World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US warns Pakistan of “severe consequences”

"கடுமையான விளைவுகள் ஏற்படும்" என்று அமெரிக்கா பாக்கிஸ்தானை எச்சரிக்கிறது

Peter Symonds
12 May 2010

Back to screen version

மே 1ம் திகதி நியூ யோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் தோல்வியுற்ற ஒரு கார் குண்டுத் தாக்குதலை பயன்படுத்தி பாக்கிஸ்தான் இஸ்லாமியப் போராளிகள் மீதான போரை முடுக்கி விட வேண்டும், வடக்கு வஜீரிஸ்தானில் அதன் செயல்களை விரிவாக்க வேண்டும் என்று ஒபாமா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கக் கோரிக்கை அதிகம் மறைக்கப்படாத பொருளாதாரப் பதிலடிகள், இராணுவ தலையீடு பற்றிய எச்சரிக்கைகளையும் பின்புலத்தில் கொண்டுள்ளது. அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன், CBS பேட்டி ஒன்றில் கடந்த ஞாயிறன்று ஒரு வெளிப்படையான பகிரங்க அச்சறுத்தலை முன்வைத்தார். ஒசாமா பில் லேடன் இருக்கும் இடம் மற்றும் ஆப்கானிய தலிபான் தலைவர் முல்லா ஒமர் இருக்கும் இடம் பற்றி சில பாக்கிஸ்தானிய அதிகாரிகள் அறிவர் என்று குற்றம்சாட்டிய பின், அவர் இன்னும் கூடுதலான பாக்கிஸ்தானிய ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்திக் கொடுத்த எச்சரிக்கை என்னவெனில்: "இறைவன் தடுக்கட்டும், இது போன்ற தாக்குதல்கள் வெற்றிகரமாக நடந்திருந்து பாக்கிஸ்தானில் இருந்து வந்தவை என்பது உறுதியானால், மிகக் கடுமையான விளைவுகள் இருக்கும் என்பதை நாங்கள் மிகவும் தெளிவுபடுத்தியுள்ளோம்."

ABC யின் ஞாயிற்றுக் கிழமை "இந்த வாரம்" நிகழ்ச்சியில் பேசிய அரசாங்கத் தலைமை வக்கீல் எரிக் ஹோல்டர் டெஹ்ரிக்-இ-தலிபான் எனப்படும் பாக்கிஸ்தான் தலிபான்தான் டைம்ஸ் சதுக்க நிகழ்வின் பின்னணியில் உள்ளது என்று குற்றம் சாட்டினார். சந்தேகத்திற்கு உரிய குண்டு வீசிய பைசல் ஷாஜட், பாக்கிஸ்தானில் இருந்து வந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், தலிபானால் இயக்கப்பட்டார் என்று இவர் கூறினார். விசாரணையின்போது, ஷாஜட் வடக்கு வஜீரிஸ்தானில் தலிபான் முகாம்களில் பயிற்சி பெற்றதை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது; ஆனால் நயமற்ற, தொழில் நேர்த்தியற்ற விதத்தில் நடந்துள்ள இத்தாக்குதல் வேறுவித கருத்தைத்தான் கொடுக்கிறது. டெஹ்ரிக்-இ-தலிபான் இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் எத்தகைய தொடர்பும் இல்லை என்று மறுத்தார்.

ஒபாமா நிர்வாகம் பகிரங்கமாக மிக எச்சரிக்கையுடன் உள்ளது. ஏற்கனவே உறுதியற்ற நிலைமையை பாக்கிஸ்தான் அரசாங்கம் இன்னும் ஸ்திரமற்றதாக்க விரும்பவில்லை. அமெரிக்க அழுத்தத்தின் கீழ் ஏற்கனவே பாக்கிஸ்தானிய இராணுவம் கடந்த ஓராண்டாக ஸ்வாட் பள்ளத்தாக்கு, பஜௌர் மற்றும் தெற்கு வஜீரிஸ்தானில் பெரிய தாக்குதல்களைத் தொடக்கியுள்ளது; இங்கு ஆயிரக்கணக்கான சாதாரணக் குடிமக்கள் கொல்லப்பட்டனர், நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுடன் எல்லையைக் கொண்டுள்ள கூட்டாட்சி நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதிகளில் (FATA). அமெரிக்க ஆளில்லா விமான ட்ரோன் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான குடிமக்களை கொன்றுள்ளதுடன், இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு அமெரிக்கக் கைப்பாவை அரசாங்கம் என பல பாக்கிஸ்தானியர்கள் கருதும் அரசாங்கத்தின் மீதும் சீற்றம் அதிகரித்துள்ளது.

ஆனால் மூடிய கதவுகளுக்குப் பின், சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் "மிகக் கடுமையான விளைவுகள்" என்ன என்று தெளிவுறுத்தப்பட்டுள்ளன. கடந்த வெள்ளியன்று நியூயோர்க் டைம்ஸில்வெளிவந்த கட்டுரை, "டைம்ஸ் சதுக்கம் பற்றி கொடுக்கப்பட்ட வாஷிங்டனின் புதிய அழுத்தம், முந்தைய ஒப்புமையில் நயமான ஊக்கத்தில் இருந்து ஒரு தீவிர மாற்றத்தைக் காட்டியுள்ளது" என டைம்ஸ் சதுக்க நிகழ்ச்சியைப் பற்றிக் கூறியுள்ளது. "மேலும் இது நிர்வாகத்திற்குள் எப்படி அமெரிக்க இராணுவச் செல்வாக்கை விரிவுபடுத்தலாம் என்று அதிகரித்தளவில் நடக்கும் விவாதத்திற்கு இடையே வந்துள்ளது -- பாக்கிஸ்தான் மண்ணில் அமெரிக்க இராணுவ கால்கள் பதியக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது" என்று கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளபதி, ஜேனரல் ஸ்டான்லி மக்கிரிஸ்டல் பாக்கிஸ்தான் இராணுவத் தலைவர் தளபதி அஷ்பக் பர்வேஸ் காயானியை வெள்ளியன்று சந்தித்து படா பகுதியின் ஒரு அங்கமான வடக்கு வஜீரிஸ்தானில் இராணுவத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பாக்கிஸ்தானிய இராணுவம் முன்னதாக அத்தகைய அழுத்தங்களை எதிர்த்து வந்ததுள்ளதுடன், அதன் படைகள் மேலதிக சுமையை கொண்டுள்ளன என்றும் கூறப்பட்டது. காயானிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை மக்கிரிஸ்டல் மறுத்தபோதிலும், ஒரு அமெரிக்க அதிகாரி டைம்ஸிடம்பாக்கிஸ்தானிய தளபதி, "வடக்கு வஜீரிஸ்தானத்தின் மீது நீங்கள் ஆக்கிரோஷம் காட்ட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் கொடுத்துள்ளார்.

ஞாயிறன்று வந்த கட்டுரை ஒன்றில் வாஷிங்டன் போஸ்ட் ஒபாமா நிர்வாகத்தில் உள்ள விவாதம் பற்றி இதே தன்மையில்தான் விவரித்துள்ளது. சில அதிகாரிகள் "டைம்ஸ் சதுக்க நிகழ்ச்சியை இன்னும் அதிகமான வலிமையை ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா எடுக்கக் கூடிய கொள்கைகளுக்கு சாதகமாக அமையும்" என்று காண்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதில் புவியியல்ரீதியாக விரிவாக்கபட்டு ட்ரோன் ஏவுகணைகள் பாக்கிஸ்தானில் நடத்தப்படும், இன்னும் கூடுதலான அமெரிக்க இராணுவ பிரசன்னம் அமைக்கப்படுதல் என்பவை அடங்கியுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் ஆத்திரமூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதுடன், அதிக உறுதியற்ற தன்மையையும் கொண்டவை ஆகும். ஏற்கனவே குறைந்தது 36 அமெரிக்க ட்ரோன் தாக்குதல்கள் இந்த ஆண்டு இதுவரை பாக்கிஸ்தானுக்குள் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டு நடந்த மொத்த 56 உடன் ஒப்பிடத்தக்கது. புஷ் நிர்வாகத்தின் கடைசி ஆண்டில் நடந்த 30 தாக்குதல்களுடனும் ஒப்பிடப்பட வேண்டியது. நேற்றைய சமீபத்திய தாக்குதலில் 12 ஏவுகணைகள் ஒரு பயிற்சி முகாம் என்று கூறப்பட்டதின் மீது ஏவப்பட்டன; இதில் குறைந்தது 14 பேர் கொல்லப் பட்டனர். 900 மக்களுக்கும் அதிகமானவர்கள், பெரும்பாலானவர் சாதாரண குடிமக்கள் அமெரிக்க ட்ரோன் செயற்பாடுகளில் மடிந்துள்ளனர்.

அமெரிக்க ட்ரோன் தாக்குதல்கள் பாக்கிஸ்தானுக்குள் இன்னும் அதிகமாகவும் படா எல்லைப் பகுதிகளுக்கு அப்பாலும் நடந்திருக்கலாம் என்பதைத்தான் வாஷிங்டன் போஸ்ட்கட்டுரை தெரிவிக்கிறது. முன்பு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குவெட்டா நகர் உட்பட பல பலுசிஸ்தான் பகுதிகளை "பயங்கரவாத நடவடிக்கைகளின்" சூடு பிடிக்கும் இடங்கள் என்று விவரித்திருந்தனர். "ஒரு வலுவான அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டைப் பொறுத்தவரை", பாக்கிஸ்தானிய இராணுவம் ஏற்கனவே அமெரிக்க "பயிற்சியாளர்கள்", "ஆலோசகர்கள்" எண்ணிக்கை அதிகமாக்கப்படுவதையும், ஆப்கானிஸ்தானத்தில் இருந்து இஸ்லாமிய போராளிகள் "வேகமாக தொடர்ந்துவரும் போது" பாக்கிஸ்தானுக்கும் ஊடுருவலையும் எதிர்த்துள்ளது. தெற்கு வஜீரிஸ்தானில் உள்ள கிராமத்தின் மீது அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதல், செப்டம்பர் 2008ல் குடிமக்கள் இறந்தது ஆகியவை பாக்கிஸ்தானில் மக்களிடையே பரந்த எதிர்ப்பை தூண்டின.

வாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படி, அதிகம் ஆக்கிரோசமான இராணுவக் கொள்கைகளை எதிர்க்கும் ஒபாமா அதிகாரிகள் பாக்கிஸ்தானிய அரசாங்கத்திற்கு வாஷிங்டன் கட்டளையைச் செயல்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை என்று வலியுறுத்துகின்றனர். "பாக்கிஸ்தானிய பொருளாதாரம் சரிவின் விளிம்பில் உள்ளது; மொத்த உள்நாட்டு உற்பத்தி 2005ல் இருந்த 8சதவிகித வளர்ச்சிக்கு பதிலாக கடந்த ஆண்டு 3 சதவிகிதத்திற்கு கீழான வளர்ச்சியைத்தான் காட்டியுள்ளது. 3.5 பில்லியன் டாலருக்கும் மேலான அமெரிக்க பொருளாதார, இராணுவ உதவி வந்து கொண்டிருக்கிறது; கிட்டத்தட்ட 8 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டின் மூலமும், 3.5 பில்லியன் டாலர் உலக வங்கியின் நிதிய உதவியும் வரவுள்ளன."

ஒரு பெருகிய அமெரிக்க இராணுவ நிலைப்பாடு நேரடியாக என்றோ, மறைமுகமாக என்றோ, வடக்கு வஜீரிஸ்தானிலும் மற்றைய பகுதிகளிலும் பாக்கிஸ்தான் இராணுவத் தாக்குதலை நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், ஒபாமா நிர்வாகம் பாக்கிஸ்தானை இன்னும் பரந்த முறையில் இருக்கும் அப்பகுதியின் புதை குழிக்குத்தான் இழுத்துச் செல்லும். அமெரிக்கா, இஸ்லாமாபாத்தின் மீது அதிக அழுத்தம் கொடுப்பது, அமெரிக்க இராணுவம் தென்கிழக்கு ஆப்கானிய நகரமான காந்தகார் மீது தன் அதிகாரத்தை உறுதியாக்க ஒரு பெரும் தாக்குதலை நடத்தத் தயாரிக்கும் நேரத்தில் வந்துள்ளது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. டைம்ஸ் சதுக்க நிகழ்வு பாக்கிஸ்தானிய புறஎல்லையில் இணையான நடவடிக்கையை நடத்தக் கோருவதற்கு ஒரு வசதியான போலிக்காரணம்தான்.

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பதாகையில், ஜனாதிபதி ஒபாமா, தன்னுடைய ஆப்-பாக் போர் என்பதை விரிவுபடுத்தியுள்ளார்; இது ஈராக்கிய ஆக்கிரமிப்புடன் சேர்ந்து மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதிகள் மீது பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்கம் நடத்துவதற்கு ஒரு திறவுகோல் ஆகும். இந்தப் பொறுப்பற்ற கொள்கை முறைப் போர்களை கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்வதின் மூலம் அமெரிக்கா ஏற்கனவே பாக்கிஸ்தானின் பொருளாதார, அரசியல் உறுதியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது; மேலும் அதன் தேசிய இறைமை மீதும் ஊடுருவியுள்ளது; மற்றும் பிராந்திய அழுத்தங்களை பரந்த அளவில், குறிப்பாக இந்தியாவுடன், அதிகரித்துள்ளது.

பாக்கிஸ்தான் மற்றும் அத்துடன் ஆப்கானிஸ்தானில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவு உடனடியாக, நிபந்தனையற்ற அமெரிக்க, பிற வெளிநாட்டுப் படைகள் இம்மூன்று நாடுகளில் இருந்தும் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை மூலம்தான் எதிர்க்கப்பட வேண்டும்.