World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குThe significance of the Dexter Avenue Fire Inquiry டெக்ஸ்டர் அவென்யூ தீவிபத்து விசாரணையின் முக்கியத்துவம் Joe Kishore டெட்ரோயிட் டெக்ஸ்டர் அவென்யூ தீ விபத்துக்கள் பற்றி சனிக்கிழமை நடந்த மக்கள் விசாரணை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஒழுங்கமைப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றப்படி ஆகும். இது சேவைகள் மூடலுக்கு எதிராக என்று மட்டும் இல்லாமல், அப்பகுதி முழுவதும் வாழ்க்கைத் தரங்கள் பேரழிவுச் சரிவைக் கண்டிருப்பதற்கு எதிரானதும் ஆகும். ஜனவரி 5ம் திகதி டெட்ரோயிட்டில் டெக்ஸ்டர் அவென்யூவில் நடந்த தீவிபத்து பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் இரு உடல்ஊனமுற்ற சகோதரர்கள் மார்வின், டைரோன் ஆலென் மற்றும் லின் கிரீயர் ஆகியோர் இறந்தனர். மார்ச் 2 அன்று, பங்கோர் தெருவில் ஏற்பட்ட துன்பியலான தீவிபத்து ராவியோன் யங் (5 வயது), பன்டாசியா யங் (4), செலினா யங் (3) ஆகியோரின் உயிர்களைக் குடித்தது. இரண்டிலுமே, டெட்ரோயிட் சேவைநிறுவனமான DTE Engergy வெப்பம் மற்றும் மின்விசையை வீடுகளுக்கு கொடுப்பதை நிறுத்தி விட்டது. சனிக்கிழமை விசாரணையில் ஒலித்த கருத்துக்கள் செய்தி ஊடகத்தாலும் அரசியல் நடைமுறையினாலும் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. டெட்ரோயிட்டில் உள்ள தொழிலாளர்களும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உட்பட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சாதாரண மக்கள் வாழ்வில் சேவைகள் மூடல்களின் கொடூர விளைவுகளை எடுத்துரைத்தனர். தகவல்கள், சாட்சியங்கள் மூலம் விசாரணைக்குழு உலகில் மிகப் பணம் படைத்த நாடு எனக் கருதப்படும் அமெரிக்காவில் கட்டணம் கொடுக்காததற்காக தொழிலாளர்கள் சேவைகள் மூடலை எதிர்கொள்ளுவது சர்வ சாதாரணம் என்ற உண்மையை நிரூபித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிர்ச்சி தருவது ஆகும். 2009ல் 221,000 வீடுகள் தென்கிழக்கு மிச்சிகனில் மட்டும் வெப்பம், மின்விசை மூடல்களுக்கு உட்பட்டன. நாடு முழுவதும் சேவை மூடல்களால் 4 மில்லியனுக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்கு தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் சேவைகள் மூடல்களுக்கும், குடும்பங்கள் குளிர்காலத்தில் வெப்பத்தை பெறுவதற்கு பாதுகாப்பற்ற வழிவகைகளை பின்பற்றுவதால், வீடுகள் தீவிபத்துக்களுக்கும் இடையே உள்ள தொடர்பை தெளிவாகவும், மறுக்க முடியாத வகையிலும் நிரூபித்துள்ளன. டெட்ரோயிட் பகுதியில் ஆண்டுதோறும் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர். இளம் குழந்தைகள், வயதானவர்கள், உடற்குறைபாடு உடையவர்கள் என்று மக்களின் நலிந்த பிரிவுகள் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுகின்றர். இந்த நிலைமைகளின் தளத்தில் இருக்கும் பொருளாதாரத் தர்க்கத்தையும் விசாரணை வெளிப்படுத்தியது. DTE கடந்த ஆண்டில் அதன் இலாபத்தை டெட்ரோயிட்டில் பொருளார மந்த நிலை இருந்தும் அதிகரித்தது. பணம் கொடுக்க முடியாதவவர்களின் சேவைகளை மூடி, மற்ற வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை கணிசமாக அதிகரித்த விதத்தில் அது இதைச் செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு பேரழிவையும் இறப்பையும் ஏற்படுத்தும் கொள்கைகள் பெருநிறுவன உயரடுக்கிற்கு செல்வத்தை தருகின்றன. விசாரணைக்கு வந்த ஒரு தகவல்படி DTE யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டனி எர்லி 7 மில்லியன் டாலர் ஊதியத்தை, "செயல்பாட்டு மேலதிக கொடுப்பனவாக" 1.5 மில்லியன் டாலர் உட்பட, 2008ல் வீட்டிற்கு கொண்டு சென்றார் என்று தெரிகிறது. இவருக்குப் பின் இதைவிட செல்வம் படைத்த வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் DTE யில் கணிசமான சொந்த பங்குகளைக் கொண்டுள்ளனர். DTE வெப்பம், மின்விசை கொடுக்கும் வணிகத்தில் இல்லை, மாறாக பெருநிறுவனத்திற்கும் நிதிய உயரடுக்கிற்கும் இலாபங்களை தரும் வணிகத்தில் உள்ளது. நிறுவனம், அதன் முதலீட்டாளர்கள் நிலைப்பாட்டில் இருந்து, தவிர்க்கக் கூடிய இறப்புக்களை விளைவிக்கும் கொள்கைகள் அதனுடையது என்றால், இது பொது உறவுகள் பிரச்சினையைவிட அதிகமானது ஆகும். உண்மையில் வோல் ஸ்ட்ரீட் சமீபத்தில் DTE நுகர்வோருக்கு விசை கட்டணங்களை உயர்த்திய நடவடிக்கைகளை பாராட்டியது; ஏனெனில் நிறுவனத்தின் இலாபங்களில் அதற்கு நேரிய பாதிப்பு உள்ளது.