World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Mass protest in Washington demands rights for immigrant workers வாஷிங்டனில் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குடியேறிய தொழிலாளர்களுக்கு உரிமைகளைக் கோருகிறது By Bill Van Auken நவம்பர் 2008ல் ஜனாதிபதி பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான குடியேறிய தொழிலாளர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஞாயிறன்று வாஷிங்டனில் அணிவகுத்து அமெரிக்காவில் வசிக்கும் மில்லியன் கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்தையும், குடியேற்ற எதிர்ப்பு அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளியையும் கோரினர். உலக சோசலிச வலைத் தளம் ஆர்ப்பாட்டம் பற்றி மற்றொரு அறிக்கையை செவ்வாயன்று வெளியிடும். ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்கள் எண்ணிக்கை 200,000 த்திற்கும் மேலாக இருக்கும் என்று அமைப்பாளர்கள் மதிப்பிட்டனர். இக்கூட்டம் வாஷிங்டன் Mall இனை நிரப்பியது. அணிவகுத்துச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் இலத்தீன் தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆவர். பலர் மெக்சிக்கோ, மத்திய அமெரிக்கர்கள், ஆபிரிக்க, ஆசிய குடியேறியவர்களும் இருந்தனர். தொலைவில் இருந்த டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா ஆகிய இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை பஸ்கள் கொண்டு வந்தன. 2006க்கு பின்னர் குடியேற்றப் பிரச்சினை பற்றி இது மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஆகும். அப்பொழுது வெகுஜன எதிர்ப்புக்களும், அணிகளும் நாடெங்கிலும் நகரங்களில் நடந்தன. ஒரு குடியரசுத் தலைமையிலான பிரதிநிதிகள் மன்றம் குடியேறல் மீறல்கள் ஒரு பொதுக்குற்றம் என்றில்லாமல் மத்திய குற்றம் என்று மாற்றி சட்டமொன்றை இயற்றியதற்கு எதிராக நடந்தது. அதையொட்டி அடிப்படையில் 12 மில்லியன் ஆவணமற்ற தொழிலாளர்கள் அமெரிக்காவில் இரவோடு இரவாக குற்றவாளிகளாக மாற்றப்பட்டிருப்பர். பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் மாலில் ஞாயிறு நடந்த பெரும் ஆர்ப்பாட்டத்தை பொருட்படுத்தவில்லை. மாறாக தலைநகருக்கு வெளியே ஒபாமாவின் செலவுக் குறைப்பு சுகாதாரப் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்த ஒப்புமையில் ஒரு சிறிய வலதுசாரி எதிர்ப்பாளர்கள் ஏதோ பெரிய உண்மையான மக்கள் இயக்கத்தை அவர்கள் பிரதிபலித்தது போல் விளம்பரம் கொடுத்தனர். பல குடியேறிய தொழிலாளர்களிடம், அவருடைய பதவிக்காலத்தின் முதலாண்டில் நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் ஒரு விரிவான சீர்திருத்தத்தை முன்வைப்பதாக கூறியிருந்த ஒபாமாவின் உறுதிமொழியை நிர்வாகம் செயல்படுத்தாதது பற்றி பெருகிய சீற்றம் உள்ளது. மாறாக, புஷ் நிர்வாகத்தால் செயல்படுத்தியிருந்த குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகள் தொடரப்படுவதையும், தீவிரப்படுவதையும்தான், கூடுதலான நாடு கடத்தல்களுடன், அவர்கள் காண்கின்றனர். ஒபாமாவின் பதவிக்காலத்தின் முதல் ஆண்டில், குடியேற்ற அதிகாரிகள் கிட்டத்தட்ட 388,000 பேரை, இதுவரை மிக அதிகமான எண்ணிக்கையில் நாடுகடத்தினர். 2009ல் நாடுகடத்தப்பட்டவர் எண்ணிக்கை 2001ல் நாடுகடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை போல் இருமடங்கு அதிகம் ஆகும். அந்த ஆண்டுதான் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் பதவிக்காலத்தில் முதல் ஆண்டு ஆகும். 2001ல் 20,000 க்கு சற்று கூடுதல் இருந்த அதுவும் மனிதத் தன்மையற்ற நிலைமையில், காவலில் வைக்கப்பட்டுள்ள குடியேறியவர்களின் எண்ணிக்கை வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் முதலாண்டில் 33,000 என்று உயர்ந்துவிட்டது. குடியேறும் மக்களை குற்றவாளிகளாக்கும் முயற்சியும் குறைவின்றித் தொடர்கிறது. குடியுரிமை இல்லாதவர்கள் இப்பொழுது கூட்டாட்சி சிறைகளில் 30 சதவிகிதம் என்று உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முற்றிலும் குடியேற்ற சட்ட தொடர்புடைய குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்கள். கடந்த இரு ஆண்டுகளில், அத்தகைய குற்றங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. ஒபாமா நிர்வாகம் பல மில்லியன் டாலர்கள் குடியேறுபவர்கள் சிறையில் இருப்பதற்கு செலவழித்துள்ளது. அதே நேரத்தில் 287(g) திட்டம் என்று அழைக்கப்படுவது விரிவாக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் பொலிஸுக்கு மத்திய குடியேற்ற சட்டங்களை செயல்படுத்த கூட்டாட்சி நிதி கொடுக்கப்படுகிறது. குடியேறுபவர்களுக்கு எதிரான சோதனைகளும் தளர்வின்றி தொடர்கின்றன. சமீபத்தில் அமெரிக்க குடியேற்ற, சுங்க செயல்பாட்டு அமைப்பு (ICE) நெப்ரஸ்கா மாமிசப் பதனிடும் ஆலையிலும், மேரிலாந்தில் பல உணவுவிடுதிகளிலும் ஆவணமற்ற தொழிலாளர்கள் கைது செய்ததை அறிவித்துள்ளது. ICE செய்தித் தொடர்பாளர்கள் இவை "சோதனைகள்" அல்ல, "செயலாக்க நடவடிக்கைகள்" என்று வலியுறுத்தியுள்ளனர். புஷ் நிர்வாகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ''பாதுகாப்பான சமூகங்கள்'' ("Secure Communities") என்னும் மற்றொரு திட்டம் ஒபாமாவால் விரிவாக்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் சிறைகளில் மிகச் சிறிய குற்றங்களுக்கு என்றாலும் அடைக்கப்பட்டுள்ள மக்களின் குடியேற்ற அந்தஸ்தை சோதிக்குமாறு அதிகாரிகளுக்குக் கட்டளையிடுகிறது. இப்பொழுது 2010 இடைத்தேர்தல் நெருங்குகையில், ஒபாமாவின் வெள்ளை மாளிகை மீண்டும் குடியேற்றக் கொள்கை சீராக்கப்பட அதன் உறுதியை அறிவித்துள்ளது. 2008 தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஹிஸ்பானிய வாக்காளர்களின் மூன்றில் இருபங்கு வாக்களித்தது. இவ்வாக்காளர்களில் பலர் நிர்வாகத்தின் கொள்கைகளால் வாக்குப்பதிவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற உணர்வு ஜனநாயகக் கட்சித் தலைமைக்குள் பெருகியுள்ளது. ஆனால், ஒபாமா ஆதரிக்கும் குடியேற்றச் சீர்திருத்தம் என்று அழைக்கப்படுவது, குடியேறுபவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எவ்விதத்திலும் குறைத்துவிடாது. கடந்த வாரம் ஜனாதிபதி ஜனநாயகக் கட்சி செனட்டர், நியூயோர்க்கின் சார்ல்ஸ் ஷ்யூமர் மற்றும் தென்கரோலினா குடியரசு செனட்டர் லிண்ட்சே கிரஹாம் முன்வைத்த சட்டத்திட்டத்திற்கு தன் ஆதரவை அறிவித்தார். Washington Post TM வெளியிடப்பட்ட கருத்துக் கட்டுரையில் ஷ்யூமரும் கிரஹாமும் தங்கள் இருகட்சித் திட்டத்தினை கோடிட்டுக் காட்டியுள்ளனர், ஆனால் முழு விவரங்களையும் கொடுக்கவில்லை. இரு செனட்டர்களும் இன்னும் கூடுதலான வகையில் ஆவணமற்ற குடியேறுபவர்கள்மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று துவங்கியுள்ளனர். குடியேற்ற முறை செயலாக்கம் தீவிரமாக்கப்பட்டதைப் புகழ்ந்தாலும், அவர்கள் "சட்டவிரோத நுழைவை நாடும் பலர் உள்ளே நுழைந்துவிடுகின்றனர்" என்று புலம்பியுள்ளனர். இதை எதிர்கொள்ளும் வகையில், ஷ்யூமரும் கிரஹாமும் அமெரிக்க மெக்சிகோ எல்லை இன்னும் இராணுவமயமாக்கப்பட வேண்டும் என்றும், இன்னும் கூடுதலான பணம் உண்மையில், உறுதியான தடைகளுக்கு செலவழிக்கப்பட வேண்டும், எல்லை ரோந்து முகவர்களின் எண்ணிக்கை எல்லையைக் கடக்கும் குடியேறுபவர்களைப் பிடிப்பதற்கு அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் வாதிட்டுள்ளனர். "எல்லையில் பிடித்தல் திறனில் உள்ள விரிசல்களை மூடும் வகையில், கூடுதலான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்" என்று அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளனர். குடியேற்றச் செயலாக்கம், மற்றும் உள்ளூர் பொலிஸ் நிர்வாகம், சிறை நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையே கூடுதலான ஒருங்கிணைப்பு தேவை என்றும், "அதுதான் குற்றம் செய்பவர்களைப் பிடித்து நாடுகடத்த சிறப்பாக" உதவும் என்று கூறியுள்ளனர். புஷ், ஒபாமா நிர்வாகங்கள் இலக்கு வைப்பதாகக் கூறும் பெரிய குற்றங்களுக்கும், வன்முறையற்ற குற்றங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அவர்கள் ஆவணமற்றவர்களை நாடு கடத்த பயன்படுத்துவதில்லை. திட்டமிடப்பட்டுள்ள சட்டம் அமெரிக்காவில் சட்டபூர்வமாக நுழைபவர்களைப் பற்றிய தகவலை, குடிவரவு அனுமதி (Visa) கடந்தபின் நீடித்து இருப்பவர்கள் பற்றிய தகவல்களையும் தேடப்படும் குற்றவாளிகள் பற்றிய பொலிஸின் தகவல் தளங்களுடன் ஒருங்கிணைக்கும்; திட்டமிடப்பட்டுள்ள சட்டத்தின் மற்றொரு விவாதத்திற்குரிய கூறுபாட்டில் அமெரிக்க மக்களுடைய ஜனநாயக உரிமைகள் பற்றிய நீண்டகால விளைவு உடைய தாக்கங்களும் உள்ளன. -இது "உயர் தொழில்நுட்ப, மோசடிக்கு இடமில்லாத வகையில்" உடல்கூறு விவரங்கள் அடங்கிய சமூகப் பாதுகாப்பு அட்டைகளை (Social Security card) தோற்றுவிக்கும்; இது இல்லாவிட்டால் அமெரிக்காவில் எவருக்கும் வேலை கிடைக்காது. ஷ்யூமர், கிரஹாம் ஆகியோர் அட்டையில் இருக்கும் தகவல் அரசாங்கத் தகவல்தளங்களில் இணைக்கப்பட மாட்டாது என்று கூறுவது நம்பத்தகுந்தது அல்ல. அவர்கள் முன்வைப்பது தேசிய அடையாள அட்டைகள், பொலிஸுக்கும், உளவுத்துறைக்கும் பரந்த புதிய உள்கட்டுமானம் ஒன்றை முழுக்கண்காணிப்பு மற்றும் அரசியல் கட்டுப்பாட்டிற்காக கொடுத்தல் என்பதை அறிமுகப்படுத்துவதுதான். இந்த செயலாக்க நடவடிக்கைகளை அடுத்து, ஷ்யூமர்-கிரஹாம் திட்டத்தில் இரண்டாம் உயர் முன்னுரிமை "ஒரு பகுத்தறிவார்ந்த, சட்டபூர்வ, குடியேற்ற முறை, அமெரிக்காவின் வருங்காலப் பொருளாதார வளமையை உறுதிப்படுத்த தேவையானதை வளர்ப்பதாகும்" எனப்படுகிறது--அதாவது, அமெரிக்க பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் இலாப நலன்களுக்கு ஏற்பட குடியேற்றச் சட்டத்தை வரையறுப்பது. இத்திட்டம் குடிவரவு அனுமதிகள் கொடுப்பதை "உலகின் சிறந்த, மிக புத்திசாலித்தனமானவர்களுக்கு" விரிவாக்கும். எவர் அதிக வருமானங்களை தோற்றுவிக்க முடியுமோ அவர்களுக்கு கொடுப்பதுடன், அதே நேரத்தில் "குறைந்த திறமை உடைய தொழிலாளர்களை அனுமதிக்கும் பகுத்தறிவார்ந்த முறையும்" அறிமுகப்படுத்தப்படும். இந்த "பகுத்தறிவார்ந்த முறை" ஒரு தற்காலிக தொழிலாளர் திட்டத்திற்கு ஒப்பாகும்.- விவசாய நலன்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட bracero என்ற இழிவார்ந்த முறைக்கு ஒப்பாகும். இது "விரும்பும் விதத்தில் குடியேற்றச் சுற்றைக் கொடுக்கும்", குடியேறும் தொழிலாளர்கள் "பணந்தை சம்பாதித்துப் பின் தாயகம் திரும்ப" உதவும் என்று செனட்டர்கள் கூறுகின்றனர். இத்திட்டம் ஒரு புதிய வகை சுரண்டப்படும் தொழிலாளர் பிரிவை ஏற்படுத்தும். இவர்களுக்கு எந்தவிட உரிமைகளும் இருக்காது, முதலாளிகள், அரசாங்கத்தின் தயவில்தான் இருப்பர். கிட்டத்தட்ட 12 மில்லியன் ஆவணமற்ற தொழிலாளர்கள் ஏற்கனவே நாட்டில் இருப்பது பற்றி, ஷ்யூமரும் கிரஹாமும், "ஒரு கடின, ஆனால் நியாயமான பாதையை" முன்வைக்கின்றனர்; அதாவது பெரும்பாலானவர்களுக்கு அடக்குமுறை, பாகுபாடு என்று தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படுவதில் இருந்து தப்பும் வழி இருக்காது. முதலில் இந்த தொழிலாளர்கள் "தாங்கள் சட்டத்தை முறித்தோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும், சமூகத்திற்கு கொடுக்க வேண்டிய கடனை சமூக பணி மூலமும், அபராதங்கள் மூலமும், கடந்த காலத்திற்கான வரியையும் கொடுக்க வேண்டும்." மீண்டும் ஒரு மக்கள் கூட்டம் முழுவதும் குற்றவாளிகளாக ஆக்கப்படுகின்றனர்; அபராதங்கள், வரிகள் ஆகியவை "சட்டபூர்வமாவதற்கு" நிபந்தனை; இது பல மில்லியன் ஆவணமற்ற தொழிலாளர்களால் இயலாதது. அவர்கள் மிகக் குறைந்த ஊதியத்தை பெறுவதுடன், அமெரிக்காவை இறுக்கிப்பிடித்துள்ள வெகுஜன வேலையின்மையில் விகிதாசாரத்தில் அவர்களே அதிகமாக கஷ்டப்படுகின்றனர். இதைத்தவிர, சட்டபூர்வ அந்தஸ்டு நாடுவோர், "முன்னைய காலம் பற்றிய சோதனைகளை ஏற்க வேண்டும், ஆங்கிலத்தில் தேர்ச்சி கொண்டிருக்க வேண்டும்." இந்த முழு வழிவகையும் முடிந்தபின், ஷ்யூமரும் கிரஹாமும் அவர்கள் "வருங்கால குடியேறுபவர்களுடன் வரிசையில் காத்து நின்று சட்டபூர்வ நிரந்தர வசிக்கும் உரிமைக்கு செயல்பட வேண்டும்." என்று கூறுகின்றனர். "வரிசையில் காத்து நிற்பது" என்பதின் முழு உட்குறிப்புக்கள் விவரமாகக் கூறப்படவில்லை. முந்தைய சிதைந்த குடியேற்றத் திட்டங்களை போல், இதுவும் அவர்கள் தாயகத்திற்கு சென்று அமெரிக்காவிற்கு மீண்டும் வருவதற்கு காத்திருக்க வேண்டும், இதையொட்டி அவர்கள் குடும்பமும் சிதையும். ஷ்யூரம் மற்றும் கிரஹாம் எழுதியுள்ள அறிக்கையில், மனிதத்தன்மை அற்ற வழக்கமான பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை நாடுகடத்தல் மூலம் பிரிப்பது, இலாபமுறைக்காக காவல் முறை மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களை அடிப்படை மனித உரிமைகளை மீறும் நிலைமையில் வைத்திருப்பது அகற்றப்பட வேண்டும் அல்லது ICE பொலிஸ் அரசாங்க மாதிரியில் நடைபெறும் முழு சமூகத்தின் மீதான சோதனைகள் என்ற அச்சுறுத்தும் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றோ ஒரு சொல் கூட கூறவில்லை. இந்தப் பிற்போக்குத்தன திட்டத்தை, "உறுதியளிக்கும் இருகட்சி வடிவமைப்புப்பணி", "நம்மை முன்னேற்றப்பாதையில் நகர்த்தும் அடிப்படை கொண்டது" என்று ஒபாமா அறிவித்தார். இந்தச் சட்டம் ஒருவேளை முன்னேறி நடைமுறைக்கு வந்தால், அது இன்னும் பிற்போக்குத்தனமாக இருக்கும். ஒபாமா நிர்வாகமும், காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சித் தலைமையும் குடியரசுக் கட்சியின் வலதுசாரி நாட்டுவெறி பிரச்சாரத்திற்கு தலைவணங்கி நிற்கும். அதுவோ ஜனநாயகக் கட்சியினர் "பொதுமன்னிப்பு" வழங்குகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது. இறுதியில், சட்டத்தின் விளைவு அது காங்கிரஸால் ஒதுக்கப்பட்டுவிடும் என்பதுதான். இதேபோல்தான் 2007ல் ஒரு பிற்போக்குத்தன திட்டமும் பெருகும் சமூக நெருக்கடிக்கு குடியேறும் தொழிலாளர்களை பலிகடா ஆக்கும் திட்டமும் அரசியல் வலதின் பிரச்சாரத்தினால் தூக்கி எறியப்பட்டது. ஞாயிறன்று வாஷிங்டனிற்கு வந்த பெரும் கூட்டத்திற்கு, அவர்கள் பிரதிபலிக்கும் இன்னும் பல மில்லியன் குடியேறிய தொழிலாளர்களுக்கு, ஒபாமா நிர்வாகமும் முழு இரு கட்சி முறையும் தீவிரமான அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றைத்தான் கொடுக்கும். குடியேறும் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் நெருக்கடிக்கு உண்மையான தீர்வு ஒரு சோசலிச திட்டத்திற்கான பொதுப் போராட்டத்திற்கு முழுமையாக தொழிலாள வர்க்கம் ஒன்றுபடுத்துப்படுவதின் மூலம்தான் முடியும். அதில் ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களுக்கும் தாங்கங்கள் விரும்பும் இடங்களில் முழு, சம உரிமைகளுடன் வாழ்ந்து, வேலைபார்க்கும் உரிமை அடங்கியிருக்கும். |