World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Pro-imperialist Global Tamil Forum inaugurated at British Parliament

ஏகாதிபத்திய-சார்பு உலகத் தமிழர் பேரவை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அங்குரார்பணம் செய்யப்பட்டது

By Athiyan Silva and Antoine Lerougetel
27 March 2010

Use this version to print | Send feedback

இலங்கை அரசாங்கம் நடத்திய இனவெறிப் போரினால் ஐரோப்பா, வட அமெரிக்கா, இந்தியா இன்னும் பிற நாடுகளுக்கு இடம்பெயரும் கட்டாயத்திற்கு உட்பட்ட நூறாயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தமிழர்களின் "அதிகாரபூர்வக் குரல்" எனக்கூறிக்கொள்ளும் GTF எனப்படும் உலகத் தமிழர் பேரவை, கடந்த மாதம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அதன் அங்குரார்பண வைபவத்தை நடத்தியது.

உலகத் தமிழர் பேரவையின் அங்குரார்பண விழா நடாத்த தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தற்செயலாக அமைந்தது அல்ல. பெப்ருவரி 24 அன்று நடைபெற்ற மாநாட்டிற்கு முழு பிரிட்டிஷ் அரசியல் ஆளும் வர்க்கமும் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் ஆசிகளும் வழங்கப்பட்டிருந்தன.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை சந்தித்தார். பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட், கன்சர்வேடிவ் கட்சியின் "நிழல்" வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் மற்றும் லிபரல் டெமக்ராட்டில் அதே பதவியை கொண்ட எட் டேவரியும் உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பேசினர். கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் காமரோனும், தற்பொழுது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிவிவகார செயலரும், இலங்கையின் முன்னாள் தூதுவருமான ரோபர்ட் ஓ பிளேக்கும் தமது வாழ்த்துச் செய்திகளை அனுப்பினர். "ஜனாதிபதி ஒபாமாவின் நண்பர்" என்று அறிமுகப்படுத்தப்பட்ட பங்குத்தந்தை ஜேசி ஜாக்சன் உலகத் தமிழர் பேரவை நிறுவப்படுதலை வரவேற்று ஒரு உரை நிகழ்த்தினார்.

அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவை ஆர்வத்துடன் நாடும் உலகத் தமிழர் பேரவையானது, தமிழ் வெகுஜனங்களின் பேரில் அல்லாமல், ஊழல் மலிந்த, அடிமைத்தன தமிழ் முதலாளித்துவத்தித்தின் சார்பாக பேசுகிறது. இது எப்பொழுதும் தமது விலைபோகும் நலன்களை முன்னெடுப்பதற்காக மக்கள் வரம்பற்ற தியாகங்களை செய்யவேண்டும் என்பதை சுமத்த தயாராக இருக்கும்.

கடந்த ஆண்டு அதன் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்களாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த அமைப்புக்களால் உலகத் தமிழர் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்களில் British Tamil Forum, La Maison du Tamil Eelam (France), the Canadian Tamil Congress, Swiss Tamil Forum ஆகியவை அடங்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை போலவே உலகத் தமிழர் பேரவையும் ஒரு சுதந்திரமான முதலாளித்துவ அரசு தோற்றுவிக்கப்படுவதற்கான தேசியவாத வேலைத் திட்டத்தை முன்வைத்து மேற்கு சக்திகளின் தயவை வெளிப்படையாக நாடுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான யுத்தத்தில் கொழும்பு ஆட்சிக்கு முக்கிய இராணுவ, அரசியல் ஆதரவை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இன்னும் இதர ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் கொடுத்தன. இந்த யுத்தம் இலங்கை இராணுவம் பாதுகாப்பற்ற சாதாரண பொதுமக்கள் மீது கொடூரமான அழிவுகளையும் இறப்புக்களையும் ஏற்படுத்தியும், நூறாயிரக்கணக்கான தமிழர்கள் தடுப்பு முகாம்களில் தள்ளப்பட்டதன் மூலமும் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஆனால், இப்பொழுது இதே சக்திகள் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் போரின் இறுதிக் கட்டங்களில் நடத்திய மனித உரிமைகள் மீறல்கள் பற்றியும் இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளைப் பற்றியும் சிடுமூஞ்சித்தனமான முறையில் எச்சரிக்கையை வெளிப்படுத்துகின்றன.

இந்த மாற்றத்தின் பின்னணியில் வாஷிங்டன் மற்றும் லண்டனின் பூகோள, அரசியல் நலன்கள் உள்ளன. ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் கீழ் இலங்கை சீனாவின் ஆதிக்க வளையத்திற்கு அதிகம் சென்றுவிட்டது என்ற கவலை இவர்களுக்கு உள்ளது. ஆதலால், அவர்கள் தங்கள் நலன்களுக்கு கொழும்பு இன்னும் கவனம் செலுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழர்களின் பரிதாபநிலைமையை பேரம்பேசும் பொருளாக பயன்படுத்த முற்படுகின்றனர்.

இந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு எடுபிடியாக செயல்படுவதற்கு உலகத் தமிழர் பேரவை ஆர்வமாக இருப்பது தெளிவு.

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பு வலைத் தளங்கள் உலகத் தமிழர் பேரவைக்கு கிடைத்த ஏகாதிபத்திய ஆதரவை பாராட்டியுள்ளன. பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிரெளன், வெளியுறவு மந்திரி மிலிபாண்ட் மற்றும் கன்சர்வேடிவ் முன்னணித் தலைவர் Hague ஆகியோர் உலகத் தமிழர் பேரவை மாநாட்டு பிரதிநிதிகளுடன் இருக்கும் புகைப்படங்களை களிப்புடன் அவை பிரசுரம் செய்தன.

உலகத் தமிழர் பேரவையின் தலைவரும், பேராசிரியரும், ரோமன் கத்தோலிக்க மதகுருவுமான எஸ். ஜே. இமானுவேல் "இது எங்களுக்கு கிடைத்த பெரிய ஆதரவு" என்று மகிழ்ச்சியடைந்தார். "உலகில் வேறு எந்த அரசாங்கத்தையும் விட பிரிட்டிஷ் அரசாங்கம் எங்கள் வரலாற்றை அறியும். எங்கள் நிலைமையை நன்கு ஏற்றுக்கொள்ள இது போதுமானது."

இத்தகைய வெற்றுச் சொற்றொடர்களுடன் இமானுவேல் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ உயரடுக்குடன் தம்மை இணைத்துக் கொள்ளப் பார்க்கிறார். ஒரு நூற்றைம்பது ஆண்டு காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தமிழ், சிங்கள மக்களிடையே, அவர்களுடைய "பிரித்து ஆளும்" மூலோபாயத்தின்கீழ் விரோதப்போக்கை தூவி வளர்த்ததற்கான பொறுப்பில் இருந்தும், தீவையும் மற்றும் இந்தப் பிராந்தியத்தையும் ஏகாதிபத்தியம் தொடர்ந்தும் சுரண்டிக் கொள்வதில் இருந்தும் அவர்களை இமானுவேல் விடுவித்து விடுகிறார்.

இலங்கை அரசாங்கத்தின் கூற்றுப்படி, பிரிட்டன் தீவின் மூன்றாவது மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் நாடு ஆகும். 200 க்கும் மேற்பட்ட பிரிட்டனின் நிறுவனங்கள் 429 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.

உலகத் தமிழர் பேரவையை சுற்றி சேர்ந்து வரும் இந்த சக்திகள், முன்னர் தங்கள் பிற்போக்கு "தமிழீழ சுயாட்சி அரசு" என்பதை அடைவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு தங்கள் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலம் அழுத்தம் கொடுத்தன. இதற்காக இந்தியா மற்றும் இதர ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவு தருமாறும் அழைப்பு விடுத்தன. இனவாத, முதலாளித்துவ இலங்கை ஆட்சிக்கு எதிராக தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சிங்கள தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளிகளுக்கு அழைப்புவிடுக்க இலாயக்கற்றுப் போயிருக்கும் இவர்கள், அத்தகைய கருத்துக்களை முன்பும் எதிர்த்தனர், இப்பொழுதும் எதிர்க்கின்றனர்.

கடந்த மே தினத்தன்று, சார்க்கோசி அரசாங்கத்தின் சமூகநல செலவினக் குறைப்புக்கள் மற்றும் வேலை இழப்புக்கள், பெருகும் வறுமை இவற்றிற்கு எதிராக பிரெஞ்சு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தங்கள் வர்க்க உணர்வுகள் எங்குள்ளன என்பதை மீண்டும் நிரூபித்தனர். ஒபாமா, பிரெளன், சார்க்கோசி, ஜேர்மனியின் அங்கேலா மேர்க்கெல் ஆகியோரின் புகைப்படங்களை "எங்களுக்கு உதவுங்கள்'' என்று எழுதப்பட்டிருந்த பதாகையை சுமந்து ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர். அதே நேரத்தில் அவர்கள் இலங்கை தொழிலாள வர்க்கத்துடன் ஒரு சர்வதேச, சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போரை நிறுத்தி ஐக்கியம் காண வேண்டும் என்று கூறியிருந்த துண்டுப்பிரசுரங்களை வினியோகித்த உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்களை அச்சுறுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னோக்கின் தோல்வியானது தமிழ் முதலாளித்துவத்தையும், அவர்களுடைய தேசியவாத குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்களையும் தந்திரோபாயத்தை மாற்றச் செய்துள்ளது. உலகத் தமிழர் பேரவை, அதன் நிறுவன ஆவணத்தின்படி, "ஜனநாயகம், அகிம்சை" ஆகியவற்றுடன் இணைந்து நிற்பதாகவும், "மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் வளர்த்த கொள்கைகளுடன் இணைந்து நிற்பதாகவும் தமிழ் ஈழ தன்னாட்சிக்கான போராட்டத்தில் ஈடுபடுவதாகவும்" கூறுகிறது.

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இந்த மாற்றத்தை வரவேற்கின்றன. இது உலகத் தமிழர் பேரவை சர்வதேச மற்றும் இலங்கையில் இருக்கும் முதலாளித்துவ வடிவமைப்பிற்குள் செயல்படுவதற்கான உறுதிமொழி என்று இதைக் கருதுகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்டபோது அதன் இறுதி ஆண்டுகளின் இருந்த ஜெனரல் பொன்சேகாவை இராஜபக்ஷவைவிட குறைந்த தீமை என்று கூறி இப்போர்க் குற்றவாளிக்கு கடந்த ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைக் கொடுத்தது. பெரும்பான்மையாக தமிழர் வாழும் பகுதியான வடக்கு, கிழக்கில் பெரும்பாலான தமிழர்கள் இந்தப் பிற்போக்குத்தன முன்னோக்கை மறுத்து இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை.

உலகத் தமிழர் பேரவைக்கு பிரிட்டனின் அரசியல் ஆளும் வர்க்கம் மற்றும் ஒபாமா நிர்வாகம் ஆகியோர்களினால் அதிகம் கொடுக்கப்பட்ட ஆதரவு என்பது, அவை இந்த அமைப்பை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், கொழும்பின் சிங்கள முதலாளித்துவ உயரடுக்கு சீனாவின் செல்வாக்கைக் குறைத்துக் கொள்ள உதவுக்கூடிய பயனுடைய ஒரு கருவி என்று காண்பதையும் குறிக்கிறது.

ஆனால் பிரெளனோ, பிளேக்கோ உலகத் தமிழர் பேரவையின் தனி நாட்டிற்கான அழைப்பிற்கு எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் இந்தியாவின் கவலையான தனி ஈழ அரசு தோற்றுவிப்பது ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் தெற்காசிய பகுதியில் பெரும் பிரிவினைவாத கோரிக்கைகளை எழுப்பிவிடும் என்பதால், அதையொட்டிவரும் உறுதியற்ற தன்மை தங்கள் நலன்கள் பாதிப்பிற்கு உட்படும் என்பதைப் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.

உலகத் தமிழர் பேரவையின் அங்குரார்பண வைபவத்தில் பேசிய மிலிபாண்ட், "உங்கள் வன்முறைக்கு ஆதரவில்லை என்று மட்டுமில்லாமல் வன்முறையற்ற போராட்டத்திற்கு வாதிடும் உங்கள் முடிவை நான் மிக வலுவாகப் பாராட்டுகிறேன்" என்றார். இதன் பின் அவர் வட அயர்லாந்தில் நடைபெற்ற "சமாதான வழிவகைகள்" தமிழர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்தார். பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி பிரிட்டிஷ் பகுதிக்கு டோனி பிளேயர் கட்டமைத்தது போன்ற அதிகாரப் பகிர்வு உடன்பாட்டிற்குத்தான் தெளிவான ஆதரவைக் காட்டினார். இந்த உடன்பாட்டின்படி தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், ஏகாதிபத்திய ஆட்சியை நிலைநிறுத்தவும் குறுங்குழு ரீதியான பிளவுகள் அமைப்பு முறைப்படுத்தப்பட்டன.

உலகத் தமிழர் பேரவையின் வெளிப்பாட்டினால் பதட்டமுற்ற இலங்கை அரசாங்கம் மிலிபாண்ட் மற்றும் பிரெளன் அதற்குக் கொடுத்தள்ள ஆதரவை வன்மையாகக் குறை கூறியுள்ளது. உலகத் தமிழர் பேரவையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி என்று அரசாங்கம் செய்தியாளர் கூட்டத்தில் கண்டித்தது. வெளியுறவு மந்திரி பொகோல்லகமா பிரிட்டஷ் உயர் ஆணையரை கூப்பிட்டு பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி உலகத் தமிழர் பேரவை கூட்டத்தில் பங்கு பெற்றதற்கு எதிராக ஒரு "வலுவான எதிர்ப்பை" தெரிவித்தார். இராஜபக்ஷவின் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும், விமல் வீரவன்சாவின் இனவெறி தேசிய சுதந்தர முன்னணி ஆதரவாளர்களும் கொழும்பில் மிலிபண்ட், பிரெளன் ஆகியோரை புலி வரிகள் கொண்ட பிசாசுகளாக சித்திரித்த படங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிற்போக்கு பிரிவினைவாத முன்னோக்கை நிலைநிறுத்தத்தான் உலகத் தமிழர் பேரவை விரும்புகிறது. மேலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்த் தொழிலாளர்கள், இளைஞர்களை தங்கள் வர்க்க சகோதர, சகோதரிகளிடம் இருந்து அது பிரித்து வைத்திருப்பதோடு, அவர்களை உலக முதலாளித்துவ நெருக்கடியின் விலையை தொழிலாள வர்க்கத்தின் மீது முழுமையாக சுமத்த விரும்பும், அதற்காக குடியேற்ற எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் அதே பெருவணிக அரசாங்கங்களை நம்பி ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த ஏகாதிபத்திய சார்பு, வகுப்புவாத அமைப்பை நிராகரிக்க வேண்டும். தரமான வேலைகள், குடியுரிமைகள், உட்பட அவர்களுடைய எதிர்காலம் மற்றும் இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் முதலாளித்துவத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாளர்களை அணிதிரட்டுவதின் மூலம்தான் அடையப்பட முடியும். இப்போராட்டத்தின் அடிப்படைக் கூறுபாடாக இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி சிங்கள, தமிழ், முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தையும் உழைப்பாளிகளையும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடவும் சிறிலங்கா - ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளை தோற்றுவிக்கவும் அணிதிரட்ட போராடுகிறது.