WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Obama’s financial reform bill: Wall Street breathes a “sigh of relief”
ஒபாமாவின் நிதிச் சீர்திருத்தச் சட்டவரைவு: வோல் ஸ்ட்ரீட் ஒரு “நிம்மதிப் பெருமூச்சு” விடுகிறது
David Walsh
25 May 2010
Back to screen version
எந்த உண்மைகளும் “தாமே தங்களைப் பற்றிக் கூறிக்கொள்ளுவதில்லை”: ஆனால், சிலமற்றவற்றைவிட அதிகமாகவே தம்மைப் பற்றி அதிகம் கூறிக் கொள்ளுகின்றன. உதாரணமாக மே 21ம் திகதி அசோசியேட்டட் பிரஸ்ஸில் இத்தகவல் வந்துள்ளது: “வெள்ளியன்று, செனட் ஒரு நிதியச் சீர்திருத்த சட்டவரைவை இயற்றி தொழில்மீது தொங்கிக் கொண்டிருந்த உறுதியற்ற தன்மையை நகர்த்திய பின்னர் நிதியப் பங்குகள் விலை உயர்ந்தன.”
அமெரிக்க பொதுமக்கள், அல்லது அவர்களுடைய குறைந்த அவநம்பிக்கைத் தன்மையுடைய கூறுபாடுகள், எப்படிப்பார்த்தாலும் செய்தி ஊடகத் தகவல்களின் அடிப்படையில் காங்கிரசின் இரு பிரிவுகளிலும் இயற்றப்பட்டுவிட்ட நிதியச் சீர்திருத்தச் சட்டத்தினால் கணிசமாக ஏதேனும் நடந்துள்ளது என்று நினைத்தால், அது மன்னிக்கத் தக்கதே ஆகும். (ஒரு கீழ்மன்றம்-செனட் குழு சட்டவரைவின் இறுதி வடிவம் பற்றி அடுத்த சில வாரங்களில் விவாதித்து முடிவெடுக்கும். வோல் ஸ்ட்ரீட் ஏற்கத்தக்கது அல்ல எனக்கருதும் சிலவற்றை ஐயத்திற்கு இடமின்றி அகற்றிவிடும்.)
எல்லாப் பத்திரிகைகளிலும் வாடிக்கையாகக் கொடுக்கப்படும் தலைப்புக்கள், “வோல் ஸ்ட்ரீட்டை எதிர்கொள்ளுகிறது”, “வோல் ஸ்ட்ரீட்டின் களிப்புப்பயணம் முடிவடைகிறது”, “நிதியப் பிழைகள் திருத்தப்படுகின்றன”, “பெரிய வங்கிகள், கடன்தரத் தன்மையை செனட் பெரும் சீர்திருத்தத்த வகையில் சட்டமியற்றுகிறது”, “செனட் சட்டவரைவை இயற்றுகையில் நிதியச் சீர்திருத்தத்தில் மைல்கல் அடையப்படுகிறது” போன்றவை வந்தன.
ஜனநாயகக் கட்சியின் அரசியல்வாதிகளுடைய அறிவிப்புக்களும் இதேபோல் பெரிய தன்மையைக் காட்டின, வெற்றுத்தனமாக இருந்தபோதிலும். மாசாச்சுசட்ஸ் செனட்டரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன் கெர்ரி கடந்த வியாழனன்று அறிவித்தார்: “வோல் ஸ்ட்ரீட்டில் இருந்த பேராசை அமெரிக்க வரி செலுத்துபவர்களை வேலைகள் அழிப்பு, வாழ்வின் சேமிப்புக்கள் கரைப்பு ஆகியவற்றில் தள்ளி, அதன்பின் பொருளாதாரத்தை மலையின் உச்சிவிளிம்பில் இருந்து தள்ளியது. வரிசெலுத்துபவர்கள் இப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய பெரிய வங்கிகள் மற்றும் பெரு நலன்களைப் பிணை எடுக்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டனர். பொறுப்பையும், பதில் கூறும் பொறுப்பையும் மீட்பது கட்டாயமாகும், இன்றைய வாக்கு அந்த முயற்சியில் ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும்.”
எந்த பதில் கூறும் பொறுப்பைப் பற்றி கெர்ரி பேசுகிறார்? எந்த நிறுவனங்களும் முறிக்கப்படாது, எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது, எந்த வங்கி அல்லது வோல் ஸ்ட்ரீட் நிர்வாகியும் சிறைக்கு அனுப்பப்படுவது ஒரு புறம் இருக்க, குற்றம் சார்ந்த விசாரணை எனச் சிறிதளவேனும் கருதப்படும் நடவடிக்கையையும் எதிர்கொள்ள மாட்டார்கள். நாட்டைத் தரைமட்டமாக்கி பில்லியனர்களின் திருட்டுத்தனம் என்று வரும்போது இலக்குச் சொற்கள் “நாம் மேலே செல்லுவோம்” என்பதுதான்.
கெர்ரியும் மற்ற ஜனநாயகக் கட்சியினரும் சீற்றமான மக்களை சமாதானப்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் பொருளற்றதை பேசுகின்றனர். வாஷிங்டனிலோ, வோல் ஸ்ட்ரீட்டிலோ எவரும் இதை ஒரு நிமிடம் கூட நம்ப மாட்டார்கள். நிதியப் பங்குகளில் வணிகம் நடத்தும் சீரான சிந்தனையுடைய ஆடவரும் பெண்டிரும் தங்கள் தீர்ப்பை வெள்ளியன்று கொடுத்தனர். ஒரு வர்ணனையாளர் குறிப்பிட்டார்: “பல நிதிய ETF (Exchange trade funds- மாற்று வணிக நிதிகள்) கள் தங்கள் பங்குகள் சட்டவரைவு அறிவிக்கப்பட்டபின் எழுச்சி பெறுவதைக் கண்டனர்.” அவற்றுள் iShares Dow Jones U.S.Financial Services Index Fund, Merrill Lynch Regional Bank Holders, iShares S&P Global Fiancnials Sector Index Fund ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் 2 சதவிகிதத்திற்கு மேல் உயர்வடைந்தன.
AP இன்னும் குறிப்பான தகவல்களையும் கொடுத்தது: “ஜே.பி. மோர்கன் சேஸ் நிறுவனத்தில் பங்குகள் $2.02 அதிகரித்தன, அதாவது 5.4 சதவிகிதம் என்று பிற்பகல் வணிகத்தில் $39.85 க்கு; அமெரிக்க வங்கி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 59 சென்ட்டுகள் அதாவது 3.8 சதவிகிதம் உயர்ந்து $15.89 என்று ஆயின. சிட்டிக்ரூப் நிறுவனத்தின் பங்கு 12 சென்ட்டுக்கள் கூடுதலாயின, அதாவது 3.3 சதவிகிதம் என்று $3.75 க்கு உயர்ந்தது. முந்தைய முதலீட்டு வங்கிகளின் பங்குகளும் ஏற்றத்தைப் பெற்றன. மோர்கன் ஸ்டான்லி பங்குகள் $1.27 அல்லது 5 சதவிகிதம் உயர்ந்து $26.91 எனப்போயிற்று. கோல்ட்மன் சாஷ்ஸின் பங்கு $6.15 அல்லது 4.5 சதவிகிதம் உயர்ந்து $142.25 என்ற மதிப்பைப் பெற்றது.”
பெரிய வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் “கட்டுப்பாட்டிற்குள்” கொண்டுவரப்படும் விளிம்பில் உள்ளன என்றால் அதைப் பற்றி எவரும் ஏதும் கூறவில்லை. வோல் ஸ்ட்ரீட் அதன்மீது எந்தக் கட்டுப்பாடு சுமத்துவதையும் விரும்பாது என்பது இயல்பேயாகும். ஆனால் அடுத்த சிறந்த நிலைப்பாடு ஒபாமாவின் தாக்காத நடவடிக்கைகளின் தொகுப்பு ஆகும். இவை வெறும் காகித வேலைக்கு ஒப்பானவை ஆகும். கெட்டிக்காரத்தன வக்கீல்களும் நிதிய வல்லுனர்களும் ஏற்கனவே இந்த “கடுமையான” புதிய கட்டுப்பாடுகளை கடப்பதற்கு சிறந்த வழிவகைகள் என்ன என்று தீர்மானித்து வருகின்றனர். ஒப்புமையில் அதிக சவால் இல்லாத வேலையாக இதை அவர்கள் காண்பர் என்று நாம் கணிக்கிறோம்.
நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று நிதியத் துறையின் மனப்போக்கைச் சுருக்கிக் காட்டியது: “சீர்திருத்தங்கள் உருப்பெறும்போது, வோல் ஸ்ட்ரீட்டில் சற்று நிம்மதி”. டைம்ஸ் கட்டுரை, “வோல் ஸ்ட்ரீட்டின் ஆரம்ப தீர்ப்பு இது இன்னும் கடுமையானதாக இருந்திருக்கக் கூடும் என்பதுதான். தனிப்பட்ட முறையில் எவரிடமேனும் பேசினால், இது ஒரு நிம்மதிப் பெருமூச்சு என்றுதான் ஒரு நெடுங்கால முதலீட்டு வங்கியாளர் கூறினார். அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் பிரச்சினை மிகவும் நயமானது ஆகும். எனக்கு ஆரம்பத்தில் இலாபக்குவிப்பு 15 அல்லது 20 சதவிகிதம் குறையும், மேற்பார்வை, உடன்பாட்டுச் செலவினங்கள் அதிகரிக்கும், ஆனால் நிறுவனத்திற்கு முறிவு வராது, கடுமையான புதிய வரிகளும் இருக்காது” என்றார்.
டைம்ஸ் தொடர்ந்து எழுதியது: “பெரிய வங்கிகளும் தரகு நிறுவனங்களும் மாற்றத்திற்கு ஏற்ப சரிசெய்து கொண்டு, புதிய வருவாய் முறையை தோற்றுவித்து குறைந்த இலாபங்களை ஈடுகட்டும், புதிய கட்டுப்பாடுகளை சுற்றிக் கடக்க வழிவகைகளைக் கண்டுபிடிக்கும், வேறுவிதமாகக் கூறினால் தொழில்துறை பற்றிய சித்திரம் ஒரு நில நடுக்கத்தை ஒன்றும் கொண்டுவராது.”
அமெரிக்க அரசியல் நிலைமை மற்றும் செப்டம்பர் 2008ல் இருந்து நடப்பவை பற்றிச் சிறிதேனும் அறிந்திருப்பவர்கள் இதையொட்டி அதிர்ச்சி பெறமாட்டார்கள். தனக்கு முந்தைய நிர்வாகத்தைப் போலவே, ஒபாமா நிர்வாகமும் நிதிய நெருக்கடியை மனத்தில் ஒரு மைய இலக்கைக் கொண்டுதான் குறுக்கீடு செய்துள்ளது: அதாவது பெரிய வங்கிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் இலாபங்களும் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பிந்தையவற்றிற்கு டிரில்லியன் கணக்கில் டாலர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வேலைகள் மறைந்துவிடுவதையும், வீடுகள் இழக்கப்பட்டுவிட்டது அல்லது பெரும் விலைமதிப்பு குறைந்துவிட்டது, முக்கிய சமூகநலத் திட்டங்கள் தகர்க்கப்பட்டது ஆகியவற்றைத்தான் கண்டனர்.
இரு முக்கியக் கட்சிகளின் அரசியல்வாதிகளும் மிகப் பெரிய, அவ்வளவு மிகப் பெரிய என்று இல்லாத நிதிய அமைப்புக்களின் பைகளுள் வசதியாக அமர்ந்துள்ளனர். OpenSecrets.org இது பற்றி விளக்குகிறது; “துணை அடைமான கடன் நெருக்கடி, பின்னர் வோல் ஸ்ட்ரீட் சரிவு என்று 2008 தேர்தல் வட்டத்தின் போது ஏற்பட்ட போதிலும், வங்கிகள் அப்படி இருந்தபோதிலும் கூட்டாட்சி வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் $37 மில்லியனுக்கும் மேலாக அக்காலத்தில் நன்கொடை அளிக்க முடிந்தது.” பாரக் ஒபாமா, ஹில்லாரி கிளின்டன் மற்றும் அமெரிக்க செனட்டர்கள் கெர்ரி, கிறிஸ்தோபர் டொட், சார்ல்ஸ் ஷ்யூமர் மற்றும் ரிச்சரட் ஷெல்பி ஆகியோர் சமீபத்திய ஆண்டுகளில் பிரச்சார நன்கொடைகளைப் பெற்றதில் வணிக வங்கிகளின் பெரும் விருப்பத்திற்கு உகந்தவர்களாக இருந்துள்ளனர்.
