WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: Pro-government thugs attack plantation
workers
இலங்கை: அரசாங்க சார்பு குண்டர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களை தாக்கினர்
By Panini Wijesiriwardena
24 March 2010
Use this version
to print | Send
feedback
மார்ச் 17 அன்று, இலங்கையில் இடம்பெற்ற இன்னுமொரு தேர்தல் வன்முறைச் சம்பவத்தில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை (இ.தொ.கா.) சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, ரம்பொட தோட்டத்தின்
ஆர்.பி. பிரிவில், எதிர் தரப்பு தொழிற்சங்கமான தேசிய தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஐந்து பேரின்
வீடுகளைத் தாக்கினர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் (தொ.தே.ச.) தலைவர் ஆர். திகாம்பரத்தை ஆதரிக்க
வேண்டாம் என அந்த குண்டர்கள் அச்சுறுத்தினர். ஆர். திகாம்பரம் ஏப்பிரல் 8 நடக்கவுள்ள பொதுத் தேர்தலில்
நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
இ.தொ.கா. தீவின் மத்திய மலையக மாவட்டங்களில் பிரதானமாக தமிழ் பேசும்
தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு அரசியல் கட்சியாக இயங்கும் தொழிற்சங்கமாகும். இ.தொ.கா. ஆளும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக இருப்பதோடு அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஜனாதிபதி
மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராகவும் உள்ளார். எதிர்தரப்பு தொ.தே.ச.,
எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (யூ.என்.பி.) கூட்டணி வைத்துள்ளது.
மார்ச் 13 அன்றும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. கொத்மலைக்கு அருகில்
புரடொப் தோட்டத்தில் எஸ். சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் முன்னணியின் உறுப்பினர்களை
இ.தொ.கா. குண்டர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இலங்கை தொழிலாளர் முன்னணியும் (இ.தொ.மு.), யூ.என்.பி.
தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது.
சேதமான வீடுகளில் ஒன்று
ரம்பொட தோட்டத்தின் ஆர்.பி. பிரிவு, நுவரெலியா நகரில் இருந்து சுமார் 20
கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டமாகும். ஆர்.பி. பிரிவு, 150 தொழிலாளர்களையே
கொண்ட 140 ஹெக்டயர்கள் கொண்ட ஒரு தனியார் தோட்டமாகும். இந்தத் தோட்டத்துக்கு இ.தொ.கா.
தலைவர் தொண்டமானின் நெருங்கிய உறவினர் ஒருவரே உரிமையாளராக உள்ளார்.
இந்த தோட்டத்தின் உரிமையாளர் யார் என்ற விடயம், தோட்டத் தொழிலாளர்கள்
மத்தியில் இயங்கும் மிகப் பழைய தொழிற்சங்கமான/அரசியல் கட்சியான இ.தொ.கா. வின் தனிப் பண்பை
கோடிட்டுக் காட்டுகிறது. தொண்டமானும் அவரது உறவினர்களும் பல தோட்டங்களுக்கு சொந்தக்காரர்கள். அவர்
இ.தொ.கா. வை தனது அரசியல் சொத்தாக நடத்துவதோடு அந்த அமைப்பை மத மற்றும் ஜாதி பிரிவுகளுடன்
கட்டுண்ட ஒரு தர்ம ஸ்தாபனம் போல் நடத்தி வருகின்றார். தொழிற்சங்கம் நடத்தப்படும் விதம் பற்றி
இ.தொ.கா. உறுப்பினர்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
இ.தொ.கா. துண்டு துண்டாக பிரிந்து போவதும் மற்றும் தொ.தே.ச.,
இ.தொ.மு. மற்றும் ஏனைய அமைப்புகள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதும், இ.தொ.கா. மற்றும் அதன் தசாப்த கால
காட்டிக்கொடுப்புக்கள் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஆழமடைந்துவரும் வெறுப்பை பிரதிபலிக்கின்றது.
இலங்கையின் தொழிலாள வர்க்கத் தட்டினரில் மிகவும் வறியவர்களான அரை மில்லியன் தோட்டத் தொழிலாளர்களை
கட்டுப்படுத்த புதிய அரசியல் இயந்திரங்கள் தேவைப்பட்டுள்ளன. எவ்வாறெனினும், தொழிலாளர் தேசிய சங்கமும்
மற்றும் இலங்கை தொழிலாளர் முன்னணியும் வலதுசாரி யூ.என்.பி. உடன் இணைந்திருப்பதானது, இ.தொ.கா. வை
போலவே இந்த சங்கங்கஙளும் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை பிரதிதித்துவம் செய்பவை அல்ல என்ற
உண்மையை கோடிட்டுக் காட்டுகிறது.
தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள
நிருபர்களுடன் பேசுகின்றனர்.
தாக்குதல் நடந்து இரண்டு நாட்களின் பின்னர்
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் குழுவொன்று ரம்பொட
தோட்டத்திற்குச் சென்றிருந்தது. சாதாரண தொழிலாளர்களே பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தொழிலாளர் தேசிய
சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமே. அவர்கள் அதன் அலுவலர்களோ அல்லது தேர்தல் வேட்பாளர்களோ அல்ல.
அவர்கள் தமது வீடுகள் நாசமாக்கப்பட்டது பற்றி ஆத்திரமடைந்திருந்ததுடன் மேலும் வன்முறைகள் நடக்கலாம் என்ற
பீதியில் இருந்தனர். இரண்டு வீடுகள் முற்றிலும் சேதமாக்கப்பட்டிருந்தன. ஏனையவை பகுதி நாசமக்கப்பட்டிருந்தன.
சொத்துக்கள் நாசமாக்கப்பட்டிருந்தன அல்லது எரிக்கப்பட்டிருந்தன. தமது சக தொழிலாளர்களின் வீடுகள் மீது
தாக்குதல் தொடுக்கப்பட்டது பற்றி ஏனைய தொழிசங்க உறுப்பினர்களும் ஆத்திரமடைந்திருந்தனர்.
அருகில் உள்ள கொத்மலை பொலிஸ் நிலயைத்தில் உள்ளவர்களும் இந்த வன்முறைக்கு
உடந்தையாய் இருந்ததாக எமது வலைத் தளத்துக்கு தெரிவிக்கப்பட்டது. "பொலிசார் தோட்ட சொநத்தக்காரரின்
பங்களாவுக்கே முதலில் சென்றதை நாம் பார்த்தோம். அவர்கள் பின்னர் எங்கள் ஒவ்வொருவரதும் வீடுகளுக்கும்
வந்து, யாரும் கதவைத் தட்டினால் திறக்க வேண்டாம் என எச்சரித்தனர். ஆனால் ஏன் என்று சொல்லவில்லை.
ஏதோ நடக்கப் போகின்றது என நாம் உணர்ந்துகொண்டோம். பெரும்பாலான ஆண்கள் வீடுகளை விட்டு வெளியேறி
தோட்டத்தில் பாதுகாப்பான இடங்களில் ஒழிந்திருந்தார்கள்," என ஒரு தோட்டவாசி தெரிவித்தார்.
எந்தவொரு எதிர்த் தாக்குதலும் நடப்பதை விரும்பாத காரணத்தால் தாக்குதலைத்
திட்டமிட்டவர்கள் ஆண்கள் வீட்டில் இருப்பதை விரும்பவில்லை என ஒருவர் குறிப்பிட்டார். "பெண்களும் பிள்ளைகளும்
மட்டுமே இருப்பதால் உள்ளே வரவேண்டாம் என தாக்குதல் நடத்தியவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அவர்கள் கதவை
உடைத்துக்கொண்டு உள்ளே வந்து மரண அச்சுறுத்தல் விடுத்தனர்," என அந்தப் பெண் கூறினார். "நீங்கள் தொண்டமானின்
மைத்துனரின் தோட்டத்தில் வசிக்கின்றீர்கள். நீங்கள் திகாம்பரத்தை ஆதரிக்க முடியாது அல்லது தொண்டமானுக்கு
எதிராக வாக்களிக்க முடியாது. நீங்கள் திகாம்பரத்தை ஆதரித்தால், நீங்கள் இந்தத் தோட்டத்தில் வேலைசெய்யவோ
வாழவோ முடியாது," என அந்த குண்டர்கள் அச்சுறுத்தினர்.
இன்னுமொரு தொழிலாளி குறிப்பிட்டதாவது: "எங்களால் தாக்குதல் நடத்தியவர்களில்
சிலரை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. நாம் முறைப்பாடு செய்த போது அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளோம்.
குண்டர்கள் வெளியேறும் போது பொலிசார் அங்கு நின்றிருந்தனர். குண்டர்களை கைது செய்யுமாறு நாம் சத்தம்
போட்டும் பொலிசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொலிசார் இந்தத் தாக்குதலுக்கு உடந்தையாய்
இருந்தனர். எங்களால் எப்படி பொலிசாரிடம் நீதியை எதிர்பார்க்க முடியும்?"
நாசம் செய்யப்பட்ட
வீட்டின் உள்புறம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சேதம் அழிவுகரமானதாகும். உடைத்து நொருக்கப்பட்ட
குடும்பத்தின் தொலைக் காட்சிப் பெட்டியை காட்டி ஒரு தந்தை விளக்குகையில், "தோட்டத் தொழிலாளர்கள்
என்ற முறையில் கலர் டி.வி. வாங்குவது என்பது ஒரு கனவை நிறைவேற்றுவதாகும். எங்களது நாள் சம்பளம் 285
[2.50 அமெரிக்க டொலர்] என்பது உங்களுக்குத் தெரியும். எங்களது குடும்பத்துக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு
இது போதாது. எங்களால் எப்படி தொலைக்காட்சிகள் வாங்க முடியும்? எனது மனைவி [புலம்பெயர் தொழிலாளியாக]
மத்திய கிழக்கில் வேலை செய்துதான் இந்த டி.வி. யையும் ஏனைய பொருட்களையும் வாங்கிவந்தார்," என்றார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், 14 சதுர மீட்டர் அளவுடைய
சிறிய வீடுகளிலேயே வாழ்கின்றனர். ஒரு சிலர் தங்களது லயன் அறைகளை தமது சொந்த பணத்தை பயன்படுத்தி
விரிவுபடுத்தி அல்லது மேம்படுத்தியுள்ளனர். "நாங்கள் இப்போதுதான் எங்களது வீட்டை முன்பக்கம் தள்ளிக்
கட்டினோம். இவ்வளவு கொடூரமாக அவர்கள் இதை உடைத்துத் தள்ளிவிட்டனர். பாவம் எனது மனைவியால் அந்த
அறையில் ஒருநாள் கூட தங்கமுடியாமல் போனது [அவர் வெளிநாட்டில்]. இப்போது அவள் ஐந்து வருடங்களாக
சம்பாதித்தது புகையில் அழிந்து போய்விட்டது," என ஒரு தொழிலாளி தெரிவித்தார்.
ரம்பொட மற்றும் புரடொப் தோட்டங்களில் நடந்த தாக்குதல்கள் சீரழிவின் அறிகுறிகளாகும்.
2006 மற்றும் 2009ல் சம்பள உடன்படிக்கையை திணித்து தோட்டத் தொழிலாளர்களை விற்றுத் தள்ளுவதில் அது
இட்டு நிரப்பிய பாத்திரத்தின் காரணமாக இ.தொ.கா. பரந்தளவில் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. 2006 டிசம்பரில்,
இ.தொ.கா. வுக்கும் தோட்ட உரிமையாளர்களுடன் அது கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் இரண்டு
வார வேலை நிறுத்தம் வெடித்தது. கம்பனிகளும் இராஜபக்ஷ அரசாங்கமும், சீற்றத்தை குறைக்கவும் மற்றும் வேலை
நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு நன்மையும் இன்றி அவர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கவும்
மலையக மக்கள் முன்னணி, தொ.தே.ச. மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தொழிற்சங்களை
நம்பியிருந்தனர்.
கடந்த செப்டெம்பர் மாதமும் இதே வழிமுறை பின்பற்றப்பட்டது. அரசாங்க
ஒப்புதலுடன் பெருந்தோட்ட கம்பனிகளுடன் இ.தொ.கா. உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டது. "எதிர்ப்பு"
தொழிற்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததோடு பரந்தளவில் வேலை
நிறுத்தம் செய்வதாக எச்சரித்த போதிலும், கடைசியாக தலைகீழாக மாறி பிரச்சாரத்தை முடித்துக்கொண்டதோடு
மேலும் வேறு முனுமுனுப்புக்கள் இன்றி இ.தொ.கா. கைச்சாத்திட்ட உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டன.
அந்த வெளிப்படையான காட்டிக்கொடுப்புக்கள், இ.தொ.கா. வின் தேர்தல்
ஆதரவில் கூர்மையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மாகாண சபை தேர்தலில், நுவரெலியா
மாவட்டத்தில் நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் அதனால் ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல முடியாமல்
போனது. பிரதானமாக இ.தொ.கா. வுக்கு எதிராக நிற்பதாக காட்டிக்கொண்டதால் தொ.தே.ச. மற்றும்
இ.தொ.மு. தேர்தலில் நன்மை அடைந்தன. ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், இ.தொ.கா. ஆதரித்த
இராஜபக்ஷ, நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையை பெறவில்லை.
வெளிப்படையாக பொலிசாரின் உடந்தையுடன் அண்மையில் இ.தொ.கா. மேற்கொண்டுள்ள
குண்டர் தாக்குதல், தொழிலாள வர்க்கத்துக்கு இன்னுமொரு தெளிவான எச்சரிக்கையாகும். அரசாங்கமும் அதன்
பலவித அரசியல் பங்காளிகளும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற, அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் உட்பட
எதாவதொரு வழிமுறையையும் நாடுவர். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் வழியில், கொடூரமான
சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் தயாராகி வருவதோடு, தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள்
கிளம்பும் போதும் இத்தகைய வழிமுறைகள் பயன்பாட்டுக்கு வரும்.
ஏனைய சகல கட்சிகளுக்கும் எதிராகவும், சோசலிச வேலைத் திட்டத்துக்காகவும்
மற்றும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காவும் போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி ஏப்பிரல் 8
நடக்கவுள்ள தேர்தலில் நுவரெலியா மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. அடிப்படை உரிமைகள்
காப்பதன் பேரில் சுயாதீனமாக அணிதிரண்டு நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்கத் தொடங்குமாறு நாம்
தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ரம்பொட தோட்டத்தில் ஆர்.பி. பிரிவு
தொழிலாளர்களைப் பொறுத்தளவில், அத்தகைய அமைப்புக்களை ஸ்தாபிப்பது, தாம் எந்த தொழிற்சங்கத்தை
சார்ந்தவர்கள் அல்லது எதற்கு வாக்களிப்பவர்கள் என்பதற்கு அப்பால், சகல தொழிலாளர்களையும் அவர்களது
குடும்பங்களையும் காக்க அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத் திட்டத்தை வாசிக்குமாறும், எமது
வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் மற்றும் கட்சியில் இணைய விண்ணப்பிக்குமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.
|