WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Greek debt crisis exacerbates problems in Eastern Europe and Balkans
கிரேக்கக் கடன் நெருக்கடி கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்கன்களில் பிரச்சினைகளை அதிகரிக்கிறது
By Markus Salzmann
26 May 2010
Use this version to print | Send
feedback
கிரேக்கத்தின் கடன் நெருக்கடி கிழக்கு ஐரோப்பிய நாடுகளை இன்னும் கூடுதலான அழுத்தத்தில் வைத்துள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் யூரோப்பகுதியில் இல்லை என்றாலும், அவை இந்த நெருக்கடியினால் நேரடியாகப் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன.
மோர்கன் ஸ்ரான்லி முதலீட்டு வங்கியில் உள்ள பகுப்பாய்வாளர்களின் கருத்துப்படி, மிக அதிக இடருக்கு உட்படும் நாடுகள் பல்கேரியாவும், ருமேனியாவும் ஆகும். கிரேக்க வங்கிகள் வருங்காலத்தில் பால்கன் பகுதிகளில் இருக்கும் தங்கள் கிளை இணை நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த மூலதனத்தைத்தான் கொடுக்கும், கடன்களைக் குறைத்துவிடும் என்ற அச்சம் பெருகியுள்ளது.
பால்கன் பகுதியில் உள்ள நான்கு பெரிய கிரேக்க நிதிய நிறுவனங்கள் சந்தையில் இருபது சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளன. இது பல்கேரியாவில் 35 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது என்று The Banker என்னும் நிதிய இதழ் கூறுகிறது. இதைத் தவிர, கிரேக்க தேசிய வங்கி, ஆல்பா வங்கி, பிராக்கஸ் வங்கி, EFG யூரோ வங்கி மற்றும் ATE போன்ற கிரேக்க வங்கிகள் சேர்பியா, மாசிடோனியா, அல்பேனியா, உக்ரைன், குரோஷியா, மோல்டோவா மற்றும் துருக்கியில் வலுவாக பிரதிநிதித்துவம் கொண்டுள்ளன.
தங்கள் கிழக்கு ஐரோப்பிய துணை நிறுவனங்களில் இருந்து கிரேக்க வங்கிகள் நிதிகளை எடுத்துக் கொண்டால், அது சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கிரேக்க அரசாங்கம் நாட்டின் வங்கிகளை கடந்த ஆண்டு அரசாங்கம் அளித்த உதவியைத் தங்கள் வெளிநாட்டுத் துணை நிறுவனங்களுக்கு மறுமூலதனம் அளிக்கப் பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டதாகப் பொருளாதாரப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இன்னும் அதிக IMF நிதி வரவுக்கு காத்திருக்கும் ருமேனியா குறிப்பிடத்தக்க வகையில் ஏதென்ஸ் கடன்களைத் திரும்பப் பெறுவதால் கடுமையான பாதிப்பிற்கு உட்படும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ருமேனியப் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாக சுருக்கம் அடைந்து வருகிறது.
பல்கேரிய வங்கிகளும் அவற்றின் தாய் நிறுவனங்களை மூலதனத்திற்கு அதிகம் நம்பியுள்ளன—தரம் அளிக்கும் நிறுவனமான Fitch இத்தகவலைக் கொடுத்துள்ளது. பிட்ச்சில் கிழக்கு ஐரோப்பியப் பிரிவின் வல்லுனரான எட்வர்ட் பார்க்கர் கருத்துப்படி, “அதன் குறைந்த அளவு வருமானத்தைப் பார்க்கும்போது நாட்டில் சற்றே பெரிய வங்கி முறை உள்ளது.”
யூரோப்பகுதியில் தான் சேருவதற்கான விண்ணப்பத்தை பல்கேரியா ஒத்திவைத்துள்ளது. ஏனெனில் அதன் 2009 வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை மாஸ்ட்ரிக்ட் தரத்தின்படி இருக்க வேண்டிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மேல் பற்றாக்குறை போகக்கூடாது என்பது முதல் தடவையாக மீறப்பட்டுள்ளது. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் யூரோ அறிமுகம் பற்றி பெருகிய அவநம்பிக்கைத்தன்மை உள்ளது. பல அரசாங்கங்கள் தேவைப்பட்டால் தங்கள் நாணயத்தை மதிப்புக்குறைப்பு செய்யும் திறனைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றன.
“கடந்த வாரத்தில், கிழக்கு ஐரோப்பாவில் பத்திரச் சந்தைகளில் மிகப் பெரிய விற்றுத் தீர்க்கும் விற்பனையைக் கண்டோம்” என்று வியன்னாவில் உள்ள உலக வங்கியின் கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரப் பிரிவுப் பொருளாதார வல்லுனர் Juraj Kotian கூறினார். இதன் விளைவுகள் வட்டி விகிதங்கள் உயர்வுடன் விரைவான நாணய மதிப்புக்குறைவு ஏற்படுதலும் ஆகும்.
கிழக்கு ஐரோப்பா இந்த நெருக்கடியினால் ஓராண்டிற்கு முன் சூழப்பட்டது. சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் லாட்வியா, ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு பல பில்லியன்களைக் கொடுத்து இப்பகுதியில் ஒரு சரிவைத் தவிர்த்தன. இப்பொழுது கிரேக்கத்தின் நெருக்கடி இந்நாடுகளைத் திவால் தன்மைக்குத் தள்ளக்கூடும்.
பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நாணயங்கள் சமீபத்திய வாரங்களில் மிக அதிகமாக மதிப்புக் குறைவை அடைந்துள்ளன. போலந்தின் ஜ்லோடி (zloty) கிட்டத்தட்ட 10 சதவிகிதம் கடந்த இரு வாரங்களில் குறைந்துவிட்டது. அதேபோல் ஹங்கேரிய போரின்டும் ருமேனிய லியூவும் குறைமதிப்பை அடைந்தன.
வார்சோவின் மத்திய வங்கித் துணைத் தலைவர் விடோல்ட் கோஜின்ஸ்கி தன்னுடைய நாடு யூரோவை அறிமுகப்படுத்துவதை மீண்டும் ஒத்தி வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஒற்றை நாணயத்தை அறிமுகப்படுத்துவது ஒன்றும் “உயர்ந்த முன்னுரிமை” அல்ல என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு போலந்து யூரோப்பகுதியில் சேர்வது ஏற்கனவே ஒத்திப்போடப்பட்டது. அது ஆரம்பத்தில் 2012 க்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் நிதிய நெருக்கடிதான்.
கடன் நெருக்கடியின் பாதிப்பு முன்னாள் யூகோஸ்லேவிய நாடுகளிலும் உணரப்பட்டது. இவை மரபார்ந்த முறையில் கிரேக்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவை. ஜேர்மனிய கன்சர்வேடிவ் கொன்ராட் அடினார் அறக்கட்டளை சமீபத்தில் பொருளாதார, நிதிய நெருக்கடியின் விளைவுகள் குரோஷியாவிலும் உணரப்படுவதாகக் கூறியுள்ளது. மேலும் “இதே போன்ற போக்கு, அதாவது அரசாங்கத் திவாலுக்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடுமோ” என்ற வினாவையும் எழுப்பியுள்ளது.
ஏற்கனவே 2008 ல் குரோஷியாவின் பொருளாதார வளர்ச்சி மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக விழுந்துவிட்டது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 6 சதவிகித சரிவு பதிவு செய்யப்பட்டது, குரோஷிய வங்கியின் பகுப்பாய்வாளர்கள் இந்த ஆண்டு இன்னும் அதிகச் சரிவை எதிர்பார்க்கின்றனர். வேலையின்மையில் உள்ளோர் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக கிட்டத்தட்ட 20 சதவிகிதம் என்று உள்ளது. இது உண்மை வேலைவிகிதம் கிட்டத்தட்ட முப்பது சதவிகிதம் இருக்கலாம் என்று தெரிவிக்கிறது. மற்றொரு முக்கியமான குறியீடான வெளிநாட்டு முதலீடு கடந்த ஆண்டு 2008 உடன் ஒப்பிடும்போது பாதிக்கும் மேல் சரிந்தது.
கடந்த ஆண்டு குரோஷியாவின் கடன்கள் 16 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக உயர்ந்தன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 35 சதவிகிதம் என்பதைக் குறிக்கிறது. தேசியக் கடனும் பத்து ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளது. 2009ல் 17.9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது.
கிழக்கு ஐரோப்பாவை போலவே, குரோஷியாவில் உள்ள வங்கிகள் முக்கியமான மேலை ஐரோப்பிய நிதிய நிறுவனங்களின் உடைமை ஆகும். ஆஸ்திரிய, இத்தாலிய மற்றும் ஜேர்மனிய வங்கிகள் கிட்டத்தட்ட 90 சதவிகித குரோஷிய வங்கி முறையைக் கட்டுப்பாட்டில் கொண்டு, கிரேக்க அரசாங்கப் பத்திரங்களில் மிக அதிகமாக தொடர்பு கொண்டுள்ளன. இவை இரத்து செய்யப்பட்டால், அது குரோஷிய வங்கி முறையில் வியத்தகு விளைவை ஏற்படுத்திவிடும். இதேதான் சேர்பியாவிற்கும் பொருந்தும். அது தற்பொழுது பொருளாதார நெருக்கடியினால் பெரும் அதிர்ச்சிக்கு உட்பட்டுள்ளது, உள்ளூர் நாணயமான டினர் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளுகிறது.
இதையொட்டி கிழக்கு ஐரோப்பிய நெருக்கடி ஆஸ்திரிய வங்கிகளுக்கும் உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது. “ஆஸ்திரிய வங்கிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று கிழக்கு ஐரோப்பிய வல்லுனர் Zdnek Lukas, வியன்னா ஒப்புமைப் பொருளாதார ஆய்வுப் பயிலகத்தைச் சேர்ந்தவர், கூறியுள்ளார். 1990 களில் இருந்து ஆல்பைன் குடியரசு அதிகமாக கிழக்கு ஐரோப்பா, பால்கன்களில் ஈடுபாடு கொண்டுள்ளது. பாங்க் ஆஸ்திரியா, ரைபெய்சென் மற்றும் எர்ஸ்ட் பாங்க் என்னும் மூன்று பெரிய வங்கிகளும் இப்பகுதியில் மிக அதிக கடன்களைக் கொடுத்துள்ளன. ஆஸ்திரிய தேசிய வங்கி (ONB) கருத்துப்படி 2009 முடிவில் இவை பாக்கி நிற்கும் கடன்கள், பிற கடன்கள் மொத்தத்தில் பல்கேரியா, ருமேனியா, செர்பியாவில் 35 பில்லியன் யூரோக்களைக் கொண்டுள்ளன.
கடன்கள் கொடுக்கப்படா முடியாத இடர் பற்றிப்பேசுகையில், ÖNB செய்தித் தொடர்பாளர் ஒருவர் தன் சிக்கன நடவடிக்கையை கிரேக்க அரசாங்கம் எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்து உள்ளது என்று கூறி வங்கிகளை “துப்பாக்கி இலக்கில் இருந்து” அகற்றியுள்ளார்.
கிரேக்கம் போலவே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சமீப மாதங்களில் மக்களை கடன் நெருக்கடியை கடுமையாக சுமக்க வைத்துள்ளன. சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் ஊதியங்கள், பொதுநலச் செலவுகளில் வெட்டுக்களை வலியுறுத்துகின்றன.
இதற்கு நல்ல உதாரணம் லாட்வியா ஆகும். அங்கு இப்பொழுது சமூக உள்கட்டுமானம் கடும் சிக்கன நடவடிக்கைகளால் சரிந்து கொண்டு வருகிறது. ருமேனியாவில் பிரதம மந்திரி எமில் போக் புதிய வெட்டுக்கள் அலையை தொடக்கியுள்ளார். ஹங்கேரியில் வரவு-செலவுத் திட்ட பலப்படுத்துதல் புதிய வலதுசாரி பிரதம மந்திரி விக்டர் ஓர்பன் அரசாங்கத்தின் செயற்பட்டியலில் உயரிடத்தில் உள்ளது.
முன்னாள் யூகோஸ்லேவியாவின் வறிய நாடுகளில், ஊழல் உயரடுக்கானது மக்கள் குருதி சிந்தி வங்கிகள் மீட்பிற்கு விலை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளன. பெல்கிரேட் சர்வதேச நாணய நிதியத்துடன் நாடு இன்னும் அதிக உதவி பெறுவதற்கு நிபந்தனையான கடும் சிக்கன நடவடிக்கைகள் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்துகிறது. குரோஷியாவின் பிரதம மந்திரி ஜட்ரன்கா கோசோர், ஏற்கனவே “குரோஷியாவின் மார்கிரட் தாட்சர்” என்ற புனைப் பெயரைப் பெற்றவர், சமூகச் செலவினங்களின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆழ்ந்த வெட்டுக்களை அறிவித்துள்ளார். |