ஒரு மிகவும் வெகுளியான நபர், அல்லது ஒரு அரசியல் அறிவற்ற முட்டாள் அல்லது நேஷன் ஏட்டின் ஆசிரியர்தான் இச் சூழ்நிலையில் அமெரிக்க ஆளும் உயரடுக்கு வோல் ஸ்ட்ரீட்டில் உள்ள அதன் நண்பர்களைக் கைவிடும் என்றோ அல்லது அவர்கள் பணம் பெருக்குவதற்குத் தடை செய்யும் என்றோ அவர்கள் இன்னும் அதிக, கூடுதலான நிதிய பேரழிவுகளைக் கொண்டுவரும் திறனுக்கு தடையாக இருக்கும் என்றோ நினைப்பார்.
“மகத்தான” நிதியச் சிர்திருத்தச் சட்டவரைவு இயற்றப்பட்டுவிட்டது என்ற
செய்தி வந்த அதே நேரம் ஒபாமாவின் நீதித் துறை அமெரிக்க இன்டர்நேஷனல் க்ரூப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் தொடரப்படமாட்டா என்று செய்தி வந்தது. அவர் அடைமானத் தொடர்புடைய பத்திரங்களில் செய்திருந்த நடவடிக்கைகள் நிறுவனத்தை கிட்டத்தட்ட திவால்தன்மைக்குத் தள்ளி, $180 பில்லியன் பிணை எடுப்பிற்கு அரசாங்கத்தை நாடும் நிலைக்கு தள்ளியது.
பொது மக்களுக்குக் கடும் சிக்கனம், அது “தன் சக்திக்கு மீறி வாழ்க்கை நடத்துகிறது”, “அது வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி வாழ வேண்டும்” போன்று கூறப்படும் நிலையில், கொள்ளை அடிப்பவர்கள் தங்கள் வணிகத்திற்கு விலையுயர்ந்த ஆடைகள் உடுத்துச் செல்லுகின்றனர்.
இந்த உண்மை பற்றிய பெருகிய உணர்வு பெரு வணிகத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் சீற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் தற்போதைய அரசியல் முறையில், பெருநிறுவன-நிதியப் பிரபுத்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள், உடைமைக்குள் இருப்பதில், இதற்கு நடைமுறை அமைப்பிலிருந்து வெளிப்பாடு ஏதும் இல்லை. அதன் கருத்துக் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் Bloomberg குறிப்பிட்டது போல், “மிக அதிக கட்டுப்பாடு அதன் மீது இருக்க வேண்டும் என்று வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிராக கருத்துக் கணிப்பு இழிவையும் காட்டுகிறது” என்ற தலைப்பில் அது நடத்தப்பட்டது. ஒரு சமீபத்திய ஹாரிஸ் கருத்துக் கணிப்பின்படி, மக்களில் 8 சதவிகிதத்தினர்தான் வோல் ஸ்ட்ரீட் மீது “பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்”. இந்த அதிருப்தி காங்கிரசைப் பற்றிய அவநம்பிக்கை, வெறுப்பு என மக்கள் கொண்டிருப்பதற்கு இணையாக உள்ளது.
பொது மக்களுடைய உள்ளுணர்வு சரியாகத்தான் உள்ளது. ஆனால் நிதிய முறையை உண்மையாக “திருத்தியமைத்தல்” என்பது இருக்கும் அரசியல் முறையில் இருந்து முழுமையாக முறித்துக் கொள்ளுவதின் அடிப்படையில்தான் நடக்க முடியும்.
இதற்கு ஒரே முற்போக்கான மாற்றீடு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே பரந்த அளவில் சோசலிச இயக்கம் வளர்வதுதான். அத்தகைய இயக்கம் நிதியச் சரிவிற்குப் பொறுப்பானவர்கள் மீது குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், அமெரிக்கப் பெருநிறுவன நலன்கள் திருடிய டிரில்லியன் கணக்கான பணம் மீட்கப்படவேண்டும், முன்கூட்டி வீடுகள் விற்கப்படல் நிறுத்தப்பட்டு உரிமையாளர்கள் அவற்றை மீண்டும் பெறுதல், பில்லியன் கணக்கானவர்களுக்கு வேலைகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு அளித்தல், பெரும் வங்கிகள், வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படல் ஆகியவற்றைக் கோருவதற்கு ஆதரவளிக்கும்.
|