சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan defence ministry begins evicting poor in Colombo

இலங்கை பாதுகாப்பு அமைச்சு கொழும்பில் உள்ள வறியவர்களை வெளியேற்றத் தொடங்குகிறது

By our correspondent
10 May 2010

Use this version to print | Send feedback

இலங்கை பாதுகாப்பு அமைச்சு, கடந்த சனிக்கிழமை, மத்திய கொழும்பில் இருந்து 45 குடும்பங்களை வெளியேற்றவும் அவர்களது வீடுகளை தரைமட்டமாக்கவும் பொலிசையும் இராணுவத்தையும் அனுப்பியது. அண்மைய நாட்களாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகள், மத்திய மலையக பகுதியான கண்டி மற்றும் தெற்கு நகரமான காலியிலும் ஆயிரக்கணக்கான நடை பாதை வியாபாரிகளை அகற்ற பொலிசாரை குவித்தது.

கொழும்பில் கொம்பனித்தெரு மெவ்ஸ் வீதியில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள், தம்மை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக அணிதிரட்டப்பட்ட கலகம் அடக்கும் படை உட்பட பொலிஸ் அதிகாரிகளை எதிர்கொண்டனர். இந்தக் குடும்பங்களின் வீடுகள், இராணுவச் சிப்பாய்களின் பிள்ளைகளுக்கான பாடசாலைக்கு அருகில் அமைந்திருந்தன. மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற மறுத்ததை அடுத்து, பொலிசார் அவர்களை வெளியில் இழுத்துச் சென்றனர். பிரதேசத்தைச் சூழ படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். உள்ளூர் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே புல்டோசர்களை கொண்டுவந்து வீடுகளை இடிக்கத் தொடங்கினர்.

அந்த வீடுகளுக்கு தம்மிடம் சட்டப்பூர்வமான உரிமை இருப்பதாக வாதிட்டு குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்த போது, அவர்களை தடிகளால் கொடூரமாக தாக்கிய பொலிஸ் கலகம் அடக்கும் படையினர் அவர்களை அங்கிருந்து விரட்டினர். இந்த தாக்குதல்களை படம் எடுத்த நிருபர்களின் கமராக்களில் இருந்த படங்களை இராணுவத்தினர் அழித்தனர்.

Colombo hawkers after police destroyed their makeshift stalls
பொலிசாரால் உடைக்கப்பட்ட தமது தற்காலிக கடைகள் இருந்த இடத்தில் கொழும்பு நடைபாதை வியாபாரிகள் நிற்கின்றனர்

இத்தகைய தாக்குதல்கள், நாட்டின் பிரதான நகரங்களில் இருந்து வறியவர்களை வெளியேற்றி, அந்த பெறுமதியான நிலங்களை பெரும் வர்த்தக மேம்பாட்டாளர்களுக்கு விடுவித்துக் கொடுக்க புதிதாக தேர்வு செய்ப்பட்ட அரசாங்கம் தீட்டியுள்ள திட்டத்தின் ஒரு பாகமாகும். கடந்த மாத பொதுத் தேர்தலை அடுத்து புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு ஒரு சில நாட்களுக்குள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகார சபையை பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ அந்தச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நகர அபிவிருத்திக்குப் பொறுப்பாக பாதுகாப்பு அமைச்சை நியமிப்பது, இலங்கை சமூதாயத்தை மேலும் இராணுவ மயமாக்குவதைக் குறிக்கின்றது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த யுத்தத்தின்போது தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட இராணுவ அடக்குமுறை வழிமுறைகள், தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு எதிராக மேலும் மேலும் கட்டவிழ்த்துவிடப்படும் என்பதை இது இன்னொருமுறை வெளிக்காட்டியுள்ளது.

1977ல் இருந்தே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கொழும்பு நடைபாதை வியாபாரிகளை அகற்ற பல சமயங்களிலும் முற்பட்ட போதிலும், எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கின. நகரங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வைப்பதன் மூலம், அரசாங்கம் கூட்டுத்தாபன வணிகர்களுக்கென்று குறித்து வைத்துள்ள பிரதேசங்களில் இருந்து வறியவர்களை பலாத்காரமாக வெளியேற்றுவதற்காக, யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு இயந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கின்றது.

அரசாங்கம் முதலீட்டையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்க கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் பல திட்டங்களை வகுத்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின்படி, கொழும்பு "இதயப் பிரதேசமாக" உருவாவதோடு "மீளாய்வு வலய திட்டத்தின்" அடிப்படையில் "துறைமுகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள், வங்கி, நிதி மற்றும் காப்புறுதி துறையில்" செல்வாக்குச் செலுத்தும். அரசாங்கம் நிர்வாக அலுவலகங்களை கொழும்பு நகர மத்தியில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு இடம்மாற்றத் திட்டமிடுகின்றது. கொழும்பில் தற்போது உள்ள தொழிற்துறைகள் நகரில் இருந்து தொலைவில் சுதந்திர வர்த்தக வலயத்திற்கு இடமாற்றப்படவுள்ளன.

Bulldozer destroying homes
புல்டோசர் வீடுகளை தரைமட்டமாக்குகின்றது

கோடாபய இராஜபக்ஷ கடந்த வாரம் வடக்கிலுள்ள யுத்த வலயத்திற்குச் சென்றிருந்த போது, நடைபாதை வியாபாரிகளை அகற்றவும் வறியவர்களின் வீடுகளை அழிக்கவும் அரசாங்கத்தின் பரந்த நோக்கத்தை அறிவித்தார். குடிசைகளும் ஏனைய "சட்டவிரோத கட்டிடங்களும் கண்களை உறுத்துவதோடு அவை கொழும்பில் இருந்து அகற்றப்படும் என அவர் வடக்கில் கிளிநொச்சியில் வைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார். நகரை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியவாறு மாற்ற அங்குள்ளவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கூறிக்கொண்டார்.

அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின்படி, கிட்டத்தட்ட 54 வீதமான கொழும்பு குடியிருப்பாளர்கள் குடிசைவாசிகளாவர். அவர்கள் கிட்டத்தட்ட 1,000 ஏக்கர் மிகச்சிறந்த நிலத்தில் "சட்டவிரோதமாக" தங்கியிருக்கின்றனர். வறியவர்கள் நகரத்தின் வளங்களை இழக்கச் செய்வதோடு "பிரஜைகளுக்கு கடும் தொல்லை கொடுப்பதுடன் அபிவிருத்தியை தாமதமாக்குகின்றனர்" என அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொழும்பு நடைபாதை வியாபாரிகளை விரட்டியதை நியாயப்படுத்துவதற்காக, இந்த நடவடிக்கை பாதசாரிகளுக்கு வசதியளிப்பதற்கு எடுக்கப்பட்டது என்றும், குற்றங்களை தடுப்பதற்கும் இது தேவை என்றும் அரசாங்கமும் ஊடகங்களும் கூறிக்கொண்டன. அரசுக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை ஆசிரியர் தலைப்பு, "இத்தகைய குற்றவாளிகளின் சார்பில் அரசியல்வாதிகள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, சகல அதிகாரமற்ற கட்டுமானங்களையும் அகற்ற கட்டளையிட்டு" கோடாபய இராஜபக்ஷ எடுத்த "அர்த்தமுள்ள" நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியது.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் நேற்று கொம்பனித் தெருவுக்கு சென்ற போது, நூற்றுக்கணக்கானவர்கள் வீதிகளிலும் அருகில் உள்ள கட்டிடங்களிலும் நின்றிருந்தனர். பொலிஸ் அதிகாரிகள் நிலைகொண்டிருந்ததோடு சந்தியில் இராணுவத் துருப்புக்களும் நின்றிருந்தன. ஒரு வாரத்துக்கு முன்னர் தம்மை அழைத்த நகர அபிவிருத்தி அதிகாரசபை, மே 8 அன்று வீடுகள் அழிக்கப்படும் என அறிவித்ததாக குடியிருப்பாளர்கள் ஆத்திரத்துடன் விவரித்தனர்.

ஒரு குடியிருப்பாளர் விளக்கியதாவது: "எங்களில் பலர் நடைபாதை வியாபாரத்திலேயே வருமானம் பெறுகின்றோம். 4 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தற்காலிக கூடாரங்களுக்கு எங்களை போகச் சொல்கிறார்கள். அங்கு மலசல கூடங்கள் இல்லை. அத்துடன் அந்தக் கூடாரங்கள் வாழ்வதற்கு பொருத்தமானவை அல்ல. எங்களது வீடுகளை இடிக்குமாறு "உயர் மட்டத்தில்" இருந்து கட்டளை வந்துள்ளதாக ஒரு நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலர் தெரிவித்தார்.

"இந்த பிரதேசம் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பாடசாலைக்காக துப்புரவு செய்யப்படுகின்றது என நான் நினைக்கின்றேன். எங்களுக்கு 5,000 ரூபா (45 அமெரிக்க டொலர்) கொடுத்தனர். ஆனால் நாங்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டோம். இந்தக் கட்டிடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அது பொய். எங்களது மக்கள் இங்கு 80 வருடங்களுக்கும் மேலாக வாழ்கின்றனர். எங்களிடம் சட்ட ஆவணங்கள் உள்ளன."

"பாதுகாப்பு அமைச்சு இதைத் தொடங்கியுள்ளது. இது முதல் நடவடிக்கை மட்டுமே" என இன்னொருவர் கூறினார். "இதுதான் 'ஆசியாவின் அதிசயமா?'" என அவர் கேட்டார். ஆசியாவின் அதிசயம் என அவர் குறிப்பிட்டது, இலங்கையை ஆசியாவின் பொருளாதார அதிசயமாக்குவதாக ஜனாதிபதி இராஜபக்ஷ கூறிக்கொள்வதையே ஆகும். "இங்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் சமாதானமாக வாழ்கின்றார்கள். இந்த அரசாங்கத்தால் வறியவர்கள் நடத்தப்படும் விதம் இதுதானா?" என அவர் மேலும் வினவினார்.

"நேற்று றக்டர்கள் வந்து எங்களது வீடுகளை உடைப்பதை நான் கண்டேன். பல மாதங்களுக்கு என்னால் பாடசாலைக்கு போக முடியாது. எனது பாடசாலை பையும் சீருடைகளும் கற்கூளங்களுக்குள் கிடக்கின்றன. எனது சகோதரிக்கும் இதே நிலைமைதான். நான் அழுகின்றேன். எனது அம்மாவும் அழுகின்றார். எனது அம்மாவினதும் பாட்டியினதும் வீட்டை இடிக்காதீர்கள்!" என ஒரு பாடசாலை சிறுவன் எம்மிடம் கூறினார்.

பல நடைபாதை வியாபாரிகள் தமது துன்பத்தை வெளிப்படுத்தினர்: "எங்களது வியாபாரம் இன்றி நாங்கள் எப்படி வாழ்வது? எமது பிள்ளைகள் எப்படி சாப்பிடுவது எப்படி பள்ளிக்கு செல்வது? இது மிகவும் அநியாயம். எங்களுக்கு நியாயமான தீர்வு தேவை. அநேகமான நடைபாதை வியாபாரிகள் தேர்தலில் அரசாங்கத்தை ஆதரித்திருந்த போதிலும், தேர்தலில் வென்ற பின்னர் அரசாங்கம் எங்களை கவனிக்கவில்லை," என ஒருவர் தெரிவித்தார்.

சீற்றம் அதிகரித்த நிலையில், மே 4 அன்று, கொழும்பு புறக்கோட்டை நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி இராஜபக்ஷ சந்தித்தார். அவர் 1,000 சிறிய கடைத் தட்டுக்களை அமைக்க பிரதேசத்தில் நிலத்தை ஒதுக்குவதாகவும், கட்டுமான வேலைகள் முடியும் வரை இரண்டு வராங்களுக்கு நாள் ஒன்றுக்கு 2,000 ரூபா படி கொடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார். இந்த தலையை காத்துக்கொள்ளும் நடவடிக்கையில் நடைபாதை வியாபாரிகள் நம்பிக்கை வைக்காததோடு முடிவில் புதிய இடத்தில் இருந்தும் தாம் வெளியேற்றப்பட்டுவிடுவோம் என்ற பீதியில் உள்ளனர்.

கொழும்பில் மட்டும் சுமார் 20,000 நடைபாதை வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் கிராமப்புற வறியவர்கள் மற்றும் பெருந்தோட்டக் குடும்பங்கள் உட்பட நாட்டின் ஜனத்தொகையில் மிக வறிய பகுதியினர் மத்தியில் இருந்து வந்தவர்களாவர். இவர்களில் சிலர் பல தசாப்தங்களாக தமது சிறிய வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாவர்.

சுகத் மற்றும் அவரது தந்தை பியசிறியும், தென் நகரமான மாத்தறையில் மெதிகம கிராமத்தில் இருந்து 15 வருடங்களுக்கு முன்னர் வந்ததில் இருந்தே, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக துணிகளை விற்பனை செய்துவருகின்றனர். துப்புரவு செய்யப்பட்ட பிரதேசங்கள் அரசாங்க ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படும் என சுகத் நினைத்தார்.

"எனது மாமாவின் மகனும் நடைபாதை வியாபாரம் செய்கின்றார். எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் பாடசாலை செல்கின்றனர். எங்களது தொழிலை செய்யாமல் எப்படி பிள்ளைகளை பராமரிக்க முடியும்? எங்களுக்கு வேறு தொழில்களும் தெரியாது" என அவர் கூறினார்.

வியாபாரிகள் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளை வெறுப்புணர்ச்சியுடன் நினைவூட்டினர். "நாங்கள் ஏழைகள். வெற்றிபெற்றால் எங்களை மறக்கப்போவதில்லை என தேர்தலின் போது அரசாங்கம் கூறியது. ஆனால் இப்போது நடந்தது என்ன? நாங்கள் இப்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம்," என ஒருவர் தெரிவித்தார்.

இன்னுமொரு கொழும்பு புறநகர் பகுதியான பொரளையில் துணி வியாபாரம் செய்யும் ஒருவர், வியாபாரிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர், தனக்கு வேறு ஜீவனோபாயத்துக்கு வேறு வழியில்லா நிலையில் தான் ஆபத்தை சந்திப்பதாக தெரிவித்தார். "நான் எனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். வாழ்க்கைச் செலவு மிக அதிகம். எனது அன்றாட உணவுக்கு 300 ரூபா செலவிடுகின்றேன். நாங்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வருமானங்களைப் பெறுவோம். ஆனால் அது வாழ்க்கையை ஓட்ட மட்டுமே போதுமானது. விற்பனைக்கு பொருட்களை வாங்க எங்களிடம் பணம் போதாது. எனவே நாங்கள் அதிக வட்டிக்கு அன்றாடம் கடன் வாங்குவோம். அரசாங்கத்தின் முடிவு மிகவும் நியாயமற்றது," என அவர் மேலும் கூறினார்.

வறியவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதலை முழு தொழிலாள வர்க்கத்துக்கும் எதிரான எச்சரிக்கையாக எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடந்த ஆண்டு பெற்ற 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான நிபந்தனைகளை இட்டு நிரப்ப தற்போது அரசாங்கம் முயற்சிக்கின்ற நிலையில், அது எடுக்கும் சிக்கன நடவடிக்கைகளை உழைக்கும் மக்கள் எதிர்க்கும் போது அவர்களும் இதே போன்று நடத்தப்படுவார்கள்.