சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Haiti’s cholera toll: An indictment of imperialism

ஹைத்தி காலரா உயிரிழப்பு: ஏகாதிபத்தியம் பற்றிய ஒரு குற்றப்பத்திரிகை

Bill Van Auken
1 November 2010

Use this version to print | Send feedback

சென்ற ஜனவரியில் பூகம்பத்தால் நேர்ந்த பெருத்த உயிர்ச் சேதங்களில் போலவே, ஹைத்தியில் காலரா பரவலும் ஏதோ இயற்கைப் பேரழிவு அல்ல, மாறாக நூற்றாண்டு காலங்களாக ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் உருவாக்கப்பட்ட திக்கற்ற வறுமையின் விளைபொருளே ஆகும்.

இக் கரீபிய நாட்டின் பெரும்பாலும் மத்திய மற்றும் வடக்குப் பகுதியில் காலரா பரவலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 337ஐ எட்டியிருப்பதாகவும், 4000 பேருக்கும் அதிகமாக இந்த நோய் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ஞாயிறன்று ஹைத்திய மற்றும் சர்வதேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.   

நீரினால் பரவும் இந்நோய் கட்டுப்படுத்த முடியாத வாந்திபேதியை உருவாக்கி நீரிழப்பால் சில மணிநேரங்களுக்குள் உயிரிழப்புக்குக் காரணமாகக் கூடியதாகும். காலரா பீடித்த 75 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் எதுவும் காட்டாதிருக்கிறது என்பதால், பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை 15,000 இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த நோய் பீடிப்பது முற்றி “பத்தாயிரக்கணக்கில்” உயிர்ப் பலி நேரக் கூடும் என்று ஹைத்திய சுகாதார அமைச்சக மற்றும் ஐநா அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தலைநகர் போர்ட்-ஆஃப்-பிரின்சின் சேரிகளுக்குள் காலரா பரவுமாயின் அது ஏறக்குறைய கட்டுப்படுத்தவே முடியாத ஒன்றாகி விடும். குறிப்பாக 1,300 அழுக்குமண்டிப் போன குடிசை நகரங்கள் எளிதாய் இலக்காகத்தக்கவையாக உள்ளன. நாட்டின் பேரழிவான பூகம்பம் சுமார் கால் மில்லியன் மக்களைக் காவு கொண்டதற்கு 10 மாதங்களுக்கு பின்னரும், இந்த குடிசை நகரங்கள் இன்னும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் 1.3 மில்லியன் மக்களைக் கொண்டிருக்கின்றன.

தலைநகரில் நோய் வெடிப்பை உறுதி செய்ய ஹைத்திய அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதான பரவலான சந்தேகம் இருப்பினும், ஏற்கனவே ஆறு காலரா சம்பவங்கள் போர்ட்-ஆஃப்-பிரின்சில் இருந்து வெளியாகியுள்ளன. நாட்டின் மையப் பகுதியில் இருக்கும் கிராமப்புற ஆர்டிபோனைட் பிராந்தியத்தில் இந்நோய் பீடிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களே அவை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும் அதே நேரத்தில், விரிந்து பரந்த Cite Soleil சேரியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு இந்நோய்க்கு சிகிச்சையளித்து வருவதாய் ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், அச்சிறுமி நகரை விட்டு வெளியில் சென்றிருக்கவில்லை.

ஹைத்தியில் அல்லது மேற்கு அரைக்கோளத்தில் வேறெங்கிலும் சென்ற நூற்றாண்டில் காலராவின் இத்தகையதொரு தொற்று காணப்பட்டதில்லை.

குறைந்தபட்ச சுகாதார நிலைமைகளையும் சுத்தமான நீரையும் கிடைக்கச் செய்தாலே இந்த நோய் எளிமையாகத் தடுக்கக் கூடியதும் எளிமையாக குணப்படுத்தக் கூடியதும் ஆகும். ஆயினும், இத்தகைய நிலைமைகள் பாதிக்கும் மேலான மக்கள் படுமோசமான வறுமையில் வாழ்கின்றதான ஹைத்தியின் பெருவாரியான மக்களுக்கு எட்டாததாய் இருக்கிறது. பெருவாரியான ஹைத்தியர்கள் வாழும் கிராமப்புற பகுதிகளில் எட்டு சதவீதத்திற்கும் குறைந்த மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீருக்கு அணுகல் கிட்டுவதாக விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்காலிக குடில்களில் இளைப்பாறுகிற போர்ட்-ஆஃப்-பிரின்சு முகாம்களைப் பொறுத்தவரை, ஏறக்குறைய ஒருவருக்கும் ஓடும் நீர் வசதியே இல்லை.  

காலரா தொற்று என்பது சென்ற ஜனவரியில் ஹைத்தியைத் தாக்கிய 7.0 ரிக்டர் அளவு பூகம்பத்தின் பிந்தைய விளைவு அல்ல. இத்தகையதொரு நோய் வெடிப்புக்கு வசதியான படுபாதாள சமூக நிலைமைகள் அதற்கு வெகு முன்பிலிருந்தே நிலவி வந்தன. இந்த நிலைமைகள் தான் பூகம்பத்திற்கு ஹைத்திய மக்களை எளிதாய் இலக்காக்கி, பயங்கர உயிர்ச்சேத எண்ணிக்கைக்கு வழிவகுத்தது.

அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கரங்களில் இந்த கரீபிய நாடு ஒரு நூற்றாண்டு காலம் சுரண்டப்பட்டதாலும் மற்றும் ஒடுக்கப்பட்டதாலும் உருவாக்கப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் தான் இந்த நிலைமைகளின் கீழமைந்துள்ளன. அமெரிக்க இராணுவப் படைகளும் அடுத்தடுத்த அமெரிக்க-ஆதரவு சர்வாதிகாரங்களும் (இவற்றில் மிக இழிபுகழ் பெற்றது துவாலியெ வம்சம், இது சுமார் 30 ஆண்டுகள் டோண்டான்ஸ் மெகவுட்ஸ் (Tontons Macoutes) கொலைப் படைப் பயங்கரத்தைக் கொண்டு நாட்டை ஆட்சி செய்தது) மக்களின் மீது நடத்திய மிருகத்தனமான அடக்குமுறையின் மூலமாக இந்த வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் மேலாதிக்கம் திணிக்கப்பட்டது.

சென்ற ஜனவரியில் நிகழ்ந்த பூகம்பத்தையொட்டி ஹைத்தியின் நிலைமைக்கான ஒபாமா நிர்வாகத்தின் எதிர்வினை இந்த அவமானகரமான பாரம்பரியத்தின் வழியிலேயே முழுவதுமாய் அமைந்திருக்கிறது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் ஹைத்தியின் செல்வம் படைத்த சிலவராட்சிக்கும் எந்த வெகுஜனக் கிளர்ச்சியும் சவால் எழுப்பி விடாமல் இருப்பதை உறுதி செய்ய தலைநகரின் மூலோபாயப் பகுதிகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற 12,000 துருப்புகள் கொண்ட ஆயுதமேந்திய அமெரிக்க இராணுவப் படையை அனுப்பியது தான் அதன் உடனடியான பதிலிறுப்பு. பாதுகாப்பு பராமரிக்கப்படும் என்பது உறுதியான உடனேயே, இந்த படை திரும்பப் பெறப்பட்டு, ஹைத்தி சுக்குநூறான நிலையிலேயே விடப்பட்டது. பூகம்பத்திற்கு முன்பே ஏற்கனவே பேரிடருற்ற நிலையிலிருந்த ஹைத்தியின் நொருங்கிப் போன உள்கட்டமைப்பை சீரமைக்க எதுவுமே செய்யப்படவில்லை. போர்ட்-ஆஃப்-பிரின்சில் எந்த மறுகட்டுமானத்திற்கும் முன்னவசியமானதாய் இருக்கும் இடிபாடுகளை அகற்றும் பணியே வெறுமனே 2 சதவீதம் கூட முடிந்தபாடில்லை.

அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் மில்லியன் கணக்கான சாதாரண மக்கள் ஹைத்திக்கு உதவுவதற்கான விண்ணப்பத்திற்கு சக்திவாய்ந்த வகையில் பதிலிறுத்த அதே சமயத்தில், ஏறக்குறைய அந்த உதவியில் எதுவுமே ஹைத்தி மக்களுக்கு சென்று சேரவில்லை.

உதவியில் 2010-2011ல் வழங்கப்படுவதற்கு உலக அரசாங்கங்கள் உறுதியளித்திருந்த 5.3 பில்லியன் டாலர் தொகையில் 2 சதவீதத்திற்கும் குறைவாகத் தான் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தான் உறுதியளித்த 1.15 பில்லியன் டாலரில் ஒரு பென்னியைக் கூட வழங்காமல் அமெரிக்காவே உதாரணமாய் நிற்கிறது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத குற்றவியல் செயலிழப்பானது ஹைத்திய மக்களை காலரா தொற்றுநோயின் பிடியில் பெருமளவில் நிராயுதபாணியாய் நிறுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து வருவதாயிருந்த கொஞ்ச உதவியும் ஹைத்தியின் நெருக்கடியை ஆழப்படுத்தவே செய்திருக்கிறது. இந்த நாட்டிற்கு மலிவு அரிசிக்கான ஏற்றுமதிக்கு அமெரிக்கா மானியம் அளிக்கிறது, இது உள்ளூர் விவசாயிகளுக்கு பாதகமாகி உள்ளதோடு ஹைத்தியின் விவசாயத் துறையையே திவாலாக்க அச்சுறுத்துகிறது, இத்துறையை நம்பியே மக்களில் 66 சதவீதம் பேர் உயிர்வாழ்கின்றனர்.

அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஹைத்தியின் சரணடைவை ஆழப்படுத்துவதற்கும் பிராந்தியத்தில் அமெரிக்க மூலோபாய நலன்களை முன்செலுத்துவதற்குமான ஒரு கருவியாக அமெரிக்கா பிரயோகிக்கும்  “உதவி” என்கிற நீண்டகாலக் கொள்கையின் ஒரு பகுதியாகும் இது.

இந்த வழிமுறைகள் எல்லாம் இப்போதைய காலரா பரவலில் ஒரு வெகு நேரடியான பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றன. ஜனாதிபதி ஜேன்-பேர்ட்ராண்ட் அரிஸ்டைடின் (Jean-Bertrand Aristide) அரசாங்கத்தை (இவர் 2004ல் அமெரிக்க ஆதரவு கவிழ்ப்பில் தூக்கியெறியப்பட்டார்) பலவீனப்படுத்தும் ஒரு முயற்சியில் ஹைத்தியின் நீர் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கென அமெரிக்கா-இடையிலான அபிவிருத்தி வங்கி ஒதுக்கீடு செய்வதாய் இருந்த கடன்களை அமெரிக்கா தடுத்து விட்டது, நடப்பு காலரா வெடிப்பின் மையமாய் இருக்கும் ஆர்டிபோனைட் பிராந்தியத்திற்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான கட்டமைப்பும் இதில் அடங்கும். 

ஹைத்திய மக்களின் நிலைமை தனித்துவமானது அல்ல. இக்கோளமெங்கும் பில்லியன் கணக்கான மக்கள் இதேபோன்ற படுபயங்கர வறுமை நிலைமையை எதிர்கொள்வதோடு நவீன தொழில்நுட்பம் ஒட்டுமொத்தமாய் தடுக்கக் கூடியதாய் ஆக்கியிருக்கக் கூடிய பழைய நோய்களுக்கும் இரையாகின்றனர்.

நைஜீரியாவில் 1,500 பேர் காலராவால் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் மூன்று அமெரிக்க நாடுகள் இந்நோய் பரவும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சென்ற வாரம் தெரிவித்தது. பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலும் நோய் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 5 மில்லியன் காலரா பாதிப்பு நேர்வுகள் நடப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது, இதில் 100,000 ல் இருந்து 120,000க்குள்ளான எண்ணிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பு நிகழ்கிறது. உலக சுகாதார அமைப்பு கூறுவதன் படி இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது, இது நெருக்கடியில் இருக்கும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட திக்கற்ற நிலைமைகளின் ஒரு வெளிப்பாடாய் அமைந்துள்ளது.

நீர்வழியான நோய்களின் மொத்தமான புள்ளிவிவரம் இன்னும் திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு கூறுவதன் படி, அவை இந்த ஆண்டு 1.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைப் பலிகொள்ள இருக்கிறது, இவர்களில் 90 சதவீதம் பேர் ஐந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள். அதாவது, அடிப்படை சுகாதாரம் மற்றும் சுத்தமான நீருக்கான அணுகல் இன்றி ஒவ்வொரு நாளும் சுமார் 4,000 குழந்தைகள் இறக்கின்றனர்.

ஹைத்தியிலும் சரி சர்வதேசரீதியாகவும் சரி இந்த நிலைமைகள் தப்பித்துக் கொள்ள முடியாத வண்ணம் இலாப அமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றம் ஆகும். இந்த இலாப அமைப்பு அனைத்து மனித முயற்சிகளையும் ஒரு குறுகிய நிதித்துறை உயர் தட்டினரின் செல்வம் செழிக்க அடிபணியச் செய்து விட்டு மில்லியன்கணக்கான மக்களை இந்த இழுபறியின் பகுதியாய் சாவதற்கு சபிக்கிறது.  

நடப்பு சமூக ஒழுங்கில் ஒரு அடிப்படையான மாற்றம் இல்லையெனில், இந்த மில்லியன்கணக்கான மக்கள் தடுக்கத்தக்க குணப்படுத்தத்தக்க நோய்களுக்கு தங்களது வாழ்க்கைகளை தொடர்ந்து இழந்து கொண்டு தான் இருப்பார்கள். இலாப அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளாக வறுமையை ஒழிப்பது என்பது சாத்தியமற்றதாகும்.

முதலாளித்துவ அமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் உலகளாவிய பொருளாதார வாழ்வினை இலாபத்திற்கு அடிபணிவதில் இருந்து விடுவித்து அதனை உலகின் அனைத்து மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்பதன் மூலம் மறுஒழுங்கமைவு செய்வதும் தான் ஹைத்தியிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் முன்வைக்கப்படும் போராட்டம் ஆகும்.