WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
2010 தேர்தல்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் ஜனநாயகக் கட்சி
Patrick Martin
29 October 2010
Use this version to print | Send
feedback
2010 தேர்தல் பிரச்சாரங்கள் முடிவதற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் ஒரு விடயம் தெளிவாக உள்ளது: ஒபாமா நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியினரும் இன்னும் வலதிற்கு கூடப் பாய்வதற்கான தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளனர் என்பதே அது.
குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த காங்கிரசை மக்கள் நிராகரித்து பாரியளவில் வாக்களித்து ஜனநாயகக் கட்சியினருக்கு பெரும்பான்மை கொடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும், வெள்ளை மாளிகைக்கு பாரக் ஒபாமா 7 மில்லியன் வாக்குகளில் வெற்றி பெற்று வந்து 2 ஆண்டுகளுக்கு பின்னரும், நிர்வாகத்தின் வலதுசாரிக் கொள்கைகள் ஒபாமாவின் தெளிவற்ற “நம்பிக்கை”, “மாற்றம்” பற்றிய முறையீடுகளினால் மக்களிடையே ஏற்பட்டிருந்த நப்பாசைகளை தகர்த்துவிட்டன.
மில்லியன் கணக்கான மக்கள் ஜனநாயகக் கட்சியை பெருவணிகத்தின் இரண்டாம் கட்சி எனவும், உள்நாட்டிலும் வெளியிலும் பெருநிறுவன நலன்களைக் பாதுகாக்க உறுதி கொண்டுள்ளது என்று காண்கின்றனர். ஆனால் அமெரிக்க இருகட்சி முறை வடிவமைப்பிற்குள், தங்கள் வெறுப்பையும் சீற்றத்தையும் தேர்தல் தினத்தன்று வாக்களிக்க செல்லாதுவிடுதல் அல்லது இன்னும் வலதுசாரித்தன்மை கொண்ட பெரு வணிககட்சியினர் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களித்தல் என்பதை தவிர மக்களுக்கு வேறு விதத்தில் வெளிப்படுத்த முடியாத நிலைதான் உள்ளது.
தேர்தலின் ஒருங்கிணைக்கப்பட்ட திரித்த தன்மை உள்ள நிலையில், 4 பில்லியன் டாலருக்கும் மேல் செலவழிக்கப்பட்டுள்ள தன்மையில், அதுவும் அதிகமாக செல்வந்தர்கள் மற்றும் பெருநிறுவன நலன்கள் செய்துள்ள நிலையில், பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள செய்தி ஊடகம் இரு உத்தியோகபூர்வ கட்சிகளுக்கு மாறான ஒரு அரசியல் மாற்றீடுகள் பற்றி எந்தக் கருத்தையும் அடக்கத்தான் செய்கின்றது. நவம்பர் 2 வாக்கெடுப்பின் விளைவு கட்டாயம் ஒரு முரண்பட்ட தன்மையைத்தான் இயல்பாகக் கொண்டிருக்கும்.
பெருமந்த நிலைக்கு பின்னர் மாபெரும் பொருளாதார நெருக்கடிப் பாதிப்பின்கீழ் உள்ள அமெரிக்க மக்கள் பரந்த முறையில் கருத்துக் கணிப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தெரிவிப்பது போல் இடதுக்கு நகர்கின்றனர். ஆனால் அந்த வாக்குகெடுப்பு பற்றிய உத்தியோகபூர்வ விளக்கம் செய்தி ஊடகப் பண்டிதர்களின் ஆயிரக்கணக்கான கருத்துக்களால் வலியுறுத்தப்பட்டு இருகட்சியின் அரசியல்வாதிகளாலும் எதிரொலிக்கப்படுவது முற்றிலும் எதிரிடையாக உள்ளது. அமெரிக்க வாக்காளர் ஒரு நிதிய சிக்கனத்தை கோரும், செல்வந்தர்களுக்கு இன்னும் வரிச்சலுகைகளை நாடும் மற்றும் வங்கிகள், பெருநிறுவனங்கள் இன்னும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செயல்பட வேண்டும் என விரும்பு ஜனநாயக கட்சியின் தாராளவாத அத்துமீறல்கள் என்று கூறப்படுபவற்றை நிராகரித்து வாக்களிப்பர்.
வியாழனன்று வாஷிங்டன் போஸ்ட் ஒரு புதிய கருத்துக் கணிப்பு பற்றிய தகவலை கொடுத்துள்ளது. அதன்படி அமெரிக்க மக்களில் 53 சதவிகிதத்தினர் தங்கள் அடுத்த அடைமானத் தவணையை கொடுக்க அல்லது வாடகையைக் கொடுக்க முடியாமல் இருப்பது பற்றித் தீவிர கவலை கொண்டுள்ளனர். இது செப்டம்பர் 2008 வோல்ஸ்ட்ரீட் சரிவின்போது இருந்த 37 சதவிகிதத்தினர் என்ற எண்ணிக்கையில் இருந்து அதிகரித்துவிட்டது.
கருத்துத் தெரிவித்தவர்களில் 65% நெருக்கடிக்கு காரணம் அடைமானத்திற்கு கடன் கொடுத்தவர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் வீடுகள் ஏலத்திற்கு விடப்படுவதற்கு இடைக்கால, உடனடி நிறுத்தம் வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்றும் தெரிய வருகிறது. இருந்தபோதிலும்கூட, ஒபாமா நிர்வாகம் அத்தகைய இடைக்கால நிறுத்தத்திற்கான கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்துவிட்டது. மக்களை வீடுகளில் இருந்து அகற்றுவதற்கு வங்கிகள் மோசடி ஆவணங்களைப் பயன்படுத்துகின்றன என்ற பரந்த தகவல்கள் வந்தும் இந்த நிலைதான் உள்ளது.
ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழைந்த கணத்தில் இருந்து இந்த வலதுசாரி நிலைப்பாடு தொடர்கிறது. வங்கிகள் பிற நிதி நிறுவனங்களுக்கு பிணை எடுப்பதற்கு அனைத்தும் செய்யப்பட வேண்டும், ஆனால் தங்கள் வேலைகள், வீடுகள் ஆகியவற்றை இழக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர் வர்க்கத்தின் விதி பற்றி முழுப் பொருட்படுத்தாத் தன்மைதான் நிலவுகிறது.
அதே தினத்தில் வெளியிடப்பட்ட ஒரு நியூ யோர்க் டைம்ஸ் கருத்துக் கணிப்பு மக்களின் முக்கிய பிரிவுகள் ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து விலகுகின்றன என்றும், மகளிர், குறைந்த வருமானம் உடைய குழுக்கள், மற்றும் பொதுவாகச் சார்பு இல்லாத வாக்காளர்கள் ஆகியோரின் ஆதரவு இழப்பை அவர்கள் பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கருத்துக் கணிப்பின் முடிவுகள் குடியரசுக் கட்சிக்கு எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை; இது ஜனநாயகக் கட்சியை விட குறைந்த ஆதரவைத்தான் கொண்டுள்ளது. பலரும் பொருளாதாரச் சரிவிற்கான காரணம் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்தான், ஒபாமா அல்ல என்கின்றனர். தேநீர் விருந்து இயக்கத்துடன் பிணைப்பு கொண்டுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் தீவிர வலதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவு ஏதும் இல்லை. அதிக பெரும்பான்மைக் கருத்துகள் ஓய்வூதிய வயதை உயர்த்துதல், நலன்களைக் குறைத்தல் போன்ற சமூகப் பாதுகாப்பில் வந்துள்ள குறைப்புக்களை எதிர்க்கின்றன.
ஒபாமா நிர்வாகத்தின் முதல் இரு ஆண்டுகள் ஜனநாயகக் கட்சி ஒரு “மக்கள்” கட்சி, அல்லது “மத்தியதர வகுப்பின்” கட்சி என்ற பாசாங்குத்தனத்திற்கு பெரிய அடியைக் கொடுத்துள்ளன. இக்கட்சி நிதிய உயரடுக்கின் முக்கிய பிரிவுகளுக்காகவும், மத்திதர வர்க்கத்தின் அதிக சலுகைகள் பெற்ற, வசதியாக வாழும் பிரிவுகளுக்குத்தான் வாதிடுகிறது. அதில் தொழிற்சங்க அதிகாரத்துவமும், பொதுஉரிமைகள் அமைப்பு மற்றும் ஆபிரிக்க அமெரிக்கர்களின் செல்வம் படைத்த தட்டுக்கள், பிற சிறுபான்மையினர், குட்டி முதலாளித்துவத்துவ இடது தாராளவாதிகள் மற்றும் அரசியல் அடையாளத்திற்காக நீண்டகாலம் முன்னரே வர்க்கப் போராட்டக் கருத்தைக் கைவிட்ட முன்னாள் தீவிரவாதிகள் ஆகியோர் அடங்குவர்.
இரு பெரும் வணிகக் கட்சிகளும் ஏற்கனவே தேர்தலுக்குப்பின் வரும் நிகழ்வுகளுக்கு தயாரிப்புக்களை தொடங்கிவிட்டன. செனட்டின் குடியரசுக் கட்சித் தலைவர் மிட்ச் மக்கோனெல் National Journal க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் குடியரசுக் கட்சியினர் தங்கள் 1994 தவற்றினை மீண்டும் செய்ய மாட்டார்கள், அதாவது அரசாங்கச் செயற்பாடுகளை முடக்கிவிடக்கூடும் என்பதற்காக நிர்வாகக் கொள்கைகளை நிராகரிக்க முற்படாது என்று கூறினார். மாறாக அவர்கள் “பணியை முடிக்க” முற்படுவர், “ஜனாதிபதி ஒபாமா ஒரு பதவிக்கால ஜனாதிபதிதான் என்ற நிலையைச் சாதிப்பதுதான் மிக முக்கியமான ஒற்றைப் பணி” என்றும் கூறினார்.
தேர்தலில் ஒரு தோல்வியினை எதிர்பார்க்கும் தன்மை முன்னிழலிடப்பட்டுள்ளதுடன் ஜனநாயகக் கட்சி இன்னும் வலதிற்கு நகர்வதற்கான சாத்தியம் காணப்படுகையில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அவர்களுக்கு இழிந்த தாழ்ந்த முறையில் பிரதிபலித்தனர். செய்தித் தொடர்பு மந்திரி ரோபர்ட் கிப்ஸ் குடியரசுக் கட்சியினரிடம் இரந்து ஒத்துழைப்பை நாடும் வகையில் வாதிட்டுள்ளார்: “இப்பிரச்சாரம் முடிந்த பின் வரவிருக்கும் வாரங்கள் மாதங்களில், வாக்காளர்கள் கொடுக்க இருக்கும் தகவல், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் என்ற முறையில் நாம் பெற இருக்கும் தகவல், நாம் ஒன்றாக உழைக்க வேண்டும் என்பதுதான்.”
“அரசியல், தேர்தல் காலம் முடிந்து நாம் மீண்டும் நாட்டை ஆளும் செயலில் ஈடுபடும்போது, இந்த ஜனாதிபதி முன்பு செய்துள்ளதைப் போல் குடியரசுக் கட்சியுடன் சிறந்த முறையில் இணைந்துதான் செயல்படுவார்.” என்றார் கிப்ஸ். இதற்கு திமிர்த்தனமாக மக்கோனெல் விடையிறுக்கையில், ஒபாமா “ஒரு கிளின்டன் போன்ற பின்புற அந்தர்பல்ட்டி அடிப்பதில் ஈடுபட்டாலும், முக்கிய பிரச்சினைகளில் எங்கள் பாதையில் பாதி வந்தாலும், அவரோடு தொடர்பு கொள்வது எங்களுக்குப் பொருத்தமாக இராது.”
காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினருடன் சேர்வதற்கு ஒபாமா ஒன்றும் அத்தகைய உடல்ரீதியான கரணங்களைப் போட வேண்டிய தேவையில்லை; ஏனெனில் இவர் தேர்தல் காலத்தில் வேறுவிதமாக காட்டிக் கொண்டாலும், அத்தகைய பல்டியைத்தான் பெரிதும் செய்து வந்துள்ளார். வெள்ளை மாளிகை புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையை அதிக மாறுதலின்றி நபர்களை தக்க வைப்பது உட்பட தொடர்கிறது. பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் மற்றும் தளபதி டேவிட் பெட்ரீயஸ் ஆகியோர் முக்கிய பங்கைத்தான் கொண்டிருக்கின்றனர்.
உள்நாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை, பின்புல விவாதங்கள் ஏற்கனவே தேர்தலுக்குப் பின்னர் வரவேண்டிய ஒருமித்த உணர்வு பற்றித் தொடங்கி விட்டது; இதில் புஷ்ஷின் செல்வந்தர்களுக்கான வரிக்குறைப்புக்களும் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தை நடத்துகையில் ஆண்டு ஒன்றிற்கு $200,000 த்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிக் குறைப்புக்கள் நிறுத்தப்படும் என்று கூறினார். ஆனால் துணை ஜனாதிபதி பிடென் கடந்த வாரம் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்படலாம் என்றார். அந்த நிலைப்பாடு பல ஜனநாயக வேட்பாளர்களுக்கு தீவிரப் போட்டியாக இருக்கும் பிரதிநிதிகள் மன்றம், செனட் தொகுதிகளில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
வியாழனன்று வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலில் வந்த தகவல்படி, தாராளவாத ஜனநாயக செனட்டர் ரஸல் பெயிங்கோல்ட் தீவிர வலதுசாரி குடியரசுக் கட்சியின் டோம் கோபம் உடன் “கூட்டாட்சி உதவித் தொகைகள் இன்னும் பல செலவினத் திட்டங்களில் தொகையைக் குறைக்க சட்டத்திற்கு ஒத்துழைப்பதாக” தெரியவந்துள்ளது. இதைத்தவிர வணிகக் கொள்கையில் உடன்பாடுகளுக்கான சாத்தியம் உண்டு, பொது மக்களை பேரழவிற்கு உட்படுத்திய பொதுக் கல்வி முறையில் கொண்டுவரப்பட்டிருந்த எந்தவொரு குழந்தையும் விடப்படவில்லை (No Child Left Behind Law) வைப் புதுப்பிக்கவும் திட்டம் உண்டு. பைனான்சியல் டைம்ஸ் ஒபாமா வணிகச் செல்வாக்கு நாடுவோரிடம் பெருநிறுவன வரிவிகிதத்தை 35ல் இருந்து 24 சதவிகிதம் கொண்டுவரத் தான் தயார் என்று கூறியதாக தெரிவித்துள்ளது; சட்டத்தில் உள்ள ஒட்டைகள் மூடப்படுவதின் மூலம் இது இயலும் என்றும் இத்தகைய “சீர்திருத்தம்” 1986 ல் குடியரசுக் கட்சி ஜனாதிபதி ரோனால்ட் ரேகனின் ஆதரவைக் கொண்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 தேர்தல் தொழிலாள வர்க்கத்திற்கு முன் ஒரு புதிய அரசியல் முன்னோக்கின் தேவையை முன்வைக்கிறது. பெருநிறுவன கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இருகட்சி முறை ஒரு முட்டுச் சந்து ஆகும். வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் மீதான பெருகும் தாக்குதலை எதிர்த்துப் போராடவும், இராணுவ வாதம் மற்றும் போரைத் தளமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையை எதிர்க்கவும், ஒரே வழி ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் இருவருடனும் முறித்துக் கொண்டு சோசலிசம், சர்வதேசியம் இவற்றின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டமைப்பதுதான்.
|