சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greek workers speak out against Papandreou’s cuts

கிரேக்கத் தொழிலாளர்கள் பாப்பாண்ட்ரூவின் வெட்டுக்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்

By Alex Lantier
15 May 2010

Use this version to print | Send feedback

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் ஏதென்ஸ் புறநகரில் உள்ள ஒரு தொழிலாள வர்க்க சிறுநகரமான பெரமாவில் தொழிலாளர்களைப் பேட்டி கண்டனர். இங்கு பிராக்கஸ் துறைமுகத்தின் மேற்குக் கடைசி நிலையம் உள்ளது. இதில் பெரும் கொள்கலன் வண்டிகளில் இருந்து பொருட்களை இறக்கும் வசதி, ஒரு கப்பல் பழுது பார்க்கும் தளம் மற்றும் பயணிகள் படகுத்துறை ஆகியவை அடங்கியுள்ளன. கிரேக்கத்திலும் கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியிலும், மிகப் பெரிய வணிகத் துறைமுகமாக பிராக்கஸ் துறைமுகம் உள்ளது. பொருளாதார நெருக்கடி வெடிப்பதற்கு முன்பு ஆண்டுக்கு 20 மில்லியன் டன் பொருட்கள் கையாளப்பட்டன.


அரசிற்கு சொந்தமான பெரிய கொள்கலன் தளத்தின் நுழைவாயில்

கடந்த அக்டோபர் மாதம் தேர்தலுக்கு முன்பு பல பில்லியன் யூரோ முதலீட்டைக் கொண்டு சமூகநலச் செலவுகளை தான் அதிகரிப்பதாகக் கூறிய பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ மீது பெரமா தொழிலாளர்கள் பெரும் சீற்றத்துடன் உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பாப்பாண்ட்ரூ சமூகநலச் செலவுகளை வெட்டினார். ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றிடம் இருந்து 110 பில்லியன் யூரோக்களை பாப்பாண்ட்ரூ கடன் வாங்கியுள்ளார். இதற்கு ஈடாக மக்களுக்கு எதிராக பெரும் சமூகநல வெட்டுக்களை செயல்படுத்துவதாக உறுதி கூறியுள்ளார்.

பெரமாத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களையும் அவற்றின் வெட்டுக்களுக்கு எதிரான உறுதியற்ற, எப்பொழுதாவது நடத்தப்பட்ட எதிர்ப்புக்களுக்காக கண்டித்தனர்—அவற்றின் தலைவர்கள் பெரும்பாலும் PASOK கட்சியில் இருந்து வந்தவர்கள், அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்பவர்கள் ஆவர். மூத்த தொழிலாளர்கள் பல நேரமும் இருக்கும் பொருளாதார நிலைமையை கிரேக்கத்தை 1967 ல் இருந்து 1974 வரை ஆண்ட அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த இராணுவக் குழுக் காலத்துடன் ஒப்பிட்டனர். இன்று தொழிலாளர்கள் அப்போதையைவிட மோசமான நிலையில் உள்ளனர் என்றும் கூறினர்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கப்பல் பழுது பார்க்கும் தளங்களையும் பெரும் கொள்கலன்கள் இறக்கப்படும் பிரிவுகளையும் பார்வையிட்டனர். இவை இரண்டும் அவற்றின் திறனுக்கு மிகக் குறைவாக செயல்படுவதுடன் சமீபத்தில் முக்கிய தொழிலிட விபத்துக்களையும் சந்தித்துள்ளன.


பனயோடிஸ்

பனயோடிஸ் பெரமா கப்பல் பழுது பார்க்கும் தளங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்துள்ளார். “கடந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் பல தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலைகள் மீண்டும் வருமா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. முன்பு 5,000 பேர் இருந்த இடத்தில் இப்பொழுது 500 தொழிலாளர்கள் என்று குறைந்துவிட்டோம். பணிநிலைமைகள் இங்கு மோசமாக உள்ளது. உயர்ந்த வெப்ப நிலை, நிறைய புகைமண்டலம் என. வழக்கமான பணிநேரம் 8 மணி ஆகும். ஆனால் கூடுதல் நேரமாக 12 மணி வரை உழைக்கலாம். தொழிலாளர்கள் இங்கு மாதம் 1,500 யூரோக்களில் தொடங்குகின்றனர்.” என்று அவர் கூறினார்.

“எங்கள் ஓய்விற்குப் பின்னர் என்ன நடக்க உள்ளது என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை. தொலைக்காட்சியில் பலவற்றைக் கேள்விப்படுகிறோம். அவை இன்னும் தெளிவாக இல்லை.” என்று டாசோஸ் சேர்த்துக் கொண்டார்.

பாப்பாண்ட்ரூ பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கு, பனயோடிஸ் கூறினார்: “தன்னுடைய தேர்தல் உறுதிமொழிகளால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார். எல்லா நாடுகளிலும் பிணை எடுப்புக்கள் நடைபெற்றுள்ளன. இது ஒரு உலக நெருக்கடி ஆகும். இவை மோசமான நிலையைத் தோற்றுவித்துள்ளன. 1974 இராணுவ ஆட்சி கவிழ்ந்த பின்னர் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் படிப்படியாக சில நலன்களைப் பெற்றனர். இராணுவக்குழு ஆட்சியின் போது எவர் வேலைநிறுத்தம் செய்யமுடியும்? எனவே 1974க்குப் பின்னர்தான் தொழிலாளர்களின் நிலைமையில் முன்னேற்றம் வந்தது.”


கிரியாகோஸ்

வெல்டர் ஆக இருக்கும் தொழிலாளியான கிரியாகோஸ், துறைமுகறத்தில் உள்ள ஒரு கோப்பி அருந்தும் இடத்தில் கூறினார்: “இங்கு பல பணியிட விபத்துக்கள் நடந்துள்ளன. பல இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்கள் ஒரு இடத்தில் அகப்பட்டுக் கொண்டு பின்னர் புகைகளினால் நச்சுத் தாக்குதலுக்கு உட்பட்டனர்.” கிரியாகோஸ் தொடர்ந்தார்: “பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்று 10 நாட்கள் நாங்கள் வேலைநிறுத்தம் செய்தோம். அமைச்சரகத்திற்கு கருத்துக்கள் கொடுத்தோம். ஆனால் அவர்களுடைய சொற்கள் அனைத்தும் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் கொடுக்கவில்லை.”

“அவர்கள் இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்ததே இல்லை. நாம் அடிப்படையில் முதலாளிகளுக்கு கட்டுப்பட்டுத்தான் உள்ளோம்” என்று தியோபிலோஸ் சேர்த்துக் கொண்டார்.


தியோபிலோஸ்

டிமிட்ரிஸ் கூறியது: “வாழ்க்கை மிகக் கடினமாகிவிட்டது. பிரச்சினையாக ஊதியங்கள் மட்டும் அல்ல. வேலை இல்லை என்றால், நமக்கு ஊதியம் இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், பெரிய வேலைகள் ஏதும் கிடைக்கவில்லை. கடந்த 5 மாதங்களில் எங்களுக்கு 20 நாட்கள் வேலைதான் இருந்தது. உண்மையில் நாங்கள் வேலையின்மையில் உள்ளவர்கள்தான்,”

“எவருக்கும் காப்பீடு கிடையாது, வேலையின்மைக்கும் காப்பீடு இல்லை,” என்று தியோபிலோஸ் கூறினார். ஏனெனில் வேலையின்மை காப்பீட்டு நிதியில் தொழிலாளர்கள் ஒரு 67 யூரோக் கட்டணத்தை செலுத்தவில்லை என்றாலும், அவர்களுக்கு அனைத்து நலன்களும் மறுக்கப்பட்டுவிடும்.

பாப்பண்ட்ரூ பற்றி தளத்தில் உள்ள தொழிலாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கப்பட்டதற்கு கிரியாகோஸ் விடையிறுத்தார்: “இது எங்கள் இரண்டாம் வீடு போன்றது. இதைமூட அவர்கள் நினைத்தால் எங்கள் குருதியைக் குடித்தபின்தான் அது நடக்கும். எங்களுக்கு வேலை தேவை. தொழிலாளர்கள் வேலைகளை இழக்கும்போது ஏராளமான விவாகரத்துக்கள் வருகின்றன. உலகிலேயே மிகப் பெரிய கடல் வணிகக் கப்பல் தொகுப்பை கிரேக்கம் கொண்டுள்ளது. ஆனால் அயோக்கியத்தன கப்பல் உரிமையாளர்கள் இங்கு வேலைகளை கொண்டுவருவதில்லை.” சர்வதேச நாணய நிதிப் பிணை எடுப்பு பற்றிப் பேசுகையில், “IMF பணம் உயரடுக்கிற்குத்தான் செல்லும், தொழிலாளர்கள் தெருக்களில் நிறுத்தப்பட்டுவிட்டனர்” என்றார்.


பழுது பார்க்கும் தளங்களின் நுழைவாயில்

கப்பல் தளத் தொழிலாளர்களும் WSWS நிருபர்களும் வங்கிகளும் அரசியல்வாதிகளும் எப்படித் தொழிலாளர்கள் உலகம் முழுவதும் நடக்கும் பிணை எடுப்புக்களுக்கு விலை கொடுக்கத் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்துகின்றனர் என்பது பற்றி விவாதித்தனர். தொழிலாளர்கள், அமெரிக்க அரசாங்கம் திறமையான தடுப்பதிகாரத்தை கொண்டுள்ள IMF ஏற்பாடு செய்துள்ள வெறுக்கத்தக்க கிரேக்கப் பிணை எடுப்பில் அமெரிக்காவின் பங்கு பற்றி கேள்வி எழுப்பினர். அமெரிக்கத் தொழிலாளர் தொகுப்பில் உள்ள வேலையின்மை, வறுமைப் பிரச்சினைகள் பற்றி கேட்ட சில தொழிலாளர்கள் வியப்படைந்தனர். ஏனெனில் கிரேக்கத்தில் அமெரிக்கர்கள் பல நேரமும் செல்வந்தர்கள் என்றுதான் விவரிக்கப்பட்டுள்ளனர்.

இறுதியில் அமெரிக்க, கிரேக்கத் தொழிலாளர்கள் ஒரு பொது எதிரிக்கு எதிராகப் போராடும் தேவை உள்ளது என்பது பற்றி அனைவரும் ஒப்புக் கொண்டனர்—அதாவது நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை கொடுக்க வேண்டும் என முயலும் வங்கிகளும் அரசியல்வாதிகளும் என்பதுதான் அது. 63 வயதான ஓய்வுபெற்ற தொழிலாளி வசிலிஸ் கூறினார். “நான் அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் வணிகப் பிரிவு கப்பலில் சென்றுள்ளேன். அமெரிக்க சிறப்பாக இருந்தது. சிலர் அமெரிக்கர்களைப் பற்றி மோசமாகப் பேசுகின்றனர், ஆனால் நான் அவ்வாறு கூறுவதில்லை. வெளிநாட்டில் மக்களை அவர்கள் மோசமாக நடத்தக்கூடும். ஆனால் அமெரிக்காவிற்குள் மக்கள் ஒருவரை ஒருவர் மதிப்புடன் நடத்துகின்றனர். நான் அமெரிக்காவில் வெல்டராக பணி புரியலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு பணி ஆவணங்கள் கிடைத்திருக்காது.”

அவர் விளக்கினார்: “நான் இங்கு இராணுவ ஆட்சியின்போது வேலை பார்க்கத் தொடங்கினேன். அங்கு செல்வதற்கு ஒரு சிறப்பு அனுமதி தேவைப்பட்டது. இடதுசாரியாக நீங்கள் இருந்தால், அவர்கள் உங்களை உள்ளே விடமாட்டார்கள். எனவே பணிக்குச் செல்ல வேலி தாண்ட வேண்டும். இராணுவ ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் அனைவரும் திருடர்களே ஆவர். இராணுவ ஆட்சியின் போது இருந்த நிலைமையைவிட இப்பொழுது மோசமாக உள்ளது. ஒப்புவமையில் பார்க்கும்போது அப்பொழுது மக்கள் நன்றாகவே வாழ்ந்தனர்.”

தங்கள் குழந்தைகளின் வருங்காலம் பற்றிக் கவலை தெரிவித்தனர். ஏனெனில் மரபார்ந்த தனிப்பாடப் பயிற்சிக்கு கட்டணம் கொடுப்பது கூட கடினமாகியுள்ளது. தியோபிலோஸ் கூறினார்: “எங்கள் குழந்தைகள் கல்வியறிவு அற்றவர்களாக முடியக்கூடும். அரசியல்வாதிகளுடைய குழந்தைகள்தான் இனிப் படிக்க முடியும். எனக்கு மூன்று குழந்தைகள் உண்டு.”

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பெரமா நகராட்சியில் கழிவுப் பொருட்கள் புதுப்பிக்கும் துறையில் உள்ள, 16 ஆண்டுகள் அனுபவம் உடைய 53 வயதான தொழிலாளர் லெப்டரிஸுடன் பேசினர். அவர் கூறியதாவது: “எங்கள் ஊதியத்தில் வெட்டுக்கள் வந்துவிட்டன. ஈஸ்டருக்குக் கொடுக்கப்படும் போனஸான 250 யூரோக்கள் 200 என்று குறைக்கப்பட்டுவிட்டன. கோடைகால போனஸ் 30 சதவிகிதம் குறைந்துவிட்டது. கிறிஸ்துமஸ் போனஸ் 1,000 த்தில் இருந்து 500 யூரோக்களாக குறைக்கப்பட்டுவிட்டது. என்னுடைய சரியான ஊதியம் குறைக்கப்படவில்லை, ஆனால் 13, 14வது மாதங்களின் ஊதியம் அகற்றப்பட்டு விட்டது. என்னுடைய மொத்த அடிப்படை ஊதியம் 900 யூரோக்கள்; ஆனால் வாடகை 400 யூரோக்கள், மின்சாரம், எரிவாயு பயன்பாடுகள் மற்றும் உணவுகள் அதிகம் ஆகும், இப்பொழுதோ விலைவாசி உயர்வும் உள்ளது. உதாரணமாக ஒரு கொத்து தட்டைப் பருப்பின் விலை 0.50 யூரோவில் இருந்து 0.57 யூரோவாகிவிட்டது. பாத்திரம் துலக்கும் சோப்புக் கட்டி 1.80 யூரோவில் இருந்து 2 யூரோ என ஒரே நாளில் உயர்ந்துவிட்டது.”

தற்போதைய அரசாங்கத்தைப் பற்றி பேசும்போது அவர் கூறினார்: “பாப்பாண்ட்ரூ எங்களை ஏமாற்றிவிட்டார். நிறைய பணம் இருப்பதாகத் தேர்தலுக்கு முன் கூறினார். இப்பொழுதோ மக்கள் பட்டினியில் உள்ளனர், பெரும் துன்பங்கள்தான் உள்ளன. அமெரிக்காவில் உள்ள மக்கள் உணர முடியுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது. சுற்றுலாத்துறை சரிந்து கொண்டிருக்கிறது. இங்கு புதிய வேலைகள் ஏதும் இல்லை. பெரமாவில் 25 சதவிகித வேலையின்மை உள்ளது.”

தொழிற்சங்கங்களை ஊழல் நிறைந்த அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு கருவி என்றும் லெப்டரிஸ் குறைகூறினார். “கிரேக்கத்தின் முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான GSEE ஐ வழிநடத்துபவர்கள் ஒரு எம்.பி. ஆக வந்துவிடுகின்றனர். அவர்கள் நடைமுறையில் இது ஒரு கூறுபாடு ஆகும். GSEE தலைவர் யியானிஸ் பானகோபுலோஸ் எம்.பி. ஆவார். இதை அறிய அதிக சிந்தனை தேவையில்லை.”

GSEE மூலோபாயமான அவ்வப்பொழுது ஒருநாள் வேலைநிறுத்தங்கள் நடத்துவது சிறிதும் பயனற்றது என்று அவர் சேர்த்துக் கொண்டார். “பொது வேலைநிறுத்தங்கள் எதையும் சாதிப்பது இல்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், காலவரையளையற்று ஈடுபட வேண்டும். 5 அல்லது 10 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தால், ஒரு பயனும் இல்லை. காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்தால், அனைவரும் ஈடுபட வேண்டும். போராட்டம் இல்லை என்றால் வெற்றி ஏதும் கிடைக்காது.”


யியானிஸ்

நெருக்கடியின் விளைவுகளைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த பெரமா துறைமுக மேடையில் இயந்திர இயக்குனராக இருக்கும் யியானிஸ், பகுதி அரசுக்கு சொந்தமான “அவற்றில் ஊதியங்கள், போனஸ் குறைப்புக்கள், மொத்தத்தில் இதுவரை 10 சதவிகிதம் என்று அடங்கியுள்ளன. துறைமுகத்தின் ஒரு பகுதி சீன நிறுவனம் கோஸ்ட்கோவிற்கு விற்கப்பட்டுவிட்டது. இயந்திரங்கள் இப்பொழுது இயங்கவில்லை. இரு ஆண்டுகள் முன்பு துறைமுகம் முழு வீச்சில் செயல்பட்டது.”

பாப்பாண்ட்ரூ அரசாங்கம் “அயோக்கியர்கள், திருடர்கள், ஏமாற்றுபவர்கள், பொய் சொல்லுபவர்கள் “ நிறைந்தது என்று அவர் விவரித்தார். பாப்பாண்ட்ரூவிற்கு எதிராக குறைவான வேலைநிறுத்தங்கள்தான் நடைபெறுகின்றன என்றார். ஏன் அதிக வேலை நிறுத்தங்கள் இல்லை என்று கேட்கப்பட்டதற்கு, “தொழிலாளர்களிடம் அதிக பணம் இல்லை. வேலைநிறுத்தம் செய்வது கடினம். மேலும் தொழிற்சங்கங்கள், இரு பிரதான கட்சிகளின் பணிப் பெண்” என்றார்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், துறைமுக தொழிலாளர்கள் உணவு விடுதிக்கு அழைக்கப்பட்டு அங்குள்ள தொழிலாளர்களிடம் பேசுமாறு கோரப்பட்டனர். அங்கு உள்ளவர்கள் இதுவரை ஒருவரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அவர்களுக்கு இப்பொழுதே மொத்த நேரத்தில் மூன்றில் ஒரு பகுதிக்குத்தான் வேலை உள்ளது என்றனர்.


ஜியோர்ஜஸ்

கடைப் பொறுப்பாளரான ஜியோர்ஜஸ் துறைமுக மேடையில் சமீபத்தில் நடந்த விபத்து பற்றி விளக்கினார்: “கோஸ்ட்கோவில் இரு தொழிலாளர்கள் கடுமையாக காயமுற்றனர். முறையான பயிற்சி இல்லாமல் அவர்கள் வேலை செய்து வந்தனர். 2-3 மாத வேலை அனுபவம்தான் உண்டு. இங்குள்ள இயந்திரம் கிரேக்கத்தின் மற்ற பகுதிகளில் காணப்படுவதில்லை. அது அவர்கள் மேல் விழுந்துவிட்டது. தனியார் நிறுவனம் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அதையொட்டி இந்த விளைவு ஏற்பட்டது. அவர்கள் செலவினங்களை குறைக்க முயல்கின்றனர், பயிற்சி இல்லாதவர்களை வேலைக்கு வைக்கின்றனர், கடவுளிடம் விபத்து கூடாது என்று வேண்டுகின்றனர். துரதிருஷ்டவசமாக கடவுளுக்கு மற்ற முன்னுரிமைகள் உள்ளன.”