அதே நேரத்தில் உண்மை வேலையின்மை விகிதம் இங்கு 50 சதவிகிதத்துடனான டெட்ரோயிட்டின் மகத்தான சமூக நெருக்கடி தொழில்துறை தகர்த்தல் என்று பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் கொள்கையின் விளைவு ஆகும். இது நிதிய பிரபுத்துவத்தின் ஆணையில் நடைபெறுகிறது. அரை நூற்றாண்டிற்கு முன் டெட்ரோயின் நகர முக்கிய பகுதி பற்றி புகைப்படங்களை ஜெரோம் வைட் அளித்தது, இன்றைய நகரின் பேரழிவுடன் அதை வேறுபடுத்திக் காட்டிதுடன், விசாரணையில் பங்கு பெற வந்தவர்களிடம் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது. விசாரணை ஒரு தெளிவான அரசியல் தன்மையை கொண்டிருந்தது. DTEக்கும் டெட்ரோயிட், மிச்சிகனில் உள்ள ஜனநாயகக் கட்சிக்கும் இடையே உள்ள பல பிணைப்புக்கள் அம்பலமாயின. டெட்ரோயிட்டில் அரசியல் நிலைமைகள் "கையாட்களின் ஆட்சிக்கு" ("banana republic") ஒப்பாக உள்ளன. அரச கருவி பெருநிறுவனத்தின் துணைக் கைகள் போல் செயல்படுகிறது. டெட்ரோயிட்டின் மேயர் டேவிட் பிங் 20 ஆண்டுகளுக்கும் மேலாக DTE இயக்குனர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தவர். DTE கொள்கைகள் அனைத்தும் ஜனநாயகக் கட்சி கவர்னர் ஜேனிபர் கிரான்ஹோம் நியமித்துள்ள அரசாங்க அமைப்பு ஒன்றின் பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் உட்படுகின்றன. பிங், கிரான்ஹோம் போன்ற அரசாங்க அதிகாரிகள் பெருநிறுவனத்தின் எடுபிடிகள் போன்றவர்கள்தாம். ஏதேனும் ஒரு வணிகத்திற்கு நேரடியாக ஆதாயம் தரும் கொள்கைகளை செயல்படுத்த ஏவப்படுவர். எதிர்பார்த்தபடி விசாரணை பற்றி செய்தி ஊடக இருட்டடிப்பு இருந்தது. Detroit Free Press ல் இருந்து ஒரு நிருபர் கூட்டத்திற்கு வந்திருந்தாலும், தான் கேட்டதை அவர் விரும்பவில்லை என்பது வெளிப்படை. திங்களன்று வெளிவந்த ஒரு கட்டுரை ("சேவை மூடல்களுக்கு தீர்வு தேவை" என்று செசில் ஏஞ்சல் எழுதியது) விசாரணையைப் பற்றிக் குறிப்பிடவில்லை, மாறாக DTE நடத்திய பொது உறவு நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. விசாரணையில் வெளிப்பட்டுள் நிலைமைகள் டெட்ரோயிட்டிற்கு மட்டுமே உரியவை அல்ல. அவை சேவைகளோடும் நின்றுவிடவில்லை. கணக்கிலடங்கா வகைகளில், தொழிலாள வர்க்க வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, மின்வசதி, வீடு, சுகாதாரப்பாதுகாப்பு, கல்வி ஆகியவை மக்களில் மிகச்சிறிய அடுக்கின் பணவெறி பிடித்த இலாப உந்துதலுக்காக தியாகம் செய்யப்படுகின்றன. சேவைகள் மூடப்படக்கூடாது என்ற கோரிக்கையை விட வேறு எது அடிப்படையாக இருக்க முடியும்? ஆயினும்கூட, விசாரணையில் வெளிவந்துள்ள உண்மைகள் இக்கோரிக்கைக்கான போராட்டத்திற்கு முதலாளித்துவத்தை எதிர்த்து தொழிலாளர்கள் தங்கள் வலிமையைத் திரட்டுதல் தேவை என்று காட்டியுள்ளன. மக்கள் விசாரணைக்கான முன் முயற்சி சோசலிச சமத்துவக் கட்சியில் இருந்து வந்தது. இந்த விசாரணையை ஏற்பாடு செய்ததில், சோசலிச சமத்துவக் கட்சியின் நோக்கம் அரசியல் நடைமுறையில் இருக்கும் கொள்கை மாற்றத்திற்கு அழைப்புவிடாமல், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு, சுயாதீன வலிமை ஆகியவற்றை வளர்ப்பது என்று உள்ளது. இந்த விசாரணை நடக்கும் போராட்டத்தில் ஒரு தொடக்கம்தான். சோசலிச சமத்துவக் கட்சி அதன் பிரச்சாரத்தைத் தொடர்கிறது, சேவைகள் மூடல்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஊக்கம் கொடுத்து, மக்களிடையே பரப்பும். இதேபோன்ற பிரச்சாரங்ளை நாடு முழுவதும், சர்வதேச அளவிலும் வளர்க்க முற்படும். ஆனால் அவை எத்தகைய முக்கியத்துவத்தையும், தேவையும் கொண்டிருந்தாலும, இத்தகைய போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான, சுயாதீன அரசியல், சோசலிச, புரட்சிகர இயக்கத்தை நிறுவும் வடிவமைப்பிற்குள் அபிவிருத்திசெய்யப்பட வேண்டும். |