WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Austerity measures throughout Europe
ஐரோப்பா முழுவதும் கடும் சிக்கன நடவடிக்கைகள்
Peter Schwartz
29 May 2010
Back to screen version
இரு வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய அரசுகளின் தலைவர்களும் சர்வதேச நாணய நிதியமும் யூரோவிற்கான 750 பில்லியன் யூரோக்கள் மீட்புப் பொதிக்கான உடன்பாடு ஒன்றை அடைந்தனர். அப்பொழுது முதல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் புதிய சுற்று பற்றிய அறிவிப்பு இல்லாமல் ஒரு நாள் கூட கடக்கப்படவில்லை. இப்பொழுது வங்கிகளுக்கும் யூரோவிற்கும் பல மீட்புப் பொதிகளால் ஏற்பட்ட விளைவான பொது நிதிப் பெரும் பற்றாக்குறைகளினால் ஏற்பட்ட ஓட்டையை அடைப்பதற்கு உழைக்கும் மக்கள் விலை செலுத்துமாறு உத்தரவிடப்படுகின்றனர்.
ஐரோப்பிய உறுதிப்பாட்டிற்கான அளவு கோல்கள் பற்றிய 2013 குறிப்பிட்ட காலக்கெடுவை செயல்படுத்துவதற்காக—அது அதிகபட்ச வரவு-செலவுப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மேல் போகக்கூடாது என்கிறது அதாவது யூரோப்பகுதி நாடுகளும் பிரிட்டனும் தங்கள் வரவு-செலவுப் பற்றாக்குறைகளை மொத்தம் 400 பில்லியன் யூரோக்களுக்குக் குறைத்தாக வேண்டும். இந்த மிகப் பெரிய தொகை முக்கியமாக பொதுத் துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், வேலையின்மையில் வாடுபவர்கள் மற்றும் சமூக நலன்களை நம்பியிருப்பவர்கள் ஆகியோரின் இழப்பில்தான் ஈடுகட்டப்படும்.
தன்னுடைய வரவு-செலவுப் பற்றாக்குறையை அடுத்த மூன்று ஆண்டுகளில் ஊதிய, ஓய்வுதிய வெட்டுக்கள், சமூக நலத் திட்டங்களை குறைத்தல் மற்றும் மதிப்புக்கூட்டு வரியை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் குறைக்க முற்படும் திட்டங்களைக் கொண்டுள்ள கிரேக்கத்தின் உதாரணத்தைப் பின்பற்றி, ஸ்பெயின் அரசாங்கமும் கடந்த வாரம் 80 பில்லியன் யூரோக்களுக்கான வெட்டுக்கள் பற்றி முடிவெடுத்துள்ளது. இதை அடைவதற்காக பொதுத் துறையில் 13,000 வேலைகள் தகர்க்கப்படும், அரசாங்க ஊழியர்களுடைய ஊதியம் 5 சதவிகிதம் குறைக்கப்படும் மற்றும் ஓய்வூதியங்களின் முடக்கம் அடையும். முன்பு ஒரு புதிய குழந்தை பிறந்தால் கொடுக்கப்பட்டு வந்த 2,500 யூரோக்கள் வெகுமதி இப்பொழுது இழப்பீடு ஏதுமின்றி மறைந்துவிடும்.
தன்னுடைய வரவு-செலவுப் பற்றாக்குறையை 2 பில்லியன் யூரோக்கள் குறைப்பதின் பொருட்டு, போர்த்துக்கல் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதை முடக்கி வைத்தல், பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்களை தேக்கி வைத்தல் மற்றும் மதிப்புக் கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றை சுமத்தியுள்ளது.
இந்த வாரம் முன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் 7.2 பில்லியன் யூரோக்கள் உடனடியான வெட்டுக்களை அறிவித்தது—இதில் ஆட்சிப்பணித் துறைக்கு ஊழியர்களை நியமிப்பது நிறுத்தி வைக்கப்படலும் அடங்கும். ஆனால் இது ஒரு ஆரம்பந்தான். மொத்தத்தில் பிரிட்டனின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை அடுத்த நான்கு ஆண்டுகளில் 100 பில்லியன் யூரோக்களுக்கும் மேலாக வெட்டப்படும். இதில் பொதுத் துறையில் 300,000 பதவிகள் குறைத்தல் மற்றும் பொதுத்துறை ஊதிய முடக்கம் ஆகியவையும் அடங்கும்.
