World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

The Greek debt crisis signals a new stage in class conflict

கிரேக்க கடன் நெருக்கடி வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தை அடையாளம் காட்டுகிறது

Statement of the International Committee of the Fourth International
17 March 2010

Back to screen version

1. கிரேக்க கடன் நெருக்கடியானது 2008ல் அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸின் சரிவினால் தூண்டிவிடப்பட்ட உலக பொருளாதார மந்தநிலையில் இப்பொழுது புதிய கட்டத்தை குறிக்கிறது. முழு நிதிய உடைவைத் தடுக்க, கடனில் ஆழ்ந்த வங்கிகளுக்கு ட்ரில்லியன் (இலட்சம் கோடி) கணக்கான பணத்தை உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கொடுத்ததன் மூலம் உலக மந்தநிலைக்கு தமது பிரதிபலிப்பை காட்டின. வங்கிகளை மீட்பதற்கு தொழிலாளர்கள் விலை கொடுக்க வேண்டும் என்ற விதத்திலேயே இந்த அரசாங்கங்கள் நிதி மூலதனத்தின் சார்பில் நடந்து கொள்கின்றன. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை பல தலைமுறைகள் பின்னோக்கித் தள்ளும் அவர்களின் முயற்சி, ஐரோப்பாவிற்குள்ளும் உலகெங்கிலும் பாரிய வர்க்கப் போராட்டங்களை நிச்சயமாக விரிவாக்கும். கடன் தர நிர்ணய நிறுவனமான (Credit rating agency) மூடிஸ் (Moody's) மார்ச் 15 திகதி அறிக்கையில் எச்சரித்துள்ளபடி, உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்ட அரசாங்கங்கள் மேற்கோள்ள வேண்டிய முயற்சிகளில் "தவிர்க்க முடியாமல் பெரும் நிதிய சமாளிப்புக்களை செய்யவேண்டி இருக்கும். இவை சமூக ஒழுங்கின் தன்மையை சோதனைக்கு உட்படுத்திவிடும்." குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்காவின் கடன் தரங்கள் ஆபத்தான முறையில் உயர்ந்துள்ளன என்று கூறப்பட்டிருக்கும் ஒரு அறிக்கையிலேயே மூடிஸ்ஸின் அறிவிப்பு வந்துள்ளது.

இந்த சர்வதேசப் பின்னணியில், மிக சக்தி வாய்ந்த உலக வங்கி நிறுவனங்கள், முழு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு உதாரணத்தை காட்டும் வகையில் கிரேக்கத்தை மூலோபாய ரீதியில் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளனர் என்பது வெளிப்படை. ஐரோப்பிய ஒன்றியத்தில் 2 சதவிகிதத்திற்கு சற்றே அதிகமான அதன் சிறிய பொருளாதாரம் மற்றும் அதன் உயர்ந்த கடன் நிலைமைக்குள் அது ஒரு சாத்தியமான இலக்காகிவிட்டது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தலைவர் ஜோன்-குளோட் திறிசே (Jean-Claude Trichet), டிசம்பர் 3ம் தேதி ஊக்கப் பொதி வழங்கும் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன என்று அறிவித்தார். முன்பு ஐரோப்பிய மத்திய வங்கி 500 பில்லியனுக்கும் மேலாக வங்கிகளுக்கு கொடுத்து. அதனால் அவை அரசாங்கங்களுக்கும், தொழில்துறைக்கும் ஆபத்து இல்லாமல் கடன் கொடுக்கக் கூடியதாக இருந்தது. திறிசேயின் அறிக்கை வெளிவந்து சில நாட்களின் பின்னர், நிதிய நிறுவனங்கள் கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினின் கடன் தரங்களை குறைக்கத் தொடங்கியதோடு வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்தத் தொடங்கின. பைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளபடி, அவை "கிரேக்கத்தை அயர்லாந்து வகை சிக்கனத்திற்கு தள்ள விரும்பின." அப்பொழுது அயர்லாந்து அரசாங்கம் மார்ச் 2009ல் இயற்றப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை, அலையென வந்த வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு நிறைவேற்றியது.

சர்வதேச முதலீட்டாளர்கள், கிரேக்க கடன்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி யூரோவிற்கு எதிராக ஊகவணிகமும் செய்தனர். பிரஸ்ஸல்ஸ், பேர்லின் மற்றும் பாரிஸில் இருந்த அதிகாரத்துவத்தினர் ஏதென்ஸில் இறங்கி மிகக்கடுமையான வெட்டுக்களை கோரினர். 2008ல் தங்கள் வங்கிகளுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன்களை கொடுத்த அதே ஐரோப்பிய அரசாங்கங்கள், கிரேக்கத்தின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு தேவையான 30 பில்லியன் யூரோக்களை கொடுக்க நிதி இல்லை என்றதுடன், அந்தப் பணம் முற்றிலும் தொழிலாளர்களின் இழப்பில் ஈடுகட்டப்பட வேண்டும் என்றனர்.

இந்த இலக்கை அடைவதற்கு அவர்கள் கிரேக்க அரசாங்கத்தின் கோழைத்தன ஒத்துழைப்பை நம்பினர். அக்டோபர் 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிரதம மந்திரி ஜோர்ஜியஸ் பாப்பாண்ட்ரூ, "இந்த பாரிய சமத்துவமின்மையை தோற்றுவித்த பெரும் அதிகாரக் குவிப்பை கொண்டு" தன்னுடைய இழிந்த தேர்தல் உறுதிமொழிகளை விரைவில் கைவிட்டார். தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட வேண்டிய வெட்டுக்கள் பற்றி பேச்சுக்களை நடத்த முதலாளிகளையும் தொழிற்சங்க தலைவர்களையும் அழைத்தார். டிசம்பர் 27 அன்று அவர் சமூகநலச் செலவுகளை 10 சதவிகிதம் குறைக்கும் கடும் சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை இயற்றினார். அதில் முக்கியமாக சுகாதார காப்புறுதி வெட்டுக்கள் அடங்கியிருந்தன.

