WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
White House admits BP disaster worst spill in US history
வெள்ளை மாளிகை பிரிட்டிஷ் பெட்ரோலிய பேரழிவு அமெரிக்க வரலாற்றில் மோசமான கசிவு என்பதை ஒப்புக்கொள்கிறது
By Andre Damon and Tom Eley
26 May 2010
Use this version to print | Send
feedback
லூயிசியான வெனிஸில் மாசு அகற்றும் இடத்தில் தொழிலாளர்கள்: புகைப்படம்: நன்றி -- அமெரிக்கக் கடலோரப் பாதுகாப்புப் படை
வளைகுடா கடலோர எண்ணெய்க் கசிவின் முக்கியத்துவத்தை பல வாரங்கள் குறைத்துப் பேசிய பின், திங்களன்று வெள்ளை மாளிகை Deepwater Horizon பேரழிவு அமெரிக்க எண்ணெய்க் கசிவு வரலாற்றில் மிக மோசமானது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம்தான் எண்ணெய்க் கசிவின் பதிலளிக்கும் பொறுப்பு உள்ளது என்று ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இந்த ஒப்புதல் வெள்ளை மாளிகையில் இருந்து வந்துள்ளது.
”துரதிருஷ்டவசமாக, இதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.” என்று வெள்ளை மாளிகையில் எரிசக்தி, சுற்றுச்சுழல் மாறுதல் கொள்கை அலுவலகத்தின் இயக்குனரான கரோல் பிரௌசர் திங்களன்று CBS இடம் “The Early Show” வில் கூறினார். சில விஞ்ஞானிகள் கசிவு ஏற்கனவே 2.5 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை மெக்சிகோ வளைகுடாவில் வெளியிட்டுள்ளது என்று மதிப்பிட்டுள்ளனர். இது 1989ல் எசெக்சன் வால்டெஸ் வெளியிட்டதைப்போல் 10 மடங்கு அதிகமாகும்.
லூயிசியானா ஆளுனர் பாப்பி ஜிண்டால் திங்களன்று கடலோரத்தில் 70 மைல்கள் கனரக கச்சா எண்ணெயினால் மாசுபட்டுவிட்டது என்று அறிவித்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து ஒபாமா நிர்வாகத்தின் ஒப்புதல் வந்தது. “இது மேரிலாண்ட், டிலாவர் கடலோரப் பகுதிகள் இணைந்த நீளத்தைவிட அதிகமானது” என்று ஜிண்டால் கூறியிருந்தார்.
பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராக கசிவின் பெரும் பரிமாணங்கள் தெளிவானவுடன் மக்கள் சீற்றம் அதிகரித்துள்ளது. செவ்வாயன்று வெளிவந்த CBS கருத்துக் கணிப்பு அமெரிக்க மக்களில் 16 சதவிகிதத்தினர்தான் பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்து கொண்டுவரும் பணி பற்றி ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் 76 சதவிகிதத்தினர் அதை ஏற்கவில்லை என்றும் காட்டியுள்ளது. இதற்கிடையில் கருத்துக் கணிப்பிற்குட்பட்ட 45 சதவிகிதத்தினர்தான் ஒபாமா நிர்வாகம் கசிவு பற்றிக் கையாண்ட விதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறினர்.
ஒபாமாவின் ஆதரவுடன் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கசிவிற்கு எதிராக எடுத்த நடவடிக்கையை உள்ளூர் அதிகாரிகளும் அங்கு வசிக்கும் மக்களும் தொடர்ந்து தீவிரமாகக் கண்டித்துள்ளனர். லூயிசியானாவில் செயின்ட் பெர்னார்ட் திருச்சபை மண்டலத்தில் தலைவரான கிரைக் டாபரோ உள்ளூர் வானொலி நிலையத்திடம்: “திட்டமே நம்மை இறக்கவிடுவது, பின் 75 மில்லியன் டாலர் மதிப்புடைய தூய்மைப்படுத்துதலை செய்வது, பின் கணக்கை முடிப்பது என்று உள்ளது.” எனக்கூறினார்.
லூயிசியான வெனிஸில் பொருட்கள் ஏற்றும் படகிற்கு தலைமை மாலுமியான கிறிஸ்தோபர் ஹெர்ன்டன் உலக சோசலிச வலைத் தளத்துடனான ஒரு தொலைப்பேசி பேட்டியில், “கசிவு கத்தரீனாவை விட பத்து மடங்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.
“ஒவ்வொரு நாளும் இன்னும் அதிக எண்ணெய் வெளிவருகிறது. எங்கு பார்த்தாலும் இறந்துபோன மிருகங்களைக் காண்கிறோம். நீங்கள் வெளியே செல்லும்போதெல்லாம் மீன்கள், பறவைகள், சதுப்புநில எலிகள் அனைத்தையும் பார்க்கலாம். இது பெரும் வெட்ககரமான செயலாகும்.” என்றார்.
தானும் தன்னுடைய சக மாலுமிகளும் தூய்மைப்படுத்தும் குழுவினருக்கு பணி கிடைக்க முயல்வதாகவும், ஆனால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் இதை ஏற்கவில்லை என்றும் ஹெர்ன்டன் கூறினார். “பல ஆயிரக்கணக்கான படகுகள் உள்ளன, படகை ஓட்ட ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். பிரிட்டிஷ் பெட்ரோலியமோ இங்கும் அங்கும் ஏதோ செய்கிறதேடு, தனிப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களை ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் முடிந்தவர்கள் அனைவரும் அங்கு சென்று இயன்றதைச் செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் கூறுகிறேன்.”
“தூய்மைப்படுத்துவதில் கால் பகுதி படகுகள் கூட பயன்படுத்தப்படுவதில்லை. ஏதோ செய்வதுபோல் அவர்கள் குரலை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்” என்றார் ஹெர்ன்டன்.
புதனன்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் “Top kill” நடவடிக்கையை ஆரம்பிக்கக்கூடும். இதில் மிக அதிக கனரக சிமென்ட் நேரடியாக தோண்டப்பட்டுள்ள, வெடித்துள்ள தடுப்புத் தளத்திற்கு செலுத்தப்படும். அதுவோ கடல் அடித்தளத்தில் நீர்மட்டத்திற்கு ஒரு மைல் கீழே உள்ளது.
Top kill நடவடிக்கையை வெற்றி பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள இரு நாட்கள் ஆகலாம்-அல்லது அது கசிவை மோசமாக்கிவிட்டதா என்பதும் அப்பொழுதுதான் தெரியவரும். சில தொழில்துறை வல்லுனர்களின் கருத்துப்படி, வெடிப்புத் தடுப்பு முறை கூடுதலான அழுத்தத்தில் சிதைந்திருக்கக்கூடும், அல்லது புதிய வெடிப்புக்கள் குழாய்களில் ஏற்பட்டிருக்கலாம்.
பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல்பிரிவு பேராசிரியராக உள்ள ரோபர்ட் பீ, அசோசியேட்டட் பிரஸ்ஸிடம், இம்முயற்சி “அதிக தோல்வி வாய்ப்பைக் கொண்டிருக்கிறது, ஏனெனில் எண்ணெய் கசிவின் வேகம் மிக அதிகம் ஆகும். எண்ணெய்க் கசிவு எந்த நேரத்திலும் 1.6 மில்லியன் கலன்கள் ஒரு நாளுக்கு என்று உள்ள நிலையில், இது அனைத்தையும் உங்கள் முகத்திற்கு திருப்பும்” என்று கூறினார்.
Top kill செயல் எண்ணெய் கசிவு பற்றிய நேரடி ஒளிப்பதிவு காட்சியை தான் நிறுத்திவிடும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல வாரங்கள் மறுத்த பின் கடந்த வாரம்தான் ஒப்புக் கொண்டிருந்தது. top kill செயல் பற்றி ஒளிப்பதிவுக்காட்சிகள் பொதுச் சீற்றத்தை அதிகரிக்கக்கூடும். அப்படித்தான் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஒளிப்பதிவு காட்சி தோண்டப்பட்ட முறிவடைந்துள்ள குழாய் ஏற்றத்தில் திணிக்கப்பட்ட ஒரு குழாய் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூறியது போல் செயல்படவில்லை என்பது தெளிவாயிற்று.
எண்ணெய்க் குழாயில் இருந்து சீறி வரும் எண்ணெயை தடுத்து நிறுத்துவதில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பலமுறைகள் தோல்வியுற்ற, இப்பொழுது ஒவ்வொரு நாளும் வளைகுடாவிற்குள் மில்லியன் கணக்கான கலன்கள் எண்ணெய் வெளிவருகையில் ஏன் இந்நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற வினாவை எழுப்பியுள்ளது.
