World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Jaffna: One year after the end of the war in Sri Lanka

யாழ்ப்பாணம்: இலங்கையில் யுத்தம் முடிந்து ஒரு வருடத்தின் பின்னர்

By Subash Somachandran and Kamal Rasenthiran
20 May 2010

Back to screen version

மகிந்த இராஜபக்ஷ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் "பயங்கரவாதத்தில்" இருந்து தமிழ் மக்களை விடுவித்துவிட்டதாக அறிவித்து இப்போது ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. ஆயினும், கடந்த மே மாதம் புலிகளின் தோல்விக்குப் பின்னர், யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய வடக்கு நகரங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, பலர் இன்னும் அகதி முகாம்களிலும் அல்லது தற்காலிக குடிசைகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் அங்கு இராணுவ ஆக்கிரமிப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த வாரம், ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒவ்வொரு கூட்டங்களையும் ஞாபகார்த்த நிகழ்வுகளையும் தடைசெய்வதற்கு அல்லது நெருக்கமாக கண்காணிப்பதற்கு சிப்பாய்கள் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திங்களன்று புலிகளின் முன்னாள் ஊதுகுழலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கடந்த வருட இராணுவத் தாக்குதல்களின் இறுதி மாதங்களில் படுகொலை செய்யப்பட்ட பத்தாயிரக்கணக்கான பொது மக்களை நினைவு கூறும் ஒரு சிறு அஞ்சலிக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தியது. ஆரம்பிக்கப்பட்ட பின்னர், கூட்டத்தைச் சுற்றிவளைத்த சிப்பாய்கள் அதை தொடரவிடாமல் தடுத்தனர். சிப்பாய்கள் ஒரு பத்திரிகையாளரைத் தடுத்து வைத்ததுடன், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு கட்டுரையும் எழுதமாட்டேன் என உறுதியளித்த பின்னரே அவரை விடுதலை செயதனர்.

த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஒரு சிறிய ஒன்று கூடலில் பேசும் போது, "அரசாங்கத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு மாறுபட்ட விதத்தில், நாங்கள் இந்த நாளை ஒரு துக்கமான நாளாக கொண்டாடுவோம்" என்றார். யுத்தத்தின் இறுதி நாட்களில் அதிகமானவர்கள் மரணித்துள்ளார்கள், என அவர் தெரிவித்தார். அவர், புலிகளின் தோல்விக்கு விளக்கம் கொடுக்காததோடு உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழர்களுக்கான "அரசியல் தீர்வு" ஒன்றை ஏற்படுத்துவதில் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கத் தயார் என த.தே.கூ. தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம், தமிழ் மற்றும் சிங்கள உழைக்கும் மக்களின் செலவில் கொழும்பு அரசாங்கத்துக்கும் தமிழ் உயர்தட்டுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு ஒழுங்கை ஏற்படுத்துவதேயாகும்.

ஏனைய பல ஆண்டு நிறைவுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், சிப்பாய்கள் மக்களைத் துரத்தியடித்ததன் மூலம் தடை செய்யப்பட்டன. மே 18, தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி என்று குறிப்பிடப்படும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் அதன் அலுவலகத்தில் ஒழுங்கு செய்த கூட்டத்தை இராணுவம் தடை செய்தது.

ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பொழுதும், அதைத் தொடர்ந்த சில நாட்களிலும், யாழ்ப்பாணத்தில் பிரதான இராணுவ சோதனைச் சாவடிகளில் சிறிய தளர்த்தல் இருந்தது. எவ்வாறாயினும், ஏப்ரல் இறுதியில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய இராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் மீளவும் இறுக்கப்பட்டன. இராஜபக்ஷ முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் இணைந்து இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் இறுக்கமாக்கப்படும் என்று மே 3 அன்று யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துறுசிங்க உத்தியோக பூர்வமாக அறிவித்தார். கடத்தல், படுகொலை மற்றும் கப்பம் கோருதல் சம்பந்தமாக அண்மையில் வெளியான செய்திகள் இதற்கு சாக்குப்போக்கை வழங்கியது. நான்கு அல்லது ஐந்து பேரடங்கிய ஆயுதம் தாங்கிய சிப்பாய்கள் வீதி சந்திகளிலும் பாலங்களிலும் நின்று மக்களையும் வாகனங்களையும் சோதனையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனியார் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் சீற்றத்தை தணிப்பதற்காக, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய இராஜபக்ஷ, தனியார் சொத்துக்களில் இருந்து இராணுவம் "படிப்படியாக வெளியேறும்" என்று பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுக்கு கூறியதாக தெரிவிக்கப்பட்டது. 1995ல், யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து இராணுவம் மீளக் கைப்பற்றிய பின்னர், உயர் பாதுகாப்பு வலயங்களை ஸ்தாபிப்பதன் பேரில், மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றி, பிரமாண்டமான நிலங்களை அபகரித்தது. இன்று இத்தகைய 15 வலயங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் 160 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை வளைத்துக்கொண்டுள்ளன. சுமார் 25,000 வீடுகள் ஆக்கிரமிப்பில் அகப்பட்டுள்ளதுடன் அவற்றில் 18,000 உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் வீடுகளை திரும்பப் பெற அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். செவ்வாய் கிழமை வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்த மக்கள் அமைப்பு, த.தே.கூ, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா இராஜபக்ஸ அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சராகும். அவர், தான் இந்த விடயத்தை "மேலிடத்துக்கு" எடுத்துச் சென்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

தேவானந்தாவின் மற்றைய வாக்குறுதிகளை போல் இது ஒரு புதிய மோசடியாகும். கடந்த 12 மாதங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் எதுவிதமான நல்ல மாற்றங்ளும் நடைபெறவில்லை. பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், வீதிகள், வீடமைப்பு மற்றும் போக்குவரத்துக்கள் என்பன இன்னும் பாழடைந்த நிலையிலேயே உள்ளன. அநேகமான அகதிகள் மற்றும் "மீளக் குடியமர்ந்த" மக்களின் வாழ்க்கை இன்னும் பயங்கரமான நிலமையில் உள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல குடும்பங்கள், யாழ் குடாநாட்டின் தெற்குப் பக்கமாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிக்கு இடம்பெயர்ந்தார்கள். ஒரு தசாப்தத்துக்கு மேலாக அங்கு வாழ்ந்த பின்னர், இறுதி யுத்தத்தின் போது அவர்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு மீண்டும் இடம்பெயரத் தள்ளப்பட்டார்கள். சுமார் 280,000 மக்கள் இராணுவக் கட்டிப்பாட்டில் உள்ள பிரமாண்டமான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டார்கள். அண்மைய மாதங்களில் இந்த அகதிகளில் சிலர் யாழ்ப்பாணத்தில் "மீளக் குடியமர்த்தப்பட்டார்கள்". ஆனால் அவர்களுக்கு தகுதியான வீடுகள் அல்லது வாழ்வாதாரங்கள் கிடையாது.

"மீளக் குடியமர்த்தப்பட்ட ஒரு பெண், உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும்போது, அரசியல் கட்சிகள் பற்றி தனது வெறுப்பை வெளிக்காட்டினார். ''ஒருவருமே எங்களுக்கு உதவி செய்யவில்லை. எங்களுக்கு தகரம் மட்டுமே தரப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் தூங்கக்கூட எங்களுக்கு இடம் இல்லை. இங்கு மலசல கூடங்கள் இல்லை. 2 கிலோமீட்டருக்கு அப்பால் சென்றுதான் தண்ணீர் கொண்டுவர வேண்டும். தண்ணீர் எடுப்பதற்கு பொருத்தமான பாத்திரம் கூட எங்களிடம் இல்லை. கடந்த மாதம் அகதிகள் நிவாரணம் நிறுத்தப்பட்டது. எங்களுக்கு தொழில் கிடையாது. எனவே வாழ்க்கையை ஓட்ட சில கூலித் தொழில்களை செய்கின்றோம். நாங்கள் சம்பலும் சோறும் தான் சாப்பிடுகிறோம்.

"தேர்தல் பிரச்சாரத்தின் போது, இராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) வேட்பாளர் சுயாதீனமாக நின்று, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகவும் கல் வீடுகள் கட்டித் தருவதாகவும் எமக்குக் கூறினார். ஈ.பி.டி.பி. மற்றும் த.தே.கூ. வேட்பாளர்களும் இவ்வாறான போலி வாக்குறுதிகளைத் தந்தார்கள். எதுவுமே நடக்கவில்லை.

"கடந்த மே மாதம் இறுதி இராணுவத் தாக்குதல் நடந்த முள்ளிவாய்க்காலில் எனது மகன் ஓருவர் தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்துவிட்டார். எனது தங்கையும் அவரது கணவரும் தங்களின் மூன்று பிள்ளைகளையும் அநாதைகளாக விட்டுவிட்டு செல் தாக்குதல்களால் இறந்து விட்டனர். அந்தச் சிறுவர்கள் தற்பொழுது உறவினர்களுடன் வாழப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். உறவினர்களுக்கும் அவர்களுக்காக செலவிட முடியாத நிலை. நாங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த போது, அவர்களுடன் பல பிரச்சினைகள் இருந்தன. தற்பொழுது நாங்கள் அங்கிருந்து முற்றாக வெளியேறிய பின்னர் மேலும் கூடுதல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றோம். இந்த ஆட்சியாளர்களின் கீழ் எமக்கு எதிர்காலமே இல்லை என்பதை நாங்கள் உணர்கின்றோம்.

இன்னொரு பெண் கூறியதாவது: ''நேற்றுப் பெய்த கடும் மழையால் எமது கூடாரத்துக்குள் வெள்ளம் புகுந்தது. அன்று முழுவதும் எங்களால் நித்திரைகொள்ள முடியவில்லை. நான், நீங்கள் வருவதைக் கண்ட போது, கிராம சேவையாளரே எமக்கு உதவுவதற்காக வருகிறார் என்று நினைத்தேன். எனக்கு ஒரு வேலையும் கிடையாது, ஒரு வருமானமும் கிடையாது. கிராமத்து நிதியில் 6000 ரூபா கடன் பெற்றுள்ளேன். ஒரு தொழில் இன்றி நான் எவ்வாறு அதை திருப்பிக் கொடுப்பது? இங்கு எமது பிள்ளைகளுக்கு எதுவிதமான வசதிகளும் இல்லை. த.தே.கூ. மற்றும் ஈ.பி.டி.பி. போன்ற அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை மட்டும் வழங்குகிறார்கள் ஆனால் ஒன்றும் செய்வதில்லை."

இராஜபக்ஷ அரசாங்கமும் தமிழ் வர்த்தகர்களும் வேறு விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தின் (ஜே.சி.சி.ஐ.) முயற்சியில், யுத்தத்தால் அழிவுற்ற பிரதேசத்தில் ''வர்த்தக வாய்ப்புகளை வெளிக்கொணர்வதற்கு'' 200 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கம்பனிகளை ஊக்குவிப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு வர்த்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜே.சி.சி.ஐ. தலைவர் கே. பூர்ணச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள், வடக்கு மற்றும் கிழக்கு தொழிற்துறை அதிபர்களின் பின்னால் வரவுள்ளதை நாங்கள் விரைவில் காண இருக்கிறோம். இதன் அறிகுறிகள் ஏற்கனவே தெரியத் தொடங்கியுள்ளன," என்றார். வடக்கில் 200,000 இளைஞர்கள் வேலை வாய்ப்பற்று இருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்திய பின்னர், இந்த வர்த்தகக் கண்காட்சி, யாழ்ப்பாணக் குடாநாட்டின் கைத்தொழில் மயமாக்கத்தை துரிதமாக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்தப் பிரதேசத்தை ஒரு மலிவு உழைப்பு களமாக சுரண்டுவதற்கு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்பட்டுவருகின்றனர். இந்த நோக்கத்துக்காக, வடக்கு மற்றும் கிழக்கில் பல சுதந்திர வர்த்தக வலயங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கும் மேலாக, வெளிநாட்டில் உள்ள தமிழ் புலம் பெயர்ந்தவர்களை இந்தப் பிரதேசத்தில் மீள் முதலீடு செய்ய ஈர்ப்பதற்காக, முதலீட்டுச் சபையின் கிளை அலுவலகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தை செய்தது போல், இலங்கை மத்திய வங்கியும் தனது கிளையை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இராணுவ ஆக்கிரமிப்பை இறுக்குவதன் மூலம், பயங்கரமான சமூக நிலைமைகளுக்கு எதிராகவும் இத்தகைய வர்த்தகர்கள் தங்கி நிற்கப் போகும் கடும் மலிவு உழைப்பு சுரண்டலுக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் மத்தியில் இருந்து எழும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க, யுத்த காலத்தின் போது பயன்படுத்திய ஒடுக்குமுறை வழிமுறைகளை முன்னெடுக்க இராஜபக்ஷ அரசாங்கத்தின் தயார்நிலையை இது எடுத்துக் காட்டுகிறது.