WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இலங்கை
Sri Lanka: One year after the LTTE’s defeat
இலங்கை: புலிகளின் தோல்வியின் பின்னர் ஒரு ஆண்டு
Wije Dias
18 May 2010
Back to screen version
இலங்கை இராணுவம், இன்றிலிருந்து ஒரு வருடத்துக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடைசியாக எஞ்சியிருந்த நிலத் துண்டையும் கைப்பற்றி முடித்தது. இந்த கைப்பற்றிலின் போது புலிகளின் சகல உயர் மட்ட தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டனர் -அவர்களில் சிலர் சரணடையவும் முயற்சித்திருந்தனர். தீவின் தமிழ் சிறுபான்மையினரது ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் கால் நூற்றாண்டு காலமாக கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் ஈவிரக்கமின்றி முன்னெடுத்துவந்த குற்றவியல் யுத்தத்தின் கடைசி நடவடிக்கையாக அது இருந்தது.
யுத்தத்தின் கடைசி மாதங்களில், புலி போராளிகளையும் 300,000 க்கும் அதிகமான பொது மக்களையும் வட-கிழக்கில் ஒரு சிறிய நிலப் பகுதிக்குள் விரட்டிய இராணுவம், அங்கு இடைவிடாமல் ஆட்டிலறித் தாக்குதல் நடத்தியதோடு விமானக் குண்டுகளையும் பொழிந்தது. அச்சமயத்தில் "பாதுகாப்பு வலயம்" என அரசாங்கம் கூறிக்கொண்ட அந்தப் பிரதேசத்துக்குள் உயிரிழந்த சிவிலியன்களின் எண்ணிக்கை 7,000 என ஐ.நா. தெரிவித்தது. சர்வதேச நெருக்கடி குழுவினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்று "ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களுமாக பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் எண்ணிலடங்காதவர்கள் என்றும், இலட்சக்கணக்கானவர்களுக்கு போதுமான உணவு மற்றும் மருத்துவ பராமரிப்பு கிடைக்காததன் விளைவாக மேலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவும்" மதிப்பிட்டுள்ளது.
உயிர் தப்பியவர்கள் "நலன்புரி கிராமங்களுக்குள்" அடைக்கப்பட்டனர் --இந்த நலன்புரி கிராமங்கள் முற்கம்பிகளாலும் கனமாக ஆயுதம் தரித்த சிப்பாய்களாலும் சுற்றி வளைக்கப்பட்ட இராணுவத்தால் நடத்தப்படும் சிறை முகாங்களாகும். ஆண்களும் பெண்களுமாக ஆயிரக்கணக்கான இளம் தமிழர்கள், "பயங்கரவாத சந்தேக நபர்கள்" என்ற பெயரில் இராணுவ விசாரணையாளர்களாலும் ஒற்றர்களாகும் இழுத்துச் செல்லப்பட்டு "புணர்வாழ்வு நிலையங்களில்" விடப்பட்டுள்ளனர். அங்கு இன்னமும் அநேகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னமும் தடுப்பு முகாங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை பல பத்தாயிரங்களாகும். விடுவிக்கப்பட்டவர்கள் ஒரு பெரும் சிறைக்கு மீண்டும் திரும்பியுள்ளனர் --அது தீவின் வடக்கு மற்றும் கிழக்கிலான நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பாகும்.
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் எந்தவொரு யுத்தக் குற்றமும் இடம்பெறவில்லை என முழுமையாக மறுப்பதோடு எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனத்தையும் கூட "சர்வதேச சதியின்" பாகம் என கண்டனம் செய்கின்றனர். "வெற்றி" கொண்டாட்ட வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ள இந்த வாரம் வியாழக் கிழமை நடக்கவுள்ள பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் முடிவடையும். இது எந்தவொரு எதிர்ப்பையும் அச்சுறுத்துவதையும் அடக்குவதையும் இலக்காகக் கொண்ட பிரமாண்டமான பொலிஸ்-அரச இயந்திரத்தினால் நடத்தப்படும், இனவாதம் மற்றும் பொய்யின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரசாங்கமாகும்.
