் எதிராக விசாரணயின்றி எதேச்சதிகாரமாக கைது செய்தல், இராணுவத்துடன் உடந்தையுடன் செயற்படும் கொலைப்படைகளின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளும் பயன்படுத்தப்பட்டன.

அக்டோபர் 26 அன்று பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மாணவர்களை “கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு” அவர்களுக்கு அறிவுறுத்தினார். “அரசியல் நோக்கம் கொண்ட சுமார் இரண்டாயிரம் மாணவர்கள்” ஏனைய 80,000 மாணவர்களின் கல்வியை சீர்குலைப்பதாக ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார். “நாட்டில் அமுலில் இருக்கும் சட்டத்துக்கு” மாணவர்கள் முகங்கொடுக்க வேண்டிவரும் என அவர் எச்சரித்தார்.

கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட 25 மாணவர்கள் உட்பட, ஏற்கனவே பொலிசாரால் குறைந்தபட்சம் 33 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக 220 மாணவர்களை பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநிறுத்தி வைத்துள்ளனர். இந்த வாரம் கொழும்பு மற்றும் கண்டி நீதிமன்றங்களால் 25 மாணவர்களுக்கு பிணைவழங்கப்பட்ட போதும், அவர்களை அரசியலில் ஈடுபட வேண்டாம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

மாணவர்களை கண்காணிப்பதற்காக குறைந்தபட்சம் கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகங்களில் பொலிஸ் சி.சி.டி.வி. கமராக்களை பொருத்தியுள்ளது. கொழும்பு நகரில் “தொந்தரவுகளை”, அதாவது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலான அமைதியின்மையை தடுப்பதற்காக இதுபோன்ற கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கிளர்ச்சி என்று சொல்லப்படுவதை அரசாங்கம் நசுக்கும் என தனது கருத்துக்களில் ரம்புக்வெல்ல பிரகடனம் செய்துள்ளார். “1971ல் ஒன்றும் 1989ல் இன்னொன்றும் மற்றும் 30 ஆண்டுகால யுத்தத்துக்குள் நாட்டை இழுத்துச் சென்ற புலி பயங்கரவாதம் உட்பட மூன்று கிளர்ச்சிகளை இலங்கை கண்டுள்ளது. இன்னுமொரு கிளர்ச்சிக்கு அல்லது பயங்கரவாதத்துக்கு அனுமதி கிடைக்காது.”

1971 மற்றும் 1989 பற்றிய ரம்புக்வெல்லவின் குறிப்புக்கள், மக்கள் விடுதலை முன்னணியையும் (ஜே.வி.பி.) அதன் மாணவர் அமைப்பான, தனியார்மயத்துக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தையும் குறிவைத்துள்ளன. 1960களில் சிங்கள மக்கள்சார்பு வாதங்கள், மாவோவாதம் மற்றும் குவேராவாதத்தையும் கலந்து அதனடிப்படையில் ஜே.வி.பி. ஸ்தாபிக்கப்பட்டது. 1971ல், சிங்கள கிராமப்புற இளைஞர் பகுதியினரை பிழையாக வழிநடத்திய ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கிளர்ச்சி, இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான அப்போதைய கூட்டரசாங்கத்தால் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டது. குறைந்தபட்சம் 15,000 இளைஞர்கள் பாதுகாப்பு படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

வடக்கு மற்றும் கிழக்குக்கு இந்திய “அமைதிகாக்கும்” துருப்புக்களை அனுப்ப வழிவகுத்த இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக 1988-1990 களில் ஜே.வி.பி. ஒரு நாட்டுப்பற்று பிரச்சாரத்தை முன்னெடுத்தது. தனது தேசப்பற்று சிலுவைப் போரில் இணைய மறுத்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல் எதிரிகளையும் ஜே.வி.பி. துப்பாக்கிதாரிகள் கொலைசெய்தனர். முதலில் ஜே.வி.பி. உடன் ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொள்வது பற்றி எண்ணிப்பார்த்த ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) அரசாங்கம், பின்னர் ஜே.வி.பி.க்கு எதிராகவே திரும்பி, அதன் தலைவர்களைப் கொலை செய்ததுடன் குறைந்தபட்சம் 60,000 கிராமப்புற இளைஞர்களை படுகொலை செய்தது.