ஆயினும் கூட இந்த வாரச் செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பிரிட்டிஷ் பெட்ரோலியம் கசிவைப் பற்றி செய்துவருபவற்றிற்கு ஆதரவு கொடுத்து, “அரசாங்கத்திற்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள உறவில் மாற்றத்திற்கு தேவை இல்லை” என்று கூறினர்.
பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு எதிராக எப்பொழுதேனும் குறைகூறும் அறிக்கைகள் ஒபாமா நிர்வாகத்தால் பொதுஜனத் திருப்திக்காக வெளியிடப்படுவதுடன், அதே அவசரத்தில் திரும்பப் பெறப்படுகின்றன. போனவாரம் இப்படித்தான் மறுபடியும் உள்துறை மந்திரி கென் சலாசர் தன் முந்தைய கருத்தான அரசாங்கம் பேரழிவை தடுக்க இன்னும் தீவிர பங்கைக் கொள்ளலாம் என்பதை பின் வாங்கிக் கொண்டார்.
கடலோரப் பாதுகாகாப்புத் தளபதி தாட் ஆலெனினால் பகிரங்கமாக முரண்பட்ட கருத்துக்களுக்கு உட்பட்ட பின்னர், சலாசர் தன் முந்தைய கருத்தான அரசாங்கம் “பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை அகற்றும்” என்பதில் இருந்து பின்வாங்கினார். “செய்யக்கூடிய அனைத்தையும் நிர்வாகம் செய்துவருகிறது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் கசிவை நிறுத்தி பாதிப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்கு தேவையான அளவிற்கு அழுத்தம் கொடுத்துவருகிறது” என்றார் சலாசர். இவரே எண்ணெய் தொழில்துறைக்கு நெருங்கிய நண்பர் ஆவார். “அரசாங்கத்தின் மேற்பார்வையுடன் சில இடங்களில் பிரிட்டிஷ் பெட்ரோலியமும் தனியார் துறையும்தான் முயற்சிகளுக்கு முன்னிற்க வேண்டும் என்பது பற்றி நாங்கள் மிகத் தெளிவாக உள்ளோம். தனியார் பிரிவுத் தொழில்நுட்பம் 5,000 அடி கீழே கடலின் தரைத்தளத்தில் எண்ணெய் கிணற்றின் பழுதை நீக்குவதற்கு செய்யவேண்டியவற்றை அது செய்யும்.”
செவ்வாயன்று ஜனாதிபதியின் கோரிக்கையான பிரிட்டிஷ் பெட்ரோலியம் “கேடுகெட்ட வெடிப்பை மூடவேண்டும்” என்பதை செய்தி ஊடகத்திற்கு நிர்வாகம் கசிய விட்ட நிலையில் ஒபாமா “சீற்றமும் வெறுப்பும்” உடையவராக தோற்றம் மீண்டும் அளிக்க நேர்ந்தது.
ஆனால் ஒபாமா, சலாசர் ஆகியோரின் “கடுமையான உரை” கொள்கை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் கொண்டுவரவில்லை. வெள்ளைமாளிகையில் இருந்து பெரும் அடையாளக் குறிப்புக்கள் கூட லண்டன் தளத்தை உடைய எண்ணெய் பெருநிறுவனத்தால் உதறித்தள்ளப்பட்டு விட்டன. கடந்த புதனன்று சுற்றுசூழல்பாதுகாப்பு அமைப்பு (EPA) பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு கடலில் எண்ணெய் தேக்கத்தை உடைக்கும் Corexit 9500 என்னும் அதிக நச்சுப் பொருள் கொண்ட கலைப்பானைப் பாய்ச்சுவதை 72 மணித்தியாலங்களுக்குள் நிறுத்த வேண்டும் என்று கூறியது.
ஆனால் இந்த ஆணையை பிரிட்டிஷ் பெட்ரோலியம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. EPA தலைவர் லிசா ஜாக்சன் செவ்வாயன்று மீண்டும் கசிவிற்கான விடையிறுப்பு பற்றி ஆதரவு கொடுத்துப் பேச நேர்ந்தது. தேசிய பொது வானொலியில் அவர் குறைகூறுபவர்கள் “திங்கள்கிழமை தடுப்பவர்கள்” என்று கடிந்துரைத்தார்.
எண்ணெய்க் கசிவை நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்வி ஒபாமா நிர்வாகத்திற்கு ஒரு அரசியல் நெருக்கடியை கொடுத்துள்ளது. அதன் முக்கிய கவலை பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் கட்டுப்பாட்டிற்கு சவால் விடுக்கும் எந்த நடவடிக்கையும் பொருளாதாரம் முழுவதிலும் பெருநிறுவனக் கட்டுப்பாடு உள்ளது என்ற பரந்த பிரச்சினையை எழுப்பிவிடும் என்பதுதான்.
திங்களன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், தளபதி ஆலென் அரசாங்கம் ஏன் அதிக பங்கை கசிவு பற்றி எடுக்கவில்லை என்று ஒரு நிருபர் கேட்டதற்கு விடையிறுக்கும் வகையில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் “உற்பத்தி சாதனங்களின்” உடைமையாளர் என்றார். கூட்டத்தில் இருந்து மற்றொரு நிருபர் வினாவை எடுத்துக் கொண்டு, “இப்பொழுது நீங்கள் நிறுவனம் உற்பத்தி சாதனங்களை உடைமையாக கொண்டுள்ளது என்றீர்கள். ஆனால் உடைக்க முன்னர், ஜனாதிபதி இப்பொழுது அது எமது உடமை என முடிவெடுத்தால் அது மாறிவிடலாம்” என்றார்.
அரசாங்கம் “உற்பத்தி சாதனங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் விளிம்பில் நிருபர் நின்றிருந்தார்; “ஏனெனில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் அதைப் பற்றி கவனமாகக் கையாளவில்லை என்பதால். இந்த நிலைப்பாடு அமெரிக்க அரசியல் பேச்சுக்களில் அநேகமாக தணிக்கைக்கு உட்பட்டுவிட்டது.
பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை எண்ணெய்க் கசிவை முற்றிலும் கவனித்துக் கொள்ள விட்ட ஒபாமா நிர்வாகத்தின் முடிவு முற்றிலும் கணிக்கத் தக்கதே ஆகும். இந்த அரசாங்கம்தான் 2008ல் பெருமந்த நிலைக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை தூண்டிய, நூறு மில்லியன் கணக்கான வேலைகளை உலகெங்கிலும் அழிப்பதற்கு காரணமாக இருந்த வோல் ஸ்ட்ரீட் நிதிய நிறுவனங்களுக்கு பொதுப் பணத்தை டிரில்லியன் கணக்கில் எடுத்துக் கொடுத்தது.
புதிய செல்வங்களை அடைவதற்கு நிதிய நெருக்கிடைய வோல் ஸ்ட்ரீட் வாய்ப்பாகப் பயன்படுத்தியது போல், பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் “தூய்மைப்படுத்துதலும் பெருநிறுவன வருமானத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அதன் உறுதிப்பாட்டினால் வழிகாட்டப்படுவதுடன், அதன் பொறுப்பை வளைகுடாக் கடலோர சுற்றுச்சூலுடன் மட்டுப்படுத்திக்கொள்ளவும் முற்பட்டுள்ளது. இத்துடன்கூட பல்லாயிரக்கணக்கான வேலைகளும் அழிந்துவிட்டன.
இதே உந்துதல்தான் ஒபாமா நிர்வாகம் BPக்கு மட்டும்தான் பேரழிவைச் சமாளிக்கும் “தனித்திறமை” உள்ளது என்ற வலியுறுத்தலின் பின் உள்ளது. எண்ணெய் தொழிலுக்குத்தான் அதன் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் திறன் உள்ளது என்பதுபோன்ற இதே வாதம் பல தசாப்தங்களாக கட்டுப்பாட்டுகளை தளர்த்துவதற்கு குடியரசு மற்றும் ஜனநாயக அரசியல்வாதிகளில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடு தளர்த்தல் என்பது, 11 தொழிலாளர்களின் உயிரைக் குடித்த Deepwater Horizonனின் ஏப்ரல் 20 வெடிப்பிற்கு நிலைமையை ஏற்படுத்தியது.
முழுச் செய்தி ஊடகம், அரசியல் நடைமுறையுடன் கூட ஒபாமா நிர்வாகம் நிபந்தனையற்ற முறையில் பொருளாதாரம் பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டில், அவற்றின் தனி இலாபம், தனியார் சொத்துக் குவிப்பிற்காக இயங்க வேண்டும் என்ற கோட்பாட்டை பாதுகாக்கிறது. இந்த முன்னிபந்தனைதான் அரசாங்கத்தின் விடையிறுப்பில் உள்ள பொறுப்பற்ற தன்மையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
|