World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Hounded by Hindu right, India's best-known painter takes Qatari citizenship

இந்து வலதினால் இரக்கமின்றி வேட்டையாடப்பட்ட இந்தியாவின் நன்கு அறியப்பட்ட ஓவியர், கட்டார் குடியுரிமையை பெறுகிறார்

By Panini Wijesiriwardane and Parwini Zora
13 March 2010

Back to screen version

இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, மிகப் புகழ்பெற்ற வண்ண ஓவியரான மக்பூல் பிடா (எம்.எப்) ஹுசைன் கடந்த மாதம் கட்டாரின் பிரஐையாகும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்--இது இந்து அடிப்படைவாதிகள் மற்றும் மேலாதிக்கவாதிகளால் அவர் துன்புறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டதற்கு இந்திய அரசாங்கம் மற்றும் அரசியல் உயரடுக்கின் குற்றத்திற்கு பொறுப்பு என்பதற்கான ஒரு கடுமையான எதிர்ப்பாகும்.

இப்பொழுது 94 வயதாக இருக்கும் ஹுசைன் கடந்த ஏழு தசாப்தங்களாக ஓவியராக உள்ளார். அவர் ஒரு புகைப்படக் கலை வல்லுனர், திரைப்படத் தயாரிப்பாளரும் கூட. அவருடைய ஓவியங்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பெரும் பாராட்டுதல்களை பெற்றவை.

1970 களில் ஹுசைன் இந்து பெண் கடவுளை நிர்வாணமாக வரைந்திருந்தது பற்றிப் பெரும் பரபரப்பை ஒரு ஹிந்தி மொழி ஏடு 1996ல் ஏற்படுத்தியதை அடுத்து, அவரும் அவருடைய படைப்புக்களும் பல வன்முறைத் தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காயின. முடிவில்லாத சட்டபூர்வ துன்புறுத்தலுக்கும் ஹுசைன் உட்பட்டுள்ளார். அதற்கு நீதித்துறை மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின்--அதாவது மத சார்பற்றது எனக் கூறிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP), சிவசேனை ஆகியவற்றின் ஆதரவும் உள்ளன.

இந்து வலதுசாரிகள் அதன் வகுப்புவாத மற்றும் பிற்போக்குத்தன பிரச்சாரங்களை முஸ்லிம்களை தாக்குவதோடு நிறுத்தி கொள்ளுவதில்லை. ஹுசைன் பிறப்பில் முஸ்லிம், ஆனால் அவர் தன்னை சமயச் சார்பற்ற ஒருங்கிணைந்த இந்தியப் பண்பாட்டிற்காக வாதிடுபவர் என்று அறிவித்துக் கொண்டதே இவை அவரை இலக்கு கொள்ள சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய காரணம் ஆகும்.

உடல்ரீதியான தாக்குதல், சட்டபூர்வ குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளல் இவற்றைக் கண்டு அஞ்சிய ஹுசைன் 2006ல் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். அப்பொழுது முதல் இவர் துபாயிலும் கோடைகளில் லண்டனிலும் வசித்திருக்கிறார்.

செய்தி ஊடகத் தகவல்களின்படி, ஹுசைன் கட்டார் குடியுரிமையை நாடவில்லை, ஆனால் வளைகுடா நாட்டின் ஆளும் குடும்பம் அவருக்கு அதை அளிக்க முன்வந்தபோது ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை கிடையாது என்பதால், ஹுசைன் கட்டார் வேண்டுதலை ஏற்பது இந்தியக் குடியுரிமையை அவர் நிராகரிப்பதற்கு ஒப்பாகும். மார்ச் 8ம் தேதி ஓவியர் கட்டாரிலுள்ள இந்திய தூதரைச் சந்தித்து தன்னுடைய கடவுச்சீட்டை கொடுத்துவிட்டார்.

வளைகுடா மத்தயமம் என்னும் ஒரு மலையாள மொழி செய்தித்தாளின் டோஹா பதிப்பிற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் ஹுசைன் தன்னுடைய "தாய்நாட்டில்" தான் கொண்டிருந்த "காதல்" பற்றிக் கூறியதோடு, ஆனால் இந்தியா தன்தை "நிராகரித்துவிட்டது" என்றார்.

"சங்க் பரிவார் [இந்து மேலாதிக்கவாத] அமைப்பு என்னை இலக்கு வைத்துத் தாக்கியபோது அனைவரும் மெளனமாக இருந்தனர். அரசியல் தலைமை, கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் என்று எவரும் எனக்கு ஆதரவாகப் பேசவில்லை."

பெரும்பான்மையான இந்தியர்கள் தனக்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்று ஹுசைன் கூறினார்:அதாவது "10 சதவிகித மக்கள்தான், சில அரசியல்வாதிகள் உட்பட, எனக்கு எதிராக உள்ளனர்."

"தொடர்ச்சியான இந்திய அரசாங்கங்கள் என்னை பாதுகாக்க முடியவில்லை. எனவே அப்படிப்பட்ட நாட்டில் நான் வசிப்பது மிகவும் கடினமாகும். அரசியல்வாதிகள் வாக்குகளை பற்றித்தான் கவலைப்படுகின்றனர்."

"இப்பொழுது அவர்கள் நான் மீண்டும் வரவேண்டும் என்று கூறுகின்றனர்....என்னைப் பாதுகாக்காத அரசியல் தலைமையை நான் எப்படி நம்ப முடியும்? இந்தியாவில் எனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?"

தனக்கு எதிரான பிரச்சாரத்தை "கலை, கலைஞனின் சுய வெளிப்பாடு ஆகிவற்றிற்கு எதிரான ஒரு நடவடிக்கை" என்று ஹுசைன் குறிப்பிட்டார்.

"எவருடைய உணர்வுகளையும் கலை மூலம் நான் புண்படுத்த விரும்பியதில்லை. என்னுடைய ஆன்மாவின் படைப்பு திறனைத்தான் கலை மூலம் வெளிப்படுத்துகிறேன். கலையின் மொழி பொது மொழியாகும். அனைத்துக் குறுகிய கண்ணோட்டங்களுக்கும் அப்பால் அதை நேசிக்கின்ற மக்கள்தான் என் வலிமை" என்றார் அவர்.

ஹுசைனின் கருத்துக்கள் இதயத்தில் இருந்து வருபவை, இந்திய அரசாங்கம், உயரடுக்கு ஆகியவை கண்டிக்கப்படுவதை முற்றிலும் நியாயப்படுத்துகின்றன.

இந்து வலதுசாரி நீண்டகாலம் இந்தியாவில் ஒதுக்கப்பட்ட சக்தியாக இருந்தது. ஆனால் சமீப தசாப்தங்களில் அதன் தொழிலாள வர்க்க விரோத "சந்தை சீர்திருத்தங்கள்" சமூக சமத்துவமின்மையையும் பொருளாதார பாதுகாப்பற்ற தன்மையையும் அதிகரித்தபின் இந்திய முதலாளித்துவம் அனைத்தவித வகுப்புவாத மற்றும் சாதிவெறி அரசியலை வளர்த்துள்ளது.

இந்தியாவின் சட்டபூர்வ மற்றும் அரசியல் அமைப்புக்கள் அனைத்தும் இந்து மேலாதிக்கவாதிகள் வகுப்புவாத கொடுமைகளை நடத்த அனுமதித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், 2002 குஜராத் படுகொலையும் இருந்தன. இவை மோசமான மற்றும் ஜனநாயக விரோத பிரச்சாரங்கள் ஆகும். ஓவியர் ஹுசைனை இலக்கு வைப்பது எதையும் பொருட்படுத்தாமல் செய்யப்பட முடியும் என்று போயிற்று. BJP தற்பொழுது இந்தியப் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி ஆகும். இந்தியாவை 1996ல் இருந்து 2004 வரை ஆண்ட தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) உடைய ஆதிக்கம் செலுத்துகின்ற கட்சியாக இருந்தது.

