World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Chinese report documents human rights disaster in the United States

அமெரிக்காவில் மனித உரிமைகள் பேரழிவை சீன அறிக்கை ஆதாரம் காட்டுகிறது

Patrick Martin
19 March 2010

Back to screen version

மார்ச் 13 அன்று சீனாவின் அரசாங்க தகவல் அலுவலகமானது "2009ல் அமெரிக்காவில் மனித உரிமைகள் மீறல் சான்றுகள்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அமெரிக்க வெளியுறவுச் செயலகத்தின் 2009ல் பிற நாடுகளில் மனித உரிமைகள் நடைமுறைகள் என்னும் ஆண்டு அறிக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்ததற்கு இது ஒரு பதிலடி என்பது தெளிவு.

அமெரிக்க அரசாங்கமானது "ஒவ்வொரு ஆண்டும் மற்ற நாடுகளில் மனித உரிமைகள் நடைமுறைகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டு, மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கும், மற்ற நாடுகளின் தோற்றத்தை இழிவுபடுத்துவதற்கும் தன்னுடைய மூலோபாய நலன்களை நாடுவதற்கும் மனித உரிமைகளை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறது. இது மனித உரிமைகள் பிரச்சினையில் அதன் இரட்டை நிலைப்பாட்டை நன்கு அம்பலப்படுத்துகிறது" என்று சீன அறிக்கை முழுமையாகக் குறிப்பிடுகிறது.

ஆனால் தன்னுடைய பதிலை உரியவிதத்தில் அமெரிக்கா கொடுக்காததால், அது சீன ஆட்சி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவதில்லை என்றாகிவிடாது. அது 1.3 பில்லியன் மக்கள் மீது அது சர்வாதிகார முறையில் ஆட்சி செலுத்துகிறது. மக்களில் பெரும்பாலானவர்கள் பெரும் வறுமையில் உள்ள விவசாயிகள் மற்றும் அதிகம் சுரண்டப்படும் தொழிலாளர்கள் ஆவர்.

அவ்வாறு இருந்தபோதிலும், சீன அறிக்கை ஒரு கண்களை திறக்க வைக்கும் ஆவணமாக உள்ளது--உண்மைகள் நிறைந்து, நிதானத் தன்மை கொண்டு, சற்றே குறைவாகக் கூறப்பட்டாலும் ஒவ்வொரு தகவலும் அமெரிக்காவின் பொது அரசாங்க, செய்தி ஆதாரங்களில் இருந்து திரட்டப்பட்டது. உலகம் 21ம் நூற்றாண்டு அமெரிக்காவை பார்க்கும் சித்திரத்தைக் கொடுக்கிறது. இது அமெரிக்க செய்தி ஊடக, உத்தியோகபூர்வ கட்டுக்கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுத்தான் உள்ளது.

அறிக்கையானது அமெரிக்க வெகுஜன செய்தி ஊடகத்தில் குறிப்பிடப்படாமல் இருந்தது ஏதும் வியப்பல்ல.

இந்த 14- பக்க அறிக்கை ஆறு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: வாழ்க்கை, சொத்துக்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு; குடிமை அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள், இனப் பிரிவினைகள்; பெண்கள், குழந்தைகள் உரிமைகள்; மற்ற நாடுகளுக்கு எதிரான அமெரிக்க மனித உரிமை மீறல்கள். இது கொடுக்கும் ஒரு முழுச் சித்திரமானது ஆழ்ந்த, மோசமாகி கொண்டுவரும் ஒரு சமுதாயத்தின் நிலைமை ஆகும்.

அமெரிக்காவில் வன்முறை, பொலிஸ் அடக்குமுறை பற்றி சில உண்மைகள்;

* ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கித் தொடர்புடைய சம்பவங்களில் 30,000 பேர் இறக்கின்றனர்.

* கடந்த ஆண்டு 14,180 கொலைகள் நடந்தன.

* 2009ல் முதல் 10 மாதங்களில், 45 பேர் பொலிஸ் Taser ஐ (துப்பாக்கி போன்ற கருவியைப் பயன்படுத்தி மின்சாரத்தால் தாக்குதல் நடத்தி தற்காலிகமாக மற்றவரை செயலிழக்கச் செய்தல்) பயன்படுத்தியதை அடுத்து கொல்லப்பட்டனர், இதையொட்டி தசாப்தத்தின் மொத்தம் 389 என ஆயிற்று.

* கடந்த ஆண்டு நியூயோர்க் நகரத்தின் 315 பொலிஸ் அதிகாரிகள் "தடையற்ற வன்முறைப் பயன்பாட்டை" அடுத்து உள்ளக மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டனர்.

* 7.3 மில்லியன் அமெரிக்கர்கள் சீர்திருத்த முறை சிறைக்கு வந்தனர். இது வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு ஆகும்.

* கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 60,000 கைதிகள் சிறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

ஜனநாயக உரிமைகள் பற்றி அறிக்கையானது 2001 நாட்டுப்பற்றுச் சட்டத்தின்கீழ் அரசாங்கம் பாவித்த விதத்தில் மக்கள் மீது உளவு பார்த்தல், இணையதளம் பரந்த கண்காணிப்பிற்கு தேசியப் பாதுகாப்பு அமைப்பினால் உட்பட்டுள்ளது, கடந்த ஆண்டு G-20 உச்சிமாநாடு பிட்ஸ்பர்க்கில் நடந்தபோது பூகோளமயமாக்கல் நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸ் துன்புறுத்தியது ஆகியவை பற்றி குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் "மனித உரிமைகள்" பற்றிய வனப்புரையின் பாசாங்குத்தனத்தை சுட்டிக்காட்டிய அறிக்கை எழுதியவர்கள், "மற்ற நாடுகளில் இதே நடைமுறை மனித உரிமை மீறல்கள் என்று அழைக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவில் இது குற்றத்தை கட்டுப்டுத்த தேவையான நடவடிக்கை எனப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மேற்பரப்பில் உள்ள சமூகப் பொருளாதார நெருக்கடி பற்றித்தான் அறிக்கை கூறியுள்ளது. இதில் வேலையின்மை அளவுகள், வறுமை, பட்டினி, வீடுகள் அற்ற நிலைமை மற்றும் 46.3 மில்லியன் மக்கள் சுகாதாரக் காப்பீடு இல்லாமல் இருப்பது ஆகியவை பற்றியும் உள்ளன. அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் அபூர்வமாக விவாதிக்கப்படும் சில உண்மைகளைக் கூறுகிறது.

* கடந்த ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் பொதுச் செலவில் 712 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. ஏனெனில் புதைப்பதற்கு பணம் இல்லாத நிலையில் வறிய குடும்பங்கள் இருந்தன.

* 2007ல் 5,657 பணியிட இறப்புக்கள் இருந்தன, அதுதான் எண்ணிக்கை பற்றித் தகவல் கொடுக்கும் கடைசி ஆண்டு ஆகும். இது நாள் ஒன்றிற்கு 17 இறப்புக்கள் என்று ஆகிறது (இந்த இறப்புக்களுக்கு ஒரு முதலாளி மீது கூட குற்றவியல்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.)

* 2,266 மூத்த ஓய்வுபெற்ற படை வீரர்கள் 2008ல் சுகாதாரக் காப்பீடு இல்லாததால் இறந்து போயினர், இது கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்த இராணுவ ரீதியான இறப்புக்களைவிட 14 மடங்கு அதிகம் ஆகும்.

* கறுப்பர்கள், ஹிஸ்பானியர்கள், அமெரிக்க பழங்குடியினர் ஆகியோருக்கு எதிராக பரந்த முறையில் இருக்கும் இனப் பாகுபாடு பற்றிய சான்றுகளை கொடுக்கிறது. இவர்கள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் மிகவும் அடக்கப்பட்ட பிரிவினர் ஆவர். வேலைக்கு எடுத்துக் கொள்ளுவதில் இனப்பாகுபாடு காட்டுவது மிக அதிக எண்ணிக்கையாக 32,000க்கும் மேல் உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு அல்லது வன்முறை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது பற்றியும் குறிப்பிடுகிறது. அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் 300,000 "சட்டவிரோதமாக" குடியேறுபவர்கள் காவலில் வைக்கப்படுவதும், ஆண்டில் ஒவ்வொரு நாளும் அமெரிக்க காவல் மையங்களில் 30,000க்கும் மேலான குடியேறுபவர்கள் தடுத்து வைக்கப்படுவதும் கூறப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலம் வெள்ளைநிறக் குற்றவாளிகளை விட 18 மடங்கு அதிகம் கறுப்பர் இன குற்றவாளிகள்மீது ஆயுள் தண்டனை சுமத்தியது என்பதையும் குறிப்பிடுகிறது. 2008ல் நியூயோர்க் நகரப் பொலிஸ் ஆயுதங்களை பயன்படுத்தியபோது, 75 சதவிகித இலக்கு கறுப்பர்கள், 22 சதவிகிதம் ஹிஸ்பானியர்கள், 3 சதவிகிதம் மட்டுமே வெள்ளையர்கள் என்று தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு சம உரிமை ஊதியத்தில் இல்லை என்ற நன்கு அறியப்பட்டுள்ள உண்மையையும் அறிக்கை குறிப்பிடுகிறது. சராசரி பெண்கள் வருமானம் 2008ல் ஆண்கள் வருமானத்தில் 77 சதவிகிதம்தான் இருந்தது என்றும் இது 2007ல் 78ல் இருந்து குறைந்துள்ளது என்றும் கூறுகிறது. அறிக்கையின்படி, வேலைபார்க்கும் வயதில் இருக்கும் பெண்களில்ல் 70 சதவிகிதத்தினருக்கு சுகாதாரக் காப்பீடு இல்லை அல்லது போதுமான காப்பீடு இல்லை என்றும் உயர்ந்த மருத்துவக் கட்டணங்கள் அல்லது அதிகமாக சுகாதாரத் தொடர்புடைய கடன்கள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரச் சுமைகளை விகிதத்திற்கும் அதிகமாக குழந்தைகள் கொண்டுள்ளனர். 16.7 மில்லியன் சிறுவர்களுக்கு 2008ல் ஒரு நேரத்தில் போதிய உணவு கிடைக்கவில்லை. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3.5 மில்லியன் பட்டினி அல்லது ஊட்டமின்மையை எதிர்கொள்கின்றன. இது மொத்தத்தில் 17 சதவிகிதம் ஆகும். குழந்தைகள் பட்டினியுடன் இணைந்து இருப்பது விவசாயத்துறையில் சிறுவர் வேலையில் ஈடுபடுத்தப்படுவதும் அடங்கும். அமெரிக்க விவசாயப் பொருட்கள் சேகரிப்பதில் 400,000 சிறுவயது தொழிலாளிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிறுவர்களையும், இளம் வயதினரையும் சிறையில் வைப்பதிலும் அமெரிக்கா மற்ற நாடுகளைவிட முன்னணியில் உள்ளது. இளவயதுக் குற்றவாளிகளுக்கு பரோல் (வெளியே வரும் உரிமை) மறுக்கப்படுவது அமெரிக்க நாட்டில்மட்டும்தான் உள்ளது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் நியாயமான முறையில் குறைகூறப்பட்டுள்ளது. இத்தனை ஏழைகளும், பட்டினியில் வாடும் மக்களும் இருக்கும் நாட்டில், உலகத்தின் மொத்த இராணுவச் செலவில் 42 சதவிகிதம் உள்ளது. மகத்தான $607 பில்லியன் என்று. மேலும் உலகின் மிக அதிக வெளிநாட்டிற்கான ஆயுத விற்பனை, 2008ல் $37.8 பில்லியன், முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகமும், இந்த நாட்டில்தான் நடந்தது.

சீன அறிக்கையில் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் குவண்டநாமோ வளைகுடா ஆகியவற்றிலும் அமெரிக்க இராணுவ தளங்கள் உலகெங்கிலும் உள்ள கைதிகள் சித்திரவதை பற்றியும் ஆவணம் சான்றைக் கொடுக்கிறது. அதேபோல் கியூபா மீது அமெரிக்க முற்றுகை (ஐ.நா. பொது மன்றத்தில் 187-3 என்ற வாக்கில் எதிர்க்கப்பட்டுள்ளது), உலகம் முழுவதும் அமெரிக்காவின் முறையான உளவு வேலை, NSA உடைய "ECHELON" குறுக்கிட்டு தகவல் பொறும் கருவிகளைப் பயன்படுத்திச் செய்யப்படுவது, மற்றும் இணையதள தட வழங்கிகள்மீது அமெரிக்கா கொண்டுள்ள ஏகபோக உரிமை ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே சர்வதேச மனித உரிமைகள் உடன்பாடுகளை அமெரிக்கா மீறுவதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள், பெண்கள் உரிமைகள், உடல் குறைபாடுகள் உடைய மக்களின் உரிமைகள், பழங்குடி மக்கள் உரிமைகள் பற்றி வாஷிங்டன் ஐ.நா. வின் நான்கு முக்கிய உடன்பாடுகளில் கையெழுத்திடவில்லை அல்லது இசைவைத் தெரிவிக்கவில்லை என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த அறிக்கை அமெரிக்க சமூக நிலைமைகளில் தீய தன்மையின் ஆதாரங்களைப் பற்றி விவாதிக்கவில்லை --அது எதிர்பார்க்கப்படவும் முடியாது. ஏனெனில் அதற்கு வறுமை, அடக்குமுறை, முதலாளித்துவ முறையின் இலாப முறை செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள காரண காரியத் தொடர்பு விவாதிக்கப்பட வேண்டும். பெய்ஜிங் அதைச் செய்யும் என்று எதிர்பார்ப்பது இயலாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved