ஏப்பிரல் 8
நடந்த பாராளுமன்றத் தேர்தல் லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) சிதைவை
மீண்டும் கோடிட்டுக் காட்டியுள்ளது. 1940கள்
மற்றும் 1950களில்,
ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தை அடித்தளமாகக்
கொண்டிருந்த இந்தக் கட்சி,
தொழிலாளர்களில் மிகவும் போராளிக் குணம் மிக்க மற்றும் நனவான பகுதியினருக்கு
தலைமை வகித்தது. 1964ல்
அந்தக் கொள்கைகளை காட்டிக்கொடுத்துவிட்ட ல.ச.ச.க.,
இன்று, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விசுவாசமான
கோஷ்டியாக இயங்கும் காய்ந்து போன பிணமாகியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் செய்தது போலவே,
ல.ச.ச.க. இந்தத் தேர்தலிலும் தனது சொந்த பாதாகையின்
கீழ் போட்டியிடாமல் சுதந்திர முன்னணியின் பட்டியலிலேயே போட்டியிட்டது.
அதற்கு ஐந்து மாவட்டங்களில் ஐந்து வேட்பாளர்களை நிறுத்த அனுமதி கிடைத்ததோடு,
வை.ஜி. பத்மசிறி என்ற ஒப்பீட்டளவில் பிரசித்தி
பெற்றிராத ஒருவர் மட்டுமே கேகாலை மாவட்டத்தில் வெற்றிபெற்றார். சுதந்திர
முன்னணியுடனான உடன்படிக்கையின் பாகமாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
(ஸ்ரீ.ல.சு.க.), தற்போதைய
ல.ச.ச.க. தலைவர் திஸ்ஸ விதாரனவுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று
ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னைய இராஜபக்ஷ அரசாங்கத்தில் விஞ்ஞான
மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த விதாரன, இம்முறை அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கும் ஆரம்ப
நடவடிக்கையில் இருந்த புறக்கணிக்கப்பட்டுள்ளார். கட்சியால்
புறக்கணிக்கப்பட்டதைப் பற்றி இராஜபக்ஷவிடம் புலம்பிய பின்னர்,
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின்
மாநாட்டில் இருந்து ஏப்பிரல் 30ம்
திகதி ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் வித்தாரனவுக்கு ஒரு அமைச்சுத்
தொழில் கிடைக்கலாம் என தோன்றுகிறது.
இராஜபக்ஷவின் தொழிலாளர் வர்க்க விரோத
கொள்கைகள் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகால குற்றங்கள் அனைத்தையும் ல.ச.ச.க.
ஆதரித்ததில் இந்த கெஞ்சும் அடிமை நிலை பிரதிபலித்தது. கடந்த மே மாதம்
ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மரணத்தையும்,
அதே போல் புலிகளின் தோல்வியின் பின்னர் ஆண்கள்,
பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக இரண்டரை
இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் அடைத்துவைக்கப்படுவதையும்
விளைவாக்கிய, பிரிவினைவாத
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட
யுத்தத்தையும் ல.ச.ச.க. ஆதரித்தது.
1964ல் சிறிமா
பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டரசாங்கத்தில்
நுழைந்துகொண்டதன் மூலம் ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளை ல.ச.ச.க.
காட்டிக்கொடுத்ததில் இருந்தே, இனவாத யுத்தத்துக்கான அதன் ஆதரவு நேரடியாக
ஊற்றெடுக்கின்றது. சோசலிச அனைத்துலகவாதத்துக்காகப் போராடியதோடு,
தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை
உத்வேகத்துடன் பாதுகாத்ததுடன், ஸ்ரீ.ல.சு.க. யின் இனவாத "சிங்களம் மட்டும்" என்ற மொழிக்
கொள்கையை எதிர்த்த இந்தக் கட்சி, தன்னுடைய முன்னைய சோசலிசப் புரட்சி வேலைத் திட்டத்தை
கைவிட்டு, பாராளுமன்றவாதம்
மற்றும் பண்டாரநாயக்க அரசாங்கத்தின் சிங்கள பேரினவாதத்தையும்
அணைத்துக்கொண்டது.
ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பானது,
மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேலின்
தலைமையில் நான்காம் அகிலத்தின் சந்தர்ப்பவாத சர்வதேச செயலகத்தினால் ஒவ்வொரு
அடியிலும் ஊக்குவிக்கப்பட்ட, நீண்டகால தேசியவாத சீரழிவின் விளைவாகும். அதன் முழு
விளைவுகளும் 1970ல்
ஆட்சிக்கு வந்த இரண்டாவது பண்டாரநாயக்க அரசாங்கத்தில் வெளிப்படையானது.
1971ல் தவறாக
வழிநடத்தப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) எழுச்சியை
ஈவிரக்கமின்றி நசுக்குவதற்கு ல.ச.ச.க. ஆதரவளித்தது. இதன்போது,15,000
சிங்கள கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
ல.ச.ச.க. தலைவர்கள் பண்டாரநாயக்க
அரசாங்கத்தில் பிரதான அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தனர். பெருந்தோட்டக்
கைத்தொழில் மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சராக பொறுப்பு வகித்த
கொல்வின் ஆர் டி சில்வா,
சிங்களத்தை அரச மொழியாகவும் பௌத்தத்தை அரச மதமாகவும் அங்கீகரித்த 1972 அரசியலமைப்பை வரைவதற்கு
பொறுப்பாக இருந்தார். ஏனைய வடிவிலான உத்தியோகபூர்வ தமிழர்-விரோத
பாகுபாடுகளுடன் சேர்த்து இந்த அரசியலமைப்பு இறுதியில் யுத்தத்துக்கு
வழிவகுத்தது. நிதி அமைச்சராக இருந்த என்.எம். பெரேரா,
1974-75 உலக பொருளாதார பின்னடைவின் சுமைகளை
உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்தியதில், எண்ணிலடங்கா சிரமங்கள் மற்றும் துன்பங்கள் அவர்கள் மீது
சுமத்தப்பட்டன.
1975ல் கூட்டணியில்
இருந்து ல.ச.ச.க. தூக்கி வீசப்பட்டதோடு, ஸ்ரீ.ல.சு.க. போலவே, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியை (யூ.என்.பி.) ஆட்சிக்குக்
கொண்டுவந்த 1977 தேர்தலில்
அழிவுகரமான தேர்தல் தோல்வியை அது சந்தித்தது. யூ.என்.பி. சந்தை-சார்பு
மறுசீரமைப்பை அமுல்படுத்தியதோடு, சமூக பதட்டங்கள் அதிகரித்த நிலையில்,
புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்குள் தீவை
மூழ்கடித்தது. இந்த யுத்தத்தையும் ல.ச.ச.க. ஆதரித்தது. அதைத் தொடர்ந்து,
1994ல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை
ஆட்சிக்குக் கொண்டுவந்த ஸ்ரீ.ல.சு.க. உடனான புதிய கூட்டில் ல.ச.ச.க.
சேர்ந்துகொண்டது. அப்போதிருந்து அது ஏறத்தாழ ஒரு சுயாதீனமான கட்சியாக
இருப்பதை நிறுத்திக்கொண்டது.
மத்திய கொழும்பில் உள்ள அதன் பாதாள
தலைமையகத்தைப் போல், ல.ச.ச.க. ஒரு வெற்றுக் கூடே தவிர வேறொன்றுமில்லை. தமது கொள்கைகளை கைவிடும்
வரை புரட்சிகர ட்ரொட்ஸ்கிசத்துக்காகப் போராடிய அதன் தலைவர்களில் பெரும்
பகுதியினர் உயிரிழந்துவிட்டனர். தலைவர்களின் புதிய பரம்பரை பாராளுமன்ற
சூழ்ச்சிக் கொள்கைகளில் முழுமையாக ஊறிப்போயுள்ளது. ஒரு வைத்தியரும்
என்.எம். பெரேராவின் உறவினருமான திஸ்ஸ விதாரன, 1950களில்
ல.ச.ச.க. யில் இணைந்து கொண்டதோடு பெரேராவுக்கும் உதவினார். அவர் கட்சியின்
ஒரே பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் தலைவருமாக ஆவதற்கு 2004ல் தேசியப் பட்டியல் மூலம்
பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.
ல.ச.ச.க. தலைமைத்துவம் துல்லியமாக
ஸ்ரீ.ல.சு.க. யின் சட்டைப்பைக்குள் இருக்கின்றது. அதன் அரசியல் குழுவில்
13 உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்களில் அமைச்சர் பதவியை மீண்டும் பெற உள்ளவராகத் தோன்றும் வித்தாரனவைத்
தவிர, ஏனைய உறுப்பினர்களும்
சம்பளம் பெறும் அரசாங்க "ஆலோசகர்களாவர்". கட்சியில் 700 உறுப்பினர்கள் இருப்பதாகக்
கூறிக்கொண்டாலும், கட்சிக்
கூட்டங்களுக்கு 150க்கும்
மேல் வரமாட்டார்கள். அதன் சமசமாஜய என்ற "மாத" பத்திரிகை இடைவிடாது
பிரசுரமாவதில்லை.
ஜனாதிபதி இராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை என
சொல்லப்படுவதற்கும் அப்பால் தனக்கென சொந்த வேலைத் திட்டம் இருப்பதாக
ல.ச.ச.க. பாசாங்கு செய்வது கூட இல்லை. சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு
வழங்கிய ஒரு பேட்டியில்,
புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி விளக்கியதாவது:
"எனது தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான தொணிப்பொருள் ல.ச.ச.க. யின்
கருத்தியலாகவும் மற்றும் மஹிந்த சிந்தனை தரிசனத்துக்கு மிகவும் பொருத்தமான
கொள்கையுமாக இருந்தது."
முன்னர் தனியார் மற்றும் பொதுத் துறையில்
ல.ச.ச.க. தொழிற்சங்கங்களை கொண்டிருந்தது. அவற்றுக்கு நீண்ட போராட்ட
வரலாறும் இருந்தது. அவற்றில் பல முழுமையாக காணாமல் போயுள்ளதோடு எஞ்சியுள்ள
சிலவும் பெயர் மட்டுமே என்பதற்கு கொஞ்சம் மேலாக சில நூறு உறுப்பினர்களைக்
கொண்டுள்ளன. ல.ச.ச.க. தொழிற்சங்கங்கள் இருந்தவரை, அவை தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க
அரசாங்க தொழிற்சங்க கூட்டுக்களுக்கு உதவும் முற்றிலும் துரோகப் பாத்திரத்தை
இட்டு நிரப்பின.
கட்சியின் முழுமையான பொறிவை
தவிர்த்துக்கொள்வது எப்படி என்று ல.ச.ச.க. தலைமைத்துவத்தில் கலந்துரையாடல்
ஒன்று தொடர்கின்றது. அமைச்சுப் பதவிகளை பெறாமல் அரசாங்கத்தின் மோசமான
ஜனநாயக உரிமை மீறல்கள் பற்றி மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை
முன்வைப்பதன் மூலம் அரசாங்கத்தில் இருந்து கட்சி தூர விலகியிருக்க வேண்டும்
என ஆலோசனை கூறி ஒரு ஆண்டுக்கு முன்னர் தலைமைத்துவத்துக்கு லால் விஜயநாயக்க
கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஒரு "ஜனநாயகவாதியாக" போலியாக
காட்டிக்கொள்வதற்காக கடந்த ஜனவரியில் வலதுசாரி யூ.என்.பி. யின்
"சுதந்திரத்துக்கான மேடையில்" அதனுடன் விஜயநாயக்க இணைந்துகொண்டார்.
இராஜபக்ஷவின் சீற்றத்துக்கு பயந்து,
ல.ச.ச.க. உடனடியாக கட்சியின் மத்திய குழு உறுப்புரிமையில்
இருந்து விஜயநாயக்கவை இடை நிறுத்தியது.
தனது நற்பேரை தூக்கி நிறுத்துவதற்காக,
ஜனநாயக இடது முன்னணி மற்றும் மக்கள் தேசிய விடுதலை
முன்னணி உட்பட ஏனைய முன்னாள் இடது குழுக்களுடன் சோசலிச மக்கள் முன்னணியை
(சோ.ம.மு.) அமைத்துக்கொள்வதில் தனது நீண்டகால பங்காளியான ஸ்ராலினிச
கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்துகொண்டது. கடந்த வாரம் ல.ச.ச.க.
தலைமையகத்தில் நடந்த கூட்டத்தை அடுத்து, ஜனநாயக இடது முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கு
ஒரு அமைச்சுப் பொறுப்பைக் கொடுக்குமாறு ஸ்ரீ.ல.சு.க. யிடம் கெஞ்சுவதற்கு
முடிவெடுத்ததில் சோ.ம.மு. யின் பாராளுமன்றவாத திசையமைவு கோடிட்டுக்
காட்டப்பட்டது.
இத்தகைய முன்னாள் இடதுகளிடம் இருந்து
எந்தவொரு சேவையும் இனி இராஜபக்ஷவுக்கு தேவைப்படாவிட்டால்,
இது அதன் பிற்போக்கு கொள்கைகளுக்கு ஒரு கந்தல்
மாறுவேடத்தை கொடுக்க மட்டுமே உதவும். முன்னைய அரசாங்கத்தில் ல.ச.ச.க.
தலைவர் விதாரனவின் பிரதான வேலை, விஞ்ஞான அமைச்சராக இருப்பது அல்ல,
மாறாக, தமிழ் சிறுபான்மையினரின் துன்பங்களுக்கு ஒரு "அரசியல்
தீர்வை" தயார் செய்வதற்காக 2006
மே மாதம் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கமிட்டியின் தலைவராக
இருப்பதேயாகும். விதாரன பிரேரணைகளுடன் முன்நகர்ந்த அதே வேளை,
இராஜபக்ஷ இராணுவத்தை தயார் செய்து,
2002 யுத்த நிறுத்தத்தை வெளிப்படையாக மீறி 2006 ஜூலையில் நாட்டை மீண்டும்
யுத்தத்துக்குள் மூழ்கடித்தார்.
கடந்த வாரம் நடந்த சோ.ம.மு. கூட்டத்தில்,
அரசாங்கத்தைப் பாராட்டிய விதாரன,
"இந்த நாட்டில் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஒரு
மிகச் சிறந்த ஆணையை கொடுத்துள்ளனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான
போராட்டத்தை தொடர்வதற்கே மக்கள் இந்த ஆணையை கொடுத்துள்ளனர். மக்களை இது
பற்றி விழிப்பாக இருக்கச் செய்வதோடு எமக்கும் இந்தப் பொறுப்பு இருக்கின்றது,"
என பிரகடனம் செய்தார். ல.ச.ச.க. பல தசாப்தங்களுக்கு
முன்னதாகவே ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எந்தவொரு உண்மையான போராட்டத்தையும்
கைவிட்டுவிட்டது. இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி அமெரிக்காவும்
ஐரோப்பிய ஒன்றியமும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் செய்யும்
விமர்சனங்களை எதிர்ப்பதற்காக வரையப்பட்ட இராஜபக்ஷவின் பிரச்சாரத்தையே
வெறுமனே விதாரன மீண்டும் உச்சரிக்கின்றார்.
விதாரன அமைச்சரவை பதவிக்காக ஏங்கிக்
கெஞ்சுகின்ற நிலையில்,
இராஜபக்ஷ அரசாங்கம்,
ஆழமடைந்துவரும் பூகோள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சர்வதேச நாணய
நிதியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தத்
தயாராகிக்கொண்டிருக்கின்றது. கொழும்பில் உள்ள ஏனைய முன்னாள் இடது
தட்டுக்களைப் போலவே,
விதாரனவும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு
சுயாதீன இயக்கத்தையும் நசுக்க முயற்சிப்பதற்காக ல.ச.ச.க. யிடம்
எஞ்சியிருப்பதையும் ஒன்று திரட்டுவார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), ல.ச.ச.க. யின் வரலாற்றுக் காட்டிக்கொடுப்புக்கு எதிரான
அரசியல் போராட்டத்தில் 1968ல்
ஸ்தாபிக்கப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப்
பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, எதிர்வரும் வர்க்கப் போராட்டங்களில் தொழிலாள வர்க்கம்
அதனது அடிப்படை உரிமைகளை காத்துக்கொள்ளக்கூடிய ஒரே அடித்தளத்தை வழங்கும்
ட்ரொட்ஸ்கிசக் புரட்சிகரக் கொள்கைகளை பின்பற்றும் ஒரே கட்சியாகும்.