By Johannes Stern
10 May 2010
Back to screen version
வெள்ளியன்று, பேர்லின் பாராளுமன்றத்தில் ஒரு கடுமையான விவாதத்திற்கு பின்னர் ஆதரவாக 390 வாக்குகள், எதிராக 72 வாக்குகள் மற்றும் 139 கலந்துகொள்ளாமல்விட்ட அளவில் கிரேக்கத்திற்கு ஒரு “மீட்புப் பொதிக்காக” வாக்களித்தது. பொதிக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்றப் பிரிவுகளில் கிறிஸ்துவ ஜனநாய ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம், சுதந்திர ஜனநாயகக்கட்சி மற்றும் பசுமை வாதிகள் இருந்தன. (CDU/CSU, FDP, Greens)
சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை, ஆனால் கடன்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியது: “நாங்கள் கிரேக்கத்திற்கு உதவியை நிராகரிக்கவில்லை, எனவே அதற்கு எதிராக வாக்களிக்கவில்லை.” என்று சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் சிக்மர் கப்ரியேல் குறிப்பிட்டார். சமூக ஜனநாயக கட்சி வாக்களிக்காதது பற்றி நியாயப்படுத்திய அவர் மேர்க்ல்லின் அரசாங்கம் நிதியச் சந்தைகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியுற்றுவிட்டது என்றும் ஒரு சர்வதேச நிதிய பரிமாற்ற வரிக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் கூறினார்.
சமூக ஜனநாயகக் கட்சியின் கோரிக்கை வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டுதான் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பது வெளிப்படை. அது கடந்த வார இறுதியில் நடைபெற்றது. கடந்த பதினொரு ஆண்டுகளாக சமூக ஜனநாயக கட்சி மத்திய அரசாங்கத்தில் நிதித்துறைப் பொறுப்பைக் கொண்டிருந்து, கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் மற்றும் நிதியச் சந்தைகளில் மிக ஊக்கமான செயல்களை நடத்துவதற்கு வசதியளித்திருந்தது.
இடது கட்சி எடுத்துக் கொண்ட நிலைப்பாடு இன்னும் இழிந்த வகையில் ஏமாற்றுத்தனமாக இருந்தது. சட்டமியற்றும் நிகபோக்கில் தன் பங்கை மூடிமறைக்கும் விதத்தில், கடன் பொதியை ஏற்பதற்கு எதிராக வாக்களித்த ஒரே பாராளுமன்றப் பிரிவு இதுதான். இடது கட்சிப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் Gesine Lötzsch நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்க அது மறுத்தது பற்றி நியாயப்படுத்திய விதத்தில் “2008 நெருக்கடியில் இருந்து அரசாங்கங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை” என்றும் தொடர்ந்து “சந்தைகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டன” என்றும் கூறினார்.
ஆனால் மற்ற கட்சிகள் அனைத்தையும் போலவே, இடது கட்சியும் கடந்த வாரம் விரைவான இந்த செயற்பாடுகளுக்கு ஒப்புதல் கொடுத்தது; இது “யூரோ உறுதிப்படுத்தும் சட்டம்” என்பதைப் பாராளுமன்றத்தில் இயற்ற உதவியது. நிதி மந்திரி ஷௌய்பிள அனைத்துப் பாராளுமன்ற குழுத் தலைவர்களையும் விரைவில் பாராளுமன்ற செயல்முறைக்கு உடன்பட வேண்டும் என்றும் அதை ஒட்டி சட்டம் மிக விரைவில் இயற்றப்படலாம் என்றும் பாராளுமன்றத்தில் கிரேக்கத்திற்கு கடன் கொடுப்பதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி முழுவிவாதம் இதன் மூலம் தவிர்க்கப்பட முடியும் என்றும் கூறியிருந்தார்.
பொதுவாக அரசியலமைப்பில் குறிப்பிடப்படும் காலக்கேடுக்கள் ஒரு மத்திய ஆட்சி சட்டத்தை இயற்றும்போது கடைபிடிக்கப்பட வேண்டும். ஆனால் அனைத்துப் பாராளுமன்றப் பிரிவுகளும் மாநில சட்டமன்றங்களும் ஒப்புக்கொண்டால் இந்த நடைமுறைகள் விரைவான வழி என்ற வகை மூலம் துரிதப்படுத்தப்பட்டு, அதிக விவாதமின்றி பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுவிட முடியும். இடது கட்சி ஷௌய்பிளவின் கோரிக்கைக்குத் தயக்கமின்றி ஒப்புக் கொண்டு மத்திய அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் வங்கிகளுடன் இணைந்து கொண்டது.
அரசாங்கம் இயற்றியுள்ள சட்டத்தின்கீழ் கூட்டாட்சிக்குச் சொந்தமான KfW வங்கி கிரேக்கத்திற்கு 22.4 பில்லியன் யூரோக்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் கடனாகக் கொடுக்கும். மொத்தமாக ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணய நிதியமும் கிரேக்கத்திற்கு 110 பில்லியன் யூரோக்களைக் கொடுக்க இருக்கின்றன.
ஆனால் இந்தப் பணத்தில் ஒரு சென்ட் கூட கிரேக்கத்தின் வறிய மக்களுக்கு நலன்களைக் கொடுக்காது. மாறாக இது கிரேக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள கடன்களைப் புதுப்பிக்கத்தான் பயன்படுத்தப்படும். வங்கிகளும் ஊக வணிகர்களும் கிரேக்க அரசாங்கப் பத்திரங்கள் “குப்பை” (அதிக ஆபத்தைக் கொண்டுள்ள முதலீடுகள்”) என்று தரம் பிரிக்கும் நிறுவனங்கள் வகைப்படுத்தியதை அடுத்து தங்கள் வட்டி விகதத்தை பெரிதும் உயர்த்தியுள்ளனர். இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் வங்கிகள் தங்கள் கொழுத்த இலாபத்தை அடைவதற்கும் சில கடன்களை இழப்புக்கள் எனத் தள்ளுபடி செய்வதில் இருந்து காப்பாற்றவும் களம் குதித்துள்ளன.
நியூயோர்க் டைம்ஸில் வந்துள்ள சமீபத்திய தகவல்படி, மொத்த கடன் பொதியில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் (கிட்டத்தட்ட 90 பில்லியன் யூரோக்கள்) நேரடியாக ஜேர்மன், பிரெஞ்சு மற்றும் பிற வெளிநாட்டு வங்களில் இருந்து கொடுக்கப்படும். அவை கிரேக்கக் கடன்களுக்கு நிதியளித்தவை. பாரிசில் உள்ள Institut d’Etudes Politiques ன் பொருளாதார வல்லுனர் Jean Paul Fitoussi, கிரேக்கத்திற்கான அவசரகாலத்திட்டம் “பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய வங்கிகளுக்கான ஒரு மறைமுகப் பிணை எடுப்பு ஆகும்” என்றார்.
விரைவுபடுத்தப்படும் நடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டதன் மூலம், இடது கட்சி மீண்டும் பல பில்லியன் யூரோக்கள் வங்கிகளுக்கு மாற்றப்படுவதற்கு உதவி புரிந்துள்ளது. 2008 ல் இடது கட்சி 500 பில்லியன் யூரோப் பொதி, வங்கிகளுக்கு மீட்பளிக்க விரைவு நடவடிக்கை விதிக்கு ஒப்புக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் இடது கட்சியின் தலைவர் ஒஸ்கார் லாபோன்டைன் வங்கிகளின் ஆணைகளுக்கு ஏற்ப வந்துள்ள நடவடிக்கைகள் “தவிர்க்க முடியாதவை, சரியானவை” என்று கூறினார். பாராளுமன்றத்தில் இடது கட்சி இதன் பின் பொதிக்கு எதிராக வாக்களித்தது; ஆனால் அந்தக் கட்டத்தில் அதன் வாக்குகள் தேவைப்படவில்லை.
இவற்றின் இழிந்த திட்டம் எப்பொழுதும் ஒரே மாதிரிதான் உள்ளது. விரைவு நடவடிக்கைகளை பயன்படுத்தும் முடிவு போன்றவற்றிற்கு இதன் வாக்குகள் தேவைப்பட்டால் இடது கட்சி மற்ற பாராளுமன்ற கட்சிகளுடன் சேர்ந்து கொள்ளும். அரசாங்கத்திற்கு இதன் வாக்குகள் தேவைப்படவில்லை என்றால், தங்கள் நிலைப்பாட்டை மறைக்க அது தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும்.
நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இடது கட்சிக்குத் தன் பங்கை மறைப்பது பெருகிய முறையில் கடினமாகிவிடும். இடது கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் முக்கிய பொருளாதார வல்லுனரான மைக்கேல் ஷ்லெக்ட் இடது கட்சியின் நிலை பற்றிச் சுருக்கமாகக் கூறினார். “கிரேக்க நகரம் தடுமாறுகிறது, யூரோ எரிகிறது” என்ற தலைப்பில் ஷ்லெக்ட் எழுதினார்: “கிரேக்கத் திவால் தடுக்கப்பட வேண்டும். இது ஐரோப்பா பற்றியது என்பதால், இது யூரோவைப் பற்றியதும் ஆகும். இன்று கிரேக்கம் சரிந்தால், நாளை அது போர்த்துக்கல், ஸ்பெனியனாக இருக்கலாம், அதற்கும் அடுத்த நாள் பிரான்ஸ் ஆக இருக்கலாம். 65 ஆண்டு காலமாக நாம் மத்திய ஐரோப்பாவில் அமைதியைக் கொண்டுள்ளோம். அதற்கு முன்பு 70 ஆண்டுகாலத்தில் மூன்று கொடூரப் போர்கள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்னடைவுகள் இருந்தபோதிலும், “அதிக ஆபத்துக்கள் வந்துவிடும்!”
தன்னுடைய அரசாங்க அறிக்கையில் இருக்கும் கருத்தையொட்டியே அங்கேலா மேர்க்கெல் வாதிட்டார். நிதிய உதவி அளிப்பதற்குப் பதில் வேறு “மாற்றீடு” ஏதும் இல்லை என்றும், இது வருங்கால ஜேர்மனி, ஐரோப்பாவையும் பற்றியது என்றார்.
ஆரம்பத்தில் இருந்தே மேர்க்கெல் அரசாங்கம் கிரேக்கத்திற்கான உதவியை காட்டுமிராண்டித்தன சமூகநலக் குறைப்புக்களுடன் பிணைந்திருந்தது. விரைவுபடுத்தப்படும் நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டவிதத்தில் இடது கட்சி கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் வங்கிகளின் கொள்கைக்கு ஆதரவு கொடுத்து, கிரேக்க மக்கள் மீதான சமூகத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சட்டங்கள் இயற்றப்படுவதற்கும் உதவியுள்ளது.
உதவிப் பொதியில் உறுதியளிக்கப்பட்டுள்ள கடன்கள் சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் பெரும் எதிர்ப்புக்களை பொருட்படுத்தாமல் கிரேக்க மக்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர்பு கொண்டுள்ளது. மூன்றே ஆண்டுகளில் நாட்டின் வரவு செலவுத் தி்ட்ட பற்றாக்குறை தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.6 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதமாகக் குறைக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள குறைவூதியங்கள் இன்னும் முப்பது சதவிகிதம் குறைக்கப்படுதல், ஓய்வூதியங்களை குறைத்தல் மற்றும் நுகர்வு வரிகளை பத்து சதவிகிதம் வரை அதிகரித்தல் ஆகியவை கிரேக்க சமூகத்தின் பரந்த பிரிவுகளை வறுமைக்குட்படுத்தும் விளைவுகளைக் கொடுக்கும்.
ஜேர்மனியில் உள்ள தொழிலாள வர்க்கம் இடது கட்சியின் அரசியலை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஐரோப்பிய மட்டத்தில் அரசாங்கத்தையும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் இடது கட்சி ஆதரவு கொடுக்கையில், அது வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் அரசாங்கப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளத் தயார் என்று காட்டுகிறது; அங்கு ஞாயிற்றுக் கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சமீபத்திய செய்தியாளர் கூட்டத்தில் இடது கட்சித் தலைவர் டிட்மர் பார்ட்ஷ், டுஸ்சல்டோர்ப் மாநிலச் சட்ட மன்றத்தில் கூட்டணி பற்றி, “இடது கட்சி பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு வந்தால் மறுக்காது” என்று தெளிவாகக் கூறினார். இடது கட்சி ஆளத் தகுதி அற்றது என்னும் கூற்றுக்கள் “தேர்தல் பிரச்சாரங்கள்தாம்” என்று அவர் கூறினார்; தேர்தல் முடிந்த பின்னும் அத்தகைய கருத்துக்கள் கூறப்படலாம் என்றார் அவர்.
பார்ட்ஷின் கருத்தான இடது கட்சி சமூக நலக் குறைப்புக்கள், பொதுநிறுவனங்களைத் தனியார் மயம் ஆக்கிய அரசாங்கத்தில் பங்கு பெறாது என்று கூறுவது ஒரு மோசடி ஆகும். தனியார் மயமாக்குதல், சமூக வெட்டுக்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றைச் செயல்படுத்த இடது கட்சி தயார் என்னும் உண்மை முன்னரே நிரூபிக்கப்பட்டுள்ளது.. பேர்லின் நகர சட்டமன்றத்தில் ஜேர்மனியிலேயே இணை இல்லாத வகையில் வெட்டுக்கள், தனியார்மயமாக்குதல் கொள்கைகளுக்கு இது பொறுப்பு கொண்டுள்ளது.