ஜனவரி மாதம், கிரேக்கத்தைப் போல் தமது கடன் வாங்கும் வட்டி விகிதங்களும் அதிகரித்த நிலையில், ஸ்பெயினிலும் போர்த்துகல்லிலும் முறையே பிரதமர் ஜோஸே லுயி ஸபடேரோ மற்றும் பிரதமர் ஜோஸ் சாக்கரடிஸின் சமூக ஜனநாயக அரசாங்கங்கள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பொதுப் பணிகளில் வெட்டுக்களை கொண்டுவரத் திட்டங்களை தீட்டின.

பெப்பிரவரி மாதம், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது சர்வதேச நாணய நிதியம் (IMF) கிரேக்கத்திற்கு பிணை கொடுக்கும் என்ற விவாதங்களுக்கு இடையே, பாப்பாண்ட்ரூ ஐரோப்பியத் தலைநகரங்களுக்கு பயணித்தார். ஏதென்ஸ் தன்னுடைய பொறுப்புக்களை செவ்வனே தீர்க்கும் என்று அவர் அரசியல்வாதிகளுக்கும் வங்கியாளர்களுக்கும் உத்தரவாதம் கொடுத்தார். பெப்ரவரி 16 அன்று, ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் கூட்டம், கிரேக்க அரசாங்கம் அதன் பாராளுமன்றத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றி அவ்வப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐரோப்பிய மத்திய வங்கிக்கும் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஏதென்ஸ், மார்ச் 5ம் தேதி ஒரு புதிய கடும் சிக்கன திட்டத்தை இயற்றியது. அது பற்றாக்குறையை இன்னும் 4.84 பில்லியன் யூரோக்கள் வரை குறைப்பதற்காக, பொதுத்துறை ஊதியங்களை 10 சதவிகிதம் குறைத்து, ஓய்வூதிய அதிகரிப்பை நிறுத்தி, எரிபொருள், மதுபானம், சிகெரட்டுக்கள் மீது பிற்போக்குத்தன வரிகளை சுமத்தியது. இத்தகைய பெரும் வெட்டுக்களும் போதாதவை என்று பரந்த அளவில் கருதப்பட்டன. "தவறான முறையில் இவை எளிதில் பற்றாக்குறை அடைப்பு என்ற இலக்கை அடைவதை கடினமாக்கக்கூடும். வெளிநாட்டு வணிகத்தில் அதிசயமான முன்னேற்றம் இல்லாத நிலையில், மிகுந்த அளவில், விரைவில் சமூகநலக் குறைப்பை முன்னெடுப்பதானது கிரேக்க பொருளாதாரத்தை சுருங்க வைத்து, வரி வருமானங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பிணைந்துள்ளது" என்று பைனான்ஸியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்

2. சமூகநல செலவுகள் மற்றும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளை குறைத்தலுக்கும் அப்பால், நிதியப் பிரபுத்துவத்தின் இலக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தகர்க்க இயலுமா என்பதாகும். கிரேக்கத்தைப் பற்றி எழுதுகையில், "சமூக அழுத்தத்திற்கு அரசாங்கம் விட்டுக் கொடுத்துவிடும் என்ற அச்சம் நிதிய வட்டங்களில் உள்ளது" என்று லா மொன்டே கூறியது. ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சமூக சிக்கன நடவடிக்கை திட்டங்களை எதிர்கொள்கின்றனர். வெகுஜன எதிர்ப்பு கிளம்பும் சூழ்நிலையில், வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்தும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அயர்லாந்தின் சிக்கன திட்டம் இப்பொழுது ஏனைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. அதன் முக்கிய அம்சங்களில், பொதுத்துறை ஊதியங்களை 12 முதல் 22 சதவிகிதம் வரை குறைத்தல், சமூகநல உதவிகளை 4 சதவிகிதம் குறைத்தல், எரிபொருள் மற்றும் மருத்துவ செலவுகளுக்கு வரியை அதிகரித்தல் ஆகியவை அடங்கும்.

போர்த்துக்கல், மொத்த தேசிய உற்பத்தியில் 9.3 வீதமாக உள்ள நாட்டின் பற்றாக்குறையை, கடுமையான ஊதிய வெட்டுக்கள், ஓய்வூதிய வெட்டுக்கள், மேலும் பல வரவு-செலவுத் திட்ட செலவினக் குறைப்புக்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் ஆகியவற்றின் மூலம் 2013க்குள் 3 சதவிகிதத்திற்கு குறைத்துவிடும் திட்டத்தைக் கொண்டுள்ளது.

ஸ்பெயின், பொதுத்துறையில் வேலைக்கு ஆள் சேர்ப்பதை நிறுத்துவது, ஓய்வூதிய வயதை 2 ஆண்டுகள் அதிகரிப்பது, பெறுமதி சேர் வரியை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம், செலவுகளில் 50 பில்லியன் யூரோக்களை குறைப்பதற்கு முயல்கிறது.

பிரான்ஸ், பெப்பிரவரியில் 100 பில்லியன் யூரோக்களை குறைக்கும் மூன்று ஆண்டு சிக்கன திட்டமொன்றை முன்வைத்தது. அது மொத்த தேசிய உற்பத்தியில் 8.2 வீதமாக உள்ள வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை, 3 சதவிகிதம் வரை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதுடன் புதிய ஓய்வூதிய வெட்டுக்களையும் தயாரித்து வருகின்றது.

மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் கிரேக்கத்தை போல் நிதிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. கிரேக்கத்தை விட 7 மடங்கு பெரிய பொருளாதாரமான இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக அதிக கடன் மட்டத்தைக் கொண்டுள்ளது -இது மொத்த தேசிய உற்பத்தியில் 116 சதவீதமாகும்.

பெரிய பிரித்தானியாவின் 2009 வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, 178 பில்லியன் பவுண்டுகளை அல்லது மொத்த தேசிய உற்பத்தியில் 12 சதவிகிதத்தை அடையக்கூடும்.

