தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
:
பிரித்தானியாBP spill threatens vulnerable ecosystems with destructionBP எண்ணெய் கசிவானது சுற்றுச் சூழல் முறைகளில் அழிவை உண்டாக்க கூடிய அச்சுறுத்தலைக் கொடுக்கிறதது
ஏப்ரல் 20ம் திகதி எண்ணெய் பெருநிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் ஆழ்துளை இயந்திரமான Deepwater Horizon வெடித்து இரண்டரை வாரங்களுக்கு பின்னரும் ஆயிரக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெய் மெக்சிக்கோ வளைகுடாவிற்குள் தொடர்ந்து கசிந்து சிற்றாறு போல் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த வெடிப்பையடுத்து 11 தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள்.
வியாழனன்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட “கட்டுப்படுத்தும் குவிமாடமானது” கசிவுப்பகுதிக்கு அருகே கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. 200 தொன் எடையுள்ள கருவியை கடல் தளத்தில் இடிந்து விழுந்துள்ள குழாய் பகுதி மீது கீழிறக்கி எண்ணெயை மேல் தளத்தில் இருக்கும் கப்பல் ஒன்றிற்கு மேலேற்றும் பணியைச் செய்யலாம் என பிரிட்டிஷ் பெட்ரோலியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பொறியியல் வல்லுனர்கள் இந்த முயற்சி, இத்தனை ஆழத்தில் இருப்பதால் ஒரு சோதனையாகத்தான் இருக்கும் என்று எச்சரித்துள்ளதுடன் அது சரியாக வேலை செய்யுமா என்பது தெரிவதற்குப் பல நாட்கள் பிடிக்கும் என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையில், மெக்சிக்கோ வளைகுடாப் பகுதிக்குள் கசிவானது நாள் ஒன்றுக்கு குறைந்தது 200,000 கலன்கள் என்ற விகிதத்தில் தொடர்ந்து பெருக்கெடுத்து பாய்கின்றது. செவ்வாயன்று மூடிய கதவுகளுக்கு பின் நடந்த காங்கிரஸ் விசாரணையில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் நிர்வாகிகள், எண்ணெய் கிணறு நாள் ஒன்றிற்கு 60,000 பீப்பாய்கள் அல்லது 2.5 மில்லியன் கலன்களை வெளியேற்றக்கூடும் என்று ஒப்புக் கொண்டுள்ளனர். இறுதியாக வளைகுடா கடலோரப் பகுதிகளின் நிலங்களை வந்தடைகின்ற இக்கசிவானது ஏற்கனவே சுற்றுச் சூழல் பேரழிவை பல இடங்களிலும் கொடுக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது. வியாழனன்று பிரிட்டிஷ் பெட்ரோலியமும் அமெரிக்கக் கடலோரப் பாதுகாப்பு பிரிவும், லூயிசியானாவில் Chandeleur தீவுகளை எண்ணெய் படை அடைந்துள்ளது என்பதை உறுதிபடுத்தியுள்ளன. கூடுதலாக வந்த தகவல்களின்படி சாண்டிலேர் சவுண்ட் இடத்தில் ஜேல்லி மீன்கள் இறந்துள்ளதாவும், கடல் கோரைப்புற்களை எண்ணெய் மூடியதால் கடலோரத்திற்கு தள்ளப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளன. திங்களன்று MSNBC ஆனது எண்ணெய் திரட்டின் நீண்ட தொடர்கள் ஏற்கனவே தெற்கு வழி எனப்படும் முக்கிய லூயிசியானா கால்வாயிலும் அருகே உள்ள உப்பளங்கள் அனைத்திலும் நுழைந்துவிட்டதாகவும், லூயிசியானா கால்வாயானது கடல் நண்டுகள், ஓய்ஸ்டர்ள், ஷ்ரிம்ப், சிவப்பு மீன்கள் மற்றும் பிற கடல் உணவுப் பொருட்களை வளர்க்கும் இடம் என்றும் அறிவித்துள்ளது. இருந்தபோதிலும்கூட, மிகத் தீவிர பாதிப்பிற்கு இன்னும் சில நாட்கள் பிடிக்கலாம், இதுவரை காலநிலையானது எண்ணெய் திரட்டை கடலோரப் பகுதியில் இருந்து பல மைல்கள் தொலைவில் வைத்துள்ளது. ஆனால் காலநிலையானது சூழ்நிலைமையை மாற்றுமா என்பது வினாவல்ல, எப்பொழுது மாற்றும் என்பதுதான் வினா என்றும் அதையொட்டி எண்ணெய் தரைக்கு வந்துவிடும் என்றும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். லூசியானா, அலபாமா, மிசிசிபி மற்றும் புளோரிடா ஆகிய இடங்களில் அழிவுண்டாக்க கூடிய சுற்றுச்சூழல் நிலைமையானது மிக உடனடியான அச்சுறுத்தலாக தான் உள்ளது. இப்பகுதிகளில் இருக்கும் சதுப்பு நிலப் பகுதிகள் ஏற்கனவே சமீபத்திய புயல்களாலும் பல தசாப்தங்களாக இருக்கும் திட்டமிடப்படாத நிலப் பயன்பாடு மற்றும் மட்டமான நீர் நிர்வாகத்தாலும் கடுமையான அழுத்தத்தில் உள்ளன. இதன் விளைவாக மிசிசிபி டெல்டா ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 ஏக்கர் நிலப்பகுதியை கடலுக்குள் இழக்கிறது. ஏனெனில் வடிபொருட்கள் இயற்கையை புதிப்பிப்பதை காட்டிலும் அரிப்புத் தன்மையை அதிகமாக்கியுள்ளது. நியூ ஓர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தின் Pontchartrain Institute for Environmental Sciences ன் இடைக்கால இயக்குனரான டெனிஸ் ரீட் நியூயோர்க் டைம்ஸிடம், “எமது சதுப்பு நிலங்களில் உள்ள பிரச்சினை அவை ஏற்கனவே அழுத்தத்திற்கு உட்பட்டவையே, மிகச்சிறிய அளவில் தப்பி நிற்கின்றன.” என்றார். எண்ணெய் கசிவின் பாதிப்பு மேலும் முழு அழிவு எனலாம். வளைகுடா கடலோர சதுப்பு நிலங்கள் முக்கிய சுற்றுச் சூழல் பணிகளைச் செய்கின்றன. அவற்றுள் சிறிதும் முக்கியத்துவம் குறையாதது கடல் வாழ் உயிரினங்களுக்கு உறைவிடம் தருவதாகும். அத்துடன் எண்ணெய் தொழிலும் உள்ளூர் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் கொண்டுள்ளன. நாட்டில் பிடிக்கப்படும் மீன்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு லூசியானாவில் இருந்து பெறப்படுவது ஆகும். உலகில் மிக அதிக ஒய்ஸ்டர்ஸ் உற்பத்தியையும் இம்மாநிலம் செய்கிறது. ஆண்டு ஒன்றிற்கு 250 மில்லியன் பவுண்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஷ்ரிம்ப் மற்றும் மீன்களின் முதல் தோற்றமான ஒய்ஸ்டர்ஸ் மற்றும் நண்டுகள் இங்கு அவற்றின் ஒப்பீட்டளவில் நகரும் தன்மைக் குறைவினால் பாதுகாப்புக் குறைந்த கடல் விலங்குகள் ஆகும். வாடகை படகின் காப்டனான டான் டிக்ஸ் ராய்ட்டர்ஸுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் மீன்பிடித்துறை எதிர்கொண்டிருக்கும் பேரழிவு பற்றிக் கூறினார். “எந்த அளவுகளில் எண்ணெய் வெளிவந்து இப்பகுதியில் நிரம்பினாலும் அது பற்றிய பெரும் கவலை எங்களுக்கு உண்டு. எண்ணெய்ப் பிசிபிசுப்பு ஏற்பட்டுவிட்டால் அப்பகுதித் தன்மையை அழித்து ஷ்ரிம்பையும் கொன்றுவிடும். ஷ்ரிம்ப் கொல்லப்பட்டுவிட்டால், நீங்கள் அதைத் தின்று உயிர்வாழும் மீன்களைக் கொன்றுவிடுவீர்கள். மீன்கள் கொல்லப்பட்டுவிட்டால் மெக்சிக்கோ வளைகுடாவில் எதுவும் எஞ்சியிருக்காது. அது பல ஆண்டுகளுக்கு பேரழிவை முழுமையாக ஏற்படுத்தும்.” மிசிசிபி ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து புளோரிடாவின் பென்சகோலா விரிகுடா வரை வரை அரசாங்கம் நீர்நிலையில் மீன்பிடிப்பைத் தடுத்துள்ளது. இப்பேரழிவுத் திறன் மீன் இருப்புக்களுக்கும் அப்பால் செல்கிறது. கடலோரப் பகுதியில் இருக்கும் ஈரப்பத நீர்நிலைகள் புயல்களில் இருந்தும் உயரும் கடல் மட்டத்தில் இருந்தும் பாதுகாப்பைக் கொடுக்கின்றன. சுகாதார நீர்நிலை சுற்றுச்சூழல் நீரைச் சேமித்து, மாசினை வடிகட்டி கடலோரப் பகுதியை அரிப்பு சக்திகளில் இருந்து பாதுகாக்கின்றன. அதிக அளவு எண்ணெய் தரைப் பகுதியில் சேர்க்கப்பட்டுவிட்டால், அவை புற்களை அழிக்கும். புற்களோ சுற்றுச்சூழல் முறைக்கு அஸ்திவாரத்தை அளிக்கின்றன. “இங்கு உள்ள தாவர வகைகள் தான் தீவுகளை ஒன்றாக நிலை நிறுத்தியுள்ளன. நீங்கள் அவற்றைக் கொன்றுவிட்டால், சகதிதான் இருக்கும், அது விரைவில் அடித்துத் தள்ளப்படும்” என்று கவர்னர் அலுவலகத்தின் கடலோரச் செயல்கள் இயக்குனர் காரட் கிரேவ்ஸ் நியூயோர்க் டைம்ஸிடம் கூறினார். இன்னும் ஈர நிலங்களின் இழப்பானது கத்ரீனா போன்ற புயல்கள் தாக்கும் அபாயத்தை கூடுதலாக்கும். இத்தகைய நிலைமை தான் வளைகுடா கடலோரப் பகுதியை 2005 ல் பேரழிவிற்கு உட்படுத்தியது. நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதத்தில் வளைகுடாப் பகுதியில் கடல் மட்டங்கள் உயர்ந்து கால நிலை மாற்றத்தால் தீவிர புயல்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். மீன் மற்றும் வன விலங்குகள் துறைக் கருத்துப்படி கிட்டத்தட்ட 20 தேசிய வன விலங்கு புகலிடங்கள் பெரும் எண்ணெய் மாசை எதிர்கொள்கின்றன. பிரெடன் தீவு தேசிய வன விலங்குக் காப்பகம் பிரெடன் தீவு மற்றும் லூசியானாவில் உள்ள சாண்டிலுர் தீவுகள் அனைத்தையும் அடக்கியது, பல டஜன் வகை பறவைகள், பழுப்பு பெலிகன்கள், laughing gulls (ஒருவித கடற்பறவை), ரோயல், காஸ்பியன் சாண்ட்விச் டெர்ன்கள் ஆகியவை இயல்பாக வசிக்கும் பகுதிகள் ஆகும். விஞ்ஞானியும், எண்ணெய் சுத்திகரிப்பு வல்லுனரும், நோர்வேயின் இயற்கை நிர்வாகத்தில் வேலைபார்ப்பவருமான ரீடர் ஹிண்ட்ரம் என்பவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் லூயிசியானா வளைகுடா கடலோரப் பகுதியில் உள்ள சேறு, புல் தடங்களில் இருந்து எண்ணெயை அகற்றுவது என்பது 1989 ம் ஆண்டு அலாஸ்கா மாநில பிரின்ஸ் வில்லியம் சவுண்ட் கசிவைச் சுத்தப்படுத்தியதை காட்டியதிலும் இன்னும் கடினத்திற்கு இது நிரூபணம் என்று கூறினார். “இது மிகவும் கடினமாகும். எண்ணெய் சகதிக்குள் இறங்கிவிடும். இறுதியில் எண்ணெயை அகற்றுவது என்பது தாவரங்களையும் அகற்றுவதாகிவிடும்” என்று ஹிண்ட்ரம் கூறினார். பல பறவையினங்களுக்கு மோசமான நேரமாக இந்த எண்ணெய் கசிவு வந்திருக்கக் கூடாது. மீன் மற்றும் வன விலங்குத்துறையின் தென்கிழக்குப் பகுதியில் இடம் நகர்ந்து செல்லும் பறவையினப் பிரிவின் துணை வட்டார இயக்குனரான டேவிட் வைக்கர், நாம் இப்பொழுது வளைகுடாவில் பறவைகளின் இடம்பெயர்தல் பருவகால உச்சத்தை அண்மித்து இருப்பதாகக் குறிப்பிட்டார். Exxon பேரழிவிற்கு பின்னர் தூய்மைப்படுத்த வந்த ஒரு நோர்வீஜிய குழுவில் பணிபுரிந்திருந்த ஹிண்ட்ரம் எண்ணெய் கசிவின் விளைவுகளானது பறவைகள் மற்றும் பிற விலங்கினங்கள் மீது பல ஆண்டுகள் தொடரும் என்றார். “நாங்கள், பறவைகள் மற்றும் அவற்றின் இறகுகள் மீது எண்ணெய் படர்வது பற்றி கவனம் காட்ட விரும்புகிறோம். ஆனால் நீண்ட காலத்தில் அவை தப்பிப் பிழைப்பதும் பறவைகளின் ஆகாரங்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பதையும் பொறுத்தது ஆகும்.” என்று ஹிண்ட்ரம் கூறினார். மீன் மற்றும் வன விலங்குப் பணித்துறை, எண்ணெய் கசிவுத் திரட்டு கடலோரப் பகுதியை அடைவதினால் ஏற்படும் பேரழிவினால் ஏற்படக்கூடிய மற்ற இயற்கைப் பகுதிகள் பற்றியும் விளக்கியுள்ளது. அலபாமாவில் உள்ள போன் செகூர் புகலிடத்தில் 7,000 ஏக்கர் வன விலங்கின வசிப்பிடத்திலுள்ள இடம் பெயரும் பறவைகள், கடல் ஆமைகள் உறைவிடம் மற்றும் அலபாமா கடற்கரை எலிகளின் உறைவிடம் ஆபத்திற்கு உட்பட்டுள்ளது. புகலிட கடற்கரைகளான லாக்கர் ஹெட் மற்றும் கெம்ப் ரிட்லி என்பன கடல் ஆமைகள் வாழ்வதற்கான இடங்களாக அமைந்துள்ளன. பருவக் காலத்தில் 370க்கும் மேற்பட்ட இடம்பெயரும் பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஓஸ்ப்ரேக்கள், ஹெரான்கள் ஆகியவையும் அடங்கும். கிராண்ட் வளைகுடா புகலிடம் மிசிசிபி மற்றும் அலபாமாவில் 10,200 பரப்பளவில் உள்ளன. புகலிடத்தில் காணப்படும் உயிரினங்களில் கோபர் ஆமை, சிவப்பு காக்கேட் உடைய மரங்கொத்தி மற்றும் பழுப்பு பெலிகன் ஆகியவை உள்ளன. மிசிசிபி ஆறு டெல்டா புகலிடம் 48,000 ஏக்கர் சதுப்பு நிலம், திறந்த நீர்நிலையில் உள்ளது. இது குளிர்கால நீர் பௌல், அமெரிக்க முதலை, பழுப்பு பெலிகன், ஆர்க்டிக் பெரிக்ரைன் பால்க்கன், மான்கள், சதுப்பு நில முயல்கள் மற்றும் பைபிங் ப்ளோவர் ஆகியவற்றின் சரணாலயமாக உள்ளது. சதுப்பு நிலங்களும் நீர்வழிகளும் பல வித மீன் வகைகள், ஸ்பெக்கிள்ட் ட்ரௌட், ரெட்பிஷ், ப்ளொண்டர், காட்பிஷ் மற்றும் லார்ஜ்மௌத் பாஸ் அவற்றிற்கு ஆதரவு கொடுக்கின்றன. லூசியானா மாநிலப் பறவையான பழுப்பு பெலிகனே வன விலங்கு சரணாலயத்தில் குறிப்பிடத்தக்க அபாய அடையாளமாக இருக்கின்றது. சமீபத்தில் தான் இது ஆபத்திற்குட்பட்ட பறவைகள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டது. வளைகுடா கடலோரப் பகுதிகளில் எண்ணெய் கசிவு இடத்திற்கு அருகே இவை இனப்பெருக்கம் செய்கின்றன. பழுப்பு பெலிகன் வசிக்கும் புகலிடங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கான தடை வரம்புகள் நிறுவப்பட்டுள்ள நிலையில், விலங்குப் புகலிடத்தின் பெரும் பகுதிகள் பாதுகாப்பற்று உள்ளன. தடை வரம்புகளோ கடல் கொந்தளிப்பு நேரத்திலும் குறைந்த பாதுகாப்பைத்தான் தரும் நோர்வே இயற்கை நிர்வாக இயக்கத்தை சேர்ந்த ஹிண்ட்ரம் கூறினார்: “அலைகள் மூன்று அல்லது நான்கு மீட்டர் உயரும்போது எண்ணெய் தடை வரம்புகளை பயன்படுத்த முடியாது என்பதுதான் எங்கள் அனுபவம். அது விரிகுடா போன்ற சிறு பகுதிகளைத்தான் பாதுகாக்கும். “பிரெடென் தீவுகளின் 60 மைல் நீள புகலிடம் முழுவதும் தடை வரம்புகள் வைக்க முடியாது” என்று மீன், வன விலங்குத் துறையின் செய்தித் தொடர்பாளர் டாம் மக்கின்ஸி க்ரீன்வைரிடம் கூறினார்: “நாம் அனைத்து பறவைகளையும் பாதுகாக்க முடியாது. இனப்பெருக்கம் செய்யும் பெலிகன்கள் மீது கவனம் காட்டுவதற்குக் காரணம் அவைகளின் நிலையான ஒரு இருப்பிடமாகும்.” இத்தகைய அரைகுறை அணுகுமுறை பறவைகளுக்காக வாதிடுபவர்களால் குறைகூறப்படுகிறது. அவர்கள் எண்ணெய்க் கசிவு இப்பகுதியில் இருக்கும் பறவை இனங்களை சிதைத்துவிடும் என்று அஞ்சுகின்றனர். தடை வரம்புகளை தவிர மற்றும் பல நடவடிக்கைகளாக தீ கட்டுப்படுத்திகள், இராசாயன கழிவகற்றிகள் ஆகியவையும் மோசமான விளைவுகள் சிலவற்றை தவிர்க்கும் முயற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை அனைத்திலும் அவற்றிற்கு உரிய ஆபத்துக்கள் உள்ளன. குறிப்பாக நூறாயிரக்கணக்கான கலன்கள் இராசயன கழிவகற்றிகளின் பாதிப்பு உறுதியாகச் சொல்ல முடியாதது ஆகும். கழிவகற்றிகள் எண்ணெயை அகற்றுவதில்லை. மாறாக அவை எண்ணெய் திரட்டின் நீர்த்த தன்மையை அதைச் சிறு துளிகளாகச் செய்வதின் மூலம் குறைக்கின்றன. இக் கழிவகற்றிகளின் இராசயனத் தன்மையின் துல்லிய தன்மை அறியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் அவை நிறுவனத்தின் வணிக இரகசியங்களினால் பாதுகாக்கப்படுகின்றன. மேற்பரப்புக் குவிப்பைக் குறைத்தலில் ஓரளவிற்கு நலன்கள் உறுதியாக இருந்தாலும், விளைவுகள்அதுவும் கடல் உயிரினங்களுக்கு இறுதியில் எப்படி என்பது சரியாகத் தெரியாதவை ஆகும். பேரழிவின் இந்தக் கட்டத்தில் சுற்றுச்சூழலுக்கும் அதன் நலனை நம்பியிருக்கும் பலவித மக்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்தின் பரப்பு, இடத்தன்மை பற்றி உயர்ந்த அளவு உறுதியற்ற தன்மை தவிர்க்க முடியாமல் உள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பீப்பாய்கள் பீறிட்டு வெளிவரும்போது, இன்னும் அதிகமான அளவில் அமெரிக்க வரலாற்றில் இது மிக மோசமான சுற்றுச் சூழல் பேரழிவுகளில் ஒன்றாக இருக்கக்கூடும். |
|
|