WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
SYRIZA rally: the reactionary politics of the middle class “left” in Greece
சிரிசா அணிவகுப்பு: கிரேக்கத்தில் மத்தியதர வர்க்க “இடதின்” பிற்போக்குத்தன அரசியல்
By Alex Lantier and John Vassilopoulos in Athens
17 May 2010
Use this version to print | Send
feedback
மே 14ம் தேதி ஏதென்ஸில் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சிரிசா (தீவிர இடது கூட்டணி) இன் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றிருந்தனர். இது பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ செயல்படுத்தும் பெரும் சமூகநலச் செலவின வெட்டுகளுக்கு எதிராக அழைப்புவிட்டிருந்தது.
சிரிசா மற்றும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) போன்ற மத்தியதர வர்க்கக் கட்சிகள் பாப்பாண்ட்ரூவின் கொள்கைக்கு இடது விமர்சனம் செய்பவர்கள் போல் இருக்கின்றனர், அதே நேரத்தில் நடைமுறையில் அவருடைய கொள்கைகளை நெறிப்படுத்த உழைக்கின்றனர். இதையொட்டி உறுதியான உழைப்பு பிரிவு முறை வெளிப்படுகிறது: அதாவது பாப்பாண்ட்ரூவின் PASOK கட்சியானது ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) வெட்டுகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு பாராளுமன்றத்தில் வாக்குகளையும் அளிக்கிறது. தன்னுடைய பங்கிற்கு சிரிசா தொழிலாள வர்க்க எதிர்ப்பை வழிதடுமாறச் செய்வதுடன் சீரழிவையும் ஏற்படுத்துகிறது. உண்மையில் சிரிசாவின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான Renewal Wing ஒரு வெளிப்படையான அரசியல் கூட்டணியை PASOK உடன் கொள்ள வேண்டும் என்று வாதிடுகிறது.
இந்தப் பின்னணியில் சிரிசாவின் அணிவகுப்பின் முக்கியமான கூறுபாடு பாப்பாண்ட்ரூவின் அரசாங்கம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்கு எந்தக் குரலும் கொடுக்கப்படாததுதான். ஆனால் அரசாங்கம் பரந்த அளவில் செல்வாக்கை இழந்துள்ளதுடன் சமூக விரோதக் கொள்கைகளையும் கடைப்பிடிக்கிறது. மாறாக, முக்கியப் பேச்சாளர்கள்—சிரிசாவின் பாராளுமன்றப் பிரதிநிதிக்குழுவின் தலைவர் அலெக்சிஸ் ஸ்பிரஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோலிஸ் க்ளெசோஸும்—இறுக்கமற்ற நிதியக் கொள்கையை கோருவதுடன், கிரேக்க சோவினிசத்தையும் கிளப்புகின்றனர்.
“சர்வதேசியத்திற்கு” ஒரு பாசாங்குத்தன, பெயரளவு ஒப்புதலைக் காட்டும் வகையில், அணிவகுப்பு வெளிநாட்டுப் பார்வையாளர்களின் உரைகளுடன் தொடங்கியது. முதல் பேச்சாளர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) பிரதிநிதி Jean-Pierre Brard ஆவார். இவர் பிரெஞ்சு தேசிய பாராளுமன்றத்தின் நிதிக்குழு உறுப்பினராவர். PCF அரசியலில் சமூக ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி (Socialist Party, PS) இன் இணைப்பு அமைப்பு ஆகும். இது அதிகாரத்திற்கு மீண்டும் வந்தால் பாப்பாண்ட்ரூ வகையில் சமூகநலச் செலவின வெட்டுக்களுக்கு திட்டங்களைத் தயாரித்துள்ளது. அயர்லாந்தின் சோசலிஸ்ட் கட்சியின் Joe Higgins ம் கூட்டத்தில் பேசினார். சர்வதேச ஐக்கியம் என்று சடங்குமுறையில் அவர் கூவி அழைத்தாலும், அவருடைய கட்சி கடந்த ஆண்டு பிரிட்டிஷ் தொழிற்சங்கங்கள் தொடக்கியிருந்த “பிரிட்டிஷ் வேலைகள் பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கே” என்ற சோவினிச பிரச்சாரங்களுக்கு ஆதரவைக் கொடுத்திருந்தது.
தன்னுடைய உரையை பாப்பாண்ட்ரூவின் வெட்டுக்களுக்கு எதிரான “இயக்கத்தின் ஒன்றுபட்ட தன்மையை” பாராட்டிய வகையில் தொடங்கி, இது தெற்கு ஐரோப்பா முழுவதும் பரவக்கூடும் என்ற முன்கருத்தையும் கூறினார். அத்தகைய கருத்துக்கள் தெற்கு ஐரோப்பாவில் இப்பொழுதுள்ள தொழிற்சங்க எதிர்ப்புக்களின் முழு ஐக்கியமின்மை மற்றும் இயலாத தன்மையை மறைப்பதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் வெட்டுக்களுக்கு தொழிலாளர்கள் உள்ளுணர்வில் கொண்டுள்ள ஐக்கியப்பட்ட எதிர்ப்பு உணர்விற்கு முறையீடும் செய்கின்றன.
சிரிசா அல்லது கிரேக்கத்தில் எந்த மற்ற கட்சியும் ஐரோப்பாவில் உழைக்கும் மக்களின் சர்வதேச வேலைநிறுத்த நடவடிக்கையை அமைக்கும் முயற்சியில் எவ்வித தீவிர முயற்சியையும் காட்டவில்லை. கிரேக்கத்திற்குள், வேலைநிறுத்த நடவடிக்கை பெரும்பாலும் மாதத்திற்கு ஒருமுறை ஒருநாள் தேசிய வேலைநிறுத்தம் என்று PASOK கட்டுப்பாட்டின் கீழ் உள்ள GSEE, ADEDY தொழிற்சங்கங்களால் நடத்தப்படுகிறது. இன்னும் கூடுதலான வேலைநிறுத்தங்கள் தனிப்பட்ட தொழில்துறை பிரிவுகளால் நடத்தப்படுபவை தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்படுகின்றன.
இந்த வேலைநிறுத்தங்கள் ஆளும் வர்க்கத்திற்கு தொழிலாளர்களிடையே உள்ள சீற்றம், எதிர்ப்பின் தன்மை பற்றி அறிய பயனுடைய சோதனையை அளிக்கின்றனவே அன்றி, பாப்பாண்ட்ரூவின் சிக்கனத் திட்டத்திற்கு அச்சுறுத்தலைக் கொடுக்கவில்லை. மாறாக, பாப்பாண்ட்ரூவிற்கு எதிராக பெருகிவரும் தன்னுடைய வலிமை, எதிர்ப்பு ஆகியவற்றை அளப்பதற்கான உண்மை வாய்ப்பு தொழிலாள வர்க்கத்திற்கு மறுக்கப்படுகிறது.
பாப்பாண்ட்ரூ தேர்தல் பிரச்சாரத்தின் போது கிரேக்க நிதிநிலை பற்றி பொய் கூறியதற்கு சிப்ரஸ் விமர்சித்தார். அதே நேரத்தில் சமூகநலச் செலவுகளை அதிகரிப்பதாக பாப்பாண்ட்ரூ உறுதி அளித்திருந்தார். ஆனால், இது கொடுக்கும் விடைகளைவிட அதிக வினாக்களைத்தான் எழுப்புகிறது. கிரேக்கத்தின் நிதி நிலமை கூறப்பட்டதைவிட மோசமானது என்பது அரசியல் ஸ்தாபனத்திற்குள் பரந்த அளவு தெரிந்திருந்தால், கடந்த அக்டோபர் மாதம் சிப்ரஸ் ஏன் பாப்பாண்ட்ரூவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பாராட்டுவதற்காக பார்க்கச் சென்றிருந்தார்?
இதன்பின் சிப்ரஸ், கிரேக்க முதலாளிகள் கூட்டமைப்பின் (SEV) தலைவர்களை தொழிலாளர்கள் உரிமைகள் மீது தடைகளுக்கும் வெட்டுக்களுக்கும் ஊக்கம் கொடுப்பதற்காக தாக்கிப் பேசினார். வணிகத் தலைவர்கள் “அரசியல் வர்க்கத்தை தாங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சூழலைத் தோற்றுவிக்கின்றனர், அதன் பின் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கோருகின்றனர், அதையொட்டி அவர்கள் சமூகப் போராட்டங்களின் வசதியற்ற விளைவுகள் இல்லாமல் தங்கள் வேலையை தொடரமுடியும்” என்று அவர் குறைகூறினார். ஆனால் சிப்ரஸ் கூறாமல் விட்டது, கிரேக்க மக்கள் வங்கியாளர்களுடன் எந்த அளவு கோபம் கொண்டுள்ளனரோ, அதே அளவு அரசியல்வாதிகளுடனும் கோபம் கொண்டுள்ளனர், சிரிசாவின் தலைவர்களை மற்றவர்களிடம் இருந்து கணிசமாக வேறுபடுத்திக் காண்பதில்லை என்பதுதான்.
இதன்பின் சிப்ரஸ் முன்வைத்த “மாற்றீடு” தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய கொள்கை அல்ல. மாறாக வங்கிக் கொள்கையில் ஒரு மாற்றத்திற்கான திட்டம்தான். அவர் கிரேக்கம் “ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து நேடியாகக் கடன்களைப் பெற வேண்டும்….. கடனை திருப்பிக்கொடுப்பதற்கு, வட்டி விகிதம் மற்றும் சில வகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான நிபந்தனைகள் மறுகட்டமைக்கப்பட வேண்டும்” என்றார்.
இத்திட்டம் தொழிலாளர்களை அணிதிரட்டும் முயற்சி அல்ல. பாப்பாண்ட்ரூ அவர்கள் மீது சுமத்த உள்ள பெரும் வறிய நிலை அச்சுறுத்தலின் அரசியல் உட்குறிப்புக்களைப் பற்றி விளக்குவதும் அல்ல. சிரிசாவின் முக்கிய கொள்கைத் திட்டம் எப்படி தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் குறைக்க முடியும் என்று வங்கிகள் மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை கூறுவதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த எதிர்ப்புப் போராளியான க்ளெசோஸ் குறைந்த வட்டி விகிதத்தில் அரசாங்கத்திற்கு கடன் கொடுக்குமாறு தனிப்பட்ட கிரேக்கர்களைக் கோரினார். இது ஏதென்ஸ் தன்னுடைய கடன்களைத் திருப்பிக் கொடுக்க உதவும்—இப்பிற்போக்குத்தன திட்டம் கிரேக்கத் தொழிலாளர்கள் இன்னும் மிச்சமுள்ள பணத்தையும் வங்கிகளுக்கு பிணை எடுப்பிற்காக ஓரளவேனும் கொடுக்க வேண்டும் என்ற பொருளைத்தான் தருகிறது.
இதன்பின் அவர் ஜேர்மனி மீது ஒரு தேசியவாத தாக்குதலைத் தொடுத்தார். ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் கிரேக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய-சர்வதேச நாணய நிதியத்தின் செல்வாக்கற்ற பிணை எடுப்பிற்கு இன்னும் விரைவில் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின்போது, ஜேர்மனி “கிரேக்கத்தில் இருந்த அனைத்துச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டது, உணவுப் பொருட்கள் அனைத்தையும் ஜேர்மனிய மக்கள் பிழைப்பதற்காக ஜேர்மனிக்கு எடுத்துச் சென்றது. இப்பிரச்சினையில் மேர்க்கெல் சிறிது கூட நன்றி உணர்வைக் காட்டவில்லை, அவர் பேசக்கூடாது” என்றார்.
இதன் பின், முக்கிய வங்கிகளில் கிரேக்கத்திற்கு கடன் கொடுத்தவற்றிற்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு, ஜேர்மனியப் பொருளாதாரம் கொள்ளை அடிக்கப்பட வேண்டும் என்று கிளெசோஸ் கூறினார். “கிரேக்கத்திற்கு கொடுக்க வேண்டிய அனைத்தையும் ஜேர்மனி திருப்பிக் கொடுக்க போராட வேண்டும். பொது நிதிக்குக் கடன்கள், இழப்பீட்டுத் தொகைகள், கட்டாயக் கடன்கள், அகழ்வியல் புதையல்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகைகள் என. பாதி மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகைகள் 160 பில்லியன் யூரோக்களுக்கு வட்டி ஏதும் இன்றி, இன்றைய பணத்தில் உள்ளன. கிரேக்கத்திற்கு ஜேர்மனி கொடுக்க வேண்டியது எவ்வளவு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.” என்று அவர் குரல் கொடுத்தார்.
சிரிசாவிற்குள் கட்சி ஐக்கியம் வேண்டும் என்ற நம்பிக்கையற்ற முறையீட்டுடன் அவர் முடித்தார். “நாம் ஒவ்வொருவரும் உண்மையைக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால், நாம் சிறிதும் முன்னேற முடியாது.” சிரிசாவில் பிரிவுகள் வெளிப்படையாக பாப்பாண்ட்ரூவுடன் ஒத்துழைக்க அழைப்புவிடுகையில், இது சிரிசா அதன் இரட்டை முக ஆதரவை அரசாங்கத்திற்கும் சமூகச் சிக்கனத்திற்கும் தொடர்ந்து அளிக்கும் என்ற உறுதிமொழியைக் கொடுக்கிறது என்பதுதான் இதன் பொருள். |