புதனன்று இத்தாலிய அரசாங்கம் 2012 க்குள் 24 பில்லியன் வெட்டுக்களை விளைவாக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இவற்றில் ஆட்சித்துறை வேலைகள் குறைப்பு, ஊதியங்கள் வெட்டு, ஓய்வூதிய வயதை அதிகரிப்பது மற்றும் சுகாதார பாதுகாப்பு முறையில் வெட்டுக்கள் ஆகியவையும் அடங்கும்.
தன்னுடைய வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை தற்போதைய 8 சதவிகிதத்தில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதமாக 2013 க்குள் குறைப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. இது ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை அதிகரித்தல், வீட்டு வாடைகைக்கான உதவி நிதிகளில் குறைப்புக்கள், வேலைகளில் ஊதிய குறைப்புக்கள், அருங்காட்சியகங்களுக்கு கொடுத்து வந்த நிதிகள் குறைப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளில் 10 சதவிகித வெட்டு ஆகியவையும் அடங்கும்.
ஜேர்மனிய அரசாங்கம் இறுக்கமான சிக்கன நடவடிக்கைகள் பற்றி ஜூன் 6ம், 7ம் திகதிகளில் தான் முடிவெடுக்கும். அரசியலமைப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள “கடன் தடை” என்று அழைக்கப்படும் விதி, 2016 க்குள் புதிய கடன்கள் 60 பில்லியன்களுக்கு குறைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. விவாதங்களில் இருக்கும் பல சிக்கன நடவடிக்கைகளுக்கும் சமூக நலச் செலவின வெட்டுக்கள், குடும்பங்கள், குழந்தைகள், பொதுநலன்கள், ஊனமுற்றவர்களுக்கு கொடுக்கப்படும் நலன்கள், ஆண்டு ஒன்றிற்கு கொடுக்கப்படும் ஊக்கத் தொகைகள் மற்றும் ஓய்வூதியங்கள் ஆகியவையும் அடங்கும்.
ஐரோப்பிய ஆணையம் இப்பொழுது ஐரோப்பாவில் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. எதிர்வரும் காலத்தில் வயதிற்கு வந்த ஒருவர் தன் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் ஓய்வுக்காலத்தில் செலவழிக்கக்கூடாது என்பதை உறுதிபடுத்தும். ஒரு நீண்ட கால நோக்கில் இதன் பொருள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஒருவர் 70 வயது வரை வேலைபார்க்க வேண்டும் என்பதாகும்.
மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள நடவடிக்கைகளின் அர்த்தம், வேலையின்மை மற்றும் வருத்தும் வறுமை என்பதாகும். குறிப்பாக வயதான காலத்தில் வறுமை என்பது, மீண்டும் ஐரோப்பாவில் வெகுஜன நிகழ்வாக ஆகிவிடும். போருக்குப் பிந்தைய சமூக நல அரசுகளின் நலன்கள் ஏதும் தொடர்ந்து இருக்காது. அமெரிக்காவின் Carnegie Endowment for International Peace சிந்தனைக்குழு நடத்திய ஆய்வு ஒன்று, “1940 களில் இருந்து ஐரோப்பாவில் நிறுவப்பட்ட சமூக நல அரசுகள், மக்கள் அமைதியின்மையை அடக்கும் நோக்கத்தையும், மற்றொரு போரைத் தவிர்ப்பதற்காக அழுத்தங்களை அகற்றவும் இலக்கு கொண்டிருந்தவை, இனி தாங்கக்கூடியதாக இல்லை” என்று முடிவுரையாக கூறியுள்ளது.
ஆனால் உண்மையில் பணத்திற்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. வரவு-செலவுப் பற்றாக்குறைகள், சமூக நல அரசை அகற்றுவதை நியாயப்படுத்துவதற்கு பயன்படுபவை, சமூகத்தின் கீழ் நிலையில் இருப்பவர்களிடம் இருந்து முறையாக மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு மறுபங்கீடு செய்வதின் விளைவுதான். குறைந்தபட்சம் 1980 களில் இருந்து வலதுசாரி மற்றும் “இடது” அரசாங்கங்கள் எனப்படுபவை அனைத்துமே வருமான, சொத்துவரிகளை செல்வந்தர்களுக்கு குறைத்ததோடு ஊதியங்களைப் பெரிதும் குறைத்து, புதிய வகை குறைவூதிய வேலைகளையும் தோற்றுவித்துள்ளன. பொதுக்கடன் பெருகுவதற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்
அரசாங்கங்கள், 2008, 2009 ம் ஆண்டுகளில் வங்கிகளுக்கு அவற்றின் சரிவைத் தடுக்க உட்செலுத்திய ட்ரில்லியன்களானது, பொதுக்கடன்கள் தீவிரமாக உயரும் என்ற பொருளைத் தந்துள்ளது. சமீபத்தில் ஜேர்மன் மத்திய வங்கி (Bundesbank) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் இதை நிரூபிக்கின்றன. 2008, 2009 ல் கிட்டத்தட்ட ஜேர்மனியின் புதிய கடனில் 53 சதவிகிதம் பல நிதிய நிறுவனங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளினால் விளைந்தது ஆகும். இந்த இரு ஆண்டுகளிலும் மொத்த புதிய கடன் 183 பில்லியன் யூரோக்கள் அதிகரித்தன. நிதிய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குச் செலவழித்த தொகை 98 பில்லியன் யூரோ என ஆயிற்று.
வங்கிகள் தாங்கள் ஏற்படுத்திய நெருக்கடியையே, இப்பொழுது தொழிலாள வர்க்கத்தை கொள்ளை அடிப்பதைப் பெருக்க அவை பயன்படுத்துகின்றன. அரசாங்கங்களும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றிற்கு உடந்தைகளாக உள்ளன. இது கடந்த வெள்ளியன்று ஜேர்மனிய பாராளுமன்றம் 148 பில்லியன் யூரோக்களுக்கான தொகை நிரப்பப்படாத காசோலையை விரைவான நடவடிக்கையாக வெளியிட்ட போது தெளிவாயிற்று. பொதுவாக பாராளுமன்றக் குழுக்கள் சிறு தொகைகளுக்காக பல மாத காலம் பற்றிக்கூடி பேரம் பேசும். ஆனால் Bundestag விரைவில் கடன்களுக்கு உத்தரவாதம் கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அதுவும் கூட்டாட்சி வரவு-செலவு தொகையில் பாதிக்கு வருபவை அவை. எவருக்கு, எந்த நிபந்தனையின் பேரில் பணம் அளிக்கப்படுகிறது என்பது பற்றிக் கூடத் தெளிவு இல்லாமல் இது கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஜனநாயகமற்ற வழிவகை “நிதியச் சந்தைகளில் பதட்டம்” என மேற்கோளிடப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றம் வாக்கிழந்து நிற்பது வெளிப்படை. அரசாங்கம் பெரும் கஷ்டத்துடன் கூடித்தான் பெரும்பான்மை பெறமுடிந்தது. சில அடையாள (முற்றிலும் திறனற்ற) நடவடிக்கைகள் நிதியச் சந்தைகளுக்கு எதிராக அது ஏற்க வேண்டியதாயிற்று. இதில் குறுகிய கால விற்பனைக்குத் தடை என்பதாகும். இதற்குக் காரணம் எப்படியாயினும் போதுமான ஆதரவைப் பெற வேண்டும் என்பதுதான். ஆனால் இதையொட்டி வாஷிங்டன் மற்றும் லண்டனில் இருந்து சீற்றம் மிகுந்த விடையிறுப்புக்கள் வந்தன. அங்கு ஜேர்மனியின் தனித்த முயற்சிகள் நிதியச் சந்தைகளின் சுதந்திரத்திற்கு கீழ்படியாத தாக்குதலாக கருதப்பட்டன.
தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கடும் சிக்கன நடவடிக்கைகளை எப்படியும் எடுப்பதற்காக, ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் முதலும் முக்கியமுமாக சமூக ஜனநாயகவாதிகளையும் தொழிற்சங்கங்களையும் நம்பியுள்ளன. கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் போல் சிக்கன நடவடிக்கைகளை சமூக ஜனநாயக அரசாங்கங்கள் தான் சுமத்துகின்றன, அல்லது பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை போல் சமூக ஜனநாயகவாதிகள் தங்களை முந்தைய செலவுக் குறைப்பு நடவடிக்கைகளால் இழிவுபடுத்திக் கொண்ட நிலையில், வலதுசாரிக் கட்சிகள் அரசியல் ஆதாயங்களைப் பெற்றுவிட்டன. அனைத்து விதங்களிலும், சமூக ஜனநாயகவாதிகள் தாங்கள் வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுப்பதில் எதுவித சந்தேகத்தையும் விட்டுவைத்ததில்லை, உழைக்கும் மக்களிடம் “வேறு மாற்றீடு” ஏதும் இல்லை என்று கூறுகின்றனர்.
தொழிற்சங்கங்களும் வெட்டுக்களுக்கு “வேறு மாற்றீடு” இல்லை என்று கூறி தத்தம் அரசாங்கங்களுடன் அவற்றைச் செயல்படுத்த ஒத்துழைக்கின்றன. எப்பொழுதாவது அவை ஆர்ப்பாட்டங்களும், வேலைநிறுத்தங்களும் நடத்தினால், அவை மக்கள் எதிர்ப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கலைத்து விடுவதற்குத்தான். எதிர்ப்புக்களை அவை தனிமைப்படுத்தி, ஒரு சில மணி நேரம் அல்லது நாட்களுடன் குறைத்து, சர்வதேச ஒற்றுமை வளராமல் தடுத்தும் விடுகின்றனர்.
இதில் அவை பல மத்தியதர வர்க்கக் குழுக்களுடைய ஆதரவைக் கொண்டுள்ளன.
உதாரணமாக ஜேர்மனியின் இடது கட்சி, பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி அல்லது சிரிசா ஆகியவற்றிற்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், இக்குழுக்கள் அனைத்தும் இரு விஷயங்களைப் பொதுவாகக் கொண்டுள்ளன அதாவது அவற்றின் நிபந்தனையற்ற ஆதரவை தொழிற்சங்கங்களுக்கு கொடுப்பதிலும் (அவற்றை அவை ஒருபோதும் குறைகூறுவதில்லை) மற்றும் சமூக ஜனநாயக அரசாங்கங்கள் பெரும்பான்மை பெறுவதற்கு தங்கள் விருப்பத்தை அளிப்பதும் ஆகும். இவ்விதத்தில் அவை ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க அரசியல் இயக்கம் அமைக்கப்படுவதை தடுக்க முற்படுகின்றன.
முதலாளித்துவ நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையும், வெட்டுக்கள் பற்றிய பேரமும் ஐரோப்பாவிற்குள் அழுத்தங்களை அதிகரித்துள்ளன. யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலம் நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டுள்ளது. ஹங்கேரி, ஸ்லோவாக்கியா அல்லது இத்தாலி போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் தேசிய எதிர்ப்பு உணர்வுகளை சமூக அழுத்தங்களில் இருந்து திசை திருப்புவதற்கு தூண்டி விடுகின்றன.
சிறு சிறு பகுதிகளாக ஐரோப்பா தேசிய அரசுகளாக மோதலுக்குள் செல்வது பேரழிவு தரும் சமூக மற்றும் பொருளாதார விளைவுகளைத் தரும். ஆனால் முதலாளித்துவ வர்க்கம் அதன் இயல்பான தன்மையிலே கண்டத்தை ஐக்கியப்படுத்த இலாயக்கற்றது. அந்தப் பணி தொழிலாளர் வர்க்கத்தினுடையது. அது தவிர்க்க முடியாமல் அவர்களுடைய சமூக, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது.
நெருக்கடி தீவிரமடைதல் மக்களின் பரந்த அடுக்குகளை சமூக, அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கு முன்தள்ளும். ஆனால் இதற்கு ஒரு அரசியல் முன்னோக்கும் ஒரு புதிய கட்சியின் வளர்ச்சியும் அவசியம். அதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகும். பெரிய வங்கிகளும் பெருநிறுவனங்களும் சமூக உடைமையாக்கப்பட்டு தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இது தனிப்பட்ட முதலாளிகளின் இலாப பேராசைகளுக்கு எரியூட்டுவது என்று இல்லாமல் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்துவதற்கான சூழலைத்தோற்றுவிக்கும்.
ஐரோப்பிய தொழிலாள வர்க்கம், இந்த இலக்கை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக ஐக்கியப்பட்டு போராடுவதன் மூலம் மட்டுமே அடையமுடியும். |