சீனாவின் 40 சதவிகித ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது, மொத்த தேசிய உற்பத்தியில் 47 சதவிகிதத்தை கொண்டுள்ள ஜேர்மனி, அரச-மானியத்திலான குறுகிய-நேர வேலையின் ஊடாக, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தற்காலிகமாக குறைத்துள்ளது. ஆயினும், இந்த நெருக்கடி இன்னும் அதிகமாக இந்த ஆண்டு உணரப்படும். வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, 2010ல் மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவிகிதமாக அதிகரிக்கும் என ஜேர்மன் மத்திய வங்கி (Bundesbank) கணக்கிட்டுள்ளது. பேர்லின் வருடாந்த செலவில் 10 பில்லியன் யூரோக்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. இராணுவச் செலவுகளும் கடனுக்கு வட்டி கொடுத்தலும் அதிகரித்துள்ள நிலைமையில், சமூகச் செலவினக் குறைப்புக்கள் மூலமே சேமிப்புக்கள் வரமுடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு

3. கடன் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனத்தை அப்பட்டமாக காட்டுகிறது. ஐரோப்பாவின் "சமூகச் சந்தை பொருளாதாரம்" பற்றிய வெற்றுச் சொற்றொடர்களை தவறாக அர்த்தப்படுத்தும் பிரஸ்ஸல்ஸில் உள்ள அதிகாரத்துவத்தினர், நேரடியாக பிரதான நிதிய நலன்களின் கருவியாக செயல்படுகின்றனர்.

கடனில் உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தேசியவாத அழுத்தங்களும் ஊகங்களும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவின் வருங்காலத்தையே சந்தேகத்திற்கு உள்ளாக்கிவிடுகின்றன. சில பொருளாதார வல்லுனர்கள் யூரோவைக் கைவிடுமாறு கிரேக்கத்துக்கு ஆலோசனை கூறுகின்றனர். எனவே அது தனது தேசிய நாணயத்தின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் சர்வதேச போட்டியிடும் நிலைமையை அது மீட்கக் கூடிய அதே நேரம், தொழிலாளர்களை பணவீக்கத்தின் மூலம் வறிய நிலையிலேயே வைக்கலாம். மற்றவர்களோ, கடன்பட்டுள்ள நாடுகளுடனான அதன் பிணைப்பை துண்டிப்பதன் பேரில், ஜேர்மனி யூரோவை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என யோசனை தெரிவிக்கின்றனர்.

ஜேர்மனி கடந்த காலத்தில் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு மற்றும் விரிவாக்கத்தை அதிக நிதிய உதவிகளை வழங்கி ஆதரித்தது. அது ஒரு இலாபகரமான முதலீடாக இருக்கும் என்று கணக்கிட்டது. இப்பொழுது அது கிரேக்கத்திற்கு நிதி உதவி கொடுப்பதை எதிர்த்து மிக உரத்து குரல் கொடுக்கும் நாடாக உள்ளது. ஜேர்மனிய செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள், நாஜி காலத்திலற்கு பின்னர் கேட்கப்பட்டிராத திமிர்த்தனத்தில் கிரேக்க மக்களை சோம்பேறிகள், ஊழல் மலிந்தவர்கள் என்று அவதூறாக எழுதியுள்ளன. தேசியவாத சக்திகள், கிரேக்கத்திலேயே தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை நடத்துவதில் தங்கள் பங்கை மூடி மறைக்கும் விதத்தில் ஜேர்மனிய எதிர்ப்பு உணர்வை தூண்டி விடுகின்றன.

இந்த உணர்வை சுருக்கிக் கூறும் வகையில் Süddeutsche Zeitung பத்திரிகை பின்வருமாறு எழுதியது: "யூரோ, ஐரோப்பாவை வளர்ச்சி, வேலைகள், செழுமை ஆகியவற்றுடனான ஒரு புதிய பொற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் ஜேர்மனிய நாணயத்திற்கு விடை கொடுத்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.... நாணய ஒன்றியம் அரசியல் ஒன்றியத்தைவிட அதிக தொலைவில் உள்ளது --இது ஐரோப்பாவையே பகுதியாக சிதைக்கின்றது."

மக்கள் பெரிதும் எதிர்க்கும் நடவடிக்கைகளையே வங்கிகள் கோரும் நிலையில், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சில பிரிவுகள் ஜனநாயக ஆட்சியை கைவிடுவதைப் பற்றி கூட பரிசீலிக்கின்றன. இப்பொழுது வங்கிகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளும் 35 ஆண்டுகளுக்கு முன்புதான் சர்வாதிகார ஆட்சிகளைக் கொண்டிருந்தன என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். 1967 க்கும் 1974க்கும் இடையே நேட்டோவுடைய ஆதரவுடன் ஒரு மிருகத்தன இராணுவ ஆட்சி கிரேக்கத்தை ஆண்டது. போர்த்துக்கலில் 1926ல் நிறுவப்பட்ட பாசிச சர்வாதிகார ஆட்சி, 1974 வரை அகற்றப்படவில்லை. ஸ்பெயினில் 1975ல் பிராங்கோவின் மரணத்திற்கு பின்னர், உள்நாட்டுப் போர் முடிந்து 36 ஆண்டுகளுக்கு பின்புதான் பாசிச சர்வாதிகாரத்தில் இருந்து மேலைத்தேய ஐரோப்பிய-மாதிரி முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான மாற்றம் வந்தது.

தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலும் தொழிற்சங்கங்களின் பங்கும்

4. ஐரோப்பிய சிக்கன பிரச்சாரத்துக்கு, தொழிலாள வர்க்கம் கண்டம் முழுவதும் வேலைநிறுத்தங்களை நடத்தியதன் மூலம் பிரதிபலித்துள்ளது. கிரேக்கத்தின் மொத்த மக்கள் தொகையான 11 மில்லியனில், 2 மில்லியன் தொழிலாளர்கள் பெப்பிரவரி 24 அன்று தேசிய வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இந்த விகிதம் பிரான்சில் 1968ல் மே-ஜூன் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்ட மக்களின் சதவிகித்துடன் ஒப்பிடத்தக்கது. மார்ச் 11 நடத்தப்பட்ட மற்றொரு வேலைநிறுத்தம் நாட்டின் பெரும்பகுதியை ஸ்தம்பிக்கச் செய்தது. பொருளாதாரத்தின் முழுப் பகுதியும் அன்றாடம் எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் ஸ்தம்பித்துப் போயின.

வங்கிகள் நேரடியாக இலக்கு வைத்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் இதேபோன்ற வேலைநிறுத்தங்களை நடத்தி உள்ளனர். போர்த்துகலில் அரை மில்லியன் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சிக்கனத் திட்டங்களுக்கு எதிராக மார்ச் 4 அன்று வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றனர். ஸ்பெயினில் பெப்ருவரி 23 அன்று ஓய்வூதியத் தகுதி பெறும் வயதை 2 ஆண்டுகள் உயர்த்தியதற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 200,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெப்பிரவரியில் கடைசி இரு வராங்களும், விமானத் துறையில் ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்த தொடக்கத்தை கண்டன. ஜேர்மனியில் லுப்ட்ஹன்சா விமானிகள் வேலைநிறுத்தம் செய்தனர். பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்தனர். இங்கிலாந்தில் பிரிட்டிஷ் ஏயர்வேஸ் விமான பணிக் குழுவினரில் அதிக பெரும்பான்மையினர் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த நடவடிக்கைகள் அரசியல் தலைமை இல்லாத நிலையில் வெளிப்பட்டாலும், அவை வெட்டுக்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க, வர்க்க சீற்றத்தின் சக்தி வாய்ந்த இருப்புக்கள் பற்றி முன் அறிவிப்பைக் கொடுக்கின்றன. வேலை நிறுத்த அலையின் சர்வதேச தன்மை, தொழிலாள வர்க்க நலன்களின் புறநிலை ஐக்கியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தங்கள் பரவி இருந்தது மட்டுமல்லாமல், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சியின் நடுவே இவை நடைபெற்றன --குறிப்பாக மார்ச் 4 அன்று கல்வித்துறை எதிர்ப்புக்கள், அமெரிக்க மேலைக்கடற்கரையில் மையம் கொண்டிருந்தன.

விரைவாகப் பெருகிய வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்களை ஒதுக்கித் தள்ளவும் அவற்றை கட்டுப்படுத்தவும் தம்மால் முடிந்தவற்றை செய்த தொழிற்சங்கங்களாலேயே நிறுத்தப்பட்டன. வேலைநிறுத்தத்தை ஆதரித்து வாக்களிக்கப்பட்ட பின்னர், பிரிட்டிஷ் ஏயர்வேஸ் தொழிற்சங்கங்கள் பல வாரங்களுக்கு வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுக்கவில்லை. பிரெஞ்சு CGT, பிரான்சின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைங்களில் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமாகையில் வேலைநிறுத்தங்களை கைவிட்டது. செக் தொழிற்சங்கங்கள், மார்ச் 4 அன்று திட்டமிட்டிருந்த போக்குவரத்துத்துறை வேலை நிறுத்தத்தை கைவிட்டன.

இது தொழிலாளர்களின் போராட்டங்களை பிரித்து அழிக்கும் தொழிற்சங்கத்தின் கொள்கையை பிரதிபலிக்கிறது. இதன் நோக்கம், வங்கிகளின் சமூகச் செலவுக் குறைப்புக்களுக்கு எதிராக ஒரு அரசியல் இயக்கம் வெளிப்படுவதை தடுப்பதாகும். "கூட்டமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆதரவு கொடுத்தன. நாங்கள் ஒன்றும் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை" என்று தனியார்த்துறை தொழிற்சங்கமான GSEEJ இன் தலைவர் ஸ்டதிஸ் எனெஸ்டிஸ் (Stathis Anestis) உலக சோசலிச வலைத் தளத்திடம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். தான் வெட்டுக்களை ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டதாக எனெஸ்டிஸ் வலியுறுத்தினார்: "எதை ஏற்பது, எதை மறுப்பது என்பது நாம் இருக்கும் நிலைமையை பொறுத்ததே. கழுத்தில் கத்தி வைக்கப்பட்டிருக்கும்போது, நிலைமை வேறுதான்."

இக்கருத்துக்கள் அரசியல் நிலைமையின் இதயத்துக்குச் செல்லுகின்றன. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக நிதியச் சந்தைகளுடன் சேர்கின்றன. இது தொழிற்சங்க அதிகாரத்துவம் மத்தியதர வர்க்க மேல்தட்டின் ஒரு பிரிவாக வளர்வதை பிரதிபலிக்கிறது. அது தொழிலாள வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் அரசியல் இடுக்கிப்படியை இறுக்குவதுடன், முழு நனவுடன் தொழிலாளர்களை பகைக்கின்றது.

இவை முதலாளிகளுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த அரசாங்கத்தை நம்பியுள்ளன. அதே போல் நிறுவனங்கள் இலாபகரமாச் செயல்படும் விதத்தில் தனியார் உடைமைக் கொள்கையையும் ஏற்கின்றன. வங்கிகள் அரசாங்கத்திற்கு நிதியை நிறுத்துவதாக அச்சுறுத்தும்போது அவை தொழிலாளர்கள் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் மீறி வங்கிகள் அரசாங்கத்திற்கு கடன்களை கொடுப்பதை நிறுத்தினால், "பொறுப்பான" தொழிற்சங்க அதிகாரிகள், தங்கள் எதிர்ப்புக்களை மட்டுப்படுத்தி "நிலவும் நிலைமைக்கு" ஏற்றவாறு -அதாவது வங்கிகள் ஏற்கும் விதத்தில்-திட்டங்களை முன்வைப்பர்.

ஐரோப்பா முழுவதும் தொழிற்சங்கங்கள் இதே பங்கைத்தான் வகிக்கின்றன. பிரெஞ்சு CGT தொழிற்சங்கம் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் நெருக்கமாக ஒத்துழைப்பது பிரெஞ்சு செய்தித்தாள்களை "சார்க்கோசி- CGT கூட்டணி" என்று எழுத வைத்துள்ளது. ஜேர்மனியில் ஐ.ஜி. மெட்டாலின் தலைவர் பெர்த்ஹோல்ட் ஹூபர், சமீபத்தில் தன்னுடைய 60 வது பிறந்த நாளை, அங்கேலா மேர்க்கெல், பல மந்திரிகள், வணிகர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடன் கொண்டாடினார். தொழிற்சங்கங்கள், வணிகம், அரசாங்கம் ஆகியவை ஒரு தனி நிறுவனமாக உருவாகியிருப்பதை காட்டுவதற்கு இதைவிட தெளிவான சித்திரம் ஏதும் இல்லை.

PASOK யும் SYRIZA வின் காட்டிக் கொடுப்பும்

5. முதலாளித்துவ அரசியல் மொழியில் ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளை எவரும் "இடது" என்று விளக்க முடியாது. இவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் பங்கு பெறும் ஒரு வலதுசாரி, முதலாளித்துவ சார்பு போக்கினராவர். கிரேக்கத்தில் முந்தைய பழைமைவாத அரசாங்கம் பாப்பாண்ட்ரூவால் பதிலீடு செய்யப்பட்டது, சமூக வெட்டுக்களுக்கான ஒரு முன்னிபந்தனை ஆகும். இது சிக்கன வேலைத் திட்டத்துக்கு அரசியல் மாற்றீடு இல்லை என்று தொழிற்சங்கங்களை எளிதில் கூற வைக்கும்.

பாப்பாண்ட்ரூ பதவியில் இருத்தப்பட்டதில் முதலாளித்துவத்தின் இருபுறத்து ஆதரவும் இருந்துள்ளது என்பதற்கு அடையாளங்கள் உள்ளதுடன், தேவையான வெட்டுக்களை செயல்படுத்த இது தீர்க்கமானது என்றும் கருதப்பட்டது. பழைமைவாத பிரதம மந்திரி கோஸ்டாஸ் கரமானலிஸ், கடந்த இலையுதிர்காலத்தில் தனது கட்சியின் தோல்வி தவிர்க்க முடியாது என்று தெரியவந்ததும் முன்கூட்டிய தேர்தல்களை நடத்தினார். எதிர்பார்த்தபடி பாப்பாண்ட்ரூ போலி இடது வார்த்தை ஜாலங்களுடன் தேர்தலை வென்றார். அவர் மூன்று பில்லியன் யூரோக்கள் பிணை எடுப்புப் பொதி ஒன்றிற்கான திட்டத்தைக் கொண்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலைப்பாடுகளை பதவிக்கு வந்த உடனேயே அவர் கைவிட்டார்.

இதில் பாப்பாண்ட்ரூ, முன்னாள் சமூக ஜனநாயக ஜேர்மனிய அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின் வலதுசாரிக் கொள்கைகளை விசுவாசத்துடன் பிரதிபலித்தார். ஷ்ரோடர் செயற்பட்டியல் 2010ன் கீழ், பேரழிவு தரக்கூடிய சமூக வெட்டுக்களை அறிவித்து பெரிய குறைவூதிய துறையை தோற்றுவித்தார். அதேபோல் இவர், தன் சிக்கனத் திட்டங்கள் மூலம் சிட்டி ஒப் லண்டன் வங்கிகளின் விருப்பத்திற்குரிய கருவியாக தொழிற்கட்சியை மாற்றிய, டோனி பிளேயர் காட்டிய வழியையும் பின்பற்றினார். இதுதான் ஐரோப்பா முழுவதும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் வடிவமைப்பாக உள்ளது.

தொழிற்சங்கம் மற்றும் சமூக ஜனநாயக சீர்திருத்தவாதத்தின் இரும்புத்தளையை உடைப்பதற்கு தொழிலாளர்களுக்கு முக்கிய தடையாக இருப்பது, கிரேக்கத்தில் SYRIZA, ஜேர்மனியில் இடது கட்சி (Die Linke) மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற முன்னாள் இடது கட்சிகளின் ஒரு தட்டினரே ஆவர். அரச இயந்திரங்கள் மற்றும் ஸ்ராலினிச அல்லது பப்லோவாத பின்னணியுடன் கூடிய உயர்தொழில் வகுப்புக்களில் இருந்து வந்த இவர்களுக்கு, தொழிலாள வர்க்கத்தை இருக்கும் அதிகாரத்துவங்களுக்கு பின்னால் கட்டிப்போடுவதில் பல தசாப்த கால அனுபவம் உண்டு. அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் வெற்றிகளை பெற்றாலும், முதலாளித்துவ அரசியலில் தீர்க்கமான பாத்திரம் வகிக்கின்றனர்.

தொழிற்சங்கங்கள் தலைமையிலான ஒரு நாள் வேலைநிறுத்தத்தின் மூலம், சமூக ஜனநாயகக் கட்சியை வேறொரு கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்யலாம் என்ற போலி நம்பிக்கைகளை இத்தகைய குழுக்கள் சிடுமூஞ்சித்தனமாக வளர்க்கின்றன. பாப்பாண்ட்ரூ தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு தன் வாழ்த்துக்களை தெரிவிக்க தொலைபேசியில் அவரை அழைத்த SYRIZA தலைவர் அலெக்ஸிஸ் சிப்ராஸ், தன்னுடைய பேச்சில் 180 பாகை திரும்பினார். சமீபத்தில் அவர் பாப்பாண்ட்ரூவின் நடவடிக்கைகள் "நியாயமற்றவை, மிருகத்தனமானவை, குற்றம் சார்ந்தவை" என்றார். ஆயினும், அதன் பின் பாப்பாண்ட்ரூ அரசாங்கம் "அதன் சோசலிச சிந்தனையைக் கைவிட்டுவிட்டது" என்று முறைப்பாடு செய்த அவர், தொழிற்சங்கங்களுடன் கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தகைய கருத்துக்கள், சிப்ராசின் குட்டி முதலாளித்துவ அரசியலின் நேர்மையற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. பாப்பாண்ட்ரூ போன்ற வங்கிகளின் இயக்குனர், கைவிடக்கூடிய ஒருவிதமான "சோசலிச சிந்தனையை" கொண்டிருந்தார், அல்லது தொழிற்சங்க தலைவர்கள் உண்மையான போராட்டத்திற்கு திட்டமிட்டிருந்தனர் என்ற கூற்றுக்கள் கேலிக்கூத்தான பொய்கள் ஆகும்.

ஐரோப்பிய குட்டி முதலாளித்துவ "இடதுகளின்" பங்கு

6. ஆனால் இந்த நிலைப்பாடுகள் அனைத்தும் ஐரோப்பிய இடதுடன் பொதுத் தன்மையை கொண்டவை. பிரான்சில் சார்க்கோசிக்கும் CGT க்கும் இடையே ஓய்வூதிய வெட்டுக்கள் பற்றி பெப்பிரவரி 15 நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு முன், NPA தலைவர் ஒலிவியே பெசன்ஸநோ பகிரங்கமாக ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மரி-ஜோர்ஜ் புஃபே (Marie-Georges Buffet) மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் மார்டின் ஓப்ரி (Martine Aubry) இருவரையும் ஓய்வூதிய கொடுப்பனவை பாதுகாக்க ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் இவர்கள் அப்பொழுதுதான் ஓய்வூதிய வயது அதிகரிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருந்தனர்!

ஸ்பெயினில் ஐக்கிய இடது (United Left IU) கட்சியின் செய்தித் தொடர்பாளர் அடோல்போ பாரெனா, தான் ஸாபடேரோ "இடதிற்கு திரும்ப முயல்வார்" என்று நம்புவதாக கூறினார். UGT தொழிற்சங்கங்கள் ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டங்களை அவர் ஆதரித்த அதே சமயம், ஸாபடேரோவின் வெட்டுக்களுக்கு தன் கொள்கையற்ற எதிர்ப்பை வெளிப்படுத்திய UGT செய்தித் தொடர்பாளர் ஜூலியன் லோரிஸ், அவை "தக்க நேரத்திலும், முறையாகவும் நடத்தப்படவில்லை" என்றார்.

இவர்கள் எச்சரிக்கையான சொற்றொடர்களின் பின்னே மறைந்திருக்கையில், இக்கட்சிகள் சமூகநல வெட்டுக்களின் தேவைகளை ஏற்றுக்கொள்கின்றன. அவற்றின் பொது முன்னோக்கு, முதலாளித்துவம் கடன் நெருக்கடிக்கு முன்பு மேற்கொண்டுவந்த எளிய பண கொள்கைளுக்கு மீண்டும் திரும்ப அதை வற்புறுத்த முடியுமானால், படிப்படியாக குறைக்கப்பட்டுள்ள சமூகநல நிலைமை உயிர் பிழைக்க முடியும் என்பதேயாகும். இத்துடன், ஐரோப்பிய ஒன்றிய செலவை அதிகரித்தல் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மீதான அரசியல் கட்டுப்பாடு போன்ற, ஐரோப்பிய ஒன்றியத்தை சீர்திருத்த விடுக்கப்படும் வேண்டுகோள்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 2010ல் பேர்லினில் ஐரோப்பிய இடதுகளின் தலைவர்கள் குழுவில் பேசிய சிப்ராஸ், "இந்த மதிப்பிழந்த ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு (Stability Pact) எதிராக சமூக நீதி, ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஒரு திட்டம்; ஐரோப்பிய மத்திய வங்கி மீதான பொது அரசியல் கட்டுப்பாடு; அங்கத்துவ நாடுகளுக்கு நேரடியாக கடன் கொடுக்கக் கூடிய சாத்தியம் மற்றும் ஐரோப்பிய பத்திரங்களை அறிமுகப்படுத்துதல்... ஒற்றுமையின்மைக்கு எதிராக ஐரோப்பிய வரவு-செலவுத் திட்டத்தை மீண்டும் அமுல்செய்தல் போன்ற திட்டங்களை" பிரேரித்தார்.

கடந்த ஆண்டு NPA இன் பிரான்சுவா சபாடோ இன்னும் நேரடியாக எழுதினார்: "கீன்சிய பிணை எடுப்புக் கொள்கைக்கான சூழ்நிலையை ஐரோப்பா நிறுவலாம். எவ்வாறெனிம், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள், அத்தகைய கொள்கையை முன்னெடுக்க ஆதிக்க வர்க்கங்களின் திறனின்மையையே காட்டுகின்றன... அவை புதிய நிதி நெறிகளை சுமத்த அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு விளைபயனுள்ள வகையில் கடன் கட்டுப்பாட்டை அமுல்செய்ய அவை முயற்சிக்கவில்லை." "ஐரோப்பிய மத்திய வங்கியின் சுயாதீனத்துக்கு முடிவுகட்ட வேண்டும்" என்றும் சபாடோ அழைப்புவிடுத்தார்.

இத்தகைய திட்டங்கள் தெளிவற்றவை, பிற்போக்குத்தனமானவை. உற்பத்தியில் புத்துயிர்ப்பு இல்லாததால், வங்கி பிணை எடுப்பிற்கு காகித நாணயத்தை அச்சிடுதல் மற்றும் சமூகநல செலவுகளை மட்டுப்படுத்துவதும் இறுதியில் பணவீக்கத்தின் மூலம் தொழிலாளர்களை வறியவர்களாக ஆக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இத்திட்டங்கள் முக்கிய பிரச்சினையை தவிர்க்கின்றன: வங்கிகள், உற்பத்தி மற்றும் அரச அதிகாரத்தின் கட்டுப்பாடை எடுத்துக் கொள்ளாமல் தொழிலாளர்களால் தங்கள் வாழ்க்கைத் தரங்களை காக்க முடியுமா? இது புரட்சிகர சோசலிசத்தை ஆதரிக்கின்றார்களா அல்லது எதிர்க்கின்றார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் "தீவிரவாதிகளாக" அல்லது "முதலாளித்துவ-விரோதிகளாக" தம்மைக் காட்டிக்கொள்வதற்கு எடுக்கும் முன்னாள் இடதுகளின் முயற்சிகளுடன் பிணைந்துள்ளது.

உண்மையில், இக்கட்சிகள் தொழிலாள-வர்க்க-விரோத கொள்கைகளை செயல்படுத்தும் அரசாங்கங்களில் சேருவதற்கு தயாராக உள்ளன. இத்தாலியின் Rifondazine Communista ஒரு பிரதான அனுபவமாகும். இத்தாலியில் 2006-08ல் பிரோடி அரசாங்கத்தில் பங்கு பற்றிய இந்தக் கட்சி, ஓய்வூதிய வெட்டுக்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்பவும் பிரதானமாக வாக்குகளை அளித்தது. முன்னாள் இடதுகள் அதிக பட்சம் வங்கிகளுக்கு இடதில்தான் உள்ளனர்.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக

7. நிதி மூலதனமும் சமூக ஜனநாயகமும் தங்கள் பலத்தினால் வெட்டுக்களை கொண்டுவரவில்லை, மாறாக தொழிலாளவர்க்க கட்சிகள் இல்லாமையினால்தான் அவற்றை செய்யமுடிந்தது. பரந்த மக்களின் எதிர்ப்பு தொழிற்சங்கங்களினதும் மற்றும் முன்னாள் இடதுகளதும் பொய்களால் தடுமாறி, முடங்கிப்போயுள்ளது. ஐரோப்பாவை வறுமையில் தள்ளும் முதலாளித்துவத்தின் திட்டத்திற்கு எதிரான போராட்டமானது அனைத்துவிதமான ஸ்ராலினிசம் மற்றும் சந்தர்ப்பவாதங்களில் இருந்து முழுமையாக பிரிவதை இன்றியமையாததாக்குகிறது.

தொழிலாளர்களை தங்கள் சொந்த அரசியல் மரபை அறிந்து கொள்ளவிடாமல் அவர்களை தனிமைப்படுத்தும் ஒரு முயற்சியில், முன்னாள் இடதுகள் சோசலிசத்தை சுற்றி பொய்களின் மூட்டம் ஒன்றைத் தோற்றுவித்துள்ளனர். சமூக வெட்டுக்களுக்கு எதிராக ஒரு சோசலிச எதிர்ப்பை தொழிலாளர்களால் அபிவிருத்தி செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு (ICFI) பின்வரும் கோரிக்கைகளை வைக்கின்றது.

* வேலை நீக்கங்கள் செய்யக்கூடாது அல்லது வாங்கும் திறன் இழக்கப்படக் கூடாது

நிதி மூலதனமும் மற்றும் சமூக ஜனநாயகத்திலும் முன்னாள் இடதுகளிலும் இருக்கும் அதன் முகவர்களும் கூறும், பணம் இல்லை என்ற கூற்றுக்கள் பொய்யானவை. பல தசாப்தங்களாக சிக்கனம் மற்றும் தொழில்துறை நசிவின் மூலம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நிதியானது மூலதனத்தின் இலாப நலன்களுக்கு அன்றி தொழிலாளிகளின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே செலவவிடப்பட வேண்டும்.

* வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும்

தொழிலாள வர்க்க நலன்களின் மிக அடிப்படையான பாதுகாப்பிற்கு வங்கிகள் பொதுக்கட்டுப்பாட்டில் இருப்பது முக்கியமாகும். தனியார் கைகளில் இருக்கும் வங்கிகள், விரும்பியபடி நாடுகளை சீரழிக்கின்றன. அவை, தங்கள் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப உயர் வட்டி விகிதங்களை தோற்றுவிக்க கடன் கொடுப்பதை நிறுத்தி வைக்கின்றன, நிதி தொழில்துறையை வற்றச்செய்கின்றன, மற்றும் "போட்டித்தன்மை" என்ற பெயரில் உலகெங்கிலும் வாழ்க்கை தரங்கள் கீழ் நோக்கிச் சரிவதை மேற்பார்வை செய்கின்றன. அதன் செயலை நிறைவேற்ற --அதாவது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை வளர்க்க-- நிதித்துறை தனியார் நலன்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

* புரட்சிகர சோசலிசத்திற்காக முன்னாள் இடதுகளில் நம்பிக்கை வைக்கக்கூடாது

பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டு மையங்கள் தனியார் சொத்துடமையாக இருக்க வேண்டும் என்னும் கொள்கை காலம் கடந்துவிட்டமை, சோசலிசத்தின் தேவையைக் காட்டுகிறது. ஆனால் சமூகஜனநாயகம், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் இடதுசாரி பரிந்துரையாளர்களுடன் முறித்துக் கொள்ளாத வரை, தொழிலாளர்களின் கையும் காலும் வங்கிகளின் ஆணைகளோடு கட்டிப்போடப்பட்டிருக்கும். தொழிலாளர் ஆட்சிக்கான போராட்டத்திற்கு, புரட்சிகர சோசலிசக் கட்சிகளை கட்டமைப்பதை தவிர தொழிலாளர்களுக்கு வேறு மாற்றீடு இல்லை. அரச அதிகாரம் தொழிலாள வர்க்கத்தின் கைகளில் இருந்தால் மட்டுமே தேசியமயமாக்கப்படும் வங்கிகளும் பெரும் தொழிற்துறைகளும் வெகுஜனங்களுக்கு நன்கு சேவையாற்றும். தனிப்பட்ட தன்னலக் குழுக்களின் மீது எத்தகைய நம்பிக்கையற்ற நிலை உள்ளதோ அதேபோல்தான் நிதியத் தன்னலக் குழுக்களின் அரசாங்கத்தின் மீதும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இருக்க முடியாது.

*ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக

ஐரோப்பாவிற்குள் பெருகும் அழுத்தங்களும் யூரோ ஒருவேளை தகர்ந்து போகலாம் என்ற விவாதங்களும், ஐரோப்பிய ஒன்றியத் திட்டத்தின் வங்குரோத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவை ஐரோப்பாவை அழிவுகரமான முறையில் சிறு துண்டுகளாக்க அச்சுறுத்துகின்றன. இது ஐரோப்பிய பொருளாதார முகாம்களுக்கு இடையே வணிகப் போருக்கும் மற்றும் இறுதியாக யுத்தத்துக்கே அடித்தளம் இடக்கூடும். ஐரோப்பியத் தொழிலாளர்கள், உலக சோசலிசத்தை நிறுவுவதற்கான ஒரு படியாக, ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாளர்களின் ஐரோப்பிய அரசாங்கத்துக்கான அனைத்துலக போராட்டத்தின் மூலம் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

* போருக்கு ஒரு சதமும் கொடாதே

ஆப்கானிஸ்தானில் நேட்டோ போர் போன்ற வெளிநாட்டுப் போர்கள், நச்சுத்தனமான அரசியல் சூழலைத் தூண்டுவதுடன், அதி வலதுசாரி தேசியவாதத்தாலும் குடியேற்ற-விரோத பகைமைகளாலும் தொழிலாளர்களை பிரிக்கின்றன. இவை மீண்டும் மீண்டும் கொடூரங்களை ஏற்படுத்துவதற்கும் மேலாக, இப்போர்கள் மிகவும் அத்தியாவசியமான சமூக வளங்களை அழிவுக்குள்ளாக்குகின்றன. இவற்றை எதிர்ப்பது, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை ஸ்தாபிப்பதற்கும், இஸ்லாமிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழிலாளர்களுடன் அரசியல் ஒற்றுமையை ஸ்தாபிக்கவும் அத்தியாவசியமானதாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவை கட்டமைக்கவும்

8. ஐரோப்பாவில் உள்ள அரசியல், பொருளாதார நிலைமை தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்களின் தலைவிதி, நிதிய பிரபுத்துவத்தின் நலன்களின் பேரில் முழு நனவுடன் செயல்படும் பிற்போக்கு குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் கைகளில் உள்ளது. முன்னாள் ஸ்ராலினிச, முன்னாள் சோசலிச, முன்னாள் மார்க்சிச, முன்னாள் தீவிரவாத மற்றும் முன்னாள் சீர்திருத்தவாதிகளின் தலைமையிலான ஒவ்வொரு அமைப்பும், வெகுஜனங்களுக்கு சார்பான தமது வார்த்தை ஜாலங்கள் ஒருபுறம் இருக்க, அவை பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் முகவர்களாக செயல்படுகின்றனர். இவற்றுள் ஒன்றுகூட முதலாளித்துவ அரசாங்கத்திடம் இருந்து சுயாதீனமாக இருப்பவை அல்ல. PASOK, SYRIZA, பல சோசலிச கட்சிகள், போலி இடது நாடகம் ஆடும் பிரான்சின் NPA போன்றவை முழு ஊழல் நின்றந்தவை. இவற்றை "சந்தர்ப்பவாதிகள்" என்று கூறுவது கூட புகழுரையாகிவிடும் --ஏனெனில் பிறிதொரு வரலாற்றுக் காலத்தை சேர்ந்த அந்தச்சொல், நீண்டகால புரட்சிகர நலன்களை குறுகிய கால சீர்திருத்த நோக்கங்களுக்கு அடிபணியச் செய்வதை குறித்தது. தற்காலத்தில் இத்தகைய அமைப்புக்களின் பொதுப் பண்பு, புரட்சிகர வேலைத்திட்டத்தை மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படைத் தேவைகளை பாதுகாப்பதை கூட நிராகரிப்பதாகும். முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் "இடதுசாரி" முதுகெலும்பாக மட்டுமே செயற்படும், இத்தகைய குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் அரசியல் கட்டுப்பாட்டில் தொழிலாள வர்க்கம் இருக்கும் வரை, அது அடுத்து அடுத்து தோல்வியையே தழுவும்.

எனவே கிரேக்கத்தில், ஐரோப்பாவில் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள உடனடிப்பணி, இது சர்வதேச சோசலிசத்தை அடித்தளமாக கொண்ட ஒரு புதிய புரட்சிகர அரசியல் கட்சியை கட்டமைப்பதாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு (ICFI) மட்டுமே முதலாளித்துவ சுரண்டல், வறுமை மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி ஐக்கியப்படுத்த போராடும் ஒரே அரசியல் அமைப்பு ஆகும். தற்கால தொழிலாள வர்க்கம் கடினமான பிரச்சினைளை எதிர்கொண்டிருந்தாலும், இந்த அமைப்பு இவ்வுலகில் அத்தியாவசியமான மற்றும் தீர்க்கமான சக்தியாக உள்ளது. தற்போதைய உலக நெருக்கடி இன்னும் அதிகமான தொழிலாளர்களை, உலகின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தும். இப்பொழுது ஒரு புதிய புரட்சிகர போராட்டத்திற்கான காலம் தொடங்கிவிட்டது என்று ICFI நம்புகிறது. இது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் பற்றி செய்தி வெளியிடவும், அவற்றை ஐக்கியப்படுத்தவும் மற்றும் அரசியல் தலைமையை கொடுக்கவும் ஒரு அரசியல் சாதனமாக உலக சோசலிச வலைத் தளத்தை உருவாக்கியுள்ளது. அனைத்துலகக் குழு மார்க்சிச, ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை காப்பதில் பல தசாப்த போராட்ட அனுபவங்களை கொண்டுள்ளது.

இந்த அறிக்கையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள முன்னோக்கிற்காக போராடுமாறும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவில் இணையுமாறும் அரசியல் ரீதியில் அதிக நனவான தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் இளைஞர்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு அழைப்பு விடுக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved