World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil :

9-The split in the International Committee

அனைத்துலகக் குழுவில் பிளவு

Back to screen version

225. 1985 ஜனவரியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் 10வது காங்கிரஸ் லண்டனில் நடந்தது. இது ஹீலி மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சி [இனிவரும் இடங்களில் WRP] குறித்து டேவிட் நோர்த் எழுப்பியிருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் விமர்சனங்களுக்கு பின் கூட்டப்பட்ட முதல் மாநாடாகும். தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொடுத்தது 1973-1985 என்கின்ற தனது அறிக்கையில் அனைத்துலகக் குழு பின்வருமாறு விளக்கியது: "ஒன்றுடன் ஒன்று பிணைந்த இரண்டு உண்மைகள் நிகழ்வுகளில் ஆதிக்கம் செலுத்தின, அவை இரண்டுமே விவாதிக்கப்படவில்லை என்றாலும் கூட. முதலாவது WRP க்கு உள்ளிருந்த பேரழிவூட்டும் அரசியல் நெருக்கடி. இரண்டாவது, முந்தைய மூன்று வருட காலங்களில் அனைத்துலகக் குழுவிற்குள் எழுந்திருந்த அரசியல் கருத்துவேறுபாடுகள் அடக்கப்பட்டது. WRP இன் அரசியல் சீரழிவு அனைத்துலகக் குழுவிற்கு உள்ளேயான நெருக்கடியின் இருதயத்தானத்தில் அமைந்திருந்தது. பிரிட்டிஷ் பிரிவு, உலக இயக்கத்திற்கு தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான தலைமை வழங்க வேண்டிய தனது பொறுப்பைக் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அது தான் இப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவிற்குள் திருத்தல்வாத அரசியல் மற்றும் நோக்குநிலை பிறழ்வின் பிரதான மூலமாகவும் இருந்தது. அனைத்துலகக் குழுவினுள் அதன் பணி, உலகளவில் உடைக்கும் செயல்பாட்டின் தன்மையை பெற்றிருந்தது." மாநாட்டு ஆவணம் மார்க்சிச பகுப்பாய்வு, வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகளை கேலிக்கூத்தாக்கும் வகையில் அமைந்திருந்தது. அத்துடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு மற்றும் அதன் பிரிவுகளை எதிர்கொண்ட அரசியல் சூழ்நிலை மீதான எந்த விவாதத்தையும் தடுக்க, ஹீலி-பண்டா-சுலோட்டரை சேர்ந்த கூட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்ச்சியான திட்டமிட்ட ஆத்திரமூட்டும் செயல்கள் நிகழ்வுகளில் ஆதிக்கம் செலுத்தின.

226. ஆனாலும், சில மாதங்களுக்குள்ளாகவே, கட்சியின் அரசியல் சீரழிவின் ஆழத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு வடிவத்தில் WRP க்குள் நீண்டகாலமாக புரயோடிக்கொண்டிருந்த நெருக்கடி மேற்பரப்புக்கு வந்தது. 1985 ஜூலை 1 அன்று ஹீலியின் வெகுநாள் அந்தரங்க காரியதரிசி விட்டோடிவிட்டார். ஒரு நெடுங்காலத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான கட்சியின் பெண் காரியாளர்களிடம் அவர் மோசமாக நடந்து கொண்டிருந்ததை பட்டியலிடும் ஒரு கடிதத்தை அவர் விட்டுச் சென்றிருந்தார். பிரிட்டிஷ் பிரிவுக்குள் இந்த உண்மைகள் வெடிப்பு மிகுந்த பின்விளைவுகளை கொண்டிருந்த போதும், WRP தலைமை இதனை அனைத்துலகக் குழுவிற்குள் மூடிமறைத்துவிட முனைந்தது. ஆகஸ்ட் மாதத்தில், தவறான முறையில் புதிய வரி விதிப்புகளை காரணமாகக் கூறி WRP க்குள் தோன்றியிருந்த நிதி நெருக்கடி குறித்த ஒரு அறிக்கையை விசாரிப்பதற்காக கூட்டப்பட்ட அனைத்துலகக் குழு கூட்டத்தில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டிருந்தது. பத்தாயிரக்கணக்கான டாலர்களை உறுதியளிக்க அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் கோரப்பட்டபோது, அவையும் அவ்வாறே செய்தன. WRP க்குள் உருவாகிக் கொண்டிருந்த கொந்தளிப்பு குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை.

227. ஹீலியை வெளியேற்றுவதற்கான குற்றச்சாட்டுகள் WRP மத்தியக் குழுவினால் ஏற்கனவே வைக்கப்பட்ட பின்னரே, அக்டோபர் 12, 1985 அளவில்தான் முதன்முதலாய் இந்த நெருக்கடி குறித்து சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமைக்கு தெரியவந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு தேசிய செயலராய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிக் பீம்ஸ் தலைமையில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அனைத்துலகக் குழுவின் செயலரான கிளீஃவ் சுலோட்டருக்கு ஒரு கடிதம் அனுப்பி பதிலிறுத்தது. WRP இல் உள்ள அரசியல் சூழ்நிலை மீதான ஒரு அறிக்கையை விசாரிக்கவும் ஹீலிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மதிப்பீடு செய்யவும் லண்டனில் நா.அ.அ.கு.வின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவது தான் முன்னே இருக்கும் ஒரே கோட்பாடான வழி என அக்கடிதம் வலியுறுத்தியது. இதனையடுத்து ஹீலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டதாய் தெரிய வந்ததன் பின்னர், பீம்ஸ் உடனடியாக லண்டன் பயணம் செய்துடன், புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) தேசிய செயலரான கீர்த்தி பாலசூரியாவுக்கும் இதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

228. இந்த பிரதிபலிப்பிற்கு ஒரு ஆழமான அரசியல் முக்கியத்துவம் இருந்தது. 1953ம் ஆண்டில், பப்லோவாதிகளின் கைகளில் கலைக்கப்படும் அபாயத்தை நான்காம் அகிலம் கண்டபோதும், போருக்குப் பிந்தைய ஸ்திரப்படுத்தலால் உருவாக்கப்பட்டிருந்த தீவிர தேசிய அழுத்தங்களுக்கு ஓரிக்ளாஸ் சரணடைந்திருந்தது ஆஸ்திரேலியாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அழிவில் முடிந்தது. 1985ல், சர்வதேச இயக்கத்தின் அரசியல் அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டிய, பாதுகாக்க வேண்டிய அவசியத்தின் மீதான புரிதலின் அடிப்படையில் பீம்ஸ் இங்கிலாந்து பயணிக்க வேண்டும் என்று பீம்ஸ் மற்றும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு எடுத்த முடிவு அனைத்துலகக் குழுவினுள்ளும் மற்றும் சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தைப் புதுப்பிக்க பங்களித்தது.

229. லண்டனில் நடந்தவற்றை அனைத்துலகக் குழுவின் தீர்மானம் பின்வருமாறு விளக்கியது: "அவசரக் கூட்டத்திற்காக கூடியிருந்த அனைத்துலகக் குழு பிரதிநிதிகள் எதிர்கொண்ட காட்சி விவரிக்க முடியாதது. நன்றாய் ஓடிக் கொண்டிருந்த எந்திரம் போல தோன்றியிருந்த ஒன்று வெடித்துச் சிதறியிருந்ததோடு அதன் கொதிக்கும் துண்டுகள் அனைத்து திசைகளிலும் கொப்பளித்துக் கொண்டிருந்தன ....ஹீலியின் கீழ் WRP எவ்வளவு மோசமாக அரசியல் சீரழிவுற்றிருந்தது என்பது அவர் பயிற்றுவித்ததாய் கூறப்பட்டவர்களின் அரசியல் கையறுநிலையிலும் நோக்குநிலை பிறழ்விலும் மிகத் தெளிவாய் பிரதிபலித்தது."

230. இந்த வெடிப்புக்கு முன்னதாகவே, 1982 முதல் 1985 வரையான ஆண்டுகளுக்கு இடையே டேவிட் நோர்த் தயார் செய்திருந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த விமர்சனமான, "பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் வென்றிருந்த நடைமுறை மற்றும் அமைப்புரீதியான வெற்றிகளை, அவ்வெற்றிகளுக்கு காரணமாக இருந்த ஸ்ராலினிசம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிராக வரலாற்று ரீதியாக மற்றும் சர்வதேசரீதியாக வேரூன்றிய போராட்டங்களில் இருந்து முன்னெப்போதையும்விட மிகப்பெரியளவில் பிரித்து வைத்ததுதான்" ஹீலியின் ஊழல் நடவடிக்கைகளுக்கும் WRP இன் சீர்குலைவுக்கும் அடித்தளமாய் இருந்தது என்பதில் துரிதமான உடன்பாட்டிற்கு அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகள் வருவதற்கான நிலைமைகளை உருவாக்கியது. "ட்ரொட்ஸ்கிசத்தை கலைப்பதற்கு பப்லோவாத திருத்தல்வாதம் செய்த முயற்சிகளுக்கு எதிராக பிரிட்டிஷ் தோழர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாகத் தான் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளும் உருவாக்கப்பட்டன" என்று அக்டோபர் 25 "பிரிட்டிஷ் பிரிவின் நெருக்கடி குறித்த நா.அ.அ.கு. தீர்மானம்" வலியுறுத்தியது. கண்மூடித்தனமான தேசியவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்திற்கு பின்னர் பிரிட்டிஷ் பிரிவின் வேலைகளை மீண்டும் ட்ரொட்ஸ்கிச அடித்தளங்கள் மீது வேரூன்றச் செய்யும் உறுதிப்பாட்டோடு, அனைத்துலகக் குழு ஹீலியை வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றியது. அத்துடன் "நா.அ.அ.கு.வின் அரசியல் ஆளுமையை வெளிப்படையாய் அங்கீகரிப்பது மற்றும் அதன் முடிவுகளை பிரிட்டிஷ் பிரிவு ஏற்றுக்கொண்டு நடப்பது ஆகியவற்றின் அடிப்படையில் WRP இன் அங்கத்துவம் மறு-பதிவு செய்யப்பட வேண்டும்" என்றும் அத்தீர்மானம் வலியுறுத்தியது.[87]

231. 1982ம் ஆண்டு முதல் WRP தலைமையால் அடக்கி வைக்கப்பட்டிருந்த டேவிட் நோர்த்தின் ஆவணங்கள், மற்றும் WRP இல் நெருக்கடி குறித்த அனைத்துலகக் குழுவின் 1985 அக்டோபர் தீர்மானங்கள் ஆகியவை விநியோகிக்கப்பட்ட போது, சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளாக ஒரு கூர்மையான அரசியல் துருவப்படல் உருவானது. அனைத்துலக இயக்கத்திற்குள்ளாக அரசியல் தெளிவுபடல் அடக்கி வைக்கப்பட்டிருந்த நிலைமைகளின் கீழ் பல வருடங்களாக அசௌகரிக உணர்வுடன் சேர்ந்து வாழ்ந்திருந்த எதிரெதிர் வர்க்க போக்குகள், துரிதமாய் இரண்டு ஆழமாய் எதிர்ப்புற்ற கன்னைகளாய் வடிவமுற்றன; இந்த வடிவங்கள் அடுத்த நான்கு மாதங்களுக்கு ஏறக்குறைய எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தன. பீம்ஸ் தலைமையிலான பெரும்பான்மையினர், ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக நா.அ.அ.கு.வின் போராட்டத்தின் அடிப்படையில் நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியாக அதன் அரசியல் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியதோடு, WRP இன் சீரழிவில் இருந்த அடிப்படையான அரசியல், வரலாற்று, மற்றும் தத்துவார்த்த பிரச்சினைகளை தெளிவுபடுத்த முனைந்தனர். அதே சமயத்தில் சிறுபான்மையினர், இந்த நெருக்கடி அரசியல்ரீதியானது அல்ல, மாறாக ஹீலி "புரட்சிகர அறநெறி"யைக் கைவிட்டதால் விளைந்த விளைபொருள் என்றும், ஆஸ்திரேலிய பிரிவு உட்பட மற்ற அனைத்துலகக் குழுவின் பிரிவுகளும் "அதே அளவு சீரழிவுற்றுள்ளன" என்றும், பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் "குழு ரீதியானது" என்றும், WRP மீதோ அல்லது வேறு எந்த பிரிவின் மீதோ அனைத்துலகக் குழுவிற்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை என்றும் வலியுறுத்தினர்.

232. மத்திய கிழக்கில் இருந்த பல்வேறு ஆட்சிகளுடன் WRP இன் கையாளுகைகளை விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் குழுவிடம் இருந்து ஒரு அறிக்கையை அனைத்துலகக் குழு டிசம்பர் 16, 1985 அன்று பெற்றது. "நிரந்தரப் புரட்சி தத்துவத்தை முழுமையாகக் கைவிட்டது, அதன்விளைவாய் காலனித்துவ முதலாளித்துவத்தின் பிரிவுகளுடன் பணத்திற்காக கோட்பாடற்ற உறவுகளைப் பின்பற்றியது" ஆகியவை உள்ளிட்ட ஒரு வரலாற்று காட்டிக் கொடுப்பை நா.அ.அ.கு.வின் முதுகுக்குப் பின்னால் WRP நடத்தி வந்திருந்ததை அந்த குழு கண்டறிந்திருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவாக WRP ஐ உடனடியாக இடைநீக்கம் செய்வதற்கும், மார்ச் 1986 WRP இன் 8வது காங்கிரசை அடுத்து தனது வருங்கால உறவு குறித்து தீர்மானிப்பதற்கு நா.அ.அ.கு.வின் அவசர மாநாட்டைக் கூட்டுவதற்கும் இந்த தீர்மானம் அழைப்பு விடுத்தது. தொழிலாளர் கழகத்தின் (Workers League) மத்திய குழு டிசம்பர் 22, 1985 தீர்மானத்தில் விளக்கியது போல, "சர்வதேச கட்டுப்பாட்டுக் குழுவினால் நடத்தப்பட்ட ஒரு புறநிலை விசாரணை ட்ரொட்ஸ்கிசத்தின் காட்டிக் கொடுப்பு நிகழ்ந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது என்கின்ற உண்மையில் இருந்து இந்த நடவடிக்கைக்கான அவசியம் எழுந்துள்ளது. WRP தலைவர்கள் அனைத்துலகக் குழுவினை திட்டமிட்டு ஏமாற்றியிருக்கின்ற நிலைமைகளின் கீழ் இந்த காட்டிக் கொடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை அம்பலப்பட்டிருப்பது வழக்கம் போல் எல்லாம் நடப்பதான நிலையை அனுமதிக்கவில்லை. WRP க்கும் அனைத்துலகக் குழுவிற்கும் இடையே கோட்பாட்டு அடிப்படையிலான புதிய உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டாக வேண்டும். WRP ஐ இடைநீக்கம் செய்திருப்பது அத்தகைய உறவுகளை ஸ்தாபிப்பதை நோக்கிய முதல் தீர்மானமான படி ஆகும்." கூட்டத்தில் பங்கேற்ற WRP பிரதிநிதிகளில், அனைத்துலகக் குழுவுக்கு ஆதரவான சர்வதேசியவாத சிறுபான்மையை உருவாக்கியிருந்த டேவிட் ஹைலண்டை தவிர மற்ற அனைவரும் இந்த தீர்மானத்திற்கு எதிராய் வாக்களித்தனர்.

233. WRP ஐ அனைத்துலகக் குழு இடைநீக்கம் செய்தது ஒரு முக்கியமான தீர்மானகரமான நடவடிக்கை ஆகும். இதன் மூலம் உலகக் கட்சியானது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சர்வதேசிய கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்ட மரபியங்கள் மீதான தனது அரசியல் ஆளுமையையும் நடுநிலையையும் மறுஉறுதி செய்தது. இந்த அடிப்படை பிரச்சினைகளில் எந்த சமரசமும் இருக்கமுடியாது என்பதை அது அடிக்கோடிட்டுக் காட்டியதோடு, அந்த வகையில், நெருக்கடியை தெளிவுபடுத்துவதற்கும் அதிலிருந்து மீள்வதற்குமான நிலைமைகளையும் ஸ்தாபித்தது.

234. WRP ஐ இடைநீக்கம் செய்ததானது சோசலிச தொழிலாளர் கழகத்தின் சிறுபான்மையினர் இடையே தேசியவாத குரோதத்தின் ஒரு சீற்றத்தை உருவாக்கியிருந்தது. டிசம்பர் 27, 1985 முதல் ஜனவரி 3, 1986 வரை கூடிய கட்சியின் ஒரு சிறப்புக் கூட்டத்தில் அனைத்துலகக் குழுவின் நடவடிக்கைகளுக்கு சோசலிச தொழிலாளர் கழகத்தின் ஆதரவை அறிவிக்கும் தீர்மானம் முக்கிய விவாதப் பொருளாக ஆனது. அனைத்துலகக் குழுவிற்கு எந்த அரசியல் ஆளுமையும் இல்லை என்று, சுலோட்டரால் முன்வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையிலான சிறுபான்மையினரின் நிலைப்பாட்டிற்கு, டிசம்பர் 11 அன்று WRP இன் மத்திய குழுவிற்கு தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அனுப்பியிருந்த சக்திவாய்ந்த திறம்பட்ட கடிதத்தில் பதிலளிக்கப்பட்டிருந்தது: "துரதிர்ஷ்டவசமாக, ஹீலியால் பல ஆண்டுகள் தவறாகக் கற்பிக்கப்பட்டிருந்த நிலையில், WRP இன் தலைமைக்குள் இருக்கும் பல தோழர்களும் அனைத்துலகக் குழுவினை அலட்சியத்துடன் நோக்குவதோடு, ஒரு சிறந்த ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைக்கான அனைத்துலகக் குழுவின் அழைப்புகளை பிரிட்டிஷ் பிரிவின் வாழ்க்கையில் அநாவசியமாய் தலையிடும் ஒன்றாகக் கருதுகிறார்கள். WRP அனைத்துலகக் குழுவிற்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கானகுறிப்புகள் சில தோழர்களிடம் இருந்து ஒரு குரோதமான பிரதிபலிப்பை தூண்டியிருக்கிறது. நாங்கள் தனிப்பட்ட உறுப்பினர்களின் அகநிலை பலவீனங்களைக் கையாளவில்லை என்பது உண்மையே. WRP க்குள்ளாக சக்திவாய்ந்த தேசியவாதப் போக்குகள் நிலவுவது என்பது உலகின் மிகப் பழமையான ஏகாதிபத்திய நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அபிவிருத்தியின் அரசியல்ரீதியான பிரதிபலிப்பே ஆகும். இந்த போக்குகளை உணர்ந்து கொண்டு அவற்றுக்கு எதிராக நனவுடன் போராடும் வரை அவற்றை வெல்ல முடியும், இந்த போராட்டத்தை நடத்துவதற்கான பொறுப்பு தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமை மீது தான் விழுகிறது. இப்போது நாம் எதிர்கொள்ளும் மாபெரும் அபாயம் என்னவென்றால் சர்வதேசியவாதம் மீதான எதிர்ப்பு தலைமையால் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசிய இறைமை என்பது சோசலிசப் புரட்சிக்கான உலக கட்சியின் தலைமை அமைப்பான அனைத்துலகக் குழுவின் ஆளுமைக்கு எதிராக முன்நிறுத்தப்படுகிறது. வர்க்க கோடுகளை வரையறுத்துக் கொண்டு அவற்றின் வழியே போராடுவது தான் சர்வதேசியவாதம்என்று நோர்த்துக்கு எழுதிய கடிதத்தில் சுலோட்டர் கூறும் உறுதிப்பாட்டின் உண்மையான அர்த்தம் இது தான். ஆனால் இந்த வர்க்க கோடுகள் எந்த நிகழ்வுப்போக்கு மூலம் தீர்மானிக்கப்படுகின்றன? அதற்கு நான்காம் அகிலம் இருப்பது அவசியப்படுகிறதா? இதற்கு தோழர் சுலோட்டர் கூறும் ஆலோசனை என்னவென்றால் எந்தவொரு தேசிய இயக்கமும் தானே சொந்தமாய் வர்க்கக் கோடுகளை ஸ்தாபித்துக் கொண்டு அவற்றின் வழியே போராடுவதன் மூலம் சர்வதேசியவாதத்தின் மட்டத்திற்கு உயர முடியும் என்பது தான். இது தான் அவரது மொத்த கடிதத்திலும் பட்டவர்த்தனமாய் வெளிப்படுகின்ற உள்ளடக்கம்."[89]

235. இந்த கடிதம் சுலோட்டரின் நிலைப்பாட்டின் வர்க்க மூலங்களை துல்லியமாய் சுட்டிக் காட்டவும் சென்றது. "சர்வதேசியவாதம் குறித்த தோழர் சுலோட்டரின் வரையறையை (வர்க்க கோடுகளை வரையறை செய்து அவற்றின் வழியே போராடுவது’) ட்ரொட்ஸ்கியுடையதனுடன் ஒப்பிடுங்கள் : சர்வதேசியவாதம் என்பது ஒரு அருவமான கோட்பாடு அல்ல மாறாக உலக பொருளாதாரத்தின் தன்மையின், உற்பத்தி சக்திகளின் உலக அபிவிருத்தி மற்றும் வர்க்க போராட்டத்தின் உலகளவிலான தத்துவார்த்த மற்றும் நடைமுறை பிரதிபலிப்பே’. இங்கு தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் அடித்தளமும் சோசலிசப் புரட்சிக்கான உலக கட்சியில் அதன் ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாடுக்கான அவசியமும் அமைந்திருக்கிறது. எந்த தேசியவாத அமைப்பும், அது மார்க்சிசத்துக்கான அடியொற்றலை எவ்வளவு உரக்க எடுத்துரைத்தாலும் சரி, சர்வதேச சக சிந்தனையாளர்களுடன் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் வழியாக இல்லாமல், ஒரு புரட்சிகர முன்னோக்கை உருவாக்கவோ பராமரிக்கவோ முடியாது. ஜனநாயக மத்தியஸ்துவம் இந்த ஒத்துழைப்பின் ஒரு அத்தியாவசிய பாகம் ஆகும். கம்யூனிச அகிலத்தின் சட்ட அம்சங்கள் எல்லாம், வெறும் வடிவங்களாய்இருப்பதற்கு வெகு அப்பாற்பட்டு, சுதந்திர போட்டி முதலாளித்துவத்தில் இருந்து ஏகாதிபத்தியத்திற்கான இடைமருவல், பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுரீதியான அபிவிருத்தி மற்றும் தொழிலாளர் இயக்கத்திற்குள்ளாக ஏகாதிபத்தியத்தின் சமூக-ஜனநாயக மற்றும் சீர்திருத்தவாத முகாமைகளுக்கு எதிரான சர்வதேசிய போராட்டம் ஆகியவற்றுடன் பிரிந்துவிடாமல் இணைக்கப்பட்டுள்ளன. புரட்சிகர இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட ஒருமுகப்படுத்தப்பட்ட தன்மை பராமரிக்கப்படுவதற்கான வடிவங்களை அவை ஸ்தாபித்திருந்தன. இது தான் நான்காம் அகிலத்தின் சட்டவரைவுகளுக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சட்டவிதிகள் வலியுறுத்தும் வகையில் அனைத்துலக இயக்கத்திற்கு தேசியப் பிரிவுகள் கீழ்ப்படிவதற்கு எதிராக அணிவகுப்பவர்கள் எல்லோரும், அவர்கள் கூறும் சுதந்திரத்திற்கு விலையாகக் கொடுப்பது தேசிய முதலாளித்துவம் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படிவது என்கிற உண்மையை மறந்து போகிறார்கள்.[90]

236. சுலோட்டரும், சோசலிச தொழிலாளர் கழகத்தின் சிறுபான்மையில் இருந்த அவரது ஆதரவாளர்களும், WRP இன் காட்டிக் கொடுப்பில் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவையும் "சம அளவில் சீரழிவுற்றுள்ளன" என்றும் வாதிட்டனர். இது குழப்பத்தை உருவாக்கி உறுப்பினர்களை சர்வதேசியவாதத்திற்கான மற்றும் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமைகான நிலைப்பாட்டை எடுப்பதில் இருந்து தடுத்த இன்னுமொரு முயற்சியாக அமைந்தது. அனைத்துலகக் குழுவிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டு பல்வேறு அரபு முதலாளித்துவ ஆட்சிகளுடன் ஹீலி கொண்டிருந்த கூட்டு WRP மத்திய குழுவின் சார்பாக எடுக்கப்பட்டிருந்ததே அன்றி, அனைத்துலகக் குழுவின் சார்பாக அல்ல. ஏனைய பிரிவுகள் பணத்தை வாங்கிக் கொண்டு ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளை காட்டிக் கொடுத்திருக்கவில்லை. சிறப்புக் கூட்டத்தின் முடிவில், சோசலிச தொழிலாளர் கழகத்தின் உறுப்பினர்கள் WRP ஐ அனைத்துலகக் குழு நீக்கியதை ஆதரித்து இரண்டுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையுடன் வாக்களித்தனர்.

237. ஜனவரி 26, 1986 அன்று, நா.அ.அ.கு.வின் அரசியல் ஆளுமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அதன் உறுப்பினர்கள் மறு-பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்த அக்டோபர் 25, 1985 அனைத்துலகக் குழுத் தீர்மானங்களுக்கான ஆதரவை WRP இன் மத்திய குழு வெளிப்படையாய் மறுதலித்தது. "ஹீலியுடன் பிளவை அடுத்து, ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீது பிரிட்டிஷ் பிரிவை மறுஸ்தாபகம் செய்வதற்கு அனைத்துலகக் குழுவினால் செய்யப்படும் போராட்டத்தை WRP தலைமையில் உள்ள பெரும்பான்மையோர் தொடர்ந்து எதிர்ப்பதன் விளைவு" தான் இந்த மறுதலிப்பு என்று பிப்ரவரி 1-2 தேதிகளில் நடந்த சோசலிச தொழிலாளர் கழகத்தின் மத்திய குழு கூட்டம் அறிவித்தது. ஏப்ரலில் கட்சி காங்கிரஸ் ஒன்றை தாங்கள் நடத்தவிருப்பதையும், பங்கேற்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் உறுப்பினர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை அங்கீகரித்திருக்க வேண்டும் என்றும் மத்திய குழு தீர்மானித்தது.

238. 1986, பிப்ரவரி 8ல் நடந்த WRP இன் 8வது காங்கிரஸில், அனைத்துலகக் குழுவுக்கு ஆதரவான சிறுபான்மையினர் போலிசாரால் வெளியேற்றப்பட்டனர். முதலில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை குழிதோண்டி புதைப்பதற்கு அழைப்பு விடுத்து மைக்கல் பண்டாவால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணம் Workers Press மூலம் வெளியிடப்பட்டு, அதன்பின் கூடிய பேரவை "நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு லியோன் ட்ரொட்ஸ்கி 1938ம் ஆண்டில் ஸ்தாபித்த நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று அறிவித்த ஒரு தீர்மானத்தை தாங்கியிருந்தது. இந்த பேரவை தீர்மானம் WRP பெரும்பான்மையினருக்கும் அனைத்துலகக் குழுவிற்கும் இடையில் ஒரு தீர்மானமான பிளவை அடையாளப்படுத்தியது.

239. மார்ச்சில் சோசலிச தொழிலாளர் கழகம் அழைத்திருந்த ஒரு சிறப்புக் கூட்டத்தில், பெரும்பான்மையானோர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆளுமையை உறுதி செய்தனர். சிறுபான்மை எண்ணிக்கையிலானோர் சுலோட்டர் தலைமையிலான WRP க்கு தங்களது ஆதரவைத் தெரிவித்ததோடு, மறுநாளே கட்சியை விட்டும் விலகினர். ஸ்தாபிக்கப்பட்டது முதல் சோசலிச தொழிலாளர் கழகம் ஏராளமான சிக்கல்களான ஆஸ்திரேலிய பிரத்தியேகவாதம் மற்றும் தனிமைப்படலுடன் தொடர்புபட்ட தேசியவாத அழுத்தங்கள், தேசிய சந்தர்ப்பவாதத்தை நோக்கி WRP தலைமை திரும்பியமை, தனது பணிகளை வழிகாட்டுவதற்கு ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேசிய முன்னோக்கு இல்லாதது ஆகியவற்றை எதிர்கொண்டிருந்தபோதும், 1953 மற்றும் 1963ல் பப்லோவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் நிகழ்த்தப்பட்ட போராட்டங்களில் வேரூன்றிய கட்சியின் அஸ்திவாரங்களும் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் சர்வதேசிய கோட்பாடுகளுக்கு அது கொண்டிருக்கும் உறுதிப்பாடும் உறுதியோடு நீடித்து நிற்பதையே சோசலிச தொழிலாளர் கழகத்தின் பெரும்பான்மையினரால் எடுக்கப்பட்ட நிலைப்பாடு ஸ்தாபித்துக் காட்டியது. இந்த அஸ்திவாரங்கள் தான் சோசலிச தொழிலாளர் கழகத்தின் பெரும்பான்மையினருக்கு, அனைத்துலகக் குழுவை பாதுகாப்பதற்கும் தனது கூட்டத்திற்குள்ளேயே இருந்த குட்டி முதலாளித்துவ கலைப்புவாத போக்கினை தோற்கடிப்பதற்கும், உலகெங்கிலும் உள்ள தனது சக சிந்தனையாளர்களுடன் இணைந்து செயல்பட இயலுமானதாக செய்தது.

240. சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளும் குறைவில்லாமல் இருந்த அனைத்துலகக் குழு மீது விரோதமுற்ற போக்குகளைப் பொறுத்தவரை, WRP க்குள்ளான நெருக்கடி, தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிசத்திற்கான போராட்டத்தை மறுதலிப்பதற்கு ஒரு சாக்காக அமைந்தது. அவர்களது "கைவிடுதல் வாதம்" பரந்த சமூக நிகழ்வுப்போக்குகளுடன் இணைந்திருந்ததாய் இருந்தது. WRP ஐ அதன் அஸ்திவாரங்கள் வரை உலுக்கிய சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வு நிகழ்ந்த அதே சமயத்தில் இது நிகழ்ந்தது. நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றிற்கு ஒரு பங்களிப்பில் டேவிட் நோர்த் எழுதுவது போல: "1985 அக்டோபரில், WRP க்குள் நடுத்தர வர்க்கத்தின் அடக்கி வைக்கப்பட்ட அதிருப்திகள் அனைத்தும் வெடித்தன. தவறான அவநம்பிக்கைகொண்டு, கசப்புற்று, எந்த பலன்களையும் தராத பல வருட கால கடின உழைப்பில் சலிப்புற்று, தங்களது சொந்த சூழ்நிலைகளில் அதிருப்தியுற்று, தொலைந்து போன காலத்திற்கு சரிக்கட்ட வேண்டுமே என்ற பதைப்புடன், புரட்சி பற்றிய அத்தனையும் பேசி களைப்புற்று ஓய்ந்து விட்டிருந்த, இந்த நடுத்தர வர்க்க சக்திகளின் - இவை பாதி ஓய்வு பெற்று விட்டிருந்த பல்கலைக்கழக பேராசிரியர்களின் பல்தரப்பட்ட கூட்டத்தினால் தலைமையால் நடத்தப்பட்டது - அகநிலை ஆவேசம் அரசியல் ரீதியாக கலைப்புவாதமாக மாற்றப்பட்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பெரும் பிரிவுகளுக்குள் வீசிய ஐயுறவுவாதம், தனது ஆதாரத்தை WRP தலைமையின் அகநிலைத் தவறுகளில் மட்டுமல்லாது இன்னும் அடிப்படையாக வர்க்க உறவுகளிலான புறநிலை மாற்றங்களில் கொண்டிருந்தது என்கிற அந்த காரணத்தாலேயே, அது அக்கட்சிக்குள் இருந்த ஒரு சக்தி வாய்ந்த சமூக போக்கின் வெளிப்பாடாக இருந்தது.

241. இதே போன்ற நிகழ்வுபோக்குகள் ஆஸ்திரேலியாவிலும் நிகழ்ந்தன. இங்கும் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் தோல்வி ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டிருந்தது. 1974-75 இன் தொழிலாள வர்க்க எழுச்சியின் உச்சகட்டமும், 1982-83ல் ஃபிரேசர் அரசாங்கம் வெளியேறக் காரணமாய் இருந்த இயக்கமும் நடந்துமுடிந்திருந்தது. வேலைநிறுத்தங்கள் பெருகிய முறையில் பயனற்றதாய் நிரூபணமாகின. தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்புடன் அவை தோற்கடிக்கப்பட்டன. தொழிலாள வர்க்கம் என்ன முயன்றும், அதன் போராட்டங்கள் எவ்வளவு போர்க்குணமிக்கதாய் இருந்தாலும், அவற்றால் வெல்ல முடியவில்லை. ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கங்களின் தீவிரமடைந்திருந்திருந்த பிரிவுகளாய் இருந்தவை வலது நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. சோசலிச தொழிலாளர் கழகத்தின் சிறுபான்மையினர் சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தைக் கைதுறந்த அந்த சரியான சமயத்தில், பத்தாண்டுகளுக்கு சற்று முந்தைய காலத்தில் தான் தன்னை நான்காம் அகிலத்தின் உண்மையான ஒரே தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருந்த பப்லோவாத சோசலிச தொழிலாளர் கட்சி, ட்ரொட்ஸ்கிசத்தை பகிரங்கமாக கைவிட்டது. சோசலிச தொழிலாளர் கட்சியின் கூற்றின் படி, "ஒரு மத்தியப்படுத்தப்பட்ட சர்வதேசிய புரட்சிகர அமைப்பு குறித்த யோசனை மூன்றாம் அகிலத்தின் விஷயத்தில் துயரத்திற்கு வழிவகுத்தது என்றால், நான்காம் அகிலத்தின் விஷயத்தில் அது ஒரு கபடநாடகமாய் ஆனது." இந்த அனைத்து போக்குகளின் கண்ணோட்டமும் ஒரு முன்னணி ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்ட் ஒருவரின் வார்த்தை ஜாலத்தில் வெளிக்காட்டப்பட்டது. "பல்வேறு ஆஸ்திரேலிய மார்க்சிஸ்டுகளும்" சில "ஆஸ்திரேலிய யதார்த்தங்களை புரிந்து கொள்ள" தொடங்கியிருப்பதோடு "வரப் போவதே இல்லாத ஒரு மாபெரும் நாளை மறந்து விட்டு நடக்கிற அரசியல் நிகழ்முறைகளில் நாம் இருக்க வேண்டும்" என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாகவும் அவர் அறிவித்தார். இவை தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மீதான சோசலிச தொழிலாளர் கழகத்தின் சிறுபான்மையினரின் கண்டனத்தில் தங்களது வெளிப்பாட்டைக் கண்ட சமூக மனோநிலைகளாய் இருந்தன.

242. 1985-86 பிளவில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் முந்தைய தேசிய செயலரான ஜிம் மல்க்ரூ சோசலிச தொழிலாளர் கழகத்தின் சிறுபான்மையை ஆதரித்தார். சோசலிச தொழிலாளர் கழகம் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப வருடங்களில், நிக் பீம்ஸ் உடன் மல்க்ரூவும் ஒரு அதிமுக்கிய பாத்திரத்தை ஆற்றியிருந்தார். ஆனால், 1970களின் நடுப்பகுதியில் நடுத்தர வர்க்க பிரிவுகளின் வலது பக்கம் நோக்கிய போக்கிற்கு அவர் அடிபணியத் தொடங்கினார், 1980களின் ஆரம்பவாக்கில் அனைத்துலகக் குழுவின் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தின் மீது ஆழமாய் குரோதமுற்றிருந்த ஒரு வலதுசாரி கூட்ட சூழலை தன்னைச் சுற்றி அவர் அமைத்துக் கொண்டிருந்தார். WRP தலைமையில் ஏற்பட்ட சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி அவரது அரசியல் சீரழிவுக்கு நிச்சயமாக பங்களிப்பு செய்தது, ஆனால் 1985-86 போராட்டத்தில் ஒரு வேறுபட்ட பாதையை எடுக்க மால்க்ரூவுக்கு வாய்ப்பு கிட்டியது. ஆயினும், எந்த அளவுக்கு அரசியல் தெளிவு ஏற்பட்டதோ அந்த அளவுக்கு அவர் அதிகமாய் குரோதமுற்றார். தனது அரசியல் எதிர்ப்பின் வர்க்க அடிப்படையை எடுத்துக்காட்டும் வகையில், 1986 ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து மால்க்ரூ முறித்துக் கொண்டதோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு "வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் போகும்" என்றும் அறிவித்தார். ஐந்து வருடங்கள் கழித்து 1991ம் ஆண்டில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்து ட்ரொட்ஸ்கி தவறு செய்து விட்டதாக அறிவித்த அவர், பின்னர் தொழிற் கட்சியில் இணைவதற்கு விண்ணபிக்கவும் செய்தார்.

243. இறுதிப் பகுப்பாய்வில், WRP இன் நீடித்த தேசியவாத சீரழிவு சர்வதேச மட்டத்தில் வர்க்க சக்திகளின் சாதகமற்ற சமநிலையின் ஒரு விளைவாக இருந்தது. பல வருடங்களாக, குறிப்பாக 1963ல் பப்லோவாதத்துடன் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) மறுஇணைவிற்கு பின்னர், OCI மார்க்சிசத்துடன் முறித்துக் கொண்ட பின்னர், நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தையும் மரபியத்தையும் பாதுகாப்பதில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஏறக்குறைய தனியாய் நின்று கொண்டிருந்தனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவுகள் அபிவிருத்தியுறுவதற்கு காரணமே அவர்களது அரசியல் நிலைப்பாடு தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பப்லோவாதத்தால் ட்ரொட்ஸ்கிச காரியாளர்கள் நாசமுற்றதின் விளைவாக உலகின் மற்ற பகுதிகளில் அனுபவம் வாய்ந்த சக சிந்தனையாளர்கள் இல்லாதிருந்ததும் ஒரு பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது. இந்த சிக்கலான புறநிலைமைகளின் கீழ், பிரிட்டனில் கட்சியின் அபிவிருத்தி தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்ற கண்ணோட்டத்திற்கு ஹீலி வந்தார். சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று & சர்வதேசிய அடித்தளங்கள் குறிப்பிட்டது போல: "இவ்வாறு, காலப் போக்கில், வேலைகளின் வடிவங்களும் பழக்கங்களும் பெருகிய முறையில் ஒரு தேசியவாத வடிவத்தைப் பெற்றன. உண்மையில் அரசியல் சக்திகளிடையான ஒரு தற்காலிக உறவு - இது அனைத்துலகக் குழுவிற்குள் பிரிட்டனிலான வேலைக்கு மிகப்பெரும் தாக்கத்தை கொடுத்ததுடன், SLL/WRP மற்றும் நான்காம் அகிலத்திற்கு இடையிலான உறவின் பெருகிய முறையில் தேசியவாதக் கருத்தாக்கமாக புனிதப்படுத்தப்பட்டது." WRP பெருகிய முறையில் மற்ற பிரிவுகளின் அரசியல் அனுபவங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு அலட்சியம் காட்டியதோடு, நான்காம் அகிலத்தை "அதன் சொந்த பிரிட்டிஷ்-அடிப்படை அமைப்புக்கான ஒரு உதவி அமைப்புக்கு மேலான ஒன்றல்ல" எனக் கருதத் தொடங்கியது.[92]

244. WRP இன் உடைவு இறுதியாய், பெருகிய முறையில் தேசியவாத அணுகுமுறைக்கும் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியுடன் தொடர்புபட்ட புறநிலை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிகழ்வுபோக்கிற்கும் இடையிலான முரண்பாட்டில் தான் வேர்கொண்டிருந்தது. இது ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்பட தொழிலாளர் இயக்கத்தில் இருந்த அத்தனை தேசிய அடிப்படையிலான கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் பாதித்த ஒரு பரந்த நெருக்கடியின் ஒரு பகுதியாகும் இது.

245. அதே சமயத்தில்: "WRP இன் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு Workers League (தொழிலாளர் கழகம்) காட்டிய எதிர்ப்பானது, ஏற்கனவே அபிவிருத்தியின் முன்னேறிய கட்டத்தில் இருந்த, உலக அரசியலின் நிலவும் கட்டமைப்புகள் மற்றும் உறவுகளை தகர்க்கவிருந்த சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுபோக்குடன் தத்துவார்த்த ஒருங்கிணைப்பில் இருந்தது. நிரந்தரப் புரட்சி மீதான சர்வதேசிய முன்னோக்கை பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பாதுகாத்ததன் அடிப்படையின் தான்1960கள் மற்றும் 1970களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் சர்வதேச காரியாளர்களின் பெரும் பகுதியினர் ஈர்க்கப்பட்டனர் என்கிற மட்டத்தில், தொழிலாளர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட விமர்சனங்கள், அவை சர்வதேச இயக்கத்தில் பரவலாய் அறியப்பட நேர்ந்தபோது, பெரும் ஆதரவைப் பெற்றன. இது தான் 1985 இலையுதிர் காலத்தில் அனைத்துலகக் குழுவிற்குள் நடைபெற்ற ஓரளவு துரிதமுற்ற அரசியல் மறுசீரமைவுகளுக்கு காரணமாக அமைந்தது. அனைத்துலக இயக்கத்தின் வேலைக்கான ஒரு புதிய அடித்தளத்தை இது ஸ்தாபித்தது. இதனையடுத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தி, புதிய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைக்கு மார்க்சிச முன்னணிப் படையின் நனவான பதிலிறுப்பாகும். தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு முறையான போராட்டத்தின் அடிப்படையில் இயக்கத்தின் மறுநோக்குநிலை அமைந்திருந்தது, சர்வதேசிய முன்னோக்கின் அபிவிருத்தியுடன் பிரிக்கவியலாது பிணைப்பு கொண்டிருந்த ஒரு மறுநோக்குநிலை ஆகும் இது. அனைத்து சந்தர்ப்பவாதமும் இறுதியாக தேசிய தழுவலின் வரையறையான வடிவங்களில் தான் வேர் கொண்டிருக்கின்றன. தனது சொந்த அமைப்புக்குள் பல்வேறு மற்ற போக்குகளுக்கு எதிரான போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் மிக உயர்ந்த வடிவத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட கருத்தாக்கங்களான, ஒரு தேசிய அரசின் குறிப்பிட்ட வெளிப்பாடுகளுக்கு மேலாக உலக முதலாளித்துவத்தின் பூகோளரீதியான அபிவிருத்தியின் முன்னுரிமையின் காரணமான ஆதிக்கத்தினையும், தேசிய தந்திரோபாயங்களை காட்டிலும் சர்வதேசிய மூலோபாயத்தின் முக்கியத்துவத்தினையும் உறுதிப்பட முன்னெடுத்தது."[93]

1985-86 பிளவின் பின்

246. 1985-86 பிளவில் தேசியவாத சந்தர்ப்பவாதிகள் தோற்கடிக்கப்பட்டதானது நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை திறந்து வைத்தது. சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போருக்கு பிந்தைய போராட்டத்தில் சக்திகளின் சர்வதேச சமநிலையில் ஏற்பட்டிருந்த ஒரு மாற்றத்தை சர்வதேசியவாதிகளின் வெற்றி அடையாளப்படுத்தியது. இறுதிப் பகுப்பாய்வில், தொழிலாளர் இயக்கத்தின் மீதான ஸ்ராலினிசத்தின் ஆதிக்கத்தின் மீதே பப்லோவாதம் தங்கியிருந்தது. ஆனால் அனைத்துலகக் குழுவுக்குள்ளான போராட்டம் நிகழத் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில், ஸ்ராலினிச எந்திரம் ஒரு முடிவான வீழ்ச்சி நிலைக்கு சரிந்து கொண்டிருந்தது, அதன் உச்சமாய் உலக அரசியலின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றிய ஒரு நிகழ்வான 1991ம் ஆண்டின் சோவியத் ஒன்றியத்தின் உடைவிலும் முடிந்தது.

247. அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளவு நான்காம் அகிலத்தின் வரலாற்றில் மிகப் பெரியதும் முக்கியமானதும் ஆகும். அனைத்துலகக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பகுப்பாய்வுகள் - 1973-1985 காலத்தில் WRP எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொடுத்தது, 1982-1986 காலத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாக்கிறது, மற்றும் டேவிட் நோர்த் தயாரித்த நாம் காக்கும் மரபியம் ஆகியவை மிகக் குறிப்பிடத்தக்கவை. இவை சர்வதேசிய காரியாளர்களை பயிற்றுவிப்பதற்கும் கல்வியூட்டுவதற்கும், அனைத்துலகக் குழுவின் அனைத்து பிரிவுகளிலும் WRP இன் சீரழிவின் பாதிப்பை வெல்வதற்கும் அவசியமான அடித்தளத்தை அமைத்தன.

248. ஆஸ்திரேலிய பிரிவில், சோசலிச தொழிலாளர் கழகத்தின் கோட்பாட்டுரீதியான அடித்தளங்கள் உறுதியாய் இருந்ததை இந்த பிளவு வெளிப்படுத்தியது. தனது வரலாறு முழுவதிலும், இக்கட்சி தனது உறுப்பினர்களுக்கு பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டங்களின் படிப்பினைகளில் கல்வியூட்டியிருந்தது. சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் அதன் அரசியல் நிலைப்பாட்டின் மீது WRP தலைமை மேற்கொண்ட தாக்குதல்கள் இருந்தபோதிலும், WRP இன் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ஒரு அதிமுக்கிய மாற்றுமருந்தாய் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்கள் மீதான தொடர்ந்த முக்கியத்துவம் அமைந்தது. இது தான் தனது சொந்த மட்டங்களுக்குள்ளாக எழுந்த கலைப்புவாத போக்குகளை தோற்கடிக்க கட்சிக்கு இயலுமையை கொடுத்தது.

249. அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச தொழிலாளர் கழகத்தில் சர்வதேசியவாதிகளின் வெற்றியானது நெடுங்காலமாய் இருந்து வந்த அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடிப்படையை ஸ்தாபித்தது. இப்பிரச்சினைகள் சோசலிச தொழிலாளர் கழகத்தினை மட்டும் சூழ்ந்து கொண்டிருக்கவில்லை, ஆஸ்திரேலிய தொழிலாளர் இயக்கத்திலும் அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தவையாகும். டேவிட் நோர்த் மற்றும் தொழிலாளர் கழகத்தால் தலைமை தாங்கப்பட்ட புதிய அனைத்துலகக் குழு தலைமையானது முன்கண்டிராத மட்டத்தில் சர்வதேசிய ஒத்துழைப்பை ஸ்தாபித்தது. இது ஒவ்வொரு நாட்டிலும் தேசிய சூழல்களால் உருவாக்கப்படும் சக்திவாய்ந்த அழுத்தங்களை வெல்வதற்கான நிலைமைகளை பிரிவுகளுக்கு உருவாக்கித் தந்தது.

250. அக்டோபர் 1986 இல் வெளியிடப்பட்ட சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு மீதான அனைத்துலகக் குழுவின் அறிக்கை, ஆஸ்திரேலிய பிரிவின் வேலையின் அபிவிருத்திக்கு முக்கியமான ஆழ்நோக்குகளைக் கொண்டிருந்தது. தொழிலாள வர்க்க அனுபவங்களின் முழுமையானதொரு திறனாய்வின் அடிப்படையிலான ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேசிய பகுப்பாய்வு மற்றும் முன்னோக்கினை அபிவிருத்தி செய்யத் தவறிய WRP, அதற்குப் பதிலாக, 1970களின் ஆரம்ப காலம் முதல், "தோல்விகாணா தொழிலாள வர்க்கம்" என்கின்ற கருத்தை முன்னெடுத்தது. இந்த கருத்தாக்கம் அனைத்துலகக் குழுவின் அறிக்கை விளக்கியது போல, "ட்ரொட்ஸ்கிசத்திற்கு அடித்தளமாக இருந்த மிக அடிப்படையான விஞ்ஞானபூர்வ கருத்தாக்கங்கள் மற்றும் கோட்பாடுகளை மறுதலிப்பதாய்" அமைந்திருந்தது. அந்த அறிக்கை தொடர்ந்து விளக்கியது, "1970களின் பாதையில், புரட்சிகர தலைமையின் நெருக்கடியை அல்லாமல் இந்த தொழிலாள வர்க்கத்தின் தோற்கடிக்க முடியாத தன்மையைஅனைத்துலகக் குழுவின் வேலையின் மைய அச்சாக ஆக்க WRP முனைந்தது. உண்மையில், அடிப்படையாக தொழிலாளர் இயக்கத்தின் மீதான சந்தர்ப்பவசமான மதிப்பீடாக இருந்த ஒன்று, அருவமானதொரு (அதாவது வரலாற்று உள்ளடக்கம் இல்லாமல்) உலகளாவிய கோட்பாடாக ஆக்கப்பட்டு, அதிலிருந்து ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கான முன்னோக்கு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இது முழுமையாய் மார்க்சிசத்திற்கு மாறுபாடான வழிமுறையாகும். உற்பத்தியின் புதிய மற்றும் உயர்ந்த சமூக உறவுகளை தாங்கியிருக்கும் வர்க்கமாக நவீன பாட்டாளி வர்க்கம் தான் முதலாளித்துவ சமூகத்தின் சவக்குழி தோண்டும் வர்க்கமாக, அதாவது புரட்சிகர வர்க்கமாக இருக்கிறது என்பதை ஸ்தாபித்துக் காட்டுகின்ற, முதலாளித்துவ அமைப்புமுறையில் உற்பத்தியில் தொழிலாள வர்க்கம் பெற்றுள்ள தனித்துவமான இடம் குறித்த வரலாற்று பகுப்பாய்வில் இருந்து மட்டும் தான் தொழிலாள வர்க்கத்தின் தன்மைக்கான' சரியானதொரு வரையறை தருவிக்கப்பட முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்த தன்மையைஅங்கீகரிப்பது தான் மார்க்சிச கட்சிக்கு, வர்க்கப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்களை கருதாமல், அதன் மைய அச்சினை வழங்குகிறது. பாட்டாளி வர்க்கத்தினை எதிர்கொள்ளும் உடனடி சூழல்கள் மீதான மதிப்பீட்டைக் கொண்டு இந்த அச்சை இடம்பெயர்க்க முடியாது. பாட்டாளி வர்க்கம் தோற்கடிக்கப்படுகிறதாஅல்லது தோற்கடிக்கப்படவில்லையாஎன்பது புரட்சிகர கட்சியின் தந்திரோபாயத்தை பாதிக்கலாம்: அது அதன் அடிப்படை கொள்கைகளையும், அதன் மத்திய வரலாற்று எதிர்வுகூறுதலையும் மாற்றியமைக்க முடியாது."

251. ஹீலி மற்றும் WRP தலைமையின் சந்தர்ப்பவாத திருப்பங்கள் மற்றும் குத்துக்கரணங்களின் மையத்தில் இந்த கருத்தாக்கம் இருந்தது என்பதை அறிக்கை விளக்கியது. "ஹீலியைப் பொறுத்தவரை.... தோல்விகாணா தொழிலாள வர்க்கம் அனைத்து வரலாற்று பகுப்பாய்வுக்கும் பதிலீடாக ஆனதோடு அனைத்துலகக் குழுவின் பணிகளை சந்தர்ப்பவாதமுற்ற வகையில் மறுவரையறை செய்யக் கோருவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் சேவை செய்தது. தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு அனுபவமும் தோல்விகாணா தொழிலாள வர்க்க குணத்திற்கான ஒரு புதிய நிரூபணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு பதிலாய் வெற்றிகரமாய் கருங்காலிகளைக் கொண்டு நிரப்பியது, ஒரு இராணுவ ஆட்சிக் குழு பதவியிலிருத்தப்பட்டது, லெபனானில் இருந்து பாலஸ்தீன விடுதலை இயக்கம் வெளியேற்றப்பட்டது, ஈரான்-ஈராக் போர், தாட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டமை, இன்னும்....இந்த அபிவிருத்திகளின் உள்ளடக்கம் அனைத்தும் இதே தோல்விகாணா தொழிலாள வர்க்கம் என்ற அடித்தளத்தில் பார்க்கப்பட்டது. புரட்சிகர தலைமையின் நெருக்கடி குறித்த தீர்மானத்தின் உண்மையான ட்ரொட்ஸ்கிச உள்ளடக்கம் இல்லாது செய்யப்பட்டது. இந்த தோல்விகாணா தொழிலாள வர்க்கம் தன்னை தன்னிச்சையாக வெளிப்படுத்தும் தொடர்ந்து மாறுகிற வடிவங்களை வெளிப்படுத்துவதற்கு மேலாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மேலதிகமாய் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று பொருள்தரும் வகையில் இதற்கு மறுபொருள்விளக்கம் அளிக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளின் நிலைப்பாடு இயங்கியல்அறிகையின் ஊடாக பெறப்படும் முழுமையான அவ்வப்போதான காலத்திற்குரிய கருதல்களின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். அந்த அரசியல் நிலைப்பாட்டின் பரிசோதனை முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதமானதுடன், அந்தளவிற்கு அது உருவாக்கிய நடைமுறை முடிவுகளும் இருந்தது. ஹீலியின் கவலையாக இருந்ததெல்லாம் அரசியல் நிலைப்பாட்டை தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களுக்கு பொருத்துவது அல்ல, மாறாக உடனடியான அமைப்புரீதியான ஆதாயங்களைப் பெறுவதே. இவ்வாறாக, தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையை ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், அவசியமான தயாரிப்பு வேலைகள் இல்லாமல் காகிதத்தில் பாரிய உறுப்பினர்கள் எண்ணிக்கையை பெறுவதில் தான் முக்கியத்துவம் இருத்தப்பட்டது."

252. அறிக்கை தொடர்ந்தது: "அவ்வப்போதான நிலைமைகளுக்கு அனுபவவாத ரீதியாய் தழுவிக் கொள்வதை போற்றும் இந்த வழிமுறை, பிரிவுகளின் பணிகளுக்கு எந்த ஸ்திரப்படுத்தும் வரலாற்று அச்சையும் இல்லாதொழித்தது. தொழிலாளர் கழகம் மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் போன்ற சில பிரிவுகளில், அமெரிக்கா மற்றும் இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்தின் நெடிய வரலாற்றில் இருந்து பெறப்பட்ட திட்டவட்டமான வேலைத்திட்ட மரபுகள் இருந்ததால், அது WRP ஆல் ஆலோசிக்கப்பட்ட கட்டவிழ்ந்த தந்திரோபாய சந்தர்ப்பவாதத்திற்கு எதிர்ப்பக்க எடையை வழங்கியது. சோசலிச தொழிலாளர் கழகத்தின் தோழர்கள் தங்களது முன்னோக்குகளை உறுதியாக ஸ்தாபிக்கப்பட்ட மரபுகளின் அனுகூலம் இன்றி உருவாக்க வேண்டியதிருந்தது, இந்த நிலை அவர்களது சொந்த தவறுகளால் விளைந்ததில்லை என்றாலும் கூட. இது தான், WRP இன் திட்டமிட்ட சதி வேலைகளின் நிலைமைகளின் கீழ், சமூக ஜனநாயகத்தின் கடினமான பிரச்சினையில் ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்வதை கடினமாக்கியிருக்கிறது."

253. WRP ஆல் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பவாத கருத்தாக்கங்களின் விளைவுகள், ஆஸ்திரேலிய பிரிவுக்குள்ளாக, தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவுக்கான போராட்டத்தை சிறுமைப்படுத்துவதற்கும், கட்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களின் நடப்பு மதிப்பீடு மற்றும் திறனாய்வினை செயலூக்க நடவடிக்கைகளுக்கான முக்கியத்துவம் மூலம் இடம்பெயர்ப்பதற்குமான ஒரு போக்கு எழுவதற்கு வழிவகுத்தன. 1970களின் ஆரம்ப காலம் தொடங்கியே சர்வதேசிய முன்னோக்குகள் மீதான பணி WRP ஆல் கைவிடப்பட்டிருந்த நிலைமைகளின் கீழ், இது கட்சியால் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த உடனடித் தந்திரோபாயத்தை அதன் ஒட்டுமொத்த மூலோபாயத்தில் இருந்து, அதாவது உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கின் மீது தொழிலாள வர்க்கத்தினை சுயாதீனமான முறையில் திரட்டுவது என்பதில் இருந்து பிரிப்பதற்கு ஒரு போக்கினை அழைத்துச் சென்றது.

254. சர்வதேச இயக்கத்துடன் உடனடி ஒத்துழைப்பு இல்லாத நிலையில், "சமூக ஜனநாயகமென்னும் சிக்கலான பிரச்சினை" தொடர்பாக சோசலிச தொழிலாளர் கழகத்தின் சிரமங்கள் பல வழிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆரம்ப காலங்களில் எதிர்கொண்டிருந்த, ஆரம்ப ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்த அதே சிரமங்களை மறுபிரதி செய்ததாய் இருந்தன: ஒரு பக்கத்தில் தொழிற்சங்கவாதத்தை - ஒரு அரசியல் போராட்டத்திற்கான அவசியத்தை அலட்சியப்படுத்தி விட்டு வெறுமனே கூடுதல் போர்க்குணமிக்க சுலோகங்களை முழங்குவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் தன்னிச்சையான போர்க்குணத்தை தழுவிக் கொள்வது - நோக்கி பயணிப்பதும், இன்னொரு பக்கத்தில், தொழிலாள வர்க்கம் ஒப்பீட்டளவில் சலனமின்றி இருக்கும் காலகட்டங்களில், நாடாளுமன்றவாதத்தை - அரசியல் கோரிக்கைகளை நாடாளுமன்ற "இடதுகளை" நோக்கி செலுத்துவது, கோரிக்கைகளைச் சுற்றி தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்து அதன்மூலம் தொழிற் கட்சியினரையும் அவர்களது இடதுசாரி வார்த்தைகள் பேசும் மத்தியவாத ஆதரவாளர்களையும் அம்பலப்படுத்தி தொழிலாள வர்க்கம் அவர்களிடம் இருந்து முறித்துக் கொள்ள உதவுவதை விட்டு விடுவது - நோக்கி பயணிப்பதுமான ஒரு போக்கு.

255. 1987 ஜனவரியில் தொழிற் கட்சியின் "இடதுகளை" அம்பலப்படுத்துவதன் மூலமாக தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கல்வியூட்டும் நோக்கத்துடன் ஒரு புதிய அரசியல் நிலைப்பாட்டை சோசலிச தொழிலாளர் கழகத்தின்மத்தியக் குழு முன்னெடுத்தது. தொழிற் கட்சியின் அவசர மாநாடு கூட்டப்பட்டு அக்கட்சியில் இருந்து ஹாக்-கீட்டிங் வலதுசாரிகள் நீக்கப்பட வேண்டும், சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் வகையில் "இடதுகள்" ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவுகளை நோக்கி சோசலிச தொழிலாளர் கழகம் எழுப்பியது. தொழிற் கட்சி அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக போராட ஒரு கோட்பாடான அடித்தளத்தை வழங்குவது தான் இந்த தந்திரோபாயத்தின் நோக்கம். தொழிலாள வர்க்கத்தின் நடப்பு போராட்டங்களுக்கும் சோசலிசம் மற்றும் தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கும் இடையில் ஒரு பாலத்தை அமைப்பதாகும். ஒரு தொழிலாளர் அரசாங்கம் மற்றும் சோசலிசத்திற்கான பாதையில் தொழிற்கட்சி "இடதுகளால்" உருவாக்கப்படும் ஒரு அரசாங்கம் என்பது அவசியமானதொரு கட்டமாக கருதும் கருத்தாக்கமாக இல்லாமல், கொடுக்கப்பட்ட அரசியல் சூழ்நிலைக்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுக் கடமைகளுக்காக போராடுவதற்கான ஒரு வழிவகையாக இதனை வழங்க இந்த தந்திரோபாயம் முனைந்தது.

256. ட்ரொட்ஸ்கி இடைமருவு வேலைத்திட்டத்தில் விளக்கியிருந்ததைப் போல, தொழிலாள வர்க்கத்தின் நடப்பு தலைமைகளிடம், அவர்கள் "முதலாளித்துவத்திடம் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும்" என்றும் அவர்கள் ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காக "போராட்டப் பாதையில் நுழைய வேண்டும்" என்றும் திட்டமிட்டு கோருவதானது, அவர்களின் துரோக பாத்திரத்தை அம்பலப்படுத்துவதில் ஒரு "மிக முக்கிய ஆயுதமாகும்". இந்த சந்தர்ப்பத்திலும் அது சரியென நிரூபணமானது. தொழிற் கட்சி அரசாங்கத்தின் சந்தை ஆதரவு கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் எதிர்ப்பு மலைபோல் பெருகிக் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிக முக்கிய தட்டுகளில் இருந்து சோசலிச தொழிலாளர் கழகத்தின் கொள்கைகள் ஆதரவையும் மரியாதையின் ஒரு புதிய மட்டத்தையும் வென்றெடுத்தன. அதே சமயத்தில் மத்திய குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் "இடதுகளிடம்" இருந்து ஆவேசமான எதிர்ப்பை சம்பாதித்தித்தற்கு காரணம், அவை அரசாங்கத்திற்கான "எதிர்ப்பு" பற்றிய அவர்களின் உணர்ச்சியாவேச பேச்சுகள் எல்லாம் ஹாக்-கீட்டிங் வலதுசாரிக்கு எதிராக போராட மறுப்பதை மறைக்கும் மறைப்பை தவிர வேறொன்றும் இல்லை என்பதை அது அம்பலப்படுத்தியது என்பதால்தான்.

தொடரும்...

அடிக்குறிப்புகள்

85. நான்காம் அகிலம், தொகுதி. 13, எண்.1. 1986, பக்.109.

86. அதே புத்தகம்., பக்.114.

87. நான்காம் அகிலம், தொகுதி. 13, எண். 2. பக். 50-51.

88. அதே புத்தகம், பக். 103-104.

89. அதே புத்தகம், பக். 77.

90. அதே புத்தகம், பக். 77-78.

91. நாம் காக்கும் மரபியம், பக். 14-15.

92. சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள், பக். 124.

93. அதே புத்தகம், பக். 125-126.