World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Condemn the EPDP attack on SEP members in Jaffna

இலங்கை: யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மீதான ஈ.பி.டி.பி. யின் தாக்குதலை கண்டனம் செய்யுங்கள்

By the Socialist Equality Party (Sri Lanka)
20 March 2010

Back to screen version

வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில், வட்டுக்கோட்டையில் மார்ச் 19 அன்று சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) குண்டர்கள் மேற்கொண்ட சரீரத் தாக்குதலையும் அச்சுறுத்தலையும் சோ.ச.க. கண்டனம் செய்கின்றது.

நேற்று சுமார் 2.45 மணியளவில் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் தொட்டியடி சந்தியில் வைத்து மே. சித்திரகுமார் மற்றும் ஏனைய இரு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களும் ஆறு ஈ.பி.டி.பி. குண்டர்களை எதிர்கொண்டனர். சித்திரகுமார் ஏப்பிரல் 8 நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளராவார்.

குண்டர்களில் இருவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். சோ.ச.க. உறுப்பினர்களை அச்சுறுத்திய கும்பலின் தலைவன், "இது அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் [ஈ.பி.டி.பி. தலைவர்] பிரதேசம். ராஸ்கல், உங்களை இங்கு தேர்தல் வேலை செய்ய அனுமதிக்க முடியாது. என்னிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது. எனக்கு வேண்டுமானால் நான் உங்களை சுடுவேன்," என பயமுறுத்தியுள்ளான்.

குண்டர்கள் பின்னர் சித்திரகுமாரின் தலையை பிடித்து சுவரை நோக்கி தள்ளினார்கள். ஏனைய இரு தோழர்களையும் தள்ளிவிட்டுச் சென்றார்கள். ஒருவர் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டார்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததோடு, சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது. தயக்கத்துடன் முறைப்பாட்டை பதிவு செய்துகொண்ட பொலிசார், காலையில் நடந்த இந்த சம்பவம் பற்றி விசாரிப்பதாக தெரிவித்தனர்.

ஈ.பி.டி.பி. யின் சாதனைகளைப் பொறுத்தளவில் இந்த அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிட முடியாது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கும் தமிழ் அரசியல் கட்சியான ஈ.பி.டி.பி., பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு நடத்திய யுத்தத்தை ஆதரித்தது. தற்போது ஈ.பி.டி.பி. இந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது.

யாழ்ப்பாணத்தில், குறிப்பாக ஊர்காவற்துறையிலும் யாழ்ப்பாண குடாநாட்டின் ஏனைய தீவுகளிலும், அரசாங்கத்தின் ஆயுதப் படைகளுடன் நெருக்கமாக செயற்படும் ஒரு துணைப் படையை ஈ.பி.டி.பி. வைத்துள்ளது. தண்டனையில் இருந்து விலக்களிப்புடன், வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் உள்ளூர் மக்களை பயமுறுத்துவதிலும் ஈ.பி.டி.பி. இழிபுகழ் பெற்றதாகும்.

அரசாங்கத்துக்கும் இனவாத யுத்தத்துக்கும் மற்றும் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியான இராணுவ அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆதரவளித்ததால் தமிழ் வெகுஜனங்கள் மத்தியில் மதிப்பிழந்துபோன காரணத்தால், ஈ.பி.டி.பி. மேலும் மேலும் விரக்திகர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களை கூட்டங்களுக்கு வருமாறு நெருக்கும் இந்தக் கட்சி, தொழில், வசதிகள் மற்றும் சேவைகளையும் தருவதாக பொய் வாக்குறுதிகளைக் கூறி, சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்குமாறு சிடுமூஞ்சித்தனமாக அழைப்பு விடுக்கின்றது.

யாழ்ப்பாணத்திலும் மற்றும் அருகில் உள்ள தீவுகளிலும் சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் அரசியல் நடவடிக்கைகளை ஈ.பி.டி.பி. கடும் விரோதத்துடன் நோக்குகிறது. சோசலிச சமத்துவக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்திலும், அதே போல் தலைநகர் கொழும்பிலும், தென் மாகாணத்தில் காலியிலும் மற்றும் மத்திய பெருந்தோட்டப் பிரதேசமான நுவரெலியாவிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை அவர்களது பொது வர்க்க நலனின் பேரில் ஐக்கியப்படுத்தும் அதன் சோசலிச முன்நோக்குக்காக யாழ்ப்பாணத்தில் மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கணிசமான பிரதிபலிப்பை சோசலிச சமத்துவக் கட்சி வென்றுள்ளது.

ஈ.பி.டி.பி. யாழ் மாவட்டத்தில் ஏனைய கட்சிகளையும் அச்சுறுத்துகின்றது. வியாழக் கிழமை, ஊர்காவற்துறை தீவில் வாகனத்தில் சுற்றித் திரிந்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) பிரச்சாரகர்களைத் தொந்தரவு செய்தனர். குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்கள் பாதுகாப்பு படைகளின் எந்தவொரு சவாலுமின்றி வழமையாக சுற்றி வருகின்றனர். யாழ்ப்பாண நகரில் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்காக ஈ.பி.டி.பி. ஒரு மோட்டார் சைக்கிள் குண்டர்களையும் வைத்துள்ளது.

எந்தவொரு அரசியல் எதிரிக்கும் எதிராக இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் பரந்தளவிலான அச்சுறுத்தல் மற்றும் குண்டர் தாக்குதல் பிரச்சாரத்தின் ஒரு பாகமே வடக்கில் ஈ.பி.டி.பி. யின் நடவடிக்கைகள். ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், பொலிசும் இராணுவமும் எதிர்க் கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக அலை அலையாய் கைதுகளை முன்னெடுத்தது. இந்த ஓய்வுபெற்ற ஜெனரலே பெப்பிரவரி 8 அன்று இராஜபக்ஷவுக்கு எதிராஙக சதித் திட்டம் தீட்டியதாக ஒப்புவிக்கப்படாத குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அரசாங்க-சார்பு குண்டர்கள் பல வேலைத் தளங்களிலும் எதிர்க் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்து இரண்டு நாட்களின் பின்னர் ஊர்காவற்துறையில் உள்ள பல கிராமங்களுக்குள் குதித்த ஈ.பி.டி.பி. குண்டர்கள், கிராமவாசிகளை அச்சுறுத்தியதோடு சரீரத் தாக்குதலையும் நடத்தினர். ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்காமல், பொன்சேகாவை அல்லது சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸை ஆதரித்தமைக்காக அவர்கள் மக்களை தூற்றினர். அந்தத் தேர்தலில், இராஜபக்ஷ மீதும் பொன்சேகா மீதும் உள்ள அவர்களது எதிர்ப்பின் காரணமாக வட மாகாணத்தில் 74 வீதமான வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. ஈ.பி.டி.பி. யால் மிகவும் சிறிய எண்ணிக்கையிலான வாக்குகளையே இராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுக்க முடிந்தது.

யுத்தத்தை எதிர்ப்பதிலும் மற்றும் வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தினையின்றி திருப்பியழைக்கக் கோருவதிலும் சோ.ச.க. க்கு நீண்ட வரலாறு உண்டு. ஈ.பி.டி.பி. இராணுவத்துடனும் கொழும்பு அரசாங்கத்துடனும் கூட்டாகச் செயற்படுவதில் இட்டு நிரப்பும் வகிபாகத்தை அம்பலப்படுத்துவதிலும் சோ.ச.கட்சி ஈடுபட்டு வந்துள்ளது.

இதன் விளைவாக, ஈ.பி.டி.பி. யினரும் இராணுவத்தினரும் யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மீது பலதடவை தாக்குதல் தொடுத்துள்ளனர். 2000ல் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மீன் பிடி மீதான கடற்படையின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்த போது, ஊர்காவற்துறையில் வைத்து அவர்களை ஈ.பி.டி.பி. தாக்கி அச்சுறுத்தல் விடுத்தது. கடற்படையின் கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு ஈ.பி.டி.பி. மீனவர்களை கூட்டமொன்று கூட்டி அறிவுறுத்திய போதிலும், மக்கள் அதைச் செய்யவில்லை. இந்த தோல்விகளால் ஆத்திரமுற்ற ஈ.பி.டி.பி. குண்டர்கள், சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் ஒருவரை கூட்டமொன்றுக்கு பலாத்காரமாக இழுத்துச் சென்றதோடு, இன்னொருவர் தப்பிப் போகும் போது அவரை சுட்டனர்.

2007 மார்ச் 22 இரவு, ஊர்காவற்துறை தீவின் வேலணை பிரதேசத்தில் வைத்து சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும், அருகில் உள்ள புங்குடு தீவுக்கு சென்று திரும்பி வரும்போது காணாமல் போயினர். சோசலிச சமத்துவக் கட்சி சேகரித்த ஆதாரங்கள், இந்த சம்பவத்தில் கடற்படையும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகளும் சம்பந்தப்பட்டிருப்பதை காட்டின. விமலேஸ்வரனும் மதிவதனனும், இராணுவத்துடன் கூட்டாக செயற்படும் அரசாங்க-சார்பு கொலைப் படைகளால் கடந்த நான்கு ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட அல்லது படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களில் அடங்குவர். இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், இந்த வழக்குகள் தொடர்பாக சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை.

இராஜபக்ஷ உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது அரசாங்கத்தின் தாக்குதலை உக்கிரமாக்க தயாராகிக்கொண்டிருக்கும் நிலையிலேயே சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் மீது புதிதாக தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடனேயே அது சர்வதேச நாணய நிதியம் கோரும் கொடூரமான வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்தத் தொடங்கும். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஏனைய அரசியல் எதிரிகள் மீது குண்டர் தாக்குலும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்படுவதானது, இந்த பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தை திணிக்க அது பயன்படுத்தவுள்ள ஒட்டு மொத்த வழிமுறைகள் சம்பந்தமாக தொழிலாள வர்க்கத்துக்கு விடுக்கும் கூர்மையான எச்சரிக்கையாகும்.

ஈ.பி.டி.பி.யின் தாக்குதலை கண்டனம் செய்யுமாறும் தனது அரசியல் வேலைகளை செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சிக்கு உள்ள ஜனநாயக உரிமையை காக்குமாறும் நாம் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். நாம் நாளை மார்ச் 21, ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள தேர்தல் கூட்டத்துக்கு வருகை தருமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், எமது வேட்பாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச மாற்றீட்டைப் பற்றி விளக்குவதோடு கலந்துரையாடலும் நடத்துவார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved