World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSEP manifesto for the 2010 general election For socialist policies and a workers and farmers government 2010 பொதுத் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் விஞ்ஞாபனம் சோசலிசக் கொள்கைகளுக்காகவும் தொழிலாளர்களின் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகவும் The Socialist Equality Party (Sri Lanka) ஏப்ரல் 8 பொதுத் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்து கட்சியின் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கு பெறமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். முதலாளித்துவ கட்சிகளில் இருந்து பிரிந்து, சுயாதீனமாக அணிதிரண்டு, தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்கம் ஒன்றுக்காகவும் மற்றும் சோசலிச கொள்கைகளுக்காகவும் போராட ஆரம்பிக்கவில்லை என்றால் தொழிலாளர்கள் ஒரு சமூக, பொருளாதார பேரழிவை எதிர்கொள்வர் என நாம் எச்சரிக்கிறோம். அரசியல் மற்றும் செய்தி ஊடக ஸ்தாபனம், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் அளவையும், அரசாங்கத்தின் பொலிஸ் அரச நடவடிக்கைகளின் துரித முன்னேற்றத்தையும் மூடிமறைப்பதன் மூலம், வாக்காளர் மத்தியில் ஒரு போலி பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. தேர்தல் முடிந்தவுடன், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவாறு தாக்குதலை தொடுப்பதோடு எந்தவொரு எதிர்ப்பையும் இரக்கமற்ற முறையில் அடக்குவார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவு, சமாதானம் மற்றும் சுபீட்சம் நிறைந்த ஒரு புதிய யுகத்தைக் கொண்டுவரும் என இராஜபக்ஷ போலியாகக் கூறிக்கொண்டார். உண்மையில், தீவின் பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்பு, புலிகளின் தோல்வியின் பின்னரே உக்கிரமாகியுள்ளது. இது உலகப் பொருளாதார நெருக்கடியின் புதிய கட்டத்துடன் ஒருங்கிணைகின்றது. 1930 களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நிதிய வீழ்ச்சிக்கு மத்தியில், 2008-09ல் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், வங்கிகளை பிணை எடுப்பதன் ஊடாக, டிரில்லியன் கணக்கான டொலர்கள் தனியார் கடன்களை தங்கள் கணக்கில் ஏற்றுக்கொண்டுள்ளன. இப்பொழுது பெரும் நிறுவன உயர் தட்டினர், இந்த பாரிய கடன்கள் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படவேண்டும் என்று கோருகின்றன. இந்த நிலைமை கிரேக்கத்தில் உடனடியாக குவிமையப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஊக வாணிபம் மற்றும் உலக நிதிப் பிரபுத்துவத்தின் மோசடிகளுக்கு செலவிடுவதன் பேரில், குறுகிய காலத்தில் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளக்கூடிய, ஊதிய வெட்டுக்களை கொண்டுவருதல், ஓய்வூதியத்தகுதி வயதை உயர்த்துதல், வரிவிதிப்புக்களை அதிகரித்தல், கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுநலச் செலவுகளைக் குறைத்தல் போன்றவற்றை பாப்பாண்ட்ரூ அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என நிதி மூலதனம் வலியுறுத்துகிறது. எவ்வாறெனினும், கிரேக்கத்தில் நடப்பவை, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் செயல்படுத்த இருக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு பரிசோதனை மட்டுமே. இந்த வழிவகைகள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஜனாதிபதி இராஜபக்ஷ தனது போருக்கு செலவிட வாங்கிய மிக பெருந்தொகையான கடன், அரசாங்கத்தின் கடன் தொகையை 2005க்கும் 2009க்கும் இடையே, 4.1 டிரில்லியன் ரூபாய்கள் (36 பில்லியன் அமெரிக்க டாலர்) வரை, அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86 சதவிகிதம் வரை இரண்டு மடங்காக அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.7 சதவிகிதமாகப் பெருகியது. இப்பொழுது, கடன் பெற்ற போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை இட்டு நிரப்புமாறும், அடுத்த ஆண்டின் முடிவில் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை பாதியாகக் குறைக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தை நெருக்குகிறது. இராஜபக்ஷ, பொருளாதாரம் விரைவில் அடுத்த "ஆசிய அற்புதமாக" உருவாகும் தருவாயில் உள்ளது என்ற முற்றிலும் போலி சித்திரத்தை முன்வைக்கின்றார். அவர் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக வரவு-செலவுத் திட்டத்தை முன்வைக்காமல் தாமதப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், தேர்தல் முடிந்தவுடன், அவர் தொழிலாள வர்க்கத்தை பெரிதும் பாதிக்கும் வரவு-செலவுத் திட்டத்தை முன்வைப்பார். தற்பொழுது, அரசாங்கத்தின் செலவுகளில் பாதிக்கு மேல், கடன்களை பராமரிப்பதற்கு 35 சதவிகிதமும் மற்றும் பாதுகாப்பிற்கு 21 சதவிகிதமுமாக இரு பகுதிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்கத்தால் முதலாவது செலவை குறைக்க முடியாது, மற்றும் இரண்டாவதை குறைக்காது. அதாவது, வெட்டுக்களின் முழுச் சுமையும் விலை மானியங்கள், கல்வி, சுகாதாரம், பொதுநலச் செலவுகள் மீதும், அரசாங்கத் தொழில்கள் மற்றும் சம்பளத்தின் மீதும் சுமத்தப்படுவதோடு மொத்த வாழ்க்கைத் தரங்களும் நாடகபாணியில் சீரழிவதற்கு வழிவகுக்கும். எதிர்க் கட்சிகள் எந்த மாற்றீட்டையும் வழங்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பி), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவை தற்போதைய பொருளாதார கஷ்டங்களுக்கு "அரசாங்க ஊழல்களே" காரணம் என்ற ஜனரஞ்சகக் கட்டுக்கதையை பரப்புகின்றன. மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலைகொடுக்க வைப்பதை தவிர வேறு தேர்வு கிடையாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்க் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக, அவை உண்மையான நிலைமையை மூடிமறைக்கின்றன. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் கிரேக்க மாதிரியான தீர்வைச் செயல்படுத்துவது, தொழிலாள வர்க்கத்துடன் மோதலைத் தூண்டுவதுடன், இராஜபக்ஷ அரசாங்கம் அதற்கு ஏற்ப தயாராகின்றது. யுத்தத்தின் போது, தொழிற்சங்கங்களின் உதவியைப் பெற்றிருந்த அரசாங்கம், "தேசிய பாதுகாப்பு" என்ற பெயரில் தொழிலாளர்களின் போராட்டங்களை ஈவிரக்கமின்றி நசுக்கியது. இப்பொழுது இராஜபக்ஷ, அதே ஒடுக்குமுறை வழிமுறைகளைப் பயன்படுத்தி, "நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான" "பொருளாதார போர்" ஒன்றை முன்னெடுக்கின்றார். கடந்த ஆண்டு பெருந்தோட்டங்களில், துறைமுகத்தில், ஆஸ்பத்திரிகளில் மற்றும் ஏனைய துறைகளில் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் கொந்தளித்த நிலையில், வேலை நிறுத்தங்களுக்கு எதிராக துருப்புக்களை ஏவிய அவர், தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்ய தனது அவசரகால அதிகாரங்களைப் பாவித்தார். உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுக்க, கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பரந்த பொலிஸ் அரச இயந்திரத்தை அமைத்தன. அதையும் முந்திச் சென்ற இராஜபக்ஷ, பாராளுமன்றத்தை ஒரு இறப்பர் முத்திரையின் மட்டத்துக்கு தரம் குறைக்க தனது விரிவான நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டதோடு ஒரு அரசியல்-இராணுவக் குழுவின் ஊடாகவே அதிகளவில் இயங்கினார். அரசியலமைப்பை அலட்சியம் செய்த இந்தக் குழு, நீதிமன்றத்தையும் நிராகரித்தது. அவரது அரசாங்கத்தின் கீழ், தண்டனைகளே வழங்கப்படாத அரசாங்க-சார்பு கொலைப் படைகளால் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது "காணாமல் ஆக்கப்பட்டனர்". புலிகளின் தோல்வியை அடுத்து, இராணுவம் 280,000 தமிழ் பொது மக்களை சட்ட விரோதமாக "நலன்புரி கிராமங்களில்" தடுத்து வைத்திருந்தது. உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் காக்க முயற்சிக்கும் போது, அவர்களுக்கும் எதிராக இத்தகைய வழிமுறைகளே பயன்படுத்தப்படும். தற்போதய தேர்தல் பிரச்சாரம் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஊடக விமர்சகர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் ஒரு சூழலில் நடக்கிறது. ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், அரசாங்கம் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும் டஜன் கணக்கான அவருடைய ஆதரவாளர்களையும், முன்னாள் தளபதி ஒரு சதிப் புரட்சியை திட்டமிட்டார் என்ற தெளிவற்ற, ஆதாரமற்ற குற்றசாட்டுக்களின் பேரில் கைது செய்தது. இப்பொழுது இராஜபக்ஷ பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முயல்கிறார். அது அவர் அரசியலமைப்பை மாற்றுவதையும் அவரது சர்வாதிகார ஆட்சியை பலப்படுத்துவதையும் சாத்தியமாக்கும். யூ.என்.பி., «ü.M.H இரண்டும் ஜனநாயக உரிமைகளின் காவலர்களாக காட்டிக் கொள்கின்றன. ஆனால் அவை "புலி சந்தேக நபர்களாக" தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு, அல்லது இராணுவத்தின் "நலன்புரி கிராமங்களை" மற்றும் தடுப்பு முகாங்களை இழுத்து மூடுமாறு கோரிக்கை விடுக்கவில்லை. அரசாங்கத்தைப் போல், எதிர்க்கட்சிகளும் தமிழர்-விரோத பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ளன. அவை இராஜபக்ஷவின் குற்றவியல் யுத்தத்துடன், இராணுவத்தின் போர்க் குற்றங்களுக்கும் மற்றும் ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் ஆதரவு கொடுத்தன. அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான கசப்பான பூசல்கள் தந்திரோபாய பிரச்சினைகள் பற்றியதாகும், குறிப்பாக வெளியுறவுக் கொள்கை பற்றியதாகும். தெற்காசியா பெருகிய முறையில் பெரும் வல்லரசுகளின் போட்டிக்கு இடையில் அகப்பட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவானது மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவின் எரிசக்தி வளம்மிக்க பகுதிகளின் மீது தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நவ-காலனித்துவப் போர்களை நடத்துவதுடன், ஒரு மறைமுகப்போரையும் பாக்கிஸ்தானில் நடத்துகின்றது. சீனா இந்து சமுத்திரத்தில் தனது பிரதான வர்த்தக பாதைகளை பாதுகாப்பது உள்ளடங்கலாக அமெரிக்காவை சகல துறைகளிலும் எதிர்க்க முனைகின்றது. இராஜதந்திர, நிதிய, இராணுவ உதவிகளுக்கு இராஜபக்ஷ பெய்ஜிங்கை நாடுவது வாஷிங்டனில் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க செனட் அறிக்கை ஒன்று, அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முறையில் அமைந்துள்ள "இலங்கையை இழக்கக்" கூடாது என்று அறிவித்தது. இராஜபக்ஷ சீனாவை நோக்கி நகரும் அதே வேளை, யூ.என்.பி. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இலங்கையின் பாரம்பரிய நட்பு நாடுகளுடனான உறவை விரும்புகிறது. உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமாகையில், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் ஈராக் போல் இலங்கையும் பரந்த போட்டிகள், மோதல்கள் மற்றும் போர்களுக்கு இடையே அகப்பட்டுக் கொள்ளும். அரசியல் செயலின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தெற்கு ஆசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தங்கள் வர்க்க சகோதர, சகோதரிகளைப்போல், இலங்கையில் உள்ள தொழிலாளர்களும் பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். ஆளும் வர்க்கத்திடம் ஒரு வர்க்கப் போர் நிகழ்ச்சிநிரல் உள்ளது, ஆனால் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியில் முடங்கிப் போயுள்ளது. வங்குரோத்து அடைந்துவிட்ட, வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்த இலாபமுறையை பாதுகாக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் தொழிலாளர்கள் கட்டுண்டுள்ளனர். இந்த வெளிப்படையான சிங்கள, தமிழ் முதலாளித்துவ கட்சிகளுக்கு, தொழிலாளர்களை ஏமாற்ற முயற்சிக்கும் தொழிற்சங்கங்களும் மற்றும் முன்னாள் இடதுசாரிகளான நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் உதவுகின்றன. அவசியமான அரசியில் படிப்பினைகளை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த மூன்று தசாப்தங்களாக, தொழிற்சங்கங்களின் -அவை அரசியல் கட்சிகளுடன் இணைந்திருந்தாலும், சுயாதீனமாக இருப்பதாகக் கூறிக் கொண்டாலும்- ஏமாற்றுத்தனம் தீவிரமாகியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த ஒவ்வொரு போராட்டத்திலும், அனைத்து தொழிற்சங்கங்களும் இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் பெரும் வர்த்தகர்களதும் கட்டளைகளை அமுல்படுத்த செயல்பட்டுள்ளன. அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள் இதை நேரடியாக செய்த அதே வேளை, "எதிர்த்தரப்பு" சங்கங்கள், தொழிலாளர் சீற்றத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு கருவிகளாக செயல்பட்டுள்ளன. அவர்களுடைய முன்னோக்கின் மையம், இலங்கையின் முதலாளித்துவத்தை பாதுகாப்பதும் இலங்கை கூட்டுத்தாபனங்களின் "சர்வதேசரீதியில் போட்டியிடும் நிலைமையை" பேணிக் காப்பதுமே ஆகும். புலிகளின் தோல்வி அடிப்படையில் அதன் இராணுவத் தந்திரோபாயத்தின் விளைவு அல்ல, மாறாக, அது புலிகளின் அரசியல் வங்குரோத்தின் விளைவாகும் என்பதை தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் உணர்ந்துகொள்வது தீர்க்கமானதாகும். தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்கு தமிழர்-விரோத பகைமைகளை கிளறிவிட்ட ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களே 26 ஆண்டுகால போருக்கு பொறுப்பாகும். ஆனால் தனி முதலாளித்துவ அரசை அமைக்கும் புலிகளின் முதலாளித்துவ வேலைத்திட்டம் பிரதிநிதித்துவம் செய்தது தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே அன்றி, தமிழ் வெகுஜனங்களின் நலன்களை அல்ல. இது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் திறனுடைய ஒரே சமூக சக்தியான இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வர்க்க அழைப்பை விடுக்க புலிகள் இயல்பிலேயே இலாயக்கற்றவர்கள். போரின் போது புலிகளின் ஊதுகுழலாக செயல்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, குறைந்தது நான்காக பிளந்துவிட்டது. அவர்கள் அனைவருமே கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் தம்மை மீண்டும் ஒருங்கிணைத்துக்கொள்ள முற்படுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் சேர்ந்துவிட்ட நிலையில், இராஜபக்ஷவின் போரை நடத்திய தளபதியான பொன்சேகாவையே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்தது. இவர்களில் யாருமே புலிகளின் தோல்விக்கு வழிவகுத்த தமிழ் பிரிவினைவாத அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவில்லை. நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் (யூ.எஸ்.பி.) மிக ஆபத்தான பங்கை வகிக்கின்றன. இவை அடிக்கடி சோசலிஸ்ட்டுக்கள் என்று தம்மைக் காட்டிக் கொண்டாலும், பிரதான முதலாளித்துவக் கட்சிகளின் இடது பக்கத்தில் இருந்து செயல்படுகின்றன. அவற்றின் தற்போதைய திசையமைவு யூ.என்.பி. ஆகும். அவை இந்த வலதுசாரி முதலாளித்துவ யூ.என்.பி.யை, ஜனநாயக உரிமைகளின் காவலனாக காட்டுகின்றன. இந்த இரு கருவிகளும், கடந்த ஆண்டு, யூ.என்.பி. தலைமையிலான ''சுதந்திரத்திற்கான மேடையில்'' ஏறி, ஜனநாயகத்தை பாதுகாப்பது பற்றிய வெற்றுக் கொள்கைகளை கூறின. நவசமசமாஜக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்துவந்த எம். கே. சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவுடன் ஒரு கூட்டை அமைத்துக்கொண்டது. சிவாஜிலிங்கத்தின் வலதுசாரி திசையமைவு, இந்தியாவில் உள்ள இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சிக்கு அவர் கொடுத்த ஆதரவில் நிரூபணம் ஆகிறது. தற்போதைய அரசியல் செயலின்மைக்கு முடிவுகட்டுவது என்பது, ஆளும் வர்க்கத்தின் சகல கட்சிகளில் இருந்தும் அதன் இடது ஆதரவாளர்களில் இருந்தும் அடிப்படையில் பிரிவதை அர்த்தப்படுத்துகிறது. இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள் யுத்தத்தை நோக்கியும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை, ஜனநாயக உரிமைகளை துவம்சம் செய்வதை நோக்கியும் தள்ளப்படுவதற்கு மூல காரணம், இலாப அமைப்புமுறையும் மற்றும் அது உலகத்தை முதலாளித்துவ தேசிய அரசுகளாக பொருத்தமின்றி பிரித்து வைத்திருப்பதுமே ஆகும். இதற்கு ஒரே மாற்றீடு சோசலிசமே ஆகும்: அதாவது உலகப் பொருளாதாரத்தின் பரந்த வளங்களை, நிதிய மற்றும் கூட்டுத்தாபன கும்பல்களின் இலாபத்துக்காக அன்றி, உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறு புத்திக்கூர்மையான முறையில் மறு ஒழுங்கு செய்வதாகும். அதிகாரத்தை கைப்பற்றி தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் பேரில், கிராமப்புற வெகுஜனங்களுக்கு தலைமை வகிக்கப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட இந்த முன்னோக்கின் அடிப்படையிலேயே சோ.ச.க. பிரச்சாரம் செய்கின்றது. தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை அமைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது. உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை காக்க சோ.ச.க. பின்வரும் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது. *வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் சோசலிச சமத்துவக் கட்சி, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல பாதுகாப்புப் படைகளையும் உடனடியாக திருப்பியழைக்குமாறும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகலரையும் மற்றும் சகல அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறும் கோருகின்றது. உண்மையான ஜனநாயக ரீதியான தீர்வுக்கான அடித்தளத்தை உருவாக்க, தீர்க்கப்படாத சகல ஜனநாயக பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதன் பேரில் அரசியலமைப்புச் சபை ஒன்றை கூட்டுமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய ஒரு சபை சாதாரண உழைக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்பட வேண்டும். உண்மையான ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த சகல பாகுபாடான சட்டங்களுக்கும் முடிவுகட்டப்பட வேண்டும். *சகலருக்கும் பாதுகாப்பான சிறந்த சம்பளத்துடனான தொழில்கள் வேண்டும் சிறந்த சம்பளத்துடனான இலட்சக்கணக்கான தொழில்களை உருவாக்கவும் பொது வீடமைப்பு, பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், கலாச்சார மற்றும் விளையாட்டு வசதிகள், வீதிகள் மற்றும் வடிகாலமைப்புத் திட்டங்களையும் கட்டியெழுப்பவும் பொதுத் தேவைகளுக்காக பில்லியன் கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். சம்பளக் குறைப்பின்றி மற்றும் வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கேற்ற ஊதியத்துடன் வேலை வாரத்தை 30 மணித்தியாலங்களாக குறைப்பதன் மூலம் தொழில் வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி பிரேரிக்கின்றது. சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது நிறுத்தப்படுவதையும் மற்றும் பெண்களையும் இளைஞர்களையும் இரவு வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்படுவதையும் சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. * இலவச மற்றும் உயர்தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் தற்போதைய கல்விமுறையானது சமத்துவமின்மையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்க மற்றும் கிராமப்புற பகுதிகளிலுள்ள சிறுவர்கள் வசதிகள் பற்றாக்குறையான, ஆசிரியர்கள் பற்றாக்குறையான பொது பாடசாலைகளில் படிக்கத் தள்ளப்பட்டுள்ள அதே சமயம், செல்வந்தர்களின் மகன்மாரும் மகள்மாரும் நவீன வசதிகள், வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தை தனியார் பாடசாலைகளில் அனுபவிக்கின்றனர். தமது கல்வியை முன்னெடுக்க விரும்பும் சகலருக்கும் பல்கலைக்கழக மட்டம் வரை இலவச மற்றும் உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்க அரசாங்கப் பாடசாலை முறையை பரந்தளவில் விரிவுபடுத்த வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. தற்போதுள்ள பாடசாலைகள் விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள், கணனி வசதிகள் மற்றும் நவீன ஒலி-ஒளி உபகரணங்கள், அதே போல் விளையாட்டு மற்றும் கலைத்துறை நடவடிக்கைகளுக்கான வசதிகளுடன் தரம் உயர்த்தப்படல் வேண்டும். * பூரணமான சுகாதார பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் டெங்கு, மலேரியா, அம்மை மற்றும் காசநோய் போன்ற தடுக்கக்கூடிய நோய்களால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர். புதிய நோய்களாக H1N1 மற்றும் பறவைக் காய்ச்சலும் பரவுகின்றன. சமாளித்துக்கொள்ளக் கூடியவர்கள் தனியார் வைத்தியர்கள் மற்றும் சிகிச்சை நிலையங்களை நாடும் அதே வேளை, வெகுஜனங்கள் மேலும் மேலும் நிதிப் பற்றாக்குறை நிலவும் பொது சுகாதார முறையிலேயே தங்கியிருக்கின்றனர். இலவசமான பூரணமான உயர்ந்த தரத்திலான சுகாதார பராமரிப்பை வழங்க நல்ல வசதிகள், தக்க ஊழியர்களை கொண்ட அரசாங்க ஆஸ்பத்திரிகளை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்ய வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.* சகலருக்கும் பொருத்தமான வீடமைப்பு வசதிகள் கட்டியெழுப்படவேண்டும் பல குடும்பங்கள் குழாய் நீர், மின்சாரம் மற்றும் தக்க மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தரங்குறைந்த வீடுகளில் வாழ்வதோடு உரிமையாளர்களின் வாடகை அதிகரிப்பு மற்றும் சட்டப்படி வெளியேற்றும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். சகலருக்கும் பொருத்தமான தங்குமிடங்களை வழங்குவதற்கு சகல அத்தியாவசிய வசதிகளும் உள்ளடக்கிய, செலவைத் தாங்கக்கூடிய, வாடகை கட்டுப்பாட்டுடனான பொது வீடமைப்பை கட்டெயெழுப்ப சோ.ச.க. பரிந்துரைக்கின்றது. * பெண் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டப்பட வேண்டும் குறைந்த ஊதியத்துடனான தொழில் மற்றும் வீட்டு வேலைப்பளு ஆகிய இரட்டைச் சுமைகளை பெண் தொழிலாளர்கள் தாங்கிக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் ஆடைத் தொழிற்சாலைகளில், தேயிலை கொழுந்து பறிப்பதில், இறப்பர் மரம் கீறுவதில் மற்றும் ஏனைய விவசாயத் தொழில்களில் மிகவும் கடுமையாக உழைக்கின்றனர். பூகோள பொருளாதார நெருக்கடியால் பத்தாயிரக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைப் பெண் தொழிலாளர்கள் தொழிலை இழக்கத் தள்ளப்பட்டதோடு பொருளாதார பின்னடைவானது மத்திய கிழக்கையும் தாக்கிய நிலையில் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக அல்லது ஊழிய வேலைகளைச் செய்து பெற்ற வருமானத்தையும் தொழிலையும் இழக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இலவச மற்றும் உயர்ந்த தரத்திலான சிறுவர் பராமரிப்பு மற்றும் முழு சம்பளத்துடனான கர்ப்ப கால விடுமுறை உட்பட பெண் தொழிலாளர்களுக்குச் சம சம்பளம் மற்றும் நிலைமைகள் வழங்கப்படுவதை சோசலிச சமத்துவக் கட்சி பாதுகாக்க போராடுகிறது. திருமண சட்டங்கள் உட்பட பால் பாகுபாட்டை சட்ட விரோதமாக்க நாம் அழைப்பு விடுக்கின்றோம். கருக்கலைப்பு சட்டப்பூர்வமானதாக ஆக்கப்படுவதோடு சகலருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்ய வேண்டும். ஆண்களும் பெண்களுமாக தமது திறமைகளையும் ஆளுமைகளையும் முழுமையாக மேம்படுத்திக்கொள்ளும் ஒரு அறிவுபூர்வமான கலாச்சார சூழ்நிலையை முன்நிலைப்படுத்துவதற்காவும் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. * சிறு விவசாயிகளுக்கு உதவிகள் அளிக்கப்பட வேண்டும் நிலப் பற்றாக்குறை பெரும்பாலான சிறு விவசாயிகளை துன்பத்துக்குள்ளாக்கியுள்ளதோடு இந்தப் பிரச்சினை உள்நாட்டு யுத்தத்தை தூண்டுவதிலும் குறிப்பிடத்தக்க பாத்திரம் ஆற்றியுள்ளது. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் வடக்கில் வன்னிப் பிரதேசத்திலும் மற்றும் கிழக்கிலும் தமிழர்கள் பெருவாரியாக வாழும் பிரதேசங்களில் நிலமற்ற சிங்கள வறியவர்களை காலனிகளை ஏற்படுத்தி வேண்டுமென்றே குடியேற்றின --இது இனவாத பதட்ட நிலைமைகளுக்கு தூபமிட்டது. யுத்தத்தின் முடிவுடன் இத்தகைய கொள்கைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. நிலமற்ற விவசாயிகளுக்கு இனப் பாகுபாடின்றி அரச நிலங்களை பகிர்ந்தளிக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. வறிய விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பெற்ற சகல பழைய கடன்களும் இரத்துச் செய்யப்படும் அதே வேளை, செலுத்தக்கூடிய நிபந்தனைகளின் படி கடன்கள், விவசாய உபகரணங்கள், உரம் மற்றும் மருந்துகள், மற்றும் மீனவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். இத்தகைய கொள்கைகளுக்கு தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்ள, நாம் சகல பெரிய வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் தேசியமயமாக்கவும் மற்றும் சுதந்திர வர்த்தக வலயத்தில் இருப்பவை உட்பட சகல பிரதான கைத்தொழில் கூட்டுத்தாபனங்களையும், பொது மக்களுக்கு சொந்தமானதாகவும் ஜனநாயகக் கட்டுப்பாட்டிலான நிறுவனமாகவும் மாற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம். சர்வதேச வங்கிகளில் பெற்ற கடனுக்கு தொழிலாளர்கள் பொறுப்பாளிகளாக இல்லாவிட்டாலும், அவர்கள் கடனை செலுத்த நெருக்கப்படுகின்றார்கள். நாம் சர்வதேச வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தக் கூடாது என பரிந்துரைக்கின்றோம். சர்வதேச வங்கிகளின் பிடியை உடைக்காமல், உழைக்கும் மக்களின் நலன்களுக்காக பொருளாதாரத்தை மீள ஒழுங்கு செய்ய முதல் நடவடிக்கையை எடுப்பதே சாத்தியமற்றது. தொழிலாளர்களும் இளைஞர்களும் விடயங்களை தமது கைகளில் எடுக்கத் தொடங்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பளப் போராட்டத்தின் போது, பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் ஒத்துழைப்புடன் தமது நடவடிக்கை குழுவொன்றை அமைத்தனர். அவர்களது நடவடிக்கை, தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, இலாப அமைப்புக்கும் மற்றும் அதன் பாதுகாவலர்களுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்துக்கு அணிதிரள்வதற்கு தொழிலாள வர்க்கம் எடுத்த முக்கியமான முதல் நடவடிக்கையை பிரதிநிதித்துவம் செய்தது. தமது உரிமைகளை காக்க வேலைத் தளங்கள், தொழிலாள வர்க்க பிரதேசங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுயாதீன நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இத்தகைய அமைப்புக்கள், வெகுஜன அரசியல் இயக்கத்துக்கான அடித்தளத்தை அமைக்கும். அதன் ஊடாக நகார்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களுக்கு தலைமை வகித்து ஆட்சியை கைப்பற்ற தொழிலாளர்களால் முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக தேவைப்படுவது என்னவெனில், தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில், அதற்கு கல்வியூட்டி, அணிதிரட்டி மற்றும் தலைமை வகிக்க ஒரு அரசியல் கட்சியை கட்டியெழுப்புவது அவசியமாகும். அந்தக் கட்சிதான் சோசலிச சமத்துவக் கட்சி. அது இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அடிப்படையாக உள்ள அனைத்துலக சோசலிசத்தின் உயர்ந்த கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி 1917 ரஷ்ய புரட்சிக்கு தலைமை கொடுத்த வேலைத்திட்டத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாக்கின்றது: அந்தப் புரட்சி முதலாளித்துவம் மற்றும் வர்க்க ஒடுக்குமுறையில் இருந்து மனிதகுலத்தை விடுவிப்பதற்கான உலக சோசலிசப் புரட்சியாகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக போராடுவதற்கு ட்ரொட்ஸ்கி 1938ல் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். சோவியத் ஒன்றியத்தில் அரசியல் அதிகாரத்தை அபகரித்துக்கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவம், தோன்றிவரும் பழமைவாத ஆளும் கும்பல் என்றவகையில், தமது நலன்களை பாதுகாத்துக்கொள்ள "தனி நாட்டில் சோசலிசம்" என்ற மார்க்சிச விரோத முன்நோக்கை அபிவிருத்தி செய்தது. 1991ல் ஸ்ராலினிஸ்டுகள் சோசலிசத்தை கைவிட்டு, சோவியத் ஒன்றியத்தை கலைத்ததுடன் முதலாளித்துவத்தை பதிலீடு செய்த போது, ஸ்ராலினிசத்துக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எதிர்ப்பு இறுதியாக சரியென மெய்ப்பித்துக்காட்டப்பட்டது. சோசலிச அனைத்துலக வாதத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்த, பாட்டாளிகளின் தூரதிருஷ்டியுள்ள பிரதிநிதிகளின் மரபுரிமையை சோசலிச சமத்துவக் கட்சி தனது அத்திவாரமாகக் கொண்டுள்ளது. 1940களில், தெற்காசிய தொழிலாள வர்க்கத்தினுள் ஆழமாக வேரூன்றிய இந்திய போல்ஷவிக் லெனினிச கட்சியின் (பி.எல்.பி.ஐ.) ட்ரொட்ஸ்கிஸ்டுகள், இந்தியத் துணைக் கண்டத்தில் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச முன்நோக்கை அபிவிருத்தி செய்தனர். அதைத் தொடர்ந்து 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி முதலாளித்துவ கூட்டரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டமை, சோசலிசத்துக்கும் இலங்கை பாட்டாளிகளின் ஐக்கியத்துக்கும் எதிரான ஒரு பெரும் அடியாகும். லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான நேரடியான அரசியல் போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு தசாப்தங்களாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் சோசலிச சமத்துவக் கட்சியும் முதலாளித்துவ இனவாதத்தை சளைக்காமல் எதிர்த்துப் போராடிவந்துள்ளன. சிங்களத்தை தேசிய மொழியாக்கிய மற்றும் பெளத்தத்தை அரச மதமாக்கிய அரசியலமைப்புக்கும், ஜே.வி.பி. யின் போலி மக்கள்வாத சிங்களப் பேரினவாதத்துக்கும் மற்றும் புலிகளின் பிரிவினைவாதத்துக்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சி போராடி வந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தை இடைவிடாது எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்க கோரிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் வர்க்கப் போராட்டம் புத்துயிர் பெறும் நிலையில், இத்தகைய போராட்டங்களின் படிப்பினைகள் தொழிலாள வர்க்கத்துக்கு அத்தியாவசியமான அரசியல் வழிகாட்டியாக அமையும். இலங்கை தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவது இன்றைய அவசரமான பணியாகும். எங்களது முன்நோக்கையும் வேலைத்திட்டத்தையும் ஆதரிக்கும் அனைவரையும் எமது தேர்தல் பிரச்சாரத்தில் நடைமுறையில் பங்குபற்றுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதன் அர்த்தம் எமது வேட்பாளரை பிரச்சாரப்படுத்தவும் கூட்டங்களை ஏற்பாடு செய்யவும் உதவுவதோடு, எமது தேர்தல் இலக்கியங்களை விநியோகிக்கவும் கலந்துரையாடவும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் சர்வதேச பிரசுரமான உலக சோசலிச வலைத் தளத்துக்கு பரந்தளவில் வாசகர்களை ஊக்குவிக்கவும் உதவுவதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். |