World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குBritain's Chilcot inquiry: A whitewash of war crimes and Iraq war பிரிட்டன் சில்கோட் விசாரணை: போர்க் குற்றங்கள், ஈராக் போர் பற்றி முழுப் பூச்சு Robert Stevens தலைவர் சேர் ஜோன் சில்கோட் தலைமையில் நடந்து வரும் ஈராக் போர் மீதான விசாரணை தனது செயல்பாடுகளை மே 6 அன்று எதிர்பார்க்கப்படும் பிரிட்டிஷ் பொதுத் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் இதுவரை நடந்த விசாரணைகள் இந்தக் குழு நிறுவப்பட்டதின் அடிப்படை நோக்கம் ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்புப்போரை நடத்திய பொறுப்புடையவர்களுக்கு கணக்குக்கூற அவசியமில்லாமல் இருக்கச் செய்துவிடுவதே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மாறாக விசாரணை ஈராக் படையெடுப்பிற்கு அங்கீகாரமளிக்கவும் அதற்கு அடிப்படையாக அமைந்த எதிர்பார்த்து முதல் தாக்குதலை தொடுப்பது என்னும் அமெரிக்க கோட்பாட்டிற்கு உறுதியளிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில்கோட் விசாரணை முற்றிலும் அரசாங்கத்தின் படைப்பாகும், உண்மையான சுதந்திரத்தை கொண்டிருக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் தொழிற் கட்சி பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த விசாரணை அமெரிக்க தலைமையிலான ஈராக் போரில் பிரிட்டிஷ் தொடர்பினால் "கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகளை" தொகுக்கும் குறைந்த வரம்பை மட்டும் பெற்றிருந்தது. போருக்கு முன் நடந்த நிகழ்வுகளில் பங்கு, இராணுவப் படுகொலை அல்லது அதற்குப் பிந்தைய நிகழ்வுகளில் எந்த அரசியல்வாதி, ஆட்சித்துறை ஊழியர், தூதரக அதிகாரி அல்லது இராணுவ புள்ளியின் மீதும் பொறுப்பு சுமத்தப்பட மாட்டாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. சாட்சியம் அளித்தவர்களுக்கும் எந்தவித குற்றச் சாட்டுக்கள் அல்லது சட்டபூர்வ நடடிக்கைகளும் அவர்கள்மீது கொண்டுவரப்படமாட்டாது என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. சாட்சிகள் பிரமாணத்தின்கீழ் சாட்சியம் கொடுக்கவில்லை; முறையான குறுக்கு விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை. ஒருதடவைக்கும் மேலாக, முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயர் சாட்சியம் கொடுத்த சமயத்தில் உள்பட, சில்கோட் அனைவரிடமும் கூறினார்; "இது ஒன்றும் குற்ற விசாரணை அல்ல." பிளேயருடன் கூட போர் திட்டமிடலிலும் நடத்தியதிலும் பங்கேற்றிருந்த அனைத்து முக்கிய பிரிட்டிஷ் நபர்களும் ஏற்கனவே சாட்சியம் கொடுத்துவிட்டனர்; இதில் அப்பொழுது வெளியுறவு மந்திரியாக இருந்த ஜாக் ஸ்ட்ரோ, அப்பொழுது பாதுகாப்பு மந்திரியாக இருந்த Geoff Hoon, பிளேயரின் தொடர்புத்துறை இயக்குனர் அலஸ்டர் காம்ப்பெல், ஐ.நாவில். முன்னாள் இங்கிலாந்து தூதர் ஜேரிமி கிரீன்ஸ்டாக், அப்பொழுது சான்சலராய் இருந்த கோர்டன் பிரெளன் ஆகியோர் அடங்குவர். அவர்களில் எவரிடமும் துருவும் வகையிலான அல்லது திறனாயும் ஒற்றை கேள்வி கூட கேட்கப்படவில்லை. விசாரணைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் Privy Council உறுப்பினர்களில் இருந்து பிரெளனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; அந்தக்குழு அரசியாரால் பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டதாகும். ஈராக் போரை நியாயப்படுத்த பயன்பட்ட உளவுத்துறை அறிக்கை குறித்து விசாரிக்க 2004ல் அமைக்கப்பட்ட பட்லர் விசாரணக் குழுவில் சில்கோட் இருந்தார். பழைய இணையதள அறிக்கைகள், தவறான கூற்றுக்களில் இருந்து எடுக்கப்பட்ட ஈராக் பேரழிவு ஆயுதங்களை கொண்டிருந்தது, அவை பிரிட்டனைத் தாக்குவதற்கு 45 நிமிடங்களுக்குள் செயல்படுத்தப்பட முடியும் என்பது போன்ற "போலிக் கோப்புத் தொகுப்பிற்கு" அந்த குழு பிளேயர் அல்லது வேறு எவரையும் பொறுப்பாக்க மறுத்து விட்டது. விசாரணைக்குழு உறுப்பினர் சேர் லோரன்ஸ் ப்ரீட்மன் பிளேயருக்கு வெளியுறவுக் கொள்கை செயலர், ஈராக் போருக்கு வலுவான ஆதரவைக் கொடுத்தவர். வரலாற்றாளர் சேர் மார்ட்டின் கில்பர்ட் போரை ஆதரித்தவர். ரஷ்ய கூட்டமைப்பிற்கு பிரிட்டிஷ் தூதராக சேர் ரோட்ரிக் லின் இருந்தார், JP Morgan Chase க்கு ஆலோசகராக இருந்தார், அது Trade Bank of Iraq ஐ நடத்துகிறது. எண்ணெய் கூட்டுநிறுவனமான BP க்கும் அவர் சிறப்பு ஆலோசகராய் இருந்தார். விசாரணைக் குழுவிற்கு கொடுக்கப்பட்ட நெறிகள்படி, எந்த ஆவணங்கள் பகிரங்கமாக்கப்படலாம், எவற்றை அதற்கு கொடுக்கலாம் என்பது பற்றிக்கூட இறுதி முடிவை அரசாங்கம் தான் எடுக்கும். பூசலுக்குட்பட்ட ஆவணங்களை வெளியிடுவது பற்றிய இறுதி முடிவு கேபினட் செயலர் மற்றும் உள்துறை ஆட்சிப் பணித் தலைவரான சேர் கஸ் ஓ' டோனலால் தான் எடுக்கப்படும். அவர் பிரெளனுடன் கொண்ட நெருக்கமான உறவு 2002 காலம் வரை செல்கிறது; அப்பொழுது அவர் நிதி மந்திரி அலுவலகத்தில் நிரந்தரச் செயலராக்கப்பட்டார். காபினெட் அலுவலகமும் விசாரணைக் குழுவும் உடன்பாடு காணவில்லை என்றால், "அத்தகவலை பொதுமக்கள் பார்வைக்கு விசாரணக்குழு வெளியிடாது" என்றும் நெறிகள் கூறியுள்ளன. எது மறைக்கப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம் Independent வெளியிட்ட 2000 தேதியிட்ட ஒரு வெளியுறவு அலுவலக உட்குறிப்பில் தெரியவரும்; அதில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஈராக் படையெடுப்பு பற்றி முன்பு கூறப்பட்டதைவிட இரு ஆண்டுகள் முன்னரே விவாதித்திருந்தது நிரூபணமாகியிருந்தது. இந்த ஆவணத்தை தகவல் சுதந்திர உரிமை மூலம்தான் Independent பெறமுடிந்தது; முதலில் நிராகரிக்கப்பட்டாலும் செய்தித்தாள் ஒரு உள்முகத் திறனாய்வைக் கோரியது. கொடுக்கப்பட்ட ஆவணம் வெளியுறவு அலுவலகத்தால் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டிருந்தது. சில்கோட் இறுதி அறிக்கை வெளியீடு கூட அரசாங்கத்தின் முன்கூட்டிய ஒப்புதலைப் பெற வேண்டும். விசாரணை பற்றி அறிவிக்கும்போது பிரெளன் "நம் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியமான தகவல்கள்" சிலவற்றை வெளியிடுவதற்கு இல்லை என்று கூறிவிட்டார். அதேபோல் "பாதுகாப்பு நலன்கள் அல்லது சர்வதேச உறவுகளுக்கு" "பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தால்" அத்தகைய விஷயங்களும் வெளியிடப்படக் கூடாது. அக்டோபர் மாதம் பிரெளனின் காபினெட் அலுவலகம் இறுதி அறிக்கை உட்பட எவை வெளியிட அனுமதிக்கப்படலாம் என்பது பற்றி ஒன்பது அம்ச விதிகளை வெளியிட்டது; அதில் "வணிக, பொருளாதார நலன்களை" பாதிக்கும் விஷயங்களும் வெளியிடப்படக்கூடாது என்று உள்ளது. இத்தடைகளினால் எந்த ஒரு அரசாங்க அமைப்பு அல்லது துறையும் தான் விரும்பும் எந்த பகுதிகளையும் இறுதி அறிக்கையில் இருந்து தடுத்து அகற்றிவிட முடியும். இத்தடைகள் சாட்சியம் கொடுக்க அழைக்கப்பட்டவர்களை ஈராக் போரைக்காக்கும் விதத்திலும், அமெரிக்காவில் புஷ் நிர்வாகம் விரிவாக்கிய தவிர்க்க இயலாத போர்க் கொள்கைக்கு ஆதரவாக சாட்சியம் கொடுக்குமாறும் உதவியது. உதாரணமாக, பிளேயரின் தொடர்புப் பிரிவு இயக்குனர் அலஸ்டர் காம்ப்பெல் வெற்றுத்தனமாக, "ஒரு நாடு என்னும் முறையில் ஈராக் போரில் தன் பங்கு பற்றி பிரிட்டன் நம்ப முடியாத அளவிற்கு பெருமிதம் அடையலாம்" என்றார். ஈராக் மீதான படையெடுப்பு "சரியான காரணங்களுக்காக எடுக்கப்பட்ட சரியான முடிவு" என்று பிரெளன் கூறினார். "திரு பிளேயர் அக்காலத்தில் செய்த அனைத்தும் அவரால் முறையாக செய்யப்பட்டன." என்றும் கூறினார். உண்மையை தலைகீழாக்கி அவர் ஈராக் "தொடர்ச்சியாக சர்வதேச சட்டத்தை மீறும் நாடு" என்றும் "ஒரு மூர்க்க நாடு" என்றும் "சர்வதேச சமூகத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுத்தது" என்றும் கூறினார். பிரெளனை வினாக்கள் கேட்டது பற்றி கருத்துத் தெரிவித்த Guardian கட்டுரையாளர் சைமன் ஜென்கின்ஸ் சுட்டிக் காட்டினார்: "சர்வதேச சமூகத்தின் உணர்வை மீறி ஈராக் படையெடுப்பு நடத்தப்பட்டது என்ற வெளிப்படையான பதிலை எவரும் கூறவில்லை. இப்போர் ஆட்சி மாற்றம் பற்றி ஐ.நா. கொள்கைகளை புறக்கணித்து, ஆயுத ஆய்வுப் பிரிவின் கருத்துக்களையும் முன்கூட்டியே தவிர்த்தது. இதற்கு ஐ.நா. ஒப்புதல் கிடையாது, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தன. பிரெளன் நிறைய புன்னகைக்க தொடங்கியதில் வியப்பில்லை." பிளேயரின் சாட்சியமும் அரசியல்ரீதியாய் மிகுந்த வெளிப்படுத்தலை கொண்டிருந்தது. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அங்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற தான் நம்பியதை அவர் குறிப்பிட்டார். ஆயுதத்திட்டத்தை சதாம் ஹுசனை "மறு கட்டமைத்தாலோ" அத்தகைய "வாய்ப்பு இருந்தாலோ", "ஆபத்து இருந்தாலோ" அப்போது போர் அங்கீகாரமுறுகிறது - இது எதிர்பார்த்து முதலில் தாக்கும் போர்க் கோட்பாட்டுக்கான ஒரு தெளிவுபட்ட வழிமொழிவு ஆகும். "ஆட்சி மாற்றம், பேரழிவு ஆயுதங்கள் இவற்றிக்கு இடையே பேதப்படுத்துவது ஆபத்தாகும்." இதையும் விடக் குறிப்பிடத் தகுந்ததாய் இருப்பது, பிளேயர் பலமுறையும் ஈராக்கிற்கும் ஈரான் கொடுக்கக்கூடிய ஆபத்திற்கும் இடையே ஒப்புமை காட்டி, "அதேமாதிரியான பிரச்சினைகள்" இருந்தன என்றார். ஈராக்கிற்கு எதிரான முன்னோடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பிரிட்டன் இப்பொழுது ஈரானைச் சமாளிக்க "நல்ல முறையில்" தயாரிப்புடன் இருப்பதாக அவர் கூறினார். சில்கோட் விசாரணையை பயன்படுத்தி ஈராக் போரைக் காப்பது ஒரு எச்சரிக்கையாகும். பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கிற்கு, வெறும் வரலாற்றுத் திருத்தம் அல்லது தங்கள் குற்றங்களை தொடர்பு உடையவர்கள் மறைக்கும் முயற்சிகளுக்கும் மேலதிகமான விஷயம் இதில் அடங்கி உள்ளது. விசாரணையின் தொடக்கத்திலேயே சில்கோட் "வருங்காலத்தில் இதேபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ள இது உதவும், அப்பொழுது இருக்கும் அரசாங்கம் நாட்டின் சிறத்த நலன்களை கருத்திற் கொண்டு மிகத் திறமையான முறையில் நிலைமைகளை எதிர்கொள்ள இது பயன்படும்" என்றார். "இதேபோன்ற நிலைமைகள்தான்" நடந்து கொண்டிருக்கின்றன, அல்லது தயாரிப்பில் அதிக அளவு முன்னேறியுள்ளன. 2003ல் இருந்து நடக்கும் நிகழ்ச்சிகள் இன்று ஆப்கானிஸ்தான் வரை தொடரும் பெருகிய இராணுவவாத காலகட்டத்தில் ஈராக் குருதிதோய்ந்த ஒரே ஒரு அத்தியாயம் மட்டும் தான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன. ஈராக் போர் சட்டபூர்வமற்றது என்பது ஒருபுறம் இருக்க, தவறு என்று ஏற்பது கூட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிப்படை மூலோபாய நலன்கள் மீதும் மற்றும் எண்ணெய், எரிவாயு போன்ற மூலோபாய இருப்புக்கள்மீது மேலாதிக்கம் பெற ஆப்கானிஸ்தான், ஈரான் அல்லது வேறெங்கிலும் மூர்க்கமான போர்கள் நடந்தாலும் அதில் அமெரிக்காவின் சட்டை நுனியைப் பிடித்துக் கொண்டு பின் தொடர்கிற அயலுறவுக் கொள்கை மீதும் கேள்விக்கு அழைப்பு விடுவதாய் ஆகி விடும். |