செப்டம்பர் 1996ல் மத்திய பிரதேசத் தளமாக கொண்ட ஒரு மாத ஏடான விசார் மீமான்சா "எம்.எப்.ஹுசைன்: ஓவியரா, கொலைகாரரா" என்ற தலைப்பில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரையை எழுதியது. கலைக்கும் அறிவுக்குமுரிய இந்து மதப் பெண் கடவுளான சரஸ்வதியை 25 ஆண்டுகளுக்கு முன்பு ஹுசைன் நிர்வாணமாக வண்ணம் தீட்டியது சீற்றம் தரும் செயல் என்று கட்டுரை கண்டித்தது. (உண்மையில், ஓவியம் உயர்ந்த கலைப்பாணியைக் கொண்டது, பெண்ணின் உருவ அமைப்பைத்தான் ஓவிய வரைவு காட்டியது.)

இதன் பின்னர், அண்டை மாநிலமான மகாராஷ்ட்டிரத்தின் "பண்பாட்டு அமைச்சர்", சிவசேனை தலைவர் பிரமோத் நாவல்கர், ஹுசைனுக்கு எதிராக அவருடைய ஓவியம் மத விரோதப் போக்கை தூண்டுகிறது, மத உணர்வுகள், நம்பிக்கைகளை அவமதிக்கிறது என்று குற்றவியல் வழக்குகளை தொடர்ந்தார். குற்றச்சாட்டுக்கள் பதிவான மூன்று நாட்களுக்கு பின்னர் உலக ஹிந்துக் குழு அல்லது VHP எனப்படும் அதன் இளைஞர் பிரிவினரால் திரட்டப்பட்ட இளைஞர்கள் அஹமதாபாத்தில் ஒரு கலைக் கண்காட்சிக்கு சென்று ஹுசைனின் 23 சிறப்பு திரைத் தீட்டல்கள் மற்றும் 28 ஓவியங்களை அழித்தனர். அவற்றுள் வானரக் கடவுள் எனப்படும் ஹனுமானின் ஒரு ஹிந்து புராணப் பாத்திரத்தின் தொடர் சித்திரங்கள், புகழ்பெற்ற பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தின் ஓவியம் ஆகியவையும் இருந்தன.

1998 ல் மும்பையில் இருந்த ஹுசைனின் வீடு புகுந்து நாசம் செய்யப்பட்டது. இம்முறை இந்திய புராணமான இராமாயணத்தின் பாத்திரங்களான ஹனுமான் மற்றும் சீதா ஆகியோரின் ஓவியங்கள் "மத நெறிக்கு இழிவானவை" என்று கூறப்பட்டன.

2006ல் இந்து வலது "அன்னை இந்தியா" என்னும் ஓவியம் பற்றி சட்டபூர்வ நடவடிக்கை வேண்டும் என்று தெருக்களுக்கு வந்து எதிர்ப்புக்களை தெரிவித்தது. இதை ஹுசைன் Mission Kashmir என்னும் அமைப்பிற்கு வரைந்தார். அந்த அமைப்பு அக்டோபர் 2005ல் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டியது. இந்த ஓவியம் ஒரு நிர்வாண பெண்ணைச் சித்தரித்தது--அது இந்திய வரைபடத்துடன் இயைந்து இருந்தது. பின்னர் சிவசேனை தலைவர் பகவான் கோயல் பகிரங்கமாக ஹுசைனின் கைகளை வெட்டுபவருக்கு அரை மில்லியன் ரூபாய் பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார்.

அதே ஆண்டு மே 22ம் திகதி, லண்டனின் Asia House Gallery ஹுசைன் கண்காட்சி ஒன்றை திறந்த சில நாட்களுக்குள்ளேயே மூடியது. இதற்குக் காரணம் இந்து பெண் கடவுள்கள் துர்க்கா மற்றும் திரெளபதி ஆகியோர் இழிவுபடுத்தபட்டுள்ளனர் என்று கூறப்பட்டது ஆகும். பிரிட்டனை தளமாகக் கொண்ட இந்து அடிப்படைவாத குழுக்கனான VHP மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் (RSS) ஆகியவற்றுடன் சேர்ந்து கண்காட்சி மூடப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்திருந்தன.

கண்காட்சி திறப்பதற்கு முன் வெளியிட்ட கருத்துக்களில், ஹுசைன் எப்படித் தன் படைப்பில் தான் மரபார்ந்ந்த இந்திய கலையை நவீன கலை வெளிப்பாட்டுடன் இணைக்க முற்பட்டேன் என்று விளக்கியிருந்தார். "கடந்த 50 ஆண்டுகளாக அறிவார்ந்த இந்திய ஓவியர்கள் பண்டைய பண்பாட்டு மரபியத்தை நம் காலத்தின் உண்மையோடு மறு தொடர்பு செய்ய ஈடுபட்டுள்ளனர். அனைத்து மனித முயற்சியைப் போல், நம்பிக்கையும் இதன் அடிப்படையில் உள்ளது. பெரும் கவனம், மரியாதை ஆகியவற்றை அனைத்து மதங்களுக்கும் கொண்ட இந்தியத் துணைக் கண்டம் ஒரு தனிப்பட்ட மத சார்பற்ற பண்பாட்டை உருவாக்கியுள்ளது. பெரும் இந்திய கூட்டு பண்பாட்டு தோற்றுவித்தலுக்கு நானும் ஒரு சிறிய பங்களிப்பாளர்."

கைவிடப்பட்ட லண்டன் கண்காட்சி திறப்பிற்கு சில நாட்கள் முன்புதான் இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையில் இருந்த UPA மும்பையிலும், டெல்லியிலும் இருந்த பொலிஸுக்கு ஹுசைனுக்கு எதிராக "தக்க நடவடிக்கை" எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது. ஏனெனில் அவருடைய படைப்புக்கள் "மத உணர்வுகளை புண்படுத்தும் திறன் கொண்டவை" எனப்பட்டது.

ஹுசனைப் பொறுத்தவரை மதசார்பற்ற தன்மையின் பாதுகாப்பாளர் என்று காட்டிக் கொண்ட, இரு ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகள் அவற்றின் இடது முன்னணியால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தனக்கு எதிராக இந்து வலது கிளப்பி விட்ட பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்தது பெரிய அடியாகும். இதைத் தொடர்ந்து ஓவியர் அவருடைய சொற்களில் "ஒரு சர்வதே நாடோடி" ஆனார்.

2007ல் ஹுசைனின் தகவலின்படி அவருக்கு எதிராக இந்தியாவில் 900 குற்றவியல் வழக்குகள் உள்ளன. "விஷயங்கள் சட்டபூர்வமாக பெரும் சிக்கல் வாய்ந்தவை, நான் நாட்டிற்கு திரும்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறப்பட்டேன்." என்றார் அவர்.

இந்த கட்டத்தில், UPA தலைமையிலான அரசாங்கத்தின் சட்ட அமைச்சரகமானது குற்றம் சுமத்துபவர்கள் மத உணர்வை அவர் வேண்டுமென்றே புண்படுத்துகிறார் என்ற குற்றத்தை கொண்டுவந்தால், ஹுசைனுக்கு எதிராக "வலுவான வழக்கு" என்பதை உறுதி செய்திருக்கும் என்றும் அவர் பிடி ஆணை கட்டளையை புறக்கணித்த பின்னர், ஒரு கீழ் நீதிமன்றம் அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது என்றும் அறிவித்தது.

இந்தியாவின் தலைமை நீதிமன்றம் இறுதியில் சொத்துப் பறிப்பு உத்தரவை நிறுத்தி வைத்தது. பல நீண்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர் செப்டம்பர் 2008ல் ஹுசைனின் ஓவியங்கள் ஆபாசமானவை அல்ல என்று தீர்ப்பளித்தது. பிந்தைய தீர்ப்பில் நீதிமன்றமானது இந்து தெய்வீக உணர்வுடைய கலை, பல புராதனக் கோயில்களின் சுவர்களில் இருப்பவை உட்பட பல நிர்வாண உருவங்களைக் கொண்டவை என்ற வெளிப்படையான கருத்தைக் கூறியது.

தலைமை நீதிமன்றத்தின் மெத்தனமான தலையீடு, ஹுசைனின் குடிமகன் மற்றும் ஓவியர் என்பதற்கு கொடுத்த பாதுகாப்பு, அவருடைய விரோதிகளை நீதிமன்றங்களை பயன்படுத்தி அவரைத் தொடர்ந்து துன்புறுத்துவதில் இருந்து தடுத்துவிடவில்லை. அவருக்கும் அவருடைய படைப்புக்களுக்கும் எதிராக விரோத உணர்வை தொடர்ந்து தூண்டிவிடுவதையும் நிறுத்தவில்லை. அவருடைய "இந்தியா கற்பழிக்கப்படுகிறது" என்ற ஓவியம், மும்பையில் 2008 பயங்கரவாதத் தாக்குதலை பிரதிபலிக்கும் விதத்தில் படைக்கப்பட்ட ஓவியமும் கண்டனத்திற்கு உட்பட்டவற்றுள் ஒன்றாகும்.

ஹுசைனின் சில படைப்புக்கள், ஒரு 2004 திரைப்படம் மீனாக்ஷி: மூன்று நகரங்களின் கதை என்பது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் எதிர்ப்பிற்கு உட்பட்டது.

அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, இந்து மேலாதிக்க வலதினால் தாக்குதலுக்கு இலக்காகும் நபர் ஹுசைன் மட்டும் இல்லை. ஒரு சில நன்கு அறியப்பட்ட வழக்குகளை கொடுப்போம்: 2000 ம் ஆண்டில் இந்திய-கனேடிய திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தாவின் தண்ணீர் (Water) என்ற அவர் திரைப்படத்தைத் தயாரிப்பதைக் கைவிடும் கட்டாயம் நேர்ந்தது. அதில் இந்தியாவில் இந்து விதவைகளின் பரிதாப நிலை பற்றி படம் எடுக்கப்பட இருந்தது. அதே ஆண்டு BJP தலைமையிலான தேசிய அரசாங்கம் சுரேந்திரன் நாயர் உடைய ஓவியத்தை தேசிய நவீன கலைக் கண்காண்சியில் இருந்து திறமையுடன் தடைக்கு உட்படுத்தியது. 2006ம் ஆண்டு BJP மாநில குஜராத் அரசாங்கம் Fanaa என்னும் படம் திரையிடப்படுவதை தடுத்தது. ஏனெனில் அதன் நடிகர் அமீர் கான் நர்மதா அணை கட்டுவதால் பழங்குடி மக்கள் கட்டாயமாக இடம் பெயர்வதை குறை கூறியிருந்தார்.

சமீபத்திய வாரங்களில், சிவசேனை பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக் கான் நடித்த என் பெயர் கான் என்ற சமீபத்திய படத்திற்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்கள் நிறைந்த பிரச்சாரத்தை நடத்தியது. அவர் பிறப்பில் முஸ்லிம் ஆவார். சிவசேனையுடன் மோதல் ஏற்பட்டதற்குக் காரணம் அவர் அந்த அமைப்பு மும்பைக்கு வட இந்தியர்கள் குடியேற்றம் என்ற பிற்போக்குப் பிரச்சாரத்தை எதிர்த்திருந்தார். ஆனால் சிவசேனை பிரச்சாரம் தோல்வியுற்றது. மக்கள் ஏராளமாக படத்தை பார்ப்பது தடுக்கப்பட முடியாமல் போய்விட்டது.

கலைஞர் என்ற விதத்தில் பெற்றிருந்த உயர் அந்தஸ்து இருந்தபோதிலும், இந்தியக் குடியுரிமையை தியாகம் செய்ய எடுத்த ஹுசைனின் முடிவு இந்தியாவின் அரசியல்வாதிகள், செய்தி ஊடகத்திடம் இருந்து அதிக கவனத்தைப் பெறவில்லை. இந்து வலது ஐயத்திற்கு இடமின்றி மகிழ்ச்சியுற்றது. மற்றய அரசியல் உயரடுக்கினர் அவர் தன்னைக் பாதுகாக்கவில்லை, அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளை பாதுகாக்கவில்லை என்று கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதில் எதுவும் கூறவில்லை.

காங்கிரஸ் அரசியல்வாதி சத்யவிரத் சதுர்வேதி தேசிய உரிமையை ஹுசைன் மாற்றிக் கொண்டது பற்றி கருத்துக் கூற மறுத்துவிட்டார், "இது தனிப்பட்டவரின் முடிவு" என்றார். பின்னர் வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஹுசைனை "இந்தியாவின் பெருமிதம்" என்றும் நாட்டிற்கு அவர் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் ஹுசைனின் முடிவு, "வகுப்பு ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு பெரிய தோல்வி" என்றார். ஆனால் ஹுசைனின் நிலைமைக்கு காங்கிஸ் பொறுப்பில்லை என்றார். "ஹுசைனால் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் ஒரு கலைஞரின் மனது உடைந்தால், அது மீண்டும் சரியாகப் பல காலம் பிடிக்கும்" என்றார் சிங்.

BJP யின் செய்தித் தொடர்பாளர் நஜமா ஹெப்துல்லா கூறினார்: "அவர் [ஹுசைன்] ஒரு சிறந்த கலைஞர், ஆனால் கலை மக்களுடைய மத உணர்வுகளை புண்படுத்தக்கூடாது" என்றார். இது இந்து வலது ஓவியருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் உரிமையை உறுதி செய்து ஒப்புதல் கொடுப்பது போல் ஆகும்.

சென்னையில் உள்ள தாராளவாத நாளேடான இந்துவின் தலைமை ஆசிரியர் என்.ராம் இந்தியக் குடி உரிமையை ஹுசைன் விட்டுவிட்டது இந்தியாவின் உயரடுக்கிற்கு ஒரு வெட்ககரமான செயல் என்றார். "காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம்....முந்தைய BJP தலைமையிலான அரசாங்கத்தைவிட திரு ஹுசைனின் படைப்பற்றால் சுதந்திரம், மன அமைதி ஆகியவற்றை பாதுகாப்பதில் சிறந்து விடவில்லை."

ஹுசைனின் நண்பரான ராம் "வெறிபிடித்த கூட்டத்திடம் இருந்து ஹுசைன் எதிர்கொண்ட அச்சுறுத்தல், துன்புறுத்தல் ஆகியவை பற்றி" எழுதியுள்ளார். "அவர் தற்காலிகமாக நாட்டைவிட்டு வெளியேறிய பின் முதல் தடவையாக நாடு திரும்பியபோது மும்பையில் அவரை நான் வரவேற்றேன். எழுச்சி பெறும் இந்தியாவில் இந்த படைப்பாற்றல் மிகுந்த மேதை பாதுகாப்பற்ற தன்மை, உறுதியற்ற நிலை ஆகியவற்றை எப்படி பொறுக்க வேண்டி இருந்தது என்பதைக் கண்டேன்.."

இந்திய உயரடுக்கு வளர்க்கும் நச்சுத் தன்மையுள்ள வகுப்புவாதச் சூழலானது கலையுணர்வுச் சுதந்திரத்தையும் படைப்பாற்றலையும் நெரிப்பதுடன், விரோதப் போக்கு மற்றும் வன்முறை ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுப்பதுடன், இன்னும் கூடுதலான தாக்குதல்களை இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தும் சூழலையும் தோற்றுவிக்கிறது.

அனைத்து அரசாங்க குற்ற விசாரணை நடவடிக்கைகள், வகுப்புவாத துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இந்தியாவில் சுதந்திரமாக வாழ, வேலை செய்ய ஹுசைனுக்கு உள்ள உரிமையை பாதுகாக்க இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு உலக சோசலிச வலைத்தளம் அழைப்பு விடுகின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved