World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The international significance of the Greek general strike

கிரேக்கப் பொது வேலை நிறுத்தத்தின் சர்வதேச முக்கியத்துவம்

Alex Lantier
10 May 2010

Back to screen version

ஐரோப்பிய-சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தைகள் மூலம் சமூக ஜனநாயக PASOK இன் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சிக்கன நடவடிக்கை பொதிக்கு எதிராக தொடரும் வெகுஜன எதிர்ப்புக்களும் பொது வேலை நிறுத்தமும் ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களின் அடையாளம் ஆகும்.

கிரேக்கத் தொழிலாளர்களிடையே பாப்பாண்ட்ரூவின் கொள்கைக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு உள்ளது. நூறாயிரக்கணக்கான வேலைகள் வெட்டப்பட உள்ளன, ஆரம்பத்தில் ஊதியக் குறைப்பாக 20% சதவிகிதத்தை தொழிலாளர்களிடமிருந்து எடுத்துக்கொள்வார்கள், சமூக நல உதவிகளும் ஓய்வூதியங்களும் பெரிதும் தகர்க்கப்படும்.

பாப்பாண்ட்ரூவால் போதுமான அளவிற்கு வெட்டுக்களைச் செயல்படுத்த முடியாது என்ற முதலீட்டாளர்களின் கவலையுடன், நிதிய நெருக்கடியை எதிர்த்து எதிர்ப்புக்கள் பரவக்கூடும் என்ற கவலையும் சேர்ந்து, பங்குச் சந்தைகள் கடந்த வாரம் சரிந்தன.

இந்நிகழ்வுகள் சர்வதேச அளவில் புரட்சிகர தாக்கத்தைக் கொண்டுள்ளன. போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஊகம் அதிகரிக்கும் நிலையில், உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் ஒரு பொது எதிரியை எதிர்கொள்கின்றனர் என்பது பெருகிய முறையில் தெளிவாகியுள்ளது. அதாவது நிதிய முறை மூலம் தன்னை பிணை எடுத்துக் கொண்டு தன்னைச் செல்வக் கொழிப்புடையதாகச் செய்து கொண்ட ஒரு ஒட்டுண்ணித்தன ஆளும் வர்க்கமானது எல்லா இடங்களிலும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நலன்கள் ஆகியவற்றில் பெரும் வெட்டுக்களை செய்ய வேண்டும் என்று அது விரும்புகிறது.

கிரேக்க வேலை நிறுத்தங்களின் சர்வதேச முக்கியத்துவம் இப்பொழுது பரந்த முறையில் ஒப்புக் கொள்ளப்படுகிறது. கிரேக்க ஆர்ப்ப்பாட்டங்களை மேற்கோளிட்டு, நியூயோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன் எச்சரித்துள்ளார்: “நமக்குச் சம்பந்தம் இல்லை என்கிறீர்களா, சரி? நன்று, அங்கு நடக்கும் நாடகத்தைப் பற்றி நான் பெரிதும் கவனம் செலுத்துகிறேன். அது உங்களுக்கு அருகே இருக்கும் அரங்கிலும் வரக்கூடும்.” கிரேக்கத்தைப் போல் அமெரிக்கத் தொழிலாளர்களும் “தங்கள் நலன்கள், ஓய்வூதியங்களில் பெரும் வெட்டுக்களை ஏற்க வேண்டும்.” என்று சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போல், கிரேக்கத்தின் அரசாங்கக் கடன்களின் பெரும்பகுதி ஏதென்ஸ் தன்னுடைய வங்கிகளுக்கு கொடுப்பதற்காக வாக்களித்த பிணை எடுப்புத் தொகை 28 பில்லியன் யூரோக்களை ஒட்டித்தான் வந்துள்ளது. இப்பொழுது கிரேக்க ஆளும் வர்க்கம் தொழிலாளர்களிடமிருந்து ஆண்டு வெட்டுக்கள் மூலம் 30 பில்லியன் யூரோக்களை பறித்தெடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ள போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள அரசாங்கங்கள் பல நூற்றுக்கணக்கான பில்லியன்களை தங்கள் வரவு-செலவு திட்டத்திலிருந்து வெட்டத் தயாரிப்பு நடத்துகின்றன.

இக்குளிர் காலப்பகுதியில், வங்கிகள் கிரேக்க கடன்களுக்கு வட்டிவிகிதத்தை போட்டியிட்டு உயர்த்துகின்றன, அதையொட்டி வட்டிப் பணத்தில் பெரும் இலாபத்தை ஈட்ட முடியும் என்று நம்புகின்றன. அதே நேரத்தில் பாப்பாண்ட்ரூவிற்கு அவர் செய்ய உள்ள சமூக வெட்டுக்களுக்கு ஒரு காரணத்தையும் கொடுக்கின்றன. ஆனால் இத்திட்டம் இப்பொழுது எதிர்மறை விளைவுகளைக் கொடுத்துள்ளது.

தொழிலாளர்கள் வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துகையில், ஐரோப்பிய சக்திகள் பிணை எடுப்பின் நிபந்தனைகள் பற்றி மோதலிட்டுக் கொண்டிருக்கையில், வட்டிவிகிதங்களின் மிக உயர்வானது அனைத்து நடைமுறையிலும் கிரேக்கத்தை திவாலாக்கிவிட்டது. இந்த மூன்று ஆண்டு 110 பில்லியன் ஐரோப்பிய-IMF பிணை எடுப்பின் விதிகளை முற்றிலும் கடைப்பிடித்தாலும், அது சிதைத்துவிடும். சில மதிப்பீடுகளின்படி ஐரோப்பிய-IMF வெட்டுக்களானது பொருளாதாரத்தை 30 சதவிகிதம் சரியச் செய்துவிடும். ஆனால் அதற்குள் அது இப்பொழுது கொடுக்க வேண்டியுள்ள 300 பில்லியன் யூரோக்களைவிட மிக அதிக கடன்களைக் கொண்டிருக்கும்.

கிரேக்க நெருக்கடி ஒரு ஐரோப்பிய நெருக்கடியாக பனிப்பந்து போல் உருவெடுத்து உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. வங்கிகளானது போர்த்துக்கல், ஸ்பெயின், பிரிட்டன் இன்னும் பிற நாடுகளுக்கு கடன் கொடுப்பது பற்றி பெருகிய முறையில் பதட்டத்தைக் கொண்டுள்ளன. பல்கேரியா, ருமேனியா, சேர்பியா ஆகிய நாடுகளுக்கு கிரேக்கம் கடன் கொடுத்தது மற்றும் அவைகளுக்கு ஏற்றுமதிச் சந்தையாக கொண்டிருந்த பங்கு அத்தோடு குடியேறிய தொழிலாளர்களுக்கு வேலை வழங்குனர் என்ற நிலையானது ஏற்கனவே வறுமையிலும் உறுதியற்ற தன்மையிலும் உள்ள பால்கன் பகுதிகளைப் பேரழிவிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலை இந்த நெருக்கடி கொண்டுள்ளது.