இன்னுமொரு ஜே.வி.பி. “கிளர்ச்சி” பற்றிய பூதத்தை கிளப்பிவிடுவதன் மூலம், அரசாங்கம் தேவையேற்படின், இன்னுமொரு படுகொலைக்கான நியாயப்படுத்தலை முன்கூட்டியே தயார்செய்கின்றது. சண்டே டைம்ஸ் பத்திரிகையுடன் பேசிய உயர் கல்வி அமைச்சர் திசாநாயக்க, ஜே.வி.பி.யும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் “கூட்டாக பயிற்சி முகாங்களை நடத்துகின்றன, அதில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயங்கரவாத தந்திரங்கள் பற்றி பயிற்சியளிக்கப்படுகின்றது” என பிரகடனம் செய்தார். “பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவர்களில் அநேகமானவர்கள் இந்தக் குழுவைச் சார்ந்தவர்கள்... இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் வேலையில் தேசிய புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டுள்ளது,” என அவர் மேலும் கூறினார்.

நீண்டகாலத்துக்கு முன்னரே தனது கொரில்லாவாதத்தை கைவிட்ட ஜே.வி.பி., தன்னை கொழும்பு பாராளுமன்ற அரசியல் ஸ்தாபனத்துக்குள் இணைத்துக்கொண்டது. 2005 ஜனாதிபதி தேர்தலின் போது, இராஜபக்ஷவை ஆதரித்த ஜே.வி.பி., அவரது வெற்றிக்காக பிரச்சாரம் செய்தது. இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் ஜே.வி.பி., பல்கலைக்கழக தனியார்மயமாக்கத்தை கொள்கையளவில் எதிர்க்கவில்லை என்பதை ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளதோடு, அரசியல் எதிரிகளின் மீது குண்டர் தாக்குதல் நடத்துவதில் பல்கலைக்கழகங்களில் இழிபுகழ்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் (அ.ப.மா.ஒ.) இருந்து கொஞ்சம் தூர விலகிக்கொண்டது.

அரசாங்கத்தின் பிரதான இலக்கு ஜே.வி.பி. மற்றும் அ.ப.மா.ஒ. அல்ல. மாறாக அது, இலவச பல்கலைக்கழக கல்வியை காக்க முன்வரும் ஒட்டுமொத்த மாணவர்களின் எந்தவொரு முயற்சிக்கும் எதிரான தனது சொந்த வன்முறைக்கு தயார் செய்யவும் மற்றும் அதை நியாயப்படுத்தவும் அ.ப.மா.ஓ. படைத்துள்ள அரசியல் வன்முறை சாதனைகளை சுரண்டிக்கொள்கின்றது. திட்டமிடப்பட்டுவரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தமது தொழில் மற்றும் வாழ்க்கைத் தரத்தை காக்க உழைக்கும் மக்கள் முன்வரும் போது, அவர்களுக்கு எதிராகவும் அதே வழிமுறைகள் பயன்படுத்தப்படும்.

இராஜபக்ஷ அரசாங்கம், பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துவதற்காக “பொருளாதார யுத்தம்” ஒன்றை முன்னெடுக்கின்றது. நவம்பர் 22 முன்வைக்கப்படவுள்ள அதனது 2011 வரவு செலவுத் திட்டத்தின் மூலம், வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைப்பதற்கு “சக்திவாய்ந்த நடவடிக்கை” எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் விடுக்கும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சமூகநலத் திட்டங்களும் வெட்டித்தள்ளப்படவுள்ளன. கிடைக்கவேண்டிய சம்பளமும் வாழ்க்கை நிலைமைகளும் வீழ்ச்சியடைவது பற்றி தொழிலாளர்கள் மத்தியில் அபிவிருத்தியடைந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அமைதியின்மையைப் பற்றியும் அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.

புலிகள் தோல்வியடைந்து 18 மாதங்கள் கடந்த பின்னரும் இன்னமும் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் சட்டவிரோதமாக்குதல், ஊடகங்களை தணிக்கை செய்தல் மற்றும் தனிநபர்களை விசாரணயின்றி தடுத்துவைத்தல் உட்பட பரந்த அதிகாரங்களை இராஜபக்ஷ கொண்டுள்ளார்.

பொதுக் கல்வியையும் மற்றும் தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் காத்துக்கொள்வதற்கு மாணவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். அதாவது, சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழிலாளர்-விவசாயிகளது அரசாங்கத்துக்காகவும் நடத்தும் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் அரசியல் ரீதியில் சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராட வேண்டும். தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசுகளை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் பாகமாக சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் அபிவிருத்தி செய்யும் முன்நோக்கு இதுவேயாகும்.