இந்த யுத்தத்தின் முடிவானது புலிகளின் தோல்வியை அடுத்து வந்த சில நாட்களில் ஜனாதிபதி இராஜபக்ஷ வாக்குறுதியளித்த "சமாதானத்தையும் சுபீட்சத்தையும்'' கொண்டுவரவில்லை. இந்த யுத்தமே அடிப்படையில் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக இருத்தும் நோக்கில் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட தமிழர்-விரோத பாரபட்சங்களின் பின்னர் 1983ல் யுத்தம் வெடித்தது. புலிகளின் தோல்வியின் பின்னர், இராஜபக்ஷ பறைசாற்றிக்கொண்ட "தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான" புதிய "பொருளாதார யுத்தமும்" இதேபோல் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும்.
தீவை ஆசியாவின் புதிய அதிசயமாக்கும் நடைமுறைக்கொவ்வாத இராஜபக்ஷவின் கனவுக்கு மாறாக, இலங்கை ஆழமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. யுத்த முடிவின் மறு பக்கம், 1930களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார நெருக்கடியின் பின்னர் இப்போது ஏற்பட்டுள்ள மோசமான பூகோள நிதி நெருக்கடி உள்ளது. பல ஆண்டுகால பிரமாண்டமான இராணுவச் செலவின் விளைவாக ஏற்பட்ட பெரும் பொதுக் கடன், சகல ஏற்றுமதிகளும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் தலைநீட்டியுள்ளது. உப்பு நீரில் தாகம் தணிக்கும் மனிதனைப் போல், அந்நிய செலாவனி நெருக்கடி ஒன்றை சமாளிக்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுள்ளது.
இப்போது கிரேக்கத்தையும் ஐரோப்பாவையும் மையமாகக் கொண்டு ஒரு அரச கடன் நெருக்கடி என்ற வடிவில் பூகோள பொருளாதார வீழ்ச்சியின் இரண்டாம் கட்டம் வெடித்துள்ள நிலையில், உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள், பொதுச் செலவுகளை வெட்டித் தள்ளியும் அரச சொத்துக்களை விற்றும் மற்றும் வரிகளை அதிகரித்தும் உழைக்கும் மக்கள் மீது சுமைகளை திணிக்கின்றன. அடுத்த ஆண்டு இலங்கை அதன் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக, பாதியாக குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அதே ஒடுக்குமுறை வழிமுறைகளுடனேயே இராஜபக்ஷவின் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான "பொருளாதார யுத்தமும்" முன்னெடுக்கப்படும்.
இந்த வார இராணுவக் கொண்டாட்டங்களும் இராணுவவாதமும் உழைக்கும் மக்களுக்கு ஒரு தீய சகுனம் கொண்ட எச்சரிக்கையை விடுக்கின்றது. ஆயுதப் படைகள் கலைக்கப்படுவதற்கு மாறாக, அவை அளவில் பெரிதாக்கப்படுகின்றன. அரசாங்கம், ஏறத்தாழ சகல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடை செய்வது உட்பட, அசாதாரணமான அதிகாரங்களை ஜனாதிபதிக்கு கொடுக்கும் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்துள்ளது. விலைவாசி ஏற்றம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக தமது வாழ்க்கைத் தரத்தை காத்துக்கொள்ள போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க இராஜபக்ஷ தயங்கப் போவதில்லை. கடந்த ஆண்டு துறைமுகம், பெற்றோலியம், நீர் வழங்கல் மற்றும் மின்சார சபைகளைச் சேர்ந்த ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையை அவர் சட்ட விரோதமாக்கினார்.
இப்போது ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலும் கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தலும் முடிந்து விட்ட நிலையில், இராஜபக்ஷ அரசாங்கம் அதன் பொருளாதார தாக்குதலை துரிதப்படுத்த தயாராகிக்கொண்டிருக்கின்றது. முதலாவது இலக்கு நகர்புற வறியவர்களில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களான, மத்திய கொழும்பில் உள்ள குடிசைவாசிகளும் நடைபாதை வியாபாரிகளுமாவர். இரண்டு வாரங்களுக்கு முன்னர், பொலிசாரும் படையினரும் 45 குடும்பங்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றின. அந்த வீடுகள் சொத்து விற்பனை செய்து இலாபம் சம்பாதிப்பவர்களுக்கு வழியமைப்பதற்காக இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. ஆயினும், இவை அடுத்துவரும் மாதங்களில் நிச்சயமாக வெடிக்கவுள்ள வர்க்க யுத்தங்களின் ஒரு வெறும் ஆரம்ப சண்டை மட்டுமே.
நிச்சயமான முடிவுகளைப் பெற வேண்டும். கடந்த ஆண்டு தமிழ் பொது மக்கள் படுகொலையை முன்னெடுத்த அரசாங்கம், தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக அரச இயந்திரத்தின் முழு சக்தியையும் பயன்படுத்த தயங்கப் போவதில்லை. எதிர்க் கட்சி அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டதோடு சில சமயங்களில் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற எதிர்க் கட்சிகள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டன. இந்தக் கட்சிகள் அரசாங்கத்துடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை. வலதுசாரி யூ.என்.பி. யுத்தத்தை தொடக்கிவைத்து அதை பல தசாப்தங்களாக முன்னெடுத்த அதே வேளை, சிங்கள பேரினவாத ஜே.வி.பி. யுத்தத்துக்கு தீவிரமாக வக்காலத்து வாங்கியது. இரு கட்சிகளும் இராஜபக்ஷவின் சந்தை சார்பு பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. அரசாங்க சார்பு மற்றும் எதிர்க் கட்சி சார்பு தொழிற்சங்கங்கள் அனைத்தையும் பொறுத்தளவில், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் சீற்றத்தையும் தணிக்கவும் நசுக்கவும் உதவி செய்துள்ளன.
கடந்த ஆண்டு தமிழ் பிரிவினைவாதத்தின் வங்குரோத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியான முதலாளித்துவ ஈழம் அரசுக்கான இனவாத கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தில் இருந்தே அவர்களின் தோல்வி ஊற்றெடுத்தது. இலங்கையில் அல்லது உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அறைகூவலும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்ற புலிகளின் தலைமைத்துவம், அதன் கடைசி நாட்களை இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவளித்த "சர்வதேச சமூகத்தின்" உதவியைப் பெற அற்பத்தனமாக அறைகூவல் விடுத்துக்கொண்டிருந்தது. கடந்த மே மாதத்தில் இருந்து, புலிகளின் ஊதுகுழலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் ஏதாவதொரு பகுதியுடன் தன்னை ஒருங்கிணைத்துக்கொள்வதில் காலத்தை கடத்தியது. தமிழ் கூட்டமைப்பின் ஒரு பகுதி இராஜபக்ஷ அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்ட அதே சமயம், ஏனையவர்கள் ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், எதிர்க் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட, இராஜபக்ஷவின் யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தமைக்குப் பொறுப்பாளியான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தது.
இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் பெற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் அதிகம் உள்ளன. பூகோள நிதி மூலதனத்தினால் உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்களிடம் கோரப்படும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சமாதானமான முறையில் அல்லது ஜனநாயக முறையில் அமுல்படுத்த முடியாது. எதிர்ப்பும் பகைமையும் வளர்ச்சி காணும் நிலையில், இலங்கையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ்-அரச வழிமுறைகள் மேலும் மேலும் பொதுவானதாக ஆகும். தொழிலாள வர்க்கம் ஒருசில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அல்லாமல் உழைக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், ஆளும் வர்க்கத்தின் சகல பகுதியினரிடம் இருந்தும் பிரிந்து சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே இந்தத் தாக்குதல்களை தோற்கடிக்க முடியும். சகல வடிவிலுமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை நிராகரிப்பதன் ஊடாக மட்டுமே அத்தகைய ஒரு இயக்கத்தை கட்டியெழுப்ப முடியும். இலங்கையிலும், தெற்காசியா மற்றும் அனைத்துலகிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை அமைப்பதன் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான பொதுப் போராட்டத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே இதன் அர்த்தமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி இந்த வேலைத் திட்டத்துக்காகவே போராடுகின்றது.
|