By Stefan Steinberg
1 July 2000
Back to screen version
புத்திஜீவித மோசடிகள், Profile Books ISBN 1 86197 1249
புத்திஜீவித மோசடிகள்,
ஆங்கிலம் உள்ளடங்கலாக பிரெஞ்சு, ஜேர்மன் போன்ற குறிப்பிடும் படியான மொழிகளில் பிரசுரமாகி இருப்பதுடன், இலகுவான முறையில் பாவிக்கக்கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. நவீன கருத்தியலான, குறிப்பாக, வித்தியாசமான வகையறாக்களில் ஒன்றான குறிப்பிட்ட மட்டத்தில் 'பின்நவீனத்துவம்' என்ற கலப்பின அடைமொழியின் கீழ் அழைக்கப்படும் சற்றே குழம்பிய சிந்தனைப் பாடசாலையினது போக்கு பற்றி ஆர்வம் உடையவர்கள் அனைவரும் இதைப் படித்தாக வேண்டும்.
அந்தப் புத்தகத்தின் ஆசிரியர்களான அலன் சோகல் (Alan sokal) மற்றும் ஜீன் ப்ரிக்மொன்ட் (Jean Bricmont) மிக முக்கிய பிரெஞ்சு பின்நவீனத்துவவாதிகளின் படைப்புகளில் காணக்கூடியதாக இருக்கும் பல உண்மையற்ற உளறல்களுக்கு எதிராக அவர்களது வீச்சுக் கற்களுடனும், கவசங்களுடனும் யுத்தத்திற்கு செல்கிறார்கள். அதன் ஆசிரியர்களான சோகல் மற்றும் ப்ரிக்மோன்ட் ஆகிய இருவரின் கூற்றுக்கள் மற்றும் முடிவுகள் பலவற்றுடன் இந்த கட்டுரையின் ஆசிரியர் உடன்படாத போதும், பிழையான கருத்துருக்களைக்கொண்ட கொடூரமான பின்நவீனத்துவ பலூனின் காற்றை இறக்கிய அவர்களின் முயற்சியானது பாராட்டத்தக்கது அல்லது, அந்த புத்தகத்தின் ஆசிரியர்கள் குறிப்பிட்டதுபோல், ''இப்படியான ஒரு விமர்சன மனப்பான்மை குறிப்பிட்ட தனிப்பட்ட நபர்களை நோக்கி மட்டுமல்ல மாறாக இந்த வகையான சொல்லாடல்களை (Discourse) பொறுத்துக்கொண்ட மற்றும் ஊக்குவிக்கவும் செய்த முழு (இது அமெரிக்கா மற்றும் ஜரோப்பாவில் இருக்கும்) புத்திஜீவித சமூகத்தையும் நோக்கி தூண்டி விட வைக்கப்பட்டுள்ளது.'' (பக்கம். 6).
புத்திஜீவித மோசடிகள் என்ற புத்தகத்தின் முன்வரலாற்றை சுருக்கமாக ஞாபகப்படுத்துவது நல்லது என கருதுகிறேன். நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரான சோகல் 1996ம் ஆண்டு (Social Text) சமூக உரை என்ற சஞ்சிகையில் பிரசுரிப்பதற்கு ஒரு கட்டுரை ஒன்றினை அளித்திருந்தார், அது ''கலாச்சார கல்வித்துறை சார்பான புதிய அபிவிருத்திகளுக்கும், சமூகவியலுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இடதுசாரி சிந்தனையின் செல்வாக்கை கொண்ட சஞ்சிகையாகும். சோகல் அவரது கட்டுரைக்கு,'' Transgressing the Boundaries: Toward a Transformative Hermeneutics of Quantum Gravity. "எல்லைகளை மீறல் : கற்றை ஈர்ப்பினது மாறக்கூடிய ஒரு விளக்கவுரையியல் நோக்கி '' என பெயரிட்டார்.
சில பக்கங்களின் போக்கில் கற்பனையும் இடமும் அனுமதித்த அளவுக்கு குழப்பங்களையும் போலி விஞ்ஞானத்தையும் அவர் சேர்த்துக் கொள்கிறார். வாசகரை இளக்காரமாக நினைப்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு: யூக்ளிட்டின் (Euclid) Pi-ம் நியூட்டனின் G யும் மாறாததும் பொதுவானதுமாக முன்னர் கருதப்பட்டு வந்தது, இப்போது அவை விலக்கிவிட முடியாத வரலாற்று மெய்மையாகப் பார்க்கப்படுகிறது, உத்தேசமான ஆய்வாளர்கள் கால-வெளி புள்ளியுடன் இணைக்கும் எந்த அறிவாதாரமுறையிலுருந்தும் துண்டித்துக் கொண்டு, மையத்திலிருந்து விலகியுள்ளார்கள்." புகழ்பெற்ற இடதுசாரி தீவிரவாதியும், சஞ்சிகையின் ஆசிரியரும், பத்திரிக்கையின் சகஸ்தாபகரும், நியூயோர்க் நகரப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்டான்லி ஆரனோவிச் (Stanley Aaronowitz) உள்பட அந்த இதழின் ஆசிரியர்கள் இந்தக் கட்டுரையை ஒரு சிரத்தைமிகுந்த பங்களிப்பாக எண்ணி வரவேற்றதுடன், அதைப் பிரசுரித்தனர்.
அது வெளிவந்ததன் பின்னர் மற்றும் கட்டுரை ஒரு கேலிகூத்தாக இருப்பதாக சோகல் ஏற்றுக்கொண்டதன் பின்னர் மட்டுமே இதழின் ஆசிரியர்களின் பக்கத்தில் பின்னடிப்பு தொடங்கிவிட்டிருந்தது. சோகல் பிரச்சினையின் மையத்தின் மீது அவரது விரலை வைத்துள்ளதுடன், புத்திஜீவித மோசடிகள் இல் அவர் காயத்தினை ஆழப்படுத்தி ஆய்வு செய்ய முயல்கிறார்.
பிரெஞ்சு பின்நவீனத்துவத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சில நபர்களை -- Jacques Lacan, Jean-Pierre Lyotard, Julia Kristeva, Jean Baudillard, Gilles Deleuze மற்றும் Felix Guattari இவர்களுடன் இன்னும் பலரை இந்த புத்தகம் அலசுகிறது. தாம் அபிவிருத்தி செய்ததை உறுதி நிறைந்த வழியில் விளக்கிக்காட்டவும், தமது வாதங்களை வெளிப்படுத்திக்காட்டவும் அந்த நபர்களின் படைப்புகளில் இருந்து ஒரு தொடர் உதாரணங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
லூசி இரிகறே மற்றும் ஜூலியா கிறிஸ்த்தெவா
லூசி இரிகறே (Luce Irigaray) மெய்யியல்(தத்துவயியல்) மற்றும் விஞ்ஞான பின்நவீனத்துவ போலிப் பகட்டுடன் கூடிய ஒரு முன்னணி பிரெஞ்சு பெண்ணிலைவாதியாவார். ஜரோப்பா மற்றும் அமெரிக்க கல்வித்துறை நபர்கள் (academia) மத்தியில் அவரது படைப்பு மிக மதிப்புமிக்கதாக பார்க்கப்பட்டுவருகிறது.("Le sujet de la science est-il sexue?") (1987) "விஞ்ஞானத்தின் ஆய்வுப்பொருள் பாலியலானதாகவா இருக்கிறது?" என்ற அவரது ஆய்வொன்றில், உண்மையில் புறக்கணிக்கப்பட்ட ஏன்ஸ்ரைனின் புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டினை நடத்தும் விடயத்தினையிட்டு அவர் தனது கவனத்தை திருப்புகிறார். அவர் இக்கேள்வியை முன்வைக்கிறார்: "e=mc2 ஒரு பாலியல் சமன்பாடா?'' அவர் தொடர்கிறார்: ''அப்படித்தான் இருக்கலாம்''. அது எமக்கு மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகின்ற ஏனைய வேகங்களுக்கு மேலாக ஒளியின் வேகத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற அதுவரைக்கும் ஒரு கோட்பாட்டை உருவாக்குவோம்.'' சமன்பாட்டின் இருக்கக்கூடிய பாலியல் தன்மை குறிகாட்டுவது எனக்கு எதை தெரியப்படுத்துகிறது எனில் அணுவாயுதங்களால் ஆன அதனது பயன்பாடுகளில் நேரடியாக இல்லை, மாறாக எது வேகமாக செல்கிறதோ அது சிறப்புரிமை கொண்டிருக்கிறது என்பதையாகும்.'' (பக்கம். 100)
அதற்கு தொடர்புடைய இன்னொரு ஆய்வில் இரிகறே (Irigaray) உணர்ச்சிவசப்பட்டு அவரது வெறுப்பை உமிழ்கிறார்,''ஆனால், சக்திவாய்ந்த அணுவாயுத தொழிற்சாலைகளை ஸ்தாபித்தது மற்றும் எமக்கு அவசியமான வாழ்க்கைச் சூழலுக்கு தேவையான உடல்ரீதியான எம் உயிரை கேள்விக்குட்படுத்தியதைத் தவிர்த்து, மாபெரும் சார்பியல்கோட்பாடு எமக்கு என்ன செய்தது?'' (பக்கம்.98)
பின்நவீனத்துவ வாதிகளின் மத்தியில் கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும் இதைப்போன்ற பல வாதங்களைப்போல் உண்மையில் இது அவ்வளவு வளைவுநெளிவு மிக்கது அல்ல. ஏன்ஸ்ரைன் (கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒரு மனிதன்!) அபிவிருத்தி செய்த அவரது சார்பியல் சமன்பாடு நவீன விஞ்ஞானத்தின் ஒரு மைல்கல்லாகும். ஒளியின் வேகத்தினை விட மிகவிரைவாக பெளதீக பொருள் பயணம் செய்வது சாத்தியமற்று இருக்கிறது,அதாவது,ஒளியின் வேகமானது விளங்கிக்கொள்ளக் கூடிய மிகவிரைவான வேகமாக இருக்கிறது என்பது ஏன்ஸ்ரைனின் சமன்பாட்டின் ஒரு தொடர் முடிபாகும். இரிகறேயின் ஊகக் கருத்தின்படி,வேகமானது பொதுவாக ஒரு ஆணின் பண்பைக் கொண்டிருக்கிறதாம். ஏன்ஸ்ரைன் அவரது சமன்பாட்டினை வேகத்துடன் 'இணைத்தலானது' பாலியல் வகைப்பட்ட காரணமாக இருக்கிறது.ஆகையால் அவரது அனைத்து சமன்பாடுகளும் சந்தேகத்திற்குரியவை. (மற்றும், எம்மை உடல்ரீதியாக செயலற்றதாக்கும் தன்மைக்கான ஒரு அச்சுறுத்தல்--நீடூழி வாழ்க செயலற்ற தன்மை!)
ஒளியின் வேகத்தை அடைய முயலும்போது ஆணின் உடலைப்போன்றே பெண்ணின் உடல்களும் சரியாக ஒரே வகையான பெளதீக பிரச்சனைகளுக்கே முகம்கொடுகின்றன என்ற உண்மை Irigaray இன் விவாதத்திற்கு சார்பாக இருப்பதை புறம்தள்ளிவிடுகிறது. இவரது வாதம் சிரத்தைமிகுந்த ஆய்விலும் பார்க்க, அதிசயவுலகத்தில் இருக்கும் Alice உடன் மிக ஒத்ததாக இருக்கிறது. இரிகறேயின் ஆய்வறிக்கைகளை பற்றி சோகல் மற்றும் ப்ரிக்மொன்ட் ஆலும் செய்யப்படும் முடிவுரையானது நிச்சயமாக அறிவார்ந்ததாக இருக்கிறது: "கவலைக்கிடமானவகையில், இரிகறேயின் கூற்றுக்கள் அவர் ஆய்வு செய்யும் துறையில் அவரது மேலெழுந்தவாரியான ஒரு விளக்கத்தை வெளிக்காட்டுவதுடன், அதன்விளைவாக விவாதத்திற்கு எதையுமே கொண்டுவரவில்லை.''
இரிகறே உண்மையிலே அவருக்கு சிறிதாக மட்டுமே தெரிந்த துறைக்குள் வழிதவறி வந்துவிட்டிருந்ததுடன், தளதளத்து போய்விடுகிறார். ஆழமாக மூச்சு விட்டுக்கொண்டு நாம் மேலும் செல்வோம்.
பின் நவீனத்துவ பாடசாலையின் இன்னொரு முன்னணி நபர் தான் Julia Kristeva, இவர் இலக்கிய நடவடிக்கைகளுக்கும் கணிதத்திற்கும் இடையிலான உறவை ஸ்தாபிக்க முனைந்தார்.குறிப்பாக இவர்,குறியீட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதியான இணை கோட்பாட்டுடன் கவிதையை ஏற்றமைவிக்க (ஒத்திசைவிக்க) முனைந்தார். ''Semeiotike: ஒரு அரை ஆய்வுகளுக்கான ஆராய்ச்சிகள்'' (1969) என்ற அவரது படைப்பில் இருந்த ஒரு பந்தி இதற்கு ஒரு மாதிரியாகும்:
''கவித்துவ மொழி (இது முதற்கொண்டு, இந்த ஆய்வை தொடங்கிவைப்பதன் மூலம் நாம் க மொ தலைப்பெழுத்துக்களால் சுட்டிக்காட்டலாம்.) தருக்க நெறிக்கான குழூஉக்குறியை கொண்டிருக்கிறது. மேலதிகமாக,செயற்கையான குறிகளின் முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் குறியீட்டுக் கணிதத்தின் அனைத்து தொகுப்பு விவரங்களையும் நாம் அதில் காணலாம் மற்றும் அவை, வழமையான மொழியின் வெளிப்பாட்டின் மட்டத்தில் புறவடிவமாக இல்லை என்பதையும் நாம் காணலாம். (பக்கம் 41).
கிறிஸ்த்தெவாவின் கட்டுரை முழுவதும் அவரது கணிதக் கருத்துப்பாட்டின் பல பொய்மைப்படுத்தல்களும் திரித்தல்களும் தான் இருக்கின்றன என்பதை சோகலும், ப்ரிக்மொன்டும் வரைந்து காட்டுகிறார்கள். அதேநேரம், கணிதத்தின் ஒரு கிளைக்கும் மற்றும் கவிதைக்கும் இடையிலான ஒரு உறவினை உறுதிப்படுத்த அவரது முக்கிய ஆய்வறிக்கையில் ஒரதடவை கூட ஒரு கவனமான வாதத்தை முன்வைக்க ஒரு போதும் முயலவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மிகைமதிப்பீடு செய்யப்பட்டு தவறான முறையில் சிறப்புமிக்கவராக புகழப்பட்ட இன்னொரு கோட்பாட்டாளர் தான் இவர் என்ற முடிவுக்கு ஒருவர் வருவதுடன் இன்னொருதடவை மூச்சு விட்டுக்கொள்ளலாம். இது எப்படியிருந்தபோதும், ஒருவரைப் பார்த்து ஒருவர் பிரதி எடுத்தலின் பட்டியல் தொடர்கிறது.
அவர்களது அரசியலில் தம்மைத்தாமே இடதுசாரிகளாக வர்ணித்துக்கொண்ட மிக புகழ்பெற்ற பல பிரெஞ்சு சமகாலத்து சிந்தனையாளர்களுக்கு அத்தியாயத்திற்கு பின் அத்தியாயமாக சோகலும் ப்ரிக்மொன்டும் அர்ப்பணித்துள்ளார்கள். சமூகவியல், இலக்கிய விமர்சனம், மொழியியல், கலாச்சார ஆய்வுகள் மற்றும் பல ஏனைய கல்விநெறிகளின் துறைகளில் குழப்பமான கோட்பாடுகளை ஆதரிக்கும் பொருட்டு நிரூபிக்கப்பட்ட, மதிப்புமிக்க இயற்கை விஞ்ஞானத்தின் கருத்துப்பாடுகளை இந்த அனைத்து புத்திஜீவிகளும் போலியான முறையில் உபயோகப்படுத்துகிறார்கள்.
பின் நவீனத்துவம் என்றால் என்ன?
ஊசி நுணியில் எத்தனை தேவதைகள் நடனம் ஆடமுடியும் என்ற சமயகுருக்களுக்குரிய குறைந்தபட்சம் ஒரு அர்த்தமற்ற விவாதத்தைத்தான் பின்நவீனத்தும் செய்து வந்திருக்கிறது என்ற நிலைப்பாட்டை நிரூபித்துக்காட்ட சோகலும் ப்ரிக்மொன்டும் போதுமான சாட்சியங்களை ஒன்றுதிரட்டியுள்ளார்கள். ஆனால், அதற்குள் இருப்பது அவ்வளவுதானா? பின்நவீனத்துவம் முட்டாள்த்தனமான ஒன்றாக மட்டுமா இருக்கிறது? பின்நவீனத்துவம் என்றால் என்ன? அந்த இயக்கத்தின் மூலங்கள் என்னவாக இருக்கின்றன?
இந்த வகையில்,சோகலும் ப்ரிக்மொன்டும் ஒரு சில சுவாரிசியமான ஆய்வுகளை செய்துள்ளார்கள். முதலாவதாக, விஞ்ஞானம் மற்றும் ஒவ்வொரு சிந்தனைத்துறையிலும் சார்புநிலைவாதத்தை அறிமுகப்படுத்தும் மற்றும் விளங்கிக்கொள்ளக் கூடிய ஒரு புறநிலை உண்மையினை மறுக்கும் பின்நவீனத்துவத்தின் பொதுவான போக்கினை ஒரு சிந்தனைப்பாடசாலை (பள்ளி) யாகத்தான் சரியாக இனம்காண்கிறார்கள்.
மேலும், பின்நவீனத்துவ கோட்பாடுகளின் மீது பரந்துபட்ட ''இடது கல்வியாளர்கள்'' தட்டுகளுக்கு தனிப்பட்ட நாட்டம் இருப்பதாக ஆசிரியர்கள் இருவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.புத்திஜீவித மோசடிகளின் இதற்கு முந்திய பதிப்பில் ஒரு சில ''இடது'' விமர்சனத்திற்கு பதிலளிக்கையில், சோகல் தான் ஏன் இந்தப் புத்தகத்தை எழுதினார் என்பதை விளக்கப்படுத்துகிறார்: "நான் ஏன் இதைச்செய்தேன்? கட்டுடைத்தல் (deconstruction) எப்படி தொழிலாளவர்க்கத்திற்கு உதவி செய்திருக்க கூடும் என்பதை ஒருபோதும் விளங்கியிராத வெட்கமற்ற பழைய இடதுசாரி நான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது.மேலும், இங்கு ஒரு புறவுலகம் இருப்பதையும், அந்த உலகம் பற்றிய புறநிலை உண்மைகளும் அங்கிருப்பதையும் மற்றும் எனது பணியானது அவைகளில் சிலவற்றை கண்டுபிடிப்பதுதான் என எளிமையான வகையில் நம்பிய ஒரு மந்தமான பழைய விஞ்ஞானியாக நான் இருக்கிறேன்.'' (ப. 249).
பின்நவீனத்துவத்திற்கு பின்னால் உந்துசக்தியாய் இருந்தவர்கள் பிரெஞ்சு புத்திஜீவிகள் தான், ஆனால் அந்த இயக்கம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய புத்திஜீவி சமூகத்தாலே பரந்தமட்டத்தில் பரப்பப்பட்டது என சோகலும் ப்ரிக்மொன்டும் சுட்டிக்காட்டுகிறார்கள்:'' Lacan, Kriesteva, Baudrillard மற்றும் Deleuze இடம் விஞ்ஞான விதிமுறை அழுத்தப்பாடு மீதான வெறுப்பு மனநிலையை ஒருவர் காணலாம், இவர்கள் 1970 களில் பிரான்சில் கேள்விக்கு அப்பாற்பட்ட வெற்றியை பெற்றதுடன், இன்றுவரை இவர்களுக்கு குறிப்பிடும்படியான செல்வாக்கு அங்கு இருந்துவருகிறது. இந்த சிந்தனை வழிமுறை பிரான்சுக்கு வெளியிலும் பரவியது,குறிப்பாக 1980 மற்றும் 1990 களில் தான் ஆங்கிலம் பேசும் உலகத்திற்கு பரவியது.''(ப.194)
பின்நவீனத்துவத்தை பொறுத்தவரை ''அடிக்கடி மிகைப்படுத்தப்பட்ட சமூகவியல் தொடர்பு'' இருக்கிறது என ஓரிடத்தில் சோகலும் ப்ரிக்மொன்டும் ஏற்றுக்கொள்வதுடன், அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: ''தனிப்பட்ட முறையில், இங்கே ஆய்வுசெய்யப்பட்ட கருத்துக்களில் அரசியலுடனான தருக்க அல்லது கருத்துப்பாட்டு தொடர்பு இருக்குமெனில் அது சிறிதளவானதே.'' அவர்களது சொந்த புனைவுகோளின் விளைவாக, பின்நவீனத்துவத்தின் மூலங்கள் பற்றி கூறுவதற்கு ஆசிரியர்கள் சற்று குறைவான அக்கறையே கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது சொந்த சிந்தனையின் சமூக, அரசியல், வரலாற்று வேர்களை வரைந்துகாட்டுவதில் பின்நவீனத்துவ இயக்கத்தின் முன்னணி நபர்கள் மெளனம் சாதிப்பவர்களாக இல்லை. ஜோன் பிரான்சுவா லியோத்தார் -Jean-Francois Lyotard-, பின்நவீனத்துவ இயக்கத்தின் தாத்தா அல்லது "பொப்பாக" (போப்) பலரால் பார்க்கப்படுகிறார். பின்நவீன நிபந்தனை என்ற அவரது புத்தகத்தில் அவர் நவீனத்திற்கும் பின்நவீனத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை வரைந்துகாட்டுகிறார்.
''உயிரின் இயங்கியல், அர்த்தங்களின் விளக்கவுரையியல், அறிவின் அல்லது உழைக்கும் குடிமக்களின் சுயவிடுதலை, அல்லது செல்வங்களின் உருவாக்கம் இதைப்போன்ற சில பெரும் கதையாடலுக்கான தெளிவான அழைப்பைச் செய்யும் (metadiscourse) பெரும் சொல்லாடலைப் (பார்வையைப்) பற்றிக் குறிப்பதுடன் தானே முறைமைவாய்ந்ததாய் ஆக்கிக்கொள்ளும் எந்த அறிவியலையும் குறித்துக்காட்டுவதற்கு நான் நவீனம் என்ற பதத்தை பயன்படுத்துவேன். ''
மிகச் சுருக்கிக் கூறவேண்டுமானால், பெரும்கதையாடலை நோக்கிய நம்பிக்கையீனமாக பின்நவீனத்துவத்தை நான் வரையறை செய்கிறேன். இந்த நம்பிக்கையீனம் சந்தேகமற்ற வகையில் விஞ்ஞானத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் ஒரு உற்பத்தியே.ஆனால் அந்த முன்னேற்றம் முறையே அதனை முன் ஊகம் செய்துகொள்கிறது. மாறாநிலைவாத (metaphysical) ஆராய்வுத் தத்துவத்தினதும் மற்றும் அதன் ஒருபாகமாக அதனைச்சார்ந்திருக்கும் பல்கலைக்கழக செயல்பாட்டினதும்- நிறுவனத்தினதும் நெருக்கடியே உத்தியோகபூர்வ அமைப்பினது பெரும்கதையாடலின் காலாவதிக்கு மிக குறிப்பிடும்படியான பொருத்தமாக இருக்கிறது. கதையாடல் வழிமுறை அதனது செயல்பாட்டினை, அதனது மாபெரும் கதாநாயகனை, அதனது மாபெரும் பயணத்தை, அதனது மாபெரும் நோக்கத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறது.'' (பின்நவீன நிபந்தனை, Jean-Francois Lyotard)
அனைத்து தத்துவ மற்றும் சமூக கருத்துப்பாடுகளும் சாத்தியமான வழிகளை மூலமாகக் கொண்டு சமூகம் மற்றும் உலகம் பற்றிய ஒரு பொதுவான விளக்கத்தை பெறுவதை பெரும்கதையாடலாக லியோத்தார் பார்க்கிறார். ஒரு விஞ்ஞான விளக்கமானது நனவானமுறையில் உலகை மாற்றுவதற்கான அடிப்படையை வழங்கக் கூடியதாக இருக்கும். இப்படியான எந்த கருத்துப்பாடுகளையும் லியோத்தார் கடுமையாக நிராகரிக்கிறார்.
இந்த விடயத்தில் பின்நவீனத்துவ வாதிகளில் இவர் (லியோத்தார்) மட்டும் ஜேர்மன் தத்துவஞானியான ஹெகலினை (''ஆன்மாவின் இயங்கியல்'') மாபெரும் குற்றவாளியாக பார்க்கவில்லை. ஹேகலின் மீதான பின்நவீனத்துவவாதிகளின் வெறுப்பானது (இந்த கேள்வியை மேலதிகமாக பின்னர் பார்ப்போம்) குறிப்பாக இயங்கியல் முறையை ஒரு அடிப்படையாகக் கொண்டு உலகப் பார்வையை அணைத்துக்கொண்ட அனைத்து ஜேர்மன் தத்துவ ஞானிகளின் மீதும் திருப்பப்படுகிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆல் சடவாதரீதியாய் மறுவேலை செய்யப்பட்ட ஹேகலின் இயங்கியல் சோசலிச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வடிவில் ஒரு சமூக சக்தியாய் வந்ததானது, பின்நவீனத்துவவாதிகளின் கண்களினால் அதற்கு சமமான குற்றமாய் சந்தேகிக்கப்படுகிறது.
பின்நவீனத்துவமும் ஸ்ராலினிசமும்
.ஸ்ராலினிசத்தையும் அதனது குற்றங்களையும் உண்மையான சோசலிசத்துடன் சமன்படுத்திக்கொண்டு லியோத்தார் மற்றும் ஏனைய பின்நவீனத்துவவாதிகளும் இருபதாம் நூற்றாண்டு மார்க்சிய ''பெரும்கதையாடலின்'' (''பகுத்தறிவு அல்லது உழைக்கும் குடிமக்களின் சுயவிடுதலை'') இறுதித்தோல்வியை குறித்துக்காட்டுகிறது என பிடித்துவைத்துக் கொண்டுள்ளார்கள். மேலும், முதலாளித்துவத்தை ஒரு பகுத்தறிவின் அடிப்படையில் (''செல்வத்தின் உருவாக்கம்'') அபிவிருத்தி செய்யலாம் என்ற சாத்தியத்தை வைத்திருக்கும் எந்தவொரு ஒட்டுமொத்த கோட்பாட்டின் மீதும் தமது அதிருப்தியை அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.
பின்நவீனத்துவத்தின் அபிவிருத்தியில் அரசியலின் பாத்திரத்தினை சோகலும் ப்ரிக்மொன்டும் குறைத்து மதிப்பிடுகிறபோதும், பிரான்சில் யுத்தத்திற்கு பின்னரான இடதுசாரி அரசியல் பற்றிய லியோத்தாரின் சொந்த அனுபவத்துடன் அவரது கோட்பாடுகளின் பரிணாமமானது நெருங்கியவகையில் பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதை ஒரு சுருக்கமான அவரது வாழ்க்கை சுயசரிதையே வெளிக்காட்டுகிறது.
1924 இல் Versailles இல் பிறந்த லியோத்தார் பாரீசில் சொர்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவமும் இலக்கியமும் கற்றார். ஒரு இளைஞனாக இருந்த அவர், தொழிற் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டதுடன், குறிப்பாக அல்ஜிரியாவில் ஒரு ஆசிரியராக பணியாற்றி வந்தபோது பிரென்ஞ்சு காலனித்துவத்தின் நேரடிக்காட்சிகளால் அவர் தீவிரமயப்படுத்தப்பட்டார். அல்ஜீரிய தேசிய இயக்கத்தை ஒடுக்கியதில் ஒத்துழைத்த ஸ்ராலினிசமயப்படுத்தப்பட்ட பிரென்ஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிராகரித்த லியோத்தார்த், Cornelius Castoriadis தலைமையிலான சோசலிசமும் காட்டுமிராண்டித்தனமும் என அழைக்கப்பட்ட ஒரு குழுவில் இணைந்து கொண்டார். இந்தக் குழு தம்மை ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள் என சொல்லிக்கொண்டபோதும், சோவியத் யூனியன் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வுகளை நிராகரித்ததுடன், அது ஒரு அரசு முதலாளித்துவப் பொருளாதாரமாகத்தான் இருந்துவருகிறது என அவர்கள் கூறிவந்தார்கள்.
1950களில் Castoriadis இன் வலது நோக்கிய சொந்த பரிணாமத்தை தொடர்ந்து, லியோத்தார் Workers Power (தொழிலாளர் சக்தி) என அழைக்கப்பட்ட ஒரு சஞ்சிகையை சுற்றி 1964 இல் தனது சொந்த இயக்கத்தை உருவாக்கும் பாகமாக, சோசலிசமும் காட்டுமிராண்டித்தனமும் என்ற குழுவில் இருந்து உடைத்துக்கொண்டார். அதன் பின்னர் இரண்டு வருடம் கழித்து, 1966 இல் அவர் புரட்சிகர அரசியலில் இருந்து முற்றாக உடைத்துக்கொண்டார். 1988 இல் ஒரு பேட்டியில் நேர்மையினை களைந்துவிட்டு அவர் இந்த போக்கை கடந்தகாலத்திற்குரியதாக வர்ணித்தார் : ''எனது வாழ்வின் ஒரு பகுதி முடிந்துவிட்டது, புரட்சியின் சேவையில் இருந்து நான் விலகிவிட்டேன், வேறுவிடயங்களை நான் செய்ய வேண்டும், எனது தோலை நான் பாதுகாத்துள்ளேன்.''
ஏனைய பல பின்நவீனத்துவவாதிகளும் இதைப்போன்றதொரு அரசியல் பரிணாமத்தைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள் . யூலியா கிறிஸ்த்தெவாவும் அவரது முதல் ஆய்வை ஜோன் போல் சார்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட பத்திரிக்கையான Les Temps Modernes (நவீன காலங்கள்) இல் தான் பிரசுரித்தார். இவர் பிரென்ஞ்சு ஸ்ராலினிசத்தின் ஆதரவாளராக இருந்ததுடன், அவருடைய வாழ்க்கைத் தொழிலின் முடிவுடன் மாவோயிசத்தின்பால் மனவிருப்புக் கொண்டார். ஒரு சில குறிப்பிடும்படியான ஏனைய பின்நவீனத்துவவாதிகளும் சார்த்தரின் அல்லது Ecole Normale Superior இல் அவரது மிக முக்கிய சகாவான Louis Althusser (பல வருடங்களாக பிரென்ஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தியல் பிரச்சனைகளுக்கு பொறுப்பான மத்திய குழு அங்கத்தவர் ) இன் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தார்கள்.
பின்நவீனத்துவ இயக்கத்தின் பல முன்னணி நபர்கள் ஒன்றில் ஸ்ராலினிச கட்சியின் அல்லது இடது தீவிரக் குழுக்களின் அங்கத்தவர்களாக இருந்தார்கள் அல்லது குறைந்தபட்சம் அதன் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்ற அவர்களின் மூலங்களினை ஒரு மேலெழுந்தவாரியான ஆய்வுகூட அம்பலப்படுத்தும். இந்த புத்தக விமர்சனம் என்ற வரையறைக்குள் யுத்தத்திற்கு பின்னரான பிரான்சின் பரந்த புத்திஜீவித தட்டின் சமூகவியல் அபிவிருத்தி பற்றி நீண்ட கவனம் செலுத்துவது சாத்தியமற்றது. ஆனால் அப்படியிருந்தபோதும் யுத்தத்திற்கு பின்னரான பிரான்சில் முன்னணி இடதுசாரி அமைப்பு என்ற வகையில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பிரமாண்டமான பாத்திரத்தினை வகித்தது என்பதை மிக மேலெழுந்தவாரியான ஆய்வுகூட சுட்டிக்காட்டுகிறது.
ஸ்ராலினிச கோட்பாடு பிரெஞ்சு புத்திஜீவித வாழ்வின் ஒரு முக்கிய பகுதியை உருவாக்கியது. மேலும் தொடர்ச்சியான சீரழிவு, யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஸ்ராலினிசப் பகுதியின் வலதுநோக்கிய திருப்பம், வியட்நாம் மற்றும் அல்ஜிரீயா தொடர்பானதில் கட்சியினது குற்றங்கள்,1968 இன் தீவிரமயப்பட்ட மாணவர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் காட்டிக்கொடுப்பு மற்றும் இறுதியாக சோவியத் அணியின் உடைவுகள் பிரமைகளையும், திசைவிலகலையும் பரப்பியதிலும் மற்றும் ஒரு புத்திஜீவித பகுதியின் வலதுநோக்கிய திருப்பத்தை விரைவுபடுத்தியதிலும் தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது.
அமெரிக்க எழுத்தாளர் Richard J. Bernstein, ''புதிய நட்சத்திரக்கூட்டம் '' என்ற அவரது புத்தகத்தில், குறிப்பாக ஹேகலையும் இயங்கியலையும் பேணுவதற்கு, சில மேலதிக பின்நவீனத்துவவாதிகளுடன் சண்டையை மேற்கொள்கிறார். ஆனால் அவர் அப்படிச் செய்யும் போது, பாசிசம் மற்றும் ஸ்ராலினிசத்தின் அனுபவங்களைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் புத்திஜீவித தட்டுக்கள் (பிரான்சில் மட்டுமல்ல) முகம் கொடுக்கும் பொதுவான அழுத்தத்தை பெர்ன்ஸ்டைன் தாமே தெளிவாக தொகுத்துரைக்கிறார் :
''அதிகமான பலாத்காரம், காட்டுமிராண்டித்தனம், படுகொலைகள் இருந்து வரும் இருபதாம் நூற்றாண்டை அனுபவித்துவரும் யாரும் சுதந்திரத்தின் முற்போக்கான வேலைத்திட்டம் என்ற வரலாற்றின் ஒரு கதையாடல் (narrative) பற்றி சந்தேகம் கொள்ளாமால் இருக்க முடியும் என்பது கடினமானதாகும். ஓஸ்விற்ஷ் மற்றும் குலாக்குக்கு பின்னர், ஊக அடிப்படையில் புரிந்து கொள்ளலின் ஊடாக யதார்த்தத்துடன் சமரசம் அடைவதில் சந்தேகம் கொண்டிருப்பதையோ மற்றும் அவநம்பிக்கை கொண்டிருப்பதையோ ஒருவர் தவிர்க்க முடியாது. 'வீட்டில்' இருத்தல் என்ற முழு மாறாநிலைவாதமும் இன்றைய உலகில் இப்பொழுது போலியானதாகத் தெரிகிறது." (புதிய நட்சத்திரக்கூட்டம்,ப.306).
Czech ஐனாதிபதி,Vaclav Havel கூட நவீன சிந்தனையின் நெருக்கடிக்கும் ஸ்ராலினிசத்தின் உடைவுக்கும் இடையிலான தொடர்பை அவரது சொந்த வழியில் பிரதிபலிக்கிறார். அவர் சொல்கிறார், ''கம்யூனிசத்தின் வீழ்ச்சி, நவீன சிந்தனை--உலகம் புறநிலைரீதியாக விளங்கிக்கொள்ளக் கூடியது மற்றும் பெற்றுக்கொண்ட அறிவானது முழுமையானவகையில் பொதுமையாக்கப்பட முடியும் என்ற தருக்கத்தினை அடிப்படையாக கொண்ட சிந்தனை--ஒரு இறுதி நெருக்கடிக்கு வந்துவிட்டதன் ஒரு அறிகுறியாக கருதப்பட முடியும் '' (மேற்கோள், புத்திஜீவித மோசடிகள்,ப.181)
பின்நவீனத்துவவாதிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்.
''இயக்க ஆற்றலற்ற நிலையை'' (inertia) போற்றிப் பாடிக்கொண்டிருப்பதுடன், மறுத்தலியல் மற்றும் அவநம்பிக்கைவாதத்திற்குள் பின் நவீனத்துவவாதிகளின் ஒரு பிரிவு மூழ்கிப்போய்விட்டது என்பது உண்மைதான். 19ம் நூற்றாண்டு பிற்போக்கு ஜேர்மன் தத்துவத்துடன் தாங்கள் பற்றிக் கொண்டிராததற்காக இன்றைய பிரெஞ்சு புத்திஜீவிகள் மன்னிப்புக் கோர இருக்கிறார்கள். Luc Ferry மற்றும் Alain Renaut ஆகிய இரண்டு புத்திஜீவிகளும், நாம் ஏன் நீட்ஸ்சியன்களாக இருக்கவில்லை என தலையங்கம் இடப்பட்ட ஒரு புத்தகத்தை எழுதும் அளவிற்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், அடிப்படையான சமூக மாற்றத்தை செய்யலாம் என்பதையிட்டு ஜயுறவுடன் இருந்தபோதும், பின்நவீனத்துவவாதிகள் அவர்களது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை செய்து கொண்டுள்ளார்கள் என்ற உண்மையைப் புறக்கணிப்பது பிழையானது.
பின்நவீனத்துவாதிகளின் கருத்தின் படி, அனைத்துப் ''பெரும்கதையாடல்களும்'' அதாவது, ஒரு முற்போக்கான வழியில் உலகத்தை மாற்றுவதற்கான புரிந்துகொள்ளக் கூடிய முயற்சிகள் படு தோல்வியடைந்துவிட்டன. சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி என்ற அடிப்படையில் தொழிலாள வர்க்கம் மதிப்பிழந்துவிட்டது மற்றும் அடிப்படையில், சமூகத்தை நல்லநோக்கத்திற்காக மாற்றுவது சாத்தியமற்றது என்பதை ஸ்ராலினிசத்தின் உடைவு எடுத்துக்காட்டுகிறது என்பதாகும்.
மாற்றீடாக தொடர்ந்து இருக்கும், பின்நவீனத்துவ இயக்கத்தின் இன்னொரு குழுவின் தலைவரான Michel Foucault ஆல் ஒரு வேளை, மாற்றீடானது சிறப்பான வகையில் உச்சரிக்கப்பட்டிருக்கிறது. அவர் எழுதுகிறார், ''மாபெரும் மறுப்புக்கான இடமேதும் இங்கில்லை, புரட்சியின் ஆன்மாவோ, அனைத்து கிளர்ச்சிகளின் மூலமோ அல்லது தூய புரட்சிகர விதியோ இங்கில்லை. பதிலீடாக எதிர்ப்பின் பன்முகத்தன்மை அங்கு இருக்கிறது. அவைகளில் ஒவ்வொன்றும் ஒரு பிரத்தியேகமான தன்மையுடன் இருக்கின்றன.''
Deleuze, Guattari and Lyotard உடன் இணைந்து Foucault நுண்ணிய-அரசியல் மற்றும் நுண்ணிய போராட்டங்களுக்கான அபிவிருத்தியின் அவசியத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார். இப்படியான ஒரு மூலோபாயம், தனியொரு விடயங்களுக்கான அரசியல் போக்குகளுக்கு -- பிரிவினைவாதிகள், ஒவ்வொரு வகையறாக்களைச் சேர்ந்த தேசியவாதிகள், சுற்றுச் சூழல்வாதிகள், பெண்ணிலைவாதிகள் மற்றும் இவ்வாறானோருக்கு வக்காலத்துவாங்குவதற்கான ஒரு தெளிவான அழைப்பைக் கொண்டிருக்கிறது.
சோகல் மற்றும் ப்ரிக்மொன்ட் பார்வையின் பலவீனங்கள்
பின்நவீனத்துவவாதிகளின் மீதான அவர்களது விமர்சனத்தில் கூர்மையிருந்தபோதும், சோகலும் ப்ரிக்மொன்டும் அவர்களது எதிராளிகளின் அடிப்படையான புள்ளியான இயங்கியல் மேலான வெறுப்பில் ஒத்துப்போகிறார்கள். மிக பிரசித்தி பெற்ற பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் இயங்கியல் மேலான அவர்களது வெறுப்பை இரகசியமாய் வைக்கவில்லை,'' எதையும் விட அதிகமாக ஹேகலியத்தையும், இயங்கியலையும் நான் வெறுக்கிறேன்'' ("நான் ஏற்றுக்கொள்வதற்கு இனி எதுவுமில்லை'', Semiotext, Giles Deleuze, 1977'')
இயங்கியல் மேலான (மற்றும் வாழ்வு!) வெறுப்பானது கீழ்காணும் இரகசிய வார்த்தைக்குள் வெளிப்படுத்தப்படுகிறது, ஆனால் இது பொருத்தமான எடுத்துக்காட்டாக இல்லை. Felix Guattari இடம் இருந்து ஒரு மேற்கோள், "இருத்தலானது, எல்லை பிரிக்கப்படாத நிகழ்ச்சிப் போக்கு என்ற வகையில், ஒரு பிரத்தியேகமான எந்திரங்களுக்கிடையிலான செயல்பாடாக இருக்கிறது. அது ஒருமுகப்படுத்தப்பட்ட இருத்தல் சார்ந்த தன்முனைப்புக்களை முன்னிலைப்படுத்தல் மீது தானே மட்டுமீறித்திணிக்கிறது. அத்துடன், இந்த எல்லை பிரிக்கப்படாமைகளுக்கு பொதுமைப்படுத்தப்பட்ட சொற்றொடரியல் இல்லை என்பதை திரும்பவும் கூறுகிறேன். இருத்தலானது இயங்கியல் அல்ல, பிரதிநிதித்துவப்படுத்தலும் அல்ல. அது வாழ்வதற்கு கடினமானது!" (புத்திஜீவித மோசடிகள், ப.158)
சோகலும் ப்ரிக்மொன்டும் கூட இயங்கியலை எதிர்க்கிறார்கள். அதன் விளைவாக, அவர்களது சொந்த விஞ்ஞான வழிமுறை விளக்கப்படுத்தல்களும் கூட பலவீனமானவையாக இருக்கின்றன என சுருக்கமாய் கூறலாம். அன்றாட கருத்துப்பாடுகளுக்கும் விஞ்ஞான கோட்பாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியை வலியுறுத்த முயல்வதன் மூலம், விஞ்ஞான வழிமுறைகளானது ''அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்தப்படும் அறிவுத்தன்மையில் இருந்து பெரிதும் வித்தியாசமானதல்ல''(ப.54) என அவர்கள் வாதிக்கிறார்கள், இருந்தபோதும், பின்னர் அவர்கள் இந்தக் குறிப்பை நிபந்தனையின் கீழ் , '' இந்த உறவை அதிக தூரத்திற்கு எடுத்துச் செல்வது அப்பாவித்தனமானதாக இருக்கும்''(ப55) எனக் கூறுகிறார்கள்.
உண்மையில், விஞ்ஞான விதிமுறை மற்றும் கண்டுபிடிப்பு பொது அறிவின் தர்க்கரீதியான விரிவாக்கம் அல்ல என்ற உண்மைக்கு விஞ்ஞான அபிவிருத்தியின் வரலாறு சான்றாக இருக்கிறது. இந்த நூற்றாண்டின் முதல் சகாப்தம் அணுவின் விஞ்ஞான விளக்கத்தின் அபிவிருத்தியால் தூண்டிவிடப்பட்ட கருத்தியல் சர்ச்சையின் கலகத்தைக் கண்டது. மின் ஆற்றல்களின் தொகுப்பால் ஆன அணுவிற்கு சார்பான, மரபுவழி அடிப்படைத்துகளான, ஒரு திடப் பொருளின் "மறைவு" ஆனது, சடத்தின் இருப்பிற்கும் அதேமாதிரி உலகின் புறநிலை அறிவிற்கான மனிதனின் ஆற்றலுக்கும் முன்னால் ஒரு கேள்விக்குறியை இடுவதற்கு விஞ்ஞானிகளையும், மெய்யியலாளர்களையும்(தத்துவயிலாளர்களையும்) (Mach, Bogdanov) இட்டுச்சென்றது.
பொருள்முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற புத்தகத்துடன் 1908 இல் லெனின் விவாதத்தில் கலந்துகொள்கிறார். அதில், சடரீதியான (பொருளாயத)உலகின் புறநிலை இயல்பையும் ,விஞ்ஞானத்தின் அடிப்படையில் உலகினை சரியாக அறிவதற்கான சாத்தியத்தையும் மனிதன் கொண்டிருக்கிறான் என்பதைப் பேணுவதற்கு அவர் மெய்யியல் சார்ந்த சார்புநிலைவாதத்துடன் போராடினார். அதே நேரம், அணுபற்றிய பொது அறிவு கருத்துப்பாட்டிற்கும் புதிய விஞ்ஞான ஆராய்ச்சியில் இருந்து வளர்ச்சிபெறும் வெளிப்படுத்தல்களுக்கும் இடையிலான முரண்பாடு, மனித சிந்தனை மற்றும் சடப்பொருள் பற்றிய இயங்கியல் விளக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என அவர் தெளிவுபடுத்தினார்.
மெய்யியல் சார்ந்த சார்புநிலைவாத விடயம் புதிய சோவியத் அரசின் கலாச்சார, கருத்தியல் போக்காளர்களுக்கு மத்தியிலும் கூட சர்ச்சைக்குரிய விவாதப்பொருளாய் இருந்தது. பியூச்சரிஸ்ட் இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதிநிதிகளினால் எழுதப்பட்ட தத்துவ படைப்புகளுக்கு பதிலளிக்கையில், செல்வாக்கு மிகுந்த சிகப்பு கன்னி நிலம் (Red Virgin Soil) என்ற இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியரான அலக்ஸ்சான்டர் வொறன்ஸ்கி, Chuzhak மற்றும் ஏனையவர்களின் படைப்புகள் பற்றி கருத்துரைத்ததாவது:
''இவைகள் அனைத்தும் மார்க்ஸ், பிளெக்கானவ் மற்றும் லெனினது இயங்கியலுடன் பொதுவில் எதையும் கொண்டிருக்கவில்லை..இவைகளுக்கும் மேலாய், ஒரேவகையான படைப்புக்களில் முழுமையான சார்புநிலைவாதக் காற்று வீசுவதுடன், உறுதிப்பாட்டின் அனைத்து அறிவையும் மறுதலிக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளான நாமும் சார்பியல்வாதிகள் தான் ஆனால் எமது சார்பியல்வாதம் முற்றுமுழுமையானதல்ல மாறாய், சார்பானது.... தோழர் Chuzhak, அனைத்தும் ஓடுகிறது, அனைத்தும் மாறுகிறது என உறுதியாகக்கூறிய Heraclitus இன் படி விவாதிக்கவில்லை, மாறாய், 'அனைத்தும் ஓடுகிறது, அனைத்தும் மாறுகிறது' என்பதனால் ஒரே நீரோட்டத்தில் இரண்டு தடவை கால்வைப்பது சாத்தியமற்றது என பரிந்துரை செய்த Zeno இன் படி விவாதிக்கிறார். Heraclitus ஒரு இயங்கியல் வாதி, Zeno மாறாநிலைவாத (metaphysical) சார்பியல்வாதியாக இருந்தார். முதலாளித்துவ அறிஞர்களின் கூடாரத்தில் இப்போது இப்படிப்பல சார்பியல்வாதிகள் உள்ளார்கள்'' (அலெக்்சான்டர் வொறன்ஸ்கி, வாழ்வையறிதலாக கலை.ப.107)
இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர் நான்காம் அகிலத்திற்குள் ஒரு குட்டிமுதலாளித்துவ போக்குக்கு எதிரான போராட்டத்தில் பொருள்முதல்வாத இயங்கியலின் விரிவான விளக்கத்திற்கு லியோன் ட்ரொட்ஸ்கி தனது சக்திவாய்ந்த சொந்தப் பங்களிப்பைச் செய்தார். இளம் லியோத்தாரின் சில குறிப்பிட்ட கருத்துப்பாடுகளை கொண்டிருந்த அன்றைய எதிர்ப்பு அணியின் முன்னணி கோட்பாட்டாளரான James Burnham, சோவியத் யூனியனில் ஒரு முதலாளித்து வடிவம் மீளமைக்கப்பட்டுள்ளது என வாதித்தார்.
ட்ரொட்ஸ்கி தனது இயங்கியலின் சுருக்கமும் பொருள் நிறைந்ததுமான விரிவானவிளக்கத்தை கீழ்க்காணும் எச்சரிக்கையுடன் முடிக்கிறார் : '' தற்கால விஞ்ஞான சிந்தனையில் உள்ள இயக்கத்தின் விதிகளை இயங்கியல் தர்க்கம் வெளிப்படுத்துகிறது. பொருள்முதல்வாத இயங்கியலுக்கு எதிரான போராட்டமானது குட்டிமுதலாளித்துவ வாதிகளின் கடந்த காலத்தையும், பழமை வாதத்தையும், பல்கலைக் கழக வாதிகளின் தற்பெருமை வாதத்தையும், அத்துடன் அது..... மறுபிறப்பு தொடர்பான சிறு நம்பிக்கைப் பொறியையும் வெளிப்படுத்துகிறது'' (லியோன் ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்தைப் பேணுவதில்)
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்கள்-- ரஷ்யாவில் சோசலிச அரசியல் மற்றும் புத்திஜீவித எதிர்ப்புக்களை 30களில் உடல்ரீதியாக அழித்தது, அதனுடன் இணைந்து தேசியவாதத்தையும் மற்றும் மார்க்சிய இயங்கியலையும் முற்றும் தவறான வழியில் அது அணைத்துக்கொண்டது--சோசலிச தொழிலாளர் இயக்கத்தினை சீரழித்ததுடன், சார்பியல்வாதம் மற்றும் அறிவீனத்தையும் ஊக்குவித்ததன் மையமாக இருந்தது.
சார்பியல்வாதிகளின் படைதான் சக்திவாய்ந்த முறையில் பின்நவீனத்துவத்தின் தற்கால சிந்தனைப்பாடசாலையின் பரவுதலை விரிவாக்கியது. அதேநேரம் சிந்தனையில் மிக புதியதை தாம் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் அந்த இயக்க அங்கத்தவர்களின் கூற்றில் வஞ்சகத்தையும், சீரழிவையும் தவிர வேறொன்றும் இல்லை.
அவர்களது தத்துவார்த்த கதாநாயகர்கள், முக்கியமாக அறிவொளி கால ஆண்டுகளின் 19 நூற்றாண்டு எதிராளிகளான Nietzsche, Schopenhauer, Kierkegaard ஆவார்கள். கருத்துப்பாடுகளிலும், கருத்துக்களிலும் புதியனவை சுட்டிக்காட்டுவதற்கு மாறாக, பின்நவீனத்துவவாதிகளின் வித்தியாசமான ஆய்வுகளும், உரைப் பகுதிகளும் உண்மையான விஞ்ஞான விதிமுறைக்கான ஒரு அவமதிப்பையும், கலாச்சார அவநம்பிக்கைவாதம் , தனிமனிதவாதம், இருண்மைவாதத்தைப் பரவவிடுவதுடன் வரலாற்று உண்மையினை மறுத்தலானது ஒரு கருத்தியல்ரீதியான முட்டுச் சந்துக்கு வந்துவிட்டதையும், நீண்டகாலத்திற்கு முன்னரே நீராவியாய் வெளியேறி்ப்போன ஒரு சமூக ஒழுங்கினது திரிக்கப்பட்ட---பொய்மைப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பையும் சுட்டிக்காட்டுகிறது.
சோகல் மற்றும் ப்ரிக்மொன்டின் அணுகுமுறையில் பலவீனங்கள் இருந்தபோதும், இருவரும் கல்விநிறுவன நிலையினை உடைத்துவிட்டு பின்நவீனத்துவத்தின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள். அவர்களது இந்தப் புத்தகம் பரந்துபட்ட மக்களால் வாசிக்கப்படவேண்டும்.