இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான டெயிலி நியூஸ் (Daily News) ஏப்பிரல் 23 வெளியிட்ட ஆசிரியர் தலைப்பில், சோசலிச சமத்துவக் கட்சிக்கு (சோ.ச.க.) எதிரான ஆகவும் மோசமான ஆத்திரமூட்டும் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் கட்சிக்கு எதிரான தெளிவான மரண அச்சுறுத்தல் உள்ளடங்கியிருந்தது.
"மதிப்புக் கொடுப்பதற்கு தகுதியானவர்களும் தகுதி அற்றவர்களும்" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, "விலைகொடுத்து வாங்க முடியாத" அரசாங்கத்தின் எதிரிகளாக பொதுவில் சோசலிச சமத்துவக் கட்சியையும் மற்றும் அதன் இரு முக்கிய உறுப்பினர்களான பொதுச் செயலாளர் விஜே டயஸ் மற்றும் அரசியல் குழு உறுப்பினர் நந்த விக்கிரமசிங்கவையும் அடையாளம் காட்டியிருந்ததோடு, அவர்கள் "அழிக்கப்பட வேண்டியவர்கள், இதன் அர்த்தம் கொல்லப்பட வேண்டியவர்கள்," என்றும் தெரிவித்திருந்தது.
இந்தக் கட்டுரையையும் அதை பிரசுரிப்பதற்கு பத்திரிகை முடிவெடுத்ததையும் கண்டனம் செய்து ஏப்பிரல் 30 அன்று சோ.ச.க. டெயிலி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியருக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்தப் பத்திரிகை அந்தக் கடிதத்தை வெட்டிக்குறைத்து மே 6 அன்று பிரசுரித்திருந்தது. கட்சியின் கண்டனத்தை வெளிப்படுத்திய முதல் பந்தி அகற்றப்பட்டிருந்தது. சோ.ச.க. க்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை. அந்தக் கடிதம் இங்கு மீண்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் சூழ்நிலையில், இந்த அச்சுறுத்தல் வீணான ஒன்றல்ல. 2005ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசாங்க-சார்பு கொலைப் படைகளால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னணி பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்".
2006 நடுப்பகுதியில் தீவை மீண்டும் உள்நாட்டு யுத்தத்துக்குள் தள்ளிய இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தார். இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பலியானார்கள். கடந்த மே மாதம் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த அரசாங்கம், தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக, கால் நூற்றாண்டு காலமாக கட்டியெழுப்பிய பொலிஸ்-அரச இயந்திரங்களை இன்னமும் பயன்பாட்டில் வைத்துள்ளது.
கிரேக்கத்தைப் போல், இலங்கையும் பெரும்பகுதி இராஜபக்ஷவின் பிரமாண்டமான இராணுவச் செலவின் காரணமாக கடுமையாக கடனில் மூழ்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனின் மூலம் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் பொறிவில் இருந்து தலை தப்பிய அரசாங்கம், கடந்த ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 9.7 வீதமாக இருந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை, 2011ல் 5 வீதமாக குறைக்க வேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கடனுக்கு வட்டி செலுத்தவும் இராணுவத்துக்கு செலவிடவும் பாதிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதோடு அந்தச் செலவு இந்த ஆண்டு குறைக்கப்படவில்லை. இதன் விளைவாக, அரசாங்கத் தொழில்களையும் சேவைகளையும் ஒப்பீட்டளவில் மோசமாக வெட்டித் தள்ள அல்லது பெரும் வரி அதிகரிப்புகளை சுமத்த அல்லது இரண்டையும் அமுல்படுத்த இராஜபக்ஷவுக்கு நேரும்.
நாம் ஏற்கனவே வேலை நிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட அலைகளையும் காணும் கிரேக்கத்தில் இந்த கசப்பான சர்வதேச நாணய நிதிய கட்டளைகள் ஏற்கனவே திணிக்கப்பட்டுவருகின்றன. இலங்கையில் இது வேறுபட்டதாக இருக்கப் போவதில்லை. "விலை கொடுத்து வாங்க முடியாததற்காக" சோ.ச.க. இலக்கு வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் இதுவே. தொழிலாள வர்க்கம் சோசலிச அனைத்துலகவாத பதாதையின் கீழ் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக எழுச்சி பெரும் என்று எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் பீதி கொண்டுள்ளன. இந்த முன்நோக்குக்காக சளைக்காமல் போராடும் ஒரே கட்சி சோ.ச.க. யும் அதன் முன்நோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமுமே ஆகும்.
இந்த இழிவான டெயிலி நியூஸ் கட்டுரையை எழுதியவர், முன்னாள் ட்ரொட்ஸ்கிஸ லங்கா சமசமாஜக் கட்சிக்கு ஆதரவான குடும்பமொன்றில் இருந்து வந்த மலிந்த செனவிரத்ன ஆவார். லங்கா சமசமாஜக் கட்சி 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்து சோசலிச அனைத்துலகவாதத்தை காட்டிக்கொடுத்ததால் உருவாக்கப்பட்ட அரசியல் குழப்பத்துக்கு மத்தியிலேயே அவர் வளர்ந்திருந்தார்.
ஒரு பல்கலைக்கழக மாணவராக இருந்த செனவிரத்ன, தமிழர்-விரோத இனவாதம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சம்பந்தமான பிரச்சினைகளை ஒன்று சேர்த்துக்கொண்டிருந்த மக்களின் நண்பர்கள் என்ற அமைப்புடன் சம்பந்தப்பட்டிருந்தார். சம்பிக ரணவக்க தலைமையிலான இந்தக் குழு, பின்னர் தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிங்கள அதிதீவிரவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடன் இணைந்துகொண்டது. நாட்டின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்த ரணவக்க, இப்போது மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகராகவும் உள்ளார். ஹெல உறுமயவில் அங்கம் வகிக்காவிட்டாலும், செனவிரத்ன அதன் பேரினவாத அரசியலில் ஆழமாக ஊறிப்போயுள்ளதோடு, அரசாங்கத்தின் பிரச்சார ஊதுகுழலாக மட்டும் செயற்படும் டெயிலி நியூஸில் சவாரி செய்யும் ஒரு பத்திரிகைத்துறை குதிரை என்ற முறையில் தனக்கென ஒரு அந்தஸ்த்தை கண்டுகொண்டுள்ளார்.
செனவிரத்னவின் அரசியல் வரலாறு அவரது எழுத்துக்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மூர்க்கத்தனத்தை கொடுக்கின்றது. நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற முன்னாள் இடதுசாரிகளைப் போல் அன்றி, சோ.ச.க. புரட்சிகர அனைத்துலகவாதத்துக்காகப் போராடும் ஒரே அமைப்பாகும் என்பதை அடையாளங் கண்டுகொள்ள ட்ரொட்ஸ்கிஸ இயக்கத்தின் வரலாற்றுடன் அவர் போதுமானளவு நெருக்கமானவர். அவரது பிரதிபலிப்புகள் குண்டர் நடவடிக்கைக்குப் பேர்போன ஹெல உறுமயவின் நிகழ்ச்சித் திட்டத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டதாகும் --லஞ்சம் கொடுக்க முடியாதவர்கள் அல்லது விலைக்கு வாங்க முடியாதவர்கள் அழிக்கப்பட வேண்டும்.
சோ.ச.க. க்கு எதிரான இந்த அச்சுறுத்தல், தனது பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்துக்கு உழைக்கும் மக்களிடம் இருந்து வரும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்தவுள்ள வழிமுறைகளை பற்றி ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் தெளிவான எச்சரிக்கையை விடுக்கின்றது. ஒரு ஆண்டுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்திருந்த போதிலும், கடந்த புதன்கிழமை அவசரகாலச் சட்டத்தின் மாதாந்த நீடிப்பை மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியமை தற்செயலானது அல்ல. இராஜபக்ஷ புலிகளுக்கும் மற்றும் தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கும் எதிராகப் பயன்படுத்திய அதே கொடூரமான வழிமுறைகளை தனது "தேசத்தை கட்டியெழுப்பும்" புதிய "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுக்கப் பயன்படுத்துவார்.
அவசியமான அரசியல் படிப்பினைகளை பெற்றுக்கொள்ளுமாறு சோ.ச.க. உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிரான ஒரு எதிர்த் தாக்குதலில் கிராமப்புற வெகுஜனங்களுக்கு தலைமை வகிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதை ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தின் அடிப்படையிலும் மட்டுமே செய்ய முடியும். அந்தப் போராட்டத்துக்குத் தேவையான தலைமைத்துவமாக சோ.ச.க. யை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
கீழ் உள்ள கடிதத்தை
சோ.ச.க.
டெயிலி நியூஸ்
பத்திரிகைக்கு அனுப்பி
வைத்துள்ளது.
ஆசிரியர்,
டெயிலி நியூஸ்
ஐயா:
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) பொதுச் செயலாளர் என்ற முறையில், ஏப்பிரல் 23 வெளியான டெயிலி நியூஸ் பத்திரிகையில் "மதிப்புக் கொடுப்பதற்கு தகுதியானவர்களும் தகுதி அற்றவர்களும்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஆத்திரமூட்டும் கட்டுரை சம்பந்தமாக நான் எனது கட்சியின் வெறுப்பும் சீற்றமும் கொண்ட கண்டனத்தை பதிவு செய்கின்றேன்.
சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் எதிரான ஒரு பயங்கரவாத நடவடிக்கையை தூண்டிவிடும் ஒரு முயற்சி என்று மட்டுமே கூறக்கூடிய அந்தக் கட்டுரையின் ஆசிரியர் மலிந்த செனவிரத்ன, "எதிரிகளில் 99 வீதமானவர்களை விலைகொடுத்து வாங்க முடியும், மற்றும் எஞ்சியுள்ள ஒரு வீதமானவர்களை அழிக்க வேண்டும், அதாவது கொன்றுவிட வேண்டும்" என எழுதியுள்ளார். பின்னர் செனவிரத்ன, அந்த ஒரு வீதத்துக்குள் அடங்குபவர்களாக சோசலிச சமத்துவக் கட்சியையும் அதன் இரு முன்னணி உறுப்பினர்களான (நானாகிய) விஜே டயஸ் மற்றும் நந்த விக்கிரமசிங்கவையும் (சின்ன விக்ஸ்) அடையாளம் காட்டியுள்ளார்.
குரோதமும் வெறுப்பும் நிறைந்த ஒரு மொழியில் செனவிரத்ன எழுதுவதாவது: "நான் மதிப்பளிப்பதற்காக சின்ன விக்ஸையும் விஜே டயசையும் தேர்ந்துகொண்டுள்ளேன். அவர்கள் அரசியல் ரீதியில் நேர்மையானவர்கள். விலைகொடுத்து வாங்க முடியாதவர்கள்."
அதிதீவிர வலதுசாரி ஜாதிக ஹெல உறுமயவின் முன்னோடிகளுடன் தனது அரசியல் பாதையை தீட்டிக்கொண்ட செனவிரத்னவால் வழங்கப்பட்டுள்ள வஞ்சகம் நிறைந்த புகழுரையால் எவரும் முட்டாளாகிவிடமாட்டார்கள். ஹெல உறுமய இப்போது இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக உள்ளது. சோ.ச.க. யின் நடவடிக்கைகள் பற்றி ஹெல உறுமயவினதும் மற்றும் ஏனைய பிற்போக்கு சக்திகளதும் அவதானத்தை திருப்புவதே செனவிரத்னவின் எண்ணம் என்பது அனைவருக்கும் தெளிவானதாக இருக்கும்.
செனவிரத்னவின் கட்டுரை பிரசுரிக்கப்பட்டதன் மூலம், அவரது ஆத்திரமூட்டல் திட்டங்களுக்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான பத்திரிகையான டெயிலி நியூஸ் உடந்தையாக இருந்துள்ளது.
சோ.ச.க. க்கு எதிராக அரச இயந்திரத்துக்குள் உள்ள கொலைகாரப் படைகளையும் அதே போல் இனவாத குண்டர்களையும் மேலும் தூண்டிவிடுவதற்காக, செனவிரத்ன எமது அமைப்பை "ஈழம்வாதிகள்" என வகைப்படுத்துகின்றார். தமிழ் மக்களுக்கு எதிராக ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த பிற்போக்கு யுத்தத்தை சோ.ச.க. சமரசமின்றி எதிர்க்கின்றது. ஆனால், புலிகளின் முதலாளித்துவ பிரிவினைவாத வேலைத்திட்டத்தை சோ.ச.க. எதிர்ப்பது இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் பிரசித்தி பெற்ற விடயமாகும். எமது கட்சி ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற பதாதையின் கீழ் சிங்கள மற்றும் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த போராடுகின்றது.
இது சோ.ச.க. யின் முன்நோக்கை நிலைக்கச் செய்கின்றது. சோசலிசத்துக்கும் மற்றும் சகல உழைக்கும் மக்களதும் ஜனநாயக உரிமைகளுக்குமான எமது போராட்டம் எந்த விதமான அச்சுறுத்தல்களாலும் காட்டிக்கொடுக்கப்பட மாட்டாது. டெயிலி நியூஸ் பத்திரிகையின் பக்கங்களில் முன்னிலைப்படுத்தப்படும் அச்சுறுத்தல்களாலும் கூட காட்டிக்கொடுக்கப்பட மாட்டாது.
விஜே டயஸ்,
பொதுச் செயலாளர்
சோசலிச சமத்துவக் கட்சி