World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil

Full rights for all immigrants! For the international unity of the working class!

அனைத்துக் குடியேறுபவர்களுக்கும் முழு உரிமைகள்! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக!

Statement of the Socialist Equality Party
30 April 2010

Back to screen version

சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ம் தேதியன்று தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏப்ரல் 23ம் தேதி அரிசோனாவில் சட்டமாகக் கையெழுத்திடப்பட்டள்ள குடியேற்ற எதிர்ப்பு சட்டவரைவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். சோசலி சமத்துவக் கட்சி இந்த ஆர்ப்பாட்டங்களை வரவேற்கிறது. மேலும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக ஒரு வெகுஜன சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியமைக்க அழைப்பு விடுகிறது.

அரிசோனாவின் செனட் சட்டவரைவு 1070 ஒரு ஜனநாயக-விரோத, இனவெறிச் சட்டம் ஆகும். ஆவணமற்ற குடியேறுபவர்களாக இருக்கக்கூடும் என்ற வெறும் "நியாயமான சந்தேகம்" இருந்தாலே பொலிஸாருக்கு எந்த நபரையும் கைது செய்யும் அதிகாரத்தை இது கொடுக்கிறது. அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்பட அடையாளம் இல்லாமல் இருப்பவர்கள் கைது செய்யப்படலாம், சிறையில் வைக்கப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம். இச்சட்டம் ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு தங்க இடம் கொடுப்பதைக் குற்றமாக்கியுள்ளதுடன், உள்ளூர் அரசாங்கங்கள் இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கோருகிறது.

மிகக் கடுமையாக இருந்தபோதிலும், அரிசோனாச் சட்டம் ஒரு நேர் வழியிலிருந்து விலகல் அல்ல. பல நகரங்களும் மாநிலங்களும் ஆவணமற்ற தொழிலாளர்களையும் -- அவர்களுடைய அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளையும் கூட, ஏனெனில் அரசியல் அமைப்பின்படி அவர்களுக்கு முழு குடி உரிமை உண்டு -- இலக்கு கொள்ளும் சட்டங்களை இயற்றியுள்ளனர் அல்லது இயற்றுவதற்கு பரிசீலனை செய்கின்றனர். குடியரசுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் டங்கன் டி. ஹன்டர் சமீபத்தில் சான் டியாகோவில் ஒரு நகர மன்றக் கூட்டத்தில் அமெரிக்காவில் பிறக்கும் ஆவணமற்ற குடியெறுபவர்களில் குழந்தைகள் நாடு கடத்தப்படுவதற்குத் தான் ஆதரவு தருவதாகக் கூறினார்.

குடியேறுபவர்கள் மீது இதே போன்ற தாக்குதல்கள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. குடியேறுபவர்கள் குடியிருப்புக்களில் ஐரோப்பிய அரசாங்கங்கள் சோதனை நடத்த உத்தரவு இடுகின்றன, பரந்த சிறைகளைக் கட்டியுள்ளன, மத்தியதரக்கடல் பகுதியை இராணுவமயமாக்கியுள்ளன. தங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களை அவை பலிகடாக்காளாக ஆக்கியுள்ளன. பிரான்சில் பர்க்கா அல்லது முழு அளவு முக மறைப்பை பொதுவிடத்தில் முற்றிலும் தடைசெய்வதற்கு முயன்று வருகிறது.

இந்த நடவடிக்கைகள் குடியேறுபவர்களுக்கு மட்டும் என்று இல்லாமல் முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு நேரடி அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன. அரசாங்கத்தின் அடக்குமுறைக் கருவியானது பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களின் கொள்கைகளுக்கு வரும் அனைத்து எதிர்ப்புக்களையும் இலக்கு கொள்ளுவதற்கு பயன்படுத்தப்படும்.

ஒரு தீவிர எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும். ஒபாமா நிர்வாகமும் அதன் தாராளவாத கூட்டு அமைப்புக்களும், மே 1 அணிவகுப்புக்களில் பேச இருக்கும் பலர் உட்பட, அரிசோனா சட்டத்தை பயன்படுத்தி தங்கள் சொந்த குடியேற்ற விரோத, தொழிலாள வர்க்க விரோத செயற்பட்டியலை முன்னேற்றுவிக்க முயல்கின்றனர்.

மார்ச் மாதம் குடியரசுக் கட்சியின் தெற்கு கரோலினாவின் செனட் உறுப்பினர் லிண்சே கிரஹாம், நியூயோர்க்கின் ஜனநாயகக் கட்சி செனட்டர் சார்ல்ஸ் ஷ்யூமர் ஆகியோர் முன்வைத்துள்ள திட்டம் ஒன்றிற்கு ஒபாமா ஆதரவு கொடுத்துள்ளார். இந்தச் சட்டம் மெக்சிக்கோ எல்லையில் கூடுதலான இராணுவமயம் வேண்டும் என்று கூறுகிறது. இன்னும் கூடுதலான குடியரசுக் கட்சியின் ஆதரவை வெல்லும் முயற்சியில் இரு முக்கிய ஜனநாயக செனட்டர்கள், நெவடாவின் ஹாரி ரீட் மற்றும் நியூ ஜேர்சியின் பாப் மெனென்டெஸ் ஆகியோர் வியாழனன்று ஷ்யூமருடன் சேர்ந்து "எல்லைப் பாதுகாப்பு நெறிகள்" என்ற திட்டத்தை முன்வைத்து, அது பரந்த வகையில் குடியேறுபவர்கள் மீது தாக்குவதற்கு முதல் படியாக சுற்றறிக்கைக்கு விட்டுள்ளனர்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் வேலிகள், சுவர்கள், விமானங்கள், கண்காணிப்புக் கருவிகள் ஆகியவற்றைத் தவிர, ஏற்கனவே 20,000 எல்லைப் பொலிசார் உள்ளனர்--இது ஒரு பெரிய இராணுவ பிரிவிற்குச் சமமாகும். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தான் விரைவில் பிரிடேட்டர் டிரோன்களை குடியேறுபவர்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது--இந்த செலுத்துவோர் உள்ளே இல்லாத விமானங்களைத்தான் அமெரிக்க இராணுவம் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் "எழுச்சியாளர்கள்" என்று கருதப்படுபவர்களை கொன்றுவிடுவதற்கு பயன்படுத்துகிறது.

ஷ்யூமர்-கிரஹாம் சட்டவரைவு சட்டபூர்வமாக வசிக்கும் உரிமையை நாடும் ஆவணமற்ற குடியேறுபவர்களை குற்றவாளிகளாகவும் ஆக்க முயல்கிறது. அவர்கள் சட்டத்தை மீறியதாக ஒப்புக் கொள்ள வேண்டும், சமூகப் பணிகள் செய்யவேண்டும் மற்றும் மிக அதிக அபராதங்களையும் பின் தேதியிட்டு வரிகளைச் செலுத்த வேண்டும் என்றும் கோருகிறது. அவர்கள் வருங்கால குடியேறுபவர்களுக்கு பின்னே வரிசையில் நிற்பதற்கு முன் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் முக்கிய திட்டம் ஒரு உள்நாட்டு பாஸ்போர்ட் ஆட்சியாகும். இது அனைத்து அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சட்டபூர்வ குடியேறியிருப்பவர்கள் புதிய, நவீன (biometric) சமூகப் பாதுகாப்பு அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோருகிறது. இந்த தேசிய அடையாள அட்டைகள் அரசாங்கத்திற்கு ஒரு புதிய சக்திவாய்ந்த கருவியை அனைத்து தொழிலாளர்கள் மீதும்--அவர்கள் இனம் அல்லது தேசியம் பற்றிப் பொருட்படுத்தாமல்--அளிக்கிறது.

தொழிலாள வர்க்கம் இந்த வலதுசாரி செயற்பட்டியலை ஆதரிப்பதற்கு ஏமாற்றப்பட்டுவிட தன்னை அனுமதித்து விடக்கூடாது. தன்னுடைய சுயாதீன வேலைத்திட்டம், முன்னோக்கு ஆகியவற்வறை அது முன்னேற்றுவிக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி கீழேயுள்ள கோரிக்கைகளை முன்வைக்கிறது:

* தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக! தடையற்ற எல்லைகளுக்காக!

வெகுஜன வேலையின்மை மற்றும் தொடர்ந்த பொருளாதார நெருக்கடிச் சூழலில், ஆளும் வட்டாரங்கள் ஒருவருக்கு எதிராக மற்றவரை தூண்டிவிடுவதின் மூலம் தொழிலாள வர்க்கத்தை பிரிக்க நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நலன்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை குடியேறுபவர்களின் தவறு அல்ல. இவை முதலாளித்துவ அமைப்பு முறையின் உலக நெருக்கடியின் விளைவு ஆகும். இப்பொருளாதார முறை ஆவணமற்ற தொழிலாளர்களை பலிகடாக்களாக மாற்றும் அனைவராலும் பாதுகாக்கப்படுகிறது.

அனைத்து நாட்டு மக்கள் மற்றும் இனங்களின் தொழிலாளர்களும் ஒரே நலன்களைத்தான் கொண்டுள்ளனர். அதே நேரம் இதே பெருநிறுவனங்களினால் தான் சுரண்டப்படுகின்றனர். உலகம் முழுவதும் நகரும் மூலதனத்தை எதிர்கொள்ளுவதற்கு ஒரு சர்வதேச அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டால் மாத்திரமே ஒரு வெற்றிகரமான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் நடத்த முடியும்.

குடியேறும் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அவர்கள் எங்கு வாழ விரும்பினாலும் அதற்கான முழுக் குடி உரிமைகளை வழங்க வேண்டும். இதில் தற்பொழுது அமெரிக்காவில் இருக்கும் அனைத்து ஆவணமற்ற வசிப்பவர்களும் அடங்குவர்.

பொதுப் பணித் திட்டத்திற்காக பல பில்லியன் டாலர்களைச் செலவு செய்யவும்! வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் தேசியமயமாக்குக!

குடியேறியுள்ள மக்களை மிரட்டுவதற்குப் பின்னணியில் அனைவருக்கும் வேலைகளும் கௌரவமான வாழ்க்கை கொடுப்பதற்கும் போதுமான வளங்கள் இல்லை என்ற கூற்று உள்ளது. இது ஒரு பொய் ஆகும். வங்கிகளைப் பிணை எடுப்பிற்குப் பின்னர்--அதையொட்டி வோல்ஸ் ட்ரீட் நிர்வாகிகளுக்கு மிக அதிக ஊதியம் உறுதி செய்தபின்--ஒபாமா இப்பொழுது சமூகநலத் திட்டங்களின் வெட்டுக்களை கோருகிறார். அதே நேரத்தில் அரசாங்கத்திடம் இருந்து வேலைத் திட்டங்கள் உள்ளது என்பதையும் நிராகரித்து விட்டார்.

செல்வம் மிக்க உயரடுக்கின் பெரியளவான சொத்துக்கள், சுரண்டல் மற்றும் மோசடி ஆகியவற்றின் மூலம் சேகரித்தவை பறிமுதல் செய்யப்பட வேண்டும். நிதியத் தொழில்துறை ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் பொது சேவையாக மாற்றப்பட வேண்டும். இது தரமான வேலைகளை அனைவருக்கும் அளிக்கும் மகத்தான பொதுப் பணிகள் திட்டத்திற்குத் தேவையான டிரில்லியன் கணக்கான டாலர்களை அளிக்கும்.

* தொழிலாள வர்க்கத்தின் சோசலிச கட்சிக்காக! ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி உடன் முறித்துக் கொள்ளவும்!

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டுமே முதலாளித்துவ முறையைப் பாதுகாக்கின்றன. ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ தீர்வு என்பதில் வெகுஜன வேலையின்மை மற்றும், பெருகிய வறுமை தொடர்தல், மற்றும் தேசியப் பூசல்கள், போர்கள் அதிகரித்தல் ஆகியவை தொடர்பு கொண்டிருக்கின்றன.

வெகுஜன எதிர்ப்பு பெருகி வருகிறது. ஆனால் தன்னுடைய நலன்களை பாதுகாக்க தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்தக் கட்சி தேவைப்படுகிறது. அது பொருளாதார வாழ்வை சோசலிச முறையில் மாற்றுவதற்குப் போராட வேண்டும். உற்பத்தி சக்திகள், மாபெரும் வங்கிள் மற்றும் நிறுவனங்கள் பொது உடைமையாக்கப்பட்டு தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூகத் தேவைகளின் நலன்களுக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு. மே 1 ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறும் அனைவரையும், உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தொழிலாளர்கள் இளைஞர்களையும் World Socialist Web Site ஐ வாசிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் <HYPERLINK "http://www.wsws.org/sep/dd-formmailer/dd-formmailer.php">, சோசலிசத்திற்